Monday, November 26, 2018

இதுமாதிரியான அதிகாரம் என்பது 58 வயதுவரைதான்

திரு.தர்மராஜ் ஒரு காவலர்.21.11.2018 அன்று அவரது தாயாருக்கு நினைவுநாள். அவருக்கு திதி கொடுக்கவேண்டும் என்பதற்காக தனது அதிகாரியான திரு.ரவிக்குமாரிடம் விடுப்பு கேட்கிறார்.
விடுப்பு மறுக்கப்படுகிறது.
பணிக்கு வருகிறார். மறுவிக்கொண்டே இருந்தவர் ஒரு புள்ளியில் தனது வாக்கி டாக்கா மூலம் இது குறித்து கண்காணிப்பு அறைக்கு புகார் தருகிறார். அதன்பிறகு கொஞ்சம் ஆசுவாசப் படுகிறார்.
இதன்பிறகு ரவிக்குமார் மறுவத் தொடங்குகிறார்
அன்றையப் பொழுதின் ஒருபுள்ளியில் ரவிக்குமார் சாலையை நிர்வகித்துக் கொண்டிருந்தபோது அந்தவழியாக தனது இரண்டு சக்கர வாகனத்தில் தர்மராஜ் வருகிறார்
ரவி ஓடிச்சென்று அவரை எட்டி உதைக்கிறார்
தர்மராஜ் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்
அவரது வாயில் மதுவை ஊற்றி அவர் போதையில் இருந்ததாக மருத்துவ சான்று பெற்று அவரை பணியிட்ட நீக்கம் செய்ய வைத்து இருக்கிறார்
சாலை ஓரத்தில் இருந்த ஒரு கடையின் சிசிவி கேமராவில் ரவி எட்டிஉதைத்த காட்சி பதிவாகி இருக்கவே உண்மை வெளியே வருகிறது
தர்மராஜ் பணிக்குத் திரும்பி இருக்கிறார்
ரவி பணியிட மாற்றம் பெருகிறார்
ரெண்டு விஷயங்கள்பொது
1) பணியிட மாற்றம் என்பது போதவே போதாது. அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து அவர்மீது கொலைவழக்கு பதிய வேண்டும்
2) இதுமாதிரியான அதிகாரம் என்பது 58 வயதுவரைதான் என்பதை ரவி மாதிரி அதிகாரிகள் உணர வேண்டும்
25.11.18
பிற்பகல் 3.05

Wednesday, November 14, 2018

ஆதலினால்கவாத்துசெய்வோம்

"கஜா" புயல் அதிதீவிர புயலாக உருவெடுக்கும். அநேகமாக நாளை மதியம் வாக்கில் பாம்பனுக்கும் நாகைக்கும் இடையே அது 120 வேகத்தில் கரையைக் கடக்கும். அதன் பாதிப்பு 13 மாவட்டங்களில் இருக்கும் என்கிறார்கள்
விஞ்ஞானம் வளர்ந்திருப்பதன் விளைவு இவை
அரசும் ஆலோசனைகளை நடத்துகிறது
கடலூர் மக்கள் எதன்பொருட்டும் தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு அமைச்சர் கூறியிருப்பதை நான் கொண்டாடவே செய்கிறேன்
மக்களும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளார்கள்
மூன்று விஷயங்கள்
1) இதுமாதிரி புயல்களை எதிர்கொள்ளும் அளவிலான மீனவக் குடியிருப்புகள்
2) இதுமாதிரி கடலுக்குள். போகமுடியாத காலங்களில் மீனவர்களுக்கான மாற்று ஏற்பாடு
3) "தானே" கடலூரைத் தாக்கியபோது ஏராளமான மரங்கள் விழுந்தன. அது உண்டாக்கிய சேதம் அளவற்றது.
மரங்களை உரிய முறையில் அவ்வப்போது கவாத்து செய்திருந்தால் அவ்வளவு சேதம் இருந்திருக்காது என்று சொல்லப்பட்டது
"கஜா" வந்து போகட்டும்.
மரங்களை கவாத்து செய்வதை அரசு இயக்கப்படுத்த வேண்டும்
கவாத்து செய்வதால்
1) நீர் செலவு குறையும்
2) மரங்கள் பலப்படும்
3) சேதம் குறையும்

Tuesday, November 13, 2018

பிரிதின்நோய் தம்நோய்போல்....

