பணி ஓய்வு பெற்ற இரவே
முதல் வேலையாய்
செத்துப் போனார்.
என்னதான் மறைத்தாலும்
எப்படித்தான் மறைத்தாலும்
நிம்மதி சிலருக்கு
ஒரே செலவில் ரெட்டை ஜோலி
அவசர அவசரமாய்
புதைத்தார்கள்
ஓயாது சுழன்ற உடல்
ஓய்ந்தா கிடக்கும்
ஓய்ந்தா கிடக்கும்
நெட்டி முறித்து
வந்தார் வெளியே
எல்லாம்
தெரிந்தது
எல்லாம்
கேட்டது
ஆனால்
தெரியவேயில்லை
யாருக்கும் அவரை
நல்லதாய் போனது
எப்படி தவிக்கும்
தானில்லாத வீடு?
நடந்தார்
“வளைகாப்பு வரையாச்சும்
இருந்திருக்கக் கூடாதா?"
விசும்பினாள்
ஆறு மாத வயிறோடு சின்னமகள்
கஸ்தூரி விளக்கருகே மனைவி
“ பயலுக்கு வேலையில்ல
பாதி கடனுக்கே
வந்த பணம் பத்தாது
என்ன அவசரம்?”
கண்களைத் துடைத்தாள்
வேறு மாதிரி யோசித்தான்
வேலை இல்லாத மகன்
“ போனதுதான் போனார்
மதியமே போயிருக்கலாம்
ராத்திரி வரைக்கும் இருந்து
என்னத்த சாதிச்சார்”
செத்த அவசரத்திலும்
புதைக்கப் பட்ட அவசரத்திலும்
அதிக அவசரமாய்
திரும்பினார்
கல்லறைக்கு
உயிர்த்தெழுந்ததால் பலமுறை உயிர் பிரிந்த வேதனை...
ReplyDeleteமிக்க நன்றி எழில்
ReplyDelete