Friday, November 2, 2018

அதை அவன் தின்று விட்டான்

Q7 தொலைக்காட்சி 23.10.2018 அன்று பதிவேற்றம் செய்திருந்த தோழர் திருமுருகன் அவர்களது நேர்காணலை இன்று பார்த்தேன். அதில் அவர் கீழமை நீதிபதிகளைக் குறித்து மிக நல்லபடியாக கூறினார். தமிழ்நாட்டு கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் சமரசமற்று நியாயமாக இருப்பதாகக் கூறினார்.
அவர் ஒரு வழக்கு குறித்து கூறியது நெகிழ்த்தியது. இத்தனைக்கும் அவர் புனைவாகக் கூறினாரா அல்லது உண்மையான வழக்கா என்பது தெரியவில்லை. அநேகமாக புனைவாகத்தான் இருக்கும். ஆனால் நாடு இருக்கும் நிலையில் இது உண்மையாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கவே செய்கிறது. எதுவாக இருப்பினும் அதனுள் இருந்த மனிதம் என்னை நெகிழ்த்தியது.
ஒரு இளைஞன் தாங்க இயலாத பசியின் காரணமாக ஒரு தேநீர்க்கடையில் இருந்து இரண்டு “பன்”களை எடுத்து சாப்பிட்டு விடுகிறான். பிடிபட்டும் விடுகிறான். லாவகமாக தப்பித்து செல்வதற்கு அவன் என்ன திரு மல்லையாவா? பிடிபட்ட அவனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்கள். வழக்கை பதிவு செய்வதற்கு ஆகும் காகிதங்களின் விலைகூட பெறாது அவன் திருடித் தின்ற பன்களின் விலை என்பது காவலர்களுக்குத் தெரியும்.ஆனாலும் அவர்கள் அவன்மீது திருட்டு வழக்கைப் பதிவு செய்து அந்த இளைஞனை கீழமை நீதிமன்றத்திற்கு கொண்டு வருகிறார்கள்.
இதற்காக காவலர்கள்மீது நமக்கொன்றும் கோவம் இல்லை. பாவம், அவர்கள் என்ன செய்வார்கள். திரு சேகரைக் கொண்டுபோக முடியவில்லை. திரு H.ராஜவைக் கொண்டுபோக முடியவில்லை. கிடைத்த இவனையாவது கொண்டுபோகலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். அதுவும் சரி, பொன்னை வைக்கவேண்டிய இடத்தில் பூவையாவது வைக்கவேண்டாமா?
வழக்கை விசாரித்த நீதிபதி காவலர்களை பார்த்து கேட்கிறார்,
“திருடன் என்கிறீர்கள். திருட்டை நிரூபிக்க வேண்டும் என்றால் அவன் திருடிய பொருளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமே. அவன் திருடிய பொருள் எங்கே?”
“அதை அவன் தின்று விட்டான்”
இப்போது நீதிபதி அந்த இளைஞனைப் பார்த்து கேட்கிறார்,
“இன்று காலைக் கடனை முடித்தாயா தம்பி?”
“முடித்தேங்க சாமி”
”எங்க”
“போலீஸ் ஸ்டேஷன் கழிவறையில்”
எனில், அவன் திருடிய பொருள் இப்போது காவல்நிலையத்து கழிவறையில். இவனைப் பிடித்ததும் அவனை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்ததற்கு பதில் அவனை சாப்பாட்டுக் கடைக்கு அழைத்து சென்று ஒரு வேளை சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும் என்ற ஆலோசனையோடு அந்த இளைஞனை விடுதலை செய்கிறார் நீதிபதி.
இப்பவும் சொல்கிறேன் இது புனைவே ஆயினும் இதற்கு நெருக்கமாகவே கீழமை நீதிமன்றங்கள் நடந்து கொள்கின்றன என்பதற்கு தோழர் திருமுருகன் காந்தியின் விடுதலையும் திரு கோபால் அவர்கள்மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுமே சமீபத்திய உதாரணங்கள்.
தோழரது நேர்காணலைக் கேட்டபடியே மடியில் கிடக்கிற 23.10.2018 நாளிட்ட “விடுதலை”யில் இத்தகைய கீழமை நீதிமன்றங்களையும் சிதைப்பதற்கான வேலைகளில் மத்திய அரசு களம் இறங்கிவிட்ட செய்தியைப் பார்க்க முடிந்தது.
