Sunday, March 31, 2013

காலிருக்கு... செருப்பிருக்கு....

“ மரணத்திற்குப்
பிறகு
மறு பிறப்பு
இருந்துடுமோ
என்ற பயத்திலேதான்
நாங்கள்
தற்கொலைக்குக் கூட
முயலுவதில்லை”

என்று எழுதுகிறார் ராதா சிவா என்ற முக நூல் நண்பர். இதைவிட  அழுத்தமாக  தலித் மக்களின் வலியை உணர்த்திவிட முடியும் என்று நான் நம்பவில்லை.

வாழ இயலாமையின் ரணத்தை, அவலத்தை, மனிதனாய் வாழ விடாத கொடூர அயோக்கியத் தனத்தைதான் இது வரை பார்த்திருக்கிறோம். இந்தக் கொடுமைகளை, அவமானம் தரும் வலியை சகிக்க மாட்டாமல் தற்கொலை செய்வதை பார்த்திருக்கிறோம்.

இதுவும் பொறுக்காமாட்டாமல்,

தற்கொலையின் மூலம் உனது ரணத்திற்கும் அவமானத்திற்கும் முடிவு கட்டவாப் பார்க்கிறாய் என மறு பிறப்பின் சிந்தனை தடுக்கிறது. மறுபிறப்பு என்று ஒன்று இருந்து, மீண்டும் தலித்தாகப் பிறக்க நேர்ந்துவிட்டால் மீண்டும் இதே கேவலங்களை செய்யத் தானே இந்தச் சமூகம் தள்ளும் என்கிற பயமேகூட பல தற்கொலைகளைத் தடுக்கிறது.

 வழக்கம் போல ஒரு பின்னிரவு வேலை, நல்ல தூக்கக் கலக்கத்தோடு நண்பர்களின் வலைகளையும் முக நூல் பக்கங்களையும் மேய்ந்து கொண்டிருந்தபோது தம்பி சமரன் வலையில் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.


                                                  

இந்தப் படத்தைப் பார்த்ததும் தூக்கமும் கலக்கமும் எங்கோ பறந்தோட கோவம் மட்டுமே உடலெங்கும் அப்பிக் கொண்டது.


பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் கைகளில் செருப்புகள். செருப்பு வாங்க இயலாமல் வெறுங்காலோடு பள்ளிகளுக்குப் போகும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். அப்படியே மனசு சுக்கல் சுக்கலாய் நொறுங்கிப் போகும். பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா மிதியடிகளை வழங்கியமைக்காகவே இவர்கள் செய்த பிழைகளில் ஒரு பத்து பன்னிரண்டை தள்ளுபடி செய்தவன்.

கோவமும் கொந்தளிப்புமாய் அப்படியே உறைந்து போனேன்.


தெரு தாண்டும் வரை 
கைகளில் 
சுமக்க
தீர்ப்பளித்தீர்

கோபம் வரும்
எங்களுக்கும்

எங்களுக்கு 
கோபம் வரும் வேளை
எம்மெதிரே
நீங்களும் வரலாம்

கழட்ட வேண்டிய
தேவையும் இல்லை

கைகளில்தான் 
இருக்குக்கிறது

என்று எழுதினேன். டிசம்பர் மாத “காக்கைச் சிறகினிலே” இதழில் படத்தையும்  கவிதையையும் அட்டையில் போட்டோம்.

“இதெல்லாம் கொஞ்சம் அதிகமாத் தெரியல”

நண்பர்கள் கேட்டார்கள்.

 இது உண்மை என்பதை எவ்வளவு சொல்லியும் சிலர் நம்ப மறுத்தார்கள். எங்கே நாம்தான் தவறாய் புரிந்து கொண்டோமோ? என்று நாமே கொஞ்சம் குழம்புமளவிற்கு சிலர் இதை நம்ப மறுத்தார்கள்.

27.01.2013 அன்றைய தீக்கதிர் அதற்கு முந்தின நாள் கரூரில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில அமைப்புகள் இணைந்து கொள்ள மார்க்ஸிஸ்ட் கட்சி நடத்திய ஒரு போராட்டத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தது.

 “காலில் செருப்பணிந்து நடப்போம்”

என்ற பதாகையைப் பார்த்த போது, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்னமும் காலில் செருப்பணிந்து நடப்பதற்கு போராட வேண்டியிருக்கிறது.

