Thursday, July 31, 2014

அதற்கும் இதற்கும்

ஊர் நாட்டாமை சொன்னார்,

வர திங்கக் கிழமை ஊருல இருக்கிற எல்லோருக்கும் பஞ்சாயத்து சார்பா கறி விருந்து,

வர புதங்கிழமை வடக்குத் தெருவுக்கு ஒரு பள்ளிக்கூடத்துக்கு கால் கோலுறோம்,

தெக்குத் தெருவுக்கு அன்னிக்கே ஒரு ஆஸ்பத்திரி,

நடுத் தெருவுல மாட்டாஸ்பத்திரி,

மேற்குத் தெருவுல ஒரு சினிமா கொட்டா,

கிழக்குத் தெருவுல ஒரு காலேஜு...

நாட்டாமை அடுக்க அடுக்க ஊர் ஜனங்கள் கைதட்டி ஆரவாரித்தனர். எழுந்த விசில் அலையில் சிவன் கோயில் வாசல் பந்தல் ஒருமுறை பறந்து அமர்ந்தது.

“ ஊருக்கு கொட்டாயி கொண்டாந்த நாட்டாமை” ஒரு மேற்குத் தெரு இளசு கத்த

“வாழ்க”

எழுந்த கோஷம் பறந்து கொண்டிருந்த காக்கை கூட்டத்தை பிரித்துப் போட்டது.

ஒவ்வொரு தெரு சார்ந்தும் கோஷம் எழுந்த அடங்க ஒரு மணி நேரம் ஆனது. ஒருவர் கோஷத்தை ஒருவர் வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பு தெரிந்தது.

அடங்கியதும் ஒருவர் கேட்டார்,

இவ்வளவையும் செய்வதா சொல்றீங்களே....

ஊருக்கே விருந்துன்னா 100 கிடா வேணும், 100 மூட்ட அரிசி வேணும், உப்பு, புளி, காரம், தேங்கா காய் கறி , 4000 இலை, எல்லோருக்கும் தண்ணி, சமைக்க பாத்திரம், ஆளுங்க, பரிமாற ஆளுங்க, எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட இடம் எல்லாத்துக்கும் என்ன ஏற்பாடு?

நாட்டாமைக்கு ஜிவ்வென்று சிவந்தது.

அதெல்லாம் நாங்க பார்த்துக்குவோம் உனக்கென்ன என்றார்கள் நாட்டாமையின் வலது கைகள்.

அடுத்த வாரம் கட்டறேன்னு சொன்ன ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் , காலேஜு, சினிமா, எல்லாத்துக்கும் அனுமதி வாங்கியாச்சா? இடம் ஆர்ஜிதம் செய்தாச்சா? கட்ட பணத்துக்கு என்ன ஏற்பாடு?

ஓ வென்று கத்தினார்கள் அவரது வலது கைகளும் இடது கைகளும்.

கை அமர்த்திய நாட்டாமை சொன்னார்....

பார்த்தீங்களா, ஊருக்கு நல்லது செய்யலாம்னு நினைச்சா இப்படி அபசகுனம் மாதிரி பேசறானுங்க. நல்லது செய்ய விட மாட்டானுங்க சாமி...

தலையில் அடித்துக் கொண்டார்.

அவங் கிடக்குறான் லூசு, நீங்க செய்யுங்க நாட்டாம என்றார் நடுத்தெரு காரியக்காரர். ரெண்டு வருஷத்துக்கு முன்னால் நடுத்தெருவுக்கு பள்ளிக்கூடம் கொண்டு வரேன்னு நாட்டாமை சொன்னதும் அது வராமல் போனதும் அவர் மறந்து போயிருந்தார்.

எதையும் மறந்து விடுவார்கள் என்பதும் அவ்வப்போது எதையாவது செய்வதாய் சொன்னாலே போதும் என்பதும் நாட்டாமைக்குத் தெரிந்தே இருந்தது.

பின்குறிப்பு 1,
........................
போதுமான இஞ்சின்களும், பெட்டிகளும், இயக்க போதுமான அளவில் ஊழியர்களும் இல்லாமல் அதற்கான ஏற்பாடுகளையும் செய்யாமல் புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ரயில்வே அமைச்சரும், அதை அம்பலப் படுத்திய தோழர் டி.கே. ரெங்கராஜனும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

பின் குறிப்பு 2,
.......................
இது மாதிரி லூசுங்களாலதான் தேசம் முழுசா விற்பனையாகமல் இந்த அளவுக்கேனும் மிச்சமிருக்கு.

Wednesday, July 30, 2014

ஒதுக்கீடா முதலீடா?

அடிப்படை அறிவியல் துறைகளுக்கு இந்திய அரசு போதுமான நிதி ஒதுக்குவதில்லை. எனவே ஆராய்ச்சி படிப்புகளின் தரத்தையும் வளர்ச்சியையும் மேம்படுத்த தனியார் கல்வி நிறுவனக்கள் முதலீடு செய்ய வரவேண்டும் என்றும் மாண்பமை கலாம் அவர்கள் ஷில்லாங் ஐ.ஐ.எம் மில் பேசியதாக 25.7.14 அன்றைய ஜனசக்தி சொல்கிறது.
போதுமான நிதியை ஒதுக்கச் சொல்லி போராடுங்கள். அது உங்கள் உரிமை என்று மாணவர்களைப் பார்த்து சொல்லியிருக்க வேண்டும்.
அல்லது நானும் வருகிறேன் வாருங்கள் போராடலாம் என்று பொதுமக்களைப் பார்த்து சொல்லியிருக்க வேண்டும்.
அல்லது குறைந்த பட்சம் போதுமான நிதியை ஒதுக்குங்கள் என்றாவது அரசுக்கு அறிவுரை சொல்லியிருக்க வேண்டும்.
எங்க ஊர்ல கட வச்சிருக்கவனெல்லாம் போதுமான அளவு முதலீடு பன்னல நல்ல முதலீடோடு வந்தா ஏகமா சுருட்டலாம் என்பது போல் அல்லவா இருக்கு உங்கள் கோரிக்கை.

Tuesday, July 29, 2014

இந்துதான் இவர்களும்...

பொட்டுல்பட்டி அங்கன்வாடியில் படிக்கும் தலித் குழந்தைகள் தண்ணீர் ட்ரம்மில் உள்ள குவளையைப் பயன்படுத்த முடியாதாம். தலித் குழந்தைகள் தட்டேந்தி நிற்க சாதிக் குழந்தைகள் குவளையில் மொண்டு ஊற்ற அதைத்தான் குடிக்க வேண்டுமாம் என்கிற செய்தியை இன்றைய தீக்கதிர் சொல்கிறது.

உலகில் எந்த இந்துவிற்கு ஒரு பிரச்சினை என்றாலும் தலையிடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன பி.ஜே.பி யினருக்கு , குறிப்பாக மாண்பமை பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பொட்டுல்பட்டியிலேயே சில பச்சிளம் இந்துக் குழந்தைகள் குடி தண்ணீருக்காக தட்டேந்தி நிற்கும் அவலம் இருக்கிறது.

அவசியம் தலையிடுங்கள் மாண்பமை பொன்.ரா அவர்களே

Monday, July 28, 2014

நிலைத் தகவல் 61

தோழர் நம்மாழ்வார் இறந்த அன்று எழுதியது

இப்படி ஒரு துயரம் நடக்காது போயிருந்தால் இந்நேரம் நானும் சந்திரசேகரும் தோழர் நம்மாழ்வாரோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்திருப்போம். அவர் காக்கைக்காக ஒதுக்கியிருந்த நேரம் இது.

அவரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் என்னிடமிருந்தன. அவற்றில் ஒன்று,

“ இயற்கையை சூறையாடுபவனைக் கண்டால் அவன் பன்னாட்டு நிறுவனமாயினும், உள்நாட்டு முதலாளிகளாயினும் அவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறீர்கள். தொடர்ந்து அதற்காக குரலும் தருகிறீர்கள்.

இதே தளத்தில் போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரி கட்சிகளைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளிகளோடு இணைந்து களமேகத் தவறிவிட்டோமே என்று எப்போதேனும் எண்ணியிருக்கிறீர்களா?”

இதற்கு பதில் சொல்ல அய்யா இல்லை.

இடது சாரித் தலைவர்களிடம் உரிமையோடு கேட்கிறேன்,

“ தோழர் நம்மாழ்வாரோடு தேவையான அளவு இணைந்து அல்லது இணைத்துக் கொண்டு செயலாற்றத் தவறியிருக்கிறோம் என்ற உணர்வு எழுகிறதா தோழர்களே?”

Sunday, July 27, 2014

அது...

”உலகின் தலைசிறந்த மொழி சமஸ்கிருதம். இந்தியாவை இணைப்பதே அதுதான். இந்தியர்கள் போற்றிப் பாதுகாக்கவேண்டிய மொழி அது.

இந்தியாவில் தமிழ் மட்டுமே தனித்த மொழி. மற்றெல்லா மொழிகளும் சமஸ்கிருதத்தின் சேய் மொழிகளே”

மாண்பமை வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது ஒருமுறை சென்னையில் நடந்த மகவீரர் பிறந்தநாள் விழாவில் பேசியது.

சிதறிப்போய்விடாமல் இந்தியாவை இறுக்கிப் பிடித்திருக்கிற வடக்கயிறே சமஸ்கிருதம்தான் என்று முழங்குகிற வாஜ்பாய் அவர்களே தமிழ் தனித்த மொழி என்பதை பதியாமல் கடக்க முடியவில்லை.”

எனது ”அந்தக் கேள்விக்கு வயது 98 ” என்ற நூலில் உள்ள ”புகழ் ஏறிப் புவிமிசை எங்கும் இருப்பாள்” என்ற கட்டுரையிலிருந்து

Saturday, July 26, 2014

பயணம் தந்த...

                                                                              1


இருவர் மட்டுமே அமர்ந்திருக்கும் மூன்றுபேர் அமரவேண்டிய பேருந்து இருக்கையில் மூன்றாவது நபராக முயற்சிக்கும் போது முன்னதாக அமர்ந்திருப்பவரின் முககத்தில் தெரியும் சலிப்பு இருக்கிறது பாருங்கள் ...
அப்பப்பா!


                                                                        2


அண்ணாநகருக்கு வழி கேட்டவரிடம் தான் இறங்கும் நிறுத்தத்திற்கு முதல் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள சொன்னார் . வழி கேட்டவர் மகிழ்ந்துபோய் நன்றி சொல்ல அதைவிட மகிழ்ந்து பரவாயில்லை என்றும் இதில் என்னங்க என்றும் சொன்னார் வழி சொன்னவர்

Friday, July 25, 2014

மாற்றல்ல

நோண்பிருந்த இஸ்லாமியத் தோழர்களின் வாயில் சப்பாத்தியைத் திணிப்பது என்பதுகேவலத்தின் உச்சம்.

அதுவும் அந்தக் காரியத்தை பாராளுமன்ற உறுப்பினர்களே செய்திருப்பது என்பது கேவலமானது மட்டுமல்ல கடுமையான தண்டனைக்கு உரியதுமான குற்றம்.

இதைவிட, இது இந்துக்களுக்கான இந்தியா, மற்றவர்கள் வெளியேறட்டுமென அவையிலேயே ஒரு உறுப்பினர்கத்திச் சொன்னது அசிங்கமானதும் ஆபத்தானதும் ஆகும்.

ஆனாலும் ஒன்றைச் சொல்கிறேன்,

இதைச் செய்த எந்த ஒரு ஒருவரையும் எந்த ஒரு இந்துவும் இந்துவாகவோ மனிதனாகவோ ஏற்கவில்லை.

இவர்கள் மதவெறியர்கள்கூட அல்ல , வெறியர்கள்.

இந்த வெறி அழித்தெறியப்பட வேண்டியது. அதேசமயம் அது இன்னொரு வெறிக்கு வாய்ப்பாகப் போய்விடக் கூடாது.

ஒரு தவறுக்கு இன்னொரு தவறு மாற்றாகாது. ஒரு மதவெறிக்கு இன்னொரு மதவெறியோ, ஒரு வெறிக்கு இன்னொரு வெறியோ ஒரு போதும் மாற்றாகாது.

பின்குறிப்பு:

அவையில் அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த உறுப்பினரை கடிந்துகொண்டு மன்னிப்பு கேட்கவைத்த மாண்பமை வெங்கைய நாயுடு அவர்களுக்கு இந்த மண்ணை நேசிக்கிற ஒவ்வொரு மனிதனின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Thursday, July 24, 2014

கட்ஜு 1 மற்றும் கட்ஜு 2



                                                                            1


2004 இல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தான் பணியாற்றியபோது உளவுத்துறை மோசமானவர் என்று சான்றளித்த நீதிபதி மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பதவி நீட்டிப்பு தரப்பட்டதாக ஓய்வுபெற்ற பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கட்ஜு கூறியுள்ளார் .

இதை தமிழகத்தின் கட்சி ஒன்றின் நிர்ப்பந்தத்தின் பொருட்டு அன்றைய மத்திய அரசு செய்ததாகவும் இதில் மூன்று நீதிபதிகளின் பங்கும் உண்டென்றும் அவர். கூறியுள்ளார் .

இதை அப்போதே சொல்லாமல் இப்போது சொல்வது ஏன் என்பதோடு அது உண்மைதானா என்பதை கண்டடைவதும் உண்மை எனும் பட்சத்தில் தாமதம்தான் ஆனாலும் இப்போதேனும் நடவடிக்கை எடுப்பதும் அவசியம்


                                                                          2


நீதிபதி கட்ஜு அவர்களை “ முரண்பாடுகளின் மொத்த உருவம்” என்று கலைஞர் அவர்கள் சொல்லியுள்ளார்கள். நீதி மன்ற நடவடிக்கைகளில் தலையிடாதவர் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் என்று இப்போது கூறும் கட்ஜு அவர்கள் ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று சொன்னவர்தானே என்றும் அவர் கட்ஜு அவர்களின் முரண்பாடுகளை நிறுவுகிறார்.கட்ஜுவின் இந்த கூற்று அரசியல் உள் நோக்கம் கொண்டது என்றும் சொல்கிறார்.

நாம் கலைஞர் அவர்கள் சொல்வதை புறந்தள்ளவும் விரும்பவில்லை. மாறாக கலைஞர் இந்த அறிக்கையில் கட்ஜு அவர்கள் சொன்னது பொய் என்று நிறுவவில்லை.

நியாயமான விசாரனை அவசியம் என்றும், அபாண்டமாக கட்ஜு அவர்கள் பொய் சொல்லியிருப்பின் அவரும் அவர் கூற்று உண்மையெனில் உரியவர்களும் தண்டிக்கப் படவேண்டும்


Wednesday, July 23, 2014

48


சங்கடப் படுத்தும்
பரிவான பார்வைகள்

திண்ணைக்கு வந்துவிட்ட
என் கட்டில்

புரிகிறது
செத்துக் கொண்டிருக்கிறேன்

அநேகமாக
நாளை

தப்பினால்
நாளை மறு நாள்

தொடங்கி விட்டது
பிரிவினை கூட

நல்லதுதான்
இருக்கும் போதே
பிரித்துக் கொள்வது

பார்த்து பார்த்து
சேர்த்தது

அடித்துக் கொள்ளாமல்

அவனவன் விரும்பியதை
அவனவன் எடுக்க

சீந்துவாரற்று
அநாதைகளாய்
ஏக்கத்தோடு பார்க்கும்
என் புத்தகங்கள்.