அன்வர் பாட்ஷா என்ற இளைஞன் நேற்று பள்ளப்பட்டியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்திருக்கிறான். அவனுக்கு வயது இருபது. பேருந்து வாடிப்பட்டி அருகே வந்தபொழுது அவனுக்கு வலிப்பு வந்திருக்கிறது. வலிப்பு அவனுக்கு அடிக்கடி வரக்கூடியதுதானாம்.
வலிப்பு வந்ததும் பேருந்தை நிறுத்தி அந்த இளைஞனை பேருந்தை நிறுத்தி இறக்கிவிட்டு சென்று விட்டார்களாம்.
வலிப்பால் துடித்துக் கொண்டிருந்தவனை இறக்கிவிடுவது என்பது எப்படி?
பேருந்தை நிறுத்தி அந்த இளைஞனை கீழே தள்ளிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
கொடுமை என்னவென்றால் அந்தப் பேருந்தில் ஏறத்தாழ முப்பதுபேர் பயணம் செய்துகொண்டு இருந்திருக்கிறார்கள்.
அடிக்கடி வலிப்பு வருகிற வழக்கம் இருக்கிறது என்றால் இத்தகைய பயணங்களின் பொழுது அதை அந்த இளைஞன் எதிர்பார்த்திருக்கவே செய்வான். எனில், அவனது சட்டைப் பையிலோ அல்லது கைப்பையிலோ அதற்கான மாத்திரைகள் இருந்திருக்கக் கூடும்.
அதைத் தேடிப் பார்த்து அதற்கான மாத்திரைகள் இருந்திருப்பின் யாரேனும் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து அந்த மாத்திரையோடு ஒரே ஒரு முடக்கு தண்ணீரை மட்டும் செலவு செய்திருந்தால் போதும் அந்தப் பிள்ளை பிழைத்திருப்பான்.
அப்படி மாத்திரைகள் இல்லாத பட்சத்தில் போகிற வழியில் உள்ள ஏதேனும் ஒரு மருத்துவ மனையில் நிறுத்தி சேர்ப்பித்துவிட்டுப் போயிருந்தாலும் அந்தப் பிள்ளை பிழைத்திருப்பான்.
யாரேனும் ஒரு பயணி அவனோடு கொஞ்ச நேரம் இருந்திருந்தால் போதும் அவனது முகவரி கேட்டு அவனை அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருக்கலாம்.
“பெற்றால்தான் பிள்ளையா?” என்றெல்லாம் கேட்கிறோமே அந்தப் பேருந்தில் அந்த வயது குழந்தையின் பெற்றோர்கள் யாருமே இல்லாது போயிருந்தார்களா?
வழக்கமாக குப்பைகளைக் கூட்டி சுத்தம் செய்யும் வழக்கம் இல்லாத அந்த அரசுப் பேருந்தில் அன்று மனிதத்தை மட்டும் சுத்தமாக வழித்து துடைத்து விட்டார்களா?
கீழே கிடந்த அந்தக் குழந்தையை அவனைக் கடந்துபோன ஒருவரும் சரியாக கண்டு கொள்ளாது போகவே அவன் செத்துப் போயிருக்கிறான்.
மீண்டும் சொல்கிறேன் அவனுக்கு வயது இருபது.
அவனை நிராகரித்து கடந்துபோன ஒவ்வொருவரும் கொலைகாரர்களே.
அப்படி அவசரமாய் அவனைக் கடந்து போய் என்னத்தை சாதித்து விட்டார்கள்?
இது இப்படி இருக்க எல்லா ஓட்டுநர்களுமே இப்படித்தான். எல்லா நடத்துநர்களுமே இப்படித்தான். எல்லாப் பயணிகளுமே இப்படித்தான் என்றெல்லாம் கருதிவிடக் கூடாது.
ஆறேழு ஆண்டுகள் இருக்கும். அப்போதெல்லாம் கள்ளக்குறிச்சியில் இருந்து திருச்சி செல்லும் அரசுப் பேருந்து தடம் எண் 329 இல்தான் பள்ளிக்கு போவது வழக்கம்.
அந்த வகையில் அந்தப் பேருந்தின் ஓட்டுநர்கள் இயக்குநர்கள் அனைவரையும் தெரியும். மாலையும் பலநேரம் அந்தப் பேருந்துதான். அதுபோல ஒருநாள் மாளை பெரம்பலூரில் இறங்கி ஓட்டுநர் சுப்ரமணியன் மற்றும் நடத்துநர் முருகன் ஆகியோரோடு தேநீர்ப் பருகிக் கொண்டிருக்கிறேன்.
அப்போது அங்கு வந்த இளம் பெண் ஒருவர் சுப்ரமணியன் காலைத் தொட்டு வணங்கவே அவர் ஒதுங்கி “நல்லா இரு சாமி. பாப்பா எப்படி இருக்கு?” என்றார். “நல்லா இருக்காங்கண்ணா. மாமியார் வச்சிருக்காங்க அவள”
“ஊருக்கா சாமி. உக்காருப்பா வரேன்” என்கிறார்.
“சொந்தக்காரப் பொண்ணா மணி?”
“இல்லீங்க சார்” என்றவர் கூறியது இதுதான்,
ஒருநாள் மதியம் ஷிஃப்டில் இந்தப் பெண் அவரது குழந்தையோடு திருச்சிக்குப் போயிருக்கிறார். குழந்தை வீர் வீரென்று அழுதிருக்கிறள். அது வழமையான குழந்தையின் அழுகையாகப் படவில்லை.
அழுது அழுது முகமெல்லாம் வீங்கி சிவந்து எங்கே செத்துவிடுமோ என்ற பயம் அனைவருக்கும் வந்துவிட்டது. சமயபுரத்திற்கு அருகில் சாலையின் வலதுபுறம் SRM மருத்துவக் கல்லூரி இருக்கிறது. சுப்ரமணி பேருந்தை செக்யூரிட்டி தடுக்க தடுக்க உள்ளே விட்டு ஸ்ட்ரெச்சர் ஏற்பாடு செய்து வந்ததும் தனது எண்ணைக் கொடுத்துவிட்டு அழைக்குமாறு சொல்லிவிட்டு பேருந்தைத் திருப்பி இருக்கிறார்.
இரண்டு இளைஞர்கள் உதவிக்காக இறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
ஒன்றும் இல்லை குழந்தையின் காதில் எறும்பு புகுந்திருக்கிறது. தகவல் சுப்ரமணிக்குப் போயிருக்கிறது. அந்தப் பெண்தான் அவர்.
என்ன சொல்வது,
அறிவினான் ஆகுவது உண்டோ
அன்வர் பாட்ஷா என்ற இளைஞன் நேற்று பள்ளப்பட்டியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்திருக்கிறான். அவனுக்கு வயது இருபது. பேருந்து வாடிப்பட்டி அருகே வந்தபொழுது அவனுக்கு வலிப்பு வந்திருக்கிறது. வலிப்பு அவனுக்கு அடிக்கடி வரக்கூடியதுதானாம்.
வலிப்பு வந்ததும் பேருந்தை நிறுத்தி அந்த இளைஞனை பேருந்தை நிறுத்தி இறக்கிவிட்டு சென்று விட்டார்களாம்.
வலிப்பால் துடித்துக் கொண்டிருந்தவனை இறக்கிவிடுவது என்பது எப்படி?
பேருந்தை நிறுத்தி அந்த இளைஞனை கீழே தள்ளிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
கொடுமை என்னவென்றால் அந்தப் பேருந்தில் ஏறத்தாழ முப்பதுபேர் பயணம் செய்துகொண்டு இருந்திருக்கிறார்கள்.
அடிக்கடி வலிப்பு வருகிற வழக்கம் இருக்கிறது என்றால் இத்தகைய பயணங்களின் பொழுது அதை அந்த இளைஞன் எதிர்பார்த்திருக்கவே செய்வான். எனில், அவனது சட்டைப் பையிலோ அல்லது கைப்பையிலோ அதற்கான மாத்திரைகள் இருந்திருக்கக் கூடும்.
அதைத் தேடிப் பார்த்து அதற்கான மாத்திரைகள் இருந்திருப்பின் யாரேனும் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து அந்த மாத்திரையோடு ஒரே ஒரு முடக்கு தண்ணீரை மட்டும் செலவு செய்திருந்தால் போதும் அந்தப் பிள்ளை பிழைத்திருப்பான்.
அப்படி மாத்திரைகள் இல்லாத பட்சத்தில் போகிற வழியில் உள்ள ஏதேனும் ஒரு மருத்துவ மனையில் நிறுத்தி சேர்ப்பித்துவிட்டுப் போயிருந்தாலும் அந்தப் பிள்ளை பிழைத்திருப்பான்.
யாரேனும் ஒரு பயணி அவனோடு கொஞ்ச நேரம் இருந்திருந்தால் போதும் அவனது முகவரி கேட்டு அவனை அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருக்கலாம்.
“பெற்றால்தான் பிள்ளையா?” என்றெல்லாம் கேட்கிறோமே அந்தப் பேருந்தில் அந்த வயது குழந்தையின் பெற்றோர்கள் யாருமே இல்லாது போயிருந்தார்களா?
வழக்கமாக குப்பைகளைக் கூட்டி சுத்தம் செய்யும் வழக்கம் இல்லாத அந்த அரசுப் பேருந்தில் அன்று மனிதத்தை மட்டும் சுத்தமாக வழித்து துடைத்து விட்டார்களா?
கீழே கிடந்த அந்தக் குழந்தையை அவனைக் கடந்துபோன ஒருவரும் சரியாக கண்டு கொள்ளாது போகவே அவன் செத்துப் போயிருக்கிறான்.
மீண்டும் சொல்கிறேன் அவனுக்கு வயது இருபது.
அவனை நிராகரித்து கடந்துபோன ஒவ்வொருவரும் கொலைகாரர்களே.
அப்படி அவசரமாய் அவனைக் கடந்து போய் என்னத்தை சாதித்து விட்டார்கள்?
இது இப்படி இருக்க எல்லா ஓட்டுநர்களுமே இப்படித்தான். எல்லா நடத்துநர்களுமே இப்படித்தான். எல்லாப் பயணிகளுமே இப்படித்தான் என்றெல்லாம் கருதிவிடக் கூடாது.
ஆறேழு ஆண்டுகள் இருக்கும். அப்போதெல்லாம் கள்ளக்குறிச்சியில் இருந்து திருச்சி செல்லும் அரசுப் பேருந்து தடம் எண் 329 இல்தான் பள்ளிக்கு போவது வழக்கம்.
அந்த வகையில் அந்தப் பேருந்தின் ஓட்டுநர்கள் இயக்குநர்கள் அனைவரையும் தெரியும். மாலையும் பலநேரம் அந்தப் பேருந்துதான். அதுபோல ஒருநாள் மாளை பெரம்பலூரில் இறங்கி ஓட்டுநர் சுப்ரமணியன் மற்றும் நடத்துநர் முருகன் ஆகியோரோடு தேநீர்ப் பருகிக் கொண்டிருக்கிறேன்.
அப்போது அங்கு வந்த இளம் பெண் ஒருவர் சுப்ரமணியன் காலைத் தொட்டு வணங்கவே அவர் ஒதுங்கி “நல்லா இரு சாமி. பாப்பா எப்படி இருக்கு?” என்றார். “நல்லா இருக்காங்கண்ணா. மாமியார் வச்சிருக்காங்க அவள”
“ஊருக்கா சாமி. உக்காருப்பா வரேன்” என்கிறார்.
“சொந்தக்காரப் பொண்ணா மணி?”
“இல்லீங்க சார்” என்றவர் கூறியது இதுதான்,
ஒருநாள் மதியம் ஷிஃப்டில் இந்தப் பெண் அவரது குழந்தையோடு திருச்சிக்குப் போயிருக்கிறார். குழந்தை வீர் வீரென்று அழுதிருக்கிறள். அது வழமையான குழந்தையின் அழுகையாகப் படவில்லை.
அழுது அழுது முகமெல்லாம் வீங்கி சிவந்து எங்கே செத்துவிடுமோ என்ற பயம் அனைவருக்கும் வந்துவிட்டது. சமயபுரத்திற்கு அருகில் சாலையின் வலதுபுறம் SRM மருத்துவக் கல்லூரி இருக்கிறது. சுப்ரமணி பேருந்தை செக்யூரிட்டி தடுக்க தடுக்க உள்ளே விட்டு ஸ்ட்ரெச்சர் ஏற்பாடு செய்து வந்ததும் தனது எண்ணைக் கொடுத்துவிட்டு அழைக்குமாறு சொல்லிவிட்டு பேருந்தைத் திருப்பி இருக்கிறார்.
இரண்டு இளைஞர்கள் உதவிக்காக இறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
ஒன்றும் இல்லை குழந்தையின் காதில் எறும்பு புகுந்திருக்கிறது. தகவல் சுப்ரமணிக்குப் போயிருக்கிறது. அந்தப் பெண்தான் அவர்.
என்ன சொல்வது,
அறிவினான் ஆகுவது உண்டோ
பிரிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை
என்கிறான் வள்ளுவன்.
அடுத்தவன் நோயை, அடுத்தவன் வலியை தன் நோய்போல் தன் வலிபோல் பாவிப்பதை இரக்கம் என்றோ கருணை என்றோகூட அவன் சொல்லவில்லை. அதுதான் அறிவு என்கிறான்.
உலகத்தில் எவன் சொல்லி இருக்கிறான் இப்படி?
இரக்கம் கருணை மனிதம் அறிவு ஏதுமற்றுப் போனோமா நாம்?
#சாமங்கவிய 37 நிமிடங்கள்
12.11.2018 போற்றாக் கடை
என்கிறான் வள்ளுவன்.
அடுத்தவன் நோயை, அடுத்தவன் வலியை தன் நோய்போல் தன் வலிபோல் பாவிப்பதை இரக்கம் என்றோ கருணை என்றோகூட அவன் சொல்லவில்லை. அதுதான் அறிவு என்கிறான்.
உலகத்தில் எவன் சொல்லி இருக்கிறான் இப்படி?
இரக்கம் கருணை மனிதம் அறிவு ஏதுமற்றுப் போனோமா நாம்?
#சாமங்கவிய 37 நிமிடங்கள்
12.11.2018

