Sunday, March 27, 2011

எது செய்யக் கல்வி?



"பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் தேர்ச்சி
பெற்றவன் இனிப்பு வாங்கவும் தேர்ச்சி பெறாதவன் விஷம் வாங்கவும்
ஓடுகிறானே. குறைந்த பட்சம், இது சரிதானா என்கிற பரிசீலனையையேனும்
தொடங்குவதற்கு நமக்கு இன்னும் எத்தனை யுகங்கள் ஆகும்?" என்கிற மாதிரி,
போகிற போக்கில் சின்னதாய் கொஞ்சம் கொளுத்திப் போட்டுவிட்டுப் போனார் ஆசிரியர் சங்கம் ஒன்றின் மண்டல மாநாட்டினைத் துவக்கி வைத்துப் பேசிய பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் திரு.கார்மேகம் அவர்கள். எந்தப் பக்கம் தலை வைத்துப் படுத்தாலும் தூங்க விடாமல் ஒரு வாரத்திற்கு என்னைக் குடைந்துகொண்டே இருந்தது அவரது ஒற்றைவரிச் சின்னக் கேள்வி.

ஒன்றிரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற இயலாத ஒரு குழந்தையைத் தற்கொலைக்குத் தள்ளுமானால் அந்தக் கல்வித் திட்டத்தை அல்லது தேர்வுமுறையை நாம் பரிசீலிக்க வேண்டாமா?

தேர்ச்சி பெறுவதும் நல்ல மதிப் பெண்கள் பெறுவதும்தான் கல்வியின் நோக்கம்என்றாகிப் போனால் மனனம் செய்யும் எந்திரங்களாக மாறிப் போகமாட்டார்களா மாணவர்கள்?. எந்தச் சமாளிப்புமின்றி உண்மையை உள்ளது மாதிரி அப்படியே ஒத்துக் கொள்வதெனில் ஏற்கனவே பெரும்பகுதி மாணவர்கள் அப்படித்தானே மாறிப் போயிருக்கிறார்கள். மனனம் செய்வதுதான் மாணவனின் கற்றலுக்கான உழைப்பு என்பதாக ஏறத்தாழ நடைமுறையில் கொள்ளப்பட்டுவிட்டது. அதிக நேரம் மனனம் செய்பவன் அதிகம் உழைக்கிறான் என்றாகிறது.

தவறுதான் என்றாலும் ஒரு வாதத்திற்காக மனனம் செய்வதை உழைப்பு என்றே வைத்துக் கொள்வோம். அதிகம் உழைப்பவனுக்கு அதிக ஊதியம் என்கிற நியதியில் அதிகம் மனனம் செய்பவன் அதிக மதிப்பெண் பெறுகிறானா? என்றால் அதுவும் இல்லை. மொத்தம் எழுநூறு பக்கங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ரவி என்றொரு மாணவன் முன்னூறு பக்கங்களும் கோபு என்பவன் நூறு பக்கங்களும் மட்டுமே படித்திருப்பதாகக் கொள்வோம். தேர்வு வருகிறது . நூறு மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டுமெனில் வினாத்தாளில் நூற்றி முப்பதிலிருந்து நூற்றி நாற்பது மதிப்பெண்களுக்கான கேள்விகள் இருக்கும். இப்போது வினாத் தாளில் ரவி படித்திருந்த முன்னூறு பக்கங்களிலிருந்து முப்பது மதிப்பெண்களுக்கும் மீதமுள்ள நானூறு பக்கங்களிலிருந்து நூறு மதிப்பெண்களுக்கும் வினாக்கள் கேட்கப் பட்டிருந்ததாக வைத்துக் கொள்வோம். அதில் கோபு படித்திருந்த நூறு பக்கங்களிலிருந்து மட்டும் நாற்பத்தி ஐந்து மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப் பட்டிருந்தாகவும் வைத்துக் கொள்வோம்.

தான் படித்திருந்த முன்னூறு பக்கங்களையும் வரிக்கு வரி உருப் போட்டு, ஒரு நானூறு ஐநூறு முறை எழுதிப் பார்த்து மிகுகுந்த தாயாரிப்போடு இருந்தாலும்  ரவியால் அந்தத் தேர்வில் முப்பது மதிப்பெண்களுக்கும் மேல் எடுக்க இயலாது. இதுவும் அவன் எழுதிய கேள்விகள் அனைத்திற்கும் முழு மதிப்பெண்களும் கிடைத்தால்தான். அப்படி இல்லையெனில் முப்பதுக்கும் குறைவான மதிப்பெண்களே அவனால் பெற முடியும். எப்படிப் பார்த்தாலும் முன்னூறு பக்கங்களைப் முழுமையாய் படித்துள்ள ரவி அந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சுத்தமாய் இல்லை.     

மாறாக வெறும் நூறு பக்கங்களை மட்டுமே படித்திருந்த கோபு, தான் படித்திருந்த பக்கங்களிலிருந்து கேட்டிருந்த கேள்விகளுக்கு சரியான விடைகளை எழுதினால் நாற்பதிலிருந்து நாற்பத்தி ஐந்து மதிப் பெண்களைப்பெற்றுத் தேர்சி பெற்றுவிட முடியும்.    

எனில் ஒரு பங்கு உழைப்பை மட்டுமே வெளிப் படுத்திய கோபு தேர்ச்சி பெறுகிறான். அவனைப் போல் மூன்று பங்கு உழைப்பை வெளிப் படுத்திய ரவி தேர்ச்சிப் பெறத் தவறுகிறான். எனில் இந்தத் தேர்வு முறை குறித்தும் , கல்வித் திட்டம் குறித்தும் நாம் கவலையோடு பரிசீலிக்க வேண்டுமா இல்லையா?  

இதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்பது இன்னும் அதிகமான பயனைத் தரும் என்று படுகிறது. அந்த வினாத்தாளில் ரவி படித்திருந்த முன்னூறு பக்கங்களிலிருந்து முப்பது மதிப்பெண்களுக்கும், கோபு படித்திருந்த நூறு பக்கங்களிலிருந்து நாற்பத்தி ஐந்து மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே கொண்டோம். ஆக நூற்றி நாற்பது மதிபெண்களுக்கு வினாக்கள் கேட்கப் பட்டிருந்த அந்த வினாத்தாளில் ரவியும் கோபுவும் படித்திருந்த நானூறு பக்கங்களிலிருந்து எழுபத்தி ஐந்து மதிப்பெங்களுக்கான வந்துள்ளதாகக் கொண்டால் மிச்சம் அறுபத்தியிந்து மதிப் பெண்கள் உள்ளன. அவர்கள் இருவரும் படித்தது போக மீதமுள்ள முன்னூறு பக்கங்களில் ஒரு நூற்றி ஐம்பது பக்கங்களிலிருந்து எந்த வினாவும் கேட்கப் படவில்லை என்று வைத்துக் கொள்வோம். எனில் மீதமுள்ள அறுபத்தி ஐந்து மதிப் பெண்களும் எஞ்சிய அந்த நூற்றி ஐம்பது பக்கங்களிளிருந்துதானே கேட்கப் பட்டிருக்க வேண்டும். இப்போது செந்தில் என்றொரு மாணவன் அந்த நூற்றி ஐம்பது பக்கங்களை மட்டும் மிகத் தரவாக உருப்போட்டு வைத்திருப்பதாகக் கொள்வோம். இப்போது இவன் அறுபதிலிருந்து அறுபத்தி ஐந்து மதிப் பெண்கள் வரை வாங்கிவிட வாய்ப்புண்டுதானே? அறுபத்தி ஐந்து மதிப்பெண்களுக்கும் வினாக்கள் கேட்கப் பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். 