ஒரு கதை. கந்தர்வன் எழுதியது என்று நினைக்கிறேன். அந்தக் கதையில் ஆண்டை ஒருவன் எல்லா தலித்துகளுக்கும் துண்டு வாங்கிக் கொடுப்பான். அதைப் பார்த்த அவனது நண்பன் இவர்களுக்கு எதற்கு துண்டு என்று கேட்பான். அவன் சொல்வான், “அவனிடம் துண்டு இருந்தால்தானே நம்மைப் பார்த்ததும் இடுப்பிலே கட்டுவான்.” 

தன்னைக் கண்டதும் தோளிலிருந்து துண்டை இடுப்பிலே கட்டுவதை ரசித்துத் தொலைத்திருக்கிறது இந்த இடைச் சாதி சமூகம். இதன் நீட்சியாகத்தான் காலில் அணிந்து வந்த செருப்பை கைகளிலே சுமக்க வைத்தும் அழகு பார்த்திருக்கிறது.

பெரம்பலூருக்குப் பக்கத்தில் பேரளி என்றொரு கிராமம். ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தலித் மாணவனை மரத்திலே கட்டிப் போட்டு சித்திரவதை செய்தனர். அந்த அளவு தண்டனைக்கு அவன் என்ன குற்றம் செய்தான். வகுப்பிற்கு நேரமாகிவிடவே மிதி வண்டியைசற்று வேகமாக மிதிக்கிறான்.

அவனைக் கட்டி வைத்து சித்திர வதை செய்ததற்கு காரணமாக சொன்னார்கள்,

“ என்ன தைரியம் இருந்தால் குடியானத் தெருவுல சைக்கிள ஓட்டிட்டு வருவான்?”


இதை எதிர்த்து சுபாஷன் அலி மற்றும் பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி ஒரு சைக்கிள் பேரணியை நடத்த முயன்றபோது அதற்கு தடை விதிக்கப் பட்டது. அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் சொன்னார் “ எல்லாம் அமைதியாய்தானே இருக்கிறது. ஏன் இப்படி வம்படித்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்புகிறீர்கள்?”

அவரது விளக்கம் இதுதான்,

பையன் சைக்கிள் ஓட்டினான். அவர்கள் கட்டி வைத்து உதைத்துள்ளார்கள். இத்தோடு பிரச்சினை முடிந்து ஊர் அமைதியாக இருக்கிறது. ஏன் அந்த அமைதியைக் கெடுக்கிறீர்கள்  என்பதுதானே.

இத்தனைக்குப் பிறகும் ஊர் அமைதியாக இருக்கும் என்றால் அது அசிங்கம் அல்லவா? இந்தக் கொடுமைக்குப் பிறகும் அமைதியாக இருக்க அது என்ன மயானமா?


இவை எதனினும் கொடிய வலியை கீழே உள்ள படங்கள் தரும்,
சத்தியமங்களம் பக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் எடுக்கப் பட்டப் படம் என்று சொல்கிறார்கள்.

அங்கு தலித் மாணவிகளை மட்டும் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்திருக்கிறார்கள். “உங்க அம்மாவும் அப்பாவும் செய்கிற வேலைதானே. கூச்சப் படாம செய்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு 500 கும் குறைவான ஊதியம்தான். எனவே இந்த வேலைக்கு யாரும் வர மறுக்கிறார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்தே தனியாக ஒரு போராட்டம் நடத்த வேண்டும்.

மாதம் முழுக்க பள்ளியில் உள்ள கழிவறைகள் அனைத்தையும் சுத்தம் செய்வதற்கு இவ்வளவு குறைவான ஊதியம் என்பது கொடுமையின் உச்சம். முதலில் அவர்களது நேர்மையான ஊதியத்திற்காக பொது மக்கள் இணைந்து போராட வேண்டும். நமது குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் தூய்மையாய் இருத்தல் அவசியம் என்பதை உணர்ந்தால் இது சாத்தியமே.

இந்தச் சூழலில் தங்கள் பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்வதில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் பங்கு உண்டுதான். அந்த வகையில் பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்வதில் இருவருக்கும் நிச்சயம் கடமை உண்டு.

மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குள்  ஒரு முறை வைத்துக் கொண்டு அதன் வழி இந்த வேலையை செய்தால் பாராட்டலாம். ஆனால் தலித் குழந்தைகள் மட்டுமே கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நிலை பள்ளிகளிலேயே இருக்குமானால் அதை எப்படி சகித்துக் கொள்வது.

