26.07.1947
Tuesday, April 23, 2024
காந்தியின் கடிதம்
Friday, February 9, 2024
இந்த அன்பிற்குரிய தோழர்கள் பட்டியல் என்பது என்னையும் சேர்த்துதான்
1929
மீரட் சிறை
மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தனித்தனிக் கொட்டடிகளில் அடைக்கப்படுகிறார்கள்
பிரிட்டிஷ் பேரரசரின் ஆட்சியை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த சதி செய்ததாக வழக்கு
இப்போது தேசப்பற்று
Sunday, January 28, 2024
வதந்திகளை கருத்தியல் ரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பதற்கு இந்த நூல் சாட்சி
கீழவெண்மணிக்கு சென்று அந்தப் போராட்டக் களத்தின் எஞ்சிய சாட்சியாக இருக்கும் தோழர் கோ.பழனிவேல் அவர்களை ஆளுநர் சந்திக்க இருப்பதாக செய்திகள் கசிவதையும்
Wednesday, January 17, 2024
ஒரு வழியாக எமது பதிப்பகத்தின் வழி என் எழுத்தும்
Friday, December 29, 2023
எங்கள் வீட்டின் முதல் பெண்ணெழுத்து
ரொம்ப நாளாச்சே புத்தகம் கொடுத்து
புக்பேருக்கு ஏதும் இருக்கா எட்வின்?
நாளாச்சுதான்
தரவேண்டும்தான்
ஆனால் மூன்று மாதங்களாகும்
புக்பேருக்கு?
பாப்பா
"அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது"
கொண்டு வந்திருக்கா
தலைப்பே மிரட்டுதில்ல
எங்கள் வீட்டின் முதல் பெண்ணெழுத்து
விழா எடுக்க வேண்டும்
15 வருஷமா எங்கள்மீது கல்லெறிந்து கொண்டே இருக்கிறார்கள்
கையிலிருப்பது கொண்டு தடுத்துக் கொண்டே இருக்கிறோம்
வாளும் கேடயமுமாய்
"மரிச்ஜாப்பி" பாரதி புத்தகாலயம் மூலமாக வருகிறது
கொண்டு சேர்க்க வேண்டும்
மால்கம் "பகை நன்று" தருகிறார்
கல்வி குறித்து அக்கறைப் படுபவர்கள் அவசியம் படிக்க வேண்டும்
இதுவும் பாரதி புத்தகாலய வெளியீடுதான்
அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது
மற்றும்
பகை நன்று
இரண்டின் அட்டைகளும் அவற்றிற்காகவும் பேச வைக்கும்
தோழர் Lark Bhaskaran மிரட்டி இருக்கிறார்
தருவோம் தோழர்
Saturday, December 23, 2023
திருந்துவது தவறு என நினைக்கும் ஏரியா இது
புத்தகங்களை ஆட்டையப் போடுவது என்பது நமக்கு அப்படிப் பிடித்தமான ஒன்று
Monday, February 3, 2014
குழந்தைகளை குழந்தைகளாக… விஷ்ணுபுரம் சரவணனின் ” வாத்து ராஜா” வை முன்வைத்து
எங்கிருந்து கடிக்கத் துவங்க வேண்டும் என்பதற்கு
கணிதங்கள் உண்டா, தெரியவில்லை
ஒரு அணிலிடமும் பறவையிடமும்
கற்றுக் கொள்ள
இருக்கிற விஷயங்களில்
பழம் கடித்தலும் அடங்கும்”
என்கிற கல்யாண்ஜியின் கவிதை வரிகளுக்கு இந்த நூலை அர்ப்பணித்திருக்கிறார். இதுவே வித்தியாசானமாதாக இருக்கிறது. இதுவரை யாரேனும் குறிப்பிட்ட கவிதை வரிகளுக்கு தங்களது படைப்பினை அர்ப்பணித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இல்லை எனும் பட்சத்தில் அந்த வகையில் இது முதலாவதாகக் கூட இருக்கலாம்.
டம்
டம்
டம் /”
நன்றி : காக்கைச் சிறகினிலே
Tuesday, January 29, 2013
வறண்ட குளத்திலும் கவிதை எடுக்கும் வைகறை
கடந்த ஒரு வார காலமாக எதற்குமே ஒத்துழைக்க மறுக்கிறது உடல்.
“பயணம் தவிர். ஓய்வெடு,” என்கிறார் மருத்துவர்.
“எனக்கப்புறமும் நாலு வருஷ சர்வீஸ் இருக்கு. இப்படி இருந்தா எப்படி? ஓய்வெடுத்து உடம்பைக் கவனி,” என்று உதைக்காத குறையாக கடிந்து கொள்கிறார் தலைமை ஆசிரியர்.
வேறு வழியில்லை. கட்டிலில் தலையணையை சுவரோரமாய் சாய்த்துப் போட்டு சாய்ந்து அமர்ந்தபடி வாசிப்பிற்காக வரிசைகட்டி நிற்கும் நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
தோழர் மோகனா அவர்கள் இரு சுமை நூல்களை கருணையோடு புத்தாண்டிற்கு பரிசளித்திருக்கிறார்கள். அந்தக் குவியலிலிருந்து தோழன் யூமா வாசுகி மிக அருமையாக மொழிபெயர்த்துள்ள “கருப்பழகன்” என்ற நாவலின் 29 வது அத்தியாயத்திற்குள் பயணித்துக் கொண்டிருக்கும்போதுதான் மேல்வீட்டு பாட்டி இன்றைய தபால்களைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
இரண்டு நூல்கள், மூன்று சிற்றிதழ்கள், கொஞ்சம் தபால்கள். அந்த இரண்டு நூல்களுள் ஒன்று தம்பி வைகறை அனுப்பியிருந்த அவரது “ நிலாவை உடைத்த கல்”
என்னமோ தெரியவில்லை, யூமாவின் நூலை ஓரம் மடக்கி வைத்துவிட்டு, தம்பி வைகறை அனுப்பியிருந்த “ நிலாவை உடைத்த கல்” கவிதை நூலை புரட்ட ஆரம்பித்தேன்.
தனது கவிதைகளைப் பற்றி வைகறை சொல்கிறார்,
“என் கவிதைகள் உங்களுக்கு
பெரிதாய் ஏதும்
கொண்டு வரவில்லை
அதிக பட்சமாய் கொடுக்கலாம்
ஒரு புன்னகையை
அல்லது
ஒரு துளி கண்ணீரை”
ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன், ஒரு நல்ல கவிதை இதை செய்தால் போதாதா? ஆனாலும் இவ்வளவு தன்னடக்கம் எல்லாம் தேவை இல்லைதான் வைகறைக்கு.
புன்னகையையும் கண்ணீரையும் தாண்டி அப்பழுக்கில்லாத, வாசனைத் திரவியம் ஏதும் அடிக்காமலே மணக்கும் குழந்தைமையை இவர் கூடை கூடையாய் கொண்டு வந்து கொட்டுகிறார். அது ஒன்றிற்காகவே இவரைக் கொண்டாடலாம்.