இன்னும் கொஞ்சம் உள்ளே போவோம். ரவியும் கோபியும் வாசிக்காமல் விட்ட மிச்சமுள்ள முன்னூறு பக்கங்களை மட்டும் செந்தில் படித்திருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது முன்னூறு பக்கங்களை படித்திருக்கக் கூடிய ரவி தேர்ச்சி பெறாமலும், அதில் பாதி அளவு மட்டுமே படித்திருந்த செந்தில் அறுபது முதல்  அறுபத்தி ஐந்து மதிப்பெண்களோடும் நூறு பக்கங்கள் மட்டுமே படித்திருந்த
கோபு நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து மதிப்பெண்களோடும் தேர்ச்சி பெறுவதற்கும் வாய்ப்பிருக்கிறதே. இது சரிதானா? சரிதான் என்பவர்களை நிராயுதபாணிகளாக கடாபி படைகளுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் தள்ளி விடலாம். பாவம் புண்ணியம் என உண்மையிலே எவையேனும் இருக்குமென்றால் இதை செய்வதற்காக பத்துப் பேரின் புண்ணியம் நம் கணக்கில் சேர்ந்துவிடும். இது கண்டு நெஞ்சு கொதிப்பவர்களோடு மட்டுமே நான் கொஞ்சம் பேச ஆசைப் படுகிறேன்.

முதலில் கல்வியின் நோக்கம் என்ன?. இதையே இன்னும் கொஞ்சம் புரிகிற மாதிரி " ஒரு மாணவனுக்கு ஏன் கல்வியை கற்றுத் தருகிறோம்?, அல்லது ஒரு மாணவன் ஏன்கல்வி கற்கிறான்? " என்றும் கேட்கலாம்.

மாணவனை சிந்திக்க வைப்பதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று ஐன்ஸ்டின் கூறியதாகப் படித்திருக்கிறேன். சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரது கருத்தாகவும் அதனைக் கொள்ளலாம்.

இன்றையக் கல்வி மாணவனை சிந்திக்கத் தூண்டுகிறதா?. இல்லவே இல்லை என்று நம் உசிரைவிடவும் பெரிதாக நேசிப்பவர்கள் தலை மீதே கை வைத்து சத்தியம் செய்யலாம்.

இப்போது இன்னொரு கேள்வி இயல்பாகவே வருகிறது."சிந்திக்க வைப்பது" என்றால் எந்தத் தளத்தில் அவனை சிந்திக்க வைப்பது? "நன்கு படி, நிறைய
மதிப்பெண்கள் வாங்கு , நல்ல வேலைக்குப் போ, இயலுமெனில் வெளிநாடுகளுக்குப் போ, நிறைய சம்பாரி, வளமையோடும் ,மகிழ்ச்சியோடும், நிம்மதியோடும் உன் குடும்பத்தோடு பொழுது கழி. வேறு எது குறித்தும் கவலை கொள்ளாதே. பக்கத்து வீட்டில் கொலை விழுந்தாலும் , பக்கத்து நாட்டில் குவியல் குவியலாய் பிணம் விழுந்தாலும் இதில் எதன் மீதும் கவனம் சிதறி விடாமல், உனது வேலை சம்பாரிப்பது , குடும்பத்துக்காக வாழ்வது என்கிற அளவில் நிறுத்து இது போக நேரம் இருக்குமெனில் பணக்காரர்களுக்கென்றே சில க்ளப்புகள் இருக்கின்றன, சேர்ந்து பொழுது கழி ," என்று 'தன் வீடு, தன் பெண்டு சோறு வீடு' என்கிற அளவில் அவனது சிந்தனையையும் ஆளுமையையும் சுருங்கவைப்பதா?

இப்படியாக இருப்பதால்தான் மாணவன் சுயம் சார்ந்த கனவுகளோடு வளர்கிறான். அந்தக் கனவு உடைகிற பொழுது அந்தச் சின்ன தோல்வியிலிருந்து மீண்டெழ முயலாமல் தற்கொலை செய்து கொள்கிறான். தான் தன் குடும்பம் என்று கடுகை விடச் சின்னதாய் சுருங்கிப் போகச் செய்யும் இந்தக் கல்வி முறை மீது நமக்கு போதுமான அளவுக்கு எப்போது கோபம் பிறக்கும்?.

அறிவை விரிவு செய்து , அகண்டமாக்கி, இந்தப் பரந்த மானுடப் பரப்பை அவனைப் பார்க்க சொல்லிக் கொடுத்து, இந்த மானுடத் திரள்முழுக்க அவனது சொந்தம் என்றும் கொஞ்சம் விசாலமாய் அவனைக் கல்வி வளர்த்தெடுத்திருந்தால் தேர்வு முடிவுகள் வெளி வரும் நாளில் இத்தனை குழந்தைகள் தற்கொலை செய்துகொள்வார்களா?

கல்வித் திட்டம் குறித்து கூட இன்னொரு கட்டுரையில் விரிவாக பேசலாம். இப்போது வருடா வருடம் இத்தனைப் பிள்ளைகளை காவு வாங்கும் இந்தக் கொலைகார தேர்வு முறையை என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

இதில் கவனிக்க இன்னொன்றும் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் தேர்ச்சி பெறாத பத்தாம் வகுப்பு மற்றும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவு வந்த அன்று தற்கொலை செய்து கொள்வதை செய்தித் தாள்களில் பார்க்கிறோம். ஆனால் , கல்லூரி மாணவர்களோ, மருத்துவக் கல்லூரி மாணவர்களோ, அல்லது பொறியியல் கல்லூரி மாணவர்களோ  தேர்ச்சி பெறாமைக்காக இப்படித் தற்கொலை செய்து கொள்வதில்லை.  எனில் பத்தாம் வகுப்பை விட இவை எல்லாம் முக்கியமில்லாதவையா? அல்லது இவை எல்லாவற்றையும் விட பத்தாம் வகுப்பு இவ்வளவு முக்கியமானதா?

இதற்கான காரணம் பரிசீலனைக்கு உரியது. கல்லூரி மாணவனோ, பொறியியல் கல்லூரி மாணவனோ , அல்லது மருத்துவக் கல்லூரி மாணவனோ அவனது தேர்வில் தேர்ச்சி பெறுகிறானா இல்லையா என்பது அவனது பக்கத்து வீட்டுக் காரனுக்குக் கூடத் தெரியாது. பல நேரங்களில் அவனது பெற்றோருக்கே தெரியாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: நாட்டுக்கேத் தெரியும். இதைச் சற்று மாற்றினால்கூட தற்கொலைகளில் பெரும்பகுதியைக்  குறைத்துவிட முடியும்.

எப்படி?

1 ) பத்தாம் வகுப்பு வரை பொதுத் தேர்வுகளே வேண்டாம். 
2 ) பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் இப்போது உள்ள முறையை மாற்றி "செமஸ்டர் முறை" யை அறிமுகப் படுத்தலாம்.

எங்கே , ஆரோக்கியமான விவாதத்தைத் தொடங்கலாமா?
  

Thursday, March 24, 2011

ம்...


பன்னீர்
சந்தனம்
கல்கண்டு 
ரோஜாப்பூ 
அப்படியே 
 பக்கத்து தட்டில் 
மொய்க்  கவர்கள் 


Tuesday, March 22, 2011

பள்ளி என்றும் கொள்ளலாம்...

ஒரு வழியாய் அவரது மகளுக்கு அந்தப் பேர் போன பள்ளியில் எல்.கே.ஜி சேர்க்கைக்கான நேர்காணலுக்கு கடிதம் வந்திருந்தது. ஏதோ ஜெயிக்கப் போகும் கட்சியில் வெற்றி வாய்ப்பு நிச்சயமாய் உறுதி செய்யப்பட்ட தொகுதியில் டிக்கட் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார். 

அவரது பதட்டம் தனித்து, அவரை ஒரு நிலைக்கு கொண்டு வரவே கொஞ்ச நேரம் ஆனது. ஆற அமர அவர் ஒரு வழியாய் நாற்காலியில் அமர்ந்ததும் அவரது கையிலிருந்த அழைப்புக் கடிதத்தை வாங்கிப் பார்த்தேன்.  அப்படியே வெல வெலத்துப் போனேன். 

