Thursday, October 27, 2011

தெய்வங்களுக்கு சொல்லித் தந்தவன்

பொதுவாகவே நம்முள் புதைந்து புறையோடிப் போயிருக்கும் அழுக்குப் பிடித்து வாடை வீசும் கருத்துப் படிமங்கள் நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், நாம் சற்றும் எதிர்பார்க்காத திக்கிலிருந்து நாம் கனவிலும் எதிர்பார்ப்பதற்கு அந்த நொடி வரைக்கும் நமக்கு நம்பிக்கையே தந்திராத மனிதர்களால் உடைசலைக் காணும்.

அப்படித்தான் படிக்கும் பிள்ளைகளைப் பற்றி நமக்கிருந்த ஒரு முடை நாற்றம் வீசிக் கொண்டிருந்த ஒரு பொதுக் கருத்தை பேய் மழைச்சாரல் தந்த குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த என்னை தங்களது செயலால் சூடேற்றி திமிறேற்றினார்கள்.

"படிச்சவன் நடந்துக்கற மாதிரியா நடந்துக்கற", "படிச்சவன் பேசற மாதிரியா பேசற" என்கிற மாதிரி படித்தவர்களைப் பார்த்து அவர்களது பெற்றோர்களோ, நண்பர்களோ, ஆசிரியர்களோ அல்லது வேறு மற்றவர்களோ கோவம் கலந்த தொனியிலோ அல்லது வருத்தம் தோய்ந்தோ அல்லது ஏளனத் தொனியிலோ கூறுவதைக் கேட்டிருப்போம்.

படித்தவன் எப்படி பேச வேண்டும்?.
படித்தவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கு தெளிவான ஒத்தக் கருத்து எந்த சமூகத்திலும் இந்த நொடியில் இருப்பதாகப் படவில்லை. இதில் இவ்வளவு தயங்க வேண்டிய அவசியம்கூட இல்லை என்றே படுகிறது. இந்தக் கேள்விகளுக்கான ஒத்தக் கருத்தினை நோக்கி எந்த சமூகமும் முதல் எட்டெடுத்துக் கூட வைக்க வில்லை என்று யார் வேண்டுமானாலும் என் தலையில் அடித்தே சத்தியம் செய்யலாம்.

படித்தவன் அதிர்ந்து பேசக் கூடாது. படித்த தமிழனென்றால் தமிழில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தை நுனி நாக்கில் உளற வேண்டும். நாம் உண்டு நம் வேலை உண்டு என்பதை உணர்ந்து உள் வாங்கி செயல்படுத்த வேண்டும். அவனவன் அவனவன் குடும்பத்தின் மீது மட்டும் அக்கறை கொண்டாலே போதும். நாடு தானாக வளப் படும்.

அமெரிக்காவில் மக்கள் தெருவிலே வந்து பெரு முதாளிகள் அரசியலைத் தீர்மானிப்பதை எதிர்த்து போராடுகிறார்களா? அது பற்றி உனக்கென்ன? அது அவன் நாட்டுப் பிரச்சினை. இலங்கையில் கொத்துக் கொத்தாய் கொல்கிறானா?, அறுப்பதற்காகவே வளர்க்கும் செம்மரிகளைக் கூட மூங்கில் பட்டியில் அடைத்து, பகல் வேலையில் அவற்றை சுதந்திரமாய் காலாற மேய வைக்கும் தமிழனை முள் வேளியில் அடைத்து வைத்து அக்கிரமம் செய்கிறானா? விடு அது அவன் உள் நாட்டுப் பிரச்சினை.

எவ்வளவுதான் பாதுகாப்பாய் தப்பிவிட முயன்றாலும் ஈரம் சுரக்கிறதா?. அது தவறு. உடனே ஏதாவது ஒரு வட நாட்டு சேனலை போட்டு மேதைகள் ஆங்கிலத்தில் அலசுவதைப் பார். எந்த விதமான மனித ஈரத்தையும் அவர்கள் உலர வைப்பார்கள். அதையும் மீறிப் பொங்கினால் அவர்களுக்காய் பிரார்த்தனை செய்.

இதைத் தாண்டி உன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர். இந்த உணர்வுதான் ஞானத்தின் தொடக்கம். தர்க்க நியாயம் பேசுபவர்களிடம் காதைத் தராதே. அவர்கள் தீவிரவாதிகள். உன்னை நம்பி குடும்பம் இருப்பதை உணர். நீ அயோகியத்தனம்செய்யாமல் யோகியனாய் வாழ். இதைத்தான் ஆகப் பெரும்பான்மை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடமும், நண்பர்கள் நண்பர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள்.

இதுதானா படிப்பின் விளைவு?

படித்தவன் யோக்கியனாய் மட்டும் இருந்தால் போதுமா? ஆதிக்க சக்த்திகளின் அத்து மீறலை, அயோகியத் தனத்தை பார்த்து மௌனிப்பதும் அயோகித்தனம் அல்லவா?

