அன்பின் மாரிசெல்வராஜ்,
வணக்கம்.
மிச்சம் உள்ள ஒன்பது படங்கள் எவை எவை என்று கேட்டுவிடக்கூடாது என்ற நிபந்தனையோடு ஒன்றை சொல்கிறேன்,
நான் பார்த்த நல்ல பத்து படங்களுள் “பரியேறும் பெருமாள் BA.BL, மேல ஒரு கோடு” ம் ஒன்று.
வழக்கமாக திரைப்படங்கள் குறித்த அபிப்பிராயங்களை எழுதக் கூடியவன் அல்ல நான். பரியேறும் பெருமாளைப் பார்த்த பிறகு அதுகுறித்து எழுதாமல் கடக்க முடியவில்லை. என்னளவில் இதுவே இந்தப் படத்தின் வெற்றிக்கான அடையாளங்களுள் ஒன்றென்று கருதுகிறேன்.
1980 இடைஜூனில் தொடங்கிய எனது கல்லூரி வாழ்க்கையின் முதல் நாளில் எங்கள் துறைத் தலைவரான ஜூடித் லூயிஸ் அம்மாவை ”டீச்சர்” என்று அழைத்தவன் நான். இது போதும், எனக்கும் இந்தப் படத்திற்கும் இடையிலான கெமிஸ்ட்ரி எத்தகையதானதாக இருக்கும் என்பதை உங்களால் எளிதாக ஊகிக்க முடியும்.
முதன்முறையாக ஒரு பையன் அதுவும் ஆங்கில இலக்கிய வகுப்பு பிள்ளை தன்னை “டீச்சர்” என்று அழைத்ததைக் கேட்டு அதிர்ந்த அந்தத் தாயார் ஒரு புன்னகையோடு அதைக் கடந்த காட்சியை பரியேறும் பெருமாள் தனது பேராசிரியை அவர்களை டீச்சர் என்று அழைக்கும் காட்சி எனக்குள் மீண்டுமொருமுறை கொண்டு வந்தது. இந்தப் படத்தை நான் நான்குமுறை பார்த்ததற்கான காரணங்களுள் மிக முக்கியமான காரணம் இந்தக் காட்சி.
பொதுவாக தமிழ்வழியில் பொதுப்பள்ளிகளில் படித்து கல்லூரிவரும் பிள்ளைகளை அதுவும் தலித் பிள்ளைகளை இந்த சமூகம் பார்க்கிற பார்வை கோணலான பகடியாகத்தான் இருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்கு கல்லூரியிகளில் கிடக்கும் சவால்களை சிக்கல்கள் கூர்மையானவை. அதற்கானத் தீர்வுகளை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை அவற்றை உள்ளது உள்ளபடி உள்வாங்கி சமூகத்தின் பார்வைக்கு வைக்கிற வேலையையேனும் திரைப்படங்கள் செய்தால் பரவாயில்லை. அந்தக் குழந்தைகள் எதிகொள்கிற நுட்பமான சவால்களை மூன்றாம்தர பகடியாக மாற்றி சமூகத்தின் அரிப்பை சொரிந்துவிடுகிற வேலையையே பல திரைப்படங்கள் செய்கின்றன.
இந்தப் படத்தில் ஒரு காட்சி,
ஆங்கிலப் பேராசிரியர் “A” வில் ஆரம்பிக்கும் நூறு சொற்களை எழுதிவருமாறு இம்போசிஷன் தருவார். அதை எழுதியது யார் என்பதெல்லாம் சுவாரிசியமான வேறு விஷயம். அதைக் கொடுப்பதற்காக பேராசிரியரிடம் போனவர், “ சார், வீட்டுப்பாடம்” என்பார். ஒரு சட்டக் கல்லூரியில் ஒரு பேராசிரியர் இம்போசிஷன் எல்லாம் கொடுக்க முடியுமா? என்பதெல்லாம் கடந்து கிராமத்துப் பொதுப்பளிப் பிள்ளைகளின் எதார்த்தமான, பவுடர் பூசாத இயல்பு நிலையை அனுபவித்து வைத்திருக்கிறீர்கள்.
ஆணவக் கொலைகள் எப்படி நடக்கின்றன என்பதை மிக நுட்பமாக படத்தில் வைத்திருக்கிறீர்கள்.
ஒரு பெண் தலித் பையனோடு தொடர்ந்து அன்போடு சுற்றிக்கொண்டிருக்கிறாள் என்பதற்காக அவளை ஓங்கி அறைகிறான் அவளது அண்ணன். அவள் சுவற்றிலே மோதி மயங்கி விழுகிறாள். செத்து விட்டாள் என்று தவறாகக் கருதுகிறார்கள். அந்தப் பெரியவரை அனுகுகிறார்கள். அவர் உள்ளே போகிறார். அந்தக் குழந்தையோ உயிரோடு இருக்கிறாள். அவளை முதலில் கொலைசெய்து அடுத்ததாய் அவளை தற்கொலை செய்துவிட்டு வெளியே சாந்தமாய் வருகிறார்.
