Monday, February 3, 2014

குழந்தைகளை குழந்தைகளாக… விஷ்ணுபுரம் சரவணனின் ” வாத்து ராஜா” வை முன்வைத்து


சீ…, உட்றா சனியனே…” என்றவாறு முகத்தை சுளித்தபடியே கீர்த்தனா தன்மேல் தொத்தனங்கால் போட்ட தோனியின் கால்களை தள்ளிவிட்டுக் கொண்டிருந்ததைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. சிறு வயதில் அவனது முகத்தோடு முகம் வைத்து கொஞ்சிக்கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தவள் எப்படி இப்படி ஆனாள்?

சின்ன வயதில் அவனுக்கு புரியாததை எல்லாம் அவனோடு அவள் பேசிக் கொண்டிருந்ததை அவளுக்கு நினைவுபடுத்தியபோது தான் பேசியதெல்லாம் தோனிக்கு புரிந்ததாகவும் அவன் மறுமொழித்ததும் வினவியவை அனைத்தும் தனக்குப் புரிந்ததாகவும் அவள் சொன்னாள்.

ஆக, விலங்குகள் மற்றும் பறவைகளுடனான குழந்தைகளின் உரையாடல் அர்த்தம் செறிந்ததாக இருக்கிறது. குழந்தைகளின் மொழி அணிலுக்கும் நாய்க்கும் காக்கைகளுக்கும் கோழிகளுக்கும் புரிகிறது. அவைகளின் மொழியும் குழந்தைகளுக்கு பிடிபடுகிறது. குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்ததும் இது ஏன் மாறிப் போகிறது?

பள்ளிக்கூடங்களும், வீட்டுப் பாடங்களும், தொடர்ந்த தேர்வுகளும், மதிபெண்கள் குறித்த மதிப்பீடுகளும்…… குழந்தைகளை பறவைகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் அன்னியப் படுத்தும் பெருங்காரணிகளாக மாறிப் போயுள்ளன.

குழந்தைகளுக்கான படைப்பிலக்கியங்கள் குறிப்பாக குழந்தைகளுக்கான கதைகள் மட்டுமே குழந்தைகளையும் விலங்குகளையும், குழந்தைகளையும் பறவைகளையும் மீண்டும் ஒரு புள்ளியில் கொண்டு போய் நிறுத்த முடியும். ஆனால் அதற்கான முயற்சி தேவையான அளவில் மேற்கொள்ளப் படவில்லை என்றே சொல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கென்று ஒரு மொழி இருக்கிறது, அவர்களுக்கென்று ஒரு சூழல் இருக்கிறது. அவர்களது தேடலும் பயணமும் அலாதியானது. இரண்டு மூன்று விளக்கமாற்றுக் குச்சிகளோ, உடைந்த ஓட்டாஞ்சில்லோ போதும் அவர்களை மகிழ்வுறச் செய்ய. ஒன்றுக்கும் உதவாது என்று நாம் ஒதுக்கித் தூரப் போடும் அந்த சிறு ஓட்டாஞ்சில் காணாமல் போவது ஒன்றே போதும் அவர்களது கண்களை உடையச் செய்ய.
அவர்களது தேடல் என்பது நம்மைப் பொறுத்தவரை ஒன்றுக்கும் உதவாத ஒன்றாக இருக்கலாம். உதாரணமாக விரல் நுழைத்து வாய்வைத்து உள்ளிழுத்து உடைந்த பலூன் துண்டுகளிலிருந்து உருவாக்கப் படும் முட்டைகள் அவர்களை சொர்க்கத்திற்கே இட்டுச் செல்லும்.

மென்மையான அவர்கள் தங்களது இலக்கு நோக்கிய பயணத்தில் முரட்டுத் தனமாய் தோன்றும் நம் யாரைவிடவும் முரட்டுத்தனமானவர்கள். பாறைபோன்று மென்மையானவர்கள். பூ போன்று முரடானவர்கள்.
குழந்தைகளிடம் போய் சேரவேண்டுமானால் ஒருவன் லூசாக வேண்டும் என்று குழந்தைகளுக்கான கலைஞர் வேலு சரவணன் ஒருமுறை சொன்னார். அது எவ்வளவு பெரிய உண்மை என்பது உணர்ந்தவர்களுக்கே தெரியும்.