ஒரு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கொஞ்சி மகிழ்ந்து சந்தோசித்து இருப்பது குடும்ப விவகாரம். அதில் நாம் தலையிடக் கூடாது. ஆனால் குடித்துவிட்டு வந்து மனைவியை துவைக்கும் கணவனைத் தட்டி கேட்காமல் ‘இது அவர்கள் குடும்பப் பிரச்சினை’ என்று ஒதுங்கினால் அது அயோக்கியத் தனம் அல்லவா?

நல்லாப் படி, நன்கு சம்பாரி, சந்தோசமாய் குடும்பம் நடத்து என்பதைத் தவிர வேறு எதையும் நாம் கற்றுக் கொடுப்பதில்லையோ? மதிப்பெண்கள் தாண்டி சமூக அக்கறையே இல்லாமல் பிள்ளைகளை உருவாக்குகிறோமே... என்று நொந்து நூலாகிப் போன என்னை "அப்படியெல்லாம் இல்லை. உங்களது கழுகுப் பார்வைக்குப் படாமல் ஈரத்தை எங்கள் நெஞ்சிலே பத்திரப் படுத்தி வைத்திருக்கும் நாங்களிருக்கிறோம் . நம்பிக்கையோடு இரு" என்று சமீபத்தில் நடந்த காலாண்டுத் தேர்வில் குறைந்த பட்சம் இரண்டு பாடங்களிலேனும் தேர்ச்சி பெறாத, ஆசிரியர்கள் அதிகம் நம்பிக்கை வைக்காத நான்கு மாணவர்கள் தங்களது மகத்தான செயலால் அறைந்து சொன்னார்கள்.


அன்று காலை தீபாவளிக்கு ஒரு நாள்தான் விடுமுறை என்று பள்ளிகளுக்கு வந்த உத்தரவு மாணவர்களையும் ஆசிரியர்களையும்கொஞ்சம் வருத்தப் பட வைத்திருந்தது. பொதுவாகவே தீபாவளி முதல் நாளே தொடங்கி அதற்கு அடுத்த நாள் வரைக்கும் நீளும். பல ஆசிரியர்கள் என்னை அணுகி, “ தலைவர்ட்ட கொஞ்சம் பேசுங்க சார். வியாழன் ஒரு நாள் விடுமுறை விட்டுவிட்டு அதை ஒரு சனிக்கிழமை பள்ளி வைத்து சரி செய்து கொள்ளலாம்” என்றார்கள்.

கோவப் படுவாரோ என்று தயங்கிக் கொண்டிருந்தேன். பள்ளி விட்டிருந்தது. குடையோடு, மழைக் கோட்டோடு வந்திருந்த பிள்ளைகள் போய் விட்டார்கள். சில பிள்ளைகள் மழைக்கு அங்கும் இங்குமாய் ஒதுங்கியிருந்தனர்.

நமக்கு தீபாவளியில் உடன்பாடு உண்டா இல்லையா? நாம் கொண்டாடுகிறோமா, இல்லையா? என்பதை எல்லாம் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிற தருணம் இதுவல்ல. அதற்கான அவகாசமும் இப்போது இல்லை. சக ஆசிரியர்களின் மன நிலையை, அவர்களது கோரிக்கையை, அதில் உள்ள நியாயத்தை, தலைமை ஆசிரியரிடம் அவ்ர் நல்ல மன நிலையில் இருக்கிறபோது அவர் மனம் நோகாமல் பக்குவமாய் எடுத்துக் கூறி , அவர்களது கோரிக்கையை சேதாரம் இல்லாமல் வென்றெடுக்க வேண்டும் என்கிற கவனத்தோடு அவரது அறைக்குள் நுழைந்தேன்.

எனக்கு அந்த வேலையை தலைமை ஆசிரியர் வைக்கவே இல்லை. நான் உள்ளே நுழைவதைப் பார்த்தவர் , “வா எட்வின், உன்னை கூப்பிட பிரிட்டோவை அனுப்ப இருந்தேன். நீயே வந்துட்ட . வா, உட்கார்”

“என்னங்க அண்ணே?”

“இல்ல, தீபாவளிக்கு அடுத்த நாள் விட்டுட்டு அதை பிறகு ஒரு சனி கிழமை பள்ளி வைத்து சரி செய்துக்கலாம்னு படுது. என்ன சொல்ற?”

“அதுதாங்கண்ணே சரி.

பேசிக் கொண்டிருந்த போதே பலத்த சத்தத்துடன் இடி ஒன்று இறங்கியது. வெளியே திண்ணைக்கு ஓடி வந்தோம். பத்துப் பதினைந்து பிள்ளைகள் நின்று கொண்டிருந்தார்கள். விடாது பெய்து கொண்டிருந்தது. இடியினால் பள்ளிக்கு எந்த சேதமும் இல்லை. அப்பாடா என்றிருந்தது.