அடுத்த நாள் நடக்கும் தேர்வில் தங்கள் மகள் தேர்ச்சி  பெற்றால் உடனடியாக  பள்ளிக் கட்டணம் , சீருடை, புத்தகங்கள், நோட்டுகள், டை, வில்லை , ஷூ , சாக்ஸ் , புத்தகப் பை, மற்றும் நன்கொடை என்கிற வகையில் 48000  ரூபாயை உடனே கட்டிவிட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சேர்க்கை ரத்து செய்யப் படும் என்றும் சொல்லப் பட்டிருந்தது. இது போக இரண்டாம் பருவத்திற்கு வேறு சில ஆயிரங்களை கொட்டவேண்டும் என்று நண்பர் சொன்னார். 

"ஏம்ப்பா, இவ்வளவு பெரிய தொகைய வட்டிக்கு வாங்கி அழுது இங்க கொண்டு போய் சேர்க்கனுமா?. தம்பிய எல்லாம் நம்ம பள்ளிக் கூடத்துலதான சேர்த்தேன். நல்லாதானே படிக்கிறான்," 

"அடப் போப்பா உனக்கு இருக்கிற மன வலிமையோ, பக்குவமோ நமக்கு இல்லப்பா. மட்டுமல்ல, இந்தப் பள்ளிகூடத்துல சேக்கலன்னா அவ வீம்புக்குன்னு நாண்டுக்கிட்டே செத்தாலும் செத்துடுவா"

இதற்குமேல் பேசிப் பயனில்லை என்று தோன்றவே அதற்குமேல் அதற்குள் நான் போகவில்லை. 

"நீ வந்தாதான் நாளைக்கு வருவாளாமாம். அம்மா வேணாமாம் , அப்பாவும் வேணாமாம் , மாமாதான் வரணுமாம் . இண்டர்வியூக்கு வார புள்ளைங்களையும் ,பெற்றோரையும் கூட்டிட்டுப் போக எல்லா இடத்துக்கும் பள்ளி பேருந்து வருதாமாம். தேர்முட்டிக்கு சரியா எட்டு மணிக்கெல்லாம் வந்துடுப்பா " படபடன்னு சொல்லிட்டு கிளம்பினார்.

அவளுக்கு என்மேல் அவ்வளவு பிரியம் வருவதற்கு வே று ஒன்றும் காரணமில்லை. அவள் கேட்பதை காது கொடுத்துக் கேட்டு பதில் சொல்லும் எனது கோமாளித் தனமான அணுகுமுறைதான்.  

முன்னூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களாய் பள்ளிகள், பாலிடெக்னிக்குகள், கல்லூரிகள், ஆசிரிய பயிற்சி நிறுவனங்கள் , பொறியியல் கல்லூரிகள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள் நம்மை பிரமிக்க வைக்கும். இருநூறு பேருந்துகளுக்கும் மேல் அவர்களால் இயக்கப் படுவதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன். 

அடுத்த நாள் அவர்களுக்கும் முன்னமே தேர்முட்டியில் காத்திருந்தேன். வந்ததும் ஓடி வந்து தொத்திக் கொண்டாள். பேருந்திலும் இருக்கையில் அமராமல் என் மடியில் அமர்ந்துகொண்டாள். 

கேள்வி மேல் கேள்வி . இப்படிக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்கும் ஞானக் குழந்தைகளைத்தான் இது மாதிரி பிரமாண்டக் இருட்டுக் குகைகளில் தள்ளப் போகிறோமே என்றிருந்தது. 

பேருந்து வளாகத்துக்குள் நுழைந்ததுதான் தாமதம் , குழந்தை துள்ளிக் குதித்து மடியை விட்டு இறங்கினாள். 

எல்லோரும் இறங்கினோம். அழகான புல்தரை, ஆர்ப்பாட்டமான கட்டடங்கள், நேர்த்தியான வரிசையில் நிறுத்தப் பட்டிருந்த பேருந்துகள் என்று அசத்தலான சூழல். 

துள்ளிக் குதித்து ஒரு சுற்று சுற்றிப் பார்த்தபின் குழந்தை குதூகலித்தாள், " ஐ! எவ்ளோ பெரிய பஸ் ஸ்டாண்டு"


Friday, March 18, 2011

ஒரு துண்டுக் கவிதை


வராத கடனுக்கு 
எதை எடுத்துப் போகலாம் 
எனத் தேடும்
ஈட்டிக்காரனிடம் 
பொக்கை வாய்ச் சிரிப்போடு
இரண்டு கைகளையும் 
நீட்டித் தாவும் 
என் குழந்தை  

Thursday, March 17, 2011

நறுக்கென்று ...

அந்தச் சின்னப் பெட்டிக்குள் 
அடக்கம் 
எல்லாக் கறை வேட்டிகளும் 

Wednesday, March 16, 2011

இத்தனைக்குப் பிறகும்

வகுப்புகள்... 
மாலை வகுப்புகள்... 
சிறப்பு  வகுப்புகள்...

இத்தனைக்குப் பிறகும் 
தேர்வறையில் 
திருட்டுத் தனமாய் 
நோட்சைப் பார்க்கிறான் 

நோட்சைப் பிடுங்கி... 
முதுகில் 
இரண்டு பலமாய் போட்டு 

கோபம் நிழலாய் 
கூடவே தொடர 
குறுக்கும் நெடுக்குமாய் 
அறையில் நடந்து 

"பதினேழு வருஷ அனுபவம் ...
தப்ப முடியுமா?"
பெருமை கொப்பளிக்க 
நாற்காலி சேர்ந்து 

பற்றிய நோட்சைப் புரட்டினேன் 
வினாத் தாளுக்கு 
விடை தயாரிக்க  

Monday, March 14, 2011

எங்கள் பாட்டன்களுக்கு நூற்றி ஐம்பது ஏக்கரில் சுடுகாடே இருந்தது

வாஷிங்டனுக்கு, டோக்கியோவிற்கு, மெல்போனுக்கு மற்றும் இன்ன பிற
பெருநகரங்களுக்கு எந்தெந்த விமான நிறுவனங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை
விமானங்களை இயக்குகின்றன என்பது அத்துப் படியான அளவிற்கு நம்மில்
பலருக்கு நமது கிராமத்திற்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை நகரப் பேருந்துகள்
வந்து போகின்றன என்பது தெரியாது.

பல மைல்களுக்கு அப்பால் கிடக்கிற பிரமிடுகளின் மேன்மை குறித்து, தொன்மம்
குறித்து, மணிக் கணக்காய் சிலாகிப்பதில், பாரம் பாரமாய் எழுதிக்
குவிப்பதில் கொஞ்சமும் கஞ்சத் தனமே இருப்பதில்லை தமிழனுக்கு. அதில்
நமக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படிக்கு வருத்தமும் இல்லை. சாவதற்குள் ஒரு
முறையேனும் பிரமிடுகளைப் பார்த்துவிட்டு வந்துதான் சாக வேண்டும் எனப்
பிடிவாதாமாய் ஆசைப்படும் நண்பர்கள் எனக்கும் உண்டு. எரிச்சலே கொள்ளாமல்,
ஒரு புன்னகையோடு இவர்களைக் கடந்து போகும் பக்குவம்கூட நமக்கு
வந்துவிட்டது. ஆதிச்ச நல்லூர், மணல்மேடு மற்றும் காரைமேடு போன்ற நமது
தமிழ்க் கிராமங்களில் நடக்கும் போதே கால்களில் மிதிபட்டு உடைந்து அழிந்து
வரும், நமது தொன்மையும் மேன்மையும் மிக்க நாகரீகத்தின் சின்னங்களான
முதுமக்கள் தாழிகள் குறித்து எந்த அக்கறையும் இவர்களுக்கு இருப்பதில்லை
என்பதுதான் நமது கவலையே.