ஒருக்கால் அவள் உயிரோடு இருப்பது தெரிந்திருந்தால் அவளது பெற்றோர் அவளை கொன்றிருக்க சம்மதிக்காமல்கூட இருந்திருக்கக்கூடும்.
அண்ணன்காரன் அடித்து செத்துப்போனவளை தற்கொலையாக்கி வந்திருக்கிறார் என்பதுதான் அவர்களது நினைப்பு. அதுதான் அவருக்கு அந்தக் குடும்பம் கொடுத்த அசைன்மெண்ட். அப்படியிருக்க உயிரோடு இருக்கும் அந்தக் குழந்தையை ஏன் அவர் கொன்றுபோட வேண்டும்?
இந்த இடத்தில் இன்னொரு காட்சியைப் பொறுத்திப் பார்ப்பது சரியாக இருக்கும்.
பரியேறும் பெருமாளை கொலைசெய்ய வேண்டிய அசைன்மெண்ட்டோடு அந்தப் பெரியவரை அணுகுகிறார்கள். அவனது படத்தைப் பார்த்ததும் சொல்வார்,
“அய்யோ, இந்தப் பையன எனக்குத் தெரியுமேப்பா. லா காலேஜ்ல படிக்கிறான். நல்லப் பையனாச்சே. நான் வேணா ஒரு தரம் பேசிப் பார்க்கவா?”
ஆக, அவருக்கும் கொலை செய்வதில் தயக்கமெல்லாம் இருக்கவே இருக்கிறது. பிறகு ஏன் கொலகளை செய்துகொண்டே இருக்கிறார்?
அதற்கும் அந்தக் காட்சியிலேயே விடை இருக்கிறது.
அவர் அந்த அசைன்மெண்டுக்கு ஒத்துக் கொண்டதும் பணம் கொடுக்கிறார்கள். வாங்க மறுக்கிறார். இதை குலதெய்வத்துக்கு செய்யற வேலையா நினைத்து செய்வதாகக் கூறுகிறார்.
இந்த இடம்தான் மிக நுட்பமான, இதுவரை எந்தப் படத்திலும் இவ்வளவு அழுத்தமாக சொல்லப்படாத விஷயம்.
கொஞ்சம் வெளியே இன்னொரு காட்சிக்குப் போய் வருவது இந்த நுட்பத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாய் புரிய வைக்கும் என்று நம்புகிறேன்.
பரி பேருந்தில் ஏறுகிறான். அந்தப் பெரியவருக்குப் பக்கத்தில் இருக்கை இருக்கிறது. கூப்பிட்டு அமரச் சொல்லி அவனோடு பேச்சுக் கொடுக்கிறார். அவனது ஊரைக் கேட்டதும் அவன் ஒரு தலித் பையன் என்பதைத் தெரிந்து கொள்கிறார். அடுத்த கணமே ஒருவித அசூசையோடு எழுந்து கொள்கிறார்.
அவனைக் கொன்றுபோட சொல்கிறபோது அவனை நல்ல பையன் என்கிறார்.
ஆக கொலை என்பது அவர் ஆசைப்பட்டோ, பணத்திற்காகவோ செய்வதில்லை.
அவருக்குள் விதைக்கப்பட்டு பெரிதாய் வளர்ந்து கிடக்கும் தூய்மைவாதமே அவரை இத்தனைக் கொலைகளை செய்ய வைக்கிறது. தங்களது குலப் பிள்ளை தலித் பிள்ளையைத் திருமணம் செய்தால் தனது ஜாதி அசுத்தப்பட்டு விடும். அது குல தெய்வத்திற்கு அசிங்கம். சாமி அசிங்கப்படுவதை விட ஆணவக் கொலை செய்து அதைத் தடுத்துவிடுவது உத்தமம். தனது குடும்பத்தினால் தமது தெய்வமும் சாதியும் அச்சிங்கப்படுவதை தம்மால் தடுக்க முடியாவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்வதுதான் பரிகாரம் என்று அப்பாவி சாதி இந்துக்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது.
தூய்மைவாதம் என்பது ஒரு சித்தாந்தம். அது அசிங்கமானதொரு சித்தாந்தம். அதனோடு சண்டைபோடுவதும் மாற்றுவதும்தான் சாதி அழிப்பின் முதல் வேலையாக இருக்க முடியும் என்பதை இந்தப் படம் தெளிவாக எடுத்து வைக்கிறது.
பரியின் தந்தையை எவ்வளவு உசிரோட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். அவரது முதல்வரோடான சந்திப்பு அருமை. அதுவும் போனதடவை வேறொரு மனிதனை அப்பா என்று அழைத்து போயிருக்கிறான் என்பதை முதல்வர் சொன்னதுன் அதை எதிர்கொள்கிற அவரது பாங்கும், வெளியே வந்த்தும் தனது மகனிடம் “பயந்துட்டாங்கப்பா” என்று கூறும் வெகுளித்தனமும், அதை ஒரு புன்னகையோடு பரி எதிர்கொள்கிற இடமும் என்னை கலங்க வைத்தன மாரி.
