Friday, January 31, 2014

14 கரந்தை ஜெயக்குமார்


தொழுவத்திற்கும் அதற்கும் ஆறு வித்தியாசங்களை எல்லாம் கண்டுபிடிக்க முடியாது. சற்றேரக்குறைய ஒரு தொழுவத்தில் கைகளை இரும்பால் பின்புறமாக கட்டிய நிலையில் அந்த மனிதனைக் கிடத்துகிறார்கள்.

கொல்வதற்குள் தானாக செத்துவிடக்கூடாது. அதை அனுமதிக்கக் கூடாது.கொல்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதுவரை தங்களது இரையை உயிரோடு வைத்திருப்பது. அதற்காகவே அந்த மனிதருக்கு உணவு கொடுத்து அனுப்புகிறார்கள்.

உணவோடு ஒரு மனிதர் உள்ளே வருகிறார். அந்த பலவீனமான நிலையிலும் மிகவும் சிரமத்தோடு குரலுயர்த்தி அந்த மனிதனைப் பார்த்து கேட்கிறார்,

“நீங்கள் யார்?”

“நான் ஜூலியா கோர்ட்ஸ். இந்தப் பள்ளியின் ஆசிரியர்.”

“என்னது, பள்ளிக்கூடமா? இவ்வளவு மோசமான இடத்திலா பாடம் நடத்துகிறீர்கள். இங்கே அமர்ந்தா பச்சிளங் குழந்தைகள் பாடம் படிக்கிறார்கள்?”

கால்களில் குண்டுகள் பாய்ந்த ரணங்கள்.இழுத்து வரப்பட்ட வலி. இதற்காகவெல்லாம் கலங்காத அந்த மனிதனின் கண்கள் இவ்வளவு மோசமான இடத்தில் குழந்தைகள் அமர்ந்து படிக்கிறார்களே என்பதற்காக கலங்குகின்றன.

சிறிது நேரம் கழித்து அவரே சொல்கிறார்,

“கவலைப் படாதீர்கள். ஒருக்கால் நான் பிழைத்திருந்து, புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால் நல்ல பள்ளிக்கூடங்களைக் கட்டிட்டித் தருகிறேன்.”

அதற்குமேல் ஜூலியா கோர்ட்ஸால் அங்கே நிற்க முடியவில்லை.கொண்டு வந்த சாப்பாட்டுத் தட்டைக் கீழே போட்டுவிட்டு, அழுது கொண்டே ஓடி விடுகிறார்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் அங்கே கிடத்தி வைக்கப் பட்டிருந்த மனிதர் சேகுவாரா என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

இந்த சம்பவத்தை ஒரு வலைப் பதிவில் கண்டெடுக்க முடிகிறது என்பது எனக்கு ஒரு பேராச்சரியமான விஷயமே. ஒரு வரலாற்று நூல் செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு வலை செய்கிறது. இது ஒன்றும் புதிய தகவல் இல்லைதான். ஆனாலும் சேகுவாராவின் கல்வி குறித்த அக்கறைக்கு மிகப் பெரிய சாட்சியாக இருக்கும் இந்த சம்பவத்தை சேரவேண்டிய அளவிற்கு மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் கொண்டு சேர்த்திருக்கிறோமா என்றால் ஒரு நொடியில் சிறு துளியும் யோசிக்காமல் இல்லை என்றே சொல்லிவிட முடியும்.

இந்த வேலையை கரந்தை ஜெயக்குமார் என்கிற ஒரு பட்டதாரி ஆசிரியர் தன் வலையில் செய்திருக்கிறார். அதுவும் அவர் ஒரு வரலாறு சொல்லித்தரும் ஆசிரியரும் இல்லை, கணித ஆசிரியர் என்பது ஆச்சரியத்தை அள்ளித் தருகிறது.