பெருந்தன்மையினால் தாராளமாய் பிசைந்து செய்யப்பட்ட மனிதனால்கூட மேற்சொன்ன
எந்த ஒரு ஊரிலும் இன்றைய தேதியில்கூட ஐயாயிரம் பேருக்கு மேல் வாழ்வதாய்ச்
சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்ட குக்கிராமங்கள் ஒவ்வொன்றிலும் நூறு
ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றி ஐம்பது ஏக்கரை ஒட்டிய நிலப் பரப்பில்
அமைந்துள்ள சுடுகாடுகளின் முக்கியத்துவம் குறித்து, சர்வதேச ஆய்வாளர்கள்
அக்கறை கொள்ளாததில் நியாயம் இருக்கலாம். தமிழாய்ந்த தமிழர்களின் கவனம்கூட
இவற்றின் பக்கம் திரும்பாததுதான் உலகம் ருசித்த சோகங்களிலேயே தலையாய
சோகம். குருஷேத்திரப் போர் நடந்ததாகக் கூறப்படும் இடமருகில்கூட இவ்வளவு
பரந்த நிலப் பரப்பில் சுடுகாடு இருக்கிறதா? அல்லது இருந்து அழிந்து
போனதற்கான சுவடுகலாவது அல்லது புராணவழி  சான்றுகளாவது இருப்பதற்கான
ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்றால் அதுவுமில்லை.

எத்தனையோ லட்சாதி லட்சம் குதிரைகளும் யானைகளும் வீரர்களும் பங்கு
பெற்றதாகக் கூறப்படும் போர்க்களமான குருச்கேத்திரத்திற்கு அருகே காணக்
கிடைக்காத ஒரு நிலப் பரப்பு நிலத்தில், தமிழ் மண்ணில் சுடுகாடுகள் பரந்து விரிந்து கிடக்கின்றன என்றால் என்ன பொருள்? இத்தனை பெரிய பரப்பளவில் சுடுகாடுகள் ஏதோ ஒரு புள்ளியில் தேவைப் பட்டிருக்கின்றன. எனில் பெரியதும் உக்கிரமமானடுமான போர்கள் அங்கே நடந்திருக்கக் கூடும் என்று கொள்வதற்கும் வாய்ப்புண்டு. 

இது உண்மையெனில் பொறாமை கொள்ளுமளவிற்கு மேன்மையும் அளப்பரிய வளங்களைக் கொண்டதுமான சாம்ராஜ்யங்கள் அங்கே இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எனில் இது குறித்த ஆய்வுகள் போதுமான வகையில் என்றுகூட அல்ல, இன்னும் தொடங்கப் படவே இல்லையே ஏன்?. உலக கவனம், இந்திய கவனம் என்பவற்றை எல்லாம் கூட ஆடித் தள்ளுபடி , பொங்கல் தள்ளுபடி அல்லது இது போன்ற ஏதாவது ஒரு தள்ளுபடி என்கிற வகையில் தள்ளுபடி செய்துவிடலாம். ஏனெனில் தமிழ்ச் சுடுகாடுகளின் தொன்மையேகூட அவர்களைக் கலக்கிப் புரட்டி வெட்டிச் சாய்த்திருக்கலாம்.அதையும் இதையுமென்றுஅலைந்தலைந்து ஆய்வு செய்யும் எங்கள் சான்றார்ந்த பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது குறித்து கவனம் சாயாததன் காரணம்தான் என்ன முயன்றும் பிடிபட மறுக்கிறது. 

மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா பற்றித் தமிழகத்தில் உள்ள பள்ளிப் பிள்ளைகள் அனைவருக்கும் சரியாகவோ தவறாகவோ கூடுதலாகவோ சற்றுக் குறைச்சலாகவோ இருக்கலாம், ஆனால் நிச்சயமாகத் தெரியும். மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகியவற்றின் தொன்மைச் சிறப்புகள் குறித்து கற்றுத் தெளியாமல் நமது பிள்ளைகள் பள்ளிகளைக் கடந்துவிடக் கூடாது என்கிற கவனத்தோடு நமது கல்வித் திட்டம் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதில் நமக்கெதுவும் பிரச்சினை இல்லை. இன்னுஞ்சொல்லப் போனால் இந்தியாவின்  கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் அதிலும் குறிப்பாக பண்டைய நகர நாகரீகம் ஆகியவற்றின் தொன்மச் சிறப்புகள் குறித்து நம் பிள்ளைகள் தெளிவுறக் கற்றுத் தேரவேண்டும் என்பதில் முரட்டுத் தனமான பிடிவாதமே நமக்குண்டு. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில்  உலகின் எந்த ஒரு நாகரீகத்தின் பழமை மற்றும் தொன்மச்  சின்னங்கள் குறித்தும் நம் குழந்தைகளுக்குத் தெளிவுறச் சொல்லித் தரவேண்டும் நம் எல்லை தாண்டிய ஆசையை யாரும் சந்தேகப் பட முடியாது. 

நமது ஆதங்கமெல்லாம், நமது தமிழ்மண்ணின் மையப் பகுதியான அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள உட்கோட்டையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் அந்தப் பூமிக்குக் கீழே புதையுண்ட நிலையில் கட்டடங்களும் சிலைகளும் காணப்பட்டு, போதிய பராமரிப்பும் ஆய்வுமின்றி அழிந்து வருவதைப் பற்றிய கவலை யாருக்கும் இல்லாதது குறித்துதான். ஆய்வாளர்களோ, கல்வியாளர்களோ, அரசுகளோ அது குறித்துப் போதிய அக்கறை காட்டாது மௌனிப்பதன் மர்மம் என்ன?. கங்கைகொண்ட சோழபுரம் ஆலயம் வரை செல்லும் கல்விச் சுற்றுலாக்கள்கூட அங்கிருந்து கிராம மக்களுக்கான நடை தூரத்திலிருக்கும் உட்கோட்டைவரை நீளாமல் போவதில் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. 

கிரஹாம் ஆன் கூக் என்ற அறிஞர் பூம்புகாருக்கும், நாகைக்கும் இடையே நடத்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் பதினோராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மிகுந்த நுணுக்கமான நகர கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு நிலப் பகுதி இப்பகுதியில் கடலுக்குள் மூழ்கியிருக்கிறது என்பதைத்தெளிவு படுத்தினார். அது குறித்து, அது சரியல்ல என்கிற அளவில்கூட வாய் திறக்காமல் உலகச் சமூகம் மௌனித்துக் மர்மம் புரிகிறது. அதை உண்மையென ஒத்துக் கொண்டால் மெசபடோமியாவைவிடப் பழமையும் தொன்மையும் வாய்ந்த நாகரீகத்திற்கு சொந்தப் பூமி தமிழ்ப் பூமி என்ற உண்மையை ஒத்துக் கொள்வதாய் ஆகும். அதை அவர்களால் ஜீரணிக்க இயலாது. ஆயிரம்தான் தமிழ்ப் பூமியின் நாகரீகம் என்றாலும் அது இந்திய நாகரீகம்தானே?. பிறகேன் இந்தியச் சமூகமும் மௌனிக்கிறது?. இதையெல்லாம் விடுங்கள், உலகின் எந்தப் பகுதியில் எது கிடைத்தாலும் ஓடியோடி ஆய்ந்து அவற்றின் சிறப்புகளை பெருந்தன்மையோடு ஏற்று பறை சாற்றும் தமிழ் மண்ணின் அறிவு ஜீவிகளே,   இதை ஏற்கக் கூட வேண்டாம், சரிதானா என்கிற அளவிலேனும் இதை ஆய்ந்து பார்க்கவும் அஞ்சுவதன் பொருள்தான் என்ன? 

கேட்கலாம், "தமிழ்ப் பூமியின் தொன்மத்தை, மேன்மையை ஒப்புக் கொள்வதால் மட்டும் உங்களுக்கென்ன லாபம் வந்துவிடப் போகிறது?." திருப்பிக் கேட்கிறேன்," அது உண்மையெனில் அதை ஒத்துக் கொள்வதால் உங்களுக்கென்ன நட்டம் வந்துவிடப் போகிறது?"

