Saturday, June 18, 2011

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

”வணக்கம் எட்வின் சார்”

பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் அவர்கள் அறைக்குள் நுழைய இருந்த என்னை இந்தக் குரல் கொஞ்சம் பின்னுக்கு இழுத்தது. திரும்பிப் பார்த்தால் வழக்கமான புன்னகையோடு பட்டத்திப் பாளையம் சிவமுத்து சார். 

“ வந்த இடத்துல உங்கள சந்திப்பேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல. ரொம்ப சந்தோசமா இருக்குங்க சார்”

பக்கத்தில் ஒரு பதினைந்து அல்லது பதினாறு மதிக்கத் தக்க குழந்தை நின்றிருந்தான். யாரென்று புரியவே, அவனை அப்படியே இழுத்து அணைத்துக் கொண்டேன்.

 நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஆயிரத்திப் பதிமூன்று மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான் என்று தெரியும். 

“என்ன சாமி ஆயிரத்திப் பதிமூன்றா?”

புன்னகையும் வெட்கமும் போட்டிப் போட்டுக் கொண்டு வெளிக் கசிய அப்படியே நெளிந்தான் பிள்ளை.

“ ரொம்ப நல்ல மார்க்குப்பா. மேல என்ன செய்யப் போற,?” என்று அவன் தலையைக் கோதிய வாறே கேட்டேன். அதற்குள் நண்பர் சிவக்குமார் வந்து விடவே,

“சிவா, இவங்க சிவமுத்து சார். கார்மேகம் சாரோட ஊர். சாருக்கு தம்பி முறை வேண்டும். சாரோட மனைவிதான் பட்டத்திப் பாளையம் பள்ளியின் தலைமை ஆசிரியை.” 

அறிமுகம் செய்து வைத்தேன்.

பட்டத்திப் பாளையம் பள்ளியைப் பற்றி ஏற்கனவே அவரிடம் நிறையவே பேசியிருக்கிறேன். மட்டுமல்ல அந்தப் பள்ளி குறித்து நான் ”கல்கி” யில் எழுதிய கட்டுரையையும் அவர் வாசித்திருந்தார். எனவே இதைக் கேட்ட மாத்திரத்தில் சிவாவின் கண்களில் ஒரு மின்னல் வெட்டிச் சென்றதை என்னால் பார்க்க முடிந்தது.

இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

”அந்தப் பள்ளியைப் பார்ப்பதற்காகவே உங்க ஊருக்கு வரணும்னு ஆசை சார். ஒரு முறை அவசியம் வரணும். அந்தப் பள்ளியைப் பற்றி எட்வின் நிறைய சொல்லியிருக்கிறார்.  உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம் சார்,” என்றவர் , “ஆமாம் பையன் என்ன படிக்கிறான்?” என்றார்.

”இப்பதான் ப்ளஸ் டூ முடிச்சிருக்கான்”

” மேற்கொண்டு என்ன படிக்கிறதா உத்தேசம்?” 

அங்க சுத்தி இங்க சுத்தி நான் கேட்டிருந்த கேள்விக்கு மிக அருகே எங்களைக் கொண்டு வந்து நிறுத்தியவர்,  ‘சார், W2 ரவிகிட்ட ஒரு சின்ன வேல இருக்கு.  போனதும் வந்துடறேன். நீங்க கொஞ்சம் சாரோடப் பேசிட்டு இருங்க. வந்த உடனே சுப. வீ அய்யாவப் பார்க்கப் போயிடலாம்’ (என் தங்கையின் திருமணம் சுப.வீ அவர்கள் தலைமையில் நடக்க இருந்தது. அழைப்பிதழை அவருக்கு கொடுக்க வேண்டியிருந்தது.)

அவர் போனதும் சிவசாமி சாரைப் பார்த்தேன். எனது பார்வை மீண்டும் அதே கேள்வியைக் கேட்கவே,

”கோவை PSG யில் பிசிக்ஸ் கிடைச்சிருக்கு. லயோலா கிடைச்சா நல்லா இருக்கும்னு தோனுச்சு. அதான் முயற்சி செய்து பார்க்கலாமேன்னு வந்திருக்கோம்”

“இந்த மார்க்குக்கு கண்டிப்பா கிடைக்கும். ஏன் சார், மெடிக்கல் முயற்சி செய்யலையா?”

