Sunday, March 27, 2011

எது செய்யக் கல்வி?



"பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் தேர்ச்சி
பெற்றவன் இனிப்பு வாங்கவும் தேர்ச்சி பெறாதவன் விஷம் வாங்கவும்
ஓடுகிறானே. குறைந்த பட்சம், இது சரிதானா என்கிற பரிசீலனையையேனும்
தொடங்குவதற்கு நமக்கு இன்னும் எத்தனை யுகங்கள் ஆகும்?" என்கிற மாதிரி,
போகிற போக்கில் சின்னதாய் கொஞ்சம் கொளுத்திப் போட்டுவிட்டுப் போனார் ஆசிரியர் சங்கம் ஒன்றின் மண்டல மாநாட்டினைத் துவக்கி வைத்துப் பேசிய பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் திரு.கார்மேகம் அவர்கள். எந்தப் பக்கம் தலை வைத்துப் படுத்தாலும் தூங்க விடாமல் ஒரு வாரத்திற்கு என்னைக் குடைந்துகொண்டே இருந்தது அவரது ஒற்றைவரிச் சின்னக் கேள்வி.

ஒன்றிரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற இயலாத ஒரு குழந்தையைத் தற்கொலைக்குத் தள்ளுமானால் அந்தக் கல்வித் திட்டத்தை அல்லது தேர்வுமுறையை நாம் பரிசீலிக்க வேண்டாமா?

தேர்ச்சி பெறுவதும் நல்ல மதிப் பெண்கள் பெறுவதும்தான் கல்வியின் நோக்கம்என்றாகிப் போனால் மனனம் செய்யும் எந்திரங்களாக மாறிப் போகமாட்டார்களா மாணவர்கள்?. எந்தச் சமாளிப்புமின்றி உண்மையை உள்ளது மாதிரி அப்படியே ஒத்துக் கொள்வதெனில் ஏற்கனவே பெரும்பகுதி மாணவர்கள் அப்படித்தானே மாறிப் போயிருக்கிறார்கள். மனனம் செய்வதுதான் மாணவனின் கற்றலுக்கான உழைப்பு என்பதாக ஏறத்தாழ நடைமுறையில் கொள்ளப்பட்டுவிட்டது. அதிக நேரம் மனனம் செய்பவன் அதிகம் உழைக்கிறான் என்றாகிறது.

தவறுதான் என்றாலும் ஒரு வாதத்திற்காக மனனம் செய்வதை உழைப்பு என்றே வைத்துக் கொள்வோம். அதிகம் உழைப்பவனுக்கு அதிக ஊதியம் என்கிற நியதியில் அதிகம் மனனம் செய்பவன் அதிக மதிப்பெண் பெறுகிறானா? என்றால் அதுவும் இல்லை. மொத்தம் எழுநூறு பக்கங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ரவி என்றொரு மாணவன் முன்னூறு பக்கங்களும் கோபு என்பவன் நூறு பக்கங்களும் மட்டுமே படித்திருப்பதாகக் கொள்வோம். தேர்வு வருகிறது . நூறு மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டுமெனில் வினாத்தாளில் நூற்றி முப்பதிலிருந்து நூற்றி நாற்பது மதிப்பெண்களுக்கான கேள்விகள் இருக்கும். இப்போது வினாத் தாளில் ரவி படித்திருந்த முன்னூறு பக்கங்களிலிருந்து முப்பது மதிப்பெண்களுக்கும் மீதமுள்ள நானூறு பக்கங்களிலிருந்து நூறு மதிப்பெண்களுக்கும் வினாக்கள் கேட்கப் பட்டிருந்ததாக வைத்துக் கொள்வோம். அதில் கோபு படித்திருந்த நூறு பக்கங்களிலிருந்து மட்டும் நாற்பத்தி ஐந்து மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப் பட்டிருந்தாகவும் வைத்துக் கொள்வோம்.

தான் படித்திருந்த முன்னூறு பக்கங்களையும் வரிக்கு வரி உருப் போட்டு, ஒரு நானூறு ஐநூறு முறை எழுதிப் பார்த்து மிகுகுந்த தாயாரிப்போடு இருந்தாலும்  ரவியால் அந்தத் தேர்வில் முப்பது மதிப்பெண்களுக்கும் மேல் எடுக்க இயலாது. இதுவும் அவன் எழுதிய கேள்விகள் அனைத்திற்கும் முழு மதிப்பெண்களும் கிடைத்தால்தான். அப்படி இல்லையெனில் முப்பதுக்கும் குறைவான மதிப்பெண்களே அவனால் பெற முடியும். எப்படிப் பார்த்தாலும் முன்னூறு பக்கங்களைப் முழுமையாய் படித்துள்ள ரவி அந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சுத்தமாய் இல்லை.     

மாறாக வெறும் நூறு பக்கங்களை மட்டுமே படித்திருந்த கோபு, தான் படித்திருந்த பக்கங்களிலிருந்து கேட்டிருந்த கேள்விகளுக்கு சரியான விடைகளை எழுதினால் நாற்பதிலிருந்து நாற்பத்தி ஐந்து மதிப் பெண்களைப்பெற்றுத் தேர்சி பெற்றுவிட முடியும்.    

எனில் ஒரு பங்கு உழைப்பை மட்டுமே வெளிப் படுத்திய கோபு தேர்ச்சி பெறுகிறான். அவனைப் போல் மூன்று பங்கு உழைப்பை வெளிப் படுத்திய ரவி தேர்ச்சிப் பெறத் தவறுகிறான். எனில் இந்தத் தேர்வு முறை குறித்தும் , கல்வித் திட்டம் குறித்தும் நாம் கவலையோடு பரிசீலிக்க வேண்டுமா இல்லையா?  

இதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்பது இன்னும் அதிகமான பயனைத் தரும் என்று படுகிறது. அந்த வினாத்தாளில் ரவி படித்திருந்த முன்னூறு பக்கங்களிலிருந்து முப்பது மதிப்பெண்களுக்கும், கோபு படித்திருந்த நூறு பக்கங்களிலிருந்து நாற்பத்தி ஐந்து மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே கொண்டோம். ஆக நூற்றி நாற்பது மதிபெண்களுக்கு வினாக்கள் கேட்கப் பட்டிருந்த அந்த வினாத்தாளில் ரவியும் கோபுவும் படித்திருந்த நானூறு பக்கங்களிலிருந்து எழுபத்தி ஐந்து மதிப்பெங்களுக்கான வந்துள்ளதாகக் கொண்டால் மிச்சம் அறுபத்தியிந்து மதிப் பெண்கள் உள்ளன. அவர்கள் இருவரும் படித்தது போக மீதமுள்ள முன்னூறு பக்கங்களில் ஒரு நூற்றி ஐம்பது பக்கங்களிலிருந்து எந்த வினாவும் கேட்கப் படவில்லை என்று வைத்துக் கொள்வோம். எனில் மீதமுள்ள அறுபத்தி ஐந்து மதிப் பெண்களும் எஞ்சிய அந்த நூற்றி ஐம்பது பக்கங்களிளிருந்துதானே கேட்கப் பட்டிருக்க வேண்டும். இப்போது செந்தில் என்றொரு மாணவன் அந்த நூற்றி ஐம்பது பக்கங்களை மட்டும் மிகத் தரவாக உருப்போட்டு வைத்திருப்பதாகக் கொள்வோம். இப்போது இவன் அறுபதிலிருந்து அறுபத்தி ஐந்து மதிப் பெண்கள் வரை வாங்கிவிட வாய்ப்புண்டுதானே? அறுபத்தி ஐந்து மதிப்பெண்களுக்கும் வினாக்கள் கேட்கப் பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். 

இன்னும் கொஞ்சம் உள்ளே போவோம். ரவியும் கோபியும் வாசிக்காமல் விட்ட மிச்சமுள்ள முன்னூறு பக்கங்களை மட்டும் செந்தில் படித்திருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது முன்னூறு பக்கங்களை படித்திருக்கக் கூடிய ரவி தேர்ச்சி பெறாமலும், அதில் பாதி அளவு மட்டுமே படித்திருந்த செந்தில் அறுபது முதல்  அறுபத்தி ஐந்து மதிப்பெண்களோடும் நூறு பக்கங்கள் மட்டுமே படித்திருந்த
கோபு நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து மதிப்பெண்களோடும் தேர்ச்சி பெறுவதற்கும் வாய்ப்பிருக்கிறதே. இது சரிதானா? சரிதான் என்பவர்களை நிராயுதபாணிகளாக கடாபி படைகளுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் தள்ளி விடலாம். பாவம் புண்ணியம் என உண்மையிலே எவையேனும் இருக்குமென்றால் இதை செய்வதற்காக பத்துப் பேரின் புண்ணியம் நம் கணக்கில் சேர்ந்துவிடும். இது கண்டு நெஞ்சு கொதிப்பவர்களோடு மட்டுமே நான் கொஞ்சம் பேச ஆசைப் படுகிறேன்.

முதலில் கல்வியின் நோக்கம் என்ன?. இதையே இன்னும் கொஞ்சம் புரிகிற மாதிரி " ஒரு மாணவனுக்கு ஏன் கல்வியை கற்றுத் தருகிறோம்?, அல்லது ஒரு மாணவன் ஏன்கல்வி கற்கிறான்? " என்றும் கேட்கலாம்.

மாணவனை சிந்திக்க வைப்பதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று ஐன்ஸ்டின் கூறியதாகப் படித்திருக்கிறேன். சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரது கருத்தாகவும் அதனைக் கொள்ளலாம்.

இன்றையக் கல்வி மாணவனை சிந்திக்கத் தூண்டுகிறதா?. இல்லவே இல்லை என்று நம் உசிரைவிடவும் பெரிதாக நேசிப்பவர்கள் தலை மீதே கை வைத்து சத்தியம் செய்யலாம்.

இப்போது இன்னொரு கேள்வி இயல்பாகவே வருகிறது."சிந்திக்க வைப்பது" என்றால் எந்தத் தளத்தில் அவனை சிந்திக்க வைப்பது? "நன்கு படி, நிறைய
மதிப்பெண்கள் வாங்கு , நல்ல வேலைக்குப் போ, இயலுமெனில் வெளிநாடுகளுக்குப் போ, நிறைய சம்பாரி, வளமையோடும் ,மகிழ்ச்சியோடும், நிம்மதியோடும் உன் குடும்பத்தோடு பொழுது கழி. வேறு எது குறித்தும் கவலை கொள்ளாதே. பக்கத்து வீட்டில் கொலை விழுந்தாலும் , பக்கத்து நாட்டில் குவியல் குவியலாய் பிணம் விழுந்தாலும் இதில் எதன் மீதும் கவனம் சிதறி விடாமல், உனது வேலை சம்பாரிப்பது , குடும்பத்துக்காக வாழ்வது என்கிற அளவில் நிறுத்து இது போக நேரம் இருக்குமெனில் பணக்காரர்களுக்கென்றே சில க்ளப்புகள் இருக்கின்றன, சேர்ந்து பொழுது கழி ," என்று 'தன் வீடு, தன் பெண்டு சோறு வீடு' என்கிற அளவில் அவனது சிந்தனையையும் ஆளுமையையும் சுருங்கவைப்பதா?

இப்படியாக இருப்பதால்தான் மாணவன் சுயம் சார்ந்த கனவுகளோடு வளர்கிறான். அந்தக் கனவு உடைகிற பொழுது அந்தச் சின்ன தோல்வியிலிருந்து மீண்டெழ முயலாமல் தற்கொலை செய்து கொள்கிறான். தான் தன் குடும்பம் என்று கடுகை விடச் சின்னதாய் சுருங்கிப் போகச் செய்யும் இந்தக் கல்வி முறை மீது நமக்கு போதுமான அளவுக்கு எப்போது கோபம் பிறக்கும்?.

அறிவை விரிவு செய்து , அகண்டமாக்கி, இந்தப் பரந்த மானுடப் பரப்பை அவனைப் பார்க்க சொல்லிக் கொடுத்து, இந்த மானுடத் திரள்முழுக்க அவனது சொந்தம் என்றும் கொஞ்சம் விசாலமாய் அவனைக் கல்வி வளர்த்தெடுத்திருந்தால் தேர்வு முடிவுகள் வெளி வரும் நாளில் இத்தனை குழந்தைகள் தற்கொலை செய்துகொள்வார்களா?