தன் மொழியின், கலாச்சாரத்தின் தொன்மம் அறிந்த சமூகம் அவற்றை மதித்துப் புழங்கும். அதன் மூலம் அந்த மொழியும் கலாச்சாரமும் வளர்ந்து செழிக்கும். தனது மொழி மற்றும் கலாச்சாரத்தின் மேன்மை புரியாத சமூகம் எதுவாயினும் அவற்றைப் புழங்கத் தயங்கி அவற்றின் அழிவுக்குக் காரணமாகும். எனவேதான் கவலைப் படுகிறோம். 

கி.பி.அரவிந்தன் "இருப்பும் விருப்பும்" என்ற தனது நூலில் தாங்கள் தோற்றதற்கான காரணங்களை அலசுகிறார். அவர் சொல்கிறார், " தவறுகளில் இருந்து படிப்பினைப் பெற்று முன்னேறுவதுதான் போராட்டம்." ஆமாம், தனது தவறுகளைத் திருமாத் திரும்பச் செய்யும் இனமோ, சமூகமோ, சொந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடும் குழுவோ, அல்லது எதுவோ ஆயினும் அது அழிந்து போகும். 

காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நமது சின்னக் குழந்தை சாய்நா சொல்கிறார், " I won the gold because I did not repeat my mistakes."        

நன்றி : "கல்கி" மற்றும்  " சுகன் "

Sunday, March 13, 2011

நறுக்குகள்

மாட்டுக் காரனின்  
முதுகுச் சாயம் 
மாட்டின் கொம்பில் 


அலை பாயும் 
கண்களுக்கு 
கடவுள் மட்டும் 



கை நிறைய மனுக்கள்
நல்ல குளிர்
எங்கே தீப்பெட்டி?


சிதையிலும் 
சுவாசிக்கும் 
சினிமாப் பிணம்    

Friday, March 11, 2011

நறுக்குகள் மூன்று

1 )  புத்தகம் கேட்கும் 
       மகளின் கையில் 
       மயிலிறகு 



2 ) பாதங்கள் நிராகரித்த 
     ஒத்தையடி பாதையில் 
     பச்சைப் புல்



3) அபிட் எடுக்கத் தவறியதால் 
   ஆணிக்காயம்  
    பம்பரத்திற்கு







Wednesday, March 9, 2011

குட்டிக் கவிதை

பசித்த கழுகுக்கு 
குடல் தரும் 
செத்த நாய் 



குட்டியாய் ஒரு கவிதை ...



எதிர் வீட்டுப் பையன்
புத்தகம் கொடுத்தான் 
என்ன இருக்கிறதோ?



Monday, March 7, 2011

முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...


"உன்னுடைய அழைப்பிற்கு
எவரும்
செவி சாய்க்கவில்லையெனில்
தனியாகவேனும் நட!
தனியாகவேனும் நட!!"

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு அடுத்து நடந்த பாகப் பிரிவினையில் பாகிஸ்தானின் பங்கு 75 கோடி ரூபாய் என்று கணக்கிடப் பட்டது. அதில் 20 ௦ கோடியை மட்டுமே கொடுத்த அன்றைய நேரு அரசு மீதமுள்ள 55 கோடியைத் தர இயலாது என்று அழிச்சாட்டியம் செய்தது. காஷ்மீர் பிரச்சினையில் தங்களோடு ஒத்துப் போகும் வரை அந்தப் பங்குத் தொகையை தருவது என்ற பேச்சுக்கே இடமில்லையென வல்லபாய் படேல் பிடிவாதமாய் கூறிவிட்டார். இந்த நிலையில் இது விஷயத்தில் நேருவிடமிருந்தும் நியாயம் கிடைத்துவிடாது. ஏன் எனில் துருப் பிடித்த இரும்பு மனிதரான வல்லபாய் பட்டேலை மீறி நேருவால் எதையும் செய்துவிட முடியாது. மன்மோகன் அளவுக்கு சத்தியமாய் இல்லைதான் என்றாலும் நேருவுக்கும் நிறைய நெருக்கடிகள் இருக்கவே செய்தன. இதை உணர்ந்துகொண்ட காந்தி 1948 ஜனவரி 13 அன்று பிர்லா மாளிகையில்  உண்ணாவிரததை தொடங்கினார்.அப்பொழுது அங்கு திரண்டிருந்த ஜனங்களை மேலே காணும் தாகூரின் பாடலைத்தான் பாட சொன்னதாக அருணன் சொல்கிறார். (ஆக காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து முதன் முதலில் உண்ணாவிரதம் இருந்தது அநேகமாக காந்திதான் என்று படுகிறது)

அஸ்மா மக்பூல் மேற்காணும் தாகூரின் வரிகளை வாசித்திருக்க சத்தியமாய் வாய்ப்பில்லை. ஆனால் இதற்கு மிகவும் நெருக்கமாக ஒரு நான்கைந்து வரிகளை "பேஸ் புக்" கில் அவர் கொளுத்திப் போட எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி முபாரக் உசிருக்கு பயந்து தனது குடும்பத்தோடு  நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

 ஒட்டு மொத்த எகிப்து மக்களின் சகலத்தையும் சுரண்டிக் கொழுத்த சர்வாதிகாரி முபாரக்கிற்கு எதிராக மக்களின் கவனத்தைத் திருப்ப நான்கு எகிப்திய இளைஞர்கள் தங்கள் உடலுக்கு தீயிட்டுக் கொளுத்திக் கொண்டு செத்துப் போகிறார்கள். எரிந்த அந்த இளைஞர்களின் ஜுவாலையிலிருந்து எகிப்து மக்கள் இருண்டு கிடந்த தங்கள் வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கண்டார்கள். இதற்கு காரணமாக அமைந்தது இருபத்தி ஆறே வயதான அஸ்மா மக்பூலின் நான்கைந்து வரிகளும் செயலும்தான்.

" தீக் குளித்த நான்கு இளைஞர்களுக்கும் அஞ்சலி செலுத்த "தஹ்ரீக் சதுக்கத்திற்குப்" போகிறேன். என்னைப் போல் சிந்தனை உள்ள எவரும் வரலாம்" என்கிறமாதிரி ஒரு சன்னமான அழைப்பாகத்தான் அவரது முதல் "பேஸ் புக்" குறிப்பு இருந்தது. அவர் சதுக்கத்திற்குப் போன போது ஒரு மூன்று நான்கு இளைஞர்கள் மட்டுமே வந்திருந்தனர்.விவரம் தெரிந்து அங்கு  வந்த காவலர்கள் அதை அவ்வளவு பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.  அவர்களை அழைத்துப் போய் எச்சரித்து அனுப்பி விட்டனர். அந்தக் காவலர்களுக்கு மட்டுமல்ல அந்த இளைஞர்களுக்கும் ஏன் அஸ்மா மக்பூலுக்கே அப்போது அவர் அடுத்ததாய் எழுதப் போகும் நான்கைந்து வரிகள் எகிப்தை மட்டுமல்ல உலகையே ஒரு புரட்டு புரட்டப் போகிறது என்பது.

"தங்களுக்கு தன்னம்பிக்கை இருக்குமானால், இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால் , ஜனவரி 25 ஆம் தேதி நாம் போராட்டத்தில் குதிக்க வேண்டும். யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் தனியாக செல்வேன். தீக் குளிப்பதற்காக அல்ல. என்னை சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை, நீங்கள் உங்களை ஆணாக கருதினால் வாருங்கள். அல்லாவைத் தவிர வேறு எந்த சக்திக்கும் அஞ்சாதீர்கள்" என்று அவர் "பேஸ் புக்" கில் எழுதி போட்ட போது லட்சக் கணக்கான மக்களை ஓரிடத்திலே ஒன்றிணைத்து இறுதி வெற்றி கிட்டும் வரை
அவ்விடம் விட்டு நகராமல் அவர்களைக் கட்டிப் போடும் மந்திரக் கயிறாக அது மாறும் என்பதை அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க நியாயமில்லை.இந்த வரிகளின் விளைவு ' நீங்கள் உங்களை ஆணாகக் கருதினால்' என்ற அவரது அடி மனசில் உறைந்து கிடக்கும் ஆணாதிக்க நம்பிக்கையை விமர்சிக்க விடாமல் நம்மை நகர்த்திப் போகிறது.