நிலைத் தகவல் 63

ஈராக்கில் நடக்கும் கலவரத்தில் 1800 ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம்  ஒன்று தகர்த்து நொறுக்கப் பட்டிருக்கிறது.

உலகெங்கிலுமிருந்து ஏகத்திற்கும் கண்டனக் குரல்கள். மிகவும் நியாயமான குரல்கள். இறை நம்பிக்கை இல்லாத நாத்திகன் என்ற போதிலும் வழிபாட்டுத் தளங்களை சேதப் படுத்துவதில் எப்போதும் ஒரு துளியும் உடன்பாடு இல்லை நமக்கு. ஆகவே எனது கண்டனத்தையும் உரத்த குரலில் பதிவு செய்கிறேன்.

ஆனால் சில நண்பர்கள் பார்த்தாயா பார்த்தாயா இந்த முஸ்லீம்களே இப்படித்தான் என்கிற கணக்கில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்களுக்காக ஒன்றைப் பதிய வேண்டியிருக்கிறது.

ஏதோ இஸ்லாமியர்கள் மதச் சகிப்புத் தன்மையே இல்லாதவர்கள். அவர்களது மண்ணில் பிற மதத்தவரின் வழி பாட்டுத் தளங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்றெல்லாம் ஒரு பிம்பத்தை கட்டமைத்து வைக்கப் பட்டுள்ளதே தவிர உண்மை அதுவல்ல.

1800 ஆண்டு பழமை வாய்ந்த தேவாலயத்தை இடித்துவிட்டார்கள் என்ற பதட்டத்தினூடே நாம் புரிந்து கொள்ள வேண்டியது அதை செய்தவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள்தானே தவிர இஸ்லாமியர்கள் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவனை இஸ்லாமியத் தீவிரவாதி என்றழைப்பதும் தவறு.

அந்த தேவாலத்தை இடித்தவர்கள் தீவிரவாதிகள்.

நம் ஊரிலும் 400 ஆண்டுகால பழமை வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப் பட்டது. அதையும் இந்துத் தீவிரவாதி இடிக்கவில்லை.

அதை இடித்ததும் தீவிரவாதிகள்.

இன்னொன்று,

400 ஆண்டுகளாக பாபர் மசூதியை அக்கறையோடு பாதுகாத்து பராமரித்தவர்களில் இந்துக்களும் அநேகம்பேர்.

1800 ஆண்டுகளாக அந்த தேவாலயத்தை அக்கறையோடு பாதுகாத்தவர்களில் அநேகம் பேர் முஸ்லீம்கள்.

இதுதான் நாம் உலகெங்கும் விதைக்க வேண்டிய செய்தி.

Tuesday, July 22, 2014

நிலைத் தகவல் 62

" செருப்பு துடைப்போம் , கார் கண்ணாடி கழுவுவோம், மிட்டாய்,பிஸ்கட் விற்போம். இப்படி ஏதாவது சம்பாதித்தால்தான் சாப்பிட முடியும் "  என்று ஒரு பொலீவிய சிறுவன் சொன்னதை சன் நியூஸ் தொலைக்காட்சியில் 19.07.2014 அன்று பார்க்க நேர்ந்தது. 

சொன்னது பொலீவியக் குழந்தை என்றாலும் செத்துடலாம் போல வலி. பொலீவியன் இல்லை என்றாலும் பெத்தவனாச்சே

குழந்தை தொழிலாளர் முறையை சட்டப் பூர்வமாக்கியிருக்கும் பொலிவியாவை வன்மையாக கண்டிப்போம்

குழந்தைத் தொழிலாளார் முறையை சட்டப் படி குற்றமாக்கியிருக்கும் இந்தியா குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திவிட்டு முதலிடத்திற்கு வந்திருப்பதாக இந்த மாத “மக்கள் போராளி” சொல்கிறது.

Monday, July 21, 2014

நிலைத் தகவல் 61

பள்ளியிலிருந்து களைத்துத் திரும்பிய மகளுக்கு தேநீர் போட்டுக் குடுத்தேன். குடித்ததும் எப்படி இருந்தது என்று கேட்டால் ஒருநாள் போட்டுக் கொடுத்துட்டு ரொம்ப அலட்டிக்காதப்பா என்கிறாள்.

தேநீர் சுவையாக இருந்திருக்கிறது

Sunday, July 20, 2014

நிலைத் தகவல் 60


மாண்புமிகு முதல்வர் அவர்களை மிகக் கடுமையாக விமர்சிப்பவர்களில் நானும் ஒருவன். இன்னமும் அந்த நிலையிலிருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை. 

ஆனால் சமீப காலமாக அவரது நடவடிக்கைகளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தமிழ் மொழியோடு, தமிழ்க் கலாச்சார அடையாளங்களோடு தன்னை இணைத்துக் கொண்டுள்ள ஒருவரிடமிருந்து இத்தகைய செயல்பாடுகள் வந்திருக்கும் என்றால்கூட கொண்டாடியிருக்கவே செய்திருப்போம். ஆனால் அப்படி எந்த ஒரு இடத்திலும் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளாத, இன்னும் சொல்லப் போனால் இத்தகைய அடையாளங்களுக்கு எதிராகவே வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் தன்னை பொறுத்தி வெளிப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய எதிர்வினைகள் வெளி வரும் போது அதைக் கொண்டாடி வரவேற்று வாழ்த்துவது கடமையாகும்.

                                                                      1

அது ஒரு புத்தக வெளியீடு. 

காரிலிருந்து இறங்கி அரங்கம் நோக்கி நடக்கிறார் அவர். உள்ளே நுழைகிறவரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று ஒருவர் தடுக்கிறார். ஏன் என்று கேட்டபோது வேட்டி கட்டியவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்கிறார்.

அரங்கின் உள்ளே நுழைய இருந்தவர் ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி. அவரைத் தடுத்தவர் அந்த அரங்கத்தின் வாயிற் காவலர்.

இதேமாதிரியான ஒரு அனுபவம் டிராஃபிக் ராமசாமி அவர்களுக்கும் அதே அரங்கத்தில் ஒருமுறை நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.

அந்த அரங்கம் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் பில் உள்ளது. அந்த கிளப் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப் பட்டது. அப்போது எல்லோரும் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதைக் காட்டிலும் இந்தியர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியோடு அப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்தது.

அப்படியும் வேட்டி கட்டியவர்களை உள்ளே விடக் கூடாது என்று சொல்லவில்லை. கண்ணியமான உடையோடு உள்ளே வரவேண்டும் என்றுதான் சொல்கிறது. 

அப்படி என்றால் வேட்டி கண்ணியமான உடை இல்லையா என்ற நியாயமான கேள்வியோடு, வேட்டியை நிராகரிக்கும் எந்த கிளப்புகளுக்கும் தமிழ்நாட்டில் அனுமதி இல்லை என்று அறிவித்தார்.

இதை வணங்கி வரவேற்கிறோம்.

                                                                  2

இரண்டாவதாக பன்முகத்தன்மையை சிதைப்பது என்ற தனது மறைமுக செயல்திட்டத்தை பி.ஜே.பி கையிலெடுத்தபோது முதல்வர் ஆற்றிய எதிர்விணை.

