உச்சநீதிமன்ற தீர்ப்பினையடுத்து பாரதிய ஜனதாக் கட்சியின் கடும் எதிர்பையும் மீறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அளவுநீரைத் திறந்து விடுகிறார் மாண்பமை சீத்தாராமையா அவர்கள்.
இப்படிச் சொல்வதால் சீத்தாராமையா அவர்களுக்கோ கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கோ தண்ணீரைத் திறந்து விடுவதில் முழுமையான உடன்பாடு என்றெல்லாம் பொருளல்ல.
'கனத்த மனதோடு' திறந்து விடுவதாகத்தான் சீத்தாராமையா அவர்களே கூறியுள்ளார்கள்.
ஆக மனதளவில் ஒப்பவில்லை எனினும் உச்சநீதி மன்றத்தின் உத்தரவை அமுல்படுத்துவது என்ற அளவில் கர்நாடாக அரசு வந்திருக்கிறது. ஆளும் கட்சியும் எந்தப் பிரச்சினையிலும் ஈடுபடாமல் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கர்நாடகத்தில் இதுவே புதியதும் ஆரோக்கியமானதும் ஆகும்.
உச்சநீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படும் ஒரு மாநில அரசிற்கு அதனால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒததுழைப்பைத் தரவேண்டியது மைய அரசின் கடமையாகும்.
ஆனால் பிரதமரை சந்திப்பதற்கு புதன்கிழமைவரை
எரிந்து கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு புதன்வரை பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்பது கண்டனத்திற்குரியது.
காவிரிப் பிரச்சினையில் பிரதமர் தலையிடுவதற்கு இப்போதைக்கு சாத்தியமில்லை என்றும், உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பினை நடைமுறைப்படுத்தி முதல்வரை மனம் போன போக்கில் செயல்படுவதாகவும் மத்திய அமைச்சர் மாண்பமை சதானந்த கௌடா கூறியுள்ளார்.
இது கண்டனத்திற்கு மட்டும் உரியதல்ல.
நிரந்தரத் தீர்விற்கான திட்டமிட அரசோ வெகுஜன அரசியல் கட்சிகளோ ஆர்வம் காட்டாத நேரத்தில் அக்கறையும் இந்த விஷயத்தில் ஞானமும் உள்ளவர்கள் உட்கார்ந்து யோசித்து விவாதித்து ஒரு திட்டத்தை பொது வெளியில் வைத்து பொருத்திப் அபிப்பிராயத்தோடு அரசை நிர்ப்பந்தித்தால் என்ன?
**********************************************************
கல்லூரிகளின் மாணவர் பேரவைத் தேர்தல்களே கவனிப்புக்குரியவைதான். காரணம் அவற்றில் வென்றவர்களும் தோற்றவர்களும் பிற்காலத்தில் அரசியலில் ஏதோ ஒரு புள்ளியில் களமாடுபவர்களாக மாறுகிறார்கள். மக்களுக்கான அரசியலில் ஈடுபடுபவர்கள் அவர்களில் குறைவு என்றபோதிலும் அந்த அளவிற்காகவேனும் மாணவர் சங்கங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துதலுக்கும் உரியவையே.
அதிலும் தில்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்து மாணவர் பேரவைத் தேர்தலை உலகமே உற்று கவனிக்கும். காரணம் தோழர் Jothimani Sennimalai சரியாக சொன்னதுபோல் அந்தத்தேர்தல் என்பது அகில இந்திய அரசியல் தேர்தலைப் போன்றதாகும். பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனக்குழுக்களிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகள் அவர்கள்.
அவர்களது கருத்தும் செயலும் அந்த அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் மாண்பமை இந்திரா அவர்கள் எமர்ஜென்சியைக் கொண்டுவந்த நேரத்தில் அந்தப் பேரவையின் தலைவராக இருந்தவர் இன்றைய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான தோழர் யெச்சூரி அவர்கள்.
அந்தக் காலகட்டத்தில் இந்திரா அவர்களின் வீட்டு வாசலில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி அவரை வெளியே அழைத்து அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக அவர் கையிலேயே கொடுத்தவர்.
அதற்கடுத்த நாள் இந்திரா அவர்கள் பதவி விலகியது தற்செயலானது என்றும் அதற்கும் யெச்சூரியின் ஆர்ப்பாட்டத்திற்கும் ஒன்றும் தொடர்பில்லையென்றும் சொல்பவர்கள்மீது நமக்கு ஒன்றும் எதிர்கருத்தெல்லாம் இல்லை.