பலரது எழுத்துக்கும்  வாழ்க்கைக்கும் இடையே கார்களும் பங்களாக்களும் எஸ்டேட்டுகளும் நிறைந்து மென்மையாய் புன்னகைத்துக் கொண்டிருக்க அஸ்மா மக்பூலோ தான் செய்யப் போவதை எழுதினர். எழுதிய படியே செய்தும் காட்டினார்.

"நீங்கள் ஒன்றும் அனாதைகளல்ல, உங்களோடு நாங்களிருக்கிறோம்" என்று போர்ராடத் திரண்டிருந்த எகிப்திய மக்களிடம் உலக மக்கள் ஒவ்வொருவரும் சொன்னோம்.உலக மக்களின் உணர்வுப் பூர்வமான ஆதரவு அவர்களை நம்பிக்கை கொள்ள வைத்தது.எழுச்சியடைந்தார்கள். சலிர்க்கிற மாதிரியும் நெகிழ்கிற மாதிரியும் ஏராளம் சம்பவங்கள் அந்தப் போராட்டத்தில்.

"போராடும் மக்களை நோக்கி ஆயுதுங்களைத் திருப்புங்கள். ராணுவத்தையும் என் குடும்பத்தையும் தவிர அனைவரும் செத்துப் போனாலும் பரவாயில்லை. போராட்டத்தை நசுக்குங்கள்" என்ற அதிபர் முபாரக்கின் உத்திரவை ராணுவம் நிராகரித்தது. "எங்கள் மக்கள் மீது துப்பாக்கியைத் திருப்பவா நாங்கள் ராணுவத்தில் சேர்ந்தது?. எதிரிகளிடமிருந்து எங்கள் மக்களைப் பாதுக்காப்பதே அல்லாமல் சொந்த மக்களை அழித்து அதிபரைக் காக்கும் அரண்மனை அடியாட்கள் அல்ல. எங்கள் மக்களின் ஊழியர்கள் நாங்கள்" என்கிற அவர்களின் புரிதலும் தெளிவும் சிலிர்ப்பூட்டும் சம்பவம் எனில் அடுத்த சம்பவமோ நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.

ஒரு அம்மா ஒரு மகன் என்று மிக மிக அழகான குடும்பம். மகன் ராணுவ வீரன். அந்தத் தாய் போராட வருகிறாள் சதுக்கத்திற்கு. அந்தப் புள்ளியில் ராணுவம் என்ன செய்யப் போகிறது என்பதை அந்தத் தாய் உட்பட யாரும் அறிந்திருக்க வில்லை. அதே சதுக்கத்திற்கு அவரது மகனும் ராணுவப் பணிக்காக வருகிறார். அம்மாவும் பிள்ளையும் சதுக்கத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். காலையில் வீட்டிலிருந்து பணிக்குப் புறப்படும் போது வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த போதுகூட அம்மா தான் அங்கே வரப் போவதை சொல்ல வில்லையே என்ற ஆச்சரியம் மகனுக்கு. கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் வாழ்த்திக் கொள்கிறார்கள். மகன் ராணுவ வீரர்களை நோக்கிப் போகிறார். தாய் போராளிகளோடு போய் சங்கமிக்கிறார்.

தனது ராணுவம் என்று முபாரக் கருதியிருந்த ராணுவம் மக்கள் ராணுவமாக மாறுகிறது. மக்கள் புரட்சி வெற்றி பெறுகிறது. மிரண்டுபோன முபாரக் தன் குடும்பத்தோடு தனது நாட்டை விட்டு தப்பியோடி தனது உசிரக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்தத் தீ அண்டை நாடுகளில் பரவுகிறது. குறிப்பாக லிபியாவில் அயோக்கியத் தனத்தில், கொடூரத்தில், முபாரக்கிற்கு கொஞ்சமும் குறைவுபடாத கடாபிக்கு எதிராக மக்கள் திரண்டு எழுந்திருக்கிறார்கள். ராணுவம் இன்னும் மக்கள் ராணுவமாக மாறாமல் கடாபியின் இராணுவமாகவே உள்ளது. எனவே அவர்கள் மக்களை நோக்கித் தங்கள் ஆயுதங்களைத் திருப்பி மக்களை கொன்று குவிக்கிறார்கள். ஆனால் எந்த ஆயுதத்தாலும் இந்த நொடி வரை மக்களின் எழுச்சியை ஊனப் படுத்த முடியவில்லை.

ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து , பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் நமது உச்சரிப்புக்குள் சிக்க மறுக்கும் பல நாடுகளும் போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் சர்வாதிகாரிகளுக்கு எதிராகவும் அறிக்கைகளை மட்டுமல்ல படைகளையும் அனுப்பத் தயாராகின்றன. அமெரிக்கா அனுப்பியே விட்டது. 

போராட்டம் வெடித்து சில நூறு மக்கள் செத்துப் போன உடனே லிபியா மீது பொருளாதாரத் தடையினை ஐ.நா வீசியது.

லிபியா மக்கள் மீது வானிலிருந்து லிபிய ராணுவம் குண்டுகளை வீசினால் அந்த விமானங்களை சுட்டு வீழ்த்துவோம். லிபியா மீது எந்த விமானம் பறப்பதையும் தடை செய்கிறோம் என்று அமெரிக்காவும் இங்கிலாந்தும் பிரகடனம் செய்கின்றன. 

மக்களை கொல்வதற்கு ஆணையிட்ட கடாபி, அவரது மகன், மற்றும் அதிகாரிகள் மீது இன்டர்போல் எனப்படும் சர்வ தேச காவல் துறை பிடி வாரண்ட் போட்டிருக்கிறது.

மக்கள் நம்பிக்கையோடு தங்கள் போராட்டத்தை நகர்த்துகிறார்கள். இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ லிபிய மக்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் .  

 நாம் நமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் லிபியா மற்றும் போராடும் ஒவ்வொரு
மக்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம்.

அதே நேரம் உலக மக்களிடம் சில ஐயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் , போராடும் மக்களிடம், "ஏமாந்து விடாதீர்கள்" என்று அன்போடும் அக்கறையோடும் எச்சரிக்கவும் கடமை
பட்டிருக்கிறோம்.

சில நூறு மக்களை அதன் ராணுவமே கொன்று குவித்த போது சற்றும் தாமதிக்காது கண்டனத்தையும் பொருளாதாரத் தடையையும் வெளியிட்ட ஐ. நா சபையும் ,கடாபி
மீது பிடி வாரண்ட் பிறப்பித்துள்ள சர்வதேச காவல் துறையும் , அமெரிக்காவும் , பிரிட்டனும் ஒரு கோடையில் ஓரே வார கால இடை வெளியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான 
எண்ணிக்கையில்  தமிழ் மக்கள் தங்களது சொந்த ராணுவத்தால் சுட்டுக் கொள்ளப் பட்டபோது கை கட்டி மௌனித்தமைக்கும், ரகசியமாக ஆயுதங்களையும் ராணுவத் தொழில் நுட்பத்தையும் போராடிய எங்கள் மக்களின் எதிரிகளுக்கு வழங்கிய கள்ளத் தனத்திற்கும் காரணம் என்ன?

எகிப்து லிபியா மற்றும் போராடும் என் இனிய மக்களே , நீங்கள் உங்களையும் உலக மக்களின் ஆதரவையும் மட்டுமே நம்புங்கள். முபாரக்குகளைவிடவும் கடாபிகளைவிடவும் கோடி மடங்கு மோசமானவர்கள் இவர்கள். அருள் கூர்ந்துஇவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.