விசாரனை முடிந்ததும், ”படிச்சு பெரிய ஆளா வரனும். எல்லோரும் உன்னை மதித்து தொழனும். போ, ஏதாவது செய்” என்று கல்லூரி முதல்வர் சொல்வது எனது குரலும் மாரி. என் பள்ளிக் குழந்தைகளை நான் அப்படித்தான் வளர்க்கிறேன்.
இதை சொன்னதும் பயந்துபோன பேராசிரியை இந்த வழிகாட்டுதலால் அவன் ஏதாவது தப்பு செய்துவிடப் போகிறான் என்று அச்சப்படுகிறார். அப்போது சன்னமாய் ஒரு உரையாடலை வைத்திருப்பீர்கள்,
“அவங்கள உங்களால திருத்த முடியுமா?”
முடியாது என்பதாக அந்தப் பேராசிரியர் தலை அசைப்பார்.
“அப்புறம் இவன மட்டும் ஏன் தடுக்கிறீங்க? தற்கொல செய்துக்கறதவிட அவன் போராடிச் சாகட்டும்”
செம, செம, செமடா மாரிப்பையா.
பரி முன்னால் உட்கார்ந்திருப்பான். அந்தப் பையன் அது தன் இடம் என்பான்.
“பட்டா போட்டிருக்கா?” என்பான் பரி.
“ஆமா” என்பான் அந்தப் பையன்
இது அந்தப் பையனுக்கும் பரிக்கும் இடையேயான உரையாடல் அல்ல மாரி. ஆதிக்க சாதிக்கும் ஒடுக்கப்பட்ட சாதிக்கும் இடையேயான உரையாடல்.
”நீ போய் பின்னாடி உட்கார்” என்பான் பரி
“நீ சொல்லி நான் கேட்கனுமோ?” என்பான் அந்தப் பையன்.
அந்தக் கேள்வி ஆதிக்க சாதியின் திமிர்க் கேள்வி
“அப்ப நீங்க சொன்னா மட்டும் நாங்க ஏன் கேட்கனும்” என்ற ஒடுக்கப்பட்டத் திரளின் கோவம் கலந்த பதிலாகவே இந்தப் படத்தைப் பார்க்க முடிகிறது.
அவளது தந்தையிடம்,
“அவ ரொம்பக் கொடுத்து வச்சவ சார். அவ நெனச்சத எல்லாம் எங்க வேணாலும் எப்ப வேணாலும் பேச முடியுது. ஆனா எனக்கு அப்படி இல்ல சார்” என்பான்.
“நீங்க நீங்களா இருக்கற வரைக்கும் நான் நாயாதான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிற வரைக்கும் மாறாது சார்”
என்பது ஆதிக்க சாதியோடான நமது ஒரு வகை உரையாடல் மாரி.
ஆதிக்க சாதியை எதிர்கொள்ளும் போது
1) நாம வாங்கிவந்த எழுத்து இது என்று எதையும் தாங்குவது என்பது ஒரு நிலை
2) அடிச்சா திருப்பி அடிப்பேன் என்பது ஒரு நிலை
3) அவனோடு நியாயத்தை உரையாட முயல்வது என்பது ஒரு வகை
4) தவிர்க்கவே இயலாதபோது திருப்பியும் அடித்துக் கொண்டே அவனோடன உரையாடலையும் தொடர்வது என்பது அபூர்வமான நிலை
2) அடிச்சா திருப்பி அடிப்பேன் என்பது ஒரு நிலை
3) அவனோடு நியாயத்தை உரையாட முயல்வது என்பது ஒரு வகை
4) தவிர்க்கவே இயலாதபோது திருப்பியும் அடித்துக் கொண்டே அவனோடன உரையாடலையும் தொடர்வது என்பது அபூர்வமான நிலை
அதை நீங்கள் சரியாய், மிகச் சரியாய் கையாள்வதாகப் படுகிறது.
பள்ளித் தேர்வறைக் காட்சியில் இன்னும் கவனமாய் இருந்திருக்கலாம். சாதியை ஒழிப்பதும் பொதுக் கல்வியைக் காப்பாற்றுவதும் மிக முக்கியம். பொதுப் பள்ளிகளில் இப்படித்தான் தேர்வு நடக்கும் என்று சித்தரிப்பது பொதுப்பள்ளிகளை மூடிவிட வேண்டும் என்று துடிக்கும் ஆளும் வர்க்கத்திற்கு வரமாய் அமையும்.
நினைத்துப் பாருங்கள் சாதி ஒழிந்து பொதுப் பள்ளிகள் இல்லாத நிலை வந்தாலும் பாதிக்கப்படுவது நாம்தான்.
போக,
நீலமும் கருப்பும் சிவப்பும் இணைந்து களப்பட்டால்தான் நகர முடியும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது இந்த அப்பனின் “நேயர் விருப்பம்”
மாரிக்கும் பேத்திக்கும் என் அன்பும் முத்தமும்,
மருமகளுக்கு என் அன்பும் வாழ்த்தும்
அன்புடன்,
இரா.எட்வின்.
இரா.எட்வின்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்