எனக்கொன்று தோன்றுகிறது,

அக்கறையுள்ள நண்பர்கள் ஒன்றிணைவது. முகநூல் மற்றும் ட்விட்டர் இருக்கும் போது இது ஒன்றும் சாத்தியமில்லாத செயல் அல்ல. த.மு. எ. க.ச, கலை இலக்கிய பெரு மன்றம், இடதுசாரிக் கட்சிகள், மற்றும் வி சி போன்ற அமைப்புகளின் தோழர்கள் ஒருங்கிணைந்து தத்தமது பகுதியில் உள்ள பள்ளிகளைக் கண்காணித்தால் என்ன?

சட்டம் ஒன்றும் அவ்வளவு வலுவாக இல்லை." sc & st prevention of atrocity act" ன் மூலம் பதியப்படும் வழக்குகளில் 3 சதவிகிதத்திற்கும் குறைவான அளவு வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைக்கிறது என்று வழக்கறிஞர் கிறிஸ்டோஃபர் சொல்கிறார்.

எனவே இதை ஒழிக்க வேண்டுமெனில் அக்கறையுள்ள தோழர்கள் இயக்கமாய் ஒன்றிணைய வேண்டும்.

சாத்தியமானதே.

நன்றி : “ காக்கைச் சிறகினிலே ”

Thursday, March 21, 2013

என்ன வாங்கிவிடப் போகிறீர்கள்..." நன்றாயிருந்தது
வடை சுற்றிய தாளில் 
கவிதை"

என்று ஒரு முறை எழுதினேன். எப்போதாவதுதான் அப்படி ஒரு அபூர்வமான வாய்ப்பு கிடைக்கும். கிடைத்தற்கரிய  அபூர்வமான வாய்ப்பு அன்று கிடைத்தது.

நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டே தேநீர் குடித்து வரலாம் என்று கடைக்குப் போனோம். தேநீர் கேட்டால் ஆளுக்கொரு வடையையும் கட்டாயப் படுத்தித் தந்தார் கடைக்காரர்.

ஒரே உப்பு. வாயில் போட்ட துண்டு வடையைத் துப்பி விட்டு எஞ்சிய வடையை தொட்டியில் கிடாசிவிட்டு வடைத் தாளைக் கசக்கி எறியப் போனபோதுதான் அதில் கவிதை மாதிரி ஏதோ கண்ணில் பட்டது.

பார்த்தேன். கவிதையேதான்.

"பூக்களை 
விற்ற காசில்
என்ன
வாங்கிவிடப் போகிறீர்கள்
பூக்களை விட அழகாய்"

என்ற துருக்கிக் கவிதையோடு ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.

ஆஹா! என்னமாய் எழுதியிருக்கிறான். ஆமாம் பூக்களை விற்ற காசில் பூக்களை விட அழகாய் எதை வாங்கி விட முடியும்? அழகான அழகியல்.

ஒன்று துருக்கியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது துருக்கி படைப்புகளின் மொழிபெயர்ப்புகளைத் தேடிப் பிடித்து வாசித்துவிட வேண்டும். இப்படியாக அந்தக் கவிதையின் அழகில் லயித்து மூழ்கத் தொடங்கிய போது எங்கோ ஒரு மூலையில் உறுத்தவும் தொடங்கியது.

இது மேல் தட்டு மற்றும் நடுத் தட்டு வர்க்கச் சிந்தனையல்லவா? நமக்குள்ளும் இது வந்துவிட்டதா? நாம் வரட்டுத்தனமான அழகியலுக்கு அப்பாற்பட்டவன் என்பதுதானே நமது அடையாளம். அது பொய்யா? என்று ஏதோ ஒன்று குறுகுறுக்க ஆரம்பித்தது.