சமஸ்கிருத வாரம் கொண்டாடுமாறு தனது பள்ளிகளுக்கு மத்திய அரசு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையின் துவக்கத்தில் எல்லா இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதம் என்று இருப்பதாக அறிய முடிகிறது.

இதனை அறிந்ததும் சமஸ்கிருதத்தின் மீது அளப்பற்ற பற்று வைத்திருக்கக் கூடிய நமது முதல்வர் அவர்களது எதிர்விணையானது மிகச் சரியானது.

இந்தியா போன்ற பலமொழிகள் புழங்கக் கூடிய, பன்முகதன்மை கொண்ட ஒரு நாட்டில் இத்தகைய முயற்சியானது தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று சொன்னதோடு அதை தன் கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துளார்.

சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்கிற ஒரு பிம்பத்தைக் கட்டமைப்பதென்பது ஆர்.எஸ்.எஸ் சின் திட்டம். அதைத்தான் மத்திய அரசு இப்போது கையிலெடுத்திருக்கிறது.

இந்த சுற்றரிக்கைகையை போகிற போக்கில் எடுத்துக் கொள்ளமுடியாது. இது மிகவும் விஷமத் தனமானது. மட்டுமல்ல இது ஏதோ மொழி சம்பந்தப் பட்ட பிரச்சினை மட்டுமன்று. சமஸ்கிருதம் தேவபாசை என்றும் தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிகள் நீஷ பாஷைகள் என்றும் சொல்பவர்களால் இது முன்னெடுக்கப் படுவதால் இதற்குள் மதம் நிச்சயமாக இருக்கிறது.

இதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இல்லாத பட்சத்தில் உணர்ச்சிவசப் படாமல் தமிழ்ச் சமூகம் மிகுந்த திட்டமிடலோடு எதிர்கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறோம்.

முதல்வரின் சரியான நிலைபாட்டிற்காக மீண்டும் ஒருமுறை அவருக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறோம்

Saturday, July 19, 2014

நிலைத் தகவல் 59

பயணங்களின் ரசிகன் நான்.

ஒரு தாய் மாதிரி பயணம் நிறைய தந்திருக்கிறது எனக்கு.

பலருக்கு களைப்பைத் தரும் பயணங்கள் எனது களைப்பை சுத்தமாய் துடைத்துப் போடுகின்றன. 

புத்தனுக்கு போதி மரமென்றால் எனக்கு வைப்பர் வேலை செய்யாத அரசுப் பேருந்து என்று ஒரு முறை நான் எழுதியது சத்தியம்.

ஒரு முறை யகமாயினி சித்தன் என்னிடம் உனது பேருந்து பயணங்கள் குறித்து ஒரு தொடர் எழுதேன் என்றார். எழுத இருந்த போது நாங்கள் யுகமாயினியை நிறுத்த வேண்டியதாயிற்று.

நேற்று முன்தினம் ஒரு வேலையாக கடலூர் போகவேண்டி இருந்தது.

உளுந்தூர்பேட்டையில் மூன்று பேர் அமரும் இருக்கையில் இடம் கிடைத்தது. ஜன்னலோரத்தில் ஒரு இளைய பெண், அடுத்து அவரது கணவர், அவருக்கடுத்தது நான்.

உழைத்துப் பிழைக்கிற இணையராகத் தெரிந்தார்கள்.

மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டே வந்தார்கள். அவர்களது நீண்ட உரையாடலில் எந்த இடத்திலும் சலிப்போ, வருத்தமோ, கவலையோ அயற்சியோ எதுவுமே தெரியவில்லை. மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது குதூகலம் எனது வியர்வை முழுவதையும் துடைத்துப் போட்டு உற்சாகப் படுத்தியது.

அடுத்தவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பது தவறுதான். அதுவும் இளைய தம்பதியரின் உரையாடலைக் கேட்பது என்பது தவறோ தவறு. ஆனாலும் இவர்கள் பேசுவது தானாகவே உள்ளேறியது.

ஒரு இடத்தில்,

இங்க இருந்து போறப்ப ஆன காச விட வாரப்ப ஆகிற பேருந்து கட்டணம் அதிகம் என்பதாக அந்தப் பெண் கூறவே, அதெப்படி போக ஒரு காசு வார ஒரு காசு ஆகும் என்று அந்தப் பையன் சொன்னார். இதே உரையாடல் பலமுறை தொடர்ந்தது.

அந்தப் பெண் கணக்கெல்லாம் சொல்லி நிறுவ முயன்றபோது அந்தப் பையன் சொன்னார்,

“போறதுக்கு கொறச்ச வாரதுக்கு அதிகம்கிற, சரிவிடு இனி போறதோட நிறுத்திக்குவோம், வர வேண்டாம்”

அந்தப் பெண் வெட்கத்தோடு அவரை ஒருமாதிரி பார்த்துக் கொண்டே அவரது தொடையில் அதைவிடவும் வெட்கத்தோடு தட்டினார். நான் பார்ப்பதை பார்த்தவுடன் வெட்கம் இன்னும் அதிகரித்தது.

” அந்த அண்ணனுக்கும் சிப்ஸ் கொடுப்பா. எடுத்துக்கண்ணா”

எடுத்துக் கொண்டேன்.

ரெண்டு பேரும் இப்படியே மகிழ்ந்து நீண்டு வாழ வேண்டும்.

Friday, July 18, 2014

நிலைத் தகவல் 58

நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது .

முன்பெல்லாம் எங்களூரில் வருடா வருடம் "கட்டபொம்மன் "நாடகம் நடைபெறும். எங்களூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாய் தலையணையோடு நாடகம் பார்க்க. வந்துவிடுவார்கள்.

உரையாடல்கள் பாடல்களாகவே இருக்கும் . ஆச்சரியம் என்னவென்றால் கட்டபொம்மனாய் நடித்தவரிலிருந்து பல நடிகர்களுக்கு எழுதப் படிக்கவே தெரியாது. எப்படி அவ்வளவு நீளமான வசனங்களை மனப்பாடம் செய்து அவ்வளவு நேர்த்தியாக பிரயோகம் செய்தார்கள் என்பது இன்றும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

"போனவருஷம் இந்த வசனத்ததானே குட்டியண்ணன் மறந்துபோனான்" என்று பெரிசுகள் பேசிக்கொள்வதையும் கேட்டிருக்கிறேன் .

அந்த அளவிற்கு வசனங்களும் நாடகமும் மக்களோடு ஒன்றிப் போயிருந்தன.

நாகேஷின் தீவிர ரசிகரான எங்கள் அப்பா “வைத்தி பாத்திரத்த நாகேஷ் செய்ததைவிட குட்டியண்ணன் சலம்புவாண்டா. பாடி லாங்க்வேஜ்ல நாகேஷுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்ல அவன்” என்பார். 

எழுதப் படிக்கத் தெரியாதவரிடமும் இலக்கியத்தை கொண்டுசேர்த்த ஜனநாயக வடிவம் இசை .

Thursday, July 17, 2014

நிலைத் தகவல் 57

எந்த ஒரு அணி தங்களது இறுதிப் போட்டிக்கான கனவை துவைத்து தூரப் போட்டிருந்ததோ அந்த அணி இறுதிப் போட்டியில் வெற்றிபெற ஆராவரித்துக் கொண்டாடிய மக்களை இந்த இறுதிப் போட்டியில் பார்த்தோம்.

அரையிருதியில் பிரேசிலை வறு வறு என்று வறுத்து எடுத்திருந்தது ஜெர்மெனி. அந்த வகையில் பிரேசிலின் இறுதிப் போட்டிக் கான கனவை தகர்த்திருந்ததே ஜெர்மெனிதான்.