குழந்தைகளோடு குழந்தைகளாய் பயணப்படுபவர்களால் மட்டுமே குழந்தைகளைக் கவரக்கூடிய இலக்கியங்களைத் தர முடியும்.
எனக்குத் தெரிய அத்தகைய ஒரு சிலரில் விஷ்ணுபுரம் சரவணனும் நிச்சயமாய் ஒருவர். பள்ளி பள்ளியாய் கைக்காசை செலவளித்துப் போய் குழந்தைகளுக்கு கதை சொல்லும் கதை சொல்லிகளில் ஒருவர்.

ஒரு மாதம் விளையாட பத்துக் குழந்தைகள் கிடைக்கும். ஆனால் ஆயுளில் ஒரு வருடத்தை அதற்காக தாரை வார்க்க வேண்டும் என்றால் நூறு குழந்தைகளைக் கொடுத்துவிட்டு பத்து ஆண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறக் கூடியவர்.

அவர் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் நூல் “ வாத்து ராஜா”. எல்லோரும் இதை குழந்தைகளுக்கான நாவல் என்று சொல்கிறார்கள். ஆனால் இது குழந்தைகளுக்கான கதை. ஆனால் நாவலோ குறுநாவலோ அல்ல. இது ஒரு புது வடிவம். சோதித்துப் பார்த்திருக்கிறார் சரவணன்.

இந்தக் கதையை எழுதத் தூண்டிய

“ஒரு பழத்தின் உருண்டை வடிவத்தை
எங்கிருந்து கடிக்கத் துவங்க வேண்டும் என்பதற்கு
கணிதங்கள் உண்டா, தெரியவில்லை
ஒரு அணிலிடமும் பறவையிடமும்
கற்றுக் கொள்ள
இருக்கிற விஷயங்களில்
பழம் கடித்தலும் அடங்கும்”

என்கிற கல்யாண்ஜியின் கவிதை வரிகளுக்கு இந்த நூலை அர்ப்பணித்திருக்கிறார். இதுவே வித்தியாசானமாதாக இருக்கிறது. இதுவரை யாரேனும் குறிப்பிட்ட கவிதை வரிகளுக்கு தங்களது படைப்பினை அர்ப்பணித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இல்லை எனும் பட்சத்தில் அந்த வகையில் இது முதலாவதாகக் கூட இருக்கலாம்.

ஒரு ராஜாவுக்கு மூன்று மகன்கள். மிக நல்ல ராஜாவான அவர் சாகும் தருவாயில் தனது ராஜாங்கத்தை மூன்றாகப் பிரித்து மூன்று மகன்களிடத்தும் கொடுக்கிறார். நல்லாட்சி நடத்த வேண்டும், தன் ஆளுகையின் கீழ் இருந்த பொழுது மக்கள் எப்படி எந்தக் குறையுமின்றி இருந்தார்களோ அப்படியே அவர்கள் காலத்திலும் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு செத்துப் போகிறார்.

மூத்தவர்கள் தேசிங்கும் கலிங்கனும் தங்களது தந்தை சொன்னது போல நல்லாட்சியை நடத்துகிறார்கள். ஆனால் இளையவன் வானவன் மட்டும் தாந்தோன்றித்தனமாக ஆட்சியை நடத்துகிறான். அறிவார்ந்த அமைச்சர்கள் சான்றோர்கள் யார் சொல்வதையும் செவி மடுக்காமல் தன் இஷ்டத்திற்கு ஆட்சி செய்கிறான். அவனது கேலிக்குரிய நடத்தையை மனதில் கொண்டு அவனை அனைவரும் வாத்து ராஜா என்றழைக்கிறார்கள்.

ஒருநாள் ராஜா தர்பாருக்கு வந்துகொண்ருந்தபோது துதி பாடிக் கொண்டிருந்த சம்பு துதியை முடிக்கும் தருவாயில் வாய் தவறி “மாமன்னர் வாத்து ராஜா வருகிறார் “ என்று சொல்லிவிட்டான். ராஜாவுக்கு கோவம் வரும் என்பதும் தன் தலை தப்பாது என்பதும் தெரியுமென்பதால் சம்பு குடும்பத்தோடு தலைமறைவாகிறான். நாட்டில் உள்ள வாத்துக்களை எல்லாம் கொல்ல உத்தரவிடுகிறான் ராஜா. வாத்துகள் அழிக்கப் படுகின்றன.

