Monday, March 5, 2012

உசிர் வேண்டும் முதலில்

“ எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு” 

இந்தக் குறளை நாம் வாசிக்காது போயிருந்தாலும், அல்லது வள்ளுவர் ஒருக்கால் இந்தக் குறளை எழுதாமலே போயிருந்தாலும் தீர்மானத்தைக் கொண்டு வருவது அமெரிக்கா என்பதற்காக நாம் ஒன்றும் அதை நிராகரித்து விடுகிறவர்கள் அல்ல.

இன்னும் சொல்லப் போனால் நம் ஆயுசு முடிவதற்குள் நாம் ஏற்கும் படியாகவும் பாராட்டும் படியாகவும் மனிதத் தன்மையோடு எதையாவது அமெரிக்கா செய்துவிடாதா என்று ஏங்கித் தவித்து எதிர்பார்ப்பவர்கள் அல்லவா நாம்.

“அமெரிக்கா எதை செய்தாலும் நீங்க எதிர்க்கத்தாண்டா செய்வீங்க ” என்று எப்போதுமே பொதுவாய் நீளும் அந்தக் குற்றச்சாட்டும் இந்த முறை ஒடிந்து விடும்.

நல்லது செய்வது அமெரிக்காவே ஆயினும் இவர்கள் வாழ்த்தி ஆதரிக்கவே செய்வார்கள் என்பது இனியேனும் இந்தியப் பொது புத்திக்கு உறைக்கும்.

ஆமாம்,

இப்படி நீங்கள் ஏற்றுக் கொண்டாடுமளவிற்கு அப்படி என்னதான் அமெரிக்க செய்து விட்டது?

தனது சொந்த ராணுவத்தை அனுப்பி, தனது சொந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி, குவியல் குவியலாய் தனது சொந்த மக்களைக் கொன்று குவித்த ஒரு பேரினவாத வன்முறைக்கு எதிரான, அதை தலைமை ஏற்று எந்தவித தர்ம நியாயங்களுக்கும் கட்டுப் படாமல் குவிந்து கிடந்த பிணக் குவியல்களைப் பார்த்து மகிழ்ந்து கொக்கரித்த, உலகில் இருந்த கொடூரம் மொத்தத்தையும் ஒன்று திரட்டி பிசைந்து செய்யப்பட்ட ராஜபக்‌ஷேவிற்கும் எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை ஐ நா அவையில் கொண்டு வருகிறது.

அதுதான்.

கேட்கலாம்,

உலக நாடுகள் ஒவ்வொன்றின் கழுத்துகளையும் கடித்து ரத்தம் குடிக்கும் ரத்தக் காட்டேரியும் ராட்ஷச அட்டையுமான அமெரிக்காவிற்கும் ராஜபக்‌ஷேவிற்கும் அப்படி என்ன வித்தியாசத்தை கண்டீர்கள்? இன்னும் சொல்லப் போனால் ஒருகோடி ராஜபக்‌ஷேவை ஒன்றாய் பிசைந்தாலும் அதைவிடக் கொடூரமானதாயிற்றே அமெரிக்க கொடூரம்?

என்ன செய்வது அதுதான் எங்களின் கையறு நிலை? அமெரிக்கா ஒவ்வொரு முறை அட்டூழியங்களை நிகழ்த்தத் தொடங்கும் போதும் அதற்கு எதிராக உசிர் கொடுத்து போராடும் நல்ல உள்ளங்கள் நிறைந்த பூமி இது. மட்டுமல்ல, அந்த நல்ல உள்ளங்களோடு எப்போதும் எங்கள் குரலும், கரமும், கருத்தும், உசிரும் இணைந்தே களத்தில் நின்றதைப் போலவே இனியும் எப்போதும் இணைந்தேகளமேகும்.