“கட் ஆஃப் கொஞ்சம் குறையுதுங்க சார்”

“ நிர்வாகக் கோட்டாவில் முயற்சி செய்யலாமே?”

கோடிக் கணக்கில் சொத்து அவர்களிடம் உண்டு என்பதாலும், மேலும் ஒரே பையன் என்பதால் செலவு செய்து படிக்க வைப்பது அவர்களுக்கு ஒரு விஷயமே இல்லை என்பதாலும் அப்படிக் கேட்டேன்.

“பதினஞ்சு நாளா நானும் அவங்க அம்மாவும் கிடந்து உழுந்து புரண்டு பார்த்துட்டோம். கொஞ்சம் கூட இறங்கி வரவோ, இரக்கப் படவோ மாட்டேங்கறான் சார்”

“கார்மேகம் சாரிடம் சொல்லிப் பேசச் சொல்லிப் பார்க்கலாமே?”

“ அவர் வீட்டில்தான் ரெண்டு நாளா தங்கியிருக்கிறோம். அவரும் ஆன மட்டும் தலையால தண்ணிக் குடிச்சுப் பார்த்துட்டார். அசைவனாங்குறான்.”

தங்கள் கனவு உடைந்ததன் வலி அவரது முகத்திலும் குரலிலும் தெரிந்தது.

”என்ன செல்லம், மருத்துவம் எவ்வளவு ஒசத்தியான படிப்பு தெரியுமா?” என்று முடிப்பதற்குள் சிவமுத்து சார், “ நான் கொஞ்சம் ஒதுங்கிக்கிறேன். ஒங்ககிட்டயாவது கொஞ்சம் மசியறானான்னு பார்ப்போம்” என்றவாறே ஒதுங்கினார்.

இவங்களாவது நல்லது செய்ய மாட்டாங்களா என்று ஒவ்வொரு முறையும் மாறி மாறி ஓட்டுப் போடும் தமிழ் மக்களின் கண்களில் வழியும் கனவினைப் போல இவனாவது பிள்ளையை மசிய வைத்துவிட மாட்டானா என்ற ஏக்கத்தை அவரது விழிகளில் பார்க்க முடிந்தது.

அவனை இன்னும் கொஞ்சம் இறுக்கி அனைத்தவாறும், தலையைக் கோதியபடியுமாய் அருகில் இருந்த இருக்கைகளில் ஒன்றில் அவனை அமரச் செய்து இன்னொன்றில் நான் அமர்ந்து கொண்டேன்.

 “ஏம்ப்பா, ஏன் மருத்துவம் வேண்டாங்குற?”

“வேண்டாங்க மாமா”

“மருத்துவம் பிடிக்கலையா?”

“அது மேல வெறிகொண்ட ஆசையே உண்டு”

அப்படியே ஆடிப் போனேன் ஆடி.

“ அப்புறம் என்னாப்பா, இவ்வளவு ஆசை இருக்கே. பேசாம நல்ல காலேஜா பார்த்து சேர்ந்துட வேண்டியதுதானே?”

”வேண்டாங்க மாமா”

வேதாளம் இறங்குகிற மாதிரி தெரியவே இல்லை. இருந்தாலும் நம்பிக்கை இழக்காதவனாய்,

“கஷ்டமா இருக்கும்னு பயப்படறியா?”

”அய்யய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க.  இன்னும் சொல்லப் போனா பிசிக்ஸவிட மெடிக்கல் கிடச்சா அத ரொம்ப நல்லாவே படிப்பேன். ராப் பகலா கண்ணு விழிச்சுப் படிச்சதே எப்படியாவது டாக்டராகனும்னுதானே”

சில நேரங்களில் மன்மோகன் சிங் பேசினாலே புரிகிறது. பிள்ளையோ ஆறேழு மன்மோகன் சிங்குகளாய் குழப்பினான்.

“அப்புறமென்ன?”

”கிடச்சாப் படிக்கலாம்.”

அப்பாடா ஒரு வழியாய் மசிஞ்சானே பிள்ளை என்று நினைத்தவனாய், “கிடைக்கும், நிச்சயம் கிடைக்கும்” என்றேன்.

“  நிச்சயமாய் கிடைக்காதுங்க.”

“ அதுக்கு நாங்களாச்சு.  அண்னாமலை போதுமா?, இல்லை வேறு ஏதாவது காலேஜ் வேணும்னாலும் சொல்லு. மத்தத நாங்க பார்த்துக்கறோம்”

ஒரு வழியாய்ப் படிந்து போனதாகவே அந்தப் புள்ளியில் எனக்குப் பட்டது.

