கடந்த ஒரு வார காலமாக எதற்குமே ஒத்துழைக்க மறுக்கிறது உடல்.
“பயணம் தவிர். ஓய்வெடு,” என்கிறார் மருத்துவர்.
“எனக்கப்புறமும் நாலு வருஷ சர்வீஸ் இருக்கு. இப்படி இருந்தா எப்படி? ஓய்வெடுத்து உடம்பைக் கவனி,” என்று உதைக்காத குறையாக கடிந்து கொள்கிறார் தலைமை ஆசிரியர்.
வேறு வழியில்லை. கட்டிலில் தலையணையை சுவரோரமாய் சாய்த்துப் போட்டு சாய்ந்து அமர்ந்தபடி வாசிப்பிற்காக வரிசைகட்டி நிற்கும் நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
தோழர் மோகனா அவர்கள் இரு சுமை நூல்களை கருணையோடு புத்தாண்டிற்கு பரிசளித்திருக்கிறார்கள். அந்தக் குவியலிலிருந்து தோழன் யூமா வாசுகி மிக அருமையாக மொழிபெயர்த்துள்ள “கருப்பழகன்” என்ற நாவலின் 29 வது அத்தியாயத்திற்குள் பயணித்துக் கொண்டிருக்கும்போதுதான் மேல்வீட்டு பாட்டி இன்றைய தபால்களைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
இரண்டு நூல்கள், மூன்று சிற்றிதழ்கள், கொஞ்சம் தபால்கள். அந்த இரண்டு நூல்களுள் ஒன்று தம்பி வைகறை அனுப்பியிருந்த அவரது “ நிலாவை உடைத்த கல்”
என்னமோ தெரியவில்லை, யூமாவின் நூலை ஓரம் மடக்கி வைத்துவிட்டு, தம்பி வைகறை அனுப்பியிருந்த “ நிலாவை உடைத்த கல்” கவிதை நூலை புரட்ட ஆரம்பித்தேன்.
தனது கவிதைகளைப் பற்றி வைகறை சொல்கிறார்,
“என் கவிதைகள் உங்களுக்கு
பெரிதாய் ஏதும்
கொண்டு வரவில்லை
அதிக பட்சமாய் கொடுக்கலாம்
ஒரு புன்னகையை
அல்லது
ஒரு துளி கண்ணீரை”
ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன், ஒரு நல்ல கவிதை இதை செய்தால் போதாதா? ஆனாலும் இவ்வளவு தன்னடக்கம் எல்லாம் தேவை இல்லைதான் வைகறைக்கு.
புன்னகையையும் கண்ணீரையும் தாண்டி அப்பழுக்கில்லாத, வாசனைத் திரவியம் ஏதும் அடிக்காமலே மணக்கும் குழந்தைமையை இவர் கூடை கூடையாய் கொண்டு வந்து கொட்டுகிறார். அது ஒன்றிற்காகவே இவரைக் கொண்டாடலாம்.
தனக்கேற்பட்ட அல்லது தான் கண்டுணர்ந்த ஏதோ ஒன்றின் குதூகலத்தை,எள்ளலை, வெட்கத்தை, கோவத்தை, ஏக்கத்தை, தவிப்பை, ஆதங்கத்தை, ஆவேசத்தை,வலியை, வெறுமையை, முழுமையை, அன்பை, காதலை, காமத்தை வாசகனுக்கு கடத்திக் கொடுக்குமானால் அது கவிதை. அதுவே கொஞ்சம் அழகியலோடு வருமென்றால் அது ஆஹா கவிதை.
வாசித்து முடித்துவிட்டு இன்னுமொருமுறை வாசித்தேன் ஏதேனும் “போல கவிதைகள்” இருக்கிறதா என்று. சத்தியமாய் எதுவும் தென்படவில்லை.
