Friday, June 25, 2021

காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்…….


 கமர்கட்

இனிப்பிலும் வர்க்கபேதம்

என்று 35 ஆண்டுகளுக்கு முன்னால் வல்லம் தாஜுபால் எழுதினார்.

காட்பரிசும் இனிப்புதான். கமர்கட்டும் இனிப்புதான். இரண்டுமே குழந்தைகளுக்குப் பிடித்தவைதான்.

ஆனால் காட்பரிஸ் இருக்கிற வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமானதாகவும் கமர்கட் இல்லாத வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமானதாகவும் களஎதார்த்தம் இருக்கிறது.

அதாவது குழந்தைகளுக்கான இனிப்பிலும் ஒரு வர்க்க முரண் இருக்கிறது

காட்பரிஸ் சாப்பிடும் குழந்தைகளுக்கு கமர்கட் வாங்கித்தர மாட்டார்கள். அது மலிவானது, தரமற்றது. சாப்பிட்டால் உடலுக்கு நல்லதல்ல. மொத்தத்தில் அது மக்கானது அல்ல என்று போகிறபோக்கில் அந்தக் குழந்தைகளுக்கு புகட்டப்படும்

கமர்கட் காட்பரிசைவிட கேடானதா என்பதுகூட அவர்களுக்கு உறுதியாகத் தெரியாது. ஆனாலும் அதை அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கித்தர மாட்டார்கள். காரணம்இல்லாதவர்வீட்டுப் பிள்ளைகளோடு தம் வீட்டுப் பிள்ளைகளை கமர்கட் சமப்படுத்திவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை

கமர்கட் சாப்பிடும் குழந்தைகளுக்கு காட்பரிஸ் சாப்பிட முடியாது. காரணம் அது அவர்களால் வாங்க முடியாத அளவு விலையைக் கொண்டது

குழந்தைகள் தின்னும் இனிப்பில் இவ்வளவு வர்க்க முரண் இருக்குமானால் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியில் வர்க்க முரண் இருக்கத்தானே செய்யும்

இந்தப் புள்ளியில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது

ஒரு காலகட்டம் வரைக்கும் கமர்கட் குழந்தைகளுக்குகல்வியே இல்லை என்ற நிலை இருந்தது. கல்வியை அவர்களுக்கு தவிர்க்க இயலாது என்கிற நிலை வந்தபோது அவர்கள் உஷாரானார்கள்

இருவருக்கும் கல்வி என்றால் இருவரும் ஒன்றாதல் இயல்பாகிவிடும். இருவரும் ஒன்றாகிவிட்டால் அவர்கள் நமக்கு முன்னால் காலைத் தொங்கப்போட்டுக் கொண்டு அமர்ந்துவிடுவார்களே என்ற சனாதனப் பதைபதைப்பு காட்பரிஸ் சமூகத்திற்கு வந்தது.

எனவே அவர்கள் தமது வீட்டுக் குழந்தைகளுக்கு ஒரு கல்வி என்றும் இல்லாதவர் வீட்டுக் குழந்தைகளுக்கு ஒரு கல்வி என்றும் கல்வியைக் கீறி கூறு போட்டார்கள்

இப்படியாக, கல்வியிலும் காட்பரிஸ் கல்வி, கமர்கட் கல்வி என இரண்டு பிரிவுகள் உருவாகின.

இந்தப் பாழாய்ப்போன கொரோனாவும் இந்த இரண்டுப் பிரிவு கல்விக்கும் இடையே இருக்கும் இடைவெளியை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கிறது.

இதைப் பெரியப் பெரிய, தடித்த ஆவணங்களில் இருந்து எடுத்த தரவுகளைக் கொண்டெல்லாம் நிறுவத் தேவை இல்லை.

என் பள்ளியில் இருந்தும் என் பக்கத்து வீட்டில் இருந்தும் இதை இன்னும் பேரதிகமாய் நிறுவ இயலும்

மேல்நிலை இரண்டாம் ஆண்டுப் பொதுத்தேர்வு தள்ளிவைக்கப் பட்டிருந்தாலும் செய்முறைத் தேர்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன

எங்கள் பள்ளியில் அன்னலட்சுமி என்ற குழந்தை இரண்டாம் ஆண்டு தட்டச்சுப் பிரிவில் படிக்கிறாள்.  இந்த இடத்தில் கொஞ்சம் ன்னலட்சுமி குறித்த முன்கதை அவசியமாகிறது