கவிதை 089

மூன்றாவது வீட்டை ஒட்டி
வந்து கொண்டிருக்கிறது காற்று
எனக்கே எனக்கான பாடலை சுமந்தபடி
தெருக்கதவைத் திறக்கிறேன்
திறந்து கிடக்கிற தெருப்பக்கத்து வீட்டு வாசல்களில்
பாடலைப் பருகியபடியே
யாரேனும் ஒருவரேனும் நிற்கின்றனர்
என்னைப்போலவே
மெல்ல மெல்ல லேஷந்த் வீட்டை நெருங்குகிறது
காற்று
திறந்த கதவின் வழி வருகிறான் லேஷந்த்
காதே உடம்பாக
வீட்டைக் கடந்து கொல்லைத் தெருவிற்கு நகர்கிறது
ஓவ்வொன்றாய்த் திறக்கின்றன வீடுகள்
கொல்லைத் தெருவிலும்
எல்லா வாசல்களிலும்
காதே உடம்பாய் நிற்கும் அனைவரும்
அவர்களுக்கே அவர்களுக்கான பாடாலாய்த்தான்
நினைத்துக் கொண்டிருக்கக் கூடும்
என்னைப் போலவே

Monday, November 12, 2018

குறள் ஒருபோதும் மனுதர்மத்தின் சாரமாக இருக்க இயலாது.