Wednesday, March 2, 2011

செய்யாமையானும்...

கட்டாயம் செய்தே இருக்க வேண்டிய ஒரு காரியம் அது. செய்யத் தவறி விட்டேன்.  அதற்காக வெட்கப் படுகிறேன். இப்படிப் பகிரங்கமாகப் பகிர்வதில் எந்தச் சங்கடமும் எனக்கில்லை.  வெட்கப் பட வேண்டிய விஷயத்திற்கு வெட்கப் படாமல் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பதற்கு நான் ஒன்றும் பாரதப் பிரதமர் மன்மோஹன்சிங் இல்லை.

உலகமே இதுவரை கண்டிராத , 'யாராலும் நினைத்தேப் பார்க்க முடியாத ஒரு பெரிய ஊழல் உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதே  என்று கேட்டால், "அட அதக் கேக்குறீங்களா?, அது தப்பு,அப்படியெல்லாம் செய்யக் கூடாது, என்று எவ்வளவோசொல்லிப் பார்த்தேன், தலையால தண்ணியே குடிச்சுப் பார்த்தேன். அந்த அமைச்சர் எதையும் கண்டுக்காம தப்பு செஞ்சா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?," என்கிற மாதிரி எதையாவது சொல்லித் தப்பித்துக் கொள்வதற்கோ அல்லது, "நீங்கதானே பிரதமர், நீங்கதானே அவரை அமைச்சரா நியமித்தது. அப்ப நீங்கதானே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்,"  என்ற கேட்டால்," அட நீங்க ஒன்னு , அப்படியெல்லாம் எதையும் என்னால செய்ய முடியாது. வகுப்பாசிரியர் வரும் வரைக்கும் வகுப்பை சத்தம் போடாமல் பார்த்துக் கொள்ளும் வகுப்புத் தலைவன் வேலைதான் என்னுடையது. சத்தம  போடாதீங்கன்னு சொல்லலாம். மீறிச் சத்தம் போட்டால் 'ராமசாமி', 'கோவிந்தசாமி'  என்று பெயர் எழுதி வைக்கலாம். அதையும் கடந்து யாராச்சும் ரொம்பவும் குசும்பு செய்தா 'ராசா அ.வி' என்று எழுதிக் கொடுக்கலாம் என்கிற அளவுக்கும் சற்று குறைச்சலான அளவுக்கே அதிகாரங்களைக் கொண்ட , கைகள் கட்டப் பட்ட கூட்டணிப் பிரதமர் நான்'  என்கிற மாதிரி நழுவிப் போவதற்கோ நான் ஒன்றும் அவரளவுக்கு உசரமானவ்னில்லை. அப்படி நழுவுவதை ஈனத்தனமாக நினைக்கும், உப்பைக்  கொஞ்சம் அதிகமாய் உணவில் சேர்த்து சாப்பிடும் சாமானியன் நான்.

 "பத்து கிலோ ஞானம் " என்ற எனது இரண்டாவது நூலின் அறிமுகக் கூட்டத்தினை பெரம்பலூரில் தம்பி அம்மணி ஏற்பாடு செய்திருந்திருந்தார்.
பேராசிரியர்.இரா.சுப்பிரமணி அவர்களும் எழுத்தாளர் பாமரனும் மிகுந்த
பெருந்தன்மையோடு கலந்து கொண்டார்கள்.

 கூட்டத்திற்கு அடுத்த நாள் விஷ்ணுபுரம் சரவணன் பேசினார்.

"அண்ணா நேற்று இரவு பாமரன் பேசினார் "

"ஆஹா!, என்ன சொன்னார் சரவணன். நல்லபடியா ஊர் போய் சேர்ந்தாராமா?"

"வந்துட்டுப் போனதுல ரொம்ப மகிழ்ச்சி அவருக்கு.   "சண்முகம் எம் .பி.ஏ "
என்ற கட்டுரை குறித்து ரொம்பவே பேசினார். பத்தொன்பது கட்டுரைகளுமே
அருமையான பதிவுகள் என்று சொன்னார். ஒரே ஒரு வருத்தம்தான் அவருக்கு ...," என்று கொஞ்சம் தயங்கி நிறுத்தினார்.

" சும்மா சொல்லுங்க சரவணன். கவனித்துக் கொண்டதில் ஏதேனும்.." என்று
முடிக்கும் முன்னே என்னை இடை மறித்தார்.

"அசவுகரியங்களைப் பற்றியெல்லாம் அவர் எப்பவுமே பொருட்படுத்த
மாட்டாரேண்ணா. அதுமட்டும் இல்லாம அம்மணியின் உபசரிப்பிலும், அன்பிலும் அவர் ரொம்பவே நெகிழ்ந்து போயிருக்கார்."

"அப்புறம்?"

"இல்லண்ணே , ரெண்டு புத்தகங்களிலுமே "ஈழம்" பற்றி எதுவுமே இல்லாதது
அவரைக் கொஞ்சம் உறுத்தியிருக்கு. 'உசிரைப் பிசைகிற விஷயங்களை மட்டுமே எழுதுவேன் என்று எட்வின் சொல்றார். அப்படின்னா ஒரு லட்சம் தமிழர்கள் அழிக்கப் பட்ட கொடூரமான சோகம் நிச்சயம் அவரை உலுக்கி எடுத்திருக்குமே. அதை அவர் எழுதியிருக்க வேண்டாமா?. இதை  உரிமையோடு கேட்டதா எட்வின்ட்ட சொல்லுங்க' ன்னு சொன்னாருங்கண்ணே" என்று அவர் சொல்ல சொல்ல வெட்கத்தில் அப்படியே கூனிக் குறுகிப் போனேன்.       .

ஆமாம் நான் ஏன் எழுதவில்லை?

பாமரனோடோ, மற்றவர்களோடோ ஈழம் குறித்து ஏராளமான கருத்து முரண்பாடுகள் உண்டுதான்.ஆனாலும் எனது முரண்பாடுகள்கூட தேர்தலைப் புறக்கனித்ததன் மூலம் ராஜபக்சே அதிகாரத்திற்கு வர வாய்ப்பளித்தது, செல்லுபடியாகாத, இரண்டு பைசா நாணயத்தின் மதிப்புக்குக்கூட நம்பிக்கைக்குத் தகுதியில்லாத தமிழகத்து தலைவர்கள் சிலரை நம்பி அவர்களது ஆலோசனைகளை கேட்டது போன்ற அவர்களது அரசியல் நிலைபாடுகள் மீதுதானே தவிர அவர்களது தியாகத்தின் மீதோ, வீரத்தின் மீதோ அளப்பரிய மரியாதை எப்போதும் உண்டு.

இன்னும் சொல்லப் போனால் விமான நிலையத்தை வெற்றிகரமாக தாக்கி முடித்து, கொரில்லா போர்த் தொழில் நுட்பம் வானிலும் சாத்தியம் என புலிகள்
நிறுவியபோது இனிப்பு சாப்பிட்டுக்  கொண்டாடி இருக்கிறேன்.  'இதனை
ஜீரணிக்க இயலாத சக்திகள் எல்லாம் தானாகவே ஒன்று சேரும் . இதையும்
சேர்த்தே புலிகள் எதிர்கொள்ள வேண்டும். ஈழப் பிரிவினையை ஜீரணிக்க இயலாத அந்நிய சக்திகளுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அவர்களுக்கு ஒரு தெளிவும் உண்டு.

ஈழத்தின் உதயம் இலங்கையை கபளீகரம் செய்யும் அவர்களது வெறிகொண்ட பசியில் மண் அள்ளிப் போடும் என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தே இருந்தார்கள். ஈழம் உதயமானால் இலங்கையையும் அந்நிய சக்திகளிடமிருந்து அது காப்பாற்றும் . அது தங்களது இலங்கைக் கனவை தகர்த்துப் போடும் என்ற அவர்களது தெளிவுதான் ஈழத்திற்கு எதிராக அவர்களைத் தள்ளியது.  இந்த வகையில் ஒருக்கால் ஈழம் அமையாமல் போகுமானால் அது இலங்கையின் அழிவிற்கான தொடக்கப் படியாகத்தான் அமையும்' என்றெல்லாம் பின்னிரவு முழுக்க விஷ்ணுபுரம் சரவணனோடும் வெற்றியோடும் , சுகனோடும் மற்ற நண்பர்களோடும் அக்கறையோடு பேசிய நான் ஏன் அதைப் பற்றி எழுதவில்லை?.