அவளது பெற்ரோர் இருவரும் துப்புறவுத் தொழிலாளர்கள்

அவள் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒழுங்காக பள்ளிக்கு வரமாட்டாள். பத்தாம் வகுப்பில் அவள் பள்ளிக்கு வந்த நாட்கள் அநேகமாக முப்பது அல்லது முப்பத்தி ஐந்தாக இருக்கும்

அவள் பள்ளிக்கு வந்த நாட்களைவிட அவளது வகுப்பு ஆசிரியர் நிவாஸ் அவளது வீட்டிற்கு சென்ற நாட்கள் அதிகம்

அவளை பள்ளிக்கு அழைத்துவர செல்லும்போது பல நேரங்களில் கெட்ட வார்த்தைகளுக்கு மிக நெருக்கமான சொற்களால் அவர் அவளது பெற்றோரிடம் வதைபட்டதும் உண்டு

அதிசயமாக அவள் பள்ளிக்கு வந்த  நாள் ஒன்றில் அவளது அம்மா அவளைத் தேடி பள்ளிக்கு வந்திருக்கிறார். அவர் வகுப்பிற்குப் போனபோது நிவாஸ்தான் வரைபடம் நடத்திக் கொண்டிருந்திருக்கிறார்

ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அவளை அழைக்கவும் வரைபடம் முக்கியம் என்றும், அந்தப் பிரிவேளை முடிந்ததும் அழைத்துச் செல்லலாம் என்றும் நிவாஸ் கூறியிருக்கிறார் 

தன் பிள்ளையை மறுப்பதற்கு அவர் யார் என அவர் ஒருமையில் கேட்க

பள்ளிக்கு வந்துவிட்டால் அவள் தன் குழந்தை என்று நவாஸ் கொதிக்க

கடும் சொற்களால் நிவாசை வசவியிருக்கிறார். பக்கத்து வகுப்பில் இருந்த ஆசிரியர்களும் பிள்ளைகளும் இந்த வகுப்பின்முன் கூடிவிட்டார்கள்

பள்ளிக்கூடத்துக்கு வந்தாதான உங்க புள்ள. ”பெரிய சார்ட்ட (தலைமை ஆசிரியர்) போய் டிசி வாங்கிக்கொள்கிறேன் என்று அவளை இழுத்துக்கொண்டு என் அறைக்கு வந்துவிட்டார் 

அவரைத் தொடர்ந்து நிவாசும் சில ஆசிரியர்களும் எனது அறைக்கு வந்துவிட்டார்கள்

டிசி கொடுங்க சார். இதுமாதிரி கண்ட கண்ட வாத்தியார்ட்ட எல்லாம் திட்டு வாங்கனும்னு எங்களுக்கு அவசியம் இல்ல

அவங்களே டிசி கேட்கறாங்க. கொடுத்துடுங்க சார்.” என்கிறார்கள் சில ஆசிரிய நண்பர்கள்.  அன்னலட்சுமியின் அம்மா எப்படியெல்லாம் தரக்குறைவாகப் பேசினார்கள் என்பதை பிள்ளைகளை வந்து கேட்குமாறும் கொதித்தார்கள்

அன்னலட்சுமியின் அம்மாவும் என்னிடம் படித்தவர்தான்

கொஞ்சம் கோவப்பட்டால் அடங்குவார் என்று ட்டது

என்ன  ஓவரா கத்துற. என்னன்னு நெனச்ச. எந்திருச்சன்னா பிச்சுப்புடுவேன். ஓடிப் போயிடுஎன்று உரத்து பேசவும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை

ஆமாம் என்னையவே திட்டுங்க. ஒங்க வாத்தியாரையெல்லாம் கொஞ்சுங்கஎன்று சிணுங்கியவேறே போய்விட்டார்

நீ ஏன் நிக்கற. கிளாசுக்கு போஎன்று இந்தப் பக்கம் திரும்பிக் கத்தியதும் குழந்தையும் வகுப்பிற்கு போய்விட்டாள்

நிமிர்ந்து நிவாசைப் பார்க்கிறேன்

கண்ணீரோடு நிற்கிறார்

என்ன சார் இப்படி செஞ்சுட்டீங்க. எங்களுக்கு மரியாதையே இல்லையா சார்

விடுப்பா. பத்தாங்கிளாஸ். ஏதோ அதையும் இதையும் எழுதி பாஸ் பண்ணிட்டானா அவ வாழ்க்கை விரிஞ்சுடும்பா

பெத்தவங்களுக்கே அக்கறை இல்லையே சார்

யாருப்பா  பெத்தவன். அவனுக்கென்ன தெரியும். சாக்கடை அள்ளுறவங்க நிவாஸ்.  நீதாண்டா  நிவாஸ்  பெத்தவன்

சென்றுவிட்டான்

அவளும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 191 மதிப்பெண் எடுத்து தேறிவிட்டாள்

இது குறித்து வண்ணக் கதிரில்கூட எழுதினேன்.

