Friday, November 8, 2013

10 வெளிச்சம் மாணவர்கள்எனது தாத்தாவின் தந்தை பெயர் எனக்குத் தெரியாது. அதாவது எனது தந்தையின் தாத்தா பெயர் எனக்குத் தெரியாது.

எனது தந்தையின் கரும காரியத்தில் அமர்ந்திருந்த என் தம்பியை புரோகிதர் என் தாத்தாவின் அப்பா பெயரைக் கேட்ட போது அவனுக்குத் தெரிய வில்லை. எனக்கும் தெரியாது என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இந்தப் புள்ளியில் அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த கிஷோருக்கு எனது தாத்தாவின் பெயர் தெரிய வில்லை. அதாவது அவனது அப்பாவின் தாத்தா பெயர் தெரிய வில்லை. எனது தந்தையின் தாத்தா பெயரை சரியாய் சொன்ன எனது சித்தப்பாவிற்கு அவரது அப்பாவின் தாத்தா பெயரை சத்தியமாய் தெரியாது.

ஆக, யாருக்கும் தனது அப்பாவின் தாத்தா பெயர் தெரியாது என்பது தெளிவாகிறது. விதிவிலக்குகள் இருப்பின் என் மீது வழக்குப் போடலாம்.

1965 இல் இறந்த, அதாவது நான் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்த எனது கொள்ளுத் தாத்தனின் பெயர் தெரியவில்லை. ஆனால் நான் பிறப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் செத்துப் போன பாரதியின் தகப்பன் பெயர் எனக்கு அத்துப் படி. அது ஏன்?

ஏன் எனில் பாரதி எனது மண்ணின் மகாகவி. ஏன் அவன் மகாகவி? அவனை ஏன் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்?

என்னைப் பொருத்தவரை அவனை நான் நினைத்துக் கொண்டிருப்பதற்கும், அவனை மகாகவி என்று அழைப்பதற்கும் ஒரே காரணம்,

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்என்ற அவனது ஒரு வரிதான்

இந்த ஒற்றை வரியை ஒரு இயக்கமாகவே  மாற்றியிருக்கிறார் செரின். அந்த இயக்கத்தின் செயல்பாடுகளை எடுத்துப் போகவும் கல்வி குறித்து சிந்திப்பவர்களை செயல்படுபவர்களைக் கொண்டாடவும் அது குறித்த ஆக்கங்களை கொண்டு செல்லவும் அவரால் ஆரம்பிக்கப் பட்ட வலைதான் “ வெளிச்சம் மாணவர்கள்”

“ கல்வி என்பது கடைச் சரக்கல்ல. அது சமூக மாற்றத்திற்கான ஆயுதம்” என்கிறது இந்த வலை.

வெளிச்சம் மாணவர்கள் என்ற அமைப்பும் வலையும் வேறு வேறாகத் தெரியவில்லை.  தங்களது கள செயல்பாட்டினை, போராட்டங்களை கருத்துத் தளத்தில் விவாதிக்கவும் வெகு சனத்திடம் கொண்டு செல்லவுமான ஒரு ஊடகமாகவே அவரது வலை இருக்கிறது.  இந்த ஊடகத் தளத்தில் விவாதித்து பயணித்து கண்டறியபட்ட போக்குகளை செயல் படுத்துகிற களமாகவே அவரது அமைப்பு இருக்கிறது.

சக மனிதனுக்காக கவலைப் படும் இயல்பான மனித குணத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடாகத்தான் இந்த வலையை செரின் பார்க்கிறார்.

எந்த ஒரு மாணவனும் பணம் இல்லை என்ற காரணத்திற்காக தனது கல்வியை இழந்துவிடக் கூடாது. அவனும் உயர் கல்வியை அடைய வேண்டும் என்பதே வெளிச்சம் மாணவர்களின் குறிக்கோள் என்று பிரகடனம் செய்கிறது இந்த வலை. அதிலும் முதல் தலைமுறை மாணவர்களையே இது இலக்காகக் கொண்டுள்ளது.

எல்லாம் கெட்டுக் கிடக்கு. நாம ஒரு ஆளு நெனச்சு என்ன ஆகப் போகுது என்கிற பொதுப் புத்தியைத் துப்பி தூரக் கிடாசியிருக்கிறது வெளிச்சம் மாணவர்கள்.

அஃப்ரியலூருக்கு அருகில் உள்ள பிச்சிக்குழி என்ற கிராமத்தைச் சார்ந்த செந்தில் என்கிற பையன் பள்ளியிறுதித் தேர்வில் நிறைய மதிப் பெண்களைப் பெற்றிருந்தும் பணம் இல்லாத காரணத்தினால் முந்திரிக்காட்டுக்கு வேலைக்குப் போவதாக செய்தித் தாளில் பார்த்த அந்தப் புள்ளியில்தான் “ வெளிச்சம் மாணவர்கள்” அமைப்பின் செயல் பாடு தொடங்குகிறது.

அந்த மாணவனது படிப்புக்கான ஏற்பாடுகளை செய்கிறார். அலைகிறார். காசு சேர்க்கிறார். படிக்க வைக்கிறார். அந்த செந்தில் இன்று ஓமனில் பணி புரியும் ஒரு இளம் விஞ்ஞானி என்பதை இந்த வலை நமக்குத் தருகிறது.