ஆனால் இறுதிப் போட்டியில் ஜெர்மெனியை ஆரம்பம் முதலே உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தனர் பிரேசில் ரசிகர்கள். உள்ளூர் திரளின் ஆதரவை இந்த வகையில் அனுபவித்தது ஜெர்மெனி. ஜெர்மெனி வென்றதும் பிரேசில் ரசிகர்களும் ஜெர்மெனி ரசிகர்களும் கட்டித் தழுவி மகிழ்ந்தனர்.

காரணம் எளிதானது. கால்பந்தைப் பொறுத்தவரை அர்ஜெண்டினாவும் பிரேசிலும் பரம வைரிகள். கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் மாதிரி.

ஆக, எதிரிக்கு எதிரி நண்பன் என்பது அரசியலுக்கு மட்டுமல்ல, விளையாட்டுக்கும் பொருந்தும்.

Wednesday, July 16, 2014

நிலைத் தகவல் 56

வழக்கமான மழையளவில் பாதிகூட இந்த ஆண்டு கிடைக்காது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . 

நாட்டின் உணவுத்தேவையில் பெருமளவை ஈடுசெய்யும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் பருவமழை பொய்க்கும் என்றும் , வழக்கமாக பெய்யும் மழையளவில் பாதிக்கும் குறைவான அளவிலேயே மழையளவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இதை மத்திய அரசும் பாராளுமன்றத்தில் பதிவு செய்துள்ளது .

நீர்மேலாண்மை குறித்து இப்போதேனும் சரியானபடிக்கு அக்கறை செலுத்தவில்லையென்றால் இந்த ஆண்டு 500 மாவட்ட்ங்கள் வறண்டு போகும் என்ற நிலை இன்னமும் வலுப்படும்.

கூடிய சீக்கிரம் மொத்த இந்தியாவும் வறண்டு போகும்

Tuesday, July 15, 2014

நிலைத் தகவல் 55

குழந்தைகளுக்கு பாலியல் இம்சைகளை கொடுத்த சாமியார்களுக்காக பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் போப் அவர்கள் .

இரண்டு காரியங்களை அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் ,

1. அந்தப் பாதிரியார்களுக்காக மன்னிப்பைக் கோருவதற்கு பதிலாக அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவது .

2. பாதிரிமார்கள் திருமணம் செய்துகொள்வதற்கு திருச்சபை அனுமதிப்பது.

எதைவிடவும் உயர்வாக நீங்கள் மதிக்கும் வேதப்புத்தகமே " மனிதன் தனித்திருப்பது பாவம். " என்றுதானே சொல்கிறது 

Monday, July 14, 2014

நிலைத் தகவல் 54


சபையில் ஏறத்தாழ பெரும்பான்மைக்கு அதிகமானோர் தொழிலாளிகளைப் பற்றி அக்கறைப் படாதவர்கள். முதலாளிகளின் கூட்டாளிகள். இதை உணர்ந்துகொண்ட ராஜஸ்தான் அரசு காற்று உள்ளபோதே சாதித்துக் கொள்ளவேண்டும் என்று இறங்கியுள்ளது என்பதை ஜூன் 16 தி இந்து அம்பலப் படுத்தியுள்ளது.

தொழிலாளிகளுக்கு எதிரான மூன்று சட்டத் திருக்கங்களைக் கோரி கையேந்தி இருக்கிறது அது.

1. 100 தொழிலாளிகள் வேலை பார்த்தாலே போதும், அந்த நிறுவனம் தொழில் தகறாறு சட்டத்தின் கீழ் வந்துவிடும். ராஜஸ்தான் அரசு அதை திருத்தி 300 தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனக்கள் மட்டுமே தொழில் தகறாறு சட்டத்தின்கீழ் கொண்டுவரப் படவேண்டும் என்று கோருகிறது.

இது தொழிலாளிகளுக்கு எதிரானதும் முதலாளிகளுக்கு ஆதரவானதும் ஆகும்.

2. 20 ஒப்பந்தத் தொழிலாளர் பணி புரிந்தாலே அந்த நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.இந்த வரம்பை 50 தொழிலாளர்கள் என்ற அளவிற்கு நகர்த்த வேண்டும் என்கிறது.

3. 10 தொழிலாளி வேலை பார்த்தாலே அந்த நிறுவனம் ஆலைத் தொழிலாளர் சட்டத்தின்கீழ் வந்து விடும். இதையும் 20 என்று நகர்த்தக் கோறுகிறது.

இது மூன்றும் நிறைவேறிவிட்டால் தொழிலாளிக்கு இப்போதிருக்கும் குறைந்த அளவிலான பாதுகாப்பும் இல்லாமல் போகும்.

இதை பி.ஜே.பி, காங்கிரஸ், இன்னபிற வலதுசாரி கட்சிகள் ஆதரிக்கவே செய்யும்.

பலமற்றுப் போன இந்தச் சூழலில் சபையில் இடதுசாரிகளின் பணி மிகக் கடுமையாகத்தான் இருக்கும்.

சபைக்கு வெளியே மக்களுக்கான வேலை அதிகம் என்பதை உணரவேண்டும்.

தொழிலாளிகள் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற உண்மையை உணர்ந்தாலே போதும் நாம் களத்திற்கு வந்துவிடுவோம்.

Sunday, July 13, 2014

குட்டிப் பதிவு 1

பிரதமரும் ராகுலும் அவையில் தூங்குவது போல வந்துள்ள படங்கள் உண்மையெனில் இவர்கள் கற்றுக் கொள்ளவேண்டியது கண்களை திறந்தபடி தூங்கும் கலையைத்தான்

Saturday, July 12, 2014

குட்டிப் பதிவு

நீங்க கம்யூனிஸ்டாமே சார் என்று கேட்ட மாணவியிடம் சொன்னேன், இல்லை மகளே, கம்யூனிஸ்டாக வாழ்வதற்கான முயற்சியில் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறேன். விடாமல் முயற்சித்துக் கொண்டுமிருக்கிறேன்.

Friday, July 11, 2014

நிலைத் தகவல் 53

அந்த நிறுத்தத்தில் நகரப்பேருந்துகளைத் தவிர புறநகர் பேருந்தெதுவும் நிற்காது . மிகவும் வயதான பெரியவர் ஒருவர் கைநீட்டவே மனிதாபிமானத்தோடு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.

"எங்கங்கய்யா?" என்ற நடத்துனரிடம் "இருங்கலூர் கைகாட்டி" என்றார்.

சென்னையிலிருந்து மதுரை போகும் வண்டி அது.

சென்னையிலிருந்து மதுரை போற வண்டி கைகாட்டியெல்லாம் நிற்க முடியுமா? என்று கேட்ட நடத்துனரிடம் அகரத்துல பஸ் நிக்கும்னா இருங்கலூர் கைகாட்டியிலும் நிக்கனும். அகரத்தவிட எங்க ஊர் எதுல கொறஞ்சு போச்சு? என்றதும் நடத்துனரும் ஓட்டுனரும் சிரித்து விட்டனர்.

இருங்கலூர் கைகாட்டியில் பேருந்து நின்றது

Wednesday, July 9, 2014

நிலைத் தகவல் 52

ஒரு ஊரில் ஒருவன் துப்பாக்கி ஃபேக்டரி வைத்திருந்தான்.