“பேமெண்ட் சீட்லயா மாமா?”

“ஆமாம்”

“ அதுதான் வேண்டாங்குறேன்.”

காசு அதிகமாய் செலவாயிடுமோன்னு பயப்படுகிறான் போல என்று எண்ணினேன்.

”சொத்து கறைஞ்சுடுமோன்னு பயப்படுறியாப்பா. கவலையேப் படாத. சம்பாரிச்சுக்கலாம்.”

“அப்ப சம்பாரிக்கத்தான் எல்லோரும் என்னை மருத்துவம் படிக்கச் சொல்றீங்களா ?”

என்ன செய்வதென்றே தெரியவில்லை. எல்லாக் கேள்விகளுக்குமான பதிலும், எதற்கான கேள்விகளும் அவனிடம் ஏராளம் இருக்கின்றன. ஏதாவது கேட்டால் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தன் கேள்விகளாலும் பதில்களாலும் வளைத்துக் கவ்விப் பிடித்து விடுகிறான் நம்மை.

“ ஆனாலும் மருத்துவம் என்பது சேவை இல்லையா?”

“பிசிக்ஸ் படிச்சுட்டுக் கூட சேவை செய்யலாம் மாமா”

பிடி கொடுக்கவே மறுக்கிறான்.

“ அப்ப மெடிசின் பிடிக்கல, அப்படித்தானே?”

முனை மழுங்கிய மொக்கை என்று தெரிந்தும் வேறு வழி இன்றி கேட்டேன்.

”இல்லீங்க மாமா, நான் எடுத்த மார்க்குக்கு மெடிசன் கிடைத்தால் எல்லோருக்கும் இனிப்பு கொடுத்து சந்தோசமா படிப்பேன். ஆனா தாத்தாவோட காசுக்குத்தான் அது கிடைக்கும்னா வேண்டாங்க மாமா.  அம்மாவும் அப்பாவும் உங்களப் பத்தி பெருமையா நிறைய சொல்லியிருக்காங்க. நீங்களே படிப்ப விலைக்கு வாங்க சொல்றதுதான் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்குங்க மாமா”

ஓங்கி அறைந்தது போல் இருந்தது.  இழுத்து இன்னும் இறுக்கமாக அவனை அணைத்துக் கொண்டேன். இன்னும் அதிகமான வாஞ்சையோடு அவன் தலையை வருடிக் கொடுத்தேன். என் கண்கள் சன்னமாய் சுரப்பது மாதிரிப் பட்டது.

“ஏதும் தப்பா பேசிட்டேனா . அப்படின்னா மன்னிச்சுக்கங்க மாமா.”

“ இல்லப்பா. சத்தியமா இல்ல.  நீ நல்லா வருவ” அவன் கன்னத்தைக் கிள்ளிவிட்டு வந்திருந்த சிவக்குமாரோடு புறப்பட்டேன்.

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

எப்போதும் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன்

“எடுத்துக் கொள்வதற்கு ஏராளமாய் மேன்மைகள் நம் குழந்தைகளிடம் இருக்கின்றன.17 comments:

 1. அன்புள்ள எட்வின்...

  என்னுடைய மகன் மேனிலைப் பள்ளித் தேர்வில் 1046 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். அவனை மருத்துவம் படிக்கவைக்க எனக்கு ஆசை. அவனுக்கும் ஆசை. ஆனால் கட்ஆப் மதிப்பெண்ணில் கிடைக்காது என்பதால் வந்தால் சேர்க்கலாம் என்று இருந்துவிட்டோம். என்னுடைய மானனாரும் என்னுடைய மனைவியின் தங்கையும் லட்சக்கணக்கில் பணம் தருவதாக சொன்னார்கள். கடைசிவரை வற்புறுத்தினார்கள். என் மகன் மறுத்துவிட்டான். அவன் சொன்ன காரணம் இதுதான்.