"குடி செய்வார்க்கில்லை பருவம்
மடிசெய்து
மானம் கருதக் கெடும்."
தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்தமான குறள் இது என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதியிருக்கிறார்.
1956 ஆம் ஆண்டில் ஒருநாள் தந்தை பெரியாரும் அடிகளாரும் ஒன்றாக மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு மகிழுந்தில் பயணம் செய்கிறார்கள். கார் கிளம்பி சற்று நேரத்திற்கெல்லாம் தந்தை பெரியார் தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து திருக்குறள் புத்தகத்தை எடுக்கிறார். மேலே உள்ள குறளை எடுத்தவர் அந்தப் பக்கத்தை அடிகளாரிடம் நீட்டுகிறார். அந்தக் குறிப்பிட்டக் குறளுக்கு என்ன பொருள் என்று அடிகளாரிடம் கேட்டிருக்கிறார் பெரியார்.
தன் இனம், இனம் என்பதை தனது குழு என்று சுறுக்கிக் கொள்வதுகூட பிழையாகாது, சிறப்புற, பயனுற அல்லது இதுபோல ஏதோ ஒன்று உற ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதுபவன் அந்தக் காரியத்தை எப்போது தொடங்குவது என்று யோசித்துக் கொண்டு இருக்க மாட்டான். அவனுக்கு நல்ல காலம், கெட்ட காலம், உகந்த காலம், உகந்த காலமின்மை என்பது எல்லாம் இல்லை.
தன் குடி உயர உழைக்க நினைப்பவன் எல்லா நேரமும் அதற்காக சோம்பாது உழைத்துக் கொண்டே இருப்பான். மட்டுமல்ல, தன் இனம் அல்லது குடி அல்லது குழு சிறப்படைவதற்காக உழைப்பவன் தனது மானம் குறித்தும் கவலைப்பட மாட்டான். தன் மானம் குறித்து கவலைப்படுவதுகூட தன் இன உயர்விற்கான தடையாக அமையக்கூடும்.
எனவே காலம் பார்க்காது, சோம்பாது, தனது மானமே கெட்டாலும் பரவாயில்லை என்று உழைப்பவனால் மட்டுமே தனது இனத்தை மேலெழுப்ப இயலும்.
இவ்வாறாக அந்தக் குறளுக்கான பொருளை பெரியாருக்கு எடுத்துரைத்திருக்கிறார் அடிகளார்.
ஒரு தேர்ந்த தமிழ் அறிஞர்போல, ஒரு தேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் போல பெரியார் அவர்கள் தமிழ் இலக்கியம் குறித்து தன்னோடு உரையாடிக் கொண்டு வந்ததாக அடிகளார் எழுதுகிறார்.
ஒரு தேர்ந்த தமிழறிஞர் போல, ஒரு தேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் போல இலக்கியங்களைக் குறித்து அடிகளாரிடம் பேசிக்கொண்டு வந்த பெரியாருக்கா அந்தக் குறளுக்கு பொருள் தெரியாமல் இருந்திருக்குமா? இந்த அய்யம் நியாயமானதுதான். இந்த எளிய குறளுக்கான பொருள் பெரியாருக்கு தெரிந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
பிறகு ஏன் இதற்கான பொருளை அடிகளாரிடம் கேட்கிறார் பெரியார்?
பொதுவாகவே பரிமேலழகர் போன்ற குறளுக்கான உரையாசிரியர்கள் பல இடங்களில் மனம் போன போக்கிலும் தங்களது கோட்பாடுகளின் வெளிச்சத்தின் வழியாகவும் குறளுக்கு பொருள் சொல்லிப் போயிருப்பதாக உணர்கிறார் பெரியார்.
திரு நாகசாமி போன்றவர்கள் “மனுவின் சாரமே திருக்குறள்” என்று இன்றைக்கு எழுதத் துணிகிறார்கள் என்றால் பரிமேலழகர் போன்றவர்கள் அன்றைக்கே அதற்கான முயற்சியைத் தொடங்கி இருந்தார்கள் என்பதையும் பெரியார் உணர்ந்தே இருந்தார்.
எனவேதான் தனக்கே தனக்கென்று எழுதப் பட்டிருப்பதாய் தான் உணர்ந்து தெளிந்த அந்தக் குறள் குறித்து அய்யமறத் தெளிவு பெறுவதற்காகவே அடிகளாரிடம் அவர் கேட்டிருக்கக் கூடும்.
இந்தக் குறளை பெரியாருக்கென்றே வள்ளுவர் எழுதினாரா அல்லது இந்தக் குறளின் படியே பெரியார் வாழ்ந்தாரா என்பதை பிரித்து உணர இயலாதபடி பெரியாரின் வாழ்க்கையும் இந்தக் குறளும் ஒன்றோடு ஒன்று இரண்டறக் கலந்து கிடக்கிறது.
தனது சமூகம் மேம்பாடு அடைய விரும்புபவன் எப்படி இருப்பான் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று இந்தக் குறள் கூறுகிறது. எந்தக் குலத்தில் பிறந்தவன் என்ற குறிப்பெல்லாம் இந்தக் குறளில் இல்லை.
மட்டுமல்ல,
“பிறப்பொக்கும்” என்று சனாதனத்தின் செவிட்டில் அடித்து சொல்கிறது குறள்.
பிறப்பொக்கும் என்பது மனுதர்மத்திற்கு எதிரானது. “பிறப்பொக்காது” என்பதை நிறுவனப்படுத்தி இருக்கிற நூலே மனுதர்மம்.
“பிறப்பொக்கும்” என்பது மனுதர்மத்திற்கான வள்ளுவரின் எதிர்வினையே ஆகும்.
மனுதர்மத்தின் சாரத்தை எம் தந்தை ஒருபோதும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.
எம் தந்தை ஏற்றுக் கொண்ட ஒன்று மனுதர்மத்தின் சாரமாக இருக்க வாய்ப்பே இல்லை.
அதற்காகவெல்லாம் மட்டுமே நாங்கள் இதை சொல்ல வில்லை
“உழுதுண்டு வாழ்வாரை தொழுதுண்டு” வாழச் சொல்லும் குறள்
ஒருபோதும் மனுதர்மத்தின் சாரமாக இருக்க இயலாது.
#சாமங்கவிய இரண்டு மணி இருபது நிமிடம்
11.11.2018

செம சுள்ளாப்பு

மூன்று நாட்களாக லேஷந்த் சார் மருத்துவமனையில் இருந்தார். டெங்கு என்று பயந்து போனோம்.
அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்த அன்று பார்த்துவிட்டு வந்து விழுந்தவன்தான் எனக்கு டெங்கோ என்றோ அச்சம் வந்துவிட்டது
இருவருக்கும் டெங்கு இல்லை
இந்த நிலையில் சார் நேற்று டிஸ்சார்ஜ் ஆனார்.
அவரது வீட்டிற்குப் போய் சற்று நேரத்திற்கெல்லாம் அழுதுகொண்டே இங்கு வந்துவிட்டார்.
என்ன வேணும் தம்பிக்கு?
சொல்லாமல் அழுதார்.
“அவனுக்கு ரெய்ன் கோட் வேணுமாம்” கீர்த்தனா சொன்னாள்.
மதியம் வண்டியை எடுத்துக் கொண்டு ஒரு வழியாய் ஆதித்தியா மால் போனேன்
ஒரு வழியாய் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது, வண்டியின் சைட் ஸ்டாண்ட் போடக்கூட முடியவில்லை, அப்படியொரு பலஹீனம்.
ரெய்ன்கோட் இல்லை என்றதும் திரும்பினால் அண்ணனும் தங்கையுமாய் இரண்டு குழந்தைகள் உள்ளே நுழைந்தார்கள்
நம்மாலதான் சும்மா இருக்க முடியாதே,
யாருடா இது?
பாப்பா?
யாரோட பாப்பா?
என்னோட பாப்பா.
ஒங்க பாப்பாவ நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடவா?
சரினு சொன்னவன் அவகிட்ட திரும்பி,
“தாத்தாவோட போடி”
பய நம்மவிட சுள்ளாப்புதானு நினைக்கறதுக்குள்ள
அவனைக் கட்டிப் புடிச்சிட்டு அழ ஆரம்பிச்சுட்டா.
பதறிப்போய் “ ஏன் சாமி, ஏன் சாமி” நு கேட்கவே
தாத்தா கருப்பா இருக்காங்க பயமா இருக்குங்கறா
சரி சரி கூட்டிட்டு போகல நு சொல்லிட்டு கிளம்பறேன்
”தாத்தா”
திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணடிச்சுட்டே டாட்டா காட்டுறா
செம சுள்ளாப்பு

Thursday, November 8, 2018

“அப்புறம் இவன மட்டும் ஏன் தடுக்கிறீங்க"