சுந்தரி என்ற குழந்தை தனது இரு வாத்துக்களையும் தனது புத்திசாலித் தனத்தினால் காப்பாற்றுகிறாள். தனது இரு வாத்துகளின் சிறகுகள் மேல் முட்டை முட்டையாக மையினால் வரைகிறாள். அடுத்தநாள் சேவகர்கள் சோதிக்க வந்த போது இவை வாத்தல்ல என்று நிறுவுகிறாள். நம்பவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவிக்கும் சேவகர்கள் இவை வாத்துகள் இல்லை எனில் இவற்றின் முட்டைகளைக் காட்ட வேண்டும் என்றும் இல்லாது போனால் சிறையில் அடைத்து விடுவோம் என்றும் சொல்லிவிட்டு செல்கிறார்கள்.

இத்தோடு கதையை நிறுத்திய அமுதாவின் பாட்டி ஊருக்குப் போய் விடுகிறார். சுந்தரிக்கும் அவளது வாத்துகளுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை அறிய கதை சொல்லிகளைத் தேடி அமுதாவும் அவளது தோழி கீர்த்தனாவும் மேற்கொள்ளும் பயணம்தான் கதை.
கதை என்று பார்த்தால் அவ்வளவுதான். ஒரு நான்கு பக்கத்தில் சிறுகதையாக முடிந்துவிடும். ஆனால் அந்தக் குழந்தைகளின் பயணத்தை இவர் நீட்டிச் செல்கிற அழகு இருக்கிறது பாருங்கள் அதில்தான் சரவணன் வெளிப்படுகிறார்.

இந்தக் கதை அல்ல நம்மை அவரை நோக்கி உந்தித் தள்ளுவது. அதைக் கையாண்டிருக்கக் கூடிய விதம் நம்மை ஈர்க்கிறது. அதில் உள்ள சொற்கள் , விளையாட்டுகள் பொருட்கள் எல்லாம் குழந்தைகளினுடையவை.

”வேப்பப் பழத் தோலுக்குள்ள குச்சியை நுழைத்து எதிரில் வருகிற பையன்களை அடிக்கிற விளையாட்டுல அமுதாவை யாரும் ஜெயிக்க முடியாது” இப்படித்தான் இந்த நூலின் ஆரம்பத்தில் அமுதா அறிமுகமாகிறாள்.

ஐம்பது வயதாகும் நான் சிறுவனாக இருந்தபோது விளையாடிய விளையாட்டு இது. இப்போது வீடியோ கேம்சும் இன்னபிற விளையாட்டுகளாலும் முற்றாய் களவாடப் பட்டு உலகமயத்தின் பெருங்குடலுக்குள் போன விளையாட்டு. இப்படி தொலைந்துபோன மண்சார்ந்த தொன்மமான விளையாட்டுகளை மீண்டும் குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்கிற கதை உத்தியை சரவணன் அழகாக செய்திருக்கிறார்.

குழந்தைகளுக்கான கதை என்றபோதிலும் ஆழமான அரசியலை, ஆள்பவர்களின் கோமாளித்தனத்தை, அம்பலப் படுத்தவும் அவர் தவறவில்லை.

அந்த ஊரில் அந்த ஆண்டு நிறைய மழை பெய்கிறது. ஆகவே நிறைய நெல் விளைகிறது. மகிழ்ந்து போன மக்கள் தெய்வத்துக்கு விழா எடுத்து தங்களது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறார்கள். அரசனையும் அழைக்கிறார்கள். அதற்கு ராஜா சொல்கிறான்,

“நிறைய நெல் விளைஞ்சது என்றால் அதை மீண்டும் வயலிலேயே போடவேண்டியதுதானே. அதை ஏன் அறுவடை செஞ்சீங்க”

பொதுவாகவே ராஜாக்கள் என்றால் ஏதோ மக்கள் காவலர்கள், புத்திசாளிகள் என்பதுமாதிரி கல்வி அவர்களிடம் கல்வி கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை உடைத்து இப்படிப் பட்ட ராஜாக்களும் இருப்பார்கள் என்பதை ருசிக்க ருசிக்க படிக்கத் தருகிறார் சரவணன். இதை பள்ளிக்கூடத்து ஆசிரியர்களால் செய்ய இயலாது. இது மாதிரி நூலாசிரியர்கள்தான் செய்ய வேண்டும். அதை சரியாய் செய்திருக்கிறார் சரவணன்.