தாறு மாறான எண்ணிக்கையில் துப்பாக்கிகள் தயாராயின. அவற்றை விற்றால்தான் ஆகுமென்ற நிலை. என்ன செய்வதென்று யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு தெருவின் காரியக் காரரை அழைத்து விருந்து வைத்தான். விருந்தில் மது, கோழி, மீன், இரால் என்று அமர்க்களப் படுத்தினான். விருந்தில் சொக்கிப் போடயிருந்தவனிடம் அவனது பக்கத்து தெருக்காரர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது என்று போகிற போக்கில் போட்டு வைத்தான்.

ஒரே ஊர்க்காரனிடம் எச்சரிக்கை எதற்கு என்றவனிடம் ஒரே ஊர் என்றாலும் ஜாதியும் தெருவும் வேறல்லவா என்றான். கவனிக்கத் தொடங்கியவனிடம் பக்கத்து தெரு காரியக் காரன் இன்னொரு ஊரில் இருந்து நூறு துப்பாக்கிகளை வாங்கி வைத்திருப்பதாகக் கொளுத்திப் போட்டான். ஏதோ ஒரு புள்ளியில் இவர்களுக்கும் அவர்களுக்கும் வாய்த் தகறாறு என்று வந்தால் இவர்களுக்கு எதிராக அவன் துப்பாக்கியைப் பயன்படுத்தக் கூடும் என்று ஃபேக்டரிக்காரன் சொன்னபோது உள்ளே போயிருந்த சீமைச் சரக்கு பற்றிக் கொண்டடது.

அவர்கள் நூறு துப்பாக்கி வாங்கினால் தங்களால் 200 வாங்க முடியுமளென்று சொன்னவனை துப்பாக்கி குடோனுக்கு அழைத்துப் போனான். பக்கத்து தெருக்காரனின் சைக்கிளில் பஸ்ஸ்டான்ட் வந்து பஸ் ஏறி வந்தவன் திரும்பிப் போகும்போது மனசு நிறையப் பகையோடும் பார்சல் பார்சலாய் துப்பாகிகளோடும் திரும்பினான்.

பக்கத்து தெருக்காரனிடமும் இதே மாதிரி பேசி அவனுக்கும் இவனேதான் துப்பாக்கிகளை விற்றிருந்தான். எந்த வித சர்வீஸ் சார்ஜும் இல்லாமலே அவர்களுக்கிடையே பகையினை உருவாக்கினான்.

ஊர்களுக்கும் ஊர்களுக்கும் இடையில் பகைகளை உருவாக்கி துப்பாக்கிகளை விற்றான்.

எல்லோரும் சுட்டுக் கொண்டு செத்தார்கள். மகிழ்ந்து விரிந்தான்.

காசில்லாது யாரேனும் தவித்தார்களேயானால் கடனுக்கு அவர்களுக்கு துப்பாக்கிகளை விற்றான். கடனுக்கு வாங்கியவர்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும் எவ்வளவு ஆய் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான்.

அமோகமாய் துப்பாக்கி வியாபாரம் களைகட்டிய போது அவனது பிள்ளைகளும் உறவினர்களும் இன்னும் இருக்கிற உள்ளூர்க்காரர்களும்கூட துப்பாக்கிகளை வாங்கினார்கள்.

சும்மாவே வைத்திருக்க முடியாமல் துப்பாக்கிகளை அவர்களுக்குள்ளாகவே திருப்பத் தொடங்கினார்கள். பள்ளிகளுக்குப் போய் மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டார்கள். பள்ளி போரடித்ததும் மருத்துவமனைகளுக்கு போய் சுட்டார்கள்.

நமக்குள்ளேயே சுட்டுக் கொள்ளக் கூடாது என்று சொல்லிப் பார்த்தான். யாரும் கேட்பதாக இல்லை.

ஒரு செவ்வாயன்று தன்னால் தன் மண்ணில் துப்பாக்கி கலாச்சாரத்தை நிறுத்த முடியவில்லை என்றும் தம் மக்கள் இது விசயத்தில் ஆன்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் புலம்ப ஆரம்பித்தான்.

இது இப்படித்தான் ஆகும் என்றாலும் எந்த மக்களும் இப்படி ஒருவருக்கொருவர் சுட்டுக் கொண்டு சாவதில் நமக்கும் ஏகத்துக்கும் கவலைதான். அவர்கள் தங்களைத் தாங்களே ஆன்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றே நாமும் கேட்டுக் கொள்கிறோம்.

பி.கு

இது ஒரு புனைவுதான். ஒபாமாவின் செவ்வாய்க் கிழமை புலம்பலோடு யாரேனும் இதைப் பொருத்திப் பார்த்தால் நான் அதற்குப் பொறுப்பல்ல.

Tuesday, July 8, 2014

நிலைத் தகவல் 51

ஜீவசாந்தி என்றொரு அறக்கட்டளை இருக்கிறது. அநேகமாக எளிய தோழர்களால் நடத்தப் படும் அமைப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் அவர்கள் செய்யும் காரியம் அவர்களைக் கை எடுத்துக் கும்பிட்ட வாறு வாழ்த்தச் சொல்கிறது.

தெருக்களில், மருத்துவமனைகளில் மரணிக்கும் யாருமற்றவர்களை நெஞ்சு நிறைந்த ஈரத்தோடு அடக்கம் செய்கிறார்கள்.

Jeeva Shanthy Trust பற்றி விரிவாய் எழுத ஆசை. அவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் 9842459759 இந்த எண்ணில் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.

அவர்களது இணைப்பைத் தருகிறேன். வாசித்து அவர்களோடு தொடர்பு கொண்டு வாழ்த்துங்கள். உதவ முடிந்தவர்கள் உதவலாம். யார் கண்டது நாமே அவர்களோடு இணைந்து வேலை பார்க்கலாம்.

அல்லது நமது பகுதிகளில் இதை செய்யத் துவங்கலாம்.

https://www.facebook.com/jeevashanthy.trust?fref=nf

Monday, July 7, 2014

நிலைத் தகவல் 50

ஜீவசாந்தி என்றொரு அறக்கட்டளை இருக்கிறது. அநேகமாக எளிய தோழர்களால் நடத்தப் படும் அமைப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் அவர்கள் செய்யும் காரியம் அவர்களைக் கை எடுத்துக் கும்பிட்ட வாறு வாழ்த்தச் சொல்கிறது.

தெருக்களில், மருத்துவமனைகளில் மரணிக்கும் யாருமற்றவர்களை நெஞ்சு நிறைந்த ஈரத்தோடு அடக்கம் செய்கிறார்கள்.

Jeeva Shanthy Trust பற்றி விரிவாய் எழுத ஆசை. அவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் 9842459759 இந்த எண்ணில் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.

அவர்களது இணைப்பைத் தருகிறேன். வாசித்து அவர்களோடு தொடர்பு கொண்டு வாழ்த்துங்கள். உதவ முடிந்தவர்கள் உதவலாம். யார் கண்டது நாமே அவர்களோடு இணைந்து வேலை பார்க்கலாம்.

அல்லது நமது பகுதிகளில் இதை செய்யத் துவங்கலாம்.

https://www.facebook.com/jeevashanthy.trust?fref=nf

Sunday, July 6, 2014

9

நனவாகாமல் போன ஒவ்வொரு புள்ளியிலும் 
துளிர்த்துக் கொண்டேதான் இருக்கிறது 
அடுத்த கனவு

8

மலம் அள்ளுவதும்
கீழிறங்கி
சாக்கடை கசடள்ளி சுத்தம் செய்வதும்
என்னை எரித்த பிறகும் தொடருமானால்
இந்தக் கொடுமைக்கு எதிராக
சாராய நெடியும் கோவமுமாய்
கலந்து வரும்
அவனது கெட்ட வார்த்தைகளாகவும்
அவன் காறி உமிழும் எச்சிலாகவும்
மாறியிருப்போம

என் கவிதைகளும் நானும்

நிலைத் தகவல் 49

எந்த ஒரு வேலைக்கும் குறைந்த பட்ச தகுதி என்று ஒன்று உண்டு.