சாலை ஓரத்தில் வெய்யில் என்றால் காய்ந்து கொண்டும், மழை என்றால் நனைந்துகொண்டும் பூ விற்கும் பெண்ணிற்கு கவிழ்த்துப் போட்ட கூடையில் சுற்றப் பட்டுள்ள பூ முழுக்க விற்றால்தான் கந்து வட்டிக் காரனுக்கு அழுதது போக வீட்டில் உள்ள நான்கு வயிருகளுக்கும் அரை வயிறாவது நிறையும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் வழக்கமாய் பேருந்துகள் நிற்குமிடங்களிலும், ரயில்வே கேட்டுகளிலும் சின்னஞ்சிறிய பையன்களும், பெண் குழந்தைகளும் கைகளிலே சின்ன சின்னதாய் மல்லிககை மற்றும் கனகாம்பரப் பூப் பந்துகளை வைத்துக் கொண்டு பூ விற்கும் காட்சிகளை பயணச்ங்களின் போது நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

எவ்வளவு கடினமான வேலை தெரியுமா இது? தேசிய நெடுஞ்சாலைகளை உயிரை வெறுத்துக் கடப்பதும், பேருந்து நின்று பயணிகளை அவசரம் அவசரமாய் ஏற்றி, இறக்கி விட்டு மீண்டும் கிளம்பும் முன் கிடைக்கும் அந்த சின்ன கால இடைவெளிக்குள் கஸ்டமர்களை பிடிக்க வேண்டும், பூவைக் கொடுத்து, காசு வாங்கி மீதியைத் தரவேண்டும். 

சில நேரங்களில் பூவைக் கொடுத்துவிட்டு அந்தப்  பிள்ளை, காசுக்காக காத்து நிற்கும் அவஸ்த்தை இருக்கிறது பாருங்கள், அதைச் சொல்லி மாளாது.பல நேரங்களில் காசைப் பெருவதற்குள் பேருந்து நகரத் தொடங்கி விடும்.காசினை வாங்குவதற்காக அந்த சிறுவர்கள் பேருந்தோடே கூட ஓடி வருவதையும் பார்க்க முடியும்.

பூவை வாங்கியவர்கள் காசை எடுத்து வெளியே எறிவதையும் நம்மால் பார்க்க முடியும். அதைபொறுக்க அந்த சிறுவர்கள் படுகிற அவஸ்தை இருக்கிறதே, அப்பப்பா உசிரே போய்விடும். சரியான சில்லறை எடுக்க இயலாத சிலர் பூக்களை எறிந்துவிடுவதும் உண்டு. கீழே விழுந்த பூவை மீண்டும் விற்கவும் முடியாது.

சிலரோ இரண்டையும் செய்யாமல் போய் விடுவதும் உண்டு.

இந்தக் குழந்தைகளின் அவலத்தை, துயரத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?

இந்தக் குழந்தைகளிடமும், பூக்காரப் பெண்களிடமும் போய்

"பூகளை விற்ற காசில் 
என்ன வாங்கிவிடப் போகிறீர்கள் 
பூக்களை விட அழகாய்?

என்று கேட்டால் நம்மை கொன்று போட மாட்டார்களா?

அவர்களைப் பொறுத்தவரை பூ என்பது ஒரு வணிகப் பொருள் என்கிற எல்லை தாண்டி அவர்களை இந்தச் சமூகம் எங்கே யோசிக்க அனுமதித்திருக்கிறது? பூக்களின் மலர்ச்சியையோ அழகையோ ரசித்து அனுபவிக்கிற அவகாசத்தை அவர்களது வயிறுகள் அவர்களுக்கு வழங்கியதே இல்லை.

எனில் இந்தக் கவிதை அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனதா? இதை ரசிக்க முடிகிறதே என்னால். என்றால் நான் உழைக்கும் திரளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறேனா?

இரண்டும் இல்லை. உழைக்கும் மக்களும் பூக்களின் அழகை, இந்தக் கவிதையின் அழகை ரசிக்கிற வாய்ப்பை பெறுகிற மாதிரி அவர்களது வாழ்க்கையை மாற்றித் தருகிற ஒரு போராட்டத்தை நோக்கி பயணப்பட வேண்டும் என்கிற சிந்தனை இல்லாமல் போனதுதான் குற்றம்.

அந்தத் தாளில் இருந்த செய்தியை வாசித்தேன்.

கஸ்தூரி என்கிற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிற மாணவி பள்ளிக்குப் போன நேரம் போக ஒரு பேருந்து நிலையத்தில் அமர்ந்து பூ விற்கிறாள். வியாபாரம் இல்லாத நேரத்தில் அங்கேயே அமர்ந்து படிக்கிறாள். அங்குள்ள  ஆட்டோ ஓட்டுநர்கள் அவளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பூ விற்ற காசைக் கொண்டுதான் அந்தக் குழந்தை படிக்கிறாள் என்பதாக அந்த செய்தி நகர்கிறது. ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி அபாண்டமாக  பேசும் உத்தம சிகாமணிகளுக்கு இந்தச் செய்தி வாசிக்க கிடைக்குமானால் எவ்வளவு நன்றாயிருக்கும்.