எந்த இடத்திலும் பணத்தை கையால் வாங்குவதில்லை. மாணவர்களுக்கான கல்வித் தொகையை காசோலையாக வாங்கி கல்லூரிக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

“ நல்லாப் படிடா. பிச்சை எடுத்தாவது உன்னைப் படிக்க வைக்கிறேன்” என்று பெத்தப் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் சொல்வது வாடிக்கை. ஆனால் 2009 ஆம் ஆண்டு போதிய ஸ்பான்சர்கள் கிடைக்காத காரணத்தால் அமைப்பினர் மக்களிடம் உண்டியலடித்து 48 மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டியுள்ளனர் என்பதை இந்த வலையில் பார்க்க முடிகிறது.

இவர்களது இந்தப் போராட்டத்தை தமிழக அரசியல், டெக்கான் குரோனிகல், NDTV போன்ற ஊடகங்கள் வெளிட்டதன் விளைவாகவே முதல் தலை முறைக்கான இலவச உயர் கல்விக்கான அரசானை வந்தது என்கிற தகவலை இந்த வலை தருகிறது. 

அதை செயல்படுத்த சொல்லி நீதி மன்றம் சென்று போராடி வென்ற கதை இதில் உள்ளது.

2012 ஆம் ஆண்டைய  “ child morality estimates" என்கிகிற யூனிசெப்பின் அறிக்கையை வேதனையோடும் வெளிப்படையாகவும் விவாதிக்கிறது இந்த வலையின் ஒரு பதிவு.

போதிய சத்துணவு இன்மையால் ஒவ்வொரு நாளும் 19000 இந்தியக் குழந்தைகள் செத்து மடிகின்றன ஒரு விவரத்தை அதில் பார்க்கிறோம்.2011 ஆம் ஆண்டு மட்டும் 15 லட்சத்து ஐம்பதாயிரம் இந்தியக் குழந்தைகள் சத்துணவு இன்மையால் இறந்திருக்கிறார்கள் என்ற தகவவலை நம்மைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனத்தில் அந்த ஆண்டு 2 லட்சத்தி நாற்பத்தி ஒன்பதாயிரம் குழந்தைகள் மட்டுமே ஒப்பிட்டுக் காட்டுகிறது அந்தப் பதிவு.

இதைப் படிக்க வேண்டியவர்கள் படித்தால் நலமாகும்.

“ உயர் கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம்” என்கிறது இந்த வலை. 

சபிக்கப் பட்ட ஒரு தேசத்தில் வாழ்கிற, எல்லோருக்கும் கல்வி என்கிற நியாயமான கோரிக்கையை ஏற்கிற யாவரும் பார்க்க வேண்டிய வலை. 

உறுதியாய் சொல்கிறேன் இந்த வலை நம்மை இயக்கப்பட உந்தித் தள்ளும்.  பாருங்கள்

http://velichamstudents.blogspot.in/

நன்றி : “ புதிய தரிசனம்”
 

 

15 comments:

 1. வெளிச்சம் மாணவர்கள் அமைப்பு மற்றும் வலையை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. வெளிச்சம் மாணவர்கள் அமைப்பின் பணி மகத்தானது அவர்களுக்கும் எனது நன்றிகள். தங்கள் தனித்துவமான வரிகள் அருமை. பகிர்வுக்கு நன்றி தோழரே.

  ReplyDelete
 2. வெளிச்சம் மாணவர்கள் வலை கல்விச் சமநீதியினை மட்டுமல்லாது இருண்டுவரும் சமூக சமநீதியினையினையும் வலியுறுத்தும் கருத்துகளைத் தாங்கி மேலும் ஒளி வீசிட வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. அய்யா வெளிச்சம் அவசியம் அறிய வேண்டிய தளம் நன்றி...

  உங்களின் தேடல் செம்மை...

  நன்றிகள் பல

  நோகாம நொங்கு தின்பது .... உங்களின் வலைக்காடு படிப்பது...
  தேடல்களை எளிமைப்படுதியிருக்கிறது.

  நன்றிகள்

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. velichamstudents அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 6. நல்லதொரு அமைப்பையும் வலையையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி! வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. வெளிச்சம் மாணவர்கள் அமைப்பின் செயல்பாடுகள் போற்றத் தக்கன. பாராட்டுவோம். வாய்ப்பிருக்கும்போது நாமும் உதவுவோம். நன்றி தோழரே

  ReplyDelete
  Replies
  1. தங்களது கருத்திற்கும், பெருந்தன்மைக்கும் மிக்க நன்றி தோழர்

   Delete
 8. வெளிச்சம் இன்னும் பல இருட்டைக் கடக்க இங்கே பல வெள்ளைச் சட்டைகள் நினைத்தால் இயலும். ஏனெனில் ஷெரினின் துயரம் அப்படி. ”பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்ற வாசகத்தை வாழ்க்கையாக்கிருக்கிற ஷெரினின் செயல்கள் பின்பற்ற வேண்டியவை. பதிவிற்கு நன்றி..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி செல்வ குமார்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...