தனது தகுதியை தவறாகக் குறிப்பிட்டோ அல்லது போலிச் சான்றுகளைத் தயாரித்தளித்தோ ஒரு வேலைக்கு வருவது என்பது கிரிமினல் குற்றம்.

ஒரு இளநிலை உதவியாளர் இப்படி ஒரு காரியத்தை செய்து அந்த வேலைக்கு வந்திருப்பார் என்பதற்கான முகாந்திரம் கிடைக்கும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார். அந்த வழக்கு முடிந்து அவர் நிரபராதி என்று தன்னை நிரூபித்துக் கொள்ளும் வரை பணியிடை நீக்கமும் தவறும் பட்சத்தில் சிறைத்தண்டனையும் நிரந்தரப் பணியிழப்பும் வந்து சேறும்.

இந்தக் காரியத்தை செய்திருப்பவரொரு மதிப்புமிக்க பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்.

பல்கழைக் கழகத்தில் இவர் செய்த ஊழல், அத்துமீறல், ஊழியர்களை பலி வாங்கியது, மாணவர்களை நசுக்கியது போன்றவற்றை விடுங்கள், கல்யாணி அவர்கள் அவர் கொடுத்த அவர் தகுதி குறித்த பொய்யான விவரத்திற்காகவே கைது செய்யப்பட வேண்டியவர்.

பணிநீக்கமே சாத்தியமில்லாதபோது நீதியாவது கைதாவது ?

Saturday, July 5, 2014

7

நீரோடியதற்கான தடயங்களே காணக் கிடைக்காத 
காவிரியெங்கும் 
விரவிக் கிடக்கின்றன 
டயர்த் தடங்கள்

Thursday, July 3, 2014

6

சடச் சட என்ற சத்தம் கேட்டு 
வெளியே வருவதற்குள் 
நனைகிற ஆசையை 
உலர்த்திவிட்டுப் போயிருந்தது 
மழை

நிலைத் தகவல் 48

அவர்களும் நம்மைப் போலவே ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்கள்தான்.

மகனாகவோ, மகளாகவோ வீட்டிற்குள் வளைய வளைய வந்தவர்கள்தான்.

ஏதோ ஒரு புள்ளியில் தாம் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்பதை கண்டறிந்த நொடியில் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். 

வளர்த்த நாய்க்குட்டி காணாமல் போனாலே பதறிப் போய் தெரு தெருவாய் தேடுபவர்கள் காணாமல் போன தாங்கள் பெத்து வளர்த்த இவர்களைத் தேடுவதே இல்லை.

வீட்டை விட்டு வெளியேறும் அந்தக் கணத்தில் வாக்குரிமை உள்ளிட்ட சகல உரிமைகளும் இவர்களுக்கு இல்லாமல் போகிறது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சாசாதகமான ஒரு தீர்ப்பின் உதவியோடு ஏழாண்டு கால போராட்டத்தின் விளைவாக ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கிறார் அக்கய் பத்மஷாலி.

இந்த வகையில் ஓட்டுனர் உரிமம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெருகிறார்.

வாழ்த்துக்கள் அக்கய்.

எனக்கு ஒரு தம்பி ஒரு திருநங்கை என்று எந்த வித நெருடலுமின்றி சொல்லும் காலம் என் மரணத்திற்குமுன் வந்தால் மகிழ்வோடு சாவேன்

Wednesday, July 2, 2014

நிலைத் தகவல் 47

இரண்டு விஷயங்கள் என்னை நெகிழ்த்திப் போட்டன இன்று.

ஒன்றை தோழர் Shah Jahan தந்திருந்தார். இன்னொன்றை எங்கள் மாவட்ட ஆட்சியர் செய்திருந்தார்.

ஷாஜி பகிர்ந்திருந்தது தனக்கும் மருத்துவர் அசோகனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறித்த M.m.அப்துல்லா அவர்களின் பதிவின் சாரம்.

மூளைச் சாவு அடைந்திருந்த தனது மகனின் உறுப்புகளை தானமளித்து உயிர்களைக் காப்பாற்றிய ஈர மனிதர் மருத்துவர் அசோகன்.

அவர் இறந்து போன தனது உறவினரின் கண்களைத் தானமாகப் பெற்று மருத்துவ மனைக்கு அனுப்ப, அவை அன்றே பயன்படுத்தப் பட இறந்தவரின் சடலம் புதைக்கப் படும் முன்பே இருவருக்கு பார்வை கிடைத்ததைப் பற்றிய அப்துல்லாவினுடைய உரையாடலைத்தான் ஷாஜி தந்திருந்தார்.

அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அன்று பார்த்து மழை. குழி தோண்ட சாக்கடை நீர் ஊற்றெடுக்கிறது. வேறு வழியின்றி சாக்கடை நீருக்குள்ளேயே புதைக்கிறார்கள். அப்போது மருத்துவர் சொன்னாராம்,

“ நல்ல வேளை அவரது கண்களை இந்த சாக்கடை நீரிலிருந்து காப்பாற்றி விட்டேன்”

#

பெரம்பலூருக்கு அருகே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களைப் பற்றிய தகவல் கிடைத்ததும் அதிகாரிகளை அனுப்பி அந்தச் சிறுவர்களை மீட்டு உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் எங்கள் மாவட்ட ஆட்சியர் தரேஷ்.

“ பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்றாள் கிழவி

பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் படி என்கிறாள்.

பிச்சையிலிருந்து மீட்டெடுத்து படிக்க வாய்ப்பளித்திருக்கிறார் தரேஷ்.

#

1. நல்லதைப் பகிர்ந்த ஷாஜஹான்
2. அப்துல்லா
3. மருத்துவர். அசோகன்
4. மாவட்ட ஆட்சியர் தரேஷ்

#

நாலு பேருக்கும் நன்றி.

17 ஆழ்மனக் குறிப்புகள்




“மெர்லின்
நீ சபிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததற்காய்
இங்கே ஒரு ‘டாடி’ அழுகிறான்”

ஏறத்தாழ எண்பத்தி எட்டு வயதான ஒரு மனுஷியின் மரணத்திற்காக முப்பதே ஆன ஒரு இளைஞனின் கண்ணீர் இது. இருபதுகளின் தொடக்கத்தில் பிறந்த ஒரு மனுஷியை, எண்பதுகளின் இறுதியிலோ தொண்ணூறுகளின் தொடக்கத்திலோ பிறந்த ஒரு இளைஞன் மகளே என்று விளிக்கிறான்.
”தாயே” என்றோ “பாட்டியே” என்றோ விளித்திருந்தால் பொறுத்தமாயிருந்திருக்கும். தொண்ணூறை நெருங்கும் ஒரு கிழவிக்கு முப்பதே முப்பது ஆன ஒரு இளைஞன் தந்தையாகிப் போகிறானே, இதைப் பக்குவம் என்பதா? இல்லை பித்துக்குளித் தனம் என்பதா? உதயகுமாரின் வலைதளமான “ஆழ்மனக் குறிப்புகள்” உள்ளே பயணித்துப் பார்த்தால் இது வறட்டுத் தனமான பக்குவமோ, பித்துக் குளித்தனமோ இல்லை ஈரஞ்சொட்டும் உண்மை என்பது புரியும்.