  கடைசிவரை உறுத்தும். எனக்கு வேண்டாம். என்னுடைய தந்தை வருமான்த்தில் என்ன படிக்கவேண்டுமோ அதைப் படிக்கிறேன் கடைசிவரை நான் உட்பட வற்புறுத்தியும் மருத்துவம் வேண்டாம் என்று தற்போது பயோடெக்னாலஜி படித்து வருகிறான். உங்கள் கட்டுரை என் மகனிடம் தாங்கள் உரையாடியதுபோல் இருந்தது. நன்றி. எனக்கு என் மகனை நினைத்து இப்போதும் பெருமையாக இருக்கிறது. குழந்தைகள் பொய் பேசமாட்டார்கள் என்பது மட்டுமல்ல. வாழ்க்கையில் தெளிவாகவும் முடிவெடுக்கிறார்கள் என்பதுதான். நன்றிகள்.

  ReplyDelete
 2. மானனார்....மாமனார் என்று திருத்தி வாசிக்கவும் நன்றி.

  ReplyDelete
 3. அருமையான உரையாடல் சார்! உங்களின் விசாரனையில் பணம்தான் சீட்டு என்ற அனாவசியமும், சிறுவனின் பதிலில் எதிர்கால தலைமுறயின் மீது ஒரு நம்பிக்கையும் உண்டாகிறது!

  ReplyDelete
 4. மிக்க நன்றி ஹரணி

  மிக்க நன்றி தோழர் வேடியப்பன்

  ReplyDelete
 5. மிக்க நன்றி ஹரணி

  மிக்க நன்றி தோழர் வேடியப்பன்

  ReplyDelete
 6. வணக்கம் ஐயா,
  திருமண வீடெல்லாம் எப்படி?
  நீண்ட நாளின் பின்னர் வந்திருக்கிறீங்க.

  ReplyDelete
 7. இன்றைய காலத்தில் பெற்றோரைப் புரிந்து கொண்ட ஓர் குழந்தையின் உணர்வினைப் பதிவாக்கியிருக்கிறீங்க.
  உரையாடல் பதிவு அற்புதாமக அமைந்திருக்கிறது.

  ReplyDelete
 8. nalla pathivu.

  Since u r writing abt real people, it s not possible for me to pass my comments on their likes and dislikes.

  If u put up this post on public domain to invite comments from unknown and known readers, pl bear in mind that u shd not reveal their identitites.

  If u cant do that, then restrict viewership among ur family and friends only.

  In which subject r u a teacher, Edy ? Tamil ?

  ReplyDelete
 9. கண்கள் கலங்கி விட்டது. பிள்ளைகள் எத்தனை தெளிவாக சிந்திக்கிறார்கள். பேமெண்ட்ல சீட் வேண்டாம், கட் ஆஃப் கம்மியா இருக்கு..... ஆனால் வெறி மெடிசின்ஸ் படிக்கனும்னு.

  கண்டிப்பா பிள்ளை தான் கண்ட கனவை சாதித்தே தீருவான், எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆசிகள் பிள்ளைக்கு.

  எதிர்கால இந்தியா நல்முத்து வைரங்களை மட்டுமே உள்ளடக்க போகும் அற்புத பொக்கிஷமா மிளிர போகுது....

  அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் எட்வின்.

  ReplyDelete
 10. ஹரணி சார்,

  உங்க மகனுக்கு என்னுடைய சல்யூட் சார்.. பிள்ளைகள் எத்தனை தீர்க்கமா சிந்திக்கிறாங்கப்பா... பெருமையா இருக்கு எனக்கு.. உங்க பிள்ளைக்கு என் ஆசிகளும் அன்புகளும் சார்... கண்டிப்பா உங்க பிள்ளை வாழ்க்கையில் முன்னேறுவார் தன்னுடைய முயற்சியால்...

  ReplyDelete
 11. மிக்க நன்றி நிரூபன். கொஞ்சம் கடுமையான வேலை. விரைவில் நாற்று முழுமையும் படித்துவிட வேண்டும்

  ReplyDelete
 12. அந்த பிள்ளையை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. இந்த பதிவு நிறைய பேரைச் சென்றடைந்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 13. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. மிக்க நன்றி மிருணா. அவனைத் தொட்டுப் பார்த்திருக்கிறேன் என்பதில் கூட ஒரு சந்தோசம் இருக்கு தோழர்

  ReplyDelete
 15. Rathnavel said...
  அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  June 23, 2011 6:14 AM


  மிக்க நன்றிங்க அய்யா

  ReplyDelete
 16. enn jaathidaa raja enn jaathi....romba perumapadran intha payana nenachu....pasanga eppovome correct....parents need to change-:)

  ReplyDelete
 17. சரிதான் தோழர். மிக்க நன்றி

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...