தனக்கேற்பட்ட அல்லது தான் கண்டுணர்ந்த ஏதோ ஒன்றின் குதூகலத்தை,எள்ளலை, வெட்கத்தை, கோவத்தை, ஏக்கத்தை, தவிப்பை, ஆதங்கத்தை, ஆவேசத்தை,வலியை, வெறுமையை, முழுமையை, அன்பை, காதலை, காமத்தை வாசகனுக்கு கடத்திக் கொடுக்குமானால் அது கவிதை. அதுவே கொஞ்சம் அழகியலோடு வருமென்றால் அது ஆஹா கவிதை.
வாசித்து முடித்துவிட்டு இன்னுமொருமுறை வாசித்தேன் ஏதேனும் “போல கவிதைகள்” இருக்கிறதா என்று. சத்தியமாய் எதுவும் தென்படவில்லை.
பொதுவாகவே குழந்தைகள் நம்மை ஜெயிக்கவே செய்வார்கள். குழந்தைகளிடம் தோற்பவர்கள் என்னை ஜெயிக்கிறார்கள். அதை ஒத்துக் கொள்பவர்கள் எனது மரியாதைக்கு உரியவர்களாகிறார்கள். குழந்தைகளிடம் தோற்பதை சந்தோஷித்து கொண்டாடுபவர்கள் என்னை அடிமை கொள்கிறார்கள்.
வைகறை எழுதுகிறார்,
“எப்படி சிரித்தாலும்
தோற்றுப் போகிறேன்
ஏதாவதொரு குழந்தையிடம்”
குழந்தைகளிடம் வெற்றிகரமாக உறவாட ஒருவன் கோமாளியாக வேண்டும். இது நான் வேலு சரவணனிடமிருந்து கற்றது.
ஒன்று புரிகிறது, ஒரு குழந்தையைப் போல் அழகாய் சிரிக்க இன்னொரு குழந்தையால்தான் ஏலும். இப்படி குழந்தைகளிடம் இந்த இளைஞன் தோற்கும் புள்ளியில்தான் நாம் அவனிடம் தோற்று அடிமைப் படுகிறோம்.
நம் பாட்டனும், தாத்தனும், அப்பனும் பார்க்காத வறட்சியை நாம் பார்க்கிறோம். விவசாயி, விவசாயத் தொழிலாளி உயிர்குடிக்கும் இந்த வறட்சி அறுவெறுப்பு எதனெனினும் அறுவெறுப்பாய் உள்ளது. பூமிதான் இப்படி வறண்டு கிடக்கிறதென்றால், வறட்சியை சொல்லும் படைப்புகளில் பெரும்பான்மை இதைவிடவும் வறண்டே வருகின்றன.
இந்த இளைஞன் வறட்சியின் கோரத்தை எழுதுகிறான்,
“கூழாங்கற்களில்
காய்ந்து கிடக்கிறது
கோடை நதி”
சொல்லுங்கள், அபூர்வமாகத்தானே யாராவது இப்படி எழுதுகிறார்கள்.
இன்றைய நதிகளின் அவலத்தை சொல்லும்போது,
“புன்செய்
வயல்கள் மட்டுமல்ல
ஆறுகளும்தான்” என்கிறான்.
புஞ்சை பூமி என்போம், இவனோ புஞ்சை ஆறு என்கிறான். ஆக, இவனது கணக்குப்படி காவிரி புஞ்சை நதி ஆகிறது. அப்படியெனில் கங்கை நஞ்சை நதி. நதிகளில் நஞ்சை புஞ்சை என்று நம் மாதிரி கிழவர்களுக்கு ஒரு இளைஞன் கவிதை எழுதி வகுப்பெடுக்கிறான். எடுத்துக் கொண்டால் பிழைப்போம் அல்லது போகிற போக்கில் அடித்துச் செல்லப் பட்டு ஏதோ ஒரு புதரில் செறுகிச் சாவோம்.
அதே நேரத்தில் முரட்டுத்தனமாக கோடையை இவன் வெறுப்பவனாகவும் தெரியவில்லை. இயல்பாக வருகிற கோடையை இவன் ரசிக்கவே செய்கிறான். எப்போதும் நிறைந்து கிடக்கும் குளங்களை மட்டும் அல்ல, அவ்வப்போது வறளவும் வேண்டும் இவனுக்கு. குளங்களின் வயிறை சுத்தம் செய்யும் பேதி மருந்தாக கோடை இருக்க வேண்டும் இவனுக்கு.
போக வறண்ட குளத்திலும் இவனுக்கு எடுக்க ஏராளமாய் கவிதைகள் இருக்கின்றன,. வறண்ட குளம் பற்றி எழுதுகிறான்,
“ குளத்தில்
என்றோ எறிந்த கற்களை
மீட்டுத் தந்தது கோடை”
இவனுக்கு குழந்தைகளை மட்டுமல்ல, குழந்தைகளுக்குப் பிடித்த வண்ணத்துப் பூச்சி, மழை, கூழாங்கற்கள் ஆகிய அனைத்தையும் பிடித்திருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் அவற்றின் காதலனாகவே மாறிப் போகிறான்.
“நனைய மறுக்கும்
நம்மைப் பார்த்து
அழுகிறது குடை’ என்கிறான்.
குடையின் அழுகையைக் கூட உதாசீனப் படுத்தாமல் அதற்கான காரணத்தை புலனாய்ந்து அழகியலோடு வடிக்கிறான்.
வானவில்லைப் பற்றி விஞ்ஞானிகள், இலக்கியவாதிகள் என்று யார் யாரோ என்னென்னவோ சொல்லியாகிவிட்டது. வானவில்லைக் காட்டி குழந்தைகளிடம் ஏதேதோ சொல்லி அவர்களை சலிப்பேற்றிவிட்டோம். ஆனால் வைகறை சொல்கிறான், வானம் வரைந்த குழந்தைகளின் குதூகலம் வானவில் என்று. பாருங்களேன்,
“ மழையில் நனையும்
ஒரு குழந்தையின்
எழுதிக் காட்டமுடியாத
சந்தோசங்களைத்தான்
வரைந்து காட்டுகிறது வானம்
வானவில்லாக”
“காவிரியைக் கடக்க
ஓடங்கள் தேவையில்லை
ஒட்டகங்களே போதும்”
என்பார் தணிகைச் செல்வன்.அதை இவன் வாசித்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவர் தோள் மேல் அமர்ந்து இவன் எழுதுகிறான்,
“முட்டாள்
எதற்காக பாலம்
மணலைக் கடப்பதற்கு”
தணிகை மாதிரி ஒரு அனுபவ ஆளுமையிடம் தெறிப்பது இந்த இளைஞனிடமிருந்தும் தெறிப்பது பெரும் நம்பிக்கையை நம்முள் அள்ளிவந்து போடுகிறது. நமக்கு தணிகையும் வேண்டும் வைகறையும் வேண்டும்.
