Saturday, December 31, 2011

2012


நேற்றுதான் ஒரு ”ஐ பேட்” வாங்கினேன். கடைக் காரப் பிள்ளையிடம் சொல்லி பழையப் பாடல்களாகப் பதிவு செய்து கொண்டேன். 

”எத்தனைப் பாட்டு தேறும்?” 

” 360 இருக்குங்க அப்பா. மிச்சம் இருக்கும் இடத்துல அடுத்த வாரம் ரெகார்ட் செய்து தரேங்கப்பா”

“இதுவே போதுண்டா சாமி. இதக் கேட்டு முடிக்கிறதுக்கு ஆயுசு இருக்குமோ என்னமோ?” சிரித்துக் கொண்டே வந்துவிட்டேன்.

ஒரு வழியாய் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தான் அதை இயக்கக் கற்றுக் கொண்டு இயக்கினேன்.

“உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் கலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ?”

என்ற ”படகோட்டி” படப் பாடல்தான் முதல் பாடல். திரும்பத் திரும்ப பத்துப் பதினைந்துமுறை பைத்தியக் காரனைப் போல் அதையே கேட்டேன். 2011 இல் நான் கேட்ட கடைசிப் பாடல் அதுதான்.

பிசைந்து எடுத்துவிட்டது. வாலியா, டி.எம். எஸ் ஆ யாரைச் சொல்வது. போட்டிப் போட்டுக் கொண்டு மீனவர் துயரத்தை பிழிந்து தந்திருக்கிறார்கள்.

“வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு”

என்ற இடத்தில் டி.எம்.எஸ் அழ வைத்துவிட்டார். நிலா விளக்கை நம்பியே பெரும்பகுதி இரவுகளை நகர்த்தும் தெற்குப் பகுதி மீனவனின் வாழ்வழித்து மின்விளக்கு எரிய வேண்டுமா?

“தனியாய் வந்தோர்
துணிவைத் தவிர
துணையாய் வருவோர் யாரோ?”

என்ற பகுதியும் அழவைக்கும். கூடங்குளம் அணு உலை எதிர்த்து துணிவோடுதான். போராடுகிறான்.

அவன் தனி ஆள் இல்லை என்பதை நிறுவ வேண்டாமா?

அணுவே இல்லாத பூமி நமது இலக்காகட்டும்.

இந்த ஆண்டில் நமது செயல் திட்டத்தில் இதுவே பிரதானமாகட்டும்.

எழுத முடிந்தோர் எழுதுவோம். பேச முடிந்தோர் பேசுவோம். வசப்படும் எல்லா வடிவக் கலைகளிலும் அணுவை எதிர்ப்போம், இந்த ஆண்டின் அசிங்கங்களில் ஒன்றான பரமக்குடி துப்பாக்கிச்சூட்டோடு நிறுத்து, இனியொரு முறை சேரியின் திசை நோக்கி துப்பாக்கியை நீட்டுபவன் எவனாயினும் சும்மா விடமாட்டோம் என்று சூழுரைப்போம்.

வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம், ஏன் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஆதிக்கத்திற்கெதிரான உழைக்கும் மக்களின் ஒடுக்கப் பட்ட மக்களின் எதிர்ப் பியக்கங்களில் பங்கேற்போம்.

உலகத்தின் தூக்கத்தை உசுப்பிக் கலைப்போம்.

வாழ்த்துக்கள்.

Thursday, December 29, 2011

கூடங்குளம் கரண்டு ஃபேக்டரி...



“எங்கள் கணவர் மார்களில் பெரும்பான்மையோர் குடிப்பதை அறவே நிறுத்தி விட்டார்கள். மீதமுள்ள சிலரும் குடிப்பதில் பெரும்பகுதி நிறுத்திக் கொண்டார்கள்.. கூடிய விரைவில் அவர்களும் முற்றாய் நிறுத்திவிடுவார்கள். எங்களை அடித்து துன்புறுத்துவதை நிறுத்திக் கொண்டதோடு வீட்டு வேளைகளில்கூட எங்களுக்கு கூடமாட ஒத்தாசை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்,” என்பதாக நீளும் மகிழ்ச்சியும் குதூகலமும் கலந்து கொப்பளிக்கும் பெண்களின் பேட்டியோடு நகர்கிறது இன்றைய (.28.12.2011) “நியூ இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்” இன் செய்தி ஒன்று.

யுகம் யுகமாக எது பெண்களை விடாது அழவைத்ததோ அதை முற்றாக அழித்துப் போட்டு அவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களை மலரச் செய்த தலைவன் யார்? அல்லது கடவுள்தான் யார்?

எந்தத் தலைவனாலும், இறைதூதனாலும் ஏன் இறைவனாலும் இது சாத்தியப் படாது. ஒரு மக்கள் போராட்டம் மட்டுமே இத்தகையதொரு மாற்றத்திற்கு காரணமாக அமைய முடியும் என்பது மீண்டுமொருமுறை நிறுவப் பட்டிருக்கிறது.

இடிந்தகரையில் நடைபெறும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் 134 வது நாள் நிகழ்வுகளை சேகரிப்பதற்காக சென்ற அந்தப் பத்திரிக்கையின் செய்தியாளர்களிடம் போராடிக்கொண்டிருக்கும் அந்த மண்னின் பெண்கள் கூறியது இது.

எந்தவொரு மகத்தான மக்கள் போராட்டமும் இது போன்ற உப விளைவுகளையும் சேர்த்தே கொண்டு வந்து சேர்க்கும் என்பதுதான் நமக்கு வரலாறு சொல்லும் பாடம்.

உப விளைவே இவர்களது வாழ்க்கையில் இவ்வளவு மாற்றத்தினையும் மகிழ்ச்சியையும் கொடுக்க வல்லது எனில் போரட்டத்தின் இறுதி விளைவு சத்தியமாய் இதைவிட கோடி கோடி மடங்கு மாற்றத்தையும் உறுதியாய் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்மால் உணர முடிகிறது.

”எங்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கினை போராட்ட நிதியாக வழங்கிவிடுகிரோம்” என்று நீளும் அவர்களது நேர்காணலோடு நீள்கிறது அந்த செய்தி. உண்மையை சொல்வதெனில் தினமும் தினமும் செத்து செத்துப் பிழைக்கும் அன்றாடம் காய்ச்சிகளான, அதிலும் அறைகுறை வருமானத்திற்கான உழைப்பின் பெரும்பகுதி நேரத்தையும் போராட்டத்திற்காகத் தியாகித்து விட்ட பனையேறிகளும் மீனவர்களும் கிடைக்கும் தங்கள் சொற்ப வருமானத்திலும் பத்தில் ஒரு பங்கை போராட்டத்திற்களித்து போராடுகிரார்கள் எனில் ஏன் அவர்கள் போராடுகிறார்கள்?

“ஏம்பா கூடங்குளத்து கரண்டு ஃபேக்டரி வரக்கூடாதுன்னு இப்படி வம்படிக்குறீங்களே. நல்லா இருப்பீங்களா நீங்க .?” என்று விஷ்ணுபுரம் சரவணனின் நண்பரிடம் அவரது நண்பர் ஒருவர் கூறினாராம். ஆக, அவரைப் பொறுத்தவரை கூடங்குளம் அணு உலை என்பது சோப்பு ஃபேக்டரி மாதிரி, கார் ஃபேக்டரி மாதிரி மின்சாரம் தயார் செய்யும் ஒரு ஃபேக்டரி. அது உற்பத்தியைத் துவங்கி விட்டால் மின் தடை வராது, ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் பேருக்கு பிழைப்பு கிடைக்கும். ஒரு பத்து பதினைந்து பேர் கடை வைத்துப் பிழைக்கலாம், சுத்துப் புறம் வளர்ந்து விரிவடையும். இன்னும் சொல்லப்போனால் மின்சாரத்தின் விலைகூடக் குறையும். அதை ஏன் பாழாய்ப் போன இவர்கள் இப்படி மல்லுக் கட்டிக் கொண்டு எதிர்க்கிறார்கள் என்பது அவரது ஆதங்கம். ஆமாம் கூடங்குளத்தில் கரண்டு ஃபேக்டரி ஏன் வரக்கூடாது?

மேலே சொன்ன எதுவும் உண்மை அல்ல என்பதை முதலில் சொல்லிவிட்டு தொடர்வதே சரியாக இருக்கும்.

”உலைக் கட்டுமானங்கள் மிகப் பாதுகாப்பன முறையில் கட்டமைக்கப் பட்டுள்ளன. மேகூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில்1988 இல் கோபர்ச்சேவ் மற்றும் ராஜீவ் இருவரும் கையொப்பமிடுகின்றனர் “அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின்” ஒப்புதல் பெறவில்லை. எனெவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க் குரெலெடுத்தது அமெரிக்கா. ஏறத்தாழ இந்த நிலையிலேயே இப்பகுதி மக்களும் உலைக்கு எதிரான தங்கள் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்கள். போராடுபவர்களைப் பார்த்து அரசும் இதன் ஆதரவாளர்களும் சொன்னார்கள் “அமெரிக்காவிடம் பணம் பெற்றுக் கொண்டு கூத்தடிக்கும் அமெரிக்க கைக்கூலிகள்” . இப்படிச் சொன்னவர்கள்தான் ஆட்சியே போனாலும் பரவாயில்லை அமெரிக்காவோடு அணு ஒப்பந்தம் செய்தே தீருவோம் என்று அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உத்தமர்கள். மக்களின் எதிர்ப்பிற்கும் அமெரிக்காவின் எதிர்ப்பிற்கும் ஒரே காரணம்தான் என்பதை ஒத்துக் கொள்வதற்கு நாம் ஒன்றும் அவர்கள் அளவிற்கு புத்திசாளிகள் இல்லை. ரஷ்யாவோடு ஒப்பந்தம் என்பதைத் தவிர அமெரிக்கா இதை எதிர்ப்பதற்கு வேறு காரணம் எதுவுமில்லை என்பது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் நன்றாகவே, மிக நன்றாகவேப் புரிகிறது.

லும் ரிக்டர் அளவில் ஆறு எண் வரைக்கும் நில நடுக்கம் ஏற்பட்டாலும் எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் உலை கட்டமைக்கப் பட்டுள்ளது. எனவே அச்சமே கொள்ளத் தேவையில்லை என்று அப்துல் கலாமே சொல்லியிருக்கிறார். அவரைவிட நீங்கள் என்ன பெரிய அறிவாளியா ?” என்றும் ஒரு புன்னகையோடு ஏளனிக்கிறார்கள் சிலர்.

சத்தியமாக அய்யா கலாம் அளவிற்கு நாம் படித்தவர்களோ அறிவாளிகளோ அல்லதான். ஆனாலும் அவர் சொல்லியிருக்கிற எல்லை அளவைக் கடந்து 6.5 ரிக்டர் அளவில் அந்தப் பகுதியில் எதிர் காலத்தில் ஒரு பூகம்பம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம் (அதைவிட அதிக அளவில்கூட நிலனடுக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமென்றே சொல்கிறார்கள்) அதன் விளைவுகள் புக்சிமா, செர்னோபில் மற்றும் அமெரிக்காவின் மூன்று மைல் அணு உலை விபத்துக்களைவிடக் கொடுமையானதாகத்தானே இருக்கும். ஒருக்கால் அப்படி ஒரு பேரிடரே வராது. நாங்கள் இறைவனிடம் ஐ.எஸ்.டி போட்டு பேசிவிட்டோம் என்று கூட இவர்கள் சொல்லக்கூடும். அவர்களுக்கும் ‘செர்னோபில் மற்றும் மூன்று மைல் அணு உலை விபத்துக்கள் பேரிடர் விபத்துகளால் ஏற்படவில்லை. மனிதத் தவறுகளும் இயந்திரக் கோளாறுகளுமே கூட உலைகள் வெடிக்க காரணமாகக் கூடும்’ என்பதே நமது பாமரத்தனமான பதில்.

ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீது நமக்கு இருந்தாலும் கலாம் அய்யா மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பும் மரியாதையும் எந்த ஆக நவீன அளவுகோளையும் தாண்டி நீளும் தன்மை கொண்டவை. ஆனால் அதற்கு சற்றும் பொருத்தமே இல்லாமல் “செர்னோபில் விபத்தில் வெறும் 55 பேர் மட்டுமே இறந்து போனார்கள்.அதை ஏன் இவ்வளவு பெரிது படுத்துகிறார்கள்” என்பது மாதிரி சொல்லி நம்மை சங்கடப் பட வைத்திருக்கிறார்.

அய்யோ அய்யா, 55 பேர் செத்தது பெரிது இல்லையா? இதைச் செய்தால் ஒரே ஒருவன் செத்துப் போவான் என்று தெரிந்த பின்னும் அதை ஒருவன் செய்தால் அவன் மனிதன்தானா அய்யா? விழித்துக் கொண்டே கனவு காணும் பித்துக்குளி கூட இப்படி உளற மாட்டானே. எப்படி இப்படி மாறினீர்கள் என்று நான் கேட்க மாட்டேன். இதுதான் நீங்கள் என்பது நன்றாகவே தெரியும். ஆனால் இவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிற தைரியம் எப்படி வந்தது? எதற்கு சுற்றி வளைத்து பேசிக் கொண்டு, நேரடியாய் சொன்னால் மட்டும் என்ன செய்துவிடுவார்கள் என்கிற, ஆமாண்டா அப்படித்தான் சொன்னேன் என்ன செஞ்சுடுவ? என்று கேட்கிற திமிர் கலந்த தொனி இருக்கிறது பாருங்கள் அதுதான் நாங்கள் சற்றும் எதிர் பார்க்காதது. அது சரி, எத்தனை பேர் செத்தால்தான் அதை நீங்கள் ஒரு பொருட்டாய் கொள்வீர்கள்? யூனியன் கார்பைடு மாதிரி குவியல் குவியலாய் செத்துத் தொலைத்தால்தான் உங்களுக்கு அதை ஒரு பொருட்டென ஏற்க மனமிரங்குமா?

அது சரி, செர்னோபில் கூட ஒரு விபத்து. செர்னோபில் விபத்தில் கூட 55 பேர்தானே செத்தார்கள் என்பதன் மூலம் எதை எங்களுக்கு உணர்த்த வருகிறீர்கள் அய்யா?. பயப்படாதீர்கள், அப்படியே விபத்து ஏதேனும் நிகழ்ந்தாலும் சொற்ப அளவில்தான் சாவு இருக்கும் என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் இடது கால் சுண்டு விரலிலிருந்து உதிர்ந்து விழும் மண்ணளவிற்கும் பொருட்டில்லாத நான் கேட்கிறேன், எதிர்பார்க்கமல் ஏற்படும் உயிரிழப்பை விபத்து என்று கொள்ளலாம். ஆனால் சொற்ப அளவே நிகழும் என்ற அளவில் எதிர் பார்த்துவிட்டாலே அது விபத்தல்ல, கொலையாயிற்றே அய்யா?. உங்களைப் போன்ற சான்றோர்களையும் மேதைகளையும் எதிர்கால சந்ததியினர் கொலையாளிகளாகப் பார்த்துவிடக் கூடாதே என்பதற்குத்தான் இப்படிப் போராடித் தொலைக்கிறார்கள் .



2004 நவம்பர் மாதத்து “current science" இதழில் கேரளப் பல்கலைகழகத்தின் நில இயல் துறையை சேர்ந்த முனைவர் பிஜி அவர்களூம் சென்னை ஐ.ஐ.டி ராம்குமார் அவர்களும் கூடங்குலம் பகுதி எரிமலைக் குழம்புகளால் ஆனது என்று எழுதியிருப்பதை தனது பேட்டி ஒன்றில் மாலதி மைத்ரி மேற்கோள் காட்டியிருப்பதை இப்போது நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

"மக்கள் அதிகமாய் நடமாடாத பகுதியில்தானே அணு உலை அமைக்கப் படுகிறது. பிறகு ஏன் இவ்வளவு பதறுகிறீர்கள்?” என்பது மாதிரியான ஒரு கேள்விக்கு, மக்கள் நடமாட்டமே இல்லாதப் பகுதியில்தான் இவை அமைக்கப் படவேண்டும் என்ற 29.04.1991 அன்று வெளியிடப் பட்ட எண் 828 (தமிழ்நாடு பொதுப் பணித்துறை) என்ற அரசாணையை பொருத்தமாக சுட்டிக் காட்டி இது அந்த அரசாணைக்கு புறம்பானது என்று சொல்வதையும், சுற்றுலாத் தளங்கள் மற்றும் புகழ் பெற்ற இடங்களுக்கு 20 கிலோமீட்டர் தொலைவு வரை அணு உலைகளை நிறுவக் கூடாது என்கிற AERA விதிகளையும் இது மீறுவதாக அவர் மிகச் சரியாக கூறுவதையும் நம்மால் உதாசீனப் படுத்திவிட முடியாது.