கல்வித் திட்டம் குறித்து கூட இன்னொரு கட்டுரையில் விரிவாக பேசலாம். இப்போது வருடா வருடம் இத்தனைப் பிள்ளைகளை காவு வாங்கும் இந்தக் கொலைகார தேர்வு முறையை என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

இதில் கவனிக்க இன்னொன்றும் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் தேர்ச்சி பெறாத பத்தாம் வகுப்பு மற்றும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவு வந்த அன்று தற்கொலை செய்து கொள்வதை செய்தித் தாள்களில் பார்க்கிறோம். ஆனால் , கல்லூரி மாணவர்களோ, மருத்துவக் கல்லூரி மாணவர்களோ, அல்லது பொறியியல் கல்லூரி மாணவர்களோ  தேர்ச்சி பெறாமைக்காக இப்படித் தற்கொலை செய்து கொள்வதில்லை.  எனில் பத்தாம் வகுப்பை விட இவை எல்லாம் முக்கியமில்லாதவையா? அல்லது இவை எல்லாவற்றையும் விட பத்தாம் வகுப்பு இவ்வளவு முக்கியமானதா?

இதற்கான காரணம் பரிசீலனைக்கு உரியது. கல்லூரி மாணவனோ, பொறியியல் கல்லூரி மாணவனோ , அல்லது மருத்துவக் கல்லூரி மாணவனோ அவனது தேர்வில் தேர்ச்சி பெறுகிறானா இல்லையா என்பது அவனது பக்கத்து வீட்டுக் காரனுக்குக் கூடத் தெரியாது. பல நேரங்களில் அவனது பெற்றோருக்கே தெரியாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: நாட்டுக்கேத் தெரியும். இதைச் சற்று மாற்றினால்கூட தற்கொலைகளில் பெரும்பகுதியைக்  குறைத்துவிட முடியும்.

எப்படி?

1 ) பத்தாம் வகுப்பு வரை பொதுத் தேர்வுகளே வேண்டாம். 
2 ) பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் இப்போது உள்ள முறையை மாற்றி "செமஸ்டர் முறை" யை அறிமுகப் படுத்தலாம்.

எங்கே , ஆரோக்கியமான விவாதத்தைத் தொடங்கலாமா?
  

27 comments:

  1. கனன்று எரிக்கிறது தங்கள் வினாக்கள். இறுதிப் பத்தியின் சிந்தனை சிந்திக்க வேண்டிய ஒன்று. பலரறிய தோற்பதன் வலி மிகுதியே. கல்லூரிப் பருவத்தின் வயது முதிர்வு அவனைப் பக்குவப் படுத்தி விடுவதால் தற்கொலை அபத்தத்தில் சிக்குவதில்லையோ... மேலும் ஒரு பட்டப் படிப்பிற்கான கால அவகாசம் சில வருடங்கள் எனும் போது அடுத்தடுத்த செமஸ்டரில் மறுபடியும் முயன்று, படிப்பு முடியும் தருவாயில் எல்லாவற்றையும் சரி செய்து கொள்ள முடிவதும் ஒரு காரணமாயிருக்கலாம்.

    ReplyDelete
  2. அன்புள்ள...

    வணக்கம். எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. நிலாமகள் வலைப்பூ வழியாக இன்றுதர்ன் உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன். இதுவரை வாசிக்காமல் தாமதம் ஆகிப்போனதற்கு வருத்தமாக உள்ளது. எளிமையான அதேசமயம் நேர்த்தியான வடிவமைப்பு.உடன் ஏதாவது எழுதவேண்டும் என்பதற்குதான் இது. பணி இறுக்கத்தில் உள்ளேன். மீண்டு வந்து எழுதுகிறேன்.

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி நிலா. கல்லூரி மாணவனுக்கு கொஞ்சம் பக்குவம் அதிகம் என்பதோடு அவனுக்கு இருக்கும் செமஸ்டர் முறை என்பது வெற்றி தோல்வி பற்றிய விவரத்தினை தேவை இல்லாமல் வெளிச்சம் போட்டு காட்டாது. இதுவும் ஒரு காரணம். ஆகவேதான் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் செமஸ்டர் முறையினை கேட்கிறோம். இதில் இன்னொரு லாபமும் உண்டு. பதினொன்றாம் வகுப்பிலிருந்தே தேர்வுகள் தொடங்கினால் பதினோராம் வகுப்பு பாடங்களை மாணவர்கள் கண்டிப்பாக வாசித்தே ஆக வேண்டும். இது கல்வியை மிகக் கேவலமாக சந்தைப் படுத்தும் சில தனியார் சுய நிதிப் பள்ளிகளின் அயோக்கியத் தனத்தை கட்டுப் படுத்தும்.

    ReplyDelete
  4. எனக்கும் நிலாவின் வலைப் பூவில் தான் ஹரணி கிடைத்தார். இதை இன்னும் கொஞ்சம் நீளப் பண்ண வேண்டும் ஹரணி.பதினோராம் வகுப்பு பாடங்களையே படிக்காமல் கடந்து போகும் இன்றைய பெரும் பகுதி நடை முறையின் ஆபத்து கருதி பேராசிரியர் கல்யாணி ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில் தேம்பித் தேம்பி அழுதார் ஹரணி. அவரது வலியை,கண்ணீரை இந்தக் கட்டுரையில் நான் நினைத்த அளவு கொண்டு வர முடியவில்லை தோழர். மீண்டும் செதுக்க வேண்டும்

    ReplyDelete
  5. என்ன கல்வி முறை இது! மெக்கலேயின் கல்வி முறை, இரக்கமற்ற க்ளார்க்குகளைத் தான் உருவாக்கும்!
    நமக்கு இப்போது உடனடித் தேவை நமது கல்வி முறை பற்றீய OVERHAULING!
    நன்றி.. நிலாவின் வலைப்பூ வழியாகத்தான் எட்வின் எனும் சமூகப் பொறுப்புள்ள மனிதரை கண்டு கொண்டேன்!
    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  6. மிக்க நன்றி தோழர்.
    மெக்காலே குறித்துக் கூட தேவையான அளவு ஒரு அபிப்பிராயம் இருப்பதாய் படவில்லை.
    கல்விப் பரப்பின் எல்லா தளங்களிலும் வெற்றியும் தேர்ச்சியுமே இலக்குகளாகப் போய்விட்டதால் மாணவனை மனிதப் படுத்துதல் என்பது இல்லாமல் போய் விட்டது. தொடர்ந்து பேசவும் இது குறித்து விவாதிக்கவும் ஆசை உண்டு தோழா.