பொதுவாகவே குழந்தைகள் நம்மை ஜெயிக்கவே செய்வார்கள். குழந்தைகளிடம் தோற்பவர்கள் என்னை ஜெயிக்கிறார்கள். அதை ஒத்துக் கொள்பவர்கள் எனது மரியாதைக்கு உரியவர்களாகிறார்கள். குழந்தைகளிடம் தோற்பதை சந்தோஷித்து கொண்டாடுபவர்கள் என்னை அடிமை கொள்கிறார்கள்.
வைகறை எழுதுகிறார்,
“எப்படி சிரித்தாலும்
தோற்றுப் போகிறேன்
ஏதாவதொரு குழந்தையிடம்”
குழந்தைகளிடம் வெற்றிகரமாக உறவாட ஒருவன் கோமாளியாக வேண்டும். இது நான் வேலு சரவணனிடமிருந்து கற்றது.
ஒன்று புரிகிறது, ஒரு குழந்தையைப் போல் அழகாய் சிரிக்க இன்னொரு குழந்தையால்தான் ஏலும். இப்படி குழந்தைகளிடம் இந்த இளைஞன் தோற்கும் புள்ளியில்தான் நாம் அவனிடம் தோற்று அடிமைப் படுகிறோம்.
நம் பாட்டனும், தாத்தனும், அப்பனும் பார்க்காத வறட்சியை நாம் பார்க்கிறோம். விவசாயி, விவசாயத் தொழிலாளி உயிர்குடிக்கும் இந்த வறட்சி அறுவெறுப்பு எதனெனினும் அறுவெறுப்பாய் உள்ளது. பூமிதான் இப்படி வறண்டு கிடக்கிறதென்றால், வறட்சியை சொல்லும் படைப்புகளில் பெரும்பான்மை இதைவிடவும் வறண்டே வருகின்றன.
இந்த இளைஞன் வறட்சியின் கோரத்தை எழுதுகிறான்,
“கூழாங்கற்களில்
காய்ந்து கிடக்கிறது
கோடை நதி”
சொல்லுங்கள், அபூர்வமாகத்தானே யாராவது இப்படி எழுதுகிறார்கள்.
இன்றைய நதிகளின் அவலத்தை சொல்லும்போது,
“புன்செய்
வயல்கள் மட்டுமல்ல
ஆறுகளும்தான்” என்கிறான்.
புஞ்சை பூமி என்போம், இவனோ புஞ்சை ஆறு என்கிறான். ஆக, இவனது கணக்குப்படி காவிரி புஞ்சை நதி ஆகிறது. அப்படியெனில் கங்கை நஞ்சை நதி. நதிகளில் நஞ்சை புஞ்சை என்று நம் மாதிரி கிழவர்களுக்கு ஒரு இளைஞன் கவிதை எழுதி வகுப்பெடுக்கிறான். எடுத்துக் கொண்டால் பிழைப்போம் அல்லது போகிற போக்கில் அடித்துச் செல்லப் பட்டு ஏதோ ஒரு புதரில் செறுகிச் சாவோம்.
அதே நேரத்தில் முரட்டுத்தனமாக கோடையை இவன் வெறுப்பவனாகவும் தெரியவில்லை. இயல்பாக வருகிற கோடையை இவன் ரசிக்கவே செய்கிறான். எப்போதும் நிறைந்து கிடக்கும் குளங்களை மட்டும் அல்ல, அவ்வப்போது வறளவும் வேண்டும் இவனுக்கு. குளங்களின் வயிறை சுத்தம் செய்யும் பேதி மருந்தாக கோடை இருக்க வேண்டும் இவனுக்கு.
போக வறண்ட குளத்திலும் இவனுக்கு எடுக்க ஏராளமாய் கவிதைகள் இருக்கின்றன,. வறண்ட குளம் பற்றி எழுதுகிறான்,
“ குளத்தில்
என்றோ எறிந்த கற்களை
மீட்டுத் தந்தது கோடை”
இவனுக்கு குழந்தைகளை மட்டுமல்ல, குழந்தைகளுக்குப் பிடித்த வண்ணத்துப் பூச்சி, மழை, கூழாங்கற்கள் ஆகிய அனைத்தையும் பிடித்திருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் அவற்றின் காதலனாகவே மாறிப் போகிறான்.