அன்பின் மாரிசெல்வராஜ்,
வணக்கம்.
மிச்சம் உள்ள ஒன்பது படங்கள் எவை எவை என்று கேட்டுவிடக்கூடாது என்ற நிபந்தனையோடு ஒன்றை சொல்கிறேன்,
நான் பார்த்த நல்ல பத்து படங்களுள் “பரியேறும் பெருமாள் BA.BL, மேல ஒரு கோடு” ம் ஒன்று.
வழக்கமாக திரைப்படங்கள் குறித்த அபிப்பிராயங்களை எழுதக் கூடியவன் அல்ல நான். பரியேறும் பெருமாளைப் பார்த்த பிறகு அதுகுறித்து எழுதாமல் கடக்க முடியவில்லை. என்னளவில் இதுவே இந்தப் படத்தின் வெற்றிக்கான அடையாளங்களுள் ஒன்றென்று கருதுகிறேன்.
1980 இடைஜூனில் தொடங்கிய எனது கல்லூரி வாழ்க்கையின் முதல் நாளில் எங்கள் துறைத் தலைவரான ஜூடித் லூயிஸ் அம்மாவை ”டீச்சர்” என்று அழைத்தவன் நான். இது போதும், எனக்கும் இந்தப் படத்திற்கும் இடையிலான கெமிஸ்ட்ரி எத்தகையதானதாக இருக்கும் என்பதை உங்களால் எளிதாக ஊகிக்க முடியும்.
முதன்முறையாக ஒரு பையன் அதுவும் ஆங்கில இலக்கிய வகுப்பு பிள்ளை தன்னை “டீச்சர்” என்று அழைத்ததைக் கேட்டு அதிர்ந்த அந்தத் தாயார் ஒரு புன்னகையோடு அதைக் கடந்த காட்சியை பரியேறும் பெருமாள் தனது பேராசிரியை அவர்களை டீச்சர் என்று அழைக்கும் காட்சி எனக்குள் மீண்டுமொருமுறை கொண்டு வந்தது. இந்தப் படத்தை நான் நான்குமுறை பார்த்ததற்கான காரணங்களுள் மிக முக்கியமான காரணம் இந்தக் காட்சி.
பொதுவாக தமிழ்வழியில் பொதுப்பள்ளிகளில் படித்து கல்லூரிவரும் பிள்ளைகளை அதுவும் தலித் பிள்ளைகளை இந்த சமூகம் பார்க்கிற பார்வை கோணலான பகடியாகத்தான் இருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்கு கல்லூரியிகளில் கிடக்கும் சவால்களை சிக்கல்கள் கூர்மையானவை. அதற்கானத் தீர்வுகளை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை அவற்றை உள்ளது உள்ளபடி உள்வாங்கி சமூகத்தின் பார்வைக்கு வைக்கிற வேலையையேனும் திரைப்படங்கள் செய்தால் பரவாயில்லை. அந்தக் குழந்தைகள் எதிகொள்கிற நுட்பமான சவால்களை மூன்றாம்தர பகடியாக மாற்றி சமூகத்தின் அரிப்பை சொரிந்துவிடுகிற வேலையையே பல திரைப்படங்கள் செய்கின்றன.
இந்தப் படத்தில் ஒரு காட்சி,
ஆங்கிலப் பேராசிரியர் “A” வில் ஆரம்பிக்கும் நூறு சொற்களை எழுதிவருமாறு இம்போசிஷன் தருவார். அதை எழுதியது யார் என்பதெல்லாம் சுவாரிசியமான வேறு விஷயம். அதைக் கொடுப்பதற்காக பேராசிரியரிடம் போனவர், “ சார், வீட்டுப்பாடம்” என்பார். ஒரு சட்டக் கல்லூரியில் ஒரு பேராசிரியர் இம்போசிஷன் எல்லாம் கொடுக்க முடியுமா? என்பதெல்லாம் கடந்து கிராமத்துப் பொதுப்பளிப் பிள்ளைகளின் எதார்த்தமான, பவுடர் பூசாத இயல்பு நிலையை அனுபவித்து வைத்திருக்கிறீர்கள்.
ஆணவக் கொலைகள் எப்படி நடக்கின்றன என்பதை மிக நுட்பமாக படத்தில் வைத்திருக்கிறீர்கள்.
ஒரு பெண் தலித் பையனோடு தொடர்ந்து அன்போடு சுற்றிக்கொண்டிருக்கிறாள் என்பதற்காக அவளை ஓங்கி அறைகிறான் அவளது அண்ணன். அவள் சுவற்றிலே மோதி மயங்கி விழுகிறாள். செத்து விட்டாள் என்று தவறாகக் கருதுகிறார்கள். அந்தப் பெரியவரை அனுகுகிறார்கள். அவர் உள்ளே போகிறார். அந்தக் குழந்தையோ உயிரோடு இருக்கிறாள். அவளை முதலில் கொலைசெய்து அடுத்ததாய் அவளை தற்கொலை செய்துவிட்டு வெளியே சாந்தமாய் வருகிறார்.
ஒருக்கால் அவள் உயிரோடு இருப்பது தெரிந்திருந்தால் அவளது பெற்றோர் அவளை கொன்றிருக்க சம்மதிக்காமல்கூட இருந்திருக்கக்கூடும்.
அண்ணன்காரன் அடித்து செத்துப்போனவளை தற்கொலையாக்கி வந்திருக்கிறார் என்பதுதான் அவர்களது நினைப்பு. அதுதான் அவருக்கு அந்தக் குடும்பம் கொடுத்த அசைன்மெண்ட். அப்படியிருக்க உயிரோடு இருக்கும் அந்தக் குழந்தையை ஏன் அவர் கொன்றுபோட வேண்டும்?
இந்த இடத்தில் இன்னொரு காட்சியைப் பொறுத்திப் பார்ப்பது சரியாக இருக்கும்.
பரியேறும் பெருமாளை கொலைசெய்ய வேண்டிய அசைன்மெண்ட்டோடு அந்தப் பெரியவரை அணுகுகிறார்கள். அவனது படத்தைப் பார்த்ததும் சொல்வார்,
“அய்யோ, இந்தப் பையன எனக்குத் தெரியுமேப்பா. லா காலேஜ்ல படிக்கிறான். நல்லப் பையனாச்சே. நான் வேணா ஒரு தரம் பேசிப் பார்க்கவா?”
ஆக, அவருக்கும் கொலை செய்வதில் தயக்கமெல்லாம் இருக்கவே இருக்கிறது. பிறகு ஏன் கொலகளை செய்துகொண்டே இருக்கிறார்?
அதற்கும் அந்தக் காட்சியிலேயே விடை இருக்கிறது.
அவர் அந்த அசைன்மெண்டுக்கு ஒத்துக் கொண்டதும் பணம் கொடுக்கிறார்கள். வாங்க மறுக்கிறார். இதை குலதெய்வத்துக்கு செய்யற வேலையா நினைத்து செய்வதாகக் கூறுகிறார்.
இந்த இடம்தான் மிக நுட்பமான, இதுவரை எந்தப் படத்திலும் இவ்வளவு அழுத்தமாக சொல்லப்படாத விஷயம்.
கொஞ்சம் வெளியே இன்னொரு காட்சிக்குப் போய் வருவது இந்த நுட்பத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாய் புரிய வைக்கும் என்று நம்புகிறேன்.