உள்ளே போகலாம் என்று நாங்கள் எத்தனித்த போதுதான் அது நிகழ்ந்தது.

எங்கள் பள்ளி சென்னை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. எங்கள் பள்ளிக்கு நேர் எதிர்த்தார்போல் வாகனங்கள் u டேர்ன் போட வசதி உள்ளது.

கடைவீதியிலிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இளைஞன் மீண்டும் கடைவீதிப் பக்கம் திரும்ப சென்னைலிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த மகிழுந்து அவனை இடித்து விட்டு நிற்காமல் பறந்துவிட்டது. அந்தப் பய்யன் பறந்து போய் அந்தப் பக்கம் விழுந்ததை கண்ணாரப் பார்த்தோம்.

அப்படியே உறைந்து போனோம்.

பள்ளிக்குப் பக்கத்திலிருந்து ஆண்களும் பெண்களுமாய் ஒரு சின்னக் கூட்டம் பள்ளியில் கூடிவிட்டது. ஆளாளுக்கு கார்க்காரனை வைது கொண்டிருந்தார்கள். வகை வகையாய் சிலர் சபித்துக் கொண்டிருந்தார்கள்.

எப்போது தங்கள் முதுகளில் தொங்கிய பைகளை இறக்கினார்கள்? எப்போது இறங்கி ஓடினார்கள் என்றெல்லாம் யூகிக்க வாய்ப்பே தரவில்லை. பதினோராம் வகுப்பு பிள்ளைகள் நான்கு பேர் அவனைக் கொண்டு வந்து பள்ளி வராண்டாவில் கிடத்தினார்கள்.

பின் மண்டை சின்னதாய் பிளந்திருந்தது. ரத்தக் கசிவு அதிகமாய் இருந்தது. கசிவு என்பது கூட கஞ்சத்தனம்தான். ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. நால்வரில் ஒருவன் தனது ஈரச் சட்டையை கழட்டி ட்ரத்தம் வரும் இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்தான்.

எந்த ஊர்ப் பையன் அவன் என்று யாருக்கும் விளங்கவில்லை. அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை. ஒருவன் என்னிடம் வந்தான்.

“கொஞ்சம் செல்லைக் கொடுங்க சார்.”

கொடுத்தேன்.

நூற்றி எட்டை அழைத்தான். அந்த நொடி வரைக்கும் இது அங்கு நின்ற நான் உள்ளிட்ட பெரியவர்கள் யாருக்கும் தோன்றாத ஞானம்.

சற்றைக்கெல்லாம் ஆம்புலன்ஸ் வந்தது.

ஏற்றினார்கள். யாரேனும் கூட வந்தால்தான் நன்றாயிருக்கும் என்றார் ஓட்டுநர். எதை பற்றியும் யோசிக்காமல் ஒருவன் ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டான்.

“ போயி என்னன்னு போன் பன்னு மாப்ள,  நாங்க வீட்டுக்குப் போயி அம்மா வந்ததும் ஏதாவது சூடா எடுத்துட்டு வரோம். நீ அங்கேயே இருடா”

சொல்லிக்கொண்டே சட்டையைப் பிழிந்தான். ரத்தமாய் கொட்டியது. எந்த அசூசையும் இல்லாமல் அதைப் போட்டுக் கொண்டான்.  மழை சன்னமாய் விட்டிருந்தது. மூவரும் எதுவுமே நடக்காததுபோல் கிளம்பிவிட்டார்கள்.

நீராளர் வேலுவின் மருமகள் குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து வராண்டாவைக் கழுவி விட்டாள்.

அண்ணன் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாதவராய் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தார். அவரைத் தேற்ற வேண்டும்.

தெய்வம் எதுவுமில்லை என்பதில் நமக்கு தெளிவு உண்டு.

உயிரை காப்பது தெய்வக் குணம் என்கிறார்கள்.

எனில் அடிபட்ட பிள்ளையின் உயிரைக் காக்கப் போராடிய என் நான்கு பிள்ளைகளும் தெய்வங்கள்தான்.

அவர்கள் தெய்வங்கள் எனில் நான்?

நான்....

தெய்வங்களுக்கு சொல்லிக் கொடுத்தவன்.





57 comments:

  1. சிறந்த பதிவு! அந்த மாணவர்களை பாராட்ட வார்த்தை இல்லை. ஆனால் அதற்காக அவர்களை தெய்வத்துக்கு ஒப்பாக கூறுவது சற்றே மிகைப்படுத்தல். மனிதனும் இறைவனும் ஒன்றாக முடியாது சார்....