ஒரு எலி வீட்டிற்குள் நுழைந்துவிட்டது. ஆளாளுக்கு கம்புகளோடு எலி வேட்டையில் இறங்குகிறார்கள். அது அங்கும் இங்கும் ஓடி ஒளிகிறது. அவசர கதியில் பொருட்கள் எடுத்தெறியப்பட்டு எலியே இலக்காகிப் போகிறது. இறுதியாய் எலி சாகிறது. அதை எறிந்து வந்தபின் சிதறிக் கிடக்கிற பொருட்களை ஒழுங்குபடுத்தும் அயர்வில் சொல்வோம் “ இந்த நாசமா போற சனியன் என்ன பாடு படுத்திவிட்டது”
இவர்கள் எலியைக் கொல்ல முடிவெடுத்துவிட்டதும் அது சமர்த்தாய் வந்து அமர்ந்து அடிபட்டு சாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எலிவேட்டையில் சிதறிக் கிடக்கும் பொருட்களைப் பார்த்ததும் வைகறை எழுதுகிறான்,
“சிதறிய பொருட்களில்
பரவிக் கிடக்கிறது
இறந்த எலியின் போராட்டம்”
இவனுக்கு எப்படி இப்படி தோன்றுகிறது? காரணம் இதுதான், இவன் கவிஞன்.
கருத்து முதல்வாதத்தை மணிக்கணக்காய் யாருக்கும் புரியாமல் பேசும் வேதாந்திகளுக்கும் பஞ்சமில்லை. கருத்து முதல்வாதத்திற்கு எதிராய் தர்க்கம் செய்கிறோம் என்று வறண்டு கறைபவர்களும் ஏராளம். வைகறை கருத்து முதல்வாதத்தை எவ்வளவு லாவகமாக எதிர் கொள்கிறான் பாருங்கள்,
“அவனது
முகம் மலர
தியானமும் வேண்டாம்
உபதேசமும் வேண்டாம்
யாராவது கொடுங்கள்
ஒரு பிடி சோறு”
எப்படி கன்னத்தில் அறைந்து எதார்த்தத்தை சொல்கிறது இந்தக் கவிதை.
”பட்ட மரம்
ஒற்றைக் குயில்
கிளையெல்லாம் இசை”
எப்படி ஒரு கவிதை. இதுவே காடெல்லாம் இசை என்று வந்திருப்பின் இன்னும் அழுத்தம் கூடியிருக்கும்
எனக்குத் தெரிய நான் சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் ஒரே புத்தகத்தில் இத்தனைக் கவிதைகளைக் காணக் கிடைக்கவில்லை.
நிறைய நம்புகிறேன், குழந்தைமையைக் கொண்டாடுகிற வைகறை, குழந்தைகளுக்கான படைப்புகளையும் எதிர்காலத்தில் தருவான். அதற்காக இவனிடம் இரண்டு கை ஏந்துகிறேன்.
எலியின் மரண வலியை கவலையோடு பார்க்கிற, வேதாந்தம் எல்லாம் தூர எறிந்துவிட்டு மனிதனுக்கு ஒரு கவளம் சோறு கேட்கிற இவனது மனிதம் இவனை வெகுசீக்கிரம் மக்கள் கவிஞனாக முழுமைபடுத்தும்.
அவசியம் வாசியுங்கள்.
நேரமாகிறது. விஷ்ணுபுரம் சரவணனுக்கு இதை அனுப்பவேண்டும். கொண்டாடுவான்.
நூல் : “நிலாவை உடைத்த கல்”
கவிஞர்: வைகறை (96884 17714)
கிடைக்குமிடம்:
தகிதா பதிப்பகம்
4/ 833, தீபம் பூங்கா
கே.வடமதுரை
கோவை--641017
அலைபேசி: 94437 51641
Thursday, January 24, 2013
கிரீடமல்ல தலைப்பாகை
நல்ல பேனாவும் நல்ல அரசியலும் கை கோர்க்கும்போது எவ்வளவு அழுத்தமாக உயிர்ப்போடு இலக்கியம் உருவாகும் என்பதை ரத்தமும் சதையுமாக நிரூபித்திருக்கிறது தோழர். டி. செல்வராஜின் “ தோல்.”
மட்டுமல்ல, இடதுசாரிகள் வர்க்கத்தின்பால் மட்டுமே கவனமாக இருப்பார்கள், வர்ணப்பிரச்சினையைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் அல்லது, அவர்கள் வர்க்கப் பிரச்சினையை கவனத்திலெடுக்குமளவிற்கு வர்ணப் பிரச்சினையின்மீது கவனம் குவிக்க மாட்டார்கள் என்பது மாதிரியாக திட்டமிட்டு படிய வைக்கப் பட்டுள்ள பொதுப் புத்தியினை “தோல்” துனையோடு மிகக் கம்பீரமாக எதிர் கொள்கிறார் தோழர் டி. செல்வராஜ்.
“இந்தியாவில் கம்யூனிச இயக்கங்கள் தடை செய்யப்பட்டிருந்த கால கட்டத்தில் தோராயமாக 1930 முதல் 1958 வரையிலும் நடைபெற்ற போராட்டங்கள், அதில் ஈடுபட்ட போராளிகளின் பாத்திரங்களை நாவலில் வடித்துள்ளேன்,” என்று 36 வது புத்தக கண்காட்சியில் தனக்கு அளிக்கப் பட்ட பாராட்டுகளுக்கு நன்றி தெரிவிக்கும் போது தோழர் டி.செல்வராஜ் கூறுகிறார். முதலில் தோழர்கள் A.பாலன் , மற்றும் S.A.தங்கராஜ் ஆகியோரோடு இந்த நாவல் மூலம் உறவாட நமக்கு ஒரு வாய்ப்பைத் தந்தமைக்கு தோழர் செல்வராஜுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஜனவரி 2013 புத்தகம் பேசுது இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் தோழர் டி.செல்வராஜ் சொல்கிறார்,
“என் கருத்தில் ஒரு நாவலின் குறிக்கோள் சமுதாய மாற்றத்தைச் சித்தரிப்பது.வாசகனின் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்துவது முக்கியம். சமுதாயப் பொறுப்புணர்வு இருந்தால்தான் நம் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.”
சமூக அவலங்களை, ஒடுக்கப் படும் விளிம்புநிலை மக்களின் ரணத்தை , வலியை சித்தரிப்பதோடு பெரும்பான்மை நல்ல படைப்புகள் பொறுப்பினை சுறுக்கிக் கொண்டு தங்கள் முதுகுகளைத் தாங்களே தட்டிக் கொண்டு சிலாகித்துத் திரியும் பொதுக் கட்டமைப்பு நிலைபெற்றுள்ள இன்றைய சூழலில் சமுதாய மாற்றத்தை சித்தரிப்பதுதான் நல்ல நாவலின் அடையாளம் என்கிறார் தோழர்.
பாமர வாசகனாக ஒன்றைக் கேட்கலாம். எது மாதிரி இருந்த சமூகம் எது மாதிரியாய் மாறியுள்ளதை “தோல்” அடையாளப் படுத்துகிறது?
திண்டுக்கல் நகரம் முழுக்க தோல் தொழிற்சாலைகள். ஏறத்தாழ எல்லா தொழிற்சாலைகளுமே உயர் மற்றும் இடைசாதி முதலாளிகளுக்கு சொந்தமானவை. (ஒன்று மட்டும் தாழ்த்தப் பட்டவர்களுக்கு உரியதாய் உள்ளது)
அந்த தோல் ஷாப்புகளில் வேலை பார்க்கிற ஊழியர்கள், ஊழியர்கள் என்று சொல்வது கூட சரியில்லை, அடிமைகள் பெரும்பகுதி தலித்துகள்.