பரி பேருந்தில் ஏறுகிறான். அந்தப் பெரியவருக்குப் பக்கத்தில் இருக்கை இருக்கிறது. கூப்பிட்டு அமரச் சொல்லி அவனோடு பேச்சுக் கொடுக்கிறார். அவனது ஊரைக் கேட்டதும் அவன் ஒரு தலித் பையன் என்பதைத் தெரிந்து கொள்கிறார். அடுத்த கணமே ஒருவித அசூசையோடு எழுந்து கொள்கிறார்.
அவனைக் கொன்றுபோட சொல்கிறபோது அவனை நல்ல பையன் என்கிறார்.
ஆக கொலை என்பது அவர் ஆசைப்பட்டோ, பணத்திற்காகவோ செய்வதில்லை.
அவருக்குள் விதைக்கப்பட்டு பெரிதாய் வளர்ந்து கிடக்கும் தூய்மைவாதமே அவரை இத்தனைக் கொலைகளை செய்ய வைக்கிறது. தங்களது குலப் பிள்ளை தலித் பிள்ளையைத் திருமணம் செய்தால் தனது ஜாதி அசுத்தப்பட்டு விடும். அது குல தெய்வத்திற்கு அசிங்கம். சாமி அசிங்கப்படுவதை விட ஆணவக் கொலை செய்து அதைத் தடுத்துவிடுவது உத்தமம். தனது குடும்பத்தினால் தமது தெய்வமும் சாதியும் அச்சிங்கப்படுவதை தம்மால் தடுக்க முடியாவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்வதுதான் பரிகாரம் என்று அப்பாவி சாதி இந்துக்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது.
தூய்மைவாதம் என்பது ஒரு சித்தாந்தம். அது அசிங்கமானதொரு சித்தாந்தம். அதனோடு சண்டைபோடுவதும் மாற்றுவதும்தான் சாதி அழிப்பின் முதல் வேலையாக இருக்க முடியும் என்பதை இந்தப் படம் தெளிவாக எடுத்து வைக்கிறது.
பரியின் தந்தையை எவ்வளவு உசிரோட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். அவரது முதல்வரோடான சந்திப்பு அருமை. அதுவும் போனதடவை வேறொரு மனிதனை அப்பா என்று அழைத்து போயிருக்கிறான் என்பதை முதல்வர் சொன்னதுன் அதை எதிர்கொள்கிற அவரது பாங்கும், வெளியே வந்த்தும் தனது மகனிடம் “பயந்துட்டாங்கப்பா” என்று கூறும் வெகுளித்தனமும், அதை ஒரு புன்னகையோடு பரி எதிர்கொள்கிற இடமும் என்னை கலங்க வைத்தன மாரி.
விசாரனை முடிந்ததும், ”படிச்சு பெரிய ஆளா வரனும். எல்லோரும் உன்னை மதித்து தொழனும். போ, ஏதாவது செய்” என்று கல்லூரி முதல்வர் சொல்வது எனது குரலும் மாரி. என் பள்ளிக் குழந்தைகளை நான் அப்படித்தான் வளர்க்கிறேன்.
இதை சொன்னதும் பயந்துபோன பேராசிரியை இந்த வழிகாட்டுதலால் அவன் ஏதாவது தப்பு செய்துவிடப் போகிறான் என்று அச்சப்படுகிறார். அப்போது சன்னமாய் ஒரு உரையாடலை வைத்திருப்பீர்கள்,
“அவங்கள உங்களால திருத்த முடியுமா?”
முடியாது என்பதாக அந்தப் பேராசிரியர் தலை அசைப்பார்.
“அப்புறம் இவன மட்டும் ஏன் தடுக்கிறீங்க? தற்கொல செய்துக்கறதவிட அவன் போராடிச் சாகட்டும்”
செம, செம, செமடா மாரிப்பையா.
பரி முன்னால் உட்கார்ந்திருப்பான். அந்தப் பையன் அது தன் இடம் என்பான்.
“பட்டா போட்டிருக்கா?” என்பான் பரி.
“ஆமா” என்பான் அந்தப் பையன்
இது அந்தப் பையனுக்கும் பரிக்கும் இடையேயான உரையாடல் அல்ல மாரி. ஆதிக்க சாதிக்கும் ஒடுக்கப்பட்ட சாதிக்கும் இடையேயான உரையாடல்.
”நீ போய் பின்னாடி உட்கார்” என்பான் பரி
“நீ சொல்லி நான் கேட்கனுமோ?” என்பான் அந்தப் பையன்.
அந்தக் கேள்வி ஆதிக்க சாதியின் திமிர்க் கேள்வி
“அப்ப நீங்க சொன்னா மட்டும் நாங்க ஏன் கேட்கனும்” என்ற ஒடுக்கப்பட்டத் திரளின் கோவம் கலந்த பதிலாகவே இந்தப் படத்தைப் பார்க்க முடிகிறது.
அவளது தந்தையிடம்,
“அவ ரொம்பக் கொடுத்து வச்சவ சார். அவ நெனச்சத எல்லாம் எங்க வேணாலும் எப்ப வேணாலும் பேச முடியுது. ஆனா எனக்கு அப்படி இல்ல சார்” என்பான்.
“நீங்க நீங்களா இருக்கற வரைக்கும் நான் நாயாதான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிற வரைக்கும் மாறாது சார்”
என்பது ஆதிக்க சாதியோடான நமது ஒரு வகை உரையாடல் மாரி.
ஆதிக்க சாதியை எதிர்கொள்ளும் போது
1) நாம வாங்கிவந்த எழுத்து இது என்று எதையும் தாங்குவது என்பது ஒரு நிலை
2) அடிச்சா திருப்பி அடிப்பேன் என்பது ஒரு நிலை
3) அவனோடு நியாயத்தை உரையாட முயல்வது என்பது ஒரு வகை
4) தவிர்க்கவே இயலாதபோது திருப்பியும் அடித்துக் கொண்டே அவனோடன உரையாடலையும் தொடர்வது என்பது அபூர்வமான நிலை
அதை நீங்கள் சரியாய், மிகச் சரியாய் கையாள்வதாகப் படுகிறது.
பள்ளித் தேர்வறைக் காட்சியில் இன்னும் கவனமாய் இருந்திருக்கலாம். சாதியை ஒழிப்பதும் பொதுக் கல்வியைக் காப்பாற்றுவதும் மிக முக்கியம். பொதுப் பள்ளிகளில் இப்படித்தான் தேர்வு நடக்கும் என்று சித்தரிப்பது பொதுப்பள்ளிகளை மூடிவிட வேண்டும் என்று துடிக்கும் ஆளும் வர்க்கத்திற்கு வரமாய் அமையும்.
நினைத்துப் பாருங்கள் சாதி ஒழிந்து பொதுப் பள்ளிகள் இல்லாத நிலை வந்தாலும் பாதிக்கப்படுவது நாம்தான்.
போக,
நீலமும் கருப்பும் சிவப்பும் இணைந்து களப்பட்டால்தான் நகர முடியும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது இந்த அப்பனின் “நேயர் விருப்பம்”
மாரிக்கும் பேத்திக்கும் என் அன்பும் முத்தமும்,
மருமகளுக்கு என் அன்பும் வாழ்த்தும்
அன்புடன்,
இரா.எட்வின்.