வைகறை அய்யா ஏற்பாட்டில் ஓவியர்.வீர சந்தானம் , மூத்தத் தோழர். ஏ.எம்.
கோபு,  திராவிட எழுத்தாளர்களில் நான் பெரிதும் மதிக்கிற க.திருநாவுக்கரசு
அய்யா ஆகியோரோடு சேர்ந்து பேசுகிற ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது .

லண்டனில் உள்ள ஒரு பல்கலைக் கழகம் பேச அழைத்திருந்ததின் பேரில் லண்டன் சென்றிருந்த ராஜபக்க்ஷேவை ' நீங்கள் பேச வேண்டாம். இலங்கைக்கு உடனே திரும்புங்கள்.' என இங்கிலாந்து திருப்பி அனுப்பியிருந்த நேரம் அது.

மைனசுக்கும் வெகுக் கீழே இருந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது புலம்
பெயர்ந்த தமிழர்களின் வீரஞ்செறிந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக உயிர்
பிழைத்தால் போதும் என்று ராஜபக்சே இலங்கைக்குத் திரும்பியிருந்த நேரம்.

இந்த சம்பவத்தை என்றைக்கும்விட கொஞ்சம் தூக்கலான எள்ளலோடு ஒரு கால் மணி நேரம் என் பேச்சில் கொண்டாடியிருக்கிறேன்.  கூட்டம் முடிந்து மகிழுந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது வீரசந்தானம் அதுபற்றியே பேசிக் கொண்டு வந்தார்.

விடுதலைப் புலிகள் எந்தக் கட்டத்திலும் அப்பாவி சிங்கள மக்கள் மீது
ஆயுதங்களைத் திருப்பியதில்லை என்ற அவர்களது போர் அறத்தை , நேர்மையை அவர்களது கல்வி குறித்த பார்வையை சிலாகித்து பேசியிருக்கிறேன்.

இத்தனை ஆண்டுகள் போராடி நீங்கள் சாதித்ததில் எதை முதன்மையாய்க்
கருதுகிறீர்கள் என ஒருமுறை கேட்கப் பட்ட போது 'என் மக்களின் மனதிலிருந்து மரணம் குறித்த பயத்தை சுத்தமாய் அப்புறப் படுத்தி இருக்கிறேன்.' என்று  பிரபாகரன் சொல்லியிருந்ததாய் எங்கோ படித்திருக்கிறேன்.

மரணம் குறித்து மக்களது பயத்தை போக்குவதே ஆன்மீகத்தின் அதி முக்கிய
பணியாகும். பெரும்பான்மை ஆன்மீகவாதிகள் தோற்றுப்போன இந்த விசயத்தில் பிரபாகரன் எவ்வளவு லாவகமாக வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை மேடைகளில் நண்பர்களிடத்தில் மணிக் கணக்காய் பேசிக் கொண்டுதான் இருந்திருக்கிறேன்.

ஒரு வாரகால இடை வெளியில் ஒரு லட்சம் தமிழர்களுக்கும் அதிகமானவர்கள்  கொல்லப் பட்டபோது எல்லோரோடு நானும்தான் கொதித்தேன், அழுது தீர்த்தேன்.

சரி, இவ்வளவும் செய்த , பேசிய,  நான் அவற்றை எழுத்தில் ஏன் பதிவு
செய்யவில்லை?.  இதில் உள் நோக்கம் எதுவும் இல்லை, அப்படி இப்படி என
சொல்லி சமாளிக்க விருப்பம் இல்லை. அது நியாயமும் இல்லை.

"செயத் தக்க செய்யாமையானும் கெடும் " என்கிறானே . கட்டாயம் பதிந்திருக்க
வேண்டும். வெளியே சொல்லத் தயங்கியிருந்தாலும் இது குறித்த வருத்தம் கோவம் எல்லாம் என் நண்பர்களுக்கு இருந்திருக்கவே செய்யும். அது நியாயம் என்றும் படுகிறது.

இனி இது குறித்த எனது கருத்துகள்களை பேசுவதோடு நில்லாமல் எழுதவும் செய்வேன்.

செய்த பிழைக்காக வெட்கப் படுகிறேன். செய்த தவறுக்காக வெட்கப் படுவதில்
பெருமைப் படவும் செய்கிறேன், என்னை நேசிக்கிற நண்பர்களும் இதற்காகப்
பெருமைப் படலாம்.

சூரியன் செத்ததாய்


அன்பின் நண்பர்களே ,
வணக்கம்.

புத்தகங்களை அடுக்கும் போது சற்றும் எதிர் பாரா விதமாக தொன்னூறில் நான்
நடத்தி வந்த "தாகம்" இதழின் பிரதி ஒன்று கிடைத்தது இது வரை எங்கெங்கோ
தேடியும் கிடைக்காமல் , யாரிடம் கேட்டும் கிடைக்காமல் இருந்தது.

90 ஜனவரியில் அந்த இதழ் தயாரித்த நேரத்தில் பிரபாகரனை அவரது கூட்டாளி
மாத்தையாவே கொன்று போட்டு இயக்கத்தைக் கைப் பற்றிக் கொண்டதாய்
தமிழகத்து ஊடகங்கள் வாய் கிழிய கூப்பாடு போட்டுக்  கொண்டிருந்த நேரம்.
தினமலர் போன்ற இதழ்களில் நீண்ட வரிசையில் மாலைகளோடு பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் காத்திருப்பதாக படத்துடன் செய்திகள் வெளியிட்டு தமிழ் விரோதிகள் தங்கள் முதுகுகளைத் தாங்களே தட்டிக் கொடுத்து கூத்தாடிய நேரம்.
வரதராஜப் பெருமாள் எல்லொரும் கேட்டுக் கொண்டால் அரசு மரியாதையோடு  பிரபாகரனை அடக்கம் செய்யத் தயாராய் இருப்பதாய் கோமாளித்னத்தின் உச்சிக்கே போய் கொக்கரித்த நேரம்.

அப்போது ( ஜனவரி 90 ) நான் எழுதிய கவிதை இது. ஏன் என்றெல்லாம்
தெரியவில்லை, போடவேண்டும் என்று தோன்றியது .  போட்டிருக்கிறேன்.


எங்கள்
சூரியன் செத்ததாய்
சில சிகரெட்டு நெருப்புகள்
அஞ்சலி செலுத்தின .

மாமன்னன்  ஒருவனுக்கு
வேண்டுமானால்
அரசு மரியாதைகளோடு
கல்லறை சமைப்பதாய்
மனமிரங்கினார்
ஒரு மேடை ராஜா

கல்லறைக்கு
தாங்கள்
மண்தள்ளி வந்ததாய் சொன்னார்கள்
தங்கள் கைமண்ணை தட்டியவாறே

விடிந்து எழுந்தால்
சுவர்கள் எல்லாம்
அவன் முகங்களாய்
பூத்தன.

திரும்பிய இடமெல்லாம்
சிங்கத்தை
அதன் கூட்டாளியே
கொன்று போட்டதாய்...

கரைந்து ஒழுகின
கண்ணீரில்
அவர்களது அரிதாரம்

பத்திரிக்கைகள் எல்லாம்
பக்கம் பக்கமாய்
அவன் வரலாறு எழுதின

வாசித்து முடித்ததும்
எங்கள் தலைவன் சொன்னான்

"வாங்க தோழா
ஒரு எட்டு போய்
பார்த்துவிட்டு வரலாம்"

"தண்டவாளத்தில் கிடக்கிறதாம்
என் உடல்"

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...