“மெர்லின்
நீ சபிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததற்காய்
இங்கே ஒரு ‘டாடி’ அழுகிறான்”
ஏறத்தாழ எண்பத்தி எட்டு வயதான ஒரு மனுஷியின் மரணத்திற்காக முப்பதே ஆன ஒரு இளைஞனின் கண்ணீர் இது. இருபதுகளின் தொடக்கத்தில் பிறந்த ஒரு மனுஷியை, எண்பதுகளின் இறுதியிலோ தொண்ணூறுகளின் தொடக்கத்திலோ பிறந்த ஒரு இளைஞன் மகளே என்று விளிக்கிறான்.
”தாயே” என்றோ “பாட்டியே” என்றோ விளித்திருந்தால் பொறுத்தமாயிருந்திருக்கும். தொண்ணூறை நெருங்கும் ஒரு கிழவிக்கு முப்பதே முப்பது ஆன ஒரு இளைஞன் தந்தையாகிப் போகிறானே, இதைப் பக்குவம் என்பதா? இல்லை பித்துக்குளித் தனம் என்பதா? உதயகுமாரின் வலைதளமான “ஆழ்மனக் குறிப்புகள்” உள்ளே பயணித்துப் பார்த்தால் இது வறட்டுத் தனமான பக்குவமோ, பித்துக் குளித்தனமோ இல்லை ஈரஞ்சொட்டும் உண்மை என்பது புரியும்.
”உலக ஆண்களின் கனவுக் கன்னியாக,கவர்ச்சிக் குறியீடாக பாலுணர்ச்சியை வடிக்கும் வடிகாலாக உலகத்தால் மிகத் தவறாக அறியப்பட்ட துரதிர்ஷ்டக்காரி மெர்லின்” என்று உதயகுமார் எழுதுவது கொஞ்சமும் கலப்படமற்ற உண்மை.
உலகமே அகலமாய் கண்திறந்து பார்த்த அந்த அழகு தேவதை மரித்தபோது கேட்க ஆளற்று அனாதையாய் மூன்று நாட்கள் பிணவறையில் கிடந்த மெர்லினது உடல் குறித்து உதயகுமார் எழுதுவதைப் படிக்கும்போது நம்மை அறியாமல் நம் கண்கள் சுரக்கும்.
“பெருக்கெடுத்து ஓடத்தொடங்கிய நதி பாதி வழியில் ஆவியானதைப் போல் காணாமல் போன வாழ்க்கைக்கு சொந்தக்காரி” என்று உதயகுமார் எழுதுவதைவிட மெர்லினது வாழ்க்கையை சொல்லிவிட முடியாது.
தினமும் தினமும் கடித்துக் குதறப்பட்ட போதும் தான் சந்திக்கும் ஒவ்வொரு ஆணிலிருந்தும் தந்தையைத் தேடியிருக்கிறாள் மெர்லின். இன்னும் சொல்லப்போனால் தான் மணந்துகொண்ட அனைத்து ஆண்களையுமே அவள் “ டாடி “ என்றே அழைத்திருக்கிறாள். மெர்லினின் தாய்க்கே இவளது தந்தை யாரெனத் தெரியாது. அதனால்தான் தந்தைக்காக ஏங்கி அலைந்திருக்கிறாள். வாழ்ந்த காலமெல்லாம் தந்தையின் பாசத்திற்காக ஏங்கி அலைந்த ஒரு பெண்ணிற்கு அவளது பேரன் வயதில் ஒரு தந்தை வாய்த்தது அவளுக்குத் தெரியாது போனதுதான் கொடுமையினும் கொடுமை.
ஃப்ராய்ட், ஷேக்ஸ்பியர் என்று வாசித்துக் குவித்து யாரேனும் அது குறித்தெல்லாம் தம்மிடம் பேசமாட்டார்களா என்ற அவளது ஏக்கத்தை ஒரு முப்பது வயது இளைஞன் புரிந்துகொண்டு அது குறித்து அவளது தொண்ணூறு வயது மகளோடு அசைபோடத் தயாராயிருக்கிறான். அவள்தான் இல்லை.
தொண்ணூறு வயது கிழவிக்கு முப்பது வயது இளைஞன் தந்தயாக முடியும் என்பதை உரத்து சொல்கிறது “ ஆழ்மனக் குறிப்புகள் “
” சடசடவென பொழிகிறது மழை
ஆங்கோர் மரத்தில் கூடுகட்டி வாழும்
ஊர்க்குருவியைப் பற்றி
மழைக்கு எந்த லட்சியமும் இல்லை
அடித்து வீசுகிறது காற்று
மெல்லிய மல்லிக்கொடி
ஒடிந்து வீழ்வது பற்றி
காற்றுக்கென்ன விசனமிருக்கப் போகிறது
எது ஒன்றும் அதன் அதன்
தன்னியல்பிலேயே இருக்கிறது
இதோ என் கூட்டின் மரக்கதவுகளை
கூர்மூக்கால் சுரண்டிக் கொண்டிருக்கும் அந்தப் பறவைக்கு சொல்லுங்கள்
கதவை மூடிக் கொண்டழுவது என் இயல்பென”
அன்பை எப்படி வெளிப்படுத்தலாம்? இதமான ஸ்பரிசம், கனிந்து கசியும் ஒரு சன்னமான பார்வை, அன்பொழுகும் ஒரு கடிதம், ஒரு முத்தம், இப்படி ஏதேனும் ஒன்றின் மூலம் நமது அன்பை வெளிப்படுத்த முடியும். உதயகுமார் அழுகையை தனது அன்பைக் கொண்டு சேர்க்கும் ஊடகமாகக் கையாள்கிறார்.
இவரது படைப்புகளை மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு அவை இவரது காதலிக்காக எழுதப் பட்டவையாகத் தோன்றும். ஆனால் அவை அவரது நண்பர்களுக்கானவை. நண்பர்களுக்கான தனது அன்பை கண்ணீரில் கறைத்துத் தருகிறார்.
நம்மாழ்வார் மறைந்த பொழுது இவர் எழுதிய ஒரு பதிவு குறிப்பிட்டுப் பேசவேண்டிய ஒன்று.
வேப்பமரத்தை அமெரிக்கா சொந்தம் கொண்டாடி ஒவ்வொரு வேப்ப மரத்திற்கும் அவற்றை வைத்திருக்கும் நாடு தனக்கு கணக்கிட்டு கப்பம் கட்டவேண்டும் என்று சொன்னபோது சர்வதேச நீதிமன்றம் சென்று அதன் உரிமையை நமக்கு மீட்டெடுத்துக் கொடுத்தவர் நம்மாழ்வார் என்ற உண்மையை சொல்கிறார்.
காடும் அதன்வழியே பெருக்கெடுத்து ஓடும் நீருமே மக்களுக்குப் பாதுகாப்பு..அவற்ரை அழித்து சாலைகளைப் போடுவதென்பது எந்த விதத்திலும் சரியாகாது என்பதை நம்மாழ்வார் ஊடாக இந்த வலை நமக்கு சொல்கிறது.
தோன்றி வெறும் முன்னூறு ஆண்டுகளேயான அமெரிக்காவிடம் பதினைந்தாயிரம் ஆண்டுகால விவசாயப் பாரம்பரியமுள்ள நாம் விவசாய ஆலோசனைகள் கேட்பது நியாயமா என்ற நம்மாழ்வாரின் கேள்வியை இந்த வலை நம்முள் தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருக்கிறது.
விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு வேறு தொழிகளுக்குத் தாவ வேண்டுமென பொருளாதாரப் புலி மன்மோகன் சொன்னபோது அது தற்கொலைக்கு சமம் என்று நம்மாழ்வார் சொன்னதை சொல்லி சிலாகிக்கிறார். அவரே தற்கொலைகளை நியாயப் படுத்துவது வலிக்கச் செய்கிறது. ஆத்மநாமின் தற்கொலையையோ அல்லது ஸ்டெல்லா ப்ரூசின் தற்கொலையையோ நாம் கொச்சைப் படுத்தவில்லை. ஆனால் இருவரும் மரணம் வரை வாழ்ந்திருக்க வேண்டும் என்றே ஆசைப் படுகிறோம். போகிற போக்கில் அன்பின் உச்சத்தை ஒரு தற்கொலையின் மூலம் வெளிப்படுத்தலாம் என்று உதயகுமார் என்ற இளைஞன் முடிவெடுத்துவிடுவானோ என்று இந்த அப்பனுக்கு கவலை இருக்கிறது.
”அதிகபட்ச எதிர்பார்ப்பு வேறொன்றுமில்லை
நேசம் ததும்ப ஒரு சொல்
இந்நாளை அழகாக்க ஒரு புன்னகை
இவ்வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கவென கொஞ்சமே கொஞ்சம் பிரியம்
இதுதான்
இவ்வளவேதான்”
என்று ஒரு கவிதை இருக்கிறது இந்த வலையில்.
சற்றும் உலராத ஈரம் சொட்டும் அன்பின் பாய்ச்சலும், அன்பிற்கான யாசித்தலுமே இந்த வலை நெடுகத் தென்படுகிறது.
அன்பை நேசிக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய வலை
http://nichalanam.blogspot.in/
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்