இந்தக் கதையில் மிகச் சுவாசியமான இடம் ஒன்றுண்டு. துதி பாடும் சம்பு அவையில் “ மாமன்னர் வாத்து ராஜா வருகிறார்… / பராக்.. பராக் / என்று வாய்தவறி பாடியவுடன் வானவன் ராஜா திகைத்து நிற்கிறான். மக்கள் அதிர்ச்சியியில் அப்படியே உறைந்து போய் இருக்கிறார்கள். சம்புவோ பயத்தின் விளிம்பு தாண்டி நிற்கிறான். ஆனால் குழந்தைகளோ மகிழ்ச்சியின் உச்சியில் ஹே.. ஹே..வாத்து ராஜா… வாத்து ராஜா… என்று குதூகலிக்கின்றனர். பெற்றோர்கள் பயத்தில் குழந்தைகளின் வாய் பொத்துகின்றனர். அந்த நேரம் பார்த்து ராஜாவுக்கு பரிசளிப்பதற்காக கொண்டு வந்திருந்த வாத்துக்கள் க்வாக்… க்வாக் என்று கத்த குழந்தைகள் மீண்டும் ஹே… ஹே.. வாத்து ராஜா என்று குதூகலிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் நிஜக் குழந்தைகள். இதுதான் குழந்தைகளின் உலகம். குழந்தைகளை மேன்மைப் படுத்துகிறேன் , அறிவாளிகளாகக் காட்டுகிறேன் என்று அவர்களை பொம்மைகளைப் போல் சித்தரிக்கும் இந்தக் கால கட்டத்தில் குழந்தைகளை குழந்தைகளாக காட்டியிருக்கிறார் சரவணன்.

”டம்
டம்
டம்
டம் /”
தண்டோரா இசையின் ஓசை நயத்தை மிக அழகாக பதிந்து தந்திருக்கிறார். தண்டோரா முரசு போன்றவற்றை எல்லாம் சிறுவர் கதைகளில்தான் இனி பார்க்க முடியும்.

அழிப்பதற்காக வாத்துக்களைத் தேடி வரும் அரண்மனை ஊழியர்களிடம் சுந்தரி இவை வாத்துக்கள் இல்லை என்றவுடன்,

“இது வாத்து இல்லை என்றால் என்ன.பார்ப்பதற்கு வாத்து மாதிரியே இருப்பதான் கொன்று போடுவோம்” என்று அவர்கள் சொல்வது “போல” களுக்கு இந்தக் கதை காலத்திலேயே இருந்த மரியாதையை சொல்கிறது.

கதையின் முடிவைத் தெரிந்து கொள்வதற்காய் அமுதாவோடும் கீர்த்தனாவோடும் நம்மையும் ஓட விடுகிறார் பாருங்கள்… மனிதர் விரட்டி ஜெயிக்கிறார்.

”போல” குழந்தைகள் கதைகள் பெருகி வரும் காலத்தில் “வாத்து ராஜா” ஒரு நிஜமான குழந்தைகள் கதை. முழுக்க முழுக்க ஒரு சோதனை முயற்சி. சரியாய் பரிசீலிக்கப் படும் போது சோதனை முயற்சியை செய்தவர்களின் பட்டியலில் சரவணனும் சத்தியமாய் இடம் பெறுவார்.
அடுத்த ஆண்டு எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு அந்த நேரத்தில் பசையோடிருப்பின் இந்த நூலை வாங்கித் தருவதாக உள்ளேன்.

நூலின் பெயர்:  “வாத்து ராஜா “
ஆசிரியர் :      விஷ்ணுபுரம் சரவணன்
பதிப்பகம்:       பாரதி புத்தகாலயம்
விலை         50 ரூபாய்

நன்றி : காக்கைச் சிறகினிலே









6 comments:

  1. அடடா.... விரட்டி விரட்டி உடனே படித்து விட வேண்டும் எனும் ஆவலைத் தூண்டிகிறது ரசனையான விமர்சனம்... நன்றி ஐயா...

    விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    அதிக பசை சேரவும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்

      Delete
  2. வாத்து பின்னால் நடப்பது போல் அவரது வார்த்தைகளின் பின்னாலே போய் எழுதியிருக்கிறீர்கள்...தோழர்... நானும் வாசிக்கிறேன்...
    வாத்தினை வாழ்த்தும் காக்கைகளும் பாராட்டுக்குரியவையே..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி செல்வகுமார்

      Delete
  3. இந்த நேரம் எங்கள் ஊர் பாரதி புத்தகாலயம் மூடப்பட்டுவிட்டது ...
    இனி யார் எடுத்து செய்வார்கள் என்று தெரியாது ..

    எங்கள் பள்ளி நூலகத்திற்கு ஒரு பிரதி வேண்டும்...

    பார்க்கலாம் தோழர்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். சரவணனிடம் சொல்கிறேன். ஏற்பாடேதும் செய்ய இயலுமா என்று பார்ப்போம்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...