" மலை வாழையல்லவோ கல்வி" என்கிறார் பாரதுதாசன். வாழைப் பழங்களிலே  மலை வாழை மிகவும் சுவையானது என்பதால் அப்படிச் சொன்னார். வாழைப் பழங்களிலேயே மலை வாழைப் பழம் மிகவும் அதிக விலையானது. கல்வியும் இன்று எதையும் விடவுமதிக விலையில் விற்பதால் "மலை வாழை அல்லவோ கல்வி" என்பது இன்னொரு விதத்திலும்  மிக அசிங்கமாகப் பொருந்தவே செய்கிறது. 

" சொட்டுக் குழம்புக்கும் 
சோற்றுக்கும்
கையிலொரு துட்டுக்கும்
கண்ணயர்ந்து தூங்குவதற்கும்
கட்டத் துணிக்கும்
நல்ல
பணக்காரணாக்கும் படிப்பு" 

என்றும் படிப்பு என்னத்தையெல்லாம் தரும் என்றும் சொன்ன பாரதி தாசன் மட்டும் படிப்பை வாங்க இந்தப் பிள்ளைகள் படும் பாட்டை பார்க நேர்ந்திருந்தால்  நொந்தே போயிருப்பான்.

பூக்களை விற்று அதைவிட அழகாய் என்ன வாங்கப் போகிறீர்கள் என்கிறான் கவிஞன். பூக்களை விற்றுதான் கல்வியை வாங்குகிறேன் என்கிறாள் குழந்தை கஸ்தூரி.

ஒருமுறை சமயபுரம் டோல்கேட்டில் பூ விற்கும் ஒரு சிறுவனைக் கேட்டேன்,

"இப்படி ரிஸ்க் எடுத்து ஓடி ஓடி பூ விற்க்கிறாயே, எதுக்குப்பா?"

"டியூஷன் பீஸ், எக்ஸாம் பீஸெல்லாம் கட்டனும் சார்."

சாலையில் உயிரையேப் பணயம் வைத்து பூக்களை விற்கும் குழந்தைகளின் வருமானம் எதற்காக செலவிடப் பட்டாலும் அது குறித்து மொத்த சமூகமும் கவலை கொள்ளவே வேண்டும்.

குழந்தைகள் கல்வி கற்பதற்காக இப்படி உயிர் போக உழைக்க வேண்டிய நிலமை கண்டு நாம் சத்தியமாய் வெட்கப் படத்தான் வேண்டாமா?

ஒன்று திரண்டு அரசைக் கேள்வி கேட்க வேண்டாமா?
அதற்கு தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு தாண்டி கொஞ்சம் சொரனையோடு கூடிய அக்கறை வேண்டு
ஆமாம் அது நமக்கு எப்போது வரும்?

Thursday, March 14, 2013

வைத்த பெயர் தெரியாமல்...


என்ன தெரிந்து என்ன

வகுப்பறையில் பசங்க
எனக்கு
வைத்த பெயர் தெரியாமல்

Saturday, March 9, 2013

சேலம் மகளிர் தின விழா


கோவை மண்டல பொது இன்சூரன்ஸ் சங்கமும் சேலம் அரசு மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி வந்தேன்.

தோழர் மோகனா மூலம் வந்த வாய்ப்பு.

“ அப்பா மோகனா ஆண்ட்டி”

வெள்ளச்சி நீட்டிய அலைபேசியை வாங்கினேன்.

“ சொல்லுங்க தோழர்”

“ கோவை மண்டல பொது இன்சூரஸ் ஊழியர் சங்கமும் சேலம் அரசு மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்தும் மகளிர் தின விழாவில் பேச இயலுமா?”

“ பேசலாம்”

” சரி, இன்னும் கொஞ்சம் நேரத்துல ஷோபனா பேசுவாங்க இது பத்தி”

“சரி”
மேலே உள்ள தோழர் ஷோபனா அலைபேசினார்கள்.

அருமையான ஏற்பாடு. ஏறத்தாழ அறுநூறுக்கும் அதிகமான குழந்தைகள். இடம் இல்லாமல் தரையிலும் அமர்ந்து கேட்டார்கள். 11.53 ற்கு ஆரம்பித்து 01.08 கு முடித்தேன்.