Friday, November 2, 2018

தேர்தல் கிட்டக்க வருவது புரிகிறது மோடி சார்

வேலை இல்லையா பக்கோடா போட்டு விற்பனை செய்யுங்கள் என்று திரு மோடி அவர்கள் சொன்னபோது தேர்தலுக்கு காலமிருந்தது

மோடி சொல்கிறார்,

சிறு குறு தொழில்களுக்காக கடன் கேட்பவருக்கு ஒரு கோடி ரூபாய் வரையில் 59 நிமிடங்களுக்குள் வங்கிகள் கடன் தரவேண்டுமாம்

தேர்தல் கிட்டக்க வருவது புரிகிறது மோடி சார்

மட்டுமல்ல,

தேர்தலில் நீங்கள் வென்றால் வேலை இல்லை என்றால் பிச்சை எடுங்கள் என்றுகூட எங்கள் இளைஞர்களைப் பார்த்து நீங்கள் கூறக்கூடும் என்பதும் எமக்குத் தெரியும்

அதை அவன் தின்று விட்டான்

Q7 தொலைக்காட்சி 23.10.2018 அன்று பதிவேற்றம் செய்திருந்த தோழர் திருமுருகன் அவர்களது நேர்காணலை இன்று பார்த்தேன். அதில் அவர் கீழமை நீதிபதிகளைக் குறித்து மிக நல்லபடியாக கூறினார். தமிழ்நாட்டு கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் சமரசமற்று நியாயமாக இருப்பதாகக் கூறினார்.
அவர் ஒரு வழக்கு குறித்து கூறியது நெகிழ்த்தியது. இத்தனைக்கும் அவர் புனைவாகக் கூறினாரா அல்லது உண்மையான வழக்கா என்பது தெரியவில்லை. அநேகமாக புனைவாகத்தான் இருக்கும். ஆனால் நாடு இருக்கும் நிலையில் இது உண்மையாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கவே செய்கிறது. எதுவாக இருப்பினும் அதனுள் இருந்த மனிதம் என்னை நெகிழ்த்தியது.
ஒரு இளைஞன் தாங்க இயலாத பசியின் காரணமாக ஒரு தேநீர்க்கடையில் இருந்து இரண்டு “பன்”களை எடுத்து சாப்பிட்டு விடுகிறான். பிடிபட்டும் விடுகிறான். லாவகமாக தப்பித்து செல்வதற்கு அவன் என்ன திரு மல்லையாவா? பிடிபட்ட அவனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்கள். வழக்கை பதிவு செய்வதற்கு ஆகும் காகிதங்களின் விலைகூட பெறாது அவன் திருடித் தின்ற பன்களின் விலை என்பது காவலர்களுக்குத் தெரியும்.ஆனாலும் அவர்கள் அவன்மீது திருட்டு வழக்கைப் பதிவு செய்து அந்த இளைஞனை கீழமை நீதிமன்றத்திற்கு கொண்டு வருகிறார்கள்.
இதற்காக காவலர்கள்மீது நமக்கொன்றும் கோவம் இல்லை. பாவம், அவர்கள் என்ன செய்வார்கள். திரு சேகரைக் கொண்டுபோக முடியவில்லை. திரு H.ராஜவைக் கொண்டுபோக முடியவில்லை. கிடைத்த இவனையாவது கொண்டுபோகலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். அதுவும் சரி, பொன்னை வைக்கவேண்டிய இடத்தில் பூவையாவது வைக்கவேண்டாமா?
வழக்கை விசாரித்த நீதிபதி காவலர்களை பார்த்து கேட்கிறார்,
“திருடன் என்கிறீர்கள். திருட்டை நிரூபிக்க வேண்டும் என்றால் அவன் திருடிய பொருளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமே. அவன் திருடிய பொருள் எங்கே?”
“அதை அவன் தின்று விட்டான்”
இப்போது நீதிபதி அந்த இளைஞனைப் பார்த்து கேட்கிறார்,
“இன்று காலைக் கடனை முடித்தாயா தம்பி?”
“முடித்தேங்க சாமி”
”எங்க”
“போலீஸ் ஸ்டேஷன் கழிவறையில்”
எனில், அவன் திருடிய பொருள் இப்போது காவல்நிலையத்து கழிவறையில். இவனைப் பிடித்ததும் அவனை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்ததற்கு பதில் அவனை சாப்பாட்டுக் கடைக்கு அழைத்து சென்று ஒரு வேளை சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும் என்ற ஆலோசனையோடு அந்த இளைஞனை விடுதலை செய்கிறார் நீதிபதி.
இப்பவும் சொல்கிறேன் இது புனைவே ஆயினும் இதற்கு நெருக்கமாகவே கீழமை நீதிமன்றங்கள் நடந்து கொள்கின்றன என்பதற்கு தோழர் திருமுருகன் காந்தியின் விடுதலையும் திரு கோபால் அவர்கள்மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுமே சமீபத்திய உதாரணங்கள்.
தோழரது நேர்காணலைக் கேட்டபடியே மடியில் கிடக்கிற 23.10.2018 நாளிட்ட “விடுதலை”யில் இத்தகைய கீழமை நீதிமன்றங்களையும் சிதைப்பதற்கான வேலைகளில் மத்திய அரசு களம் இறங்கிவிட்ட செய்தியைப் பார்க்க முடிந்தது.
கீழமை நீதிமன்ற நீதிபதிகளையும் அதற்கு கீழ் உள்ள நீதிமன்ற நீதிபதிகளையும் தமிழக அரசே TNPSC மூலம் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதேபோலத்தான் மற்ற மாநிலங்களிலும் கீழமை மற்றும் அதற்கும் கீழ் உள்ள நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.
அனால் இந்தியா முழுவதும் தற்போது காலியாக உள்ள ஏறத்தாழ ஆறாயிரம் கீழமை மற்றும் அதற்கு கீழுள்ள நீதிமன்றங்களின் நீதிபதிகளை மத்திய அரசே நேரடியாக நியமிக்க இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.
இது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். போக, மத்திய அரசே நேரடியாக இந்த நீதிபதிகளை நியமித்தால் இந்தி மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே தெரிந்த தமிழ் அறியாத நீதிபதிகள் நம் மண்ணில் நியமிக்கப் படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். வாய்ப்புகள் என்ன, தவிர்க்கவே முடியாத பட்சத்தில் தமிழ் தெரிந்த நீதிபதிகள் சிலரும் நியமிக்கப்படலாம். அவ்வளவுதான்.
நீதிபதிகள் வழக்கு சார்ந்த மண்ணின் கலாச்சாரமும் மொழியும் சிக்கல்களும் அறிந்தவராக இருப்பது அவசியம். அது இல்லாமல் வெறுமனே சட்டத்தின் துணைகொண்டு மட்டும் வழக்குகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும்.
நீதிமன்றங்களில் மூன்றுகோடியே முப்பது லட்சம் வழக்குகள் தேங்கி நிற்கின்றன என்று நமது குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் கூறியிருக்கிறார். இவற்றில் பல மூன்று தலைமுறைகளாக இழுத்துக் கொண்டிருப்பவை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு ரஞ்சன் கோகாய் கூறுகிறார் என்றும் அன்றைய விடுதலை கூறுகிறது.
எனில் விரைவாக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடுதானே மத்திய அரசு இதை செய்கிறது. இதையும் உள்நோக்கத்தோடு பார்த்தால் எப்படி என்றுகூட சிலர் கேட்கக் கூடும்.
இதுதான் காரணம் எனில் மாநில அரசுகளை உசுப்பி விட்டு இந்தக் காரியத்தை செய்ய வைக்க வேண்டுமே தவிர தானே செய்யக்கூடாது.
குழந்தைக்கு இன்று தேர்வு. அவனோ தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று கொள்வோம். எதையேனும் செய்து அவனை எழுப்பி தேர்வெழுத அனுப்ப வேண்டுமே அன்றி பிள்ளை தூங்கிக் கொண்டிருக்கிறான் என்பதற்காக நாமே சென்று தேர்வு எழுத முடியாது.
1) மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது
2) தமிழ் மண்ணின் நீதிமன்றங்களில் இருந்து தமிழை சுத்தமாகத் துடைத்துப்போடப் பார்க்கிறது மத்திய அரசு
என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். தோழர் திருமுருகன் அவர்களது நேர்காணல் இவை கடந்தும் என்னைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனது.
இவைகளே ஆபத்தானவைதான் கொடுரமானவைதான் நியாயமற்றவைதான். ஆனால் இவற்றைவிடக் கொடூரமானதும் நியாயமற்றதும் ஆபத்தானதுமான ஒரு விஷயத்தை தோழர் திருமுருகன் அவர்களது நேர்காணல் உணர்த்தியது.
திரு கோபால் அவர்களது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தோழர் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டது போன்ற நியாயங்களும் இனி மக்களுக்காகப் போராடுபவர்களுக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதே அது.
அவர்கள் நமக்கு எதிராக செய்யும் எதையும் தீர்க்க சிந்தித்தே செய்கிறார்களே தவிர ஏனோதானோ என்று எதையும் செய்வதில்லை
அவர்கள் இவ்வளவு தூரம் வந்தபிறகும் நாம் ஏனோதானோ என்று இருப்பது நியாயம் இல்லை என்பதை சொல்லவே இன்றைக்கு இவ்வளவு நேரம் நான் விழித்திருந்ததே
#சாமங்கவிந்து ஒரு மணி நேரம்
01.11.2018