அப்படிபட்ட சூழலில் அங்கு இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பொறுப்புக்கு வந்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா உள்ளிட்ட வலதுசாரி நாடுகள் நிச்சயமாக கவனம் செலுத்தும். வரும் காலங்களில் அதற்காக காசை வாரி இறைக்கவும் அவை தயங்காது.
போக, சமீபத்தில் அங்கு ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வந்திருந்த பிள்ளைகள்மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்.
அகில பாரதிய வித்யார்த்த பரிசித்தினை (ஏபிவிபி) எப்படியும் அங்கு கட்டமைப்பது அதன்மூலம் இந்தியக் கல்விக் கட்டமைப்பை தேசம் முழுக்க கொண்டு செல்வது என்ற பாரதிய ஜனதாக் கட்சியின் செயல்திட்டத்தையும் வலது சாரி மற்றும் காவித் தத்துவத்தின் கையெடுப்புச் சான்றோர்களின் கனவுகளையும் சமீபத்தில் நடந்த மாணவர் பேரவைத் தேர்தல் சுக்கு நூறாக உடைத்து எறிந்திருக்கிறது.
ஒற்றைக் கலாச்சாரம், சமஸ்கிருதமெனும் ஒற்றை மொழி, விஞ்ஞானத்தை கடவுளின் கொடையாகப் பறைசாற்ருதல், ஆங்கிலம், கணிதம், மற்றும் அறிவியலை மேட்டுக் குடியினருக்கானதாக மாற்றும் புதியக் கல்விக் கொள்கையை அரசு கை எடுத்திருக்கும் நேரத்தில் இடதுசாரிப் பிள்ளைகளின் இந்த வெற்றி கொண்டாடத் தக்கதும் கவனத்தோடு பரிசீலிக்கத் தக்கதும் தகுந்த முறையில் கொண்டுசெல்லப்பட வேண்டியதும் ஆகும்.
பெரியவர்களுக்குப்
பிள்ளைகள் பாடம் நடத்தியிருக்கிறார்கள். கற்றுக் கொள்வோம்.
*********************************************
டீ குடிக்க மூனுரூவா பத்தல, இருந்தா கொடேன்
கொஞ்சமும் யாசித்தலின் சாயமற்றிருந்தது அந்தக் கிழவியின் இறைஞ்சல்
ஐந்துரூபாய் நாணயமொன்றை எடுக்கிறேன்
இரண்டுரூபாய் மிச்சம் தருகிறாள்
போதும் அஞ்சுரூவா இருக்கு எங்கிட்ட
இருமுகிறேன்
“சளிப்புடிச்சா சனிப்புடிச்ச மாதிரி” டாக்டர பாரு
நகரும் பேருந்தில் அவசரமாய் தொற்றும் முன் யாரெனத் தெரியாத அந்தத் தாயிடம் சொல்லிவிட்டு வந்திருக்கலாம் நான்
“அது ஒன்னும் இல்ல தாயி, மழையில நனஞ்சதுதான்” என்று
********************************************************************************
தண்ணீர் கேட்பது தவறு என்பது தவிர அவனுக்கும்
தண்ணீர் மறுப்பது தவறு என்பது தவிர இவனுக்கும் பிரச்சினை என்னவென்று தெரியாது.
நீங்கள் பிரச்சினையயைத் தீர்க்கவெல்லாம் வேண்டாம்.
என்ன பிரச்சினை என்பதை மட்டும் இரு மக்களிடமும் வெளிப்படையாய் சொல்லிவிடுங்கள்.
மக்கள் தீர்வு காண்பார்கள்
**************************************************************
கரும்பைக் கடித்து சக்கையை துப்புவது மாதிரி கரண்டைக் கடித்து
உசிரைத் துப்ப வைத்திருக்கிறார்கள். வித விதமாய் தற்கொலைகளை செய்கிறார்கள். இரண்டு
நிலைத்தகவல்கள் எழுதினேன்
1
தற்கொலை செய்யத் தெரியாது
யாரையுமெங்களுக்கென்ற
தைரியத்திலெங்களை
எத்தனை காலத்துக்கு
தற்கொலை செய்வீர்கள்?
2
ஆனாலும் நீங்களவனை தற்கொலை செய்தவிதம்
புனைவுகளையே பொறாமை கொள்ளச் செய்யும்
**********************************************************
பிள்ளை மாரிமுத்துவை பற்றி எழுத வேண்டும். அவன்
மாற்றுத் திறனாளிக்கான ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதற்காக அல்லாமல் இரண்டு
இருக்கிறது அந்தக் குழந்தைபற்றி எழுத.