எத்தனை உற்சாகம், எத்தனை ஆர்வம். மனித மலத்தை மனிதன் அள்ளும் அவலம் பற்றி பேசியபோது ஒன்றிரண்டு குழந்தைகள் அழுவதைப் பார்த்தேன். இந்தக் குழந்தைகளோடு பேச ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தோழர் மோகனாவிற்கு மனதார நன்றியை சொல்லிக் கொண்டேன்.
தோழர்கள் குரு, கருப்பையா, சோபனா ஆகியோருக்கும் இந்த வாய்ப்பிற்காக நன்றி சொல்ல வேண்டும் . அப்படி ஒரு குழந்தைகளின் திரள்.

பொதுவாகவே கல்லூரி குழந்தைகள் கேட்க மாட்டார்கள், பொறுப்பற்றவர்கள் என்பதை நிராகரிக்கிறேன்.

எதைப் பேச வேண்டுமோ அதை, கேட்கிற மாதிரி பேசினால் கேட்கவே செய்வார்கள்.Wednesday, March 6, 2013

ஆஷர்மில் பழநிச்சாமி


முப்பது ஆண்டுகளுக்குமேல் இருக்கும். 

தோழர் ராஜாமணி எழுதிய “ ஆஷர்மில் பழநிச்சாமி” என்ற சிறிய நூலினை கையில் திணித்த அண்ணன் நந்தலாலா,.

“ இந்த மாத சோலைக் குயில்களுக்கு இது பற்றி எழுது” 

அப்போது திருச்சி த.மு.எ.ச விலிருந்து சோலைக் குயில்கள் என்றொரு கவிதை இதழை மாதா மாதம் கொண்டு வந்து கொண்டிருந்தோம்.

ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமைகளிலும் திருச்சி பழக்கடை பூங்காவில் ஒரு பதினைந்து இருபது பேர் கூடிவிடுவோம். நான், நந்தலாலா, புதிய கம்பன், பொன்னிதாசன், அண்ணன் முகில், முகவை அழகுடையான் போன்றோர் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாது பங்கேற்போம்.

எல்லோரும் கவிதை வாசிப்போம். வர இயலாதவர்கள் எங்களில் யாருக்கேனும் கவிதைகளை அனுப்பி வைப்பார்கள். அதையும் அங்கே வாசிப்போம். மனுஷ்யப் புத்திரன் கவிதைகளும் அங்கே அந்த காலத்தில் வாசிக்கப் பட்டதுண்டு.

கவிதை வாசிப்பு முடிந்ததும் எல்லோருடைய கவிதைகளையும் அண்ணான் முகில் சேகரிப்பார். பிறகு ஒரு நாள் அவரது வீட்டில் ஆசிரியர் குழு கூட்டம் நடக்கும். வந்துள்ள கவிதைகளில் இருந்து சினிமா பாட்டுப் புத்தகம் அளவில் வரும் சோலைக் குயில்கள் தயாரிப்போம்.

அந்த இதழுக்குத்தான் அண்ணன் விமர்சனம் கேட்டார்.

கல்லூரியில் எங்கோ படித்துக் கொண்டிருந்த நேரம். பழநிச்சாமி ஆஷர் மில்லின் உரிமையாளர் போலும் என்கிற சராசரிப் புரிதலைத் தவிர வேறு எதுவும் ஆஷர்மில் பழநிச்சாமியைப் பற்றிஅந்தப் புள்ளியில் என்னிடமில்லை.

உள்ளே போகப் போகத்தான் விரிந்தது பிரமிப்பு. பழநிச்சாமி அந்த ஆலையில் பணியாற்றிய ஊழியர். தொழிற்சங்கத்தின் தலைவர்.

உரிமையாளார் பெயரோடு பொருத்திப் பேசப் படாத அந்த ஆலையின் பெயர் ஒரு ஊழியனோடு பொருத்திப் பேசப் படுகிறதென்பது அந்தக் காலத்தில் என்னை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

பொதுவாக தொழிற் சங்கத் தலைவர்கள் என்றால் வறட்டுத் தனமாக மோதும் குணம் கொண்டவர்கள் என்று என்னுள் செழித்து வளர்ந்திருந்த பிம்பத்தை அது சுக்கல் சுக்கலாக கிழித்துப் போட்டது.