    ReplyDelete
  7. LPG என்றழைக்கப்படக்கூடிய தாராளமயம், தனியார்மயம், உலகமயத்தின் விளைவுகளும் ஏறக்குறைய ஏகாதிபத்தியத்தின் வெற்றி தான் இன்றைய கல்விமுறை என்றே கூறலாம். அரசின் கையில் கல்வித்துறை இருக்கும் வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் தனியார் கையில் போன பின்பு அறிவுக்கான கல்வி என்பது மாறி வேலைக்கான கல்வி என்றாகிப் போனது. இன்றைய மாணவர்கள் மனதில் போட்டி நிறைந்த உலகத்தைப் பற்றிய சிந்தனையே திணிக்கப்படுகிறது. மனனம் செய்து வாந்தியெடுக்கக்கூடிய முறைகளில் தான் இன்றைய தேர்வு முறைகள் திகழ்கின்றன. சொல்லப்போனால் பொதுத் தேர்வுகளே தேவையில்லை தான். வாந்தியெடுப்பதற்கு எதற்கு பொதுத் தேர்வுகள்? திருச்சூரில் நடந்த கருத்தரங்கில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் "கல்வி முழுவதும் கடைச்சரக்காகி விட்டது. ஏறக்குறைய ஒரு காய்கறிக்கடை வைத்திருப்பவன் எப்படி கூவிக்கூவி வியாபாரம் செய்வானோ. அதைப் போன்றே இன்றைய தனியார் கல்வி விற்பனையாளர்கள் கல்வியை விற்கிற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்" என்றார். இன்று நாட்டில் நடக்கின்ற வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் பெருகுவதற்கு இதுவும் ஒரு அடிப்படைக் காரணம். பணத்தின் மீதான மோகம் அதிகரிக்க அதிகரிக்க மற்றவைகளின் தரமும் சேவையும் குறைந்து விட்டது. இதில் கல்விக்கு தான் முதலிடம். கல்வி முழுவதுமாக மீண்டும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வருவதைத்தவிர வேற ஒரு விமோசனம் இதற்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தேர்வுமுறைகள் வெறும் எழுதுவதன் அடிப்படையில் இல்லாமல் அவனது சொந்த சிந்தனைகளுக்கு இடம் கொடுப்பதாக இருந்தால் இன்னும் நல்லது.

    ReplyDelete
  8. எட்கர் சாலமோன்August 23, 2011 at 12:41 AM

    அருமையான பதிவு தோழர். இந்த தேர்வு ஒழிப்பில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு. இருப்பினும் இந்த கல்விமுறையில் நிச்சயம் மாற்றம் தேவை. ஏன் இன்னும் இந்த மெக்காலெக்கு நாம் மாற்று கண்டுபிடிக்கவில்லை? செமஸ்டர் முறை நல்ல தீர்வு. அதிலும் மனனம் செய்து எழுதுவது பயனற்றது. ஆக செயல்முறை பாடதிட்டங்கள் அமைப்பது அவசியம்.எடுத்துகாட்டாக எனக்கு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுது கூட வங்கியில் சென்று பாரம் பூர்த்தி செய்து பணம் எடுக்க தெரியாது. இத்தனைக்கும் வணிகவியல் பாடம் தான் முதன்மையானது. இன்றும் இந்த நிலை நிறைய மாணவர்களுக்கு உள்ளது. முதலாவதாக தேறும் மாணவன் கூட வெளி உலகிற்க்கு வரும் பொழுது நிறையவே காயப்படுகிறான். இந்த நிலை மாற வேண்டும்.

    ReplyDelete
  9. வணக்கம் அய்யா
    மிக நீண்ட அகண்ட ஆழமான கருத்து நீங்கள் கூறியிருப்பது, கல்வி கற்ற அனைவரின் சிந்தனையும் இதுவாகவே இருக்கும் என நம்புகிறேன்.
    நிச்சயம் மாற்றம் தேவை என்பதுவரை எனக்கு புலப்படுகிறது ஆனால் அது எவ்வகை மாற்றம் என்பதில் எனக்கு தெளிவு ஏற்படவில்லை, ஏனெனில் ஒரு ஆசிரியனுக்கே அது ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
    நினைவுகொள்கிறேன்...
    எனது தமிழாசிரியர்தான் எனக்கு உலகம் என்ன என்பதை காட்டினார், அவர் பாடம் மட்டும் நடத்திவிட்டு செல்லவில்லை ஒரு ஆறாம் வகுப்பு மாணவனுக்கு அப்போதைய தேவையான வாழ்க்கை ஒழுக்கம் எல்லாம் நடத்தினார், நிறைய பேசுவார் எங்களிடம், அவர் வகுப்பு முடிந்து போனபின்பும் எங்கள் வகுப்பு முழுவதும் நிரம்பி இருக்கும் அவரின் அதிர்வுகள்.
    தற்பொழுது நிலை வேறாக உள்ளதே. கல்வி வியாபாரம் கலை கட்டி நடக்கிறது, ஆசிரியப் பணி என்பது வேலை என்றாகிவிட்டது. பொருளுக்கு பின்னால் ஓடும் ஒருவரிடம் பொருள் விளக்கம் கேட்டால் பாவம் என்ன கூறுவார் அவர். அவரை குறை கூற முடியாது.
    இது ஒரு தளத்தில் மட்டும் ஏற்பட வேண்டிய மாற்றம் அல்ல, இருபுறமும் ஏற்படவேண்டும். ஆசிரியர் மட்டுமா தவறு செய்கிறார். படி ஒப்புவி என்று பாடாய் படுத்தும் பெற்றோரும் தவறே செய்கிறார்கள்.
    என்ன வேலைக்கு படிகிறீர்கள் என்று ஒருவர் என்னிடம் கேட்டார்.
    யாம் கற்ற கல்வி அதை எனக்கு போதிக்கவில்லை என்றேன். என்னை பார்த்து சிரித்துவிட்டு நகர்ந்தார் அவர். வேலை பார்கத்தான் கல்வியா?
    எம்மை பொறுத்தவரை புரிதல் நடந்த மனிதனே ஆசிரியனாக முடியும் அவனே சிறந்த மாணவனை மனிதனை உருவாக்க முடியும். நாளைய ஆசிரியர்களை உருவாகும் பணி இன்றைய ஆசிரியரிடமே உள்ளது.
    அப்படி நிகழாத வரை மதிப்பெண்ணுக்காக பயிலும் மாணவனும் அதற்காகவே அவனை ஏவும் பெற்றோரும் ஆசிரியரும் கண் முன்னே தற்கொலை செய்து கொள்ளும் குழந்தையை பார்த்து கண்ணீர் விடவேண்டிய நிலை நீடிக்கும்.