பொதுவாகவே, வரலாறு பதியப் படும்போது, அதுவும் இது மாதிரியான சம்பவங்களை பதியும்போது நிச்சயமாக மிகை என்பது இருக்கவே செய்யும். இதிலும்கூட மிகை இருக்கக் கூடும். அதுவும் கைமாறி கைமாறி இவ்வளவு தூரம் நகர்ந்து வருகையில் மிகையின் விகிதாச்சாரம் நிறைய கூடியிருப்பதற்கும் வாய்ப்புகளுண்டு.

ஆனாலும் கல்வி குறித்த சேகுவாராவின் கவலையும் அக்கறையும் அவரது எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் விஷயமாகும். அதே பதிவில் அவர் தனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தையும், மனைவிக்கு எழுதிய கடிதத்தையும் எடுத்தாண்டிருக்கிறார் கரந்தை ஜெயக்குமார்.

நன்கு படிக்கவேண்டும் என்று பிள்ளைகளுக்கு எல்லாத் தந்தைகளையும் போலவே புத்திமதி சொல்லும் அவர், புரட்சிக்காரர்களாகவும் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும் என்கிறபோது சேகுவாரா தெரிகிறார்.

” என்னை மரணம் தழுவும்போது உன் நினைவோடுதான் சாவேன்” என்று தன் மனைவிக்கு சே எழுதியதை ஜெயக்குமார் பதிகிற விதம் ஒரு புரட்சிக்காரனுக்குள் ஒளிந்து கொண்டிருந்த காதலை நமக்குக் காட்டுகிறது. இதைப் பதிகிற விதத்தில் நம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார் ஜெயக்குமார்.

சேவின் பன்முகத் தன்மைகளை ஒரு பதிவில் சொல்லிவிடுவது இயலாதுதான். அதை மிகச் சரியாய் செய்கிறது இந்த வலை.

இன்னொமொரு பதிவில் ஜோசப் ஸ்டாலினாக மாறிய சம்பவம் வருகிறது. ஜோசப் ஒரு நல்ல நாடறிந்த கட்டுரையாளர். ரஷ்யாவில் ஜார்ஜியா பகுதியை சேர்ந்தவர். தனது தலைவர் லெனின் கலந்து கொள்ளும் மாநாடு ஒன்றிற்கு வருகிறார். லெனினோடு ஒரு முறை பேசிவிட மாட்டோமா என்று ஏங்குகிறார். மாநாடு முடிந்ததும் இவரைக் கடந்து போகையில் லெனின் இவரைப் பார்த்து கேட்கிறார்,

“ ஜார்ஜியா எப்படி இருக்கிறது?”

ஏதோ சொல்லி ஜமாலித்த ஜோசப்பிடம் சொல்கிறார்,

“ உங்கள் எழுத்து இரும்பாய் இருக்கிறது. அப்புறம் ஏன் ஜோசப் என்று பெயரை வைத்துக் கொண்டு? ஸ்டாலின் என மாற்றுங்கள்.”

மாறுகிறது பெயர்.

இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவிடம் தோற்று பின்வாங்கும் வேளையில் கைக்கு அகப்பட்ட ரஷ்ய வீரர்களை எல்லாம் கைதிகளாக அள்ளிக் கொண்டு போகிறார்கள் ஜெர்மனிக்காரர்கள். அப்படி பிடித்துக் கொண்டு வந்தவர்களுள் ஸ்டாலினின் மகன் லெப்டினெண்ட் யாக்கோபும் இருக்கிறார் என்பது தெரிந்ததும் ஜெர்மெனி மகிழ்ந்து பேரம் பேசுகிறது.