இந்த நல்ல உள்ளங்கள் எங்களின் கண்ணீரைத் துடைக்க முன் வந்து எங்களை அள்ளி அணைத்து ஆற்றுப் படுத்தியிருந்தால் எங்களுக்கு ஏனிந்த நிலை ?

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் அநியாயமாக ஒரு உயிர் கொல்லப் பட்டாலும் உதிரம் கொதித்து வீதிக்கு வந்து போராடுகிற, இன்னும் சொல்லப் போனால், மானுடம் காக்க இவர்களை விட்டால் வேறு யார் உள்ளார் என்று இன்னமும் நாங்கள் நம்பக்கூடிய நல்லவர்கள் சற்றேறக் குறைய ஒன்றரை லட்சம் உயிர்கள் ஒரு வார கால அவகாசத்திற்குள் கொல்லப்பட்டு மூன்று லட்சம் மக்கள் செம்மறி ஆடுகளை விடவும் கேவலமாய் முள்வேலியில் அடைக்கப்பட்டுள்ள கொடுமை கண்டு வெடித்துக் கொதித்து வீதிக்கு வராமல் மௌனித்து நிற்பதே அமெரிக்காவின் ஆதரவுக் கரத்தை இறுகப் பற்றி நாங்கள் எழ முயற்சிக்கும் இந்த அவலத்திற்கான காரணம்.

அடிபட்டு கீழே கிடக்கிறோம். எங்களைக் கடந்து போகும் நல்லவர்கள் எல்லோரும் எந்தச் சலனமும் இல்லாமல் கடந்து போகிறார்கள். சிலரோ “போன இடத்துல சும்மா இருந்தாதானே” என்று இந்த நிலையிலும் எங்களுக்கு உபதேசம் செய்வதற்கும் தயங்குவதில்லை.

தோழர்களே,

அறிவுறைகளை கேட்பதற்கோ, மல்லுக்கு நின்று சரிக்கு சரி தர்க்கம் செய்வதற்கோ எங்களுக்கு இப்போது தெம்பில்லை என்பதையும், ரணங்கள் எரிந்து இம்சிக்க, ரத்தச் சேதாரம் எங்கள் உயிர் குடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பற்றக் கரம் நீட்டுவது உலகில் அயோகியத் தனத்தை மட்டுமே செய்து பழக்கப் பட்ட அமெரிக்காவாக இருந்தபோதும் அதைப் பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.  “எனது ஆயுதத்தை எனது எதிரி தீமானிக்கிறான்”  என்று மார்க்ஸ் சொல்வார். எங்களது பற்றுக்கரம் ஒரு மக்கள் விரோதியுனடையது என்றே கொண்டாலும் அதை எங்கள் மீது திணித்தது நாங்கள் இன்னமும் பெருமளவு நம்பிக்கை வைத்திருக்கும் எங்களது நண்பர்களே.

இதில் அமெரிக்காவிற்கு உள் நோக்கம் இருக்கலாம். இருந்து விட்டுப் போகட்டும்.

மனித மீட்சிக்கான யுத்தக் களத்தில் உங்களோடு நின்று போராட, அது அமெரிக்காவுடன் ஆன போராட்டமாயிருப்பினும், எங்களுக்கு உசிர் வேண்டும் முதலில்.

ராஜ பக்‌ஷேவை உலகின் அசிங்கமென்று கொள்ள இயலாது. அசிங்கமெனில் கழுவித் துடைத்துவிட்டு பயணத்தைத் தொடரலாம். ராஜபக்‌ஷே உலகின் ஆகக் கொடூரமான கொலைகாரன். அவரை மென்மையாய் ஒதுக்கிவிட்டு கடந்து விடுவது அயோகியத் தனத்தின் உச்சம். அவர் தண்டிக்கப் படுவதே மனிதகுலம் தனது மாண்பை இன்னமும் இழந்துவிடவில்லை என்பதன் அடையாளம்.