    ReplyDelete
  2. ந‌ல்ல‌ ப‌திவு சார். உத‌வாக்க‌ரைக‌ள் என்று ப‌டிக்காத‌வ‌ர்க‌ளை முடிவுக‌ட்டும் கேடுகெட்ட‌ ச‌மூக‌த்தில் அந்த‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு அது பொருட்டு அல்ல‌. உத‌வுவ‌து அந்த‌ வ‌ய‌துக்குரிய‌ பிற‌வி குண‌ம்.உங்க‌ள் ப‌ள்ளியில் ம‌ட்டும‌ல்ல‌. நான் ப‌டிக்கும்போதும் இந்த‌ மாதிரி ப‌ல‌ நிக‌ழ்வுக‌ளை பார்த்திருக்கேன். அது மாண‌வ‌ர்க‌ளுக்கு உண்டான‌ எந்த‌ ச‌ம‌ச்சீர் க‌ல்வியும் கொண்டு வ‌ராத அற‌ம்

    ReplyDelete
  3. ilangovan balakirshnanOctober 27, 2011 at 12:37 PM

    வாசிக்கும் போது மயிர்க்கூச்செரியச்செய்து முடிக்கும் போது கண்களைப் பனிக்கவைத்த பதிவு இது.

    கல்வி, சமூகத்தேவையைப் புறந்தள்ளி சுயநல பிண்டமாய் வாழும் சுரணையற்ற தனத்தை மட்டும் தான் வளர்த்துக் கொண்டிருக்கிறது.

    கல்வி கற்றுக் கொடுக்கும் நாசுக்கு, பதவிசு, கள்ள மௌனங்கள் எல்லாம் வன்முறையும் தீவிரவாதமும் தவிர வேறில்லை.

    மிக நீண்ட மீள்வாசிப்பிற்கான பொறியைத்தட்டிவிட்டுச்சென்றிருக்கிறீர்கள். அழகான சிந்தனை. என் பக்கத்திலும் இதனைப்பகிர்கிறேன்.

    கனிவான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கண் கலங்கி விட்டேன். அவர்களை நிச்சயம் மனம் உவந்து பாராட்ட வேண்டும். மாணவர்கள் சிறந்த குணம் படைத்தவர்கள் கள்ளம் கபடமற்றவர்கள். பிரதி உபகாரம் எதிர்பாராதவர்கள். நண்பர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது சற்றும் தயங்காமல் உதவி செய்வார்கள். அழகாக இவற்றையெல்லாம் சேர்த்து எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துகள். அருமையான பதிவு. இதை என் பக்கத்திலும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  5. அருமையான பதிவு.
    காலத்தால் செய்த உதவி. எல்லோருக்கும், அந்த பண்பை சொல்லிக்கொடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கும் மனப்பூர்வ நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    காலத்தால் செய்த உதவி. எல்லோருக்கும், அந்த பண்பை சொல்லிக்கொடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கும் மனப்பூர்வ நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  7. ஈரம் உலராமல் இருக்க இது போன்ற பதிவுகள் அவசியம்.

    ReplyDelete
  8. @
    சுவனப்பிரியன்
    Rathnavel

    மிக்க நன்றி தோழர் சுவனப் பிரியன்

    மிக்க நன்றி அய்யா

    ReplyDelete
  9. @BASHA

    எங்களைத் தாண்டியும் தங்களின் ஈரத்தை அந்தப் பிள்ளைகள் எப்படி பாது காத்தார்கள் என்பதுதான் ஆச்சரியமே

    ReplyDelete
  10. @ilangovan balakirshnan

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  11. @Shuhanth Shuhumar

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  12. சேக்காளி said...
    ஈரம் உலராமல் இருக்க இது போன்ற பதிவுகள் அவசியம்.

    எங்களைக் கடந்து எப்படி ஈரத்தை காப்பாற்றினார்கள் என்றுதான் தெரியவில்லை

    ReplyDelete
  13. simply great.

    ’கொடுத்து வைத்த’ ஆசிரியருக்கும், அவரது அன்பான மாணவர்களுக்கும் சிரம் தாழ்த்திய வணக்கம்.

    ReplyDelete
  14. @தருமி
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  15. மிக்க நன்றி தோழர் ஜெரி

    ReplyDelete
  16. மனிதநேயமிக்க செயல். பாராட்டுக்கள் மாணவர்களுக்கும்., உங்களுக்கும்.

    ReplyDelete
  17. மதிப்பெண்கள் தாண்டி சமூக அக்கறையே இல்லாமல் பிள்ளைகளை உருவாக்குகிறோமே... என்று நொந்து நூலாகிப் போன என்னை "அப்படியெல்லாம் இல்லை. உங்களது கழுகுப் பார்வைக்குப் படாமல் ஈரத்தை எங்கள் நெஞ்சிலே பத்திரப் படுத்தி வைத்திருக்கும் நாங்களிருக்கிறோம் . நம்பிக்கையோடு இரு" என்று சமீபத்தில் நடந்த காலாண்டுத் தேர்வில் குறைந்த பட்சம் இரண்டு பாடங்களிலேனும் தேர்ச்சி பெறாத, ஆசிரியர்கள் அதிகம் நம்பிக்கை வைக்காத நான்கு மாணவர்கள் தங்களது மகத்தான செயலால் அறைந்து சொன்னார்கள்.