    ReplyDelete
  10. நல்ல கட்டுரை, கல்வியில் மிகப்பெரிய ,மாற்றம் தேவை. அதற்கு அறுவைச்சிகிச்சை தேவைப்படுகிறது.ொரு சிறிய கூட்டம் கல்வியை ஹைஜாக் செய்துள்ளது, அவர்களிடமிருந்து மீட்கும் வரை முன்னேற்றம் சாத்தியமில்லை.

    ReplyDelete
  11. கல்வி என்பது பதில்களைச் சொல்ல வைப்பதல்ல, கேள்விகளைக் கேட்க வைப்பதே. நமது கல்விமுறை அப்படி இல்லை என்பது நாட்டின் பெரும் சோகம்.

    தீர்வுக்கான வழியாக 10ம் வகுப்பு வரை தேர்வுகளே வேண்டாம் என்பது இன்றைய நம் சமூக நிலையில் பொருத்தமாக இராது எனக் கருதுகிறேன். அது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களிலிருந்து வரும் குழந்தைகளின் முனைப்பைக் கெடுத்துவிடும். இறுதியில், தங்களை முன்னால் வைத்துக்கொண்ட குழந்தைகளுடன் போட்டி போட இயலாதவர்களாக அறவே பின்னுக்குத் தள்ளிவிடும்,

    ஆகவே தேர்வுகள் வேண்டும், ஆனால் அதிலேயும் குழந்தையின் குடும்பச் சூழலையும் சமூகச் சூழலையும் பொருளாதாரச் சூழலையும் கருத்தில் கொண்ட, மாறுபட்ட மதிப்பெண் தரங்களை நிர்ணயிக்கலாம். முன்னால் நின்றுகொண்ட சமூகங்களின் குழந்தைகளுக்கு 40 என்பது குறைந்த மதிப்பெண் என்றால், மற்ற குழந்தைகளுக்கு 30 அல்லது 20 என குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் முடிவு செய்யலாம்.

    ReplyDelete
  12. திரு.எட்வின் அவர்களே,
    முதலில் நல்ல ஆய்வுக்கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி. அருமையான விவாத்திரி இது., கண்டிப்பாகத் கல்வி முறையில் மாற்றம் வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் அனுகுமுறையும் முற்றிலும் மாற வேண்டும். இன்று என் மாணவி ஒருத்தி அழைத்து தான் தேர்ச்சி அடைந்ததைக் கூறினாள். மதிப்பெண்ணைக் கூறும்போது முந்நூற்று என்பதுதான் என்று வருந்திக்கூறினாள். பரவாயில்லை.இது நல்ல மதிப்பெண் தானே. இதில் என்ன குறை என்று கூறிவிட்டு முதல்வரைச் சந்தித்தாயா, என்ன கூறினார் என்று கேட்டேன். அவர் என்னைச் சந்திக்கவே இல்லை என்றால்.
    பனிரெண்டு ஆண்டுகள் கட்டணம் கட்டி படித்தது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு ஆண்டுகளும் அங்கேயே படிக்க இருக்கிற அந்த மாணவியைச் சந்தித்து ஒரு இரண்டு நிமிடம் பேசி வாழ்த்தி அனுப்புவது ஒரு முதல்வரின் கடமை அல்லவா. இல்லாவிட்டாலும் அந்த மாணவியின் மனம் புண்படக்கூடாது என்றாவது நினைக்கும் மனிதாபிமானம் வேண்டாமா

    இதை ஏன் கூறுகிறேன் என்றால் பத்தாம் வகுப்பு மாணவி என்பது வெறும் 14 வயது குழந்தைதான். முதலில் பள்ளி நிர்வாகத்தின் இப்போக்கு மாற வேண்டும். இரண்டாவது பெற்றோர்களின் பேராசையும் போட்டி பொறாமையும் மறைய வேண்டு.
    ஆனால் தேர்வு என்னும் ஒன்று இல்லாவிட்டால் இந்த போட்டிகள் சற்று குறையும். மாணவர்களுக்கும் எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் வயது வந்த காலத்தில் தேர்வு முறை வருவது நல்லது. இதில் பள்ளி நிர்வாகம், பெற்றோர், கல்வித்துறை ஆகிய முத்தரப்பிலும் மாற்றம் வரவேண்டும் என்பேன்.

    ReplyDelete
  13. பத்தாம் வகுப்பு வரை பொதுத் தேர்வுகளே வேண்டாம்- i agree.

    c.b.s.e- we have grading system n 10th class board exam is optional....
    Edwin sir: i have ur number.i will call u later n we shall discuss...