யாக்கோபைத் தாங்கள் தருவதாகவும், மாறாக ரஷ்யா பிடித்து வைத்துள்ள ஜெர்மானிய வீரர்களைத் தந்துவிட வேண்டும் என்றும், இல்லாது போனால் யாகோபு கொல்லப் படுவார் என்றும் மிரட்டுகிறார்கள். ஸ்டாலின் சொல்கிறார்,

“நான் பேரம் பேசுபவனல்ல”

யாகோபு கொல்லப் படுகிறார். இதை இதய சுத்தியோடு பதிந்திருக்கும் ஜெயக்குமார் இடது சாரியல்ல. இந்த வலையின் பலமே அதுதான். தான் சார்ந்துள்ள இயக்கத்தின் அல்லது குழுவின் பிரச்சாரகர் அல்ல இவர். நல்லது எங்கு தட்டுப்பட்டாலும் அதை தேடி எடுத்து வந்து தன் வலையில் பந்தி வைக்கிறார்.

நல்லனவற்றை எடுத்துத் தருவதைத் தவிர வேறு எந்த அரசியலையும் இவர் பொருட் படுத்தியதாகத் தெரியவில்லை. பொதுவாகவே அரசியலற்ற எழுத்துக்களை அவ்வளவாக ரசிக்காத நமக்கும் இவரது வலை கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகவே படுகிறது.

மண்டேலாவின் வழமையான சாதனைகளோடு நில்லாமல் மிகவும் அபூர்வமான அவரது ஒரு போராட்டத்தை இவரது வலை தருகிறது.

சாரா என்கிற பெண்ணை மருத்துவர்  ஒருவன் வேலை ஆசை காட்டி லண்டன்அழைத்துபோய் நிர்வாணமாய் நிற்க வைத்து காட்சிகளை நடத்தி காசு செய்கிறான். பிறகு ஃப்ரான்ஸுக்கு விற்கிறான். பாலியல் தொழிலில் தள்ளுகிறார்கள். அவள் இறந்த பிறகும் ஒரு பூத பெண்ணின் உருப்புகள் என்று சொல்லி அவளது அந்தரங்க உறுப்புகளை பாடப் படுத்தி ம்யூசியத்தில் வைக்கிறார்கள்.

அவற்றை மிகுந்த போராட்டத்திற்கிடையே மீட்டு வந்து அடக்கம் செய்கிறார். அப்போது மண்டேலா சொன்னாராம்,

“பல மனித ஆயுட்காலங்களை கடந்து அவமதிக்கப் பட்ட பெண்ணின் உடல் இனியாவது அமைதியாக உறங்கட்டும்.”

சாரா இறந்தது 1815 இல்.

இப்படியாக ஏராளமான தேடக் கிடைக்காத அபூர்வமான தகவல்கள்.

எப்போதும் சொல்லாத ஒன்றை சொல்கிறேன். இந்த வலையை குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு பாருங்கள். குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நிறைய இருக்கிறது இந்த வலையில்.

போய்ப் பாருங்கள்
http://karanthaijayakumar.blogspot.com/




















22 comments:

  1. ''நல்லது எங்கு தட்டுப்பட்டாலும் அதை தேடி எடுத்து வந்து தன் வலையில் பந்தி வைக்கிறார்" - உண்மை எட்வின். மிகச்சிறந்த வலைப்பதிவரைப் பற்றிய உண்மையான பரிந்துரை. நான் ஏற்கெனவே அவரது பின்பற்றாளனாக (FOLLOWER ) இருப்பதால், அதில் மகிழ்கிறேன். இவரைப் போன்றவர்களால் வலையுலகம் மேலும் அர்த்தப்படுவதால் அவரையும், அவரைப்போலும் நல்ல மனம் படைத்த வலைப்பதிவரை உன் வலைப்பக்கத்தில் பாராட்டியதால் உன்னையும் நான் பாராட்டுகிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அண்ணா

      Delete
  2. அடுத்து - இது வெளியிடுவதற்காக அல்ல - உன் கவனத்திற்கு
    இது என்ன? பாதிப் பதிவின் பின் அப்படியே மீண்டும் அதே தொடர்கிறது இரண்டுமுறை? கவனித்துத் திருத்தவும்