Thursday, November 1, 2018

4 ரூபாய் கீரைக்கட்டின் விலையை 6 ரூபாய்க்கு

அவர்கள் இருவரையும் நண்பர்கள் என்று விளிப்பது கொஞ்சம் அதிகம் என்று யாருக்கேனும் தோன்றினால் இரண்டு வணிகர்கள் என்று அவர்களைக் கொள்ளலாம். அதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஒருவர் ராமநாதபுரத்திலும் மற்றவர் மதுரையிலும் கடைகளை கட்டமைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள் என்று கொள்வோம்.
ராமநாதபுரத்தில் பனை சம்பந்தமான பொருட்கள் உற்பத்தியாகின்றன என்றும் மதுரையில் காய்கறிகள் அதிகமாய் விளைகின்றன என்றும் கொள்வோம். ராமநாதபுரத்துக்காரர் தான் ஏற்கனவே விற்கும் பொருட்களோடு காய்கறிகளையும் விற்க ஆசைப்படுகிறார். மதுரைக்காரர் தான் ஏற்கனவே விற்கும் பொருட்களோடு பனை பொருட்களை விற்க ஆசைப்படுகிறார்.
அந்த இரண்டு பேருக்குமிடையே இயல்பாகவே ஒரு ஒப்பந்தம் ஏற்படுகிறது.
மதுரைக்காரர் காய்கறிகளை வாங்கி இந்த ராமநாதபுரத்திற்கு அனுப்பிவிட வேண்டியது. காய்கறிகள் வரும் அதே டாடாஏசில் ராமநாதபுரத்துக்கு பனை பொருட்களை வாங்கி அனுப்பிவிடுவது. ஒரே வாடகையில் இருவரும் பயனடையத் தொடங்கினார்கள்.
இவர்கள் இருவருக்குமிடையேயான வியாபார ஒப்பந்தம் நாளுக்கு நாள் விரிவடைந்தது. அது இயல்பானதும்கூட. இவர் மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு தேவையான இன்னும் அதிகப் பொருட்களையும் அவர் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு இன்னும் அதிகப் பொருட்களையும் வாங்கி அனுப்புகின்றனர்.
இருவருக்கும் வியாபாரம் பெருகியது.
ஒருக்கட்டத்தில் ராமநாதபுரத்துக்காரர் வருத்தத்தில் சாய்கிறார். காரணம் இவர் மதுரைக்கு அனுப்பும் பொருட்களின் விலையைவிட அங்கிருந்து இவர் வாங்கும் பொருட்களின் விலை அதிகமாய் உள்ளது. ஒரு கட்டத்தில் அவருக்கு கோவம் கோவமாய் வருகிறது.
மதுரைக்காரருக்கு இந்த ஒப்பந்த்தின் மூலம் தன்னைவிட லாபம் கிடைப்பதாக நினைக்கிறார். இதனால் இந்த வியாபாரத்தில் ஒரு பற்றாக்குறை இவருக்கு ஏற்பட்டிருப்பதாக இவர் கருதுகிறார்.
இவர் கொஞ்சம் நிதானமாகவும் நியாயமாகவும் யோசிப்பவராக இருந்தால் இரண்டு காரியங்களை செய்திருக்கலாம்.
1) இன்னும் அதிகமான பொருட்களை வாங்கி இவர் மதுரைக்கு அனுப்புவதன் மூலம் லாபத்தை அதிகரித்திருக்கலாம்
2) மதுரைக்காரர் அடையும் லாபத்தைவிட இவருக்கு லாபம் கூட இருக்க வேண்டும் என்று நினைத்தால் அங்கிருந்து வாங்கும் பொருட்களின் அளவை குறைத்திருக்கலாம்
இவர் நிதானமாக யோசிப்பவரும் இல்லை நியாயமாக யோசிப்பவரும் இல்லை.
அவரைவிட நமக்கு 40 ரூபாய் குறைவாக லாபம் என்ற வகையில் விழும் 40 ரூபாய் பற்றாக்குறையை மதுரையில் இருந்து வந்திருக்கும் இருபது கீரைக்கட்டுகளின் விலையை கட்டுக்கு இரண்டு ரூபாய் கூட்டி பற்றாக்குறையை நிரவ முயற்சிக்கிறார்.
இவரது இந்த செயலை பார்க்கும் சிறு குழந்தைகூட அநியாயம் என்று சொல்லும்.
இப்போது ராமநாதபுரம் என்பதை அமெரிக்கா என்றும் மதுரையை சீனா என்றும் கொஞ்சம் மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
ராமநாதாபுரம் வியாபாரியை இயல்பாகவே திரு ட்ரம்ப் என்று இப்போது உங்களால் யூகித்துவிட முடியும்.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களால் 40,000 கோடி டாலர் அளவிற்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக ட்ரம்ப் உணர்கிறார். அதை ஈடுகட்ட வேண்டும் என்று யோசிக்கிறார். இதிலும் தவறெதுவும் இல்லை. இன்னும் சரியாக சொல்வதெனில் இதுதான் சரியும்கூட.
அதற்கு இவர் என்ன செய்திருக்க வேண்டும்
1) ஏற்றுமதியை அதிகரித்திருக்க வேண்டும்
2) அல்லது இறக்குமதியை குறைத்திருக்க வேண்டும்
இரண்டையும் செய்யாமல் ராமநாதபுரத்துக்காரர் 4 ரூபாய் கீரைக்கட்டின் விலையை 6 ரூபாய்க்கு உயர்த்தியதைப் போல இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை அதிகரித்து தமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய 40,000 கோடி டாலர் பற்றாக்குறையை ஈடுகட்டுகிறார்.
பேச வேண்டியவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். நம்மால் முடியவில்லை.
#சாமங்கவிய 59 நிமிடங்கள்
31.10.2018

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...