கல்பாக்கத்தில் இத்தனை ஆண்டுகளாக ஒரு பாதிப்பும் நிகழ்ந்து விடவில்லையே. அப்புறம் ஏன் இவ்வளவு பதட்டம் என்று கூட சொல்கிறார்கள். விபத்து திடீரென்றுதான் வரும் என்று நாம் அவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நம்மைவிட அவர்களுக்கு இது மிக நன்றாகவே தெரியும். கல்பாக்கத்தில் பெரிய அளவில் விபத்துக்கள் நிகழவில்லையே தவிர அதன் பாதிப்புகளான கேன்ஸர் , ஆறு விரல் குழந்தைகள், மற்றும் பல்வேறு விதமான எலும்பு சம்பந்தமான வியாதிகள் இருக்கவே செய்கின்றன. கூடவே அவற்றை எதிர்த்து போராட்டங்களும் அந்தப் பகுதியில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன சோகம் எனில் அணு உலைக்கு எதிராகப் பேசுபவனை குண்டர் சட்டத்திலே போடு என்று பேசினால் பக்கம் பக்கமாகப் போடும் பத்திரிக்கைகள் அவற்றுக்கெதிரான போராட்டங்களை கண்டு கொள்வதே இல்லை.

மின்சாரம் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதைத் தவிர வேறு மாற்றே இல்லையே என்கிறார்கள். ஒரு மூன்று மாதங்களுக்கு முன்னால் எந்தப் பத்திரிக்கை என்று சரியாய் நினைவில்லை தினத் தந்தி அல்லது தினகரன் இலவச மலரில் வந்திருந்த ஒரு செய்தி மாற்று சாத்தியமே என்று சொல்கிறது.

ஏழாம்வகுப்பு அளவில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப் பட்ட விருதுகளைப் பற்றியது அது. ஒருவன் வீட்டிலிருக்கும் மின் விசிரியை தொடர்ந்து உற்று நோகியதன் விளைவாக ஒரு ஆய்வுக்கு நகர்கிறான். சக்கரம் சுற்றினால் மின்சாரம் எடுக்கலாம். மின்விசிரிதான் சுழல்கிறதே அதிலிருந்து மின்சாரம் எடுக்கலாமே என சிந்திக்கிறான். விளைவு அதற்கேற்றார்போல் ஒரு டைனமோ தயார் செய்கிறான். மின்விசிறி இயங்கும் போது ஒரு பெல்ட்டால் இணைக்கப்பட்ட

அதன் அருகில் பொருத்தப் பட்டுள்ள டைனமோவின் சக்கரமும் சுழற்றப் பட்டு மின்சாரம் தயாராகிறது. ஒரு அரை மணி நேரமானதும் மின் இணைப்பை துண்டித்து விடலாம். அரை மணி நேரம் அந்த டைனமோ உற்பத்தி செய்து சேமித்து வைத்திருந்த மின்சாரத்தைக் கொண்டு அடுத்த அரை மணி நேரம் மின்விசிறி ஓடும். இந்த அரை மணி நேரத்தில் மின் விசிரி இயங்கும் போது மீண்டும் டைனமோ மிசாரத்தை உற்பத்தி செய்யும்.

இன்னொரு மாணவன் சுழலும் ரயில் சக்கரங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க இயலும் என்று நிறுவி இருக்கிறான்.

ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மணி நேரம் கூட மின்வெட்டே இல்லை என்ற செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடனில் பார்த்தேன். அவர்கள் காற்றாலை , சூரிய ஒளி போன்றவற்றால் மின்சாரம் தயாரிப்பதாகவும், தங்கள் தேவைக்கு மிஞ்சிய மின்சாரத்தை அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தருவதாகவும் படித்தேன்.

இப்படியெல்லாம் மாற்றுப் பாதையில் வெற்றிகரமாக பயணிக்க பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்களாலேயே முடிகிறது எனில் அணு உலையை அமைத்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நிற்கும் இந்த மேதைக்ளால் முடியாதா?

வெய்யில் எவ்வளவு மகத்துவமானது என்பதை எஸ்.ரா விடம்தான் கேட்க வேண்டும். வெய்யிலின் தீராக் காதலர் அவர். மகத்துவம் மிக்க வெய்யிலை எப்படி வீணடிக்கிறோம்? ஒவ்வொரு சொட்டு வெய்யிலிலும் எவ்வளவு மின்சாரம் இருக்கிறது என்பது இந்த அணு உலையின் காதலர்களுக்கு ஏன் இன்னும் புரியாமல் இருக்கிறது?.அல்லது ஏன் இன்னும் புரியாத மாதிரி நடிக்கிறார்கள்.அல்லது என்ன செய்தால் இவர்களுக்குப் புரியும். அல்லது புரிந்தேதான் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வார்கள்.

தமிழகத்தில் இவ்வளவு மின் தேவையும் இருளும் இருக்கிறபோது என் பாட்டனையும் அப்பனையும் தம்பி தங்கைகளையும் கூண்டோடு கொலை செய்த ராஜபக்‌ஷேவை திருப்தி செய்வதற்காய் கடலிலே குழாய் அமைத்து வழங்க இருக்கும் மின்சாரத்தை நிறுத்தினால் போதாதா?

“செர்னோபில்லில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது.மாறாக இது மொத்த உலகத்தையேபாதித்துள்ள விஷயமாகக் கொள்ள வேண்டும்” என்று கோபர்ச்சேவ் சொன்னதையும் இங்கு பதிவது சரியாக இருக்கும்.

ஏற்கனவே 14000 கோடிகளுக்கு மேல் கொட்டியாகிவிட்டது . இவ்வளவு செலவு செய்த பிறகு விட்டுவிட முடியுமா?. வீணாக்க முடியுமா? என்றும் அடிக்கடி கேட்கிறீர்கள் சான்றோர்களே?.

1,76,000 கோடியிலிருந்து வேண்டுமானால் இந்த 14000 கோடியை கழித்துக் கொண்டு அருள்கூர்ந்து எங்களை விட்டு விடுங்களேன். 14000 கோடி செலவளித்து செய்த சவப் பெட்டி என்பதற்காக செத்துவிடு என்றால் இயலாது என்று போராடுவதற்காக எங்களை மன்னித்து விடுங்கள் பெரியோர்களே.

நன்றி: “காக்கைச் சிறகினிலே” “ அலை செய்திகள்” இணைய இதழ்

Tuesday, December 13, 2011

சிரிக்கும் துறவிகள்


"காக்கை சிறகினிலே” இந்த மாத இதழில் ஜென்னைப் பற்றி நீண்ட, சுவையான கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார் அய்யா ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி. இதை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். அதனூடே “சிரிக்கும் துறவிகள்” என்ற கதை ஒன்றினை சொல்கிறார். அதை எனது மொழியில் இங்கே தருவதை எனது இன்றைய கடமையாகவே கருதுகிறேன்.

மூன்று துறவிகள் சீனாவில் இருந்தார்கள். மூவரும் சதா சர்வ காலமும் சிரித்துக் கொண்டே இருந்ததால் அவர்களை மக்கள் “சிரிக்கும் துறவிகள்” என்றே அழைத்தார்கள். எதற்காக சிரிக்கிறோம் என்பது அவர்களுக்கே விளங்காத நிலையில் பையப் பைய மக்களும் அவர்களோடு சேர்ந்து சிரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

ஒரு நாள் அந்த மூவரில் ஒரு துறவி இறந்து போனார். ஊரே திரண்டு நின்று அழுது தீர்த்தது. ஆனால் மற்ற இரண்டு துறவிகளும் நண்பனின் பிணத்தருகே நின்று சிரித்துக் கொண்டே இருந்தனர். எரிச்சலடைந்த மக்கள் அவர்களிடம் சென்றனர்.

“ நண்பனின் பிணமருகே நின்று சிரிக்கிறீர்களே. இது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா?”

“இல்லை”

“பாவிகளா. உருப்படுவீங்களா”

“ பந்தயத்தில் எங்களை அவன் ஜெயித்து விட்டான். அதுதான் சிரிக்கிறோம்”

“பந்தயமா?”

“ஆமாம், எங்களில் யார் முதலில் சாவது என்பது பந்தயம். அவன் ஜெயித்து விட்டான். அதை நினைத்துதான் சிரிக்கிறோம்”

வாயடைத்துப் போனார்கள்.

செத்த துறவி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

“ நான் சதா சிரித்துக் கொண்டே இருந்ததால் அழுக்கென்னை அண்டவே இல்லை. எனவே நான் செத்துப் போனதும் என்னைக் குளிப்பாட்டாமல் அப்படியே எரித்து விடுங்கள்.”

அப்படியே செய்தார்கள்.

அப்போது அவர் தனது உடைகளுக்குள் ஒழித்து வைத்திருந்த வெடிகள் வெடித்தன. வானத்தில் சில ஜொளித்து வேடிக்கை காட்டின. எரியூட்ட வந்திருந்த எல்லோரும் சிரித்தார்கள்.

என்ன ஒரு பந்தயம்? வென்றவன் தனது வெற்றியைக் கொண்டாடவே இயலாது என்று தெரிந்திருந்தும் தோற்றவர்கள் தங்களது தோல்விக்காக துவளாமல் வென்று இல்லாமல் போனவனது, அல்லது இல்லாமல் போய் வென்றவனது வெற்ரியை கொண்டாடுவது என்பது இருக்கிறதே... அப்பப்பா... ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னமே கதை சொல்லி இருக்கிறார்கள். 

அநேகமாக தனது மரணத்திலும் மக்கள் சிரித்து மகிழ எதையோ வைத்து விட்டுப் போன மகத்தான மனிதன் இவனாகத்தானிருக்கும். 

Monday, December 12, 2011

அச்சம் தவிர்

”காக்கை சிறகினிலே” ஆசிரியர் குழு கூட்டத்தில் இருந்த பொழுது வைகறை அய்யா “ஸ்டேட்ஸ் மேன்” பத்திரிக்கையின் சிறப்பு நிரூபர் ராதிகா கிரி அவர்களது கட்டுரை ஒன்றைக் கொடுத்து, இதை உடனே தமிழ்ப் படுத்தித் தாருங்கள் என்றார்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மலையாள பத்திரிக்கையாளர்கள் எப்படி கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே திட்டத்தில், ஒரே குரலில், முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு அச்சத்தை உருவாக்குவதில் முனைந்திருக்கிறார்கள் என்பதை தொட்டு நீள்கிறது அவரது கட்டுரை.

மலையாளிகள் எங்கு இருக்கும் போதும் மலையாளிகளாகவே செயலாற்றுவதில் திட்டமிட்டு வெற்றி பெற்றுவிடுகிறாகள் என்பதையும் அவரது கட்டுரை சொல்கிறது. இதில் கோவம் கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதையும், கற்றுக் கொள்ளவே நமக்கு இதில் இருக்கிறது என்றுமே உணர்ந்தேன்.

மலையாளப் பத்திக்கையாளர்கள் மலையாளப் பத்திரிக்கை உலகில் மண், மொழி, கலாச்சாரம் மற்றும் பிராந்திய அடிப்படையில் தன் இனம் சார்ந்த உணர்வோடு செயல்படுவதில் பிழை இல்லை. ஆனால் சென்னையில் இருக்கும் ஆங்கில அச்சு ஊடகத்தில், பணி புரியும் மலையாளப் பத்திரிக்கையாளர்களும் அதே உணர்வோடு பணியாற்றுவது என்பது ஆபத்தாந்தல்லவா? என்று ஆதங்கப் படுகிறார்.

ஆமாம், மலையாள மண் சார்ந்து மலையாள ஊடகத்தில் கொண்டு போவது ஏற்படுத்தும் விளைவுகள் அந்தப் பிராந்தியத்தில் மட்டுமே அதிர்வுகளை ஏற்படுத்தி அவர்களை உசுப்பும். ஆனால் அதுவே ஆங்கில ஊடகத்தில் எனில் அது தேசம் முழுமையும் ஊடுறுவி அவர்களது செயலில் நியாயம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். இது ஆபத்தானது என்கிற வகையில் நாம் இது குறித்து கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.

அவர்கள் தொடர்ந்து ஆங்கில இதழ்களிலும் “முல்லப் பெரியாறு” என்றே எழுதுவதையும் அவர் குறிப்பிடுகிறார்.

அதைக் கூட விட்டுவிடலாம். ஆனால் சென்னை இந்து கூட “முல்லப் பெரியாறு” என்றுதானே எழுதுகிறது என்று அவர் கேட்பதில் இருக்கிற நியாயத்தை உணரத் தவறினால் இன்னும் விழவே விழுவோம்.

சரி ஆங்கில ஊடகத்தில் பணியற்றும் தமிழ் எழுத்தாளர்களே இல்லையா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ற கேள்விக்கும் இவர்கள் எதுவும் சுயமாய் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் சொல்கிறார்.

தற்போது கேரள அரசுக்கு ஆலோசகராக இருக்கும் பரமேஸ்வரன் நாயர் எழுபதுகளில் கேரள மிசாரத்துறையின் தலைமை பொறியாளராக இருந்த பொழுது ஒரு முறை அப்போது கேரள காங்கிரஸ் தலைவராக இருந்த திரு. கருணாகரனிடம் சொன்னாராம், “அணையின் நீர் வரத்தை குறைக்க தமிழக முதல்வரிடம் பேசுங்கள். அதை விட முக்கியமாய் அதற்கு முன்னர் அணை குறித்த ஒரு அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்திவிட வேண்டும்”

மலையாள மனரோமா உள்ளிட்ட பத்திரிக்கைகள் அந்த வேலையை கச்சிதமாக செய்து தர அன்றைய தமிழக முதல்வரை அதன் பிறகு அணுகினார்கள் என்றும், அதன் விளைவே 152 அடி 136 அடியானது என்றும் அவரது கட்டுரையில் இருந்து அறிய முடிகிறது.

தெரிதவர்கள் அருள் கூர்ந்து பேசுங்கள் இது குறித்து தனியாய் எழுத உதவும்

Saturday, November 26, 2011

கோடொன்று பெரிதாய் ...

வழக்கமாக மொட்டை மாடியை நான்கைந்து சுற்றுகள் முடிக்கும் முன்னரே மறந்து போன விஷயம் ஞாபகத்துக்கு வந்து விடும். ஆனால் இன்று கால் வலிக்குமளவுக்கு மொட்டை மாடியில் நடந்து பார்த்தும் நினைவுக்கு வரவில்லை.

இதுவும் ஒன்றும் புதிதல்லதான். மொட்டை மாடியில் கிடைக்காமல் போனால் காலார கடைவீதி நடந்து போய் கலியன் கடையில் ஒரு கோப்பை தேனீர் குடித்து விட்டு திரும்புவது வழக்கம். வீட்டிலிருந்து கலியன் கடைக்கும், கலியன் கடையிலிருந்து வீட்டிற்குமான நடை வெளியில் மறந்து போன விஷயம் ஞாபகத்தில் தட்டுப் பட்டு விடும்.

நான்குமுறை கலியன் கடைக்கு நடந்தும் பலன் கிடைக்க வில்லை. எவ்வளவோ முயற்சி செய்தபோதும் எதுவுமே நினைவுக்கு வரவில்லை என்பதில் கூட ஆபத்து எதுவும் இல்லை. நமக்குக் கொடுத்தவனே மறந்து போயிருந்த கடன் பற்றிய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகத்திற்கு வரவே கலியன் கடைக்கான ஐந்தாவது பயணத்தை மிகுந்த புத்திசாலித் தனத்தோடு தவிர்த்தேன்.

அந்த மன்னனின் பெயரும், அந்த சம்பவம் நடந்த இடமும், அதை நான் எங்கு வாசித்தேன் என்பதும்தான் நான் மறந்துபோன சமாச்சாரங்கள்.

வெகுநேர யோசனைக்குப் பின் அவை எல்லாம் நினைவுக்கு வர மறுத்தாலும் அதை எழுதியே விடுவது என்று முடிவெடுத்தேன். இல்லாது போனால் இவ்வளவு பெரிய அபத்தத்திற்கான அடிக்கல் நாட்டப் படுவதைப் பார்த்தும் அசையாது வேடிக்கை பார்த்த குற்றத்திற்கு என்னை ஆளாக்கி, வருங்காலத் தலைமுறையினர் என் கல்லறையின் முகவரியை கஷ்டப்பட்டேனும் கண்டுபித்து வந்து காறி உமிழ்ந்துவிடுவார்கள்.

மேற்சொன்ன விவரங்கள் இல்லாது எழுதுவதால் சிலர் இதை புனைவாகக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் ஒன்றும் பெரிய பாதிப்பில்லை.

அந்த மன்னனின் பெயர் அநேகமாக தைமூர்.அந்த சம்பவம் நிகழ்ந்த இடம் அநேகமாக பாக்தாத். இவை பிழை எனும் பட்சத்தில் யாரும் என் மீது கோபப் படாமல் இதை ஒரு புனைவாகவே கொள்ளுமாறும் வேண்டுகிறேன். இது புனைவாகவே இருந்தாலும் சரியாகவே இங்கு பொருந்தும் என்பதை மட்டும் உறுதியாய் சொல்கிறேன்.

மிகுந்த கனவுகளோடும் , அதைவிட அதிக சிரமத்தோடும் பாக்தாத்தை வெற்றி கொள்கிறான் தைமூர்.

பொதுவாகாவே இத்தகைய வெற்றிகள் நிகழும் நேரங்களில் எல்லாம் அந்த மண்ணின் அழகான யுவதிகளை,  நன்கு உழைப்பதற்கான கட்டுலடோடு உள்ள இளைஞர்களை, பொன்னை, பொருளை, யானைகளை ,குதிரைகளை, மற்றும் பயன்படக் கூடிய கால்நடைகளை அள்ளிச் செல்வதோடு அந்த மண்ணில் இருக்கும் கலைப் பொக்கிஷங்களை, மற்ற மதத்து வழிபாட்டு புனிதத் தளங்களை, இன்ன பிற மேன்மைகளை மிச்சம் வைக்காது அழித்தும் போவார்கள்.