    ReplyDelete
  14. இந்த விவகாரம் ஒரு பலமுனை சந்திப்பாக நான் கருதுகிறேன்.
    ௧. செமெஸ்டர் முறையை கொண்டு வருவதாகவே வைத்துக் கொண்டாலும், பிரச்சனையை தீருமா என்பதில் சந்தேகம் தான். காரணம், 10தாம் வகுப்புத் தேர்வும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வும் மாணவர்கள் மீது இத்தனை அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கு காரணம், அடுத்து வர இருக்கும் PROFESSIONAL COURSE, IIT,NIT,AIEEE மற்றும் தொழில் பயிற்சி நுழைவுத் தேர்வு தான். நீங்கள் சொல்கிறபடி செமெஸ்டர் முறை கொண்டு வரப் பட்டாலும், கடைசி செமஸ்டரில் இதே தொல்லையை பிள்ளைகள் அனுபவிக்க வேண்டியதாய் இருக்கும். எனக்குத் தெரிந்த வரை இந்த விவகாரத்திற்குத் தீர்வு பள்ளித் தேர்வுகளில் மாற்றம் கொண்டு வருவதில் இல்லை. பள்ளியிலிருந்து வெளியே செல்லும் போது ஒரு மாணவனோ/மாணவியோ, "நான் விவசாயம் செய்யப் போகிறேன்" என்றும் "ஒரு வியாபாரி ஆகப் போகிறேன்" என்றும் சொல்லும் போது அதற்கு போதிய வாய்ப்புகளும், மாற்று வழிகளும் கிடைக்கும் போது தான் இது தீரும். பெற்றோரையும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரையும் திட்டிக் கொண்டிருப்பது முறையானதல்ல. ஏனெனில், இன்று பெற்றோர்கள் அனைவரும் "எம்புள்ள BE படிக்கணும்" என்று சொல்வதற்குக் காரணமே, "அங்கு தான் நிறைவ வாய்ப்பிருக்கிறது" என்ற எண்ணம் அவர்கள் மூளைக்குள் திணிக்கப் பட்டிருப்பதால் தான்.
    ௨. பணம் பணம் என்று அலையாமல் இருங்கள் என்றும் பெற்றோரை மட்டும் விமர்சித்துக் கொண்டிருப்பது தவறு என்று நான் கருதுகிறேன். காரணம், ஏழைச் சமூகம் பணக்காரர்கள் லிஸ்டில் சேர விழைவதற்கு முக்கிய காரணம் "பணக்காரர்களுக்கு மட்டும் தான் சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கிறது" என்ற எண்ணம் அவர்களிடம் இருப்பது தான். இதை மாற்ற, சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையும் முன்பு, ஒரு விவசாயி உணவைத் தயாரிக்காவிட்டால் நமக்கு ஏது சோறு என்ற எண்ணம் பணக்காரர்கள் மனதில் விதைக்கப் படவேண்டும். இதையும் ஆரம்பம் முதலே பள்ளிகளில் கற்பிக்காவிட்டால் மாற்றத்தை பற்றி யோசிக்க இயலாது.
    ௩. அப்படிப் பட்ட எண்ணங்களை பிள்ளைகள் மத்தியில் விதைக்க ஆசிரியர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இதை சரி செய்ய,VALUE EDUCATION என்ற ஒரு வகுப்பு ஏற்கனவே இருக்கிறது பாருங்கள்; அதை உண்மையிலேயே போதனையை அளிப்பதற்காக பயன்படுத்தினால் சிறந்தது.
    ௪. பல பெற்றோர்களுக்கும், மாணவ மாணவியர்களுக்கும் உண்மை நிலவர்கங்கள் பற்றிய போதிய புரிதல் இருப்பதில்லை. இதை சரி செய்ய, நேர்மையான, உண்மையான முன்னேற்றத்தை விரும்பும் மக்களைக் கொண்ட அமைப்புகள் உருவாகி, மாவட்டம் வாரியாக கல்வியின் உண்மையான நோக்கத்தை அவர்களுக்கு விளக்க வேண்டும். இப்போதுள்ள இந்தியா ஏன் பல காலமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது என்பதை புரியவைத்து, அவர்களது பொதுவான எண்ணத்தை மாற்றியமைக்க குற்ற உணர்வை விதைப்பது தேவையான ஒரு பனி என்று நினைக்கிறேன்.
    ௬. உத்தியோகம் புருஷ லட்சணம் என்ற பழமொழியை புறந்தள்ள வேண்டும். நேர்மையும், அகக் கண் திறக்கும் கல்வியும் தான் புருஷ/பெண்டாட்டி லட்சணம் என்று மாற்றியமைக்க வேண்டும்.

    சிந்தனையை தூண்டும் பதிவு. என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. ஒரு நல்ல விவாதத்தின் ஆரம்பம். அனால் தற்கொலைக்கு காரணம் சொல்லிய மாதிரி அதற்கு விடை சரியான முன்மொழிவாக தெரியவில்லை தோழர். அளவு கோல் வைத்ததின் நோக்கத்தில் உள்ள மர்மத்தை உடைத்தால் தெரியும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  16. மிக அருமையான கேள்விதான் ... இதற்க்கு உடனே பதில் எழுத முடியலை
    யோசித்து நாளை என் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் எட்வின் ....