ஒன்று.
தனக்குப் பரிசாகக் கிடைத்துள்ள தொகையில் ஒரு
பெரும் தொகையை தான் படித்த அரசு பள்ளியின் வளர்ச்சிக்காக தருகிறான்
இரண்டு
அனைத்தையும்போலவே இதிலும் தங்களது ஜாதி மூக்குகளை சிலர் நுழைக்க
முற்பட்டபோது அவனது ஏழைத்தாய் அந்த மூக்குகளை நறுக்கிய விதம்.
தாய்க்கு வணக்கமும் பிள்ளைக்கு முத்தமும்
*****************************************************************
தமிழ்நாட்டில் கழிவுநீர் சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி ஏறத்தாழ 200பேர் இறந்து போயிருப்பதாகவும்
அவர்களது குடும்பத்திற்கு
தலா பத்து லட்சம் ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மீது ‘மாற்றத்திற்கான இந்தியா’ என்ற அமைப்பைச் சார்ந்த நாராயணன் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்.
வழக்கு உச்சநீதிமன்றம்
மீண்டும் உயர்நீதிமன்றம்
என்று வழக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுகுறித்து எல்லாம் விவாதிக்க நமக்கெதுவும்
இல்லை.
ஒருகட்டத்தில் உயர்நீதி மன்றம் பாதிக்கப் பட்ட குடும்ன்பங்களுக்கு பத்துலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்
என்று தமிழக அரசிற்கு உத்தரவிடுகிறது.
இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதியன்று பாதிக்கபட்ட குடும்பங்களில் 41 குடும்பங்களை
கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் எனவேதான் இழப்பீடு வழங்க இயலவில்லை என்றும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருப்பதாக இன்றைய (27.08.2016) தீக்கதிர் சொல்கிறது.
சில அய்யங்களை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள தேவை இருப்பதாகப் படுகிறது.
நாராயணன் சொல்லியிருப்பது
ஏறக்குறைய 200 குடும்பங்கள்.
இதுவே நிச்சயமாக குறைவான மதிப்பீடுதான். பாதிப்புகள் அனைத்தும் பதிவு செய்யப் படுவதில்லை. அதற்கான வாய்ப்புகளும்
மிகக் குறைவு.
இதில் 41 குடும்பங்களைக்
கண்டுபிடிக்க இயலவில்லை என்றால் மீதமுள்ள 159 குடும்பங்களும்
கண்டுபிடிக்கப் பட்டுவிட்டதாகத்தானே பொருள். எனில், கண்டுபிடிக்கப்பட்ட 159 குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதா?
இல்லை 41 குடும்பங்களையும்
கண்டுபிடித்தால்தான் 200 குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படுமா?
எனில் ஒருக்கால் இந்த 41 குடும்பங்களை கண்டுபிடிக்க
இயலாது போனால் கண்டுபிடிக்கப்பட்டதாக நாம் கருத இடமுள்ள 151 குடும்பங்களுக்கும் இழப்பீடு கிடையாதா?
அடுத்ததாக நமக்கெழும் அய்யம் இந்த 41 குடும்பங்களை
ஏன் கண்டுபிடிக்க
முடியாது போனது?
அவர்களை தேடியதற்கான ஆதாரங்கள் என்ன?
அவர்கள் என்ன அநாதைகளா?
உயிருக்கு ஆபத்தான வேலைகளை செய்வதற்கு இயந்தரங்களைப்
பயன்படுத்தாமல் இன்னும் எத்தனை காலம் மனிதர்களை பயன்படுத்துவீர்கள்?
சரி, அப்படி பயன்படுத்தும் வேலைகளில் மனிதர்களை ஈடுபடுத்தும்போது ஏன் அவர்களது முகவரியை வாங்க மறுக்கிறீர்கள்?
ஒருவரை கல்லாப்பெட்டியில்
அமரவைக்கும் முன் இப்படி முகவரி கேட்காமல் அமரவைப்பார்களா?
எனில் கல்லாப் பணத்தைவிட கழிவுநீர் சுத்தம் செய்யும் தலித்தின் உயிர் மலிவானதா?
*************************************************************
கடலுக்கு மஞ்சள் தீட்டினாள்
கடல் நீலமென்கிறேன்
கடல் மஞ்சள்தானென்றும்
நம்ம ஊரு கடல் தப்பென்றும் சொன்னவள்
தனது கடலை மடித்து
கணக்குப் புத்தகத்தில் வைத்துக் கொண்டாள்