வெற்றிக்குப் பிறகு மன்னனைச் சந்திக்கிறான் தளபதி.

“இந்த நிமிடம் முதல் இந்த மண்ணும் மக்களும் உமது அடிமைகள் மன்னா”

“அப்படியா. மகிழ்ச்சி”

” இந்த அடிமை மண்ணில் எதை முதலில் அழிக்க வேண்டும் என உத்தரவு மன்னா?”

மன்னன் மௌனமாய் இருக்கவே

“இங்குள்ள கோட்டையை தகர்த்துவிடவா மன்னா?”

“ வேண்டாம் அது இருப்பதால் நமக்கென்ன பாதிப்பு?”

” அரண்மனை?”

“வேண்டாம் வேண்டாம் இருந்துவிட்டுப் போகட்டும்”

“புராதனக் கட்டிடங்களை?”

“ வேண்டாம் முட்டாளே”

“அணைகளை...?”

“ நாசமாப் போறவனே. உருவாக்கத்தான் தெரியவில்லை. எதை அழிப்பது என்று கூடவா உனக்குத் தெரியாது?”

மிரண்டு போன தளபதி “ வேறு எதைத் தான் மன்னா அழிப்பது?”

“ இந்த மண்ணில் இருக்கும் அத்துனை நூலகங்களையும் அழித்துப் போடு. ஒரு துண்டுத் தாள், எழுது பொருள் , புத்தகம், சிலேட்டு, செப்பேடு, கல்வெட்டு, ஓலைச் சுவடி என்று எதுவும் மிச்சம் இருக்கக் கூடாது. எது இருந்தாலும் அழித்துப் போடு.”

இதைக் கேட்டதும் தளபதிக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆனாலும் தன் கழுத்தில் தலை இருக்க வேண்டுமே என்ற பயத்தில் மிகவும் சிரமப் பட்டு சிரிப்பை அடக்கினான். ஆனாலும் அடக்கவே முடியாத ஆர்வத்தில் கேட்டே விட்டான்.

“இவற்றை அழிப்பதால் என்ன மன்னா லாபம்?”

பலம் கொண்டமட்டும் மன்னன் சிரித்து வைத்தான். “மண்டு மண்டு. இவை எல்லாம் இருந்தால் நமது அடிமைகள் வாசிக்க மாட்டார்களா?”

“ வாசிப்பார்கள்தான் மன்னா. ஆனால் அதனால் நமக்கென்ன பாதிப்பு?”

” வாசித்தால் அவனுக்கு அறிவு வராதா?”

“ வரும்தான் மன்னா. அவனுக்கு அறிவு வருவதால் நமக்கென்ன மன்னா?”

“ மடையா!, அறிவு தெளிவைத் தரும். அது,  தான் அடிமை என்பதை அவனுக்கு உணர்த்தும். விடுதலை வேட்கையை அவனுக்குத் தரும். அது நமக்கு ஆபத்தாக முடியும். ஒருவன் அடிமையாகவே இருக்க வேண்டுமெனில் அவனை வாசிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாசிக்க ஆரம்பித்துவிட்டால் அவன் விடுதலையைத் தேடத் தொடங்கிவிடுவான்.”

( தாள்கள் அறிவைத் தரும். அறிவு விடுதலைக்கான வேட்கையைத் தரும் என்பது உண்மை எனும் பட்சத்தில் “ தாள்களே இல்லாத உலகமே எனது கனவு” என்று உரக்கக் கூவி உலகம் பூராவும் கிளைகள் பரப்பி செயல் படும் பில் கேட்ஸிடமும் மிகுந்த எச்சரிக்கையோடுதான் இருக்க வேண்டும் போல.)

“ஆஹா! ஆஹா!, மன்னர்னா மன்னர்தான்”

( எந்த மன்னனிடம் ஒரு தளபதி இவ்வளவு பொறுமையாகப் பேசியிருக்க முடியும் என்று யாரும் கிண்டலிக்க வேண்டாம். புனைவு கலந்தது என்று அருள் கூர்ந்து கொள்ளுங்கள்.)

இதை ஞாபகத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை மாற்றப் போவதாக முதல்வர் அறிவித்த அறிவிப்புதான் நம் நினைவிற்கு இந்த சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

இரண்டிற்கும் பெரியதாய் ஏதும் வித்தியாசம் இருப்பதாகப் படவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க அரசு செய்த ஒரே நல்ல காரியமாக இதைமட்டும்தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. இதை இவ்வளவு செய் நேர்த்தியுடன் இவ்வளவு அக்கறையோடு எப்படி செய்தார்கள் என்பதுதான் நம்மால் இன்னும் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது.

இதை மாற்றுவதற்கு நீங்கள் சொல்லும் எந்த ஒரு காரணமும் ஏற்கத் தக்கதாய் இல்லையே முதல்வர் அவர்களே.

அது முழுக்க முழுக்க நூலக ஆணைக் குழுவின் நிதியிலிருந்து கட்டப் பட்டது எனவே அதை வேறு காரியங்களுக்கு பயன் படுத்த இயலாது என்று த.மு.எ.க.ச போட்டிருக்கும் வழக்கில் நூறு விழுக்காடும் நியாயம் இருப்பதாகவே படுகிறது.

மேலும் நூலக ஆணைக் குழு அதை தங்களால் நிர்வாகிக்க இயலாது என்றும் சொல்லாத நிலையில் அதை நீங்கள் மாற்றப் போவதாய் அறிவித்திருப்பது நியாயமாயில்லையே என்ற அவர்களது குரலிலும் நியாயம் தானே நிரம்பி வழிகிறது முதல்வர் அவர்களே.

குழந்தைகளுக்கான மருத்துவமனை என்று நீங்கள் சொல்வதையும் , “ எவ்வளவோ இடம் இருக்கே. அம்மா நினைத்தால் ஒரே வருடத்தில் இதை விட பெரிய , அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளை எல்லா மாவட்டத் தலை நகரங்களிலும் ஏற்படுத்த முடியும்,” என்று மூன்றாம் வகுப்பு குழந்தையே நியாயமாய் நிராகரிக்கிறானே.

அந்த சின்னக் குழந்தைக்கே புரிவது உங்களுக்கு புரியாமலா இருக்கும். பிறகு ஏன் தாயே?

அதுவும் அந்தச் சின்னக் குழந்தைக்கே புரியக் கூடிய விஷயம்தான்.

அது கலைஞரால் அமைக்கப் பெற்றது. அது இருக்கும் வரைக்கும் கலைஞரின் பெயர் இருக்கும். அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இல்லை என்பதுதானே.

இல்லை என்று சொல்லிவிடாதீர்கள் முதல்வர் அவர்களே. பிறகு தைமூர் பாக்தாத் மக்கள் அடிமைகளாகவே இருக்க நினைத்ததைப் போல் நீங்கள் எங்களை அடிமைகளாகவே வைத்திருக்க முடிவெடுத்துவிட்டீர்கள் என்று ஆகிவிடும்.

தமிழர்கள் அறிவற்று அடிமைகளாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப் படுவதாகத் தெரியவில்லை. எனில், கலைஞருக்கு பெயர் போகிறதே என்ற ஆதங்கமாகத்தான் இருக்கும்.

இது எட்டு ஏக்கர் நிலப் பரப்பில், எட்டுத் தளங்களில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப் பெரிய நூலகம், அவ்வளவுதான்.

நீங்கள் நினைத்தால் பத்து ஏக்கர் நிலப் பரப்பில், பன்னிரண்டு தளங்களைக் கொண்டு, இதைவிட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உலகின் ஆகப் பெரிய நூலகத்தை உங்களால் உருவாக்க இயலும்.

கலைஞர் ஒரு கோடு போட்டிருக்கிறார். அது பெரியதாய் உங்கள் கண்களை உறுத்தினால் அந்தக் கோட்டினைக் கை வைக்காமலே அதை சின்னதாக்கி விட முடியாதா?

மிகவும் எளிமையாய் அதை செய்து விட முடியும் உங்களால்.

அதை விட பெரியதாய் கோடொன்றினைப் போடுங்கள். கலைஞரின் கோடு சின்னதாய்ப் போகும்.

இல்லை என்றால்,

போன வாரம் எந்த அமைப்பையும் சாராத விஷ்ணுபிரம் சரவணன், கவின் மலர், நறுமுகை தேவி போன்ற இளைய பிள்ளைகள் ஒரு எண்பது பேர் சென்னையில் ஒன்று திரண்டு தோழர் இன்குலாப் அவர்களே வியந்து போற்றுமளவுக்கு உரத்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இதை அருள் கூர்ந்து உதாசினம் செய்து விட வேண்டாம் என்று அன்போடு வேண்டுகிறேன்.

அஸ்மா மக்பூல் என்ற இளைய பெண்ணொருத்தி முக நூலில் இரண்டு வரி எழுதிப் போட்டதுதான் எகிப்தையே புரட்டிப் போட்டது என்பதை இந்தத் தருணத்தில் தங்களுக்கு நினைவு படுத்துவதை எனது கடமையாகவே கருதுகிறேன்.



Friday, November 11, 2011

குற்றம் குற்றமே

” மதச் சார்பற்ற தன்மையுடைய விஞ்ஞானத்தின் பெயரால் நல்லிணக்கத்திற்கெதிரான இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப் படுகிறது என அறிவிக்கிறோம்”

இது ஏதோ ஒரு மத வெறியைத் தூண்டக் கூடிய மத வெறியர் ஒருவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டதற்கான அறிவிப்பு எனில் கவனம் குவிக்காமல் விட்டு விடலாம்.

உலகத்தில் வாழும் மக்களில் பெரும் திரளான ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராகத் திகழும் போப்பாண்டவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது என்பதும், அதுவும் அவரது ஆளுகைக்கு உட்பட்ட பல்காலைக் கழகமே மேற்சொன்ன பிரகடனத்தோடு அதை செய்துள்ளது என்பதை அறிந்ததும் இயல்பாகவே ஏன்? என்ற ஆவல் பிடித்துக் கொள்ள உள்ளுக்குள் நுழைந்தோம்.


“ எல்லா சாலைகளும் ரோமை நோக்கி “ என்று சொல்வார்கள். உலகில் பெரும்பகுதி ரோமன் கத்தோலிக்கர்கள் என்ற பெரும்பான்மையின் செருக்கு மிகுந்த வெளிப்பாடாக இதைக் கொள்பவர்களும் உண்டு. அதில் நியாயமும் உண்டு. மேன்மைமிக்க வெளிப்பாடாக இதைக் கொண்டவர்களும் உண்டு. போப்பாண்டவரின் ஆளுமையும் செல்வாக்கும் உலகை கோளோச்சும் அந்த நிலை இன்னும் அப்படியேத்தான் உள்ளது. பிறகெப்படி இது சாத்தியப் பட்டது? ஏன் தேவைபட்டது?

லா ஸாட்னீஸா என்று ஒரு பல்கலைக் கழகம் ரோமில் உள்ளது.17.01.2008 அன்று போப்பாண்டவர் அவர்களின் அருளாசியுடன் அது தனது அந்த ஆண்டிற்கான பணியினைத் துவங்கும் என்று முன்னர் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த அறிவிப்புதான் பின்னர் திரும்பப் பெறப் பட்டது.

சரி, அப்படி என்ன அந்தப் போப்பாண்டவர் தவறு செய்து விட்டார்?

1633- ஆம் ஆண்டு கலிலியோ மீது ஒரு விசாரனை நடத்தப் பட்டது. திருச்சபையின் முன் கலிலேயோ நிறுத்தப் பட்டார்.

எதற்கந்த விசாரனை?

1633-ல் கலிலேயோ சூரியனை மையமாக வைத்து பூமி சுற்றுகிறது என்று அறிவித்தார். கத்தோலிக்கத் திருச்சபையோ பூமி நிலையானது, அசையும் தன்மை அற்றது என்று நம்பியது. சூரியன்தான் பூமியை சுற்றுகிறது என்றும் நம்பியது. நம்பவும் சொன்னது. நம்ப மறுத்தவர்களைத் தண்டிக்கவும் செய்தது.

இந்த நிலையில் கலிலேயோ சற்று உரத்து குரலெடுத்து ”பூமி நிலையானது அல்ல. சூரியனைச் சுற்றி இயங்குகிறது” என்று சொன்னார்.இவருக்கு முன்னரே கோபர் நிக்கஸ் இதைக் கண்டுபிடித்திருந்தார். காயம் படாமல், கழுமரம் ஏறாமல், அவஸ்தைக் கால ஜெபத்தோடு செத்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை அவருக்கிருந்ததால் உயிருக்கு பயந்தவராக அதை வெளியே சொல்லாமலே செத்துப் போனார்.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாத கலிலேயோ இதை சொன்னார். நன்கு சத்தம் போட்டே சொன்னார். இது திருச்சபையின் நம்பிக்கையை, விசுவாசத்தைக் கேள்வி கேட்டது. இந்தக் கேள்வி திருச்சபையின்பால் நம்பிக்கை கொண்டுள்ள கத்தோலிக்கர்களிந்தேவ விசுவாசத்தை, கத்தோலிக்க கட்டமைப்பை உடைத்துவிடுமோ என்று திருச்சபை அச்சப் பட்டது. திருச்சபையே விசுவாசத்தின் மேல் கட்டப்பட்டதுதான். “ நம்பி விசுவாசிப்பவனை விட நம்பாமல் விசுவாசிப்பவனே பாக்கியவான்” என்றும் சொல்லப் பட்டது. ஆகவே இதனை அப்படியே விடுவது என்பது திருச்சபையை முடிவுக்கு கொண்டு வருகிற ஒரு தொடர் செயலுக்குக் கால் கோலும் என்று திருச்சபை கருதியது. எனவே அன்றைய போப்பாண்டவர் தலைமையில் விசாரனை துவங்கியது. விசாரனை என்பதைவிட கட்டப்பஞ்சாயத்து என்பதே பொருந்தும். அதே போல போ[ப்பாண்டவரைக் கூட நாட்டாமை என்றும் அந்த விசயத்தில் கொள்ளலாம்.

அந்தக் கட்டப் பஞ்சாயத்து கலிலேயோ தனது கருத்துக்களைத் திரும்பப் பெறவேண்டும் என்று தீர்ப்பு சொன்னது. வேடிக்கைப் பார்க்கத் திரண்ட ஜனத்திரளின் முன் கலிலேயோ தனது கருத்துக்களைத் திரும்பப் பெற்றார். இதற்காக சிறை பட்டார். இறுதியாய் பைத்தியம் பிடித்து செத்தும் போனார்.

ஏறத்தாழ 360 ஆண்டுகளுக்குப் பிறகு, 1990 வாக்கில் எந்த மேல் முறையீடுமின்றியே இந்த விசயம் மீண்டும் விசாரனைக்கு வந்தது. இப்போது திருச்சபை தனது முடிவை மாற்ரிக் கொண்டது. பூமிதான் சூரியனச் சுற்றுகிறது என்ற கலிலேயோவின் கருத்தை ஏற்றது. சுருங்கச் சொன்னால் மதத்தை விஞ்ஞானம் வென்றது.

அப்போது அந்தக் குழுவில் இருந்த பெனடிக் 16- ஆம் கார்டினல் ரட்சசிங்கர் மட்டும் கலிலேயோ கருத்து ஏற்கத்தக்கதல்ல. 1633-ல் திருச்சபை எடுத்த முடிவே சரியானது. எனவே கலிலேயோவின் கருத்தை திருச்சபை நிராகரிக்க வேண்டும் என்று கூறினார். மட்டுமல்ல அவர் தனது கருத்தில் விடாப் பிடியாகவும் இருந்தார். நல்ல வேளையாக அன்றைய பெரும்பான்மை இவரது கருத்திற்கு எதிராகப் போகவே திருச்சபை த்னது 360 வயது பழைய கருத்தை மாற்றிக் கொண்டு கலிலேயோவை குற்றத்திலிருந்து விடுவித்தது.

விஞான யுகத்தில் விஞானத்தின் சகல கனிகளையும் ருசித்துக் கொண்டே தனி ஒரு மனிதனாய் அந்தக் கூட்டத்தில் கலிலேயோவை ஏற்கக் கூடாது என்று சொன்ன பெனடிக் 16-ஆம் கார்டினல் ரட்சசிங்கர்தான் அன்றைய நிகழ்ச்சியை அருளாசி செய்து வைக்கவேண்டிய போப்பாண்டவர். அதைத்தான் அந்தப் பல்கலைகழகத்தின் கல்வியாளர்கள் எதிர்த்தனர்.

அவர்களும் விசுவாசிகளே. ஆனால் அற்ப விசுவாசிகள் அல்ல. விஞானத்தை ஏற்கும் ஆன்மீகவாதிகள்.

இறுதியாக பல்கலைக் கழகம் தவறு செய்தவர் தெய்வமென தாங்கள் போற்றி வழிபடும் போப்பாண்டவரே ஆயினும் அது தவறுதான் என்று முடிவெடுத்தது.போப்பாண்டவரின் நிகழ்ச்சியை ரத்து செய்து , நாம் ஆரம்பத்தில் பார்த்த அறிவிப்பை செய்தது.

முதலில் மதப் பழமை வாதிக்கும், மதப் பழமைவாதத்திற்கும் எதிராகத் திரண்டு கொதிதெழுந்த அந்த 67 கல்வியாளர்களையும்சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறோம்.

இந்த நிகழ்வை இந்தியாவில் உள்ள கல்வி நிலையங்கள் அருள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்றும், மத வாதிகளின் நெருக்கடியை, பழமைக் கூத்தை வெறிகொண்டு எதிர்க்க வேண்டுமென்றும் ஆசைப் படுகிறோம்.அன்றைக்கே ஒருவன் தமிழில் சொன்னான்.

“ நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

எனது முதல் நூலான “அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற நூலில் இருந்து

Thursday, October 27, 2011

தெய்வங்களுக்கு சொல்லித் தந்தவன்

பொதுவாகவே நம்முள் புதைந்து புறையோடிப் போயிருக்கும் அழுக்குப் பிடித்து வாடை வீசும் கருத்துப் படிமங்கள் நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், நாம் சற்றும் எதிர்பார்க்காத திக்கிலிருந்து நாம் கனவிலும் எதிர்பார்ப்பதற்கு அந்த நொடி வரைக்கும் நமக்கு நம்பிக்கையே தந்திராத மனிதர்களால் உடைசலைக் காணும்.

அப்படித்தான் படிக்கும் பிள்ளைகளைப் பற்றி நமக்கிருந்த ஒரு முடை நாற்றம் வீசிக் கொண்டிருந்த ஒரு பொதுக் கருத்தை பேய் மழைச்சாரல் தந்த குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த என்னை தங்களது செயலால் சூடேற்றி திமிறேற்றினார்கள்.

"படிச்சவன் நடந்துக்கற மாதிரியா நடந்துக்கற", "படிச்சவன் பேசற மாதிரியா பேசற" என்கிற மாதிரி படித்தவர்களைப் பார்த்து அவர்களது பெற்றோர்களோ, நண்பர்களோ, ஆசிரியர்களோ அல்லது வேறு மற்றவர்களோ கோவம் கலந்த தொனியிலோ அல்லது வருத்தம் தோய்ந்தோ அல்லது ஏளனத் தொனியிலோ கூறுவதைக் கேட்டிருப்போம்.

படித்தவன் எப்படி பேச வேண்டும்?.
படித்தவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கு தெளிவான ஒத்தக் கருத்து எந்த சமூகத்திலும் இந்த நொடியில் இருப்பதாகப் படவில்லை. இதில் இவ்வளவு தயங்க வேண்டிய அவசியம்கூட இல்லை என்றே படுகிறது. இந்தக் கேள்விகளுக்கான ஒத்தக் கருத்தினை நோக்கி எந்த சமூகமும் முதல் எட்டெடுத்துக் கூட வைக்க வில்லை என்று யார் வேண்டுமானாலும் என் தலையில் அடித்தே சத்தியம் செய்யலாம்.

படித்தவன் அதிர்ந்து பேசக் கூடாது. படித்த தமிழனென்றால் தமிழில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தை நுனி நாக்கில் உளற வேண்டும். நாம் உண்டு நம் வேலை உண்டு என்பதை உணர்ந்து உள் வாங்கி செயல்படுத்த வேண்டும். அவனவன் அவனவன் குடும்பத்தின் மீது மட்டும் அக்கறை கொண்டாலே போதும். நாடு தானாக வளப் படும்.

அமெரிக்காவில் மக்கள் தெருவிலே வந்து பெரு முதாளிகள் அரசியலைத் தீர்மானிப்பதை எதிர்த்து போராடுகிறார்களா? அது பற்றி உனக்கென்ன? அது அவன் நாட்டுப் பிரச்சினை. இலங்கையில் கொத்துக் கொத்தாய் கொல்கிறானா?, அறுப்பதற்காகவே வளர்க்கும் செம்மரிகளைக் கூட மூங்கில் பட்டியில் அடைத்து, பகல் வேலையில் அவற்றை சுதந்திரமாய் காலாற மேய வைக்கும் தமிழனை முள் வேளியில் அடைத்து வைத்து அக்கிரமம் செய்கிறானா? விடு அது அவன் உள் நாட்டுப் பிரச்சினை.

எவ்வளவுதான் பாதுகாப்பாய் தப்பிவிட முயன்றாலும் ஈரம் சுரக்கிறதா?. அது தவறு. உடனே ஏதாவது ஒரு வட நாட்டு சேனலை போட்டு மேதைகள் ஆங்கிலத்தில் அலசுவதைப் பார். எந்த விதமான மனித ஈரத்தையும் அவர்கள் உலர வைப்பார்கள். அதையும் மீறிப் பொங்கினால் அவர்களுக்காய் பிரார்த்தனை செய்.

இதைத் தாண்டி உன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர். இந்த உணர்வுதான் ஞானத்தின் தொடக்கம். தர்க்க நியாயம் பேசுபவர்களிடம் காதைத் தராதே. அவர்கள் தீவிரவாதிகள். உன்னை நம்பி குடும்பம் இருப்பதை உணர். நீ அயோகியத்தனம்செய்யாமல் யோகியனாய் வாழ். இதைத்தான் ஆகப் பெரும்பான்மை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடமும், நண்பர்கள் நண்பர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள்.

இதுதானா படிப்பின் விளைவு?

படித்தவன் யோக்கியனாய் மட்டும் இருந்தால் போதுமா? ஆதிக்க சக்த்திகளின் அத்து மீறலை, அயோகியத் தனத்தை பார்த்து மௌனிப்பதும் அயோகித்தனம் அல்லவா?

ஒரு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கொஞ்சி மகிழ்ந்து சந்தோசித்து இருப்பது குடும்ப விவகாரம். அதில் நாம் தலையிடக் கூடாது. ஆனால் குடித்துவிட்டு வந்து மனைவியை துவைக்கும் கணவனைத் தட்டி கேட்காமல் ‘இது அவர்கள் குடும்பப் பிரச்சினை’ என்று ஒதுங்கினால் அது அயோக்கியத் தனம் அல்லவா?

நல்லாப் படி, நன்கு சம்பாரி, சந்தோசமாய் குடும்பம் நடத்து என்பதைத் தவிர வேறு எதையும் நாம் கற்றுக் கொடுப்பதில்லையோ? மதிப்பெண்கள் தாண்டி சமூக அக்கறையே இல்லாமல் பிள்ளைகளை உருவாக்குகிறோமே... என்று நொந்து நூலாகிப் போன என்னை "அப்படியெல்லாம் இல்லை. உங்களது கழுகுப் பார்வைக்குப் படாமல் ஈரத்தை எங்கள் நெஞ்சிலே பத்திரப் படுத்தி வைத்திருக்கும் நாங்களிருக்கிறோம் . நம்பிக்கையோடு இரு" என்று சமீபத்தில் நடந்த காலாண்டுத் தேர்வில் குறைந்த பட்சம் இரண்டு பாடங்களிலேனும் தேர்ச்சி பெறாத, ஆசிரியர்கள் அதிகம் நம்பிக்கை வைக்காத நான்கு மாணவர்கள் தங்களது மகத்தான செயலால் அறைந்து சொன்னார்கள்.


அன்று காலை தீபாவளிக்கு ஒரு நாள்தான் விடுமுறை என்று பள்ளிகளுக்கு வந்த உத்தரவு மாணவர்களையும் ஆசிரியர்களையும்கொஞ்சம் வருத்தப் பட வைத்திருந்தது. பொதுவாகவே தீபாவளி முதல் நாளே தொடங்கி அதற்கு அடுத்த நாள் வரைக்கும் நீளும். பல ஆசிரியர்கள் என்னை அணுகி, “ தலைவர்ட்ட கொஞ்சம் பேசுங்க சார். வியாழன் ஒரு நாள் விடுமுறை விட்டுவிட்டு அதை ஒரு சனிக்கிழமை பள்ளி வைத்து சரி செய்து கொள்ளலாம்” என்றார்கள்.

கோவப் படுவாரோ என்று தயங்கிக் கொண்டிருந்தேன். பள்ளி விட்டிருந்தது. குடையோடு, மழைக் கோட்டோடு வந்திருந்த பிள்ளைகள் போய் விட்டார்கள். சில பிள்ளைகள் மழைக்கு அங்கும் இங்குமாய் ஒதுங்கியிருந்தனர்.

நமக்கு தீபாவளியில் உடன்பாடு உண்டா இல்லையா? நாம் கொண்டாடுகிறோமா, இல்லையா? என்பதை எல்லாம் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிற தருணம் இதுவல்ல. அதற்கான அவகாசமும் இப்போது இல்லை. சக ஆசிரியர்களின் மன நிலையை, அவர்களது கோரிக்கையை, அதில் உள்ள நியாயத்தை, தலைமை ஆசிரியரிடம் அவ்ர் நல்ல மன நிலையில் இருக்கிறபோது அவர் மனம் நோகாமல் பக்குவமாய் எடுத்துக் கூறி , அவர்களது கோரிக்கையை சேதாரம் இல்லாமல் வென்றெடுக்க வேண்டும் என்கிற கவனத்தோடு அவரது அறைக்குள் நுழைந்தேன்.

எனக்கு அந்த வேலையை தலைமை ஆசிரியர் வைக்கவே இல்லை. நான் உள்ளே நுழைவதைப் பார்த்தவர் , “வா எட்வின், உன்னை கூப்பிட பிரிட்டோவை அனுப்ப இருந்தேன். நீயே வந்துட்ட . வா, உட்கார்”

“என்னங்க அண்ணே?”

“இல்ல, தீபாவளிக்கு அடுத்த நாள் விட்டுட்டு அதை பிறகு ஒரு சனி கிழமை பள்ளி வைத்து சரி செய்துக்கலாம்னு படுது. என்ன சொல்ற?”

“அதுதாங்கண்ணே சரி.

பேசிக் கொண்டிருந்த போதே பலத்த சத்தத்துடன் இடி ஒன்று இறங்கியது. வெளியே திண்ணைக்கு ஓடி வந்தோம். பத்துப் பதினைந்து பிள்ளைகள் நின்று கொண்டிருந்தார்கள். விடாது பெய்து கொண்டிருந்தது. இடியினால் பள்ளிக்கு எந்த சேதமும் இல்லை. அப்பாடா என்றிருந்தது.

உள்ளே போகலாம் என்று நாங்கள் எத்தனித்த போதுதான் அது நிகழ்ந்தது.

எங்கள் பள்ளி சென்னை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. எங்கள் பள்ளிக்கு நேர் எதிர்த்தார்போல் வாகனங்கள் u டேர்ன் போட வசதி உள்ளது.

கடைவீதியிலிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இளைஞன் மீண்டும் கடைவீதிப் பக்கம் திரும்ப சென்னைலிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த மகிழுந்து அவனை இடித்து விட்டு நிற்காமல் பறந்துவிட்டது. அந்தப் பய்யன் பறந்து போய் அந்தப் பக்கம் விழுந்ததை கண்ணாரப் பார்த்தோம்.

அப்படியே உறைந்து போனோம்.

பள்ளிக்குப் பக்கத்திலிருந்து ஆண்களும் பெண்களுமாய் ஒரு சின்னக் கூட்டம் பள்ளியில் கூடிவிட்டது. ஆளாளுக்கு கார்க்காரனை வைது கொண்டிருந்தார்கள். வகை வகையாய் சிலர் சபித்துக் கொண்டிருந்தார்கள்.

எப்போது தங்கள் முதுகளில் தொங்கிய பைகளை இறக்கினார்கள்? எப்போது இறங்கி ஓடினார்கள் என்றெல்லாம் யூகிக்க வாய்ப்பே தரவில்லை. பதினோராம் வகுப்பு பிள்ளைகள் நான்கு பேர் அவனைக் கொண்டு வந்து பள்ளி வராண்டாவில் கிடத்தினார்கள்.

பின் மண்டை சின்னதாய் பிளந்திருந்தது. ரத்தக் கசிவு அதிகமாய் இருந்தது. கசிவு என்பது கூட கஞ்சத்தனம்தான். ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. நால்வரில் ஒருவன் தனது ஈரச் சட்டையை கழட்டி ட்ரத்தம் வரும் இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்தான்.

எந்த ஊர்ப் பையன் அவன் என்று யாருக்கும் விளங்கவில்லை. அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை. ஒருவன் என்னிடம் வந்தான்.

“கொஞ்சம் செல்லைக் கொடுங்க சார்.”

கொடுத்தேன்.

நூற்றி எட்டை அழைத்தான். அந்த நொடி வரைக்கும் இது அங்கு நின்ற நான் உள்ளிட்ட பெரியவர்கள் யாருக்கும் தோன்றாத ஞானம்.

சற்றைக்கெல்லாம் ஆம்புலன்ஸ் வந்தது.

ஏற்றினார்கள். யாரேனும் கூட வந்தால்தான் நன்றாயிருக்கும் என்றார் ஓட்டுநர். எதை பற்றியும் யோசிக்காமல் ஒருவன் ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டான்.

“ போயி என்னன்னு போன் பன்னு மாப்ள,  நாங்க வீட்டுக்குப் போயி அம்மா வந்ததும் ஏதாவது சூடா எடுத்துட்டு வரோம். நீ அங்கேயே இருடா”

சொல்லிக்கொண்டே சட்டையைப் பிழிந்தான். ரத்தமாய் கொட்டியது. எந்த அசூசையும் இல்லாமல் அதைப் போட்டுக் கொண்டான்.  மழை சன்னமாய் விட்டிருந்தது. மூவரும் எதுவுமே நடக்காததுபோல் கிளம்பிவிட்டார்கள்.

நீராளர் வேலுவின் மருமகள் குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து வராண்டாவைக் கழுவி விட்டாள்.

அண்ணன் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாதவராய் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தார். அவரைத் தேற்ற வேண்டும்.

தெய்வம் எதுவுமில்லை என்பதில் நமக்கு தெளிவு உண்டு.

உயிரை காப்பது தெய்வக் குணம் என்கிறார்கள்.

எனில் அடிபட்ட பிள்ளையின் உயிரைக் காக்கப் போராடிய என் நான்கு பிள்ளைகளும் தெய்வங்கள்தான்.

அவர்கள் தெய்வங்கள் எனில் நான்?

நான்....

தெய்வங்களுக்கு சொல்லிக் கொடுத்தவன்.





Thursday, October 20, 2011

அருகம் புல்லே ஆயினும்

”எல்லாம் கெட்டு கிடக்கு. எதுவும் சரியில்ல. ஒருத்தனுக்கும் செய்கிற வேலையில் அக்கறை இல்ல” என்கிற மாதிரி ஏதாவது ஒரு விமர்சனத்தை காலை தொடங்கி மாலை வரைக்கும், வீடு தொடங்கி வீதி வரைக்கும் எல்லா இடங்களிலும் கேட்கிறோம். மேலே சொன்ன அம்புகளை எய்தாதவனும் இல்லை , அதே அம்புகளால் காயப் படாதவனும் இல்லை. சேதாராமாய் கொஞ்சம் விழுக்காடு ஒதுக்கலாமே தவிர பெரும்பகுதி ஏற்றே ஆக வேண்டிய விமர்சனங்களே இவை.

நல்லதுமில்லை, நல்லவனுமில்லை என்பது பொதுப் புத்தியாய் போன ஒரு சமூகத்தில் இருநூறு விழுக்காடு செய்கிற தொழில் அக்கறையும், அதனால் வழிகிற திமிறோடும், கம்பீரத்தோடும், மிடுக்கோடும் சரியான ஒரு மனிதனை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது.

பெரும்பான்மை பணிக்கலாச்சாரம் மயங்கித் துவண்டு கிடக்கும் இந்த சமூக வெளியில் வரமாய்க் கைடைத்த அந்த ஒரு சொட்டு வனத் தேனை பந்தி வைத்து விடுவதே சரி என்று படுகிறது.

ஒரு மழைக் காலை. நடத்துநர் இருக்கையைத் தவிர எல்லா இருக்கைகளும் நிரம்பிய நிலையில் விரைகிறது பேருந்து.அந்த நடத்துநரைப் பற்றி நன்கு தெரியுமென்பதால் அதில் அமராமல் நிறு கொண்டிருந்தேன். நல்ல மனிதர்தான். நான்கு ரூபாய் பயணச் சீட்டிற்கு நூறு ரூபாய் நோட்டை நீட்டினாலும் சில்லரை இருந்தால் முகம் சுழிக்காமல் தந்து விடுவார்.இல்லையெனில் அதை எடுத்துரைப்பதிலும் ஒரு தன்மை இருக்கும். எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் உள்ளே வராமல் படிக்கட்டில் தொங்கும் பசங்களைக் கடிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தன்மையாக பேசி அழைப்பார். கோபமே வராது.

இது போன்ற மழைக் காலங்களில் ஒவ்வொறு நிறுத்ததிலும் இடத்தின் பெயரச் சொல்வதோடு அவரவர் குடையை அவரவர் எடுத்துப் போக ஞாபகப் படுத்துவார். நானறித வகையில் இவ்வளாவு தன்மைகளும் நிறைந்த அவரிடம் இருந்த ஒரே ஒரு கெட்ட குணம் தனது இருக்கையில் யாரையும் அமர அனுமதிக்காததுதான். எனக்கேக்கூட சமயங்களில் எரிச்சலாய்த்தான் இருக்கும். அவர் பயணச் சீட்டுகளை வழங்கிவிட்டு வரும் வரைக்கும் அவரது இருக்கையில் யாராவது அமர்ந்தால் குடியா முழுகிப் போய்விடும்  என்றுகூட நினைப்பேன். எல்லோருக்கும் முன்னால் எழுந்திரிக்கச் சொன்னால் அசிங்கம் என்பதால் நான் ஒருபோதும் அவரது பேருந்தில் நடத்துநர்  இருக்கையில் அமரத் துணிந்த்ததில்லை.

என்னை இடித்துத் தள்ளிக் கொண்டு போய் நடத்துநர் இருக்கையில் அமர்ந்தார் ஒருவர். சபாரி உடை, கம்பீரமானத் தோற்றம், கையில் லேப் டாப், சட்டைப் பையில் ஒரு பச்சை மை ஜெல் பேனா. நிச்சயம் ஒரு அதிகாரியாய்த்தான் இருக்க வேண்டும்.அமர்ந்ததும் சுற்றும் முற்றும் அதிலும் குறிப்பாய் ஒரு மாதிரியாகத்தான் என்னை ஒரு முறை பார்த்தார். ஏதோ அந்த இடத்திற்கானப் போட்டியில் என்னை வென்றுவிட்ட பெருமிதப் பார்வை அது. ”கிழியப் போவுது டவுசர்” என்று மனதிற்குள் சிரித்துக் காத்திருந்தேன்.

 நினைத்த மாதிரியே நடந்தது. பேருந்து நடுவில் பயணச்சீட்டு விநியோகித்துக் கொண்டிருந்த நடத்துநர் கண்களில் இது பட்டுவிட்டது. நடந்து வந்தாரா பறந்து வந்தாரா தெரியவில்லை. அவ்வளவு வேகம்.

“சார், இது என் சீட்டு . தயவு செய்து எழுந்திருங்க”

“:ஒங்க சீட்டு இல்லைனு யாரு சொன்னா? நீங்க வந்த உடனே எந்திருச்சிடுறேன். இப்ப காலியாத்தானே இருக்கு.”

இந்தப் பதில் நடத்துநரை சீண்டியிருக்க வேண்டும். “காலியா இருந்தா...” மிதமான வெப்பத்தில் அவரது கேள்வி கதகதத்தது.

ஏறத்தாழ எல்லா பயணிகளுக்கும் நடத்துநரின் பேச்சு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும். சிலர் பக்கத்தில் இருப்பவர்களிடம் முனுமுனுத்தனர். சிலர் முகம் சுழிப்பதோடு முடித்துக் கொண்டனர். எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாது “ஹிந்து” வில் கண்களைத் தொலைத்த அறிவு ஜீவிகளும் இருக்கவே செய்தனர்.

பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் மொத்தப் பயணிகளின்பிரதிநிதியாய் மாறினார். “ஏன் சார் நீங்க டிக்கெட்தான போடுறீங்க. இப்ப என்ன ஒங்கள நிக்க வச்சுட்டா அவர் ஒக்காந்து இருக்கார். போங்க சார், போயி டிக்கெட்டப் போடுங்க. வந்ததும் எழுந்திரிப்பார். இல்லன்னா சொல்லுங்க,” என்றார்.

இது எதுவும் நடத்துநரை சமாதானப் படுத்தியதாகத் தெரியவில்லை. “சார், இப்ப எந்திரிக்கப் போறீங்களா, இல்லையா,?” அவரது குரலில் உஷ்ணமும் உறுதியும் கொஞ்சம் கூடியிருந்தது.

”கவர்மெண்ட் பஸ்னாலே இப்படித்தாம்பா, ஒழுங்கா சில்லறை தர மாட்டானுங்க, ஸ்டோபிங்கில் நிறுத்த மாட்டானுங்க,பைசாப் பெறாத பிரச்சினைக்கெல்லாம் லா பேசுவானுங்க. டிக்கட் போடுற வேலையப் பாக்காம வெட்டி வீம்பப் பாரேன். இதுவே தனியார் பஸ்சா இருந்தா எப்படி கவனிப்பாங்க தெரியுமா? பேசாம எல்லாத்தையும் தனியார்ட்ட கொடுத்தரணும் சார். அப்பத்தான் இவனுங்க சரிப் படுவானுங்க,” ஒருவர் சந்தடி சாக்கில் தனியார் மயத்தின் பிரதி நிதியானார்.

“எந்திரிங்க சார் முதல்ல,” அழுத்தம் இன்னும் கொஞ்சம் கூடியது.

அமர்ந்திருந்தவர் அவரளவில் அவரது செயலில் நியாயம் கண்டிருக்க வேண்டும். எழுந்திருக்க முயலவில்லை.

“காலியா இருக்கிற சீட்லதான் ஒக்காந்து இருக்கேன் நீங்க வரவரைக்கும் ஒக்காந்துதான் இருப்பேன். எந்திருக்க மாட்டேன். என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கங்க.”

“ ஏன் சார் காலியா இருக்குங்கறதுக்காக என் சீட்ல ஒக்கார்றீங்களே. காலியா இருக்குங்கறதுக்காக கலெக்டர் சீட்ல ஒக்காந்துடுவீங்களா?”

“எதுக்கு எத முடிச்சுப் போடுறீங்க. கலெக்டர் சீட்டும் இதுவும் ஒண்ணா? கலெக்டரும் நீங்களும் ஒண்ணா? பெரிய சட்டமெல்லாம் பேசுறீங்க.”

இருவரும் விடுவதாக இல்லை.இத்தனை களேபரங்களுக்கும் மத்தியில் ஓட்டுநர் கருமமே கண்ணாய் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

“கலெக்டரும் நானும் ஒன்னில்லைதான் சார். அவரு ஆலமரமா இருக்கலாம். நான் வெறும் அருகம்புல்லா இருந்துட்டுப் போறேன். ஆனா அவருக்கு அவரு சீட்டு. எனக்கு என்னோட சீட்டு,” பொருமிவிட்டு எழுந்திருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் பயணச்சீட்டு விநியோகத்தை விட்ட இடத்திலிருந்து தொடரச் சென்றுவிட்டார். என்ன பட்டதோ இவரும் எழுந்துவிட்டார். அத்தோடு ஒரு வழியாய் அந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.

பளீரென்று அறைந்தது போலிருந்தது எனக்கு.

ஆமாம்,

மருத்துவ மனைக்குப் போகிறோம். மருத்துவர் இல்லை. அவரது இருக்கை காலியாக்ல இருக்கிறது. காலியாகத்தானே இருக்கிறது என்பதற்காக அமர்ந்து விடுவோமா?

சராசரி மனிதனை விடுங்கள். நமது ஜனாதிபதி, பிரதமர், அல்லது ஏதோ ஒரு பெரிய மந்திரி உடல் நலமின்றி மருத்துவரிடம் போவதாகவும், இவர்கள் போகிற நேரத்தில் மருத்துவர் வார்டுக்கு போயிருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். மருத்துவர் இல்லையென்பதால் காலியாக உள்ள அவரது இருக்கையில் ஜனாதிபதி அமர்ந்து விடுவாரா?. நிச்சயம் இல்லை

ஆனால் நடத்துநர் இருக்கை என்றால் மட்டும் சட்டென அமர்ந்து விடுகிறோமே. ஏன்?

நடத்துநர் அவர்கள் அளவுக்கு அவர்கள் அளவுக்கு கவுரவமில்லாத சராசரியான அடிமட்ட ஊழியர் என்ற ஈனத்தனமான பொதுப் புத்திதான்.

அன்றிலிருந்து எந்தப் பேருந்தாயினும், நடத்துநரே சொன்னாலும் நடத்துநர் இருக்கையில் அமர்வதைத் தவிர்க்கிறேன்.

புத்தனுக்கு போதி மரம். எனக்கு வைப்பர் வேலை செய்யாத இந்த அரசுப் பேருந்து.

பொதுவாக பல நடத்துநர்கள் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாத போது இவர் மட்டும் ஏன் மாறுபடுகிறார், என்பதுதான் பரிசீலிக்க வேண்டிய விஷயம்.ஒரே ஒரு காரணம்தான். அவர் தன்மானத்தை விட்டுக் கொடுக்க மறுக்கிறார், அவ்வளவுதான். யாரால் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லையோ அவன் தனது பணியிலே சரியாய் இருப்பான். மாற்றிச் சொன்னால் , தனது பணியய் சரியாய் செய்பவனால் மட்டுமே தனது தன்மானம் குறித்து சமரசமில்லாது அக்கறை கொள்ள முடியும். ஆக தன்மானமென்பது பணிக்கலாச்சாரத்தோடு ரத்த சம்பந்தமுடையது.

“எல்லாம் கெட்டு கிடக்கு. எவனும் சரியில்ல” என்று புலம்புவதைத் தவிர்த்து இப்படிப் பட்ட நல்லதுகளைக் கொண்டாடத் தொடங்குவோம்.னிறைந்து கிடக்கிற கெட்டதுகளை பேசுவதால் கடுகளவு பயனும் விளையப் போவதில்லை. மாறாக அரிதினும் அரிதாய் கிடைக்கிற நல்லதுகளைக் கொண்டாடப் பழகுவோம். பையப் பையப் புரளும் சமூகம்.

( எனது "அந்தக் கேள்விக்கு வயது 98" என்ற நூலிலிருந்து)

Thursday, September 8, 2011

சாமி மீண்டும் பொம்மையாய்ப் போனார்

நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்களை விற்றுக் கொண்டிருந்தான் அந்த தள்ளு வண்டிக்காரன். அவ்வப்போது வறண்டு வெடித்துக் கிழிந்துவிடும் தொண்டையை அவனது வேட்டியை விடவும் அழுக்காயும் பழுப்பாயும் உள்ள பாட்டிலைத் திறந்து வீட்டிலிருந்து கொண்டு வந்த உப்புத் தண்ணீரால் ஈரப்படுத்தி ஒட்ட வைத்துக் கொள்வான்.

சின்னது, நடுத்தரம், பெரியது என்று காசுக்கு தக்க அளவில் அவனிடம் கடவுள்கள் இருந்தனர். அவனது தள்ளு வண்டியில் எல்லாக் கடவுள்களும் இருந்தனர். ஒரு அடி அளவுள்ள பிள்ளையார் பொம்மை இருபத்தி ஐந்து ரூபாய் எனில் அதே அளவுள்ள ஏசுநாதர் பொம்மையும் அதே விலைதான். அவனுக்கு எந்த சாமியும் உசத்தி இல்லை எந்த சாமியும் தாழ்ச்சி இல்லை.

துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டே அவன் வண்டியைத் தள்ளிய ஏதோ ஒரு புள்ளியில் ஒரு சின்னப் பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறியது.  அப்போது ஏற்பட்ட ஒரு சன்னமான குலுக்கலில் ஒரு கடவுள் பொம்மைக்கு உயிர் வந்து விட்டது.

" என்ன சுப்பு, எப்படி போகுது பொழப்பு?”

“ அத ஏன் சாமி கேக்குற? நாய் படாத பொழப்பு. நாலு வவுத்த ஒரு வேல நனைக்கறதுக்குதான் இப்படி நாயா பேயா வெயில்லுன்னு பார்க்காம மழைன்னு பார்க்காம அலைஞ்சு தேய வேண்டியிருக்கு” என்று புலம்பிக் கொண்டே போனவன் கொஞ்சம் சுதாரித்தவனாக ,”  "ஆமாம் தெரியாமத்தான் கேக்குறேன் ஏம் பொழப்பு எப்படிப் போகுதுன்னுகூடத் தெரியலன்னா அப்புறம் நீயெல்லாம் என்ன சாமி?”

“ நூத்துக்கணக்கான வருஷம் தவம் இருந்த ஆனானப் பட்ட முனிவர்களே நான் முன்னாடிப் போய் நின்னு என்ன வரம் வேணும்னு கேட்டா எப்படிப் பதறிப் போய் குரல் நடுங்க யாசிப்பாங்கத் தெரியுமா? நீ என்னடான்னா கொஞ்சம் கூட பதட்டமே இல்லாம சர்வ அலட்சியமாப் பேசற”

“ அவங்களுக்கெல்லாம் ஓங்கிட்ட ஏதோ ஒரு வரம் தேவப் பட்டுருக்கும். அதனால ஒங்கிட்ட வளஞ்சு குனிஞ்சு கூழக் கும்பிடு போட்டிருப்பாங்க. எனக்கு உன்னிடம் எதுவும் தேவை இல்ல. சூறையோ, புயலோ, மழையோ, வெயிலோ நாயா பேயா ஒழைக்கிறேன். ஒழப்புக்கான கூலியத் தவிர வேற எதையும் நான் எதிர்பார்க்குறது இல்ல. அதனாலதான் இந்த அசால்ட்டும் திமிரும்”

கடவுள் ஒரு கனம் அப்படியே ஆடிப் போனார். ஆக, உழைக்காம எதிர்பார்க்குற செண்ட்டுகாரனிடம்தான் தனது ஜம்பம் பலிக்கும் என்பதும் உழைப்புகான நியாயமான கூலியை மட்டுமே எதிர்பார்க்கும் வேர்வைக்காரனிடம் எதுவும் நடக்காது என்பதும் புரிந்து போக மௌனமானார் கடவுள்

கொஞ்ச நேரம் இப்படியே மௌனமாக கடந்தது. வீடுகளே இல்லாத பகுதியாக இருந்ததால் .அவனுக்கு கூவ வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. கூவிக்கொண்டே இருந்த வாயை எவ்வளவு நேரம்தான் சும்மா வைத்திருப்பான்? மெல்ல ஆரம்பித்தான்.

“ஏஞ்சாமி இப்படி படச்ச?”

வில்லங்கம் புரியாத கடவுள் “எப்படி?” என்று அப்பாவியாய் கேட்டார்.

“ ஒன்னும் தெரியாத அப்பாவியாட்டம் கேளு. அவுங்கள மாடி மேல மாடி வீட்டிலும் எங்கள ப்ளாட் ஃபாரத்திலும் ஏம்பா படச்ச?”

என்ன சொன்னாலும் சிக்கிக் கொள்வோம் என்பது புரியாமல் எதையாவது சொல்லி சிக்கிக் கொள்ள கடவுள் என்ன மன்மோஹன்சிங்கா? " நான் எங்கடா சுப்பு உங்கள படைச்சேன்? நீதானடா எங்களை எல்லாம் படைச்சு இப்படி இந்த தள்ளு வண்டியில போட்டு இந்த மொரட்டு வெயில்ல தள்ளிட்டுப் போற..”

“ ஏம்பொழப்ப பாத்தா ஒனக்குக் கூட நக்கலா இருக்கு. படைக்கிற அளவுக்கு துப்பு இருந்தா நான் ஏஞ்சாமி இந்த மொட்ட வெயில்ல கெடச்ச தேஞ்சுப் போன ரெண்டு சோத்தாங்கால் செருப்பையே ரெண்டு கால்லயும் மாட்டிக்கிட்டு லோலு படறேன்..” என்று சொல்லிக் கொண்டே போனவன் எதிர்த்த திசையில் இருந்து டி.வி. எஸ் சில் வந்த தம்பதியர் இவனை நிற்கச் சொல்லி கைகாட்டிக் கொண்டே அவர்களது வண்டியை ஓரங்கட்டவே “ செத்த பொறு சாமி கிராக்கி ஒன்னு வருது . முடிச்சிட்டு வந்துடறேன்” என்றவாறே அவர்களை எதிர் கொள்ளத் தயாரானான்.

ஏனோ தெரியவில்லை அந்தப் பெண்ணிற்கு இவனோடு பேசிக் கொண்டு வந்த அந்த பொம்மையைப் பிடித்துப் போயிற்று. கையிலெடுத்து புரட்டிப் பார்த்துக் கொண்டே " இது எவ்வளவு?”  என்று கேட்டாள்.

எங்கே தன்னை விற்றுவிடுவானோ என்ற பயம் அந்தக் கடவுளை தொற்றிக் கொண்டது.

“ அது வேணாம்மா. டேமேஜ் ஆனது. வேற எதையாவது நல்லதா எடுங்கம்மா”  என்றவன் அந்தப் பொம்மையை வாங்கி ஒரு ஓரமாய் வைத்தான்.

தன்னை அவசரமாய் விற்காமல் இருந்தமைக்காக ,அவர்கள் இருவருக்கும் தெரியாத வகையில் ஒரு புன்னகையால் அவனுக்கு நன்றி சொன்ன அந்தக் கடவுளை நோக்கி “ எதையாச்சும் ஒளறி காரியத்தக் கெடுத்துடாத, இந்த  வியாபாரத்த முடிச்சுட்டு வந்துடறேன்” என்று அவர்களுத் தெரியாத வகையிலேயே இவனும் அவரை நோக்கி புன்னகைத்து வைத்தான்.

அதை எடுத்து இதை எடுத்து அப்படியும் இப்படியுமாய் உருட்டிப் பார்த்து இறுதியாய் ஒன்றை எடுத்து ஒரு வழியாய் அறுபது சொன்னவை நாற்பதுக்கு இழுத்து வந்த அவர்களது சாமர்த்தியத்தை தாங்களே ரசித்தவாறு நகரத் தொடங்கினர். போகும் போதும் அந்தப் பெண் அந்த பொம்மையை மீண்டும் கையிலெடுத்துப் பார்த்தால்.

“ அதுதான் நல்ல சரக்கில்லன்னு சொன்னேனேம்மா. அதப் போடு”

“ இல்லப்பா அது என்னமோ தெரியல இருக்கிற சாமியிலேயே இந்த சாமிதான் உயிர்ப்போட இருக்கிற மாதிரித் தெரியுது.” என்றவளிடமிருந்து அந்தப் பொம்மையை நாசுக்காக வாங்கி வண்டியில் போட்டவன், “ உங்களுக்கு நல்லது சொன்னாப் புரியாதும்மா. நாளைய முன்னியும் உங்க கிட்ட நான் தொழில் பாக்குறதா வேண்டாமா?” என்றான்.

“ அதுதான் ஓட்டப் பொம்மங்கிறாப்புல இல்ல. வச்சிட்டு பேசாம வாயேன்” என்று அவளது கணவர் சலிக்கவே அந்தப் பெண் தங்களது வண்டி நோக்கி நகர்ந்தார். வண்டியில் ஏறி அமர்ந்த பின்பும் அந்த பொம்மையின் மீது அவளது கண் இருந்ததை சுப்பு கவனிக்கவே செய்தான்.

அப்பாடா என்றிருந்தது சுப்புவுக்கு. எங்கே தனக்கு வாய்த்த பேச்சுத் துணையை பறித்துக் கொண்டு போய்விடுவாளோ என்று ஒரு கண்ம் ஆடித்தான் போனான்.

” தேங்க்ஸ் எ லாட் சுப்பு”

“ என்ன சாமி கான்வெண்ட்டுல படிச்ச தொர வீட்டுப் புள்ள மாதிரி இங்க்லீசெல்லாம்” பேசற.

” எல்லா பாஷையும் நமக்கு ஒன்னுதானேப்பா”

“ அப்ப ஒனக்கு எல்லா பாஷையும் தெரியுமா?”

“ஆஹா! ஏந்தெரியாம?”

“ இல்ல அப்ப ஒனக்கு தமிழ் தெரியுமா?”

“ லூசாடா சுப்பு நீ.  இவ்வளவு நேரம் நாம தமிழ்தான பேசினோம்”

“ஆமாம் ஆமாம் நாந்தான் ஏதோ கிறுக்குத் தனமா பேசிட்டேன். அப்புறம் ஏன் சாமி தமிழ் ல கும்பிடக் கூடாதுங்கறாங்க?”

“ நான் எப்பவாச்சும் அப்படி சொன்னேனாடா? அது மட்டுமல்லடா சுப்பா, அப்பனுக்கே க்ளாஸ் எடுத்த முருகனுக்கே பாடம் நடத்திய அவ்வையோட ஊருடா இது. அப்பேர் பட்ட முருகனையே அசால்ட்டாப் பார்த்து ஒன்னோட தத்துவம் பிழை என்றால் அதை சொல்ல என் தமிழுக்கு உரிமை உண்டு என்று சொன்னாளேடா கிழவி. அவ்வளவு கம்பீரமான மொழிடா தமிழ்”

“ அவ்ளோ கிரேடா சாமி தமிழுக்கு”

“இல்லையாடா பின்ன. இந்த மொழியை ரசிக்கத் தானேடா சிவனே நக்கீரனை சீண்டிப் பார்த்தார்”

“ அப்புறம் ஏன் சாமி பல பள்ளிக் கூடத்துல ‘அம்மா’ன்னு கூப்பிட்டாலே புள்ளைங்கள முட்டிக்கால் போட வைக்கிறாங்க?”

“ அந்தப் பள்ளிக் கூடங்களிக்கு ஏண்டா புள்ளைங்கள அனுப்புறீங்க?”

“ அதுவும் சரிதான் சாமி”

இப்படியான பேச்சுக்கு இடையே இரண்டு மூன்று பொம்மைகளை விற்றிருந்தான். ஒரு லாரி ஓட்டுநரிடம் பேசும் போது 'ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்'
 விலையேற்றம் குறித்து சுப்பு பேசியிருந்தான்.

“அது என்னடா 'ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்?'

” அது ஒரு வகையான ரசாயனக் களி மண் சாமி”

“ உங்க ஊருல களி மண்ணு தீர்ந்து போச்சாப்பா?”

“பேசாம அதுலேயே செய்யலாமே?”

“ இந்த ஷைனிங் கிடைக்காது சாமி”

“ இல்ல எங்களில் சிலரை தண்ணீல போடறப்ப கறையாம மீனெல்லாம் செத்துப் போகுதாமே? பேசாம களி மண்ணுல செஞ்சா மீனெல்லாம் பிழைக்குமே சுப்பா”

" நான் பிழைக்க வேணாமா சாமி. இந்த நவீன காலத்துல களி மண்ணு சாமியெல்லாம் யாரு வாங்குவா சாமி?. அது மட்டுமல்ல ' ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்ல ' செஞ்சாத் தான் உன்ன செஞ்ச திருப்தியே வருது சாமி”

“பார்த்தாயா சுப்பு, நீயே வசமா வந்து ஒத்துக்கிட்ட பார்த்தாயா. அப்ப நீதான எங்களப் படச்சது?

”அது என்னவோ நெசந்தான் சாமி. ஆனா உன்னப் படைக்கிறதுக்காக என்னப் படச்சது நீதானே சாமி?”

சாமி மீண்டும் பொம்மையாய்ப் போனார்

























Monday, August 8, 2011

இவனுக்கு அப்போது மனு என்று பேர்

” வெள்ளத்தால் அழியாது
வெந்தழலால் வேகாது
வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும்
நிறைவன்றிக் குறையாது
கள்ளர்க்கோ பயமில்லை
காவலுக்கோ மிக எளிது”

என்பதாக நீளும் அவ்வையின் கல்வி குறித்த பாடல் ஒன்று. நீர் , நெருப்பு, காற்று போன்ற எதனாலும் கல்வியை அழிக்க முடியாது.  இன்னும் சொல்லப் போனால் எதன் உருவத்தையும் மாற்றி, அழித்து, சிதைத்துப் போடும் காலத்தாலும் கல்வியை சேதப் படுத்த முடியாது, என்பதாக கல்வியின் பெருமைகளை அவ்வை பட்டியலிட்டு சென்றிருப்பின் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.

 “ காவலுக்கோ மிக எளிது” என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது அவ்வைக்கு?. எனில் கல்வியும் காவலுக்குரிய பொருள்தானா?. காவல் காக்காமல் போனால் கல்வி களவு போய்விடுமா?. கல்வியைத் திருடவும் ஆட்கள் உண்டா?. எனில் தங்கம் போல, மற்ற பொருட்கள் போல கல்வியும் ஒரு பொருள்தானா?. “காவலுக்கோ மிக எளிது” என்கிறாரே, எனில் தங்கத்தைப் போன்று மிகவும் சிரமமெடுத்து காவல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனினும் சன்னமாகவேனும் காவல் தேவைப் படும் பொருளாகத்தான் கல்வி அவ்வை காலத்திலேயே இருந்ததா?. என்றெல்லாம் யோசித்த பொழுதுகள் உண்டு.

இப்போது தெளிவாகப் புரிகிறது.  ஒழுங்காகக் காவலை செய்யத் தவறினோம் என்றால் மேட்டுக் குடியும் கல்வியை சந்தைப் படுத்துவதில் வெற்றி கண்ட கல்வி வணிகர்களும் கல்வியைக் களவாண்டு போய் தங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்துப் பூட்டி விடுவார்கள் என்பது. மட்டுமல்ல , அவ்வை காலத்தில் வேண்டுமானால் காவலுக்கு எளிதான ஒரு பொருளாக இருந்த கல்வி இன்று வெகு சிரத்தை எடுத்து காவல் காக்க வேண்டிய ஒரு பொருளாக மாறிப் போயிருக்கிறது.

”கல்வியை எப்படித் திருட முடியும்?” என்று வசீகரப் புன்னகையோடு சிலர் கேட்கக் கூடும். அவர்களிடம்தான் நாம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள்தான் கல்வித் திருடர்கள்.

சரி, கல்வி களவு போகிறது என்று கத்துகிறார்களே. அதில் நியாயம் உள்ளதா?. உள்ளது எனில் கல்வியை எப்படி களவாட முடியும்?. ”ஒருவனிடம் இருப்பதை அபகரிப்பதுதானே களவு எனப்படும். எனில், ஒருவனிடம் இருக்கும் கல்வியை எப்படி அபகரிக்க முடியும்?” என்றும் சிலர் நக்கலடிக்கக் கூடும்.

அத்தகைய கனவான்களுக்காக சொல்கிறேன், இருப்பதை அபகரிப்பதும் களவுதான். அதே போல ஒருவனுக்கு உரியதை அவனுக்குத் தராமல், அவனது உரிமையை அவன் பெற்று விடாமல்,  இன்னும் சொல்லப் போனால் அது அவனது உரிமை என்பதையே அவன் உணர்ந்து விடாமல், மிகுந்த கவனத்தோடும், அதற்கென்றே சில நடை முறை சித்தாந்தங்களை, தேவைப் படும் பட்சத்தில் சட்டங்களையும் தீட்டி,  இவை எல்லாம் கடந்து யாருக்காவது தனது உரிமை குறித்து உணர்வு வந்து விட்டால் அவனை சித்திரவதை, ஏன் பல சமயங்களில் கொலையே செய்தும் அவனது உரிமையை அவன் பெறாமல் பார்த்துக் கொள்வதற்கும் களவு என்றுதான் பெயர்.

கல்வி விஷயத்தில் இது நடந்ததா?

ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கூட தன் பிள்ளையை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியதை குற்றமாய் பாவித்து அந்தப் பெற்றோர்களை மரத்தில் கட்டி வைத்து சாட்டையால், சவுக்கால் அடித்த வரலாறு கீழத் தஞ்சை மாவட்டம் முழுக்க விரவிக் கிடக்கிறது.

இதை கீழத் தஞ்சைப் பகுதியோடு சுருக்கிப் பார்ப்பதே கூட குற்றம்தான்.

 “நான் பூர்வ பௌத்தன்” என்ற டி.தர்மராஜனின் நூலில் காணும் கீழ்காணும் சம்பவம் உண்மையை அப்படியே அம்மணமாகப் புட்டுப் போடுகிறது.வாசிக்க வாசிக்க உண்மை நம்மை கொதிக்கச் செய்கிறது.

1892 ஏப்ரலில் சென்னை விக்டோரியா மகாலில் “சென்னை மகா சபை கூட்டம்”  நடை பெறுகிறது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பிரதி நிதிகளின் பிரச்சினைகளை கேட்டு விவாதித்து பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கோரிக்கைகளை சமர்ப்பிப்பதே அந்தக் கூட்டத்தின் நோக்கம்.

அயோத்தி தாசப் பண்டிதரும் அதில் கலந்து கொள்கிறார். பறையர் குலத்தவரின் பிரதிநிதியாய் தான் தனது குலத்தவரின் குறைகளை பேசுவதற்காக வந்திருப்பதாக சொல்கிறார்.  ஆலயங்களில் வழிபடும் உரிமை,  வெறுமனே தரிசாகக் கிடக்கும் நிலங்களை தனது குலத்தை சார்ந்த கிராம வாசிகளுக்கு பிரித்துக் கொடுக்க அரசுக்கு பரிந்துரைத்தல், தனது இனக் குழந்தைகளுக்கு நான்காவது வரை படிப்பதற்கு இலவச பாடசாலைகள் போன்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைக்கிறார்.

இந்தக் கட்டுரைக்கு தேவையில்லைதான் என்றாலும் பண்டிதரின் இந்தக் கோரிக்ககளை நிராகரித்துப் பேசிய தஞ்சையை சேர்ந்த சிவராம சாஸ்திரி முதலில் ஆலய நுழைவு உரிமையை நிராகரித்துப் பேசியதையும் சேர்த்தே  பார்ப்பது முற்றிலும் பொருத்தமானதாகும்.

“பறையர் குலத்தின் பிரதி நிதியாய் வந்திருக்கும் அன்பருக்கு நான் பதில் சொல்லக் கடமை பட்டிருக்கிறேன். அந்த அன்பர் எங்களை ஏன் சிவன் கோவிலுக்குள்ளும் விஷ்ணுவின் கோவிலுக்குள்ளும் சேர்க்க மறுக்கிறீர்கள் என கேட்கிறார். இதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். சிவனும் விஷ்ணுவும் என்றைக்குமே அவர்கள் கடவுள்கள் இல்லை. அவர்கள் கும்பிடுவதற்கு என்று மதுரை வீரன், காட்டேரி, கருப்பண்ண சாமி போன்ற
 சில தெய்வங்களை அவர்களுக்கு நாம் கொடுத்திருக்கிறோம், என்றபோது உங்களுடைய கடவுள்கள் என்றைக்கும் எங்களுக்கு வேண்டாம் என்று கம்பீரமாக தனது கோரிக்கையை தானே தூக்கிக் கிடாசிய பண்டிதர் தன் இனக் குழந்தைகளுக்கு நான்காம் வகுப்புவரைக்குமான இலவசப் பாடசாலைகளை துவக்க இந்த சபை அரசுக்கு கோரிக்கை அனுப்ப வேண்டும் எனக் கேட்கிறார்.

இந்தக் கோரிக்கையை நிராகரித்துப் பேசியதும் அதே சிவராம சாஸ்திரிதான்.” கோயிலில் சேர்க்க முடியாது என்பதை ஏற்றுக் கொண்ட அன்பர் இப்போது நான் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்...”என்று ஒரு நிபந்தனையோடே பேசத் தொடங்குகிறார். அவர் சொல்வதை இவர் ஏற்க வேண்டுமாம். முதலில் முதல் கோரிக்கை நிராகரிக்கப் பட்டதை பண்டிதர் ஏற்றார் என்பதே ஏற்க இயலாதது. ஏற்பது எனில் ஆமாம் நீங்கள் சொல்வது சரி . அதை நாங்கள் கேட்டிருக்கக் கூடாதுதான், என்றால் ஏற்பது. ஆனால் பண்டிதர் அப்படி செய்ய வில்லை. “ போங்கடா நீங்களும் உங்க சாமிகளும்”  என்பதே அவரது தொனியாக இருந்தது. இதையே ஏற்றதாகப் பதிவதுதான் மேட்டுக் குடியின் சாமர்த்தியம்.

ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று சொன்னபின் எதற்கு வியாக்கியானம் தேவைப் படுகிறது?. அவர்களது முடிவை ஆரம்பமே சொல்லிவிடுவதால் அதை விட்டு விடலாம்தான். ஆனால் அதற்கு பண்டிதரின் பதில் அவசியம் என்பதால் அதையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.

சிவராம சாஸ்திரி திமிரோடு தொடர்கிறார், “கல்வி கற்றலும், புத்தி சாதுர்யமும் பயிற்சியாலோ , கட்டாயத்தாலோ, வருவது இல்லை. விவேகமும் புத்தியும் பிராமண விந்திற்கு மட்டுமே சொந்தம் என்பதை அன்பர் உணரவேண்டும். ஆதி என்ற பறையர் குலப் பெண்ணுக்கு பிறந்தவர் என்றாலும் அவருடைய தகப்பனார் பகவான் ஒரு பிராமணர். அதனால்தான் வள்ளுவரால் குறளை எழுத முடிந்தது.

எவ்வளவு திமிர். புத்தியும் கல்வியும் பயிற்சியினால் வருவது இல்லை என்பது எவ்வளவு ஆனவமான, சாதித் திமிரோடு கூடிய எல்லோருக்கும் கல்வி என்ற இன்றைய ஒடுக்கப் பட்ட திரளின், உழைக்கும் பெரு மக்களின் கோரிக்கைக்கு எதிரானது.

”சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்”  என்கிற நம் வீரியம் மிக்க பழ மொழியை நக்கலடிக்கிற பதில் இல்லையா. சரி சிவராம சாஸ்திரிக்கள் அந்தக் காலம் எனலாம்.

இப்போதும் ஒருவர் சிவராம சாஸ்திரியின் குரலாய் மாறிப் போனாரே.  எல்லா மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்றதும் நூலுக்கும் காலனிக்கும் ஒரே பாடத் திட்டமா? அடுக்குமா? அது கட்ட மாட்டு வண்டி இது ராக்கெட் அல்லவா என்பது போல் இல்லாத சிண்டை சினக்க சினக்க ஆட்டும் சோக்கள் சிவராம சாஸ்திரிகளன்றி வேறு என்ன?

மனு எல்லா காலத்திலும் இருக்கிறான். அவன் பெயர் அப்போது மனு, அப்புறம் ராஜ கோபாலாச்சாரி, இப்போது சோ.ஆக எல்லாக் காலத்திலும் மனு உண்டு.

இந்தக் கட்டுரைக்கு தேவையே இல்லை எனினும் சிவராமனுக்கு பண்டிதர் கொடுத்த பதில் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். நம்மை உற்சாகப் படுத்தி நமது கங்கின் சாம்பல் ஊதக் கூடிய வார்த்தைகள் அவை என்பதால் பதிகிறேன்.

சிவராமனை இடை மறித்து பண்டிதர் கேட்கிறார்,

அய்யா, சிலது கேட்க வேண்டும்

கேளுங்கள்

“கல்வியும் விவேகமும் பிராமண விந்திற்கே தொடர்புடையதென்றால் BA, MA போன்ற பட்டங்களை பெற்றிருக்கக் கூடியபறையர்கள் அனைவரும் யாருடைய விந்திற்குப் பிறந்தவர்கள்? அதே போல் இன்றைய தினம் சிறையில் இருக்கும் பிராமணர்கள் யாருடைய விந்திற்குப் பிறந்தவர்கள்?”

இப்போது வரலாம் பஞ்சாயத்திற்கு. இப்போது என்ன நடந்து விட்டது? இது ஒன்றும் எல்லோரையும் புத்தகம் கைக்கு வந்த நாளே ஒன்று படுத்தி விடக் கூடிய ஒன்றல்ல. புத்தகம் கூட ஒன்றும் அல்ல. பாடத்திட்டம் மட்டுமே ஒன்று. பொதுப் பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவனின் அறிவியல் பாட[ப் புத்தகத்தில் இரண்டாம் பாடம் ‘தண்ணீர்’  எனில் மெட்ரிக் பையனின் இரண்டாவது பாடமும்  ‘தண்ணீர்’ . அவ்வளவுதான். பொதுப் பாஷை நீசத் தனமானது என்று அவர்கள் கருதினால் அவர்களது தேவ பாஷையிலே ‘ஜலமாய்’ கொட்டலாம்.

இதற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு. இன்னமும் உன் பிள்ளை ரேமண்ட்ஸில் பள்ளிக்கு வந்தால் என் பிள்ளை கிழிந்த உடையோடுதான் வருகிறான். உன் பிள்ளை பாட்டா போட்டு வந்தால் என் பிள்ளை வெறுங்காலோடுதான் வருகிறான். உன்பிள்ளை ஏ.சி அறையிலெனில் என் பிள்ளை இன்னமும் மரத்தடியில்தான்.

இவ்வளவு வேறு பாடுகள் இருந்த போதும் அவன் குதிக்கிறானே ஏன்?

காரணம் இதுதான். அவன் காலத்தில் ஒன்றும் அவன் குடி முழுகிப் போய்விடாது என்பது அவனுக்கு நன்றாகவேத் தெரியும். இது ஒரு சின்னத் தொடக்கம் என்பதும் அவனுக்குத் தெரியும்.

சமச்சீர் திட்டத்தில் குறை என்பது கூட சரி செய்யக் கூடியதே என்பதும் அவனுக்குத் தெரியும் .மட்டுமல்ல சமச்சீர் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைவதோ சரி செய்து நல்ல பொதுவான ஒரு பாடத்திட்டம் நோக்கி நகர்வதோ அல்ல அவனது எதிர்ப்பின் நோக்கம்.

அவனுக்குத் தெரியும் இந்தத் திட்டம் நடை முறைப் படுத்தப் பட்டு பையப் பைய அதன் குறைகள் சரி செய்யப் படுமானால் அதன் விளைவு அவனது பேரனுக்குப் பேரன் நம்முடைய பேரனுக்குப் பேரனோடு ஒன்றாக எல்லா நிலைகளிலும் சமதையாக அமர வேண்டி வரும் என்று அவனுக்குத் தெரியும் .  அதுதான் கொதிக்கிறான்.

நேற்றைய ஜூனியர் விகடனில் கழுகாரிடம் “புதிதாக உதயம் ஆகியுள்ளதெற்கு சூடானுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?” என்று ஒரு கேள்வி

கழுகார் சொல்கிறார்,

“ மொத்தமே பதினைந்து சதவிகிதம் பேர்தானங்கு கல்வி அறிவு உடையவர்கள். கல்வியில் பின் தங்கியுள்ள தெற்கு சூடான் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல் உங்களுக்கு தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் கல்விதான் அதை தக்க வைக்கப் பயன்படும்.”

மண்ணை தக்க வைக்க வேண்டுமெனில் கல்வி அவசியம். கல்வி பெறாத சமூகம் தனது மண் மீது தனக்குள்ள உரிமையை இழந்து அடுத்தவன் ஆதிக்கத்தின் கீழ் போகும்.

கல்வி சமப்பட்டால் சகலமும் சமப்படும். அல்லது கல்வி மட்டும் சமப்பட்டு விட்டால் அச்சமூகம் அனைத்திலும் சமத்துவம் கேட்கும். அதற்காய்ப் போராடும்.

ஆக கல்வியில் சமத்துவத்தை இன்று விட்டுக் கொடுத்தால் நாளை சகலமும் சமப்படும். அப்படி சமப் பட்டால் தனது ஆதிக்கம் பறி போகும். இன்னும் பச்சையாக சொல்வதெனில் அப்புறம் தனது சந்ததி உழைக்க வேண்டி வரும் போன்ற உண்மைகளே சமச் சீருக்கு எதிராய் அவனை கிளப்புகிறது.

ஆக சமச்சீரின் பலம் நம் எதிரிக்குப் புரிகிறது. நமக்கெப்போது புரியப் போகிறது?





Thursday, August 4, 2011

கதவை சாத்தியது யார்?

அதை எப்படி அழைப்பதென்று தெரியவில்லை. மிகச் சரியாக இருபத்தி ஒன்பது நொடிகளே ஓடக் கூடிய ஒரு குட்டியோ குட்டியூண்டுக் குட்டிக் குறும் படம்.
தோழி ப்யூலாவின் முக நூலில் கிடைத்தது. அப்படியே சுட்டு கொஞ்சமும் சேதப் படாமல் எடுத்து வந்து நமது முக நூலுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் அதை எப்படி செய்வதென்று தெரியவில்லை. நமக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களில் எப்படி சுடுவது என்பதும் ஒன்று.

கிஷோரின் கையில் காலில் விழுந்து எப்படியோ ஒரு வழியாய் அதை செய்தும் முடித்தேன். மீண்டும் ஒரு முறை பார்த்தேன். சுருக்கம் என்றால் சுருக்கம் அப்படி ஒரு சுருக்கம்.

ஒரு எல்.கே.ஜி பையனிடம் எழுதச் சொல்லி அவன் பெரிசு பெரிசாய் எழுதினாலும் கதை ஒரு A4 அளவு தாளைத் தாண்டாது.

அவ்வளவு சின்னது.

சட்டை போடாத சிறுவன் ஒருவன் ஒரு தட்டு நிறைய முட்டைகளை எடுத்துக் கொண்டு மாடிப் படி ஏறி வருகிறான். அவன் போக வேண்டிய அறையின் கதவு சாத்தி இருக்கிறது. கதவை ஒரு கையால் மென்மையாக தள்ளுகிறான். கதவு திறக்க வில்லை. மீண்டும் கொஞ்சம் விசை கொடுத்து அழுத்தித் தள்ளுகிறான். அப்போதும் திறக்கவில்லை. முட்டைத் தட்டை கீழே வைத்துவிட்டு இரண்டு கைகளாலும் தள்ளிப் பார்க்கிறான். முடியவில்லை. தன் முழு பலத்தையும் ஒன்று திரட்டி தன் உடலால் ஆன மட்டும் பலம் கொண்டு மோதிப் பார்க்கிறான். ஒன்றும் பயனில்லை.

அவனால் முடிந்த அத்தனையும் செய்து பார்த்துவிட்டான். எதுவும் பலிக்கவில்லை. அவன் மீது ஏகத்துக்கும் அனுதாபம் பிறக்கிறது. நம்மாலும் உதவ இயலாத சூழல். அய்யோ பாவம் என்ன நேர்ந்தது இந்தக் கதவுச் சனியனுக்கு, என்று கதவை சபிக்கிறோம்.

அடுத்து என்ன செய்வான்? பேசாமல் திரும்பி விடுவானா? அல்லது நம்ம ஊர் கதாநாயகன் மாதிரி பின்னே ஓடி நின்று பின் முன் நோக்கி ஓடி வந்து கதவைத்  தள்ளித் திறப்பானா?

அதைப் பற்றி யோசிப்பதற்கோ யூகிப்பதற்கோ இடம் கொடுக்காமல் இன்னொரு சிறுவன் அங்கு வருகிறான். நேர்த்தியான உடை, மிடுக்கான நடை, கழுத்தில் டை, காலில் விலை உயர்ந்த ஷூ, கையில் புத்தகங்கள் என்று மேட்டுக் குடியின் அக்மார்க் பிரதி.  கொஞ்சமும் புன்னகை மாறாமல் ஏற்கனவே கதவைத் திறக்க முடியாமல் நொந்து போயிருந்த சிறுவனின் தோள் மீது கை வைத்து அவனைக் கொஞ்சம் நகரச் சொல்கிறான்.

இவன் சற்றே நகர இரண்டாவதாக வந்த பையன் அதாவது படித்த பையன் கதவின் ஒரு புள்ளி நோக்கி கையை நீட்டுகிறான். முட்டை தூக்கி வந்த பையன் முதல் நம் அனைவரது பார்வையும் அவன் கை நீட்டும் புள்ளி நோக்கி குவிகிறது.

அந்தக் குறிப்பிட்ட இடத்தில் கதவில் “இழு” என்று எழுதப் பட்டிருக்கிறது. மீண்டும் அந்தப் பையன் சட்டைப் போடாத இந்தப் பையனைப் பார்க்கிறான். சன்னமான புன்னகையோடு கதவை இழுக்கிறான். கதவு திறக்கிறது. முட்டையோடு வந்த பையன் தலையில் கை வைத்தவாறு நிற்கிறான்.

”படிப்பு கதவுகளைத் திறக்கும்”  என்ற  ஒரு வாசகத்தோடு அந்தப் படம்  முடிகிறது.

இவ்வளவுதான் படம். அரை நிமிடத்திற்கும் ஒரு நொடி குறைவாகவே ஓடக் கூடிய இதனை, குறும் படத்திற்கு தேவையான மிகக் குறைந்த் அளவுக்கும் (அப்படி ஒரு அளவுகோள் இல்லை என்பது வேறு விசயம்.) மிகவும் குறைச்சலான அளவு நேரமே ஓடக் கூடிய ஒன்றினை, குறுகத் தறித்ததாகக் கொள்ளப்படும் குறளைப் பொருளோடு சொல்வதற்கு ஒரு சிறுவன் எடுத்துக் கொள்ளும் கால அளவில் பாதி அளவு நேரமே ஓடக் கூடிய ஒன்றினை வேறு ஏதேனும் புதுப் பெயெர் கொண்டுதான் அழைக்க வேண்டும். எந்த ஒன்றிற்கும் பொருத்தமான பெயர் வைப்பதில் தேர்ச்சி பெற்றிருக்கும் எங்கள் தமிழ்ப் பிள்ளை கூடிய விரைவில் இதற்கும் ஒரு பொருத்தமான புதுமையான பெயரை வைப்பான்.

கல்வி கதவுகளைத் திறக்குமா?
எனில் கல்வி எந்தக் கதவுகளைத் திறக்கும்?
எனில் எந்தக் கல்வி கதவுகளைத் திறக்கும்?
எனில் எந்தெந்தக் கல்வி எந்தெந்தக் கதவுகளைத் திறக்கும்?

கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது. உண்மையிலுமே இந்தச் சின்னப் படம் கொளுத்திதான் போட்டது. நாம்தான் குழம்பிப் போனோம். மற்றவர்களை இது இந்த அளவுக்கேனும் கிச்சு கிச்சு மூட்டுகிறதா பார்ப்போம் என்று  விக்டோரியாவிடம், கீர்த்தியிடம், கிஷோரிடம், பள்ளியில் நண்பர்களிடம் என்று கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் இதனைக் காட்டி கருத்தினைக் கேட்டேன்.

ஏனென்றே தெரியாமல் ஒட்டு மொத்த தமிழகமும் ஓட்டுப் போட்டதைப் போல ஒருவர் பாக்கி இல்லாமல் ஒன்றையே சொன்னார்கள்.

“சின்னப் புள்ளைல அம்மா அப்பா பேச்சக் கேட்டுப் படிச்சிருந்தா இப்படி வருமா? கல்வி இல்லைனா அவமானப் படனும்னு ஆரோகியம் சிஸ்டர் அடிக்கடி சொல்வாங்க. இப்ப பாத்தீங்களா எழுதப் படிக்கத் தெரியாத அந்தப் பையன் எப்படி அவமானப் படறான்னு. படிச்சா எவ்வளவு மரியாதையா ஸ்டைலா வாழலாம்,” என்று தன்னளவிலான விமர்சனத்தை வைத்தாள் கீர்த்தி.

பள்ளியில் அன்று தலைமை ஆசிரியர் வராத காரணத்தால் நான் தான் கூட்டு வழிபாட்டினை நடத்த வேண்டி வந்தது. அப்போதும் இந்தக் கதையினை பிள்ளைகளிடம் சொன்னேன். முடிந்ததும் ஏழாம் வகுப்பு ரூபன் ஓடி வந்து என் கையை பிடித்துக் கொண்டு கதை நல்லா இருக்கு.  இனிமே நீங்களே கதை கிளாசுக்கும் வாங்க சார் என்கிறான். ஒரு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் என்னிடம் கதை நல்லா இருந்ததாக சொன்னார்கள். அடுத்தடுத்து வேலைகள் இருந்ததால் பிள்ளைகளிடம் இது குறித்து விவாதிக முடியவில்லை.

வகுப்புகளைப் பார்வையிட சென்றபோது ஒன்றிரண்டு ஆசிரியைகள் அந்தக் கதை குறித்து பேசினார்கள். கல்வியின் அவசியத்தை உணர வைக்க இதைவிட வேறு என்ன வேண்டும்? என்கிற மாதிரி சொன்னார்கள்.

அலை பேசியில் இருந்த படத்தைப் பார்த்துவிட்டு நண்பர்களும் இதையே சொன்னார்கள். சேவியர் ஒரு படி மேலே போய் இதை ஆறு ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்றார்.கண்ணனும் நிவாசும் பள்ளி தொலைக் காட்சிப் பெட்டி மூலமாகவா அல்லது மேசைக் கணினி மூலமாகவா என்பது குறித்து விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்.

பன்னிரண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்கப் போன போது அவர்களிடம் அது குறித்து கருத்து கேட்டேன். அச்சுப் பிசகாமல் அவர்களும் இதையே சொன்னார்கள்.

ஆக இந்தப் படம் குறித்த எல்லோரது கருத்தும் ஒன்றாகவே இருக்கிறது. ஆறாம் வகுப்பு படிக்கும் பிள்ளையிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு பாடமெடுக்கும் ஆசிரியர் வரைக்கும். படிக்கிற வயசில் படிக்காமல் சுத்தினால்  இப்படித்தான் என்பதே அது.

அது மொத்தமும் சரி இல்லை என்றாலும் தவறில்லை என்கிற வகையில் சரியான கருத்தாகவே படுகிறது.

ஆனால் கீர்த்தனா பேசிக் கொண்டிருந்தபோது இடை மறித்து “ அவன் படிக்க மாட்டேன்னு யார்ட்டயாவது சொன்னத கேட்டியாடி வெள்ளச்சி” என்று கேட்டது நிரம்பவே யோசிக்க வைக்கிறது.

ஆமாம், இவன் படிக்காமல் போனதற்கு இவனா காரணம்? அல்லது இவன் மட்டுமா காரணம்?

ஆம் எனில் புத்தகத்தோடும், மிடுக்கான உடையோடும், அவன்தான் அல்லது அவனேதான் காரணம் என்றாகிவிடும். சத்தியமாய் அதுவல்ல காரணம்.  அவனது மிடுக்கிற்க்கும் , படிப்பிற்கும் , மேதமைக்கும் அவனல்ல அவனது சமூக சூழலே காரணம்.

அதேபோல்தான் இவன் முட்டை தட்டை தூக்குவதற்கும், இவனைப் போல் வேறு சிலர் தேநீர்க் குவளைகளைக் கழுவுவதற்கும் இவர்களது குடும்ப மற்றும் சமூக பின் புலமே காரணம்.

எனெக்கென்னவோ இவர்களது கல்வியைக் களவாண்ட புன்னியவான்களில் சிலரே இந்தப் படத்தைப் பார்த்து உப்பில்லை உரப்பில்லை என்று வியாக்கியானம் செய்துகொண்டிருக்கவும் கூடும் என்று படுகிறது

கல்வி இல்லாதவனுக்கு கதவுகள் திறக்காது என்பதை ஒத்துக் கொள்கிறோம். அதே வேளை கல்விக் கூடங்களில் இவர்கள் நுழைய விடாமல் கதவைச் சாத்திய களவாணிகளை நாங்கள் சும்மா விடுவதாயில்லை.

எது எப்படியோ இப்படி ஒரு நல்ல படத்தை எடுத்த தோழன் அல்லது தோழி வாழ்க.


 





Tuesday, August 2, 2011

விழித்திருந்து பெற்றவர்கள் பாக்கியவான்கள்...




இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். கிஷோரை கல்லூரி விடுதியில் விட்டு 
விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்படியே அயர்ந்து தூங்கி விட்டோம் நானும் 
விக்டோரியாவும். அதிகாலை எழுந்து தளவாப் பாளையம் போய் இரவுதான் திரும்பிக் 
கொண்டிருந்தோம்.போக நூற்றைம்பது வர நூற்றைம்பது என சற்றேரக் குறைய 
முன்னூறு கிலோமீட்டர் பயணம். 

இடையில் கரூரில் இறங்கி அவனுக்குத் தேவையான வாலி, குவளை, கண்ணாடி, 
சோப்பு, சீப்பு, தலையணை, போன்ற பொருட்களை வாங்க கடை கடையாய் ஏறி இறங்கி , 
கடுமையான வெய்யிலில் வாங்கியவற்றை தூக்கிக் கொண்டு நடந்து, கல்லூரி 
அலுவலகத்திற்கும் விடுதீகுமாய் இரண்டு மூன்று முறை நடந்து, விடுதியில் கால்  
வலிக்க நின்று என்று ஏகத்துக்கும் பட்டதில் மிகவும் அசந்து போயிருந்தோம்.

யாரோ என் காலை சுரண்டுவது போன்று தோன்றியது. தூக்கம் தொலைந்த எரிச்சலோடுதான் 
விழித்தேன். பார்த்தால் படத்தில் காணும் குழந்தை தன் அப்பாவிடம் இருந்து தாவி என் 
காலை தடவிக்கொண்டிருந்தாள். நானும் விக்டோரியாவும் மூன்றுபேர் இருக்கையில் 
அமர்ந்திருந்தோம். எங்களுக்கு நேரே இருந்த இருவர் இருக்கையில் ஒரு இளைய தம்பதியர். 
அவர்கள் குழந்தைதான் அவள். 

அது அந்தக் குழந்தையின் ஸ்பரிஷம் என்பது புரிந்த மாத்திரத்தில் தூக்கம் அசதி அலுப்பு 
எல்லாம் பறந்து போய் அப்போதுதான் ஜில்லென்ற தண்ணீரில் குளித்து வந்த புத்துணர்ச்சி 
உடலெங்கும். மனசோ ரெக்கை இல்லாமலே பறக்க ஆரம்பித்து விட்டது.

இரு கைகளையும் நீட்டி எவ்வளவோ புன்னகைத்தும் வர மறுத்து சிரித்தாள். அந்த தூக்கம் 
கசியும் கண்களும் பொக்கைச் சிரிப்பும் அப்படியே கிறங்க அடித்தன. 

எவ்வளவோ கெஞ்சியும் வர மறுத்தாள். ஆனால் நாம் அந்தப் பக்கம் திரும்பினால் 
சுரண்டினாள். நாம் திரும்பினால் சிரித்தாள். ஆனால் வர மட்டும் மறுத்தாள். ஒரு ஐந்து 
நிமிடம் இப்படியான எனக்கும் அவளுக்குமான போட்டியாகவே கழிந்தது. ஒவ்வொரு முறை 
அவளிடம் தோற்ற போதும் ஏதோ உலகக் கோபையை வெண்ன்ற பெருமிதம். 

இதற்கிடையில் அவர்கள் அவர்கள் ஊர் வரவே இறங்கப் போனார்கள். 

அவளது தந்தை அவளை தூக்கிக் கொண்டு படிக்கட்டு நோக்கி நடந்தார். குழந்தை பேருந்தில் 
இருந்த எல்லோருக்கும் டாடா காட்டினாள்.  எல்லோருக்கும் கஞ்சத்தனமே இல்லாமல் 
காற்றில் முத்தம் கொடுத்தாள். எனக்கும் ஒன்று வந்தது.

எப்படி சொல்வது ? எனது நாற்ப்பத்தியெட்டு வருட வாழ்வில் நான் அதிகம் சந்தோஷப் பட்ட 
பத்து தருணங்களுள் அதுவும் ஒன்று. 

 இறங்கி பேருந்தைக் கடந்து போகும் வரைக்கும் விக்டோரியா அவளையே வைத்தக் கண் 
வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். 

”ஏங்க வெளியே இருந்து இப்ப ஒரு முத்தம் கொடுக்கறாங்க” என்று சொன்ன விக்டோரியாவின் 
குரலில்தான் எத்தனை உற்சாகம்.  எத்தனை குதூகலம். நானும்தான் அவளைப் பார்த்தேன். 
நான் பார்க்காத நேரம் பார்த்து விக்டோரியாவிற்கு கொடுத்திருக்கிறாள். ம்.. எதற்கும் ஒரு 
கொடுப்பினை வேண்டும்

 “ குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்று ஏதோ கிறுக்கன் பாதி மப்பில் உளறி இருக்கிறான்.
குழந்தை எதையும் விடவும் உசத்தியானது.

அவள் காற்றிலே முத்தங்களை கொடுத்தபோது விழித்திருந்து பெற்றுக் கொண்டவர்கள் 
பாக்கியவான்கள். அப்போது தூங்கிக் கொண்டிருந்த ஏனையோர் சத்தியமாய் 
சபிக்கப் பட்டவர்கள்.

Saturday, July 23, 2011

அந்நியம்







தேர்வென்றும்
நோயென்றும்
நீ சொன்ன ஏதேதோ காரணங்களால்
பேரன்களை மருமகளை 
நீ அழைத்து வராமைக்கு சமாதானப் பட்ட
இந்தப் பாழும் கிழவிக்கு 
பத்து நாள் பிடித்தது 
உன்னையே நீ அழைத்து வரவில்லை என்ற 
உண்மை பிடிபட


Monday, July 4, 2011

குறுங்கவிதை

ஒரு சாக்குப் பேப்பர்
மதியம்
சாப்பிடலாம்

Saturday, June 25, 2011

கவிதை நறுக்கு

அபிட் எடுக்கத் தவறியதால்
ஆணிக்காயம்
பம்பரத்திற்கு

Thursday, June 23, 2011

Wednesday, June 22, 2011

ஹைகூ மாதிரி

மலட்டு மரம்
பூத்தது
ஒலி பெருக்கி

Tuesday, June 21, 2011

இதுதான்...

”எதை எடுத்துப் போகலாம்
வராத கடனுக்கு”
தேடும்
ஈட்டிக் காரனிடம்
பொக்கை வாய்ச் சிரிப்போடு
இரண்டு கைகளையும்
நீட்டித் தாவும்
என் குழந்தை


Saturday, June 18, 2011

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

”வணக்கம் எட்வின் சார்”

பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் அவர்கள் அறைக்குள் நுழைய இருந்த என்னை இந்தக் குரல் கொஞ்சம் பின்னுக்கு இழுத்தது. திரும்பிப் பார்த்தால் வழக்கமான புன்னகையோடு பட்டத்திப் பாளையம் சிவமுத்து சார். 

“ வந்த இடத்துல உங்கள சந்திப்பேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல. ரொம்ப சந்தோசமா இருக்குங்க சார்”

பக்கத்தில் ஒரு பதினைந்து அல்லது பதினாறு மதிக்கத் தக்க குழந்தை நின்றிருந்தான். யாரென்று புரியவே, அவனை அப்படியே இழுத்து அணைத்துக் கொண்டேன்.

 நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஆயிரத்திப் பதிமூன்று மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான் என்று தெரியும். 

“என்ன சாமி ஆயிரத்திப் பதிமூன்றா?”

புன்னகையும் வெட்கமும் போட்டிப் போட்டுக் கொண்டு வெளிக் கசிய அப்படியே நெளிந்தான் பிள்ளை.

“ ரொம்ப நல்ல மார்க்குப்பா. மேல என்ன செய்யப் போற,?” என்று அவன் தலையைக் கோதிய வாறே கேட்டேன். அதற்குள் நண்பர் சிவக்குமார் வந்து விடவே,

“சிவா, இவங்க சிவமுத்து சார். கார்மேகம் சாரோட ஊர். சாருக்கு தம்பி முறை வேண்டும். சாரோட மனைவிதான் பட்டத்திப் பாளையம் பள்ளியின் தலைமை ஆசிரியை.” 

அறிமுகம் செய்து வைத்தேன்.

பட்டத்திப் பாளையம் பள்ளியைப் பற்றி ஏற்கனவே அவரிடம் நிறையவே பேசியிருக்கிறேன். மட்டுமல்ல அந்தப் பள்ளி குறித்து நான் ”கல்கி” யில் எழுதிய கட்டுரையையும் அவர் வாசித்திருந்தார். எனவே இதைக் கேட்ட மாத்திரத்தில் சிவாவின் கண்களில் ஒரு மின்னல் வெட்டிச் சென்றதை என்னால் பார்க்க முடிந்தது.

இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

”அந்தப் பள்ளியைப் பார்ப்பதற்காகவே உங்க ஊருக்கு வரணும்னு ஆசை சார். ஒரு முறை அவசியம் வரணும். அந்தப் பள்ளியைப் பற்றி எட்வின் நிறைய சொல்லியிருக்கிறார்.  உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம் சார்,” என்றவர் , “ஆமாம் பையன் என்ன படிக்கிறான்?” என்றார்.

”இப்பதான் ப்ளஸ் டூ முடிச்சிருக்கான்”

” மேற்கொண்டு என்ன படிக்கிறதா உத்தேசம்?” 

அங்க சுத்தி இங்க சுத்தி நான் கேட்டிருந்த கேள்விக்கு மிக அருகே எங்களைக் கொண்டு வந்து நிறுத்தியவர்,  ‘சார், W2 ரவிகிட்ட ஒரு சின்ன வேல இருக்கு.  போனதும் வந்துடறேன். நீங்க கொஞ்சம் சாரோடப் பேசிட்டு இருங்க. வந்த உடனே சுப. வீ அய்யாவப் பார்க்கப் போயிடலாம்’ (என் தங்கையின் திருமணம் சுப.வீ அவர்கள் தலைமையில் நடக்க இருந்தது. அழைப்பிதழை அவருக்கு கொடுக்க வேண்டியிருந்தது.)

அவர் போனதும் சிவசாமி சாரைப் பார்த்தேன். எனது பார்வை மீண்டும் அதே கேள்வியைக் கேட்கவே,

”கோவை PSG யில் பிசிக்ஸ் கிடைச்சிருக்கு. லயோலா கிடைச்சா நல்லா இருக்கும்னு தோனுச்சு. அதான் முயற்சி செய்து பார்க்கலாமேன்னு வந்திருக்கோம்”

“இந்த மார்க்குக்கு கண்டிப்பா கிடைக்கும். ஏன் சார், மெடிக்கல் முயற்சி செய்யலையா?”

“கட் ஆஃப் கொஞ்சம் குறையுதுங்க சார்”

“ நிர்வாகக் கோட்டாவில் முயற்சி செய்யலாமே?”

கோடிக் கணக்கில் சொத்து அவர்களிடம் உண்டு என்பதாலும், மேலும் ஒரே பையன் என்பதால் செலவு செய்து படிக்க வைப்பது அவர்களுக்கு ஒரு விஷயமே இல்லை என்பதாலும் அப்படிக் கேட்டேன்.

“பதினஞ்சு நாளா நானும் அவங்க அம்மாவும் கிடந்து உழுந்து புரண்டு பார்த்துட்டோம். கொஞ்சம் கூட இறங்கி வரவோ, இரக்கப் படவோ மாட்டேங்கறான் சார்”

“கார்மேகம் சாரிடம் சொல்லிப் பேசச் சொல்லிப் பார்க்கலாமே?”

“ அவர் வீட்டில்தான் ரெண்டு நாளா தங்கியிருக்கிறோம். அவரும் ஆன மட்டும் தலையால தண்ணிக் குடிச்சுப் பார்த்துட்டார். அசைவனாங்குறான்.”

தங்கள் கனவு உடைந்ததன் வலி அவரது முகத்திலும் குரலிலும் தெரிந்தது.

”என்ன செல்லம், மருத்துவம் எவ்வளவு ஒசத்தியான படிப்பு தெரியுமா?” என்று முடிப்பதற்குள் சிவமுத்து சார், “ நான் கொஞ்சம் ஒதுங்கிக்கிறேன். ஒங்ககிட்டயாவது கொஞ்சம் மசியறானான்னு பார்ப்போம்” என்றவாறே ஒதுங்கினார்.

இவங்களாவது நல்லது செய்ய மாட்டாங்களா என்று ஒவ்வொரு முறையும் மாறி மாறி ஓட்டுப் போடும் தமிழ் மக்களின் கண்களில் வழியும் கனவினைப் போல இவனாவது பிள்ளையை மசிய வைத்துவிட மாட்டானா என்ற ஏக்கத்தை அவரது விழிகளில் பார்க்க முடிந்தது.

அவனை இன்னும் கொஞ்சம் இறுக்கி அனைத்தவாறும், தலையைக் கோதியபடியுமாய் அருகில் இருந்த இருக்கைகளில் ஒன்றில் அவனை அமரச் செய்து இன்னொன்றில் நான் அமர்ந்து கொண்டேன்.

 “ஏம்ப்பா, ஏன் மருத்துவம் வேண்டாங்குற?”

“வேண்டாங்க மாமா”

“மருத்துவம் பிடிக்கலையா?”

“அது மேல வெறிகொண்ட ஆசையே உண்டு”

அப்படியே ஆடிப் போனேன் ஆடி.

“ அப்புறம் என்னாப்பா, இவ்வளவு ஆசை இருக்கே. பேசாம நல்ல காலேஜா பார்த்து சேர்ந்துட வேண்டியதுதானே?”

”வேண்டாங்க மாமா”

வேதாளம் இறங்குகிற மாதிரி தெரியவே இல்லை. இருந்தாலும் நம்பிக்கை இழக்காதவனாய்,

“கஷ்டமா இருக்கும்னு பயப்படறியா?”

”அய்யய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க.  இன்னும் சொல்லப் போனா பிசிக்ஸவிட மெடிக்கல் கிடச்சா அத ரொம்ப நல்லாவே படிப்பேன். ராப் பகலா கண்ணு விழிச்சுப் படிச்சதே எப்படியாவது டாக்டராகனும்னுதானே”

சில நேரங்களில் மன்மோகன் சிங் பேசினாலே புரிகிறது. பிள்ளையோ ஆறேழு மன்மோகன் சிங்குகளாய் குழப்பினான்.

“அப்புறமென்ன?”

”கிடச்சாப் படிக்கலாம்.”

அப்பாடா ஒரு வழியாய் மசிஞ்சானே பிள்ளை என்று நினைத்தவனாய், “கிடைக்கும், நிச்சயம் கிடைக்கும்” என்றேன்.

“  நிச்சயமாய் கிடைக்காதுங்க.”

“ அதுக்கு நாங்களாச்சு.  அண்னாமலை போதுமா?, இல்லை வேறு ஏதாவது காலேஜ் வேணும்னாலும் சொல்லு. மத்தத நாங்க பார்த்துக்கறோம்”

ஒரு வழியாய்ப் படிந்து போனதாகவே அந்தப் புள்ளியில் எனக்குப் பட்டது.

“பேமெண்ட் சீட்லயா மாமா?”

“ஆமாம்”

“ அதுதான் வேண்டாங்குறேன்.”

காசு அதிகமாய் செலவாயிடுமோன்னு பயப்படுகிறான் போல என்று எண்ணினேன்.

”சொத்து கறைஞ்சுடுமோன்னு பயப்படுறியாப்பா. கவலையேப் படாத. சம்பாரிச்சுக்கலாம்.”

“அப்ப சம்பாரிக்கத்தான் எல்லோரும் என்னை மருத்துவம் படிக்கச் சொல்றீங்களா ?”

என்ன செய்வதென்றே தெரியவில்லை. எல்லாக் கேள்விகளுக்குமான பதிலும், எதற்கான கேள்விகளும் அவனிடம் ஏராளம் இருக்கின்றன. ஏதாவது கேட்டால் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தன் கேள்விகளாலும் பதில்களாலும் வளைத்துக் கவ்விப் பிடித்து விடுகிறான் நம்மை.

“ ஆனாலும் மருத்துவம் என்பது சேவை இல்லையா?”

“பிசிக்ஸ் படிச்சுட்டுக் கூட சேவை செய்யலாம் மாமா”

பிடி கொடுக்கவே மறுக்கிறான்.

“ அப்ப மெடிசின் பிடிக்கல, அப்படித்தானே?”

முனை மழுங்கிய மொக்கை என்று தெரிந்தும் வேறு வழி இன்றி கேட்டேன்.

”இல்லீங்க மாமா, நான் எடுத்த மார்க்குக்கு மெடிசன் கிடைத்தால் எல்லோருக்கும் இனிப்பு கொடுத்து சந்தோசமா படிப்பேன். ஆனா தாத்தாவோட காசுக்குத்தான் அது கிடைக்கும்னா வேண்டாங்க மாமா.  அம்மாவும் அப்பாவும் உங்களப் பத்தி பெருமையா நிறைய சொல்லியிருக்காங்க. நீங்களே படிப்ப விலைக்கு வாங்க சொல்றதுதான் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்குங்க மாமா”

ஓங்கி அறைந்தது போல் இருந்தது.  இழுத்து இன்னும் இறுக்கமாக அவனை அணைத்துக் கொண்டேன். இன்னும் அதிகமான வாஞ்சையோடு அவன் தலையை வருடிக் கொடுத்தேன். என் கண்கள் சன்னமாய் சுரப்பது மாதிரிப் பட்டது.

“ஏதும் தப்பா பேசிட்டேனா . அப்படின்னா மன்னிச்சுக்கங்க மாமா.”

“ இல்லப்பா. சத்தியமா இல்ல.  நீ நல்லா வருவ” அவன் கன்னத்தைக் கிள்ளிவிட்டு வந்திருந்த சிவக்குமாரோடு புறப்பட்டேன்.

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

எப்போதும் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன்

“எடுத்துக் கொள்வதற்கு ஏராளமாய் மேன்மைகள் நம் குழந்தைகளிடம் இருக்கின்றன.



இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...