Thursday, November 1, 2018

4 ரூபாய் கீரைக்கட்டின் விலையை 6 ரூபாய்க்கு

அவர்கள் இருவரையும் நண்பர்கள் என்று விளிப்பது கொஞ்சம் அதிகம் என்று யாருக்கேனும் தோன்றினால் இரண்டு வணிகர்கள் என்று அவர்களைக் கொள்ளலாம். அதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஒருவர் ராமநாதபுரத்திலும் மற்றவர் மதுரையிலும் கடைகளை கட்டமைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள் என்று கொள்வோம்.
ராமநாதபுரத்தில் பனை சம்பந்தமான பொருட்கள் உற்பத்தியாகின்றன என்றும் மதுரையில் காய்கறிகள் அதிகமாய் விளைகின்றன என்றும் கொள்வோம். ராமநாதபுரத்துக்காரர் தான் ஏற்கனவே விற்கும் பொருட்களோடு காய்கறிகளையும் விற்க ஆசைப்படுகிறார். மதுரைக்காரர் தான் ஏற்கனவே விற்கும் பொருட்களோடு பனை பொருட்களை விற்க ஆசைப்படுகிறார்.
அந்த இரண்டு பேருக்குமிடையே இயல்பாகவே ஒரு ஒப்பந்தம் ஏற்படுகிறது.
மதுரைக்காரர் காய்கறிகளை வாங்கி இந்த ராமநாதபுரத்திற்கு அனுப்பிவிட வேண்டியது. காய்கறிகள் வரும் அதே டாடாஏசில் ராமநாதபுரத்துக்கு பனை பொருட்களை வாங்கி அனுப்பிவிடுவது. ஒரே வாடகையில் இருவரும் பயனடையத் தொடங்கினார்கள்.
இவர்கள் இருவருக்குமிடையேயான வியாபார ஒப்பந்தம் நாளுக்கு நாள் விரிவடைந்தது. அது இயல்பானதும்கூட. இவர் மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு தேவையான இன்னும் அதிகப் பொருட்களையும் அவர் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு இன்னும் அதிகப் பொருட்களையும் வாங்கி அனுப்புகின்றனர்.
இருவருக்கும் வியாபாரம் பெருகியது.
ஒருக்கட்டத்தில் ராமநாதபுரத்துக்காரர் வருத்தத்தில் சாய்கிறார். காரணம் இவர் மதுரைக்கு அனுப்பும் பொருட்களின் விலையைவிட அங்கிருந்து இவர் வாங்கும் பொருட்களின் விலை அதிகமாய் உள்ளது. ஒரு கட்டத்தில் அவருக்கு கோவம் கோவமாய் வருகிறது.
மதுரைக்காரருக்கு இந்த ஒப்பந்த்தின் மூலம் தன்னைவிட லாபம் கிடைப்பதாக நினைக்கிறார். இதனால் இந்த வியாபாரத்தில் ஒரு பற்றாக்குறை இவருக்கு ஏற்பட்டிருப்பதாக இவர் கருதுகிறார்.
இவர் கொஞ்சம் நிதானமாகவும் நியாயமாகவும் யோசிப்பவராக இருந்தால் இரண்டு காரியங்களை செய்திருக்கலாம்.
1) இன்னும் அதிகமான பொருட்களை வாங்கி இவர் மதுரைக்கு அனுப்புவதன் மூலம் லாபத்தை அதிகரித்திருக்கலாம்
2) மதுரைக்காரர் அடையும் லாபத்தைவிட இவருக்கு லாபம் கூட இருக்க வேண்டும் என்று நினைத்தால் அங்கிருந்து வாங்கும் பொருட்களின் அளவை குறைத்திருக்கலாம்
இவர் நிதானமாக யோசிப்பவரும் இல்லை நியாயமாக யோசிப்பவரும் இல்லை.
அவரைவிட நமக்கு 40 ரூபாய் குறைவாக லாபம் என்ற வகையில் விழும் 40 ரூபாய் பற்றாக்குறையை மதுரையில் இருந்து வந்திருக்கும் இருபது கீரைக்கட்டுகளின் விலையை கட்டுக்கு இரண்டு ரூபாய் கூட்டி பற்றாக்குறையை நிரவ முயற்சிக்கிறார்.
இவரது இந்த செயலை பார்க்கும் சிறு குழந்தைகூட அநியாயம் என்று சொல்லும்.
இப்போது ராமநாதபுரம் என்பதை அமெரிக்கா என்றும் மதுரையை சீனா என்றும் கொஞ்சம் மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
ராமநாதாபுரம் வியாபாரியை இயல்பாகவே திரு ட்ரம்ப் என்று இப்போது உங்களால் யூகித்துவிட முடியும்.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களால் 40,000 கோடி டாலர் அளவிற்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக ட்ரம்ப் உணர்கிறார். அதை ஈடுகட்ட வேண்டும் என்று யோசிக்கிறார். இதிலும் தவறெதுவும் இல்லை. இன்னும் சரியாக சொல்வதெனில் இதுதான் சரியும்கூட.
அதற்கு இவர் என்ன செய்திருக்க வேண்டும்
1) ஏற்றுமதியை அதிகரித்திருக்க வேண்டும்
2) அல்லது இறக்குமதியை குறைத்திருக்க வேண்டும்
இரண்டையும் செய்யாமல் ராமநாதபுரத்துக்காரர் 4 ரூபாய் கீரைக்கட்டின் விலையை 6 ரூபாய்க்கு உயர்த்தியதைப் போல இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை அதிகரித்து தமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய 40,000 கோடி டாலர் பற்றாக்குறையை ஈடுகட்டுகிறார்.
பேச வேண்டியவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். நம்மால் முடியவில்லை.
#சாமங்கவிய 59 நிமிடங்கள்
31.10.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...