பெரும் முதலாளிகள் ஊழியர்களச் சுரண்டிக் கொழுக்கும் போக்காகக் கொண்டால் அது வர்க்கப் பிரச்சினை.
உயர் சாதிக் காரர்கள் தலித்துகளை சுரண்டிக் கொழுக்கிற போக்காகக் கொண்டால் இது வர்ணப் பிரச்சினை
வறட்டுத் தனமான விளிம்பு நிலைக்குப் போகாமல் இரண்டையும் ஒரு சேர எடுத்து சங்கரன் என்கிற மேட்டுக் குடித் தோழனும், சந்தானத் தேவன் என்கிற இடைசாதிக் காரத் தோழனும் ஓசேப்பு என்கிற கடைசாதித் தோழனும் இன்னும் இதே போன்று பல சங்கமங்களையும் படைத்து வர்க்கமாயும் வர்ணமாயும் ஒரு விடுதலையை சாத்தியப் படுத்தியிருக்கிறார் தோழர். செல்வராஜ்.
அதுவும் எதுமாதிரியான சூழலிலிருந்து இது மாதிரியான ஒரு சமூக மாற்றத்தை அவர் தனது படைப்பில் கொண்டு வந்திருக்கிறார்.
ஒடுக்கப் பட்ட உழைக்கும் பெண்களை முதலாளிமார்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வேடிக்கை பார்ப்பதைத் தவிர சத்தமாய் அழுவதற்கும் புலம்புவதற்கும்கூட உரிமை மறுக்கப் பட்டிருந்த ஒரு காலத்தில் ... ஒடுக்கப்பட்ட கடையர்களளை ஒரு இயக்கம் எப்படி ஒன்றிணைத்து போராடச் செய்து மீட்டெடுத்தது என்பதை சகதி மணக்க, கடுக்காய் குழி கொதிக்க உள்ளது உள்ளபடி பௌடர் பூசாமல் செண்ட் அடிக்காமல் இவை எதையும் விட உழைக்கும் மக்களின் வியர்வை நாற்றம் வசீகரமானதும் உன்னதமானதும் என்பதை தேவையான அளவிற்கு கடுக்காய் அளவும் குறைந்துவிடாத அழகியலோடு பதிவு செய்கிறது “ தோல்”
அன்றைய சூழல் எப்படி இருந்தது என்பதை இந்த நாவலில் வரும் ஒரு சம்பவம் புரிய வைக்கும்,
ஆசீர் என்று ஒரு கதாபாத்திரம். இந்த நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரமாக வளர்ந்து மிளிரப்போகிற கதாப் பாத்திரத்திரமான ஓசேப்பின் தந்தை. தோல் தொழிற்சாலைகளில் கடுக்காய் குழியில் தோல் மாற்றிப் போடும் வேலையில் திண்டுக்கல் பகுதியில் இவனை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று சொல்லும்படிக்கு தொழில்காரன். அவனது மனைவி இறந்து போகிறாள். அடக்கம் செய்ய அவனிடம் காசு இல்லை. தனது முதலாளி அஸன் ராவுத்தரிடம் இரந்து கடன் வாங்குவதற்காக அப்போது குழந்தையாக இருந்த ஓசேப்பை அழைத்துக் கொண்டு வருகிறான்.
தாயில்லாத அந்த சிறு குழந்தையைக் கண்டாலாவது ராவுத்தருக்கு இரக்கம் பிறக்காதா என்று நினைத்திருக்கக் கூடும்.
மனைவியை இழந்து வந்து நிற்கும் அவனது அவலத்தை கணக்குப் பிள்ளை கனி ராவுத்தர் சொன்னபோது அஸன் சொல்வதைக் கேளுங்கள்,
“ மாதர் சோத், அரே சைத்தான், விடிஞ்சதும் விடியாததுமா மவுத்தான சேதியைத்தான் சொல்ல வந்தீரா அத்தா” என்று சொன்னவன்,
“ஒம் சசாரம் மௌத்தான சமுசாரத்தைச் சொல்லிட்டேல்ல, இன்னைக்கு வேணண்டா லீவு எடுத்துக்க. மையச் செலவுக்கு எல்லாம் நம்மால சல்லிக் காசு தர ஏலாது” என்று சொன்னவன் ஓசேப்பைப் பார்த்ததும் மலர்ச்சியடைந்தவனாக,
“ஒம் பொண்டாட்டி மையச் செலவுக்குப் பணம் கேட்டியில்ல. நீயும் இந்தப் பொடியனும் முறியில கை ஒப்பம் வச்சிட்டுச் சல்லிய வாங்கிட்டுப் போ.மத்ததெல்லாம் பொறவு பார்த்துக்கலாம்” என்கிறான்.
மனைவியை சாகக் கொடுத்துவிட்டு அவளைப் புதைப்பதற்கு வக்கற்றவனாய் கையேந்தி வந்து நிற்பவனிடம் முதலாளி நடந்து கொள்ளும் விதம் இருக்கிறதே, பொருளற்ற அவனது ஏழ்மையைப் பயன்படுத்தி அவனது குழந்தையையும் ( பச்ச மண்ணுங்க சாமி என்பான் ஆசீர்) அடிமை படுத்தும் ஈனத்தனம் இருக்கிறது பாருங்கள் அது வர்க்கம் சார்ந்த பிரச்சினை.
அதே வேளை பறையர்களும் சக்கிளியர்களும் தங்களது சாதியின் பொருட்டாகவே அனுபவிக்கும் வலிகளும் அநீதிகளும் வர்ணம் சார்ந்த பிரச்சினைகள். ஆனால் இரணையும் ஒரு சேரப் பிணைத்து தோழர் தீர்வு காணும் பாங்கு இருக்கிறது பாருங்கள் அது சத்தியமாய் சோசலிச எதார்த்தவாதம்தான்.
நாவலின் தொடக்கமே முதாளாளி வர்க்கம் அதுவரை பேணிக் காத்துவந்த கட்டமைப்பை அசைத்துப் போடுகிறது.
முஸ்தபா மீரான் என்கிற காமுக முதலாளியை ஓசேப்பு என்கிற கடைசாதி அடிமை மண்டையைப் பிளந்து போட்டிருக்கிறான் என்கிற செய்தியோடுதான் முதல் பக்கமே துவங்குகிறது. இது, இது, இதுதான் தோழர் செல்வராஜ்.
சின்னக் கிளி என்ற சமைந்து ஓரிரு வாரங்களே ஆன பச்சைப் பிள்ளையை நிர்வாணப் படுத்தி இழுத்துப் போகிறான் மீரான். எல்லோரும் பார்த்துக் கொணிருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நின்று கொண்டிருந்தபோது ஓசேப்பு அவந்து மண்டையைப் பிளக்கிறான்.
கீழத் தஞ்சை ஆண்டையாக இருந்தாலும், தோல் ஷாப் இஸ்லாமிய முதலாளியாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார்கள். அழ்கான பெண்களைக் கண்டால் கசக்கி எறிந்துவிடுவது என்பதில். அதில் பச்சைக் குழந்தைகளையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை.
யாருக்கும் தெரியாமல் வன்புணர்ந்து யாரிடமும் சொன்னால் கொன்று போடுவேன் என்று மிரட்டும் ஈனக் காரியத்தையே நாகரீகமாக மாற்றிவிடும் அளவு கொடூரமானதும் ஈனத்தனமானதும் ஆகும் இந்த ஆண்டைகளின் பாதகங்கள்.
அவர்களின் காம அரிப்புக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பெண்ணின் தாய், தந்தை, சகோதரன் சகோதரி யார் இருந்தாலும் அவர்கள் கண்ணெதிரிலேயே புணர்வது, திமிறி எதிர்ப்புக் காட்டும் பெண்களை கொன்று போடுவது என்பதாக விரிகிறது இவர்களின் காமக் கொடூரம். முணங்கிக் கொண்டோ, சபித்துக் கொண்டோ நடப்பதை மௌனிக்கும் இவர்களின் இணங்குதலுக்குள் இருக்கும் அரசியலை அழுத்தமாக அம்பலப் படுத்துவதுடன் அதிலிருந்து மீள்வதற்கான அரசியலை அவர்களை கையெடுக்கச் செய்து , போராடவும் இறுதியாய் மீளவும் செய்கிறார்.
நாவலில் ஓரிடத்திலொரு தாழ்த்தப் பட்ட பெண் இறந்த போது அவளது பிணத்தை தங்கள் வீதி வழியாக கொண்டு போனால் தெரு தீட்டுப் பட்டுவிடும் என்று கூறி தங்களது தெருவை மறித்துக் கொண்டு ஆயுதங்களோடு நிற்கிறார்கள். தலித்துகள் தடுமாறி நிற்கிறபோது அவர்களை எதிர்க்கவும் இயலாமல் வேறு வழியும் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சங்கரனும், சப் கலக்டரும் பாடியை தூக்குங்கள் பார்த்துவிடலாம் என்று தைரியம் சொன்னபோதும் பயந்துபோய் ஸ்தம்பித்து நிற்கிகிறார்கள். அவர்களுக்கு தைரியம் வரழைக்க வேண்டி சங்கரனும் சப் கலக்டரும் பாடையைத் தூக்க அக்ரஹாரமே அவனை தள்ளிவைக்க கொதிக்கிறது.
அது அப்படித்தான் இருக்கும். 01.08.1920 அன்று திலகர் இறந்த பொழுது அவரது பாடையை தூக்கிய காந்தியை பிராமணர்கள் வைசியன் பிராமணன் பாடையத் தூக்கினால் பிணம் தீட்டுப் பட்டுவிடும் என்று அவரைக் கீழே தள்ளி விடுகிறார்கள்.
என்ன கொடுமை இது? தலித் பிணம் தங்களது தெருவில் வந்தால் தெரு தீட்டுப் பட்டு விடும் என்கிறான். பிராமணப் பிணத்தை வைசியன் தொட்டால் பிணமே தீட்டுப் பட்டு விடும் என்கிறான். ஆனால் இவற்றிற்கிடையில் உள்ள தத்துவங்களுக்குள் நுழைந்து விசாரம் செய்யாமல் விடுதலைக்கான சரியான வழியைக் காட்டுகிறது “தோல்”
கதை சொல்லி காக்கையன் கதாபாத்திரம் மிக அருமையான படைப்பு. பாற்கடலைக் கடைந்த போது மூதேவி சேரிக்கு வந்த கதையை சொல்கிற நேர்த்தி மிகவும் அலாதியானது.
அவனது மனைவி புணத்த எரிக்கிற சோலிய முடிச்சுக்கன்னா கேக்குறியா. நெருங்க முடியல ஒரே பொணவாட என்றபோது இதுக்கே இப்படின்னா சதா சர்வ காலமும் சுடுகாட்டுலேயே இருக்கிற சிவன் பக்கத்துல எப்படி பார்வதி படுப்பா? என்பதுசிவனும் பார்வதியும் எதார்த்தமல்ல புனைவு என்பதை சொல்லும்.
தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கையைப் பற்றி வாசிக்கிறபோது அரசியல் வகுப்புகளில் நமக்கு கிடைத்த பல தலைவர்களையே பார்ப்பது போல இருக்கிறது. அதுவும் அந்தத் தலைவர்கள் எதை எல்லாம் சாப்பிட்டு இயக்கம் நடத்தியிருக்கிறார்கள் என்பதை வாசிக்கும் போது கண்கள் உடைகின்றன.
பதப் படுத்த வருல் தோலில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடிய இறைச்சியை சுரண்டிக் கொண்டு வந்து அதை சமைத்து தலை மறைவாய் இருக்கும் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப் படும் உணவே அவர்களுக்கான விஷேச விருந்து என்பதைப் படிக்கும் போது அய்யோ என்றிருக்கிறது.
இந்தப் புதினத்தில் ஆசீரின் மேல் தாயம்மாவிற்கு இருக்கும் காதலும், அந்தக் காதலுக்காக அவனது குழந்தையை அவள் தன் குழந்தையாகவே பாவித்து பெற்றோர் இருவரும் இறந்து போனதால் அநாதையாகிப் போன ஓசேப்பிற்கு தாயாய் தந்தையாய் வாழும் வாழ்வு இருக்கிறதே... அப்பப்பா.., நான் வாசித்த காதல்களுல் மேன்மையானது இது.
இதற்கு கொஞ்சமும் குறைவானது அல்ல அருக்காணி ஓசேப்பு காதலும், சங்கர் வடிவாம்பாள் காதலும்.
சிட்டம்மா பாத்திரம் எவ்வளவு கனமானது. என் மக்னுக்கோ மகளுக்கோ பெண் பிள்ளை பிறந்தால் நிச்சயமாய் நான் சிட்டம்மா பெயரை முன்மொழிவேன்.
இந்த நாவலில் எது இல்லை?
முதலாளி வர்க்கத்தின் அப்பட்டமான கொடூரச் சுரண்டல் அரசியல் இருக்கிறது. சாதி அரசியல் இருக்கிறது. அடிமைகளாய் தங்களை சுருக்கிக் கொண்ட உழைக்கும் ஜனத் திரளை உணர்ச்சிப் பெறச் செய்து ஒன்றுதிரளச் செய்யும் அரசியல் இருக்கிறது. வறட்டுதனமான தத்துவம் பேசாமல், அதே நேரத்தில் சரியான சித்தாந்தங்களை களத்தில் எடுத்துச் செல்லும் நடை முறை அரசியல் இருக்கிறது. கள சூட்சுமங்களைச் சரியாய் கை கொண்டு ஒடுக்கப் பட்ட ஜனங்கள் இயங்கும் அர்சியல் இருக்கிறது.ஏன், பாண்டிச்சேரி தங்கப் பறையனுக்கும் திண்டுக்கல் பறையனுக்கும் இடையே உள்ள முரண்களை அம்பலப் படுத்துகிறது.
பொதுவாக முதலாளிகள் தங்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது எதையும் கடந்து ஒன்றினைவார்கள். ஆனால் உழைக்கும் மக்களை அப்படிச் சேர விடாமல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் இந்தப் புதினத்தில் அது உடைந்து உயர் சாதி, மற்றும் இடைசாதி மக்கள் ஒடுக்கப் பட்ட கடை சாதி மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் அவர்களோடு ஒன்றிணைந்து அதை சாதித்துக் காட்டியது இந்த நாவலின் சிறப்பு.
“அதாவது, தலித்தியம், பெண்ணியம், தமிழ்த் தேசியம் சேர்ந்த சொல்லாடல்கள், தமிழ்ச்சூழலில் இன்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.ஏன் இப்படி?என்று ஒரு நண்பர் கேட்டார். மார்க்ஸியம்தான் காரணம் என்றேன்.ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலமாக இங்கு விதைக்கப் பட்ட மார்க்ஸிய சிந்தனைதான் ஒடுக்குமுறையின் பல்வேறுபட்ட வடிவங்களையும் , ஆதிக்க அதிகார சக்திகளின் நுட்பமான தந்திரங்களையும் பச்சையான சுயநலக் கூறுகளையும் அடையாளம் கண்டுகொள்வதற்குத் துணை போகின்றன.எனவே மார்க்ஸியத்தின் நீட்சியாகவே இவைகளை நான் பார்க்கிறேன்” என்று தோழர் பஞ்சாங்கம் சொல்வதை தனது மின்னுரையில் தோழர் செல்வராஜ் சொல்கிறார்.
தலித்தியம் மற்றும் பெண்ணியத்தை மார்க்ஸியத்தின் நீட்சியாகவே தோழர் பார்த்திருக்கிறார் என்பதை “தோல்” சொல்கிறது.
அவருக்கு அளிக்கப் பட்ட பாராட்டுகளுக்கு நன்றி தெரிவிக்கும் போது தோழர் செல்வராஜ் சொல்கிறார்,
“கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தடை செய்யப்பட்டிருந்த கால கட்டத்தில் மேற்கொண்ட போராட்ட முறைகளை ஆய்வு செய்து புதிய வடிவங்களை வகுத்து செயல்பட வேண்டிய கட்டாயம் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்டுள்ளது”
இது கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல ஒடுக்கப் பட்ட மக்களுக்காக போரடும் எந்த ஒரு அமைப்பிற்கும் நீண்டு பொருந்தவே செய்கிறது.
சாகித்ய அகாதமி விருது என்பது சின்ன தலைப் பாகைதான்.
கிரீடத்திற்கே உரிய தலை தோழருடையது.
நூல் வெளியீடு:
நன்றி: காக்கைச் சிறகினிலே
Monday, July 23, 2012
இன்றின் நியாயத்திலிருந்து...
சுகதேவ் சொல்வது மிகச் சரியான கூற்றாகவே படுகிறது. ஆமாம், கவிதை குறித்து முழுதாய் அறிந்தவர்கள் யாருமே இல்லை என்றே கூறலாம். கவிதை குறித்த அபிப்பிராயம் ஆளுக்கு ஆள் மாறவே செய்கிறது. எது கவிதை என்பதற்கான ஒரு பொதுவான அபிப்பிராயம் இதுவரையிலும் எட்டப் படவில்லை என்பதோடு என்றேனும் ஒரு நாள் எட்டப் படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றனவா என்பதும் சந்தேகமே.
ஆனால் அதற்காக யாரும் குழம்பித்திரிகிற சூழையும் கவிதை யாருக்கும் வைக்கவில்லை.
அம்ரீதா சொல்கிறார்,
“குருதியின் வெப்பத்திலிருந்து பிறப்பது கவிதை”
எனக்கென்னவோ இது பெருமளவு சரி என்றே படுகிறது.குருதி கொதிக்கக் கொதிக்கப் பொங்கிக் கொப்பளித்து வரவேண்டும் கவிதை என்றுதான் தோன்றுகிறது. அப்போதுதான் கவிதை உயிர்ப்போடும் வன்மத்தோடும் வரும். கவிதை குறித்த எந்த அபிப்பிராயத்தோடும் பேதம் கொள்ளும் யாரும் இதை எந்த வித பேதமும் இல்லாமல் ஏற்கவே செய்வார்கள். சூடு கவிதையின் உயிர்ப்பு எனில் வன்மம்தான் கவிதையின் குரல்.
மக்கள் கவிஞர் இன்குலாப் சொல்கிறார்,
“இன்றின் நியாயத்திலிருந்து எழுதுகிறேன். குருதி கொப்பளிக்கிறது”
எவ்வளவு சத்தியமான கூற்று. இன்றின் நியாயத்திலிருந்து புறப்படுகிற கவிதை குருதியின் வெப்பத்திலிருந்துதான் புறப்படும். அதன் குரல் தவிர்க்கவே இயலாதபடி வன்மமாகத்தான் இருக்கும். அவை சூடாகவும் வன்மக்குரலோடும் இருப்பதால் அவை கலகக் கவிதைகளாகவும் இருக்கும். மக்கள் கவிஞரின் கவிதைகளே இதற்கு சாட்சி.
இன்றின் நியாயத்திலிருந்து எழுதப் படுகிற கவிதைகள்தான் நாளையை சரி செய்து செழுமைப் படுத்தும்.
எனவேதான் குருதி கொப்பளிக்க , வன்மக் குரலோடு, இன்றின் நியாயத்திலிருந்து கலகக் கவிதைகள் ஏதேனும் வராதா என்ற தவத்தோடு காத்திருக்கிறோம். நமது அகோரப் பசிக்கான சிற்றுண்டிகளும், உணவு வகைகளும் சமயத்தில் பெரு விருந்துமாக கவிதை நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் தனது “வெட்கத்தில் நனைகின்ற” என்ற கவிதை நூல் மூலம் நமக்குப் பந்தி வைத்திருக்கிறார் கிருஷ்ணப்ரியா.
“கவிதைக்காண இலக்கணங்களோ, சிறப்பான வார்த்தைகளோ, அழகியலோ,இல்லாத கவிதைகளாக இவை இருக்கக்கூடும்..”என்று தனது நூலுக்கான அறிமுகத் தளத்தில் ப்ரியா சொல்கிறார். அவரது நூலுக்குள் பயணித்து வந்த பிறகு நாம் சொல்வது இதுதான்,
“ப்ரியாவிற்கு இவ்வளவு தன்னடக்கம் தேவையில்லை”
காரணம், இல்லாமலும் இருக்கக்கூடும் என்று இவர் பட்டியலிட்டுத் தருகிற அனைத்தும் இவரது கவிதைகளில் செழித்துக் கிடக்கின்றன.
கீழத்தஞ்சை ஆண்டைகளைப் பற்றி நமக்குத் தெரியும். ஈவு இரக்கமே இல்லாது தங்களது பன்னையாட்களை சவுக்காலும், சாட்டைகளாலும், புளிய மிளாறுகளாலும் ரத்தம் வர அடித்து வேலை வாங்கிய மனிதக் கழிசடைகள். அவர்களிடம் வேலை பார்த்த அடிமைக் கூலிகள் பேசிக்கொள்வார்களாம்,
“என்னதான் கோவம் வந்து சாட்டையால அடிச்சாலும் எங்க ஆண்ட ரொம்ப நல்லவங்கத் தெரியுமா? காலயில அடிச்சவுங்க சாயங்காலம் வேல முடிஞ்சப்புறம் ,” ஏண்டா இப்படி அடி வாங்குற மாதிரி நடந்துக்கற. பாரு எப்படி வரி வரியா முதுகெல்லாம். போ, வெரசா போயி சுடு தண்ணி வச்சு பொஞ்சாதிய ஒத்தடங்கொடுக்க சொல்லு”ன்னு சொல்றாக. எவ்வளோ பெரிய மனசு. சும்மாவா சொன்னாக ‘அடிக்கிற கைதான் அணைக்குமுன்னு’”
இது அவன் மீதான அக்கறையின் பொருட்டு அல்ல, அவன் வீட்டு நாளைய வேலைக்கான தயாரிப்பு அது என்பது புரியாதபடி கூலிச்சமூகத்தை மிகுந்த கவனத்தோடு கட்டமைத்து வைத்திருந்தது ஆண்டைச் சமூகம்.
இன்னொரு கூலி சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கள்,
“சாட்டைய எடுத்து அடிக்கிற அளவுக்கு எங்க ஆண்ட மோசமானவங்க இல்ல. தப்பு செஞ்சா புளிய மெளாராலதான் அடிப்பாங்க”
எப்படி கவனமாகக் கட்டமைத்திருக்கிறார்கள் பாருங்கள்.
ஆனால் சீனிவாச ராவ் முன்னெடுத்த, நிறையப் பலிகொண்ட, மிக நீண்ட போராட்டங்களும் அதன் விளைவாய் வந்த சட்டங்களும் அந்த ஆண்டைகளிடமிருந்து எங்கள் அடிமைக் கூலிச்சமூகத்தை விடுதலை செய்திருக்கின்றன.
ஆனால் சராசரிக் குடும்பக் கட்டமைப்பில் இன்னமும் பல இடங்களில் கணவன்மார்கள் ஆண்டைகளாகவும் மனைவிகள் அடிமைக்கூலிகள் போலவும் இன்றைக்கும் தொடர்வதைக் காணத்தான் முடிகிறது. ஆண்டைகள் போல இரக்கமற்று நடந்துகொள்ளும் கணவன்மார்கள்மீது மனைவிகள் வைத்திருக்கும் நம்பிக்கை இருக்கிறது பாருங்கள், அதை இந்தக் கவிதையை விட யாரால் எது கொண்டு அழகாய் சொல்லிவிட முடியும்,
“உப்பு குறைந்ததற்காய்
சூடான குழம்பைத் தலையில் கொட்டிய
தாத்தாவைப் பற்றிக்
கதை சொல்லும் பாட்டி
எப்போதும் முடிக்கிறாள்
‘என் மேல் அவருக்கு கொள்ளை ஆசை’ ”
இந்த இடத்தில் கவிதை சரியாக முடிந்துவிடுகிறது. அதற்கு மேல்”என்று” என்பதில் தொடங்கி நீளும் எந்த ஒரு வார்த்தையுமே தேவைப் படவில்லை. அவ்வளவு அழகாக நேர்த்தியாக முடிகிறது கவிதை.
ஏதேனும் ஒன்று சரியான இடத்தில் நறுக்கென்று முடிந்தால் “ நச்” என்றும் சொல்லலாம் அல்லது அதற்கு பதில் இந்தக் கவிதையையும் சொல்லலாம்.
ப்ரியா ஒரு நல்ல தொழிற்சங்கவாதி. தான் சார்ந்திருக்கிற ஊழியர் சங்கத்தின் மகளிர் அமைப்பினை ஆங்காங்கே கட்டுவதில் முனைப்போடு பங்கேற்ற முன்னனி ஊழியழ்ர். அந்த அமைப்பின் பல மாநாடுகளை முன் நின்று நடத்திய அனுபவம் மிக்கவர். இந்த அனுபவம் தந்த வெளிச்சத்தில் வேலைக்குப் போகும் பெண் ஊழியர்களின் அவல நிலையை அவர் மிகச் சரியாக உள்வாங்கியிருக்கிறார் என்பதை கீழ்க் காணும் கவிதை தெளிவுபடுத்துகிறது.
பொதுவாகவே வேலைக்குப் போகாத பெண்களைவிட வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை மிகவும் துயரமானது. வேலை முடிந்து ஒரே வண்டியில் வீட்டுக்குத் திரும்பினாலும் வீட்டிற்கு வந்து உடை மாற்றிய உடன் கணவனது வேலை பெரும்பாலும் முடிந்துவிடுகிறது. ஆனால் அதன் பிறகு அவனுக்கு தேநீர் தயாரித்துக் கொடுப்பதிலிருந்து தொடங்கி நள்ளிரவுவரை சில நேரம் பெண்ணுக்கான வேலை நீளுகிறது. இதை மூஞ்சியிலத்தாற்போல் சொல்கிறார் ப்ரியா,
“கையொடிய எழுதி
கோப்புகளைப் பார்த்து
பலவிதமான பார்வைகளை
வார்த்தை விரசங்களை
சிரித்தும் சிரிக்காமலும்
மெல்லப் புறந்தள்ளி
கடிகார முள்சுற்றி
ஆறில் நிற்கும் போது
அரக்கப் பரக்க ஓடி
பிதுங்கும் பேருந்தில்
சதை மூட்டையாய் ஏறி இறங்கி
ஆயாசத்துடன் வீட்டிற்குள் நுழைகையில்
கூடவே நுழையும் உன்னால்
இரக்கமே இல்லாமல் கேட்க முடிகிறது...
’சூடா ஒரு டீ கொடுடி’ ”
வீட்டில் வெட்டியாய் உட்கார்ந்திருப்பவனுக்கும் வேலைக்குப் போய் வந்து பணிவிடை செய்ய வேண்டிய அவலம் இருக்கிறது பாருங்கள், அதுகுறித்தும் ப்ரியா கவனம் செலுத்தவேண்டும் என்பதே நேயர் விருப்பம்.
வேலைக்குப் போவது என்றால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், பள்ளிகளில், மருத்துவ மனைகளில், வணிகத்தளங்களில் பணிபுரிவது என்றே பொதுப் புத்தியில் உறைந்து போயிருக்கிறது. எனவே உழைக்கும் பெண்களின் பிரச்சினை என்பது மேற்சொன்ன இடங்களில் பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகளாகவே பொதுத் தளத்தில் கொள்ளப் படுகிறது.
இது கடந்து வயல்களில், கட்டடக் கட்டுமானத்தில், சாலை போடுவதில்,வீடுகளில் வேலை செய்கிற பெண்களின் பிரச்சினைகள் பொதுவாக போதுமான அளவிற்கு பேசப் படாத சூழலில் அவர்களது அவலத்தை இடது சாரிக்கே உரிய புள்ளியில் நின்று பார்க்கிறார்,
“அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாய்
ஓய்வில்லாது உழைத்து
அலுத்துக் களைத்துப் போகும்
எண்ணற்ற தருணங்களில்
எல்லாரிடமும் சிடுசிடுக்கும் அம்மா
சீறுவதேயில்லை
பத்துப் பாத்திரம் தேய்க்கும்
பத்மாவிடம் மட்டும்...
களித்துச் சிரித்திருக்கும்
எங்களுக்கான நேரங்களில்
கேட்டால்
‘வீட்டிலும் வெளியிலும்
அவளும்தான் தேய்கிறாள், என்னைப் போலவே’
பதில் சொல்லும் அம்மாவின் கண்களில்
எப்போதும் தெரிகிறது ஒரு நெருப்பு”
ப்ரியா அம்மாவின் கண்களில்பார்த்த நெருப்புதான் இவர்களது அவலத்தைக் கொளுத்தி சாம்பலாக்கப் போகும் ஆதிக் கங்கு.
இந்தக் கவிதையை சுகனில் வாசித்துவிட்டுத்தான் இருப்பு கொள்ளாமல் சுகனுக்கு அலைபேசி ப்ரியாவின் எண் வாங்கி அவரோடு பேசினேன். பெண்களின் மாதாந்திர அவஸ்தையை, வலியை இவ்வளவு இங்கிதத்தோடு, அழ்கியல் உடைந்து போகாமல் ப்ரியாவால் சொல்ல முடிகிறது. கொஞ்சம் பிசகியிருந்தால் வேறு மாதிரி போயிருக்கும். மிக நேர்த்தியாய் கம்பியில் நடந்திருக்கிறார்,
மிகவும் பிடித்த
நீலநிறப் பூக்கள் போட்ட
வெள்ளைச் சேலையை
அணியவே யோசிக்கிறேன்
கண்ணாடிகள் சூழ்ந்த
கடைகளில் நுழையும்போதோ
ஓரப் பார்வையாய்
என் பின்புறம் பார்க்கிரேன்
இருக்கையிலிருந்து
எழுந்து நடக்கையில்
தயங்கியபடியே
முந்தானை நுனியைக்
கையில் பிடிக்கிறேன்
அலுவலக சகாவுடன்
கூட நடக்கையில்
எனக்குப் பின்னால்
அவன் வந்து விடாதபடி
மெல்ல நடக்கிறேன்
கவனத்தைத் தின்னுகிற
உடம்பின் வலியில்
தினசரி வேலைகளில்
அடிக்கடி தவறுகிறேன்
நாற்பதைக் கடந்து
நாலைந்து வருடமாகியதில்
எப்போது வருமோ, இது
என்று பயந்துதான் நகருகிறது
என் ஒவ்வொரு பொழுதும்”
“தேரைகள்” என்றொரு கவிதை. அந்த கொஞ்சம் நீண்ட கவிதையில் அனைத்தையும் இறுதி ஆறு வரிகளைத் தவிரக் கழித்தால் சத்தியமாய் இதை ஒரு ஜென் என்று கொள்ளலாம். பாருங்களேன்,
“வாழை மரம்தான்
தேரைகளை வளர்க்கும்
குளிர்ந்த சூழலென்று
அம்மா எடுத்துச் சொன்னாலும்
அழிக்க மனமில்லை
தேரைகளின் குடியிருப்பை”
சரிதானே நான் சொன்னது.
எனக்கு இந்த நூலில் முத்தாய்ப்பாய்த் தோன்றும் ஒரு கவிதை இது. ரசனையும், ரசமும் எள்ளலும் துள்ளிப் பாய்ந்து வரும் ஒரு கவிதை. படித்தவுடன் வெளிப்படையாய் சிரிக்கப் பயந்தவர்களைக்கூட யாரும் இல்லாத இடம் சென்று ரகசியமாகவேனும் புன்னகைக்க வைக்கும் இந்தக் கவிதை புன்னகையின் சுவடு மறையும் முன்னே ஆணைப் போல எதையும் வெளிப்படையாய் வெளிப்படுத்த இயலாத நிலையில் ஆண்களால் மிகுந்த கவனத்தோடு கட்டமைக்கப் பட்டுள்ள ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் சொல்ல முடியாமல் பொத்தி பொத்தி வைத்துப் புழுங்கி புழுங்கி வாழும் பெண்களின் அவஸ்தைக் கசிவாகவே இந்தக் கவிதையைப் பார்க்க்கிறேன்.
“ நினைவு தப்பிப் போய்
படுக்கையில் கிடக்கும் பாட்டி
புலம்பிக் கொண்டிருக்கிறாள்
பக்கத்து வீட்டு
சின்னசாமி தாத்தாவோடு
தனக்கு தொடர்பில்லையென்று”
பானை சோறுக்கு பருக்கை என்ற கணக்கில்தான் கவிதைகள் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கின்றன.
ப்ரியா சொல்கிறார்,
“சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமம் இல்லைஎன்பதை பல சமயங்களில் உணர்கிறேன். மனைவியாய், தாயாய், தமக்கையாய், தங்கையாய்,இன்னும் எத்தனையோ பாத்திரங்களாக வாழ வேண்டியிருக்கிற பெண்ணிற்கு, படைப்பாளி என்ற பாத்திரத்தில் நிலைப்பது மிகப் பெரிய சவால்தான்”
ஆமாம்தான். மிகப் பெரிய சவால்தான். ஆனாலும் அந்தச் சவால்களை எல்லாம் முட்டி மோதித் தூளாக்கியிருக்கிறார் என்பதையே இந்த நூல் உரத்துக் கூறுகிறது
இன்றும் ஆணும் பெண்ணும் சமமில்லை என்பதை உணர்ந்து கலகம் செய்கிற ப்ரியா ஆணும் பெண்ணும் சமமாகவே இய்லாது. ஆணும் பெண்ணும் எதிர் சமம் என்பதை உணர்ந்து அந்த எதிர் சமத்திற்கான குரலை உயர்த்தும்பொழுது இன்னும் உசரமாய் கவிதைகள் வரும்.
இவரது குருதிச் சூட்டிலிருந்துதான் இவரது கவிதகள் பிறக்கின்றன. எனவேதான் உயிர்ப்போடும் வன்மக் குரலோடும் நம்மை ஈர்க்கின்றன.
இன்றைய நியாயங்களின் மிக நெருக்கத்தில் இருந்து இவர் கவிதைகளைப் படைக்கிறார் என்பதை யார் மீதும் சத்தியம் செய்து சொல்லலாம்.
தமிழரசி, பரமேஸ்வரி, விஜயலட்சுமி என்று என்னிடம் இருக்கும் பட்டியலில் ப்ரியாவும் ஒட்டிக் கொள்கிறார்.
”வெட்கத்தில் நனைகின்ற...”
(கவிதை நூல்)
ஆசிரியர்: கிருஷ்ணப்ரியா (8939998444)
கிடைக்குமிடம்
சௌந்தர சுகன்
அம்மா வீடு, சி 46 இரண்டாம் தெரு
முனிசிபல் காலனி, தஞ்சாவூர் 613007
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
அன்பின் ஸ்டாலின் சார், வணக்கம் நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற கொஞ்ச காலத்தில் “ஸ்டாலின் கலைஞர் ப்ளஸ்” என்று எழுதினேன் அதைப் படித்ததும் ...
-
ஜார் மன்னர் தன் குடும்பத்திற்கான சொத்துக்களை கொஞ்சமும் முறையற்ற வகையில் சேர்த்துக்கொண்டிருந்த நேரம். அவரது மனைவி ரியல் எஸ்டேட் வணிகத்தில் ...