அதே அன்னலட்சுமி மேல்நிலை முதலாம் ஆண்டில் ஒருநாள்கூட விடுப்பெடுக்கவில்லை. எல்லா ஆசிரியர்களுக்கும் செல்லமாக மாறினாள். முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஓரளவு நல்ல மதிப்பெண்ணோடு தேர்ச்சியும் பெற்றாள்

பொது முடக்கம் முடிந்து பள்ளி திறப்பதற்குள் மீண்டும் அன்னலட்சுமிபத்தாம் வகுப்பு அன்னலட்சுமியாக மாறிவிட்டாள். பொது முடக்கம் அவளை கல்வி, பள்ளி குறித்த சிந்தனையில் இருந்து வெகு தொலைவிற்கு கொண்டு போட்டிருந்தது

அவளது பெற்றோர் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர்களாக மாறிப் போனார்கள் இப்போது.  அவர்கள் அடிக்கடி  பள்ளிக்கு ருவதும்  ஆசிரியர்களிடம் அன்னலட்சுமிக்கு அறிவுரை செய்து பள்ளிக்கு அழைத்து ருமாறும்  கோரிக்கை வைத்தபடி இருந்தார்கள்

எவ்வளவு முயன்றும் அவளை பள்ளிக்கு கொண்டுவர முடியவில்லை

இந்த நேரத்தில் செய்முறைத் தேர்வு தொடங்கிவிட்டது

 தட்டச்சு ஆசிரியர் தேர்வன்று மட்டும் பள்ளிக்கு வருமாறும் மற்றதை தான் பார்த்துக் கொள்வதாகவும் கெஞ்சத் தொடங்கி விட்டார்

அடுத்த நாள் தேர்வு. அவளது தந்தையை அலைபேசியில் பிடித்த தெய்வீகன் அடுத்தஒருநாள் மட்டும் அவளை எப்படியேனும் சமாளித்து சரிசெய்து பள்ளிக்கு அழைத்துவரச் சொல்கிறார். அவரும் சம்மதிக்கிறார்.

அலைபேசியைத் துண்டித்த அடுத்த கணம் அழைப்பு வருகிறது. அன்னலட்சுமி பேசுகிறாள்

புடிக்கலன்னு சொன்னா உடமாட்டீங்களா சார். சும்மா தொன தொனன்னு. HM சார் என்ன செய்யறார். அவர பேசச் சொல்லுங்க. அவர்ட்ட பேசிக்கறேன்

என்னருகில் நின்றபடி  ஸ்பீக்கர் போட்டு பேசுகிறார்  ன்பதால் எனக்கும் கேட்கிறது.

நான் பேசல. ஒரு மணிநேரத்தில் அவங்க வீட்டுக்கு வரேன். சொல்லிடுங்க தெய்வீகன்என்கிறேன். அவளுக்கும் கேட்கிறது

அரைமணி நேரத்தில் அவள் பள்ளிக்கு வந்துவிட்டாள்

தேர்வும் அடுத்தநாள் எழுதிவிட்டாள். நல்ல மதிப்பெண்ணும்கூட.

படிப்பில் நாட்டம் இல்லாதிருந்தக் குழந்தை ஒரு கட்டத்தில் கல்வியை நேசிக்கத் தொடங்குகிறாள். இவளை கொரோனா பொது முடக்கம் கல்வியில் இருந்தும் பள்ளிக் கட்டமைப்பில் இருந்தும் வெகுதூரத்தில் கொண்டுபோய் கிடத்தி உள்ளது

அன்னலட்சுமி கொரோனாவிற்குப் பிறகானகமர்கட் கல்வியின் ஒரு பருக்கை

மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலப் புத்தகம் தேவைப்பட்டது. பக்கத்துவீட்டு குழந்தை ஜனா இரண்டாம் ஆண்டுதான் படிக்கிறாள்.