அதற்காக முன்கை எடுக்கும் அமெரிக்காவை இப்போது வாழ்த்தி விடலாம். இல்லை எனில் மீண்டும் நாம் வாழ்த்துமளவிற்கு ஒரு நல்ல காரியத்தை செய்யும் என்ற நம்பிக்கை நமக்கில்லை.

அமெரிக்கா முன்கை எடுக்கிறது. ஐரோப்பிய நாடுகள் பின்தொடர்கின்றன.

இரு இந்தியக் குழந்தைகளுக்காக நார்வே பறக்கும் இந்திய அதிகாரிகளை, அவர்களை முடுக்கிவிடும் இந்திய அரசை, அந்தக் குழந்தைகளின் உறவினர்கள் பட்டினி கிடந்து போராடிய போது அவர்களை தாயுள்ளத்தோடு போய் பார்த்த சுஷ்மா, அப்பழுக்கற்ற பிருந்தா காரத் இன்னும் பிற அரசியல்வாதிகள் அனைவரையும் இந்த நேரத்தில் வணங்குகிறோம்.

அந்த இரு பிள்ளைகளையும் எங்கள் பிள்ளைகளாகவே பார்க்கிறோம்.

முள் வேலியில் எங்கள் மக்கள்மீது தொடுக்கப் படும் அவலத்தை ஒருக்கால்  நாய்கள் மீதோ மாடுகளின் மீதோ தொடுக்கப் பட்டிருந்தால்கூட விலங்குகளின் பாதுகாவலர்கள் கொதித்திருப்பார்கள்.

பல ஆயிரம் எங்கள் குழந்தைகளை, எங்கள் தாத்தன்களை, அம்மாயி அப்பாயிகளை, எங்கள் தாய் மார்களை, இளைஞர்களை யுவதிகளை சித்திரவதைத்து, சின்னா பின்னமாக்கி, வண்புணர்ந்து கொலை செய்த ராஜபக்‌ஷே கூட்டத்திற்கு எதிராக அமெரிக்கா காய் நகர்த்துகிறது.

எங்களையும் இந்தியர்கள் என்றே விளிக்கிறீர்கள். அதுதான் உண்மையும் கூட.
எனில், மேல் காணும் பத்தியில் இருக்கும் அனைவரையும் நீங்கள் உங்கள் தாத்தன்களாக, பாட்டிகளாக, தந்தை தாய்களாக, சகோதர சகோதரிகளாகத்தானே பார்க்க வேண்டும்.

எனில்,

ஐ நா வில் இந்தத் தீர்மானத்தை நீங்கள் ஆதரிக்கத்தான் வேண்டும். வேறு வழியே இல்லை பிரதமர் அவர்களே.

போதும், புரியும் உங்களுக்கு.3 comments:

 1. எட்வின் அவர்களே! திருடன் ஓடும்பொது "திருடன்,திருடன் "என்று கத்திக்கோண்டே போவான்.ஊழலை எதிர்த்து இந்திய மக்கள் ஆவேசப்பட்டபோது,அதனைதணிக்க safety valve ஆக அன்னா ஹசாரே வந்து சேர்ந்தார். அமெரிக்கா தலையிடுவதின்நோக்கம்--- நிச்சயமாக இதில் ஏதோ சூது இருக்கிறது.--காஸ்யபன்

  ReplyDelete
 2. நன்று. நன்றி.
  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

  ReplyDelete
 3. எட்வின் அவர்களே! இலங்கை தமிழர்கள் பாடு பற்றி ஐ.நா ஒரு அறிக்கை தயாரித்தது. ஐரோப்பிய நடுகள் ஒரு அறிக்கை தயாரித்தது. இலங்கை அரசும் ஒரு அறிக்கை தயாரித்தது.அமெரிக்காவின் தீர்மானம் இலங்கை அறிக்கயை அடிபடையாகக் வைத்து நடவடிக்கை எடுக்கக் கோறுகிறது.இங்குதான் சூது இருக்கிறது ---காஸ்யபன்

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...