”உலக ஆண்களின் கனவுக் கன்னியாக,கவர்ச்சிக் குறியீடாக பாலுணர்ச்சியை வடிக்கும் வடிகாலாக உலகத்தால் மிகத் தவறாக அறியப்பட்ட துரதிர்ஷ்டக்காரி மெர்லின்” என்று உதயகுமார் எழுதுவது கொஞ்சமும் கலப்படமற்ற உண்மை.

உலகமே அகலமாய் கண்திறந்து பார்த்த அந்த அழகு தேவதை மரித்தபோது கேட்க ஆளற்று அனாதையாய் மூன்று நாட்கள் பிணவறையில் கிடந்த மெர்லினது உடல் குறித்து உதயகுமார் எழுதுவதைப் படிக்கும்போது நம்மை அறியாமல் நம் கண்கள் சுரக்கும்.

“பெருக்கெடுத்து ஓடத்தொடங்கிய நதி பாதி வழியில் ஆவியானதைப் போல் காணாமல் போன வாழ்க்கைக்கு சொந்தக்காரி” என்று உதயகுமார் எழுதுவதைவிட மெர்லினது வாழ்க்கையை சொல்லிவிட முடியாது.
தினமும் தினமும் கடித்துக் குதறப்பட்ட போதும் தான் சந்திக்கும் ஒவ்வொரு ஆணிலிருந்தும் தந்தையைத் தேடியிருக்கிறாள் மெர்லின். இன்னும் சொல்லப்போனால் தான் மணந்துகொண்ட அனைத்து ஆண்களையுமே அவள் “ டாடி “ என்றே அழைத்திருக்கிறாள். மெர்லினின் தாய்க்கே இவளது தந்தை யாரெனத் தெரியாது. அதனால்தான் தந்தைக்காக ஏங்கி அலைந்திருக்கிறாள். வாழ்ந்த காலமெல்லாம் தந்தையின் பாசத்திற்காக ஏங்கி அலைந்த ஒரு பெண்ணிற்கு அவளது பேரன் வயதில் ஒரு தந்தை வாய்த்தது அவளுக்குத் தெரியாது போனதுதான் கொடுமையினும் கொடுமை.

ஃப்ராய்ட், ஷேக்ஸ்பியர் என்று வாசித்துக் குவித்து யாரேனும் அது குறித்தெல்லாம் தம்மிடம் பேசமாட்டார்களா என்ற அவளது ஏக்கத்தை ஒரு முப்பது வயது இளைஞன் புரிந்துகொண்டு அது குறித்து அவளது தொண்ணூறு வயது மகளோடு அசைபோடத் தயாராயிருக்கிறான். அவள்தான் இல்லை.
தொண்ணூறு வயது கிழவிக்கு முப்பது வயது இளைஞன் தந்தயாக முடியும் என்பதை உரத்து சொல்கிறது “ ஆழ்மனக் குறிப்புகள் “
” சடசடவென பொழிகிறது மழை

ஆங்கோர் மரத்தில் கூடுகட்டி வாழும்
ஊர்க்குருவியைப் பற்றி
மழைக்கு எந்த லட்சியமும் இல்லை

அடித்து வீசுகிறது காற்று

மெல்லிய மல்லிக்கொடி
ஒடிந்து வீழ்வது பற்றி
காற்றுக்கென்ன விசனமிருக்கப் போகிறது

எது ஒன்றும் அதன் அதன்
தன்னியல்பிலேயே இருக்கிறது

இதோ என் கூட்டின் மரக்கதவுகளை
கூர்மூக்கால் சுரண்டிக் கொண்டிருக்கும் அந்தப் பறவைக்கு சொல்லுங்கள்
கதவை மூடிக் கொண்டழுவது என் இயல்பென”

அன்பை எப்படி வெளிப்படுத்தலாம்? இதமான ஸ்பரிசம், கனிந்து கசியும் ஒரு சன்னமான பார்வை, அன்பொழுகும் ஒரு கடிதம், ஒரு முத்தம், இப்படி ஏதேனும் ஒன்றின் மூலம் நமது அன்பை வெளிப்படுத்த முடியும். உதயகுமார் அழுகையை தனது அன்பைக் கொண்டு சேர்க்கும் ஊடகமாகக் கையாள்கிறார்.

இவரது படைப்புகளை மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு அவை இவரது காதலிக்காக எழுதப் பட்டவையாகத் தோன்றும். ஆனால் அவை அவரது நண்பர்களுக்கானவை. நண்பர்களுக்கான தனது அன்பை கண்ணீரில் கறைத்துத் தருகிறார்.

நம்மாழ்வார் மறைந்த பொழுது இவர் எழுதிய ஒரு பதிவு குறிப்பிட்டுப் பேசவேண்டிய ஒன்று.

வேப்பமரத்தை அமெரிக்கா சொந்தம் கொண்டாடி ஒவ்வொரு வேப்ப மரத்திற்கும் அவற்றை வைத்திருக்கும் நாடு தனக்கு கணக்கிட்டு கப்பம் கட்டவேண்டும் என்று சொன்னபோது சர்வதேச நீதிமன்றம் சென்று அதன் உரிமையை நமக்கு மீட்டெடுத்துக் கொடுத்தவர் நம்மாழ்வார் என்ற உண்மையை சொல்கிறார்.

காடும் அதன்வழியே பெருக்கெடுத்து ஓடும் நீருமே மக்களுக்குப் பாதுகாப்பு..அவற்ரை அழித்து சாலைகளைப் போடுவதென்பது எந்த விதத்திலும் சரியாகாது என்பதை நம்மாழ்வார் ஊடாக இந்த வலை நமக்கு சொல்கிறது.

தோன்றி வெறும் முன்னூறு ஆண்டுகளேயான அமெரிக்காவிடம் பதினைந்தாயிரம் ஆண்டுகால விவசாயப் பாரம்பரியமுள்ள நாம் விவசாய ஆலோசனைகள் கேட்பது நியாயமா என்ற நம்மாழ்வாரின் கேள்வியை இந்த வலை நம்முள் தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருக்கிறது.

விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு வேறு தொழிகளுக்குத் தாவ வேண்டுமென பொருளாதாரப் புலி மன்மோகன் சொன்னபோது அது தற்கொலைக்கு சமம் என்று நம்மாழ்வார் சொன்னதை சொல்லி சிலாகிக்கிறார். அவரே தற்கொலைகளை நியாயப் படுத்துவது வலிக்கச் செய்கிறது. ஆத்மநாமின் தற்கொலையையோ அல்லது ஸ்டெல்லா ப்ரூசின் தற்கொலையையோ நாம் கொச்சைப் படுத்தவில்லை. ஆனால் இருவரும் மரணம் வரை வாழ்ந்திருக்க வேண்டும் என்றே ஆசைப் படுகிறோம். போகிற போக்கில் அன்பின் உச்சத்தை ஒரு தற்கொலையின் மூலம் வெளிப்படுத்தலாம் என்று உதயகுமார் என்ற இளைஞன் முடிவெடுத்துவிடுவானோ என்று இந்த அப்பனுக்கு கவலை இருக்கிறது.

”அதிகபட்ச எதிர்பார்ப்பு வேறொன்றுமில்லை
நேசம் ததும்ப ஒரு சொல்
இந்நாளை அழகாக்க ஒரு புன்னகை
இவ்வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கவென கொஞ்சமே கொஞ்சம் பிரியம்
இதுதான்
இவ்வளவேதான்”

என்று ஒரு கவிதை இருக்கிறது இந்த வலையில்.

சற்றும் உலராத ஈரம் சொட்டும் அன்பின் பாய்ச்சலும், அன்பிற்கான யாசித்தலுமே இந்த வலை நெடுகத் தென்படுகிறது.

அன்பை நேசிக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய வலை
http://nichalanam.blogspot.in/




இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...