    ReplyDelete
    Replies
    1. திருத்திவிட்டேன். இப்போது பாருங்களேன்

      Delete
  3. மனிதர், நமது இனிய நண்பர் தனக்குள் எவ்வளவு திறமைகள் + சேவை மனப்பான்மைகள் தான் ஒளித்து வைத்திருக்கிறாரோ தெரியவில்லை... என்ன செய்தாலும் அவரிடம் பேசும் போது, பேச்சில் இருக்கும் பணிவு இருக்கிறதே... வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை... பல ஆபூர்வ தகவல்களை முழுமையாக திரட்டி பகிர்ந்து கொள்வதில், அவருக்கு நிகர் அவரே...

    சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அடப் போங்க தோழர். அவரைச் சிறப்பு செய்வதெனில் அதற்கு நான் இன்னும் கொஞ்சம் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு சின்ன அறிமுகம். அவ்வளவே

      Delete
  4. மிக்க நன்றி நண்பரே
    தங்களின் நட்பில் நெகிழ்ந்து போய்விட்டேன்
    என்றும் வேண்டும் இந்த அன்பு

    ReplyDelete
  5. மிக்க நன்றி நண்பரே
    தங்களின் நட்பில் நெகிழ்ந்து போய்விட்டேன்
    என்றும் வேண்டும் இந்த அன்பு

    ReplyDelete
    Replies
    1. அடடே... என்னதிது தோழர். மிகவும் அருமையான வலை உங்களுடையது. சரியான அளவில் அறிமுகம் செய்திருக்கிறேனா என்பதுதான் கேள்வி

      Delete
  6. கரந்தை வலைப்பூ வேந்தர். அன்பாளர் அய்யா K.J.அவர்கள் வலைப்பூவில் பல பொக்கிஷங்களை பதிந்துவருகிறார்கள்.தாங்கள் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. ஆசிரியருக்கு இந்த மாணவனின் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நண்பர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமாரை சந்தித்து இருக்கிறேன்.அன்பாகப் பழகுவதற்கு இனிமையான மனிதர். எவரிடமும் நல்லது கண்டால் உடனே சொல்லி மகிழ்கிறார்.. நல்ல பகிர்வுக்கான விஷயங்களையே தேடிப் பதிவிடுகிறார்.அவரிடம் பேசிப் பழகியவன் என்று சொல்வதில் பெருமைப் படுகிறேன். அவரிடம் கண்ட திறமையை பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஆஆறாஆஊஆல்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதாங்க அய்யா. மிக்க நன்றி

      Delete
  9. அன்பரின் வலைப்பூ நான் தொடர்ந்து படிக்கும் வலைப்பூ. கரந்தை தமிழ்சங்கம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் சிறப்பானவை! அருமையான தளத்தையும் நண்பரையும் இன்னும் பலருக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையான வலை தோழர். நீங்கள் தொடர்ந்து அவரை வாசிப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. மிக்க நன்றி தோழர்

      Delete
  10. ஐயா அவர்களது பதிவினை அங்கேயே முன்பே படித்துள்ளேன். வரலாற்று சிறப்பு மிக்க தகவல்களை அனைவரும் அறிந்திடல் வேண்டும் எனும் நோக்கோடு தாங்கள் மிண்டும் பதிவிட்டது, மிக்க சிறப்பு.

    //இப்படியாக ஏராளமான தேடக் கிடைக்காத அபூர்வமான தகவல்கள்.

    எப்போதும் சொல்லாத ஒன்றை சொல்கிறேன். இந்த வலையை குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு பாருங்கள். குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நிறைய இருக்கிறது இந்த வலையில்.//

    உண்மைதான் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகையும் கருத்திடலும் என்னை மகிழச் செய்கின்றன. மிக்க நன்றி தோழர்

      Delete
  11. இரண்டு பிரம்மாக்கள்...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...