கீழமை நீதிமன்ற நீதிபதிகளையும் அதற்கு கீழ் உள்ள நீதிமன்ற நீதிபதிகளையும் தமிழக அரசே TNPSC மூலம் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதேபோலத்தான் மற்ற மாநிலங்களிலும் கீழமை மற்றும் அதற்கும் கீழ் உள்ள நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.
அனால் இந்தியா முழுவதும் தற்போது காலியாக உள்ள ஏறத்தாழ ஆறாயிரம் கீழமை மற்றும் அதற்கு கீழுள்ள நீதிமன்றங்களின் நீதிபதிகளை மத்திய அரசே நேரடியாக நியமிக்க இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.
இது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். போக, மத்திய அரசே நேரடியாக இந்த நீதிபதிகளை நியமித்தால் இந்தி மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே தெரிந்த தமிழ் அறியாத நீதிபதிகள் நம் மண்ணில் நியமிக்கப் படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். வாய்ப்புகள் என்ன, தவிர்க்கவே முடியாத பட்சத்தில் தமிழ் தெரிந்த நீதிபதிகள் சிலரும் நியமிக்கப்படலாம். அவ்வளவுதான்.
நீதிபதிகள் வழக்கு சார்ந்த மண்ணின் கலாச்சாரமும் மொழியும் சிக்கல்களும் அறிந்தவராக இருப்பது அவசியம். அது இல்லாமல் வெறுமனே சட்டத்தின் துணைகொண்டு மட்டும் வழக்குகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும்.
நீதிமன்றங்களில் மூன்றுகோடியே முப்பது லட்சம் வழக்குகள் தேங்கி நிற்கின்றன என்று நமது குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் கூறியிருக்கிறார். இவற்றில் பல மூன்று தலைமுறைகளாக இழுத்துக் கொண்டிருப்பவை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு ரஞ்சன் கோகாய் கூறுகிறார் என்றும் அன்றைய விடுதலை கூறுகிறது.
எனில் விரைவாக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடுதானே மத்திய அரசு இதை செய்கிறது. இதையும் உள்நோக்கத்தோடு பார்த்தால் எப்படி என்றுகூட சிலர் கேட்கக் கூடும்.
இதுதான் காரணம் எனில் மாநில அரசுகளை உசுப்பி விட்டு இந்தக் காரியத்தை செய்ய வைக்க வேண்டுமே தவிர தானே செய்யக்கூடாது.
குழந்தைக்கு இன்று தேர்வு. அவனோ தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று கொள்வோம். எதையேனும் செய்து அவனை எழுப்பி தேர்வெழுத அனுப்ப வேண்டுமே அன்றி பிள்ளை தூங்கிக் கொண்டிருக்கிறான் என்பதற்காக நாமே சென்று தேர்வு எழுத முடியாது.
1) மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது
2) தமிழ் மண்ணின் நீதிமன்றங்களில் இருந்து தமிழை சுத்தமாகத் துடைத்துப்போடப் பார்க்கிறது மத்திய அரசு
என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். தோழர் திருமுருகன் அவர்களது நேர்காணல் இவை கடந்தும் என்னைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனது.
இவைகளே ஆபத்தானவைதான் கொடுரமானவைதான் நியாயமற்றவைதான். ஆனால் இவற்றைவிடக் கொடூரமானதும் நியாயமற்றதும் ஆபத்தானதுமான ஒரு விஷயத்தை தோழர் திருமுருகன் அவர்களது நேர்காணல் உணர்த்தியது.
திரு கோபால் அவர்களது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தோழர் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டது போன்ற நியாயங்களும் இனி மக்களுக்காகப் போராடுபவர்களுக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதே அது.
அவர்கள் நமக்கு எதிராக செய்யும் எதையும் தீர்க்க சிந்தித்தே செய்கிறார்களே தவிர ஏனோதானோ என்று எதையும் செய்வதில்லை
அவர்கள் இவ்வளவு தூரம் வந்தபிறகும் நாம் ஏனோதானோ என்று இருப்பது நியாயம் இல்லை என்பதை சொல்லவே இன்றைக்கு இவ்வளவு நேரம் நான் விழித்திருந்ததே
#சாமங்கவிந்து ஒரு மணி நேரம்
01.11.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...