அதில் வரும் ஒரு சம்பவம் தொழிற்சங்கத் தலைவர்கள் எவ்வளவு நெளிவு சுழிவுடன் எதையும் வென்றெடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அப்போது இடதுசாரி இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் தடை செய்யப் பட்டிருந்த நேரம். பழநிச்சாமியின் தலைக்கு பத்தாயிரம் ரூபாய் அரசாங்கம் விலை வைத்திருந்த நேரம்.

திருப்பூர் பகுதியில் தலைமறைவு வாழ்க்கை. மே தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று அந்த நிலையிலும் அவருக்கு ஆசை.

எல்லோரும் அசந்து உறங்கிய முந்தைய இரவில் மாறு வேடத்தில் வந்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே மே தின வாழ்த்து சொன்ன ஒரு தட்டியை கட்டுகிறார்.

அடுத்த நாள் அங்கே ஒரு பெரும் திரள் கூடுகிறது. மாறு வேடத்தில் பழநிச்சாமியும் அங்கே இருக்கிறார். தட்டியை அகற்ற எத்தனித்த காவலர்கள் பின் வாங்குகிறார்கள்.  தட்டியின் கீழ் மூலையில் களி மண்ணால் வெடி போன்று செய்து கருப்புத் துணியால் சுற்றி திரி இணைத்து கட்டியிருந்தார்.

அதற்கு கீழே “தோழர்கள் தொட வேண்டாம். தொடும் துரோகிகள் அழியட்டும்” என்று எழுதியிருந்தார்.

எந்தக் காவலர் நெருங்குவார்.

அப்போது ஒரு ரயில் வருகிறது.

மாறு வேடத்தில் இருந்த பழநி சொல்கிறார்,

“ ரயில் வந்தால் அதிர்ச்சியில் வெடித்துவிடும் வெடி”

“ என்ன செய்யலாம்?”

“ரயிலை நிறுத்துங்கள்”

“எப்படி?”

“இந்தக் கொடிகளைக் காட்டுங்கள்”

தயாராய் வைத்திருந்த சிவப்புக் கொடிகளைத் தருகிறார்.

காவலர்கள் சிவப்புக் கொடிகளோடு ரயிலை நிறுத்த ஓடுகிறார்கள்.

சிரிக்கிறார் பழநிச்சாமி.

எந்தக் காவலர்கள் செங்கொடியை அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் கைகளிலேயே  செங்கொடிகள்.

அவரது புன்னகை எவ்வளவு உன்னதமானது.

Saturday, March 2, 2013

காக்கைச் சிறகினிலே மார்ச் 2013                                                                          இந்த இதழில்...

ச. வீரமணி .................................................“சவார்க்கரும் காந்தி கொலை வழக்கும்”                                                            

ஏகன்.............................................................“ விநோதினி சுட்டெரிக்கும் கேள்விகள்”

ய.மணிகண்டன்.............................“ கு.ப.ரா. பெயரில் அவர் எழுதாத படைப்புகள்”

ஏகலைவன்.............................“ இன அழிப்புக்கு எதிராக என்ன செய்ய வேண்டும்”

பேராசிரியர் சி. பத்மநாதன்.....“ கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பே                         இலங்கையில் செல்வாக்கு பெற்ற மொழி   தமிழ்”

நீல பத்மநாபன்...................           “ க.நா.சு வின் விமர்சனப் பார்வை”

தஞ்சாவூர்க் கவிராயர்.............“எரிக்மில்லர் என்றொரு கதை சொல்லி”

ச.மோகனா...........................”எதிர் உயிரி மருந்துகளும் எதிர் விளைவுகளும்”

இரா. எட்வின்...............................................“பெரம்பலூர் வாசிக்கிறது”

                                                                சிறுகதைகள்
                                                      
                                                                  சாந்தா தத்

                                                          சங்கர நாராயணன்

                                                      சிதம்பரம் ரவிச்சந்திரன்

                                                                   கவிதைகள்


                                                                   இன்குலாப்

                                                         ஈரோடு தமிழன்பன்

                                                                    நீலமணி

                                                                  கோசின்ரா
                 
                                                                   ஹரணி

                                                                    பூரணா

தொடர்பு கொள்ள

வி முத்தையா
288, டாக்டர் நடேசன் சாலை
திருவல்லிக்கேணி சென்னை 600005
பேச 9841457503
kaakkaicirakinile@gmail.com
                                                                                  

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...