அவளைத் தேடிப் போனால் அவள் கணக்கு ட்யூசனுக்குப் போயிருந்தாள். அடுத்தநாள் காலை போனால் அவள் ஆன்லைன் வகுப்பில் இருப்பதாகவும் இடையூறு செய்தால் மனுஷியாகவே இருக்க மாட்டாளென்றும் கூறினார்கள்

பள்ளிக்கூடம் இருந்தால்கூட கொஞ்சம் ப்ரீயா இருப்பா சார் இப்ப ரொம்ப பிசிஎன்கிறார் அவளது தந்தை

ஜனாகாட்பரிஸ் கல்வியின் ஒரு பருக்கை

இரண்டு பருக்கைகளையும் அப்படியே எடுத்துக்கொள்ள முடியாதுதான். ஆனால் பெரும்பான்மைக்கு மிக நெருக்கமாக இவை பொருந்தும்

பொதுமுடக்கம் முடிந்து பள்ளிகள் திறந்ததும் ஜனா வைப் போன்ற காட்பரிஸ் குழந்தைகள் பள்ளியோடு பொருந்திப் போவதில் அவ்வளவாகப் பிரச்சினை இருக்காது. நீண்ட காலம் பள்ளிச் சூழலுக்கு வெளியே இருந்ததால் சிறிது அப்படி இப்படி இருக்கும்

இவர்களை எதிர்கொள்வதில் ஆசிரியர்களுக்கோ பள்ளிகளுக்கோ பெரிய சிரமம் இருக்கப் போவதில்லை

ஆனால் அன்னலட்சுமியைப் போன்ற கமர்கட் குழந்தைகளுக்கு பள்ளியோடு, கல்வியோடு பொருந்திப் போவதில் நிறைய பிரச்சினைகள் இருக்கும். இவர்களை எதிர்கொள்ளவேண்டிய ஆசிரியர்களுக்கு நுட்பமான உளவியல் ஞானமும் பக்குவமும் அவசியம்

இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே கல்வி, ஒரே வினாத்தாள் என்பதெல்லாம் இன்னும் கூடுதலான இடைவெளியை இவர்களிடையே கொண்டு வரும். இது தனியாக விரிவாக கவனிக்க வேண்டிய இடம்

ஆனால், எதற்கு கல்வி? என்பதற்கான விடை இருவருக்கும் பொதுவானதாக இருக்குமாறு கொரோனாவிற்கு பிறகான கல்வியை கட்டமைக்க வேண்டும்

வழக்கம்போல பள்ளி, தனிப்பயிற்சி, தேர்வு, மதிப்பெண், நீட், அறிவு, வேலை, சம்பளம், குடும்பம் என்பதற்கான கல்வியாக கட்டமைக்காமல் மாற்றித் திட்டமிட வேண்டும்

அறிவு நல்ல மதிப்பெண்ணைத் தரும், மருத்துவராக்கும், நல்ல சம்பளம் தரும் என்பதை மாற்ற வேண்டும். இதெல்லாம் அறிவு இல்லை.

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை

என்கிறார் வள்ளுவர்

பிறரது வலியை, நோயை, துயரை தன்னுடையதாகக் கருதுகிற மக்களாக மாற்றுகிற வேலையை கல்வி செய்ய வேண்டும். இல்லாது போனால் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில்ரெம்டெசிவர்மருந்துகளை பதுக்கி விற்கிற அறிவாளிகளை கல்வி உருவாக்கி விடும்

வாழக் கற்றல்என்றொரு அற்புதமான நூல் இருக்கிறது. அதில் எட்கர் பௌரே ஒரு இடத்தில் இப்படி சொல்வார்,

தனிமைப்பட்டுக் கிடப்பதனால் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்கும் மனிதனை தனிமையில் இருந்து மீட்பதும் மகிழவைப்பதும்தான் கல்வியின் நோக்கம்

நீண்டப் பொது முடக்கத்தால் மகிழ்ச்சியை இழந்தவர்களாக தனிமையில் உழன்று வருகிற குழந்தைகளுக்கு கூடிக் கொண்டாடும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும்

மிக நீண்ட மகிழ்ச்சியின்மையினால் பீடிக்கப்பட்ட அந்தக் குழந்தைகள் மகிழ்ந்திருக்குமாறு பார்த்துக் கொள்வதே முடக்கத்திற்குப் பிறகான பள்ளிகளின் வேலையாக இருக்க வேண்டும்


நன்றி  : செம்மலர்

                ஜூன் 2021 

 


 

 

 

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...