Monday, November 12, 2018

குறள் ஒருபோதும் மனுதர்மத்தின் சாரமாக இருக்க இயலாது.

"குடி செய்வார்க்கில்லை பருவம்
மடிசெய்து
மானம் கருதக் கெடும்."
தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்தமான குறள் இது என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதியிருக்கிறார்.
1956 ஆம் ஆண்டில் ஒருநாள் தந்தை பெரியாரும் அடிகளாரும் ஒன்றாக மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு மகிழுந்தில் பயணம் செய்கிறார்கள். கார் கிளம்பி சற்று நேரத்திற்கெல்லாம் தந்தை பெரியார் தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து திருக்குறள் புத்தகத்தை எடுக்கிறார். மேலே உள்ள குறளை எடுத்தவர் அந்தப் பக்கத்தை அடிகளாரிடம் நீட்டுகிறார். அந்தக் குறிப்பிட்டக் குறளுக்கு என்ன பொருள் என்று அடிகளாரிடம் கேட்டிருக்கிறார் பெரியார்.
தன் இனம், இனம் என்பதை தனது குழு என்று சுறுக்கிக் கொள்வதுகூட பிழையாகாது, சிறப்புற, பயனுற அல்லது இதுபோல ஏதோ ஒன்று உற ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதுபவன் அந்தக் காரியத்தை எப்போது தொடங்குவது என்று யோசித்துக் கொண்டு இருக்க மாட்டான். அவனுக்கு நல்ல காலம், கெட்ட காலம், உகந்த காலம், உகந்த காலமின்மை என்பது எல்லாம் இல்லை.
தன் குடி உயர உழைக்க நினைப்பவன் எல்லா நேரமும் அதற்காக சோம்பாது உழைத்துக் கொண்டே இருப்பான். மட்டுமல்ல, தன் இனம் அல்லது குடி அல்லது குழு சிறப்படைவதற்காக உழைப்பவன் தனது மானம் குறித்தும் கவலைப்பட மாட்டான். தன் மானம் குறித்து கவலைப்படுவதுகூட தன் இன உயர்விற்கான தடையாக அமையக்கூடும்.
எனவே காலம் பார்க்காது, சோம்பாது, தனது மானமே கெட்டாலும் பரவாயில்லை என்று உழைப்பவனால் மட்டுமே தனது இனத்தை மேலெழுப்ப இயலும்.
இவ்வாறாக அந்தக் குறளுக்கான பொருளை பெரியாருக்கு எடுத்துரைத்திருக்கிறார் அடிகளார்.
ஒரு தேர்ந்த தமிழ் அறிஞர்போல, ஒரு தேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் போல பெரியார் அவர்கள் தமிழ் இலக்கியம் குறித்து தன்னோடு உரையாடிக் கொண்டு வந்ததாக அடிகளார் எழுதுகிறார்.
ஒரு தேர்ந்த தமிழறிஞர் போல, ஒரு தேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் போல இலக்கியங்களைக் குறித்து அடிகளாரிடம் பேசிக்கொண்டு வந்த பெரியாருக்கா அந்தக் குறளுக்கு பொருள் தெரியாமல் இருந்திருக்குமா? இந்த அய்யம் நியாயமானதுதான். இந்த எளிய குறளுக்கான பொருள் பெரியாருக்கு தெரிந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
பிறகு ஏன் இதற்கான பொருளை அடிகளாரிடம் கேட்கிறார் பெரியார்?
பொதுவாகவே பரிமேலழகர் போன்ற குறளுக்கான உரையாசிரியர்கள் பல இடங்களில் மனம் போன போக்கிலும் தங்களது கோட்பாடுகளின் வெளிச்சத்தின் வழியாகவும் குறளுக்கு பொருள் சொல்லிப் போயிருப்பதாக உணர்கிறார் பெரியார்.
திரு நாகசாமி போன்றவர்கள் “மனுவின் சாரமே திருக்குறள்” என்று இன்றைக்கு எழுதத் துணிகிறார்கள் என்றால் பரிமேலழகர் போன்றவர்கள் அன்றைக்கே அதற்கான முயற்சியைத் தொடங்கி இருந்தார்கள் என்பதையும் பெரியார் உணர்ந்தே இருந்தார்.
எனவேதான் தனக்கே தனக்கென்று எழுதப் பட்டிருப்பதாய் தான் உணர்ந்து தெளிந்த அந்தக் குறள் குறித்து அய்யமறத் தெளிவு பெறுவதற்காகவே அடிகளாரிடம் அவர் கேட்டிருக்கக் கூடும்.
இந்தக் குறளை பெரியாருக்கென்றே வள்ளுவர் எழுதினாரா அல்லது இந்தக் குறளின் படியே பெரியார் வாழ்ந்தாரா என்பதை பிரித்து உணர இயலாதபடி பெரியாரின் வாழ்க்கையும் இந்தக் குறளும் ஒன்றோடு ஒன்று இரண்டறக் கலந்து கிடக்கிறது.
தனது சமூகம் மேம்பாடு அடைய விரும்புபவன் எப்படி இருப்பான் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று இந்தக் குறள் கூறுகிறது. எந்தக் குலத்தில் பிறந்தவன் என்ற குறிப்பெல்லாம் இந்தக் குறளில் இல்லை.
மட்டுமல்ல,
“பிறப்பொக்கும்” என்று சனாதனத்தின் செவிட்டில் அடித்து சொல்கிறது குறள்.
பிறப்பொக்கும் என்பது மனுதர்மத்திற்கு எதிரானது. “பிறப்பொக்காது” என்பதை நிறுவனப்படுத்தி இருக்கிற நூலே மனுதர்மம்.
“பிறப்பொக்கும்” என்பது மனுதர்மத்திற்கான வள்ளுவரின் எதிர்வினையே ஆகும்.
மனுதர்மத்தின் சாரத்தை எம் தந்தை ஒருபோதும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.
எம் தந்தை ஏற்றுக் கொண்ட ஒன்று மனுதர்மத்தின் சாரமாக இருக்க வாய்ப்பே இல்லை.
அதற்காகவெல்லாம் மட்டுமே நாங்கள் இதை சொல்ல வில்லை
“உழுதுண்டு வாழ்வாரை தொழுதுண்டு” வாழச் சொல்லும் குறள்
ஒருபோதும் மனுதர்மத்தின் சாரமாக இருக்க இயலாது.
#சாமங்கவிய இரண்டு மணி இருபது நிமிடம்
11.11.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...