“நனைய மறுக்கும்
நம்மைப் பார்த்து
அழுகிறது குடை’ என்கிறான்.
குடையின் அழுகையைக் கூட உதாசீனப் படுத்தாமல் அதற்கான காரணத்தை புலனாய்ந்து அழகியலோடு வடிக்கிறான்.
வானவில்லைப் பற்றி விஞ்ஞானிகள், இலக்கியவாதிகள் என்று யார் யாரோ என்னென்னவோ சொல்லியாகிவிட்டது. வானவில்லைக் காட்டி குழந்தைகளிடம் ஏதேதோ சொல்லி அவர்களை சலிப்பேற்றிவிட்டோம். ஆனால் வைகறை சொல்கிறான், வானம் வரைந்த குழந்தைகளின் குதூகலம் வானவில் என்று. பாருங்களேன்,
“ மழையில் நனையும்
ஒரு குழந்தையின்
எழுதிக் காட்டமுடியாத
சந்தோசங்களைத்தான்
வரைந்து காட்டுகிறது வானம்
வானவில்லாக”
“காவிரியைக் கடக்க
ஓடங்கள் தேவையில்லை
ஒட்டகங்களே போதும்”
என்பார் தணிகைச் செல்வன்.அதை இவன் வாசித்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவர் தோள் மேல் அமர்ந்து இவன் எழுதுகிறான்,
“முட்டாள்
எதற்காக பாலம்
மணலைக் கடப்பதற்கு”
தணிகை மாதிரி ஒரு அனுபவ ஆளுமையிடம் தெறிப்பது இந்த இளைஞனிடமிருந்தும் தெறிப்பது பெரும் நம்பிக்கையை நம்முள் அள்ளிவந்து போடுகிறது. நமக்கு தணிகையும் வேண்டும் வைகறையும் வேண்டும்.
ஒரு எலி வீட்டிற்குள் நுழைந்துவிட்டது. ஆளாளுக்கு கம்புகளோடு எலி வேட்டையில் இறங்குகிறார்கள். அது அங்கும் இங்கும் ஓடி ஒளிகிறது. அவசர கதியில் பொருட்கள் எடுத்தெறியப்பட்டு எலியே இலக்காகிப் போகிறது. இறுதியாய் எலி சாகிறது. அதை எறிந்து வந்தபின் சிதறிக் கிடக்கிற பொருட்களை ஒழுங்குபடுத்தும் அயர்வில் சொல்வோம் “ இந்த நாசமா போற சனியன் என்ன பாடு படுத்திவிட்டது”
இவர்கள் எலியைக் கொல்ல முடிவெடுத்துவிட்டதும் அது சமர்த்தாய் வந்து அமர்ந்து அடிபட்டு சாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எலிவேட்டையில் சிதறிக் கிடக்கும் பொருட்களைப் பார்த்ததும் வைகறை எழுதுகிறான்,
“சிதறிய பொருட்களில்
பரவிக் கிடக்கிறது
இறந்த எலியின் போராட்டம்”
இவனுக்கு எப்படி இப்படி தோன்றுகிறது? காரணம் இதுதான், இவன் கவிஞன்.
கருத்து முதல்வாதத்தை மணிக்கணக்காய் யாருக்கும் புரியாமல் பேசும் வேதாந்திகளுக்கும் பஞ்சமில்லை. கருத்து முதல்வாதத்திற்கு எதிராய் தர்க்கம் செய்கிறோம் என்று வறண்டு கறைபவர்களும் ஏராளம். வைகறை கருத்து முதல்வாதத்தை எவ்வளவு லாவகமாக எதிர் கொள்கிறான் பாருங்கள்,
“அவனது
முகம் மலர
தியானமும் வேண்டாம்
உபதேசமும் வேண்டாம்
யாராவது கொடுங்கள்
ஒரு பிடி சோறு”
எப்படி கன்னத்தில் அறைந்து எதார்த்தத்தை சொல்கிறது இந்தக் கவிதை.