    ReplyDelete
  17. /// arun bharathi said...
    LPG என்றழைக்கப்படக்கூடிய தாராளமயம், தனியார்மயம், உலகமயத்தின் விளைவுகளும் ஏறக்குறைய ஏகாதிபத்தியத்தின் வெற்றி தான் இன்றைய கல்விமுறை என்றே கூறலாம். அரசின் கையில் கல்வித்துறை இருக்கும் வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் தனியார் கையில் போன பின்பு அறிவுக்கான கல்வி என்பது மாறி வேலைக்கான கல்வி என்றாகிப் போனது. இன்றைய மாணவர்கள் மனதில் போட்டி நிறைந்த உலகத்தைப் பற்றிய சிந்தனையே திணிக்கப்படுகிறது. மனனம் செய்து வாந்தியெடுக்கக்கூடிய முறைகளில் தான் இன்றைய தேர்வு முறைகள் திகழ்கின்றன. சொல்லப்போனால் பொதுத் தேர்வுகளே தேவையில்லை தான். வாந்தியெடுப்பதற்கு எதற்கு பொதுத் தேர்வுகள்? திருச்சூரில் நடந்த கருத்தரங்கில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் "கல்வி முழுவதும் கடைச்சரக்காகி விட்டது. ஏறக்குறைய ஒரு காய்கறிக்கடை வைத்திருப்பவன் எப்படி கூவிக்கூவி வியாபாரம் செய்வானோ. அதைப் போன்றே இன்றைய தனியார் கல்வி விற்பனையாளர்கள் கல்வியை விற்கிற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்" என்றார். இன்று நாட்டில் நடக்கின்ற வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் பெருகுவதற்கு இதுவும் ஒரு அடிப்படைக் காரணம். பணத்தின் மீதான மோகம் அதிகரிக்க அதிகரிக்க மற்றவைகளின் தரமும் சேவையும் குறைந்து விட்டது. இதில் கல்விக்கு தான் முதலிடம். கல்வி முழுவதுமாக மீண்டும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வருவதைத்தவிர வேற ஒரு விமோசனம் இதற்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தேர்வுமுறைகள் வெறும் எழுதுவதன் அடிப்படையில் இல்லாமல் அவனது சொந்த சிந்தனைகளுக்கு இடம் கொடுப்பதாக இருந்தால் இன்னும் நல்லது.
    August 23, 2011 12:05 AM ///

    ஏறத் தாழ பத்து மாதங்கள் கழித்து பதில் எழுதுகிறேன். அதற்காக என்னை மன்னிக்க வேண்டும் முதலில்.

    நீங்கள் சொல்லும் விசயங்களுக்காத்தான் போராடுகிறோமே.

    மிக்க நன்றி தோழர்.

    ReplyDelete
  18. ///எட்கர் சாலமோன் said...
    அருமையான பதிவு தோழர். இந்த தேர்வு ஒழிப்பில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு. இருப்பினும் இந்த கல்விமுறையில் நிச்சயம் மாற்றம் தேவை. ஏன் இன்னும் இந்த மெக்காலெக்கு நாம் மாற்று கண்டுபிடிக்கவில்லை? செமஸ்டர் முறை நல்ல தீர்வு. அதிலும் மனனம் செய்து எழுதுவது பயனற்றது. ஆக செயல்முறை பாடதிட்டங்கள் அமைப்பது அவசியம்.எடுத்துகாட்டாக எனக்கு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுது கூட வங்கியில் சென்று பாரம் பூர்த்தி செய்து பணம் எடுக்க தெரியாது. இத்தனைக்கும் வணிகவியல் பாடம் தான் முதன்மையானது. இன்றும் இந்த நிலை நிறைய மாணவர்களுக்கு உள்ளது. முதலாவதாக தேறும் மாணவன் கூட வெளி உலகிற்க்கு வரும் பொழுது நிறையவே காயப்படுகிறான். இந்த நிலை மாற வேண்டும்.
    August 23, 2011 12:41 AM ///

    இந்தப் பின்னூட்டத்திற்கும் அதே நிலைதான். ஏறத்தாழ பத்து மாதங்கள் கழித்து கருத்து சொல்கிறேன்.

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  19. /// d.panchatcharam said...
    வணக்கம் அய்யா
    மிக நீண்ட அகண்ட ஆழமான கருத்து நீங்கள் கூறியிருப்பது, கல்வி கற்ற அனைவரின் சிந்தனையும் இதுவாகவே இருக்கும் என நம்புகிறேன்.
    நிச்சயம் மாற்றம் தேவை என்பதுவரை எனக்கு புலப்படுகிறது ஆனால் அது எவ்வகை மாற்றம் என்பதில் எனக்கு தெளிவு ஏற்படவில்லை, ஏனெனில் ஒரு ஆசிரியனுக்கே அது ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
    நினைவுகொள்கிறேன்...
    எனது தமிழாசிரியர்தான் எனக்கு உலகம் என்ன என்பதை காட்டினார், அவர் பாடம் மட்டும் நடத்திவிட்டு செல்லவில்லை ஒரு ஆறாம் வகுப்பு மாணவனுக்கு அப்போதைய தேவையான வாழ்க்கை ஒழுக்கம் எல்லாம் நடத்தினார், நிறைய பேசுவார் எங்களிடம், அவர் வகுப்பு முடிந்து போனபின்பும் எங்கள் வகுப்பு முழுவதும் நிரம்பி இருக்கும் அவரின் அதிர்வுகள்.
    தற்பொழுது நிலை வேறாக உள்ளதே. கல்வி வியாபாரம் கலை கட்டி நடக்கிறது, ஆசிரியப் பணி என்பது வேலை என்றாகிவிட்டது. பொருளுக்கு பின்னால் ஓடும் ஒருவரிடம் பொருள் விளக்கம் கேட்டால் பாவம் என்ன கூறுவார் அவர். அவரை குறை கூற முடியாது.
    இது ஒரு தளத்தில் மட்டும் ஏற்பட வேண்டிய மாற்றம் அல்ல, இருபுறமும் ஏற்படவேண்டும். ஆசிரியர் மட்டுமா தவறு செய்கிறார். படி ஒப்புவி என்று பாடாய் படுத்தும் பெற்றோரும் தவறே செய்கிறார்கள்.
    என்ன வேலைக்கு படிகிறீர்கள் என்று ஒருவர் என்னிடம் கேட்டார்.
    யாம் கற்ற கல்வி அதை எனக்கு போதிக்கவில்லை என்றேன். என்னை பார்த்து சிரித்துவிட்டு நகர்ந்தார் அவர். வேலை பார்கத்தான் கல்வியா?
    எம்மை பொறுத்தவரை புரிதல் நடந்த மனிதனே ஆசிரியனாக முடியும் அவனே சிறந்த மாணவனை மனிதனை உருவாக்க முடியும். நாளைய ஆசிரியர்களை உருவாகும் பணி இன்றைய ஆசிரியரிடமே உள்ளது.
    அப்படி நிகழாத வரை மதிப்பெண்ணுக்காக பயிலும் மாணவனும் அதற்காகவே அவனை ஏவும் பெற்றோரும் ஆசிரியரும் கண் முன்னே தற்கொலை செய்து கொள்ளும் குழந்தையை பார்த்து கண்ணீர் விடவேண்டிய நிலை நீடிக்கும்.

