இவனுக்கு அப்போது மனு என்று பேர்
சு.பொ. அகத்தியலிங்கம்
ஆசிரியர் : இரா.எட்வின்.
வெளியீடு : சந்தியா பதிப்பகம் ,
புதிய எண் 77 , 53 வது தெரு , 9வது அவென்யூ ,
அசோக்நகர், சென்னை - 600 083.
பக் :104 , விலை : ரூ.70.
சொந்த அனுபவத்தோடும் ஆழ்ந்த சமூக நோக்கோடும் சிறுகதை போன்ற வடிவத்தில் எளி மையாய் குட்டிகுட்டியாய் சிறிய இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு .ஆனால் ஒவ்வொரு கட்டுரையும் பெரிய கட்டுரைக்கான முன்னோட்டமாகவே உள்ளது. பெயரில் இருக்கிறது என்கிறகட்டுரை நுட்பமானது . “எனக்கும் அப்படித்தான் . பெயரில் என்ன இருக்கிறது என்றுதான் நினைத்தேன் .பெயர் ஒரு அடையாளம் . அவ்வளவுதான் . அதைத் தாண்டி அதில் என்ன இருக்கிறது என்றுதான் யோசிக்கத் தோன்றியது .
பெயருக்குள் சாதியும் , ஜாதி அரசியலும் , ஆணவமும் , அடக்குமுறையும் அடிமைத்தனமும் இருக்கிறது என்பதெல் லாம் தெரிந்திருந்தும் பெயர் குறித்து பெரிதாய் நான் எப்போதும் அலட்டிக் கொண்டதில்லை ”என் கிறார் எட்வின் . அதேசமயம் , நாத்திகரான தன்னை தன் பெயரால் கிறத்துவராக அறியப்படுவது குறித்து வேதனைப்படுவதும் ; பாரதிதாசன் என்ற பெயரைச் சுற்றி நடந்த விவாதத்தகவல்களும் ; “ஆக, பெயரில் இருக்கிறது”என்ற முடிவுக்கு எட்வினை மட்டுமல்ல நம்மையும் வரவைக்கிறது .
சமீபத்தில் நான் படித்த ஜூதான் ஸ எச்சில்] நாவலில் ஒரு தலித்தை அவரின் அல்லது அவர் தந்தையின் பெயரைக்கொண்டு சாதியை அறிந்து சிறுமைப்படுத்தும் சாதிய வெறியின் கோர முகம் பளிச்சென படம் பிடிக்கப்பட்டிருக்கிறது . இக்கட்டுரை அதை என் நினைவுத்திரையில் சுழலவிட்டது . குழந்தைகள் குறித்தும் , கல்வி குறித்தும் பேசும் பலகட்டுரைகள் நச்சென்று சமூகத்தின் மனச்சாட்சியைக் குத்திக் கிழிக்கவல்லவை . இவர் ஆசிரியராக இருப்பது - அதிலும் சமூக அக்கறை உள்ள ஆசிரியராக இருப்பது இந்நூல் நெடுக நறுக்குத் தெறித்தாற்போல் பதிவாகியுள் ளது .“ நதி பயணப்படும் பாதை ”எனும் கட்டுரையில் வீணாய் கடலில் கலக்கும் நீரைத் தேக்கிவைத் தால் என்ற சிந்தனையை குழந்தைகளோடு உரையாடி அவர்கள் வழி உணர்த்துவதும் ; ஓரிடத்தில் “ஏழாம் வகுப்புக் குழந்தைக்கு புரிகிற இந்த விஷயம் அரசுக்குப் புரியாதா ?” என குத்தீட்டியாய் கேள்வியை வீசி இருப்பதும் மிகக் கூர்மையானது .
“ இவனுக்கு அப்போது மனு என்று பெயர் ” என்கிற கட்டுரையில் அயோத்திதாசர் கூட்டிய கூட்டத்தில் சிவராம சாஸ்திரிக்கும் அயோத்திதாசப் பண்டிதருக்கும் நடந்த உரையாடல் வர்ணாஸ்ரமவாதிகளை சரியாக அடையாளம் காண உதவும். ஆதி முதல் சமச்சீர்கல்வி வழக்கு வரை அவர்கள் மனுவாகவே தொடர்வதை ; வார்த்தைகள் மாறினும் உள்ளடக்கம் மனுதர்மமாகவே இருப்பதை சாட்டையடியாய் விளக்கியுள்ளார். சமூக அக்கறையுள்ளோர் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
நன்றி: தீக்கதிர் 01.12.2013
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்