”பட்ட மரம்
ஒற்றைக் குயில்
கிளையெல்லாம் இசை”
எப்படி ஒரு கவிதை. இதுவே காடெல்லாம் இசை என்று வந்திருப்பின் இன்னும் அழுத்தம் கூடியிருக்கும்
எனக்குத் தெரிய நான் சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் ஒரே புத்தகத்தில் இத்தனைக் கவிதைகளைக் காணக் கிடைக்கவில்லை.
நிறைய நம்புகிறேன், குழந்தைமையைக் கொண்டாடுகிற வைகறை, குழந்தைகளுக்கான படைப்புகளையும் எதிர்காலத்தில் தருவான். அதற்காக இவனிடம் இரண்டு கை ஏந்துகிறேன்.
எலியின் மரண வலியை கவலையோடு பார்க்கிற, வேதாந்தம் எல்லாம் தூர எறிந்துவிட்டு மனிதனுக்கு ஒரு கவளம் சோறு கேட்கிற இவனது மனிதம் இவனை வெகுசீக்கிரம் மக்கள் கவிஞனாக முழுமைபடுத்தும்.
அவசியம் வாசியுங்கள்.
நேரமாகிறது. விஷ்ணுபுரம் சரவணனுக்கு இதை அனுப்பவேண்டும். கொண்டாடுவான்.
நூல் : “நிலாவை உடைத்த கல்”
கவிஞர்: வைகறை (96884 17714)
கிடைக்குமிடம்:
தகிதா பதிப்பகம்
4/ 833, தீபம் பூங்கா
கே.வடமதுரை
கோவை--641017
அலைபேசி: 94437 51641
அறிமுகத்திற்கு நன்றிகள்.. கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்கி விடுவேன்..
ReplyDeleteமிக்க நன்றி இளங்கோ. தட்டிக் கொடுத்தால் மிக நல்ல படைப்புகளை இவரிடம் எதிர்பார்க்கலாம்
Deleteமிக்க நன்றி நண்பர் இளங்கோ அவர்களே! முகவரி தாருங்கள்!
Deleteவைகறையின் "நிலாவை உடைத்த கல்" விமர்சனமும் கவிதைகளும் நம்பிக்கைதருபவைகளாக வாசிக்கையில் உணர்ந்தேன்.நிதம் வசிப்பது,துணிந்து வாசிப்பது,வாசித்துக்கொன்டேஇருப்பது நல்லவற்றை அடையாளப்படுத்த உதவும்.வைகறைக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர். அவரை வாழ்த்துங்கள். அவசியம் வாங்கிப் படியுங்கள். நல்ல நூல்
Deleteமிக்க நன்றி இளங்கோ. தட்டிக் கொடுத்தால் மிக நல்ல படைப்புகளை இவரிடம் எதிர்பார்க்கலாம்
ReplyDeleteதோழர் தங்களின் அறிமுகமே அழகாக இருக்கிறது.... அவசியம் வாசிக்கிறேன்.பரிந்துரைத்தமைக்கு நன்றி...
ReplyDeleteமிக்க நன்றி மது. அவரோடு பேசுங்கள். நூல் அனுப்புவார். அவரது எண் 9688417714
Deleteநல்ல நூலை , மிகச் சரியாகவும், மிக அழகாகவும் அறிமுகபடுத்தியதற்கு நன்றி. கண்டிப்பாக “நிலவை உடைத்த கல்” நூலை வாங்கிப் படிக்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteநனைய மறுக்கும்
ReplyDeleteநம்மைப் பார்த்து
அழுகிறது குடை
மிக்க நன்றி தோழர். நூலை வாங்கிப் படியுங்கள்
Delete“நனைய மறுக்கