”பொறுப்புள்ள குடிமக்களாக மாணவர்களை வளரச் செய்தல்” என்ற பொருளில் புதுச்சேரி அரசுப் பள்ளி குழந்தைகளோடு 25.01.2021 அன்று காணொலியில் கலந்துரையாடி இருக்கிறார் புதுச்சேரியின் துணைநிலை ஆளுனர் திருமிகு கிரண்பேடி
மிக அருமையான தலைப்பு. குழந்தைகளை பொறுப்புள்ள குடிமக்களாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாமும் காலங்காலமாக தெருவிறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறோம்
பொறுப்புள்ள குடிமக்கள் என்பவர் யார்? ஒரு பொறுப்புள்ள குடிமகன் அல்லது குடிமகளின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? என்பதில்தான் நமக்கும் மதவாதிகளுக்கும் இடையே பிரச்சினை இருக்கிறது
இந்த முரண்பாட்டைத்தான் அந்தக் காணொலி நிகழ்ச்சியிலும் நம்மால் காண முடிந்தது. மநுவாதிகளின் பிரதிநிதி ஒருவராக அவர் தனது கருத்தை வைக்கிறார்
ஒரு பள்ளிக் குழந்தை ஒரு கேள்வியோடு எழுகிறாள்.
அந்தக் கேள்வி அந்தக் குழந்தையினுடையதுதானா அல்லது யாரோ எழுதிக் கொடுத்ததை எடுத்துக் கொண்டு எழுந்து நிற்கிறாளா என்கிற அய்யம் இயல்பாகவே எழுகிறது.
ஏனெனில் கேள்வி அப்படிப்பட்டது.
மனப்பாட வழிக் கல்வி தங்களை நூறாண்டுகளுக்கு பின்நோக்கி இழுப்பதாக்க் கூறிய அந்தக் குழந்தை. செயல்வழிக் கல்வி என்பது தங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காதா? என்றும் கேட்கிறாள்
இதற்காகவே காத்திருந்தவர்போல் ஒருவிதத் துள்ளலோடு,
புதியக் கல்விக் கொள்கை செயல்வழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும்
அந்தத் திட்டம் அமலுக்கு வரும்வரை குழந்தைகள் காத்திருக்கக் கூடாது என்றும்
இந்தக் கருத்தை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறார்
நஞ்சைத் தேனோடு சரிவிகிதத்தில் கலந்து தருகிற வித்தையில் அவர் சனாதனவாதிகள் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பது தெளிவாகிறது
ராஜாஜி அவர்களால் கொண்டு வரப்பட்டு தந்தை பெரியார், இடதுசாரிகள் ஆகியோரின் கடும் போராட்டத்தின் விளைவாக ராஜாஜி வீட்டிற்கு அனுப்பப்பட்டு பெருந்தலைவர் காமராசரால் திரும்பப் பெறப்பட்டத் திட்டம் குலக்கல்வித் திட்டம்
பெற்றோரின் தொழிலைப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பது என்பதுதான் அன்றையக் குலக்கல்வியின் சாரம்
இன்றையப் புதியக் கல்விக் கொள்கையின் சாரமும் அதுதான்
மத்திய அரசு கொண்டுவரத் துடிக்கிற புதியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ் நாட்டிலும் புதுச்சேரியிலும் கடுமையான போராட்டங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.
ஆசிரிய இயக்கங்கள் இந்த விஷயத்தில் போதுமான அளவு கவனத்தைக் குவிக்கவில்லை என்பதுதான் மிகுந்த கவலையைத் தருகிறது
பொறுப்புள்ள குடிமக்களாகப் பிள்ளைகளை வளார்த்துவிடுகிற சூழல் இந்தப் பொழுதிலேகூட ஆசிரியர்களுக்கு இல்லை.
100 விழுக்காடு தேர்ச்சியைக் கொடுத்தாலும் ஏன் 101 விழுக்காடு எடுக்கவில்லை என்றுகூட அதிகாரிகள் கேட்டுவிடக்கூடிய சூழல் இருக்கிறது.
மதிப்பெண்னும் தேர்ச்சி விழுக்காடுமே ஆசிரியர்களின் தகுதியை தீர்மானிப்பதாக அமைகிறது.
ஆசிரியருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவை இன்றைய கல்விச் சூழல் பெருமளவு சேதப்படுத்தி வைத்திருக்கிறது
நிறைய விசயங்களை ஆவணப்படுத்த வேண்டிய அவசியத்தை ஆசிரியர்களுக்கு இன்றைய கல்விக் கட்டுமானம் வழங்கி இருக்கிறது
நிறைய விலை இல்லாப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டியதும் அவற்றை ஆவணப்படுத்தி வைத்திருப்பதுமாக ஆசிரியர்களை கிட்டத்தட்ட பகுதிநேர பதிவு எழுத்தர்களாகவே மாற்றி வைத்திருக்கிறது
இந்தச் சூழல் ஆசிரியர்கள் வேறு வழியே இல்லாமல் மனப்பாடம் செய்யச் சொல்கிற ஆட்களாகவே மாறுவது தவிர்க்க முடியாததாகிறது. இதுதான் புதியக் கல்விக் கொள்கையின் எதிர்பார்ப்பும்கூட
மனப்பாடம் என்று வந்துவிட்டால் கல்வி மீண்டும் அவாள்களுடையதாகி விடும்
ஆசிரியர்களுக்கு மிகச் சிக்கலான நேரம் இது. கல்விக் கூடங்களில் சனாதனத்திற்கு எதிராக்க் களமாட வேண்டிய நேரம்
இந்த நிலையில் புதியக் கல்விக்கொள்கை அமல்படுத்தபடும் வரைக்கும்கூட காத்திருக்காமல் குலக்கல்வியைக் கற்கவேண்டும் என்று பேடி அவர்கள் கூறுகிறார். இந்த நிமிடமே குழந்தைகள் குலக்கல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவரது பதைபதைப்பை நம்மால் கோனார் நோட்ஸ் இல்லாமலேயே புரிந்துகொள்ள முடிகிறது.
ஒரு சமூகத்தின் நகர்தலுக்கு உதவுவது நல்ல கல்வியின் ஒரு கூறு. கல்வியானது சமூகத்தை நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். நகராத சமூகம் தேங்கும்.
நகர்தலில் இரண்டு வகைகள் உண்டு
2) பின் நோக்கி நகர்தல்
எவ்வளவுதான் முன்னேறிய சமூக இருப்பினும் நகர்தலை நிறுத்திக் கொள்ளும் எனில் அந்தப் புள்ளியில் அது தேங்கிவிடும்
முன் நோக்கி நகராத சமூகம்கூட ஏதோ ஒரு இடத்தில் தேங்கித்தான் போகும். அது அவ்வளவு ஒன்றும் ஆபத்து இல்லாததும்கூட. தேங்குகிற சமூகம் கொசுக்களை உருவாக்கும்.
ஆனால் பின்நோக்கி நகர்கிற சமூகமோ தானே கொசுவாக மாறும். ஏதோ ஒரு கட்டத்தில் அந்தச் சமூகத்தை எதிர் விழுமியங்கள் விழுங்கித் தின்றுவிடும்
இதைத்தான் அந்தக் குழந்தை கூறி இருக்கிறாள். குடிமக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்துவது என்பதும் பின்நோக்கி நகர்தலின் ஒரு கூறு. இந்தக் காரியத்தைத்தான் மனப்பாடவழிக் கல்வி செய்துகொண்டிருக்கிறது என்பதுதான் அந்தக் குழந்தையின் வேதனை.
நொடிக்கு நொடி நகர்தலின் வேகமும் இலக்கும் கூர்மைபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாது போனால் அந்தச் சமூகம் அறிவியல், கலை, கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் பல நூற்றாண்டுகளுக்கு பின் நோக்கி நகர்ந்துவிடும்.
கலை, அறிவியல், கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றை கங்கு அனையாமல் காக்கும் இந்த நகர்தலை இயக்கும் சக்திகளுல் கல்வி மிக முக்கியமானது. ஆகவே தேவைக்கு ஏற்ப கல்வித் திட்டத்தையும் அதன் கட்டமைப்பையும் அவ்வப்போது கூர்தீட்டிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியமாகும்.
அதனால்தான் ஒவ்வொரு சமூகமும் குறிப்பிட்ட காலகட்ட இடைவெளிகளில் தமது குழந்தைகளுக்கான கல்வித் திட்டத்தை மிகுந்த கவனத்தோடு புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.
தமது மண்ணின் எதிர்காலத்தை நிர்மானிக்கப் போகிற கல்வித் திட்டங்களை வகுப்பதற்காக அனைத்துவகை கல்விமான்களையும் அறிவியல் வல்லுனர்களையும் சமூகத்தின்மீது அக்கறையுள்ள ஆளுமைகளையும் அவை பயன்படுத்துகின்றன.
இவ்வளவு முன்னெடுப்புகளை எவ்வளவுதான் கவனமாக மேற்கொண்டாலும்,
குறிப்பிட்ட மண்ணை எந்த அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறதோ அந்த அரசியலின் சாயம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, கூடுதலாகவோ குறைச்சலாகவோ அந்தக் கல்வித் திட்டத்தில் நிச்சயமாக வெளிப்படவே செய்யும்.
இப்போது இந்தியாவிலும் ஒரு புதிய கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
அவ்வப்போது புதியக் கல்வித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் படுவது இங்கும் வாடிக்கைதான். எனவே இதில் ஒன்றும் வியப்பில்லை.
தேன் தடவிய சொற்களோடு வந்திருக்கிறது இன்றையக் கல்விக் கொள்கை. கொஞ்சம் கவனம் பிசகிய நிலையில் வாசித்தாலும் வாசிப்பவர்களை சாய்த்துவிடக்கூடிய அளவில் வசீகரமான வார்த்தை வலையாக அதை தயாரித்து வீசியிருக்கிறார்கள்
இப்போது வர இருக்கிற புதிய கல்விக் கொள்கை ராஜாஜி அவர்களின் குலக் கல்வித் திட்டத்தைவிட கொடூரமானதாக இருக்கிறது
29.06.1952 அன்று திருவாண்மியூரில் சலவைத் தொழிலாளிகளின் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினர் திரு ராஜாஜி.
தங்களது குழந்தைகள் படிப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என சலவைத் தொழிலாளிகள் அவரிடத்தில் கோரிக்கை வைக்கிறார்கள். அவர்களது கோரிக்கை என்பதுகூட பள்ளிக் கல்வியைத் தாண்டியதாக இல்லை.
இந்தக் கோரிக்கையே ராஜாஜிக்கு சொல்லொன்னாத கோவத்தைக் கொடுக்கிறது.
எல்லோரும் படித்துவிட்டால் எல்லோருக்கும் வேலையை எப்படித் தருவது ?
கொஞ்சம் எண்ணிக்கையிலான வேலைதான் இருக்கிறது. அவரவரும் அவரது குலத் தொழிலை திறம்படச் செய்தாலே போதும் .இந்த பூமி செழிக்கும் என்பது மாதிரி கொந்தளித்துவிட்டு நகர்கிறார்
இதே காலகட்டத்தில் ராஜாஜியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த திரு சென்னாகவுடா அவர்கள் யாதவா சமூகத்தை சார்ந்த மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்
எல்லோரும் படித்துவிட்டு அரசு வேலைக்குத்தான் வரவேண்டும் என்று கருதக் கூடாது.. நிறைய பால் பண்ணைகளை நிறுவ வேண்டும். நமது அறிவையும் திறமையையும் முழுவதுமாக அந்தத் துறையிலேயே செலவு செய்து பால் உற்பத்தியிலே முன்னனி நாடாக நமது நாட்டை மாற்ற வேண்டும்
என்று உரையாற்றிவிட்டு நகர்கிறார் அவர்
இந்த இரண்டு உரைகளையும் கூர்ந்து கவனித்த தந்தை பெரியார் ராஜாஜி அரசாங்கம் ஏதோ ஒரு மோசடியான கல்வித் திட்டத்தைக் கொண்டுவரப் போகிறது என்று உணர்கிறார்
அதுகுறித்து தினமும் உரையாடவும் எழுதவும் தொடங்குகிறார். அவர் கணித்தது போலவே ரஜாஜி அரசாங்கம் கொடூரமான குலக்கல்வித் திட்டத்தை அமலுக்கு கொண்டுவரப் போவதாக அறிவித்தது
அந்தத் திட்டத்தின்படி
நகரப் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும். அங்கு ஆறு மணி நேரமும் குழந்தைகள் கல்வியைப் பெறுவார்கள்
கிராமத்துப் பள்ளிகள்,
2) முதல் ஷிஃப்டிற்கு பள்ளிக்கு வரும் குழந்தைகள் இரண்டாவது ஷிஃப்டிற்கு வரத் தேவை இல்லை
3)
முதல்
ஷிஃப்டிற்கு பள்ளிக்கு வரும் குழந்தைகள் இரண்டாவது பாதி நேரத்தில் தங்களது குலத்தொழிலைக் கற்றுக் கொள்வார்கள்.
4)
இரண்டாவது
ஷிஃப்டிற்கு பள்ளிக்கு வரும் குழந்தைகள் முதல் பாதியில் தங்களது குலத்தொழிலைக் கற்றுக் கொள்வார்கள்
அதாவது செருப்பு தைக்கும் தொழிலாளியின் பிள்ளை பாதி நேரம் கல்வி கற்பான். மீதி நேரம் செருப்பு தைக்க கற்றுக் கொள்வான். ஒரு தச்சரின் பிள்ளை தனது கல்வி நேரத்தில் பாதி நேரத்தை தச்சுத் தொழிலைக் கற்பதற்காகச் செலவிடுவான். துப்புறவுத் தொழிலாளியின் குழந்தை தனது கல்வி நேரத்தில் பாதி அளவு துப்புறவுத் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்
குலத் தொழில் இல்லாத குழந்தைகளுக்கு
1) விவசாயம்
2)
கொட்டகை
போடுதல்
3)
செங்கல்
அறுத்தல்
4)
சாலைகள்
போடுதல்
5)
கிணறு
வெட்டுதல்
போன்ற தொழில்களில் பயிற்சி கொடுக்கப்படும் என்று அரசு கூறியது
இந்தக் கொடுமைகள் நகரத்துப் பள்ளிக்களுக்கு இல்லை. கிராமத்தில் உள்ள பார்ப்பனக் குழந்தைகளும் ஆண்டைகளின் குழந்தைகளும் நகரத்துப் பள்ளிகளில் இருந்ததால் அவர்களும் இந்தக் கொடுமையில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள்
ஆக, இந்தக் குலக்கல்விச் சகதியில் சிக்கிக் கொள்வது கிராமத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் குழந்தைகள் மட்டும்தான்
மேற்கூறிய தொழில்கள் 5 வயதுக் குழந்தைகள் கற்றுக் கொள்வது என்பது மிகவும் ஆபத்தானது.
மட்டுமல்ல, காலையில் மேற்காணும் தொழிலில் ஈடுபடும் குழந்தைகள் மதியம் பள்ளிக்கு வந்தால் களைப்போடு இருப்பார்கள். அவர்களால் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும்?
போக, இது சாதிய கட்டமைப்பை இன்னும் கெட்டிப்படுத்திவிடும் என்பதைப் புரிந்துகொண்ட தந்தை பெரியார்
சாதி ஒழிப்பும் புதியக் கல்விக் கொள்கை ஒழிப்பும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்றும் சாதி ஒழிய வேண்டும் என்றால் புதியக் கல்விக் கொள்கை ஒழிய வேண்டும் என்றும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தார்
11.07.1953 மற்றும் 12.07.1953 ஆகிய தேதிகளில் தஞ்சையில் திராவிடர் கழக மாநாடு நடைபெறுகிறது
அதில் 12.07.1953 அன்று நடைபெற்ற மாநாடு புதியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடாகவே நடைபெறுகிறது.
அந்த மாநாட்டில் குலக்கல்விக்கு எதிராக,
2)
20.07.1953
அன்று பள்ளிகளை மறிப்பது என்றும்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
20.07.1953 அன்று மாணவர்களை எப்படியேனும் பள்ளிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் அரசு படாத பாடு பட்டது. வீடுவீடாய் சென்றேனும் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்று ஆசிரியர்களை முடுக்கி விட்டது
குழந்தைகள் தாம் செய்யும் தொழிலுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தானே பெற்றவர்கள் தங்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அவர்களுக்கு பள்ளிக்கூடங்களே அவர்களது குலத் தொழிலை சொல்லிக் கொடுப்பது என்ன நியாயம் என்று தந்தை பெரியார் கேட்டார்.
அப்போது பலமாக இருந்த இடதுசாரிகள் சட்டசபையில் முடிந்தவரைப் போராடிப் பார்த்தார்கள்.
ராஜாஜி தனக்கே உரிய பிழைக்கும் தந்திரங்களால் அனைத்தையும் எதிர் கொண்டு சமாளித்து வந்தார்
ராஜாஜியை வீட்டிற்கு அனுப்பாமல் குலக்கல்வியை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்த தந்தை பெரியார் அதை வெளிப்படையாக எடுத்துக் கூறவும் செய்தார்
காங்கிரஸ் உறுப்பினர்களின் உதவி இதற்கு எந்த அளவிற்கு தேவை என்பதையும் அவர் உணர்ந்தவராகவே இருந்தார்
காமராசருக்கும் ராஜாஜிக்கும் உள்ள இடைவெளியை குலக்கல்வியை அப்புறப் படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறார்
ராஜாஜி வீட்டிற்குப் போக வேண்டும். அது நம்மால் ஆனால் என்ன? காமராசரால் ஆனால் என்ன? என்றெல்லாம் பேசுகிறார்
அதன் பிறகு காங்கிரசிற்குள் சில நடக்கின்றன
10.04.1952 அன்று முதல்வராகப் பொறுப்பேற்ற ராஜாஜி சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து 09.04.1954 அன்று பதவி விலகுகிறார்
காமராசர் 13.04.1954 அன்று முதல்வராகப் பதவி ஏற்கிறார்
மாறுபாடான கருத்துகள் புதியக் கல்விக்கொள்கைமீது இருப்பதாலும், சர்க்கார் கட்சியிலும் இது பிரதிபலிப்பதாலும் மிகவும் பயனுள்ள இந்தத் திட்டத்தை மிகுந்த விசனத்தோடு திரும்பப் பெறுவதாக 17.05.1954 அன்று சட்ட சபையில் அன்றைய கல்வி அமைச்சர் திரு சி.சுப்ரமணியம் அறிவிக்கிறார்
இந்தத் திட்டத்தை அதன் பயன்பாடு கருதி ஏதேனும் ஒரு அரசாங்கம் மீண்டும் கையில் எடுக்கும் என்றும் அவர் அன்று மேலவையில் கூறிதாக ஒரு தகவல் உண்டு. இதை அவர் மறுத்துள்ளதாகவும் தகவல் உண்டு.
அவர் சொல்லாவிட்டாலும் அவரது விருப்பம் அதுதான்.
அந்த வகையில் இன்று மீண்டும் இந்தத் திட்டத்தை மைய அரசு கையெடுத்திருக்கிறது.
திருமிகு கிரண்பேடி போன்றவர்களுக்கு இந்தச் சட்டம் அமலாகும் வரைக்கும்கூட காத்திருக்கத் தயாராக இல்லை. குழந்தைகள் இந்த நிமிடமே தங்களது பெற்றோர்களின் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.
அந்தக் குழந்தை விரும்பிய செயல்வழிக் கல்வி என்பதை இப்படி எளிதாகப் புரிந்து கொள்ளலாம்,
கீழடியப் பற்றி ஐந்து மதிப்பெண்ணிற்கு மனப்பாடம் செய்வது ஒரு வகை
கீழடிக்கே குழந்தைகளை அழைத்துச் சென்று பார்வையிடச் செய்வது என்பது செயல்வழிக் கல்வி
இதைக் கோரிய அந்தக் குழந்தைக்குத்தான் செயல்வழிக் கல்வி என்பது குலக்கல்வி என்று திரித்து பாடம் எடுக்கிறார் பேடி
குலக்கல்வி ஒருபோதும் பொறுப்பான குடிமக்களை உருவாக்காது
நாம் என்ன செய்யப் போகிறோம்?
நன்றி : “அறம் வெல்லும்”
ஏப்ரல் 2021