காங்கிரஸ் இயக்கத்தில் இரட்டை உறுப்பினர் முறை அங்கீரிக்கப் பட்டிருந்த காலம்.
இடதுசாரி சிந்தனை கொண்டவர்களும் இடது சாரிகளும் சோசலிஸ்ட் கட்சியிலும் காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினராக இருந்தனர். தமிழ் நாட்டில் தோழர்கள் பி. ராமமூர்த்தி, ஜீவா போன்றவர்கள் இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
சோசலிசத்தையும் சோவியத் ரஷ்யாவையும் அறவே பிடிக்காத பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர்.
சோவியத்தையும் சோசலிசத்தையும் வறட்டுத்தனமாக எதிர்த்தவர்களில் ஒருவர் மினுமசானி. அவர் போகும் இடங்களில் எல்லாம் அவை இரண்டிற்கும் எதிராக நஞ்சைக் கக்கும் வழக்கத்திலிருந்தார்.
அவர் ஒரு முறை சென்னையில் பேச வந்திருந்தார். அவர் பேச இருந்த பகுதி அங்கிருந்த அப்போதைய இளம் தோழர்களால் சோசலிச மற்றும் சோவித் ஆதரவை பூசிக் கொண்டிருந்தது.
பேச வந்திருந்த மினு மசானிக்கு இந்த விவரம் எடுத்துச் சொல்லப் பட்டது. தனது சோவியத் மற்றும் சோசலிச பேச்சிற்கு என்ன வரவேற்பு இருக்குமோ என்ற அச்சத்தோடுதான் மினு மசானி பேசினார். ஆனாலும் கொஞ்சமும் சமரசமின்றி தன் நிலையினின்று கொஞ்சமும் பிசகிப் போகாமல் சகட்டுமேனிக்கு கிழி கிழி என்று சோவியத்தையும் சோசலிசத்தையும் கிழித்துப் போட்டார்.
திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டாடியது.
எல்லோரும் சொல்வது போல் இல்லை. இங்கும் சோவியத் மற்றும் சோசலிச எதிர்ப்பே இருக்கிறது என்று மகிழ்ந்து திரும்பினார்.
எல்லாம் தெரிந்ததாய் நினைத்திருந்த அவருக்கு தெரியாமல் போனது இதுதான்,
அவரது ஆங்கில பேச்சினை தமிழில் பெயர்த்துக் கொண்டிருந்த தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள் அவரது சோவியத் மற்றும் சோசலிச எதிர்ப்பு உரையை ஆதரவு உரையாக மொழி மாற்றியிருந்தார்.
09.04.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்