    ReplyDelete
  18. தோழர்கள் தேன் மற்றும் ராதாக்ரிஷ்னன் ஆகியோருக்கு நன்றிகள்

    ReplyDelete
  19. "மழை சன்னமாய் விட்டிருந்தது. மூவரும் எதுவுமே நடக்காததுபோல் கிளம்பிவிட்டார்கள்"

    அந்த மூன்று கடவுள்களையும்....
    து.பஞ்சாட்சரம்

    ReplyDelete
  20. மிக்க நன்றி தோழர் பஞ்சாட்சரம்

    ReplyDelete
  21. பள்ளிகளில் கற்றுத்தரவேண்டியது பாடங்கள் மட்டுமல்ல மனிதநேயமும் என்பதை தங்களின் பதிவு உணர்த்தியது.

    ReplyDelete
  22. அவர்கள் தெய்வங்கள் எனில் நான்?

    நான்....

    தெய்வங்களுக்கு சொல்லிக் கொடுத்தவன்.
    .....நன்றாகவே சொல்லிகொடுதுள்ளீர்கள்

    ReplyDelete
  23. @அய்யன்பேட்டை தனசேகரன்

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  24. @ Christopher
    அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை தோழர். எடுத்துக் கொள்ள அந்தப் பிள்ளைகளிடம் ஏராளம் இருக்கிறது

    ReplyDelete
  25. த்ங்களுடைய பதிவு அருமை. பள்ளி மாணவர்கள் யதார்த்த குணம் அதுவே. இதே நான்கு மாணவர்கள் 5 -10 வருடம் பின்பு இந்த வேலை தனக்கு தேவையா, போலிஸ் கேசுன்னு அலையனும், வீட்டில் பெண்டாட்டி தேடுவா என பல சாக்கு போக்கு சொல்லி இடத்தை காலி செய்திருப்பார்கள். எங்கள் பல்கலைகழக வாசலில் ஒரு இளம் முனைவர் பட்ட மாணவி லாரியில் அடிபட்டு 1/2 மணி நேரம் கிடந்தாள். அந்த வழி கடந்து போன 10 க்கு அதிகமான பல்கலைகழத்திற்க்கு சொந்தமான வாகனங்கள் நிற்த்தவோ மருத்துவ மனைக்கு கொண்டு போகவோ துணியவில்லை. சட்ட திட்டங்கள் பற்றி பேசி கொண்டு 108 வேனுக்காக காத்திருந்தனர். படித்தவர்கள் சிறப்பாக ஆசிரியர் சமூகம் தன் வட்டத்திற்க்குள் த்ன்னை சுருக்கி பல நாட்களாகி விட்டது. உன் வேலையை மட்டும் பார் என்பது அவர்கள் உபதேசமாகவே இருக்கும். சிறப்பாக ஆசிரியைகளை கவனித்து பாருங்கள் அவர்கள் உடை அணிகலங் களுக்கு கொடுக்கும் மரியாதை மனிதர்களுக்கு தருவதில்லை.

    ReplyDelete
  26. வணக்கம் தோழர் ஜோ,
    தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

    நடந்த நல்லதுகளை பதிந்து வைப்போம்.
    நல்லது நடக்கும்

    ReplyDelete
  27. மனிதநேயம் செத்துவிட்டது, மிருகநேயம் உள்ளவர்கள் கூட மனிதத்தை மதிப்பது இல்லை என்று எனக்கு ஒர் வருத்தம் உண்டு. ஆனால் இன்னும் சில மனிதர்கள் மனிதநேயத்தோடு இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியே... அருமையான பதிவு தோழர்.