    August 23, 2011 11:50 AM ///

    மிக்க நன்றி தோழர்.

    கல்வி மாணவனை மனிதப் படுத்தி அனுப்ப வேண்டும்.

    போராடிப் பார்ப்போம்

    ReplyDelete
  20. /// ஹரிஹரன் said...
    நல்ல கட்டுரை, கல்வியில் மிகப்பெரிய ,மாற்றம் தேவை. அதற்கு அறுவைச்சிகிச்சை தேவைப்படுகிறது.ொரு சிறிய கூட்டம் கல்வியை ஹைஜாக் செய்துள்ளது, அவர்களிடமிருந்து மீட்கும் வரை முன்னேற்றம் சாத்தியமில்லை.
    August 27, 2011 11:27 PM ///

    கொஞ்சம் முனைப்போடும் அர்ப்பணிப்போடும் திரண்டால் போதும் தோழர்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  21. அருமையான விவாதம் தான், ஆசிரியர் மத்தியில் மிக ஆழமாக விவாதிக்கவேண்டிய கருத்துத்தான், அனைவருக்கும் கல்வித்திட்டதின் முன்னாள் திட்ட இயக்குநர் திரு விஜயகுமார் அவர்கள் , மாறத்தை துவங்க முயற்சித்தார், நல்லபடியே துவங்கினார்,இன்று எல்லாம் ஒவ்வொரு இயக்குநர் மாறும் போதும், திட்டசெயல்பாடுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன, எல்லாவற்றிலும் நுண் அரசியல். எப்படி கல்வியில் புரட்சி பூக்கும்?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் பாலு

      Delete
  22. வணக்கம்
    கல்வி குறித்த சிந்தனை மாற்றம் தேவை என்பதில் மாற்றுகருத்து இல்லை. ஒரு கல்வி மனிதனை முழுமையாக்குவதாக அமைய வேண்டும்.வாந்தி எடுக்கும் கல்வி முறையால் முடை நாற்றமே மிச்சம்.விலைக்கு வாங்கும் கல்வி பணம் சம்பாதிக்கும் மனித எந்திரங்களையே உருவாக்குகின்றது.மனிதனை அல்ல.

    ReplyDelete
  23. //ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் தேர்ச்சி பெறாத பத்தாம் வகுப்பு மற்றும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவு வந்த அன்று தற்கொலை செய்து கொள்வதை செய்தித் தாள்களில் பார்க்கிறோம். ஆனால் , கல்லூரி மாணவர்களோ, மருத்துவக் கல்லூரி மாணவர்களோ, அல்லது பொறியியல் கல்லூரி மாணவர்களோ தேர்ச்சி பெறாமைக்காக இப்படித் தற்கொலை செய்து கொள்வதில்லை. எனில் பத்தாம் வகுப்பை விட இவை எல்லாம் முக்கியமில்லாதவையா? அல்லது இவை எல்லாவற்றையும் விட பத்தாம் வகுப்பு இவ்வளவு முக்கியமானதா? //

    மிக ஆழமான கேள்வி எட்வின் சார். வாழ்த்துகள்.

    எனக்குத் தோன்றும் சில பதில்கள்:

    1. வயது முதிர்ச்சி - உலகம் தெரியாத அல்லது படிப்பு மட்டும் வாழ்வென்று நினைத்த வயதில், அதில் சறுக்கல் வந்ததும், கையாளத்தெரியாத திறன் தற்கொலைக்குக் காரணம்.

    2. பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் நம் வாழ்வின் திசையைத் தீர்மானிப்பது. அதில் குறையும் போது நம்மால் நினைத்த துறைக்குப் போக இயலாமை. உதாரணமாக, டாக்டருக்குப் படிக்க விரும்பியவன், மதிப்பெண்கள் குறையும் போது, அடுத்த வாய்ப்பான இஞ்சினியர் தான் ஆக முடியும். மேலும் குறைந்தால் அடுத்த நிலை, அதற்கு மேலும் குறைந்தால் அதற்கடுத்த நிலை. சுருங்கச் சொன்னால், நாம் என்னவாகப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்பது நம் மதிப்பெண்கள்.

    ஆனால் கல்லூரி அப்படியில்லை. அட்மிஷன் கிடைத்த நாளில் இருந்து அவர்கள் யாராக ஆக விரும்பினார்களோ, அவர்களாகத் தான் ஆவார்கள். distinction வாங்கினாலும் அவன் டாக்டராகத் தான் ஆவான். fail ஆனாலும் அவன் டாக்டர்காத் தான் ஆவான்(அவன் தரம் பற்றிப் பேசவில்லை. அது தனி டாப்பிக்). என்ன! சிறிது கால தாமதமாகும். அவ்வளவு தான்! ஆனால் நிச்சயமாக டாக்டர் தான் அவன்! கல்லூரியில் தேர்வு முடிவுகள் பெரிய பிரச்சனையாகாமல் இருப்பதற்கு, இந்த ஒரு நிலை கூட காரணமாக இருக்கலாம்.

    இந்த வழிமுறையை நம்மால் பள்ளிக் கல்வியில் கொண்டு வர முடியுமா? அதாவது ஒருவன் டாக்டராக ஆக விரும்பினால், அதற்குத் தகுதியான மதிப்பெண்கள் எடுக்கும் வரை அவனால் தேர்வு எழுத முடிய வேண்டும். இதில் சில பாதகங்களும் இருக்கும். இருப்பினும், தான் யாராக ஆக விரும்புகிறானோ, அவனாகவே ஆவதற்கு வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்குத் தங்கள் கனவுகளை மறந்து வாழும் நிர்பந்தம் இருக்காது. அதனால் ஜெயிப்போமோ தோற்போமோ என்ற டென்ஷன் இருக்காது. அப்புறம் ஏன் வரப் போகிறது தற்கொலை முயற்சிகள்?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜசிங்கர் தோழர்.

      Delete
  24. வணக்கம்

    கல்வி ஒரு மனிதனை மனிதனாக்க வேண்டும் ஆனால் இன்றைய கல்வி முறையோ எந்திரங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றன. அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...