Saturday, April 19, 2025

நீங்கள் செய்வதாக சொன்னதன்றி

தேர்தல் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதி உண்டு. தபால் மூலம் வாக்களிப்பதில் நிறைய

சிரமங்களை நாங்கள் எதிர்கொள்ளவும் நேர்ந்தது. பலரால் வாக்களிக்க முடியாத சிக்கலும்கூட ஏற்பட்டது.

 இதைக் களையும் முகத்தான் தேர்தலுக்கு முன்பாக அவர்களுக்கென்று தாலுக்கா அளவில் வாக்கு மையங்களை அமைத்து வாக்குச் சீட்டுகள்மூலம் அவர்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது அப்படியானதொரு வாக்குச்சாவடியில் சான்றொப்பமிடும் ஊழியர்களில் ஒருவனாக (எதற்கு அதிகாரி வேஷமெல்லாம்) பணியாற்றினேன்.

 சான்றொப்பம் பெற்றுக்கொண்ட பலர் எங்கள் மேசையிலேயே பேலட் பேப்பரை வைத்து உதயசூரியனுக்கு வாக்களித்தனர். ரகசியமாக வாக்களியுங்கள் என்று விரட்டினாலும் இதிலென்ன சார் ரகசியம் வேண்டிக் கிடக்கிறது என்று சொல்லிக்கொண்டே உதயசூரியனுக்கு வாக்களித்தவர்களும் உண்டு.

 விரட்டி விரட்டி அப்போது திமுகவிற்கு வாக்களித்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான் இன்று, ”திமுக தனது கடைசி பட்ஜெட் கூட்டத்தை நடத்திக்கொண்டிருப்பதாகவும்  தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாக்குகளை சேர்த்தால் நாற்பது லட்சம் வாக்குகளுக்குமேல் தேறும் என்றும் அவற்றில் ஒன்றுகூட திமுகவிற்கு விழாமல் பார்த்துக்கொள்வோம் என்று சமூக வலைதளங்களில் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.

 இந்த அளவிற்கு கொதி நிலையில் இருக்கும் அவர்கள் திமுக அரசாங்கம் மோசமான அரசாங்கம் என்றோ, மக்கள் விரோத அரசாங்கம் என்றோ, சமூகநீதிக்கு எதிரான அரசாங்கம் என்றோ எந்த இடத்திலும் ஒருபோதும் குற்றம் சாட்டுவதில்லை.

 இந்த அரசாங்கத்திற்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளையும், ஒன்றிய அரசு கொடுக்கக்கூடாத குடைச்சல்களையெல்லாம் இந்த அரசிற்கு கொடுத்துக்கொண்டே இருப்பதையும், கொடுக்கவேண்டிய நிதியை கொடுக்க மறுப்பதையும் திமுக தோழர்களைவிட பேரதிகமாக மக்களிடம் கொண்டுசென்றபடியும்தான் இருக்கிறார்கள். 

 தமிழ்நாடு அரசின் பல திட்டங்களின் மேன்மையை பயனாளிகளை விடவும் இவர்கள் உணர்ந்தவர்களாகவும் அதற்காக மகிழ்ந்து அரசினைப் பாராட்டுபவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.

 காலை உணவுத் திட்டம்குறித்துத் தன்னிடம் கேட்கப்பட்டபோது இந்தத் திட்டத்தை நினைக்கும்போதே தனக்கு மெய் சிலிர்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் ஒரு நேர்காணலில் கூறினார்.  கிட்டத்தட்ட அதே மனநிலையில்தான் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

 தாயும் தந்தையுமில்லாத குழந்தைகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் என்ற திட்டம் ஒன்று போதும் முதல்வரின் படத்தை பார்க்கும் இடங்களில் எல்லாம் அவரை வணங்கிச் செல்லலாம் என்றே சொல்கிறார்கள்.

 இத்தனை நெருக்கடிகளைக் கடந்தும் பள்ளிக்கல்விக்கு ஐம்பதாயிரம் கோடிக்கு நெருக்கமாக நீங்கள் ஒதுக்கீடு செய்துள்ளதை அரசு ஊழியர்களோ அல்லது ஆசிரியர்களோ புரிந்துகொள்ள முடியாதவர்களாகவோ அல்லது பாராட்ட  முடியாத அளவிற்கு கஞ்சத்தனம் கொண்டவர்களாகவோ இல்லை.

 பல்லாண்டுகளாக நிலுவையில் இருக்கிற தங்களது கோரிக்கைகளை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லையே என்கிற கோபமே அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

 தமிழ்நாட்டு மக்கள்  தொடர்ந்து தங்களை நிராகரிக்கிறார்கள் என்பதற்காக தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிப்பது போலவே, எப்படியும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்ற எண்ணத்தில் கடந்த காலத்தில் அதிமுக இவர்களை கண்டுகொள்ளாமல் போனதும் உண்டு. அதை இவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

 ஆனால்அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் திமுகவின் வலது கண்ணும் இடது கண்ணும்போல என்று பொதுவாக சொல்லப்படும் நிலையில் திமுக அரசு இவர்களை முற்றாக புறக்கணிப்பதாகவே இவர்கள் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள். அதிலும் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக ஆதரித்த, 2021 தேர்தலின்போது தங்களது வாக்குறுதிகளில் இணைத்துக் கொடுத்திருந்தவற்றையே இவர்கள் நிறைவேற்றித்தர மறுக்கிறார்கள் என்று கருதுகிறார்கள். நான்கு விஷயங்கள் இவர்களை இந்தக் கொதிநிலைக்கு தள்ளியிருப்பதாகக் கொள்ளலாம்,

 1) தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இணைத்திருந்தவற்றையே நிறைவேற்ற மறுப்பது

2) செலவற்ற கோரிக்கைகளைக்கூட காதுகொடுத்து கேட்க மறுப்பது

3) அதற்கான போராட்டங்களை கிஞ்சிற்றும் மதிக்காமல் அலட்சியப்படுத்துவது 

4) தேவையே இல்லாமல் புதிய சிக்கல்களை உருவாக்கியது

 2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் (CPS) கொண்டுவரப்படுகிறது. இது ஓய்வு பெற்றவர்களுக்கான சாபம். எனவே இதை இது கொண்டுவரப்பட்ட நாள்முதலாகவே ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார்கள்.

 வயதான காலத்தில்தான் உடல்நலம் உள்ளிட்டு செலவுகள் அதிகரிக்கும். வயதான காலத்தில் குழந்தைகளின் அரவணைப்பு இல்லாமல் போவதற்கு வாய்ப்புண்டு. அப்படி நிகழ்ந்தால் CPS அவர்களைத் தெருவிற்கு கொண்டு வந்துவிடும்.

 இவைமட்டும் இல்லாமல் இதில் தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. அப்படி நடந்தால் அது ஓய்வு பெறுபவர்களை வெறுங்கையோடு வீட்டிற்கு அனுப்பும். இதை போக்குவரத்துக் கழகங்களில் கண்கூடாகக் கண்டோம். எனவே இந்த ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று அப்போதிருந்தே போராடத் தொடங்கினார்கள்.  

 இதன் நியாயத்தை ஏற்றுக்கொண்ட திமுக தான் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று உறுதியளித்தது. இந்த ஒற்றை வாக்குறுதிதான் 2021 இல் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் திருவிழாவிற்கு செல்லும் மனநிலையோடு வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு வந்தது.

 காலிப்பணியிடங்களை நிரப்புவோம். பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப் படுத்துவோம் என்பதையும் திமுக ஏற்றுக்கொண்டது. ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைப்போம் என்பது திமுக தொடர்ந்து சொல்லி வந்ததுதான். ஆனால், ஏறத்தாழ முப்பத்தைந்து விழுக்காடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன.

ஜோசப் மார்த்தி “Instead, the school should go to the student”  என்று சொல்வார். பள்ளிகளை குழந்தைகளை நோக்கியும் மருத்துவத்தை வீடுகளை நோக்கியும் இந்த அரசாங்கம் நகர்த்தத் தொடங்கி இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடே இந்தக் கூடுதல் சுமையை இவர்கள் ஏற்கிறார்கள். ஆனால் தங்களது வாழ்க்கை தெருவிற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக தெருவிற்கு வந்து போராடும் ஊழியர்களை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை.

35 விழுக்காடு காலிப்பணியிடங்கள் என்றால் 35 விழுக்காடு சம்பளப் பணம் மிச்சம் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் இப்படிக் குவியும் பணத்தில் இருந்து அங்கன்வாடிப் பணியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், சத்துணவு ஊழியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க இயலாதா என்ற இவர்களின் கேள்வியின் நியாயம் சிறுபிள்ளைகளுக்கே புரியுமே, முதல்வருக்குப் புரியாதா?

 இவை எல்லாம் ஏற்கனவே இருந்த பிரச்சினைகள். இவை போதாதென்று இவர்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய அரசானை 243 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது.

 இதுவரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணிமூப்பு என்பது ஒன்றிய அளவில் இருந்தது. அவர்களது பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் என்பவை ஒன்றிய அளவிலான அவர்களது பணிமூப்பின் அடிப்படையிலேயே நடந்து வந்தன. இந்த நடைமுறை இயல்பானதாகவும் இவர்களுக்கு உவப்பானதாகவும் இருந்தது.

 அரசாணைண் 243 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணிமூப்பை மாநில அளவிற்கு கொண்டு செல்கிறது. இதன்மூலம் இவர்களது பதவி உயர்வும், பணியிட மாறுதலும் மாநில பணிமூப்பு அடிப்படைக்கு நகர்கிறது. இது இவர்களுக்கு அந்நியமான ஒன்றாகத் தோன்றுகிறது.

 இந்த 243 ஐ நீக்குவதால் எவ்வளவு கோடி இழப்பு வரும் என்று இந்த அரசு இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறது என்று தெரியவில்லை.  

 அநேகமாக இந்தக் கட்டுரை அச்சேறிக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு போராட்டத்தை ஜேக்டோ-ஜியோ நடத்தி இருப்பார்கள். 23.03.2025 அன்று மாவட்டத் தலைநகரங்களில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினிப் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.

 நீங்கள் செய்வதாக உறுதியளித்ததைத் தவிர வேறொன்றையும் இவர்கள் கோரவில்லை. எனவே, இயலும் கோரிக்கைகளை நிறைவேற்றியும் மற்றவை குறித்து சங்கங்களோடு இணக்கமாக உரையாடவும் அரசு முன்வர வேண்டும்

 -- புதிய ஆசிரியன், ஏப்ரல் 2025   

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...