    ReplyDelete
  28. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய இடம் பாடசாலை ஆசிரியர்களும் பல்கலைகழக விரிவுரையாளர்களும் உண்டு. இதில் உங்களது பங்களிப்பை உங்களது எழுத்துக்களில் காணமுடிகிறது. வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  29. மிக அழகான கட்டுரை சமிபத்தில் ஒரு வலைப்பூவை பார்த்தபோது தன்னுடைய குடும்பத்தில் இருந்து முதன் முதலில் தான் படித்துவிட்டு சென்னை வந்து பகுத்தறிவை பழகினேன் என ஒரு நண்பர் கூறியிருந்தார், எனக்கு ஆச்சர்யமாக இருந்தது அந்த நண்பருக்கு இந்த கட்டுரை ஒரு வகையில் பதில்தான், நான் கணினி கற்றுள்ளேன் என்பதால் ஆங்கிலம் பேசுகிறேன் என்பதால் என் பாட்டனை விட உயர்ந்தவனாகிவிட முடியாது இன்று வரை என் தெருவில் வசிக்கும் ஒரு வயதான படிப்பறிவு அற்ற பெரியவர் சொல்லும் கால்,அரை ,முக்கால், கணக்குகளை கால்குலேட்டர் கொண்டு மட்டுமே என்னால் தீர்க்க முடிகிறது அந்த வகையில் என் கல்வி எனபது முழுமையற்ற ஒன்று, சம்பாதிக்க சொல்லித்தந்திருக்கிறது அவ்வளவே, சாலையில் ஓரத்தில் ஒருவன் விழுந்து கிடாக்கிராறேனில் இந்த சமுகம் எனக்கு ஏற்ப்படுத்திய பாதிப்பு அவன் குடித்துவிட்டு கிடக்கலாம் அல்லது ஏதும் பிரச்சினை என்றால் போலிஸ் கோர்ட் என நம்மால் அலைய முடியாது போன்றவை, ஆனால் நம்மவர்களுக்கு ஏதேனும் நிகழும்போது மற்றவர்கள் வேடிக்கை பார்த்து நிற்கும்போது மட்டுமே அந்த வலியை உணர முடியும் எங்கோ இலங்கையில் தமிழன் கொல்லபட்டான் என்பதை செய்தியாக படிக்கும் போது அந்த வலியும் வாதையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத அளவு இந்த சமூகம் நம்மை பழக்கி வைத்துள்ளது,இந்த கட்டுரையில் வரும் மாணவர்களை நினைக்கும்போது நிச்சயம் நம்ப தோன்றுகிறது கடவுள் உண்டு, அன்பே சிவம் என்பதையும்

    ReplyDelete
  30. @Edgar Solomonraja R.
    மிக்க நன்றி தோழர் எட்கர்

    ReplyDelete
  31. @அம்பலத்தார்
    உங்கள் தொடர்ந்த வருகையும் பகிர்வும் மகிழ்ச்சியைத் தருகிறது

    ReplyDelete
  32. கடுவன் பூனைNovember 3, 2011 at 11:29 PM

    அவர்கள் நால்வரும் அக்கினி குஞ்சுகள்,தாங்கள் அவர்களை தீபமாய் ஒளிர செய்யும் தாய்.

    அவர்களை கவனமாக பட்டை தீட்டுங்கள்,அந்த நால்வர் நான்கு கோடியை உருவாக்கலாம்

    ReplyDelete
  33. இலங்கையில் கொத்துக் கொத்தாய் கொல்கிறானா?, அறுப்பதற்காகவே வளர்க்கும் செம்மரிகளைக் கூட மூங்கில் பட்டியில் அடைத்து, பகல் வேலையில் அவற்றை சுதந்திரமாய் காலாற மேய வைக்கும் தமிழனை முள் வேளியில் அடைத்து வைத்து அக்கிரமம் செய்கிறானா? விடு அது அவன் உள் நாட்டுப் பிரச்சினை.Migavum arumaisirantha padaipu

    ReplyDelete
  34. திரு ஈரா எட்வின் ...உங்களை தொடர்ந்து வாசிக்கவேணும்

    //'/இதைத் தாண்டி உன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர். இந்த உணர்வுதான் ஞானத்தின் தொடக்கம். தர்க்க நியாயம் பேசுபவர்களிடம் காதைத் தராதே. அவர்கள் தீவிரவாதிகள். உன்னை நம்பி குடும்பம் இருப்பதை உணர். நீ அயோகியத்தனம்செய்யாமல் யோகியனாய் வாழ். இதைத்தான் ஆகப் பெரும்பான்மை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடமும், நண்பர்கள் நண்பர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள்.////
    இந்திய சமுகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாறை பார்த்தால் நாம் எப்போதும் நடப்பவற்றை ஒத்துகொள்ளுகிற மனப்பான்மை உடையவராகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறோம் அண்ணன் தம்பி தகராறு என்றாலோ தெரிந்தவர்கள் தகராறு என்றாலோ தலையிடும் நாம் …………பெரும்பாலும் பொது விஷயங்களில்இழப்புக்கு அஞ்சி நடவடிக்கை எடுக்க பயப்படுகிறோம்.இதனால் குறைவான இழப்புகளை ஏற்று வாழ்ந்து வந்து இருக்கிறோம் இது மரபு அணு வழி விளைவாகவே இருந்து வந்துள்ளது

    எப்போது எல்லாம் மனித நேய உணர்வு கூடுகிறதோ அப்போது மட்டும் விழைவேற்கிறோம்

    மேலும் அப்போதைய சூழ்நிலைகள் ,மனவோட்டம் நேர மேலாண்மை இவைகளை பொறுத்தே நமது எதிர் நடவடிக்கை அமைகிறது உணர்ச்சிகளை காட்டிலும் நிதரிசன உண்மைகளோடுபார்த்து இக்கருத்தை பதியவேண்டியது ஆயிற்று
    ////உங்களது கழுகுப் பார்வைக்குப் படாமல் ஈரத்தை எங்கள் நெஞ்சிலே பத்திரப் படுத்தி வைத்திருக்கும் நாங்களிருக்கிறோம் . நம்பிக்கையோடு இரு" என்று சமீபத்தில் நடந்த காலாண்டுத் தேர்வில் குறைந்த பட்சம் இரண்டு பாடங்களிலேனும் தேர்ச்சி பெறாத, ஆசிரியர்கள் அதிகம் நம்பிக்கை வைக்காத நான்கு மாணவர்கள் தங்களது மகத்தான செயலால் அறைந்து சொன்னார்கள்......எனில் அடிபட்ட பிள்ளையின் உயிரைக் காக்கப் போராடிய என் நான்கு பிள்ளைகளும் தெய்வங்கள்தான்.
    .//// மெத்த சரியே


    ///நான்....
    தெய்வங்களுக்கு சொல்லிக் கொடுத்தவன்.//// என்பதை தெய்வங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பை பெற்றவன் .. என்று இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்



    உங்கள் எழுத்து மிகுந்த வலிமையுடன் வாசகர்களை உங்கள் கருத்துக்களுடன் இணைய வைக்கிறது o வாழ்க வளமுடன் நன்றி

    ReplyDelete
  35. @maniajith

    வணக்கம் மணி.
    மேன்மைக்கும் படிப்பிற்கும் உறவு அவசியம் இருந்தே ஆக வேண்டும் என்பதில்லை.

    படிக்காத மேன்மைகள்தான் அதிகம்.

    ஆமாம், எங்கே ரொம்ப நாட்களாக ஆளையே காணோம்?

    ReplyDelete
  36. @கடுவன் பூனை

    தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி தோழர்.

    தொடர்ந்து சந்திப்போம்

    ReplyDelete
  37. கொஞ்சம் வேலைகள் சார் வீட்டில் எல்லோரும் நலமா

    ReplyDelete
  38. @meenakshisundaram somaya

    அன்பின் அய்யா வணக்கம்.தங்களது பார்வையும் பதிவும் என்னை செதுக்கிக் கொள்ள உதவுவதாய் உள்ளது. தொடர்ந்து சந்திப்போம். மிக்க நன்றிங்க அய்யா.

    ReplyDelete
  39. அப்படியே ஒரு கணம் உறைந்து போனேன்.தெய்வங்களையும் , தெய்வங்களுக்கு சொல்லிக் கொடுத்தவனையும் வணங்குகிறேன்.

    ReplyDelete
  40. அன்புள்ள எட்வின்...

    நீங்கள மேன்மையான ஆசிரியப் பணியின் உயர்வை வெளிக்காட்டிவிட்டீர்கள். பெருமையாக இருக்கிறது. உண்மையில் ஒரு ஆசிரியன் நிலையில் இருந்து பெருமிதம் கொள்கிறேன். செய்யும் தொழிலே தெய்வம் என்பதும் இப்படித்தான். மாணவர்களை இன்றைய சமுகம் பார்க்கிற பார்வையிலிருந்து விலகி அவர்களையும் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள். நல்ல மனிதாபிமானமிக்க பதிவு.

    ReplyDelete
  41. @Pazhani Samy

    மிக்க நன்றி தோழர் பழநிசாமி

    ReplyDelete
  42. @சிவகுமாரன்
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  43. @ஹ ர ணி
    மிக்க நன்றி ஹரணி

    ReplyDelete
  44. மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு! நம் குழந்தைகள் அனைவரும் மனிதாபிமானம் உள்ளவர்களே! அவர்களை வடிவமைக்கும் பொறுப்பு பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ளது, மதிப்பெண், வேலை, பணம் என்று குறுகிய வட்டத்துக்குள் அவர்கள் சிக்கிவிடாதபடி அதையும் தாண்டிய மனிதநேயம், சகோதரஅன்பு,சமத்துவம்.... என்று அவர்களை ஊட்டி வளர்க்கும் உங்களைப்போன்ற ஆசிரியர்கள் வணக்கத்துக்குரியவர்கள், எல்லா ஆசிரியர்களுமே இப்படி இருந்துவிட்டால் நம் சமுதாயம்,,,, நினைக்கவே இனிமையாக உள்ளது.

    ReplyDelete
  45. மிக்க நன்றி உமா

    ReplyDelete
  46. மனதை நெருடியது...

    ReplyDelete
  47. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  48. //எந்த விதமான மனித ஈரத்தையும் அவர்கள் உலர வைப்பார்கள். அதையும் மீறிப் பொங்கினால் அவர்களுக்காய் பிரார்த்தனை செய்.

    இதைத் தாண்டி உன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர். இந்த உணர்வுதான் ஞானத்தின் தொடக்கம். //

    மிகவும் ரசித்த வரிகள்..

    மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  49. இந்த பதிவை படித்ததை விட நீங்கள் சொல்லி கேட்டது அருமை ....மனதோடு கலந்து விட்டது .....

    ReplyDelete
  50. வணக்கம் தோழர். ரொம்ப அற்புதமான பதிவு. மனதைத் துவைத்து போடுகிறது.இந்த மனித நேயம்தான் தேவை தோழர் ஒரு மனிதனுக்கு, அவன் நூற்றுக்கு நூறு வாங்கினால் என்ன, வாங்காவிட்டால் என்ன? அதுவா வந்து ஓர் உயிரைக் காப்பாற்றப்போகிறது. அரசு பள்ளி /தமிழ் வழி பள்ளி மாணவர்கள்தான் இப்படிஉதவி செய்வார்கள். மெட்ரிகுலேஷம் பள்ளிமாணவ்ன் இதனை வேடிக்கை கூட பார்க்க மாட்டான். ஓடியே போவான்.அப்படித்தான் நடுத்தர வர்க்கம் சுயநலமாய் குழந்தைகளை வளர்க்கின்றது. //"படிச்சவன் நடந்துக்கற மாதிரியா நடந்துக்கற", "படிச்சவன் பேசற மாதிரியா பேசற" என்கிற மாதிரி படித்தவர்களைப் பார்த்து அவர்களது பெற்றோர்களோ, நண்பர்களோ, ஆசிரியர்களோ அல்லது வேறு மற்றவர்களோ கோவம் கலந்த தொனி,படித்தவன் எப்படி பேச வேண்டும்?.
    படித்தவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
    //அப்படி என்றால், படித்தவன் என்றால், கை கட்டி, வாய் பொத்தி, அடிமையாய் எல்லாவற்றுக்கும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக் கொண்டிருப்பான். கேள்வி கேட்டுக்கொண்டிருந்த குழந்தையை நம் கல்வி முறை, அட்க்க ஒடுக்கமாய் பதில் கூறும் பாவையாய் மாற்றி இருக்கிறது. இதில் ஆசிரியரை அவன் கேள்வி கேட்டால், அவனதான் விளங்காதவ்ன். இந்த க்ல்வி முறையை மாற்றியே ஆகவேண்டும், ஆளும் வர்க்கத்துக்கு வசதியான கல்வி முறையை, வாரன்ஹேஸ்டிங்கும், மெக்காலேயும், பெண்டிங் பிரபுவும் புகுத்தியதை இன்னும் இவ்ர்களுக்கும் இதுவே வசதியாஉ உள்ளதால், மாற்ற மறுக்கின்றனர். மனித நேய்ம் உள்ள படிக்கப் பிடிக்காத, மதிப்பெண்ணில் நாட்டமில்லாத தெய்வங்கள் போதும் இங்கே. தெய்வங்க்ளின் தெய்வமே,, வாழ்த்துக்கள், தெய்வத்துக்கு போதிக்கும் வாய்ப்பு கிட்டியமைக்கு. என்றென்றும் வாழ்க.பதிவுகள் இடுக.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். மெக்காலே குறித்து நாம் முழுதாய் கற்க கொஞ்சம் இருக்கிறது தோழர்

      Delete
  51. ஈரமுள்ள மனிதர்களை ......தெய்வங்களை எப்போதும் இயற்கை உயிர்ப்பித்துக்கொண்டேயிருக்கும்..... யாதார்த்தம் பேசி மனித, சமூக மதிப்பீடுகளையும்,விழுமியங்களையும் எவ்வளவு சீராழித்தாலும் இடைவிடாது இந்த உயிர்ப்பித்தல் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கும்......அதை உலகிற்கு உரத்து சொல்ல , கற்றுகொடுக்க உங்களை போன்றவர்கள் காத்திருகிறார்கள்.....நன்றி அய்யா



    ReplyDelete
  52. ஈரமுள்ள மனிதர்களை ......தெய்வங்களை எப்போதும் இயற்கை உயிர்ப்பித்துக்கொண்டேயிருக்கும்..... யாதார்த்தம் பேசி மனித, சமூக மதிப்பீடுகளையும்,விழுமியங்களையும் எவ்வளவு சீராழித்தாலும் இடைவிடாது இந்த உயிர்ப்பித்தல் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கும்......அதை உலகிற்கு உரத்து சொல்ல , கற்றுகொடுக்க உங்களை போன்றவர்கள் காத்திருகிறார்கள்.....நன்றி அய்யா



    ReplyDelete
  53. தெய்வங்களுக்கு சொல்லிக் கொடுத்தவன்./// உண்மையான வரிகள் ..

    ReplyDelete
  54. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.html?showComment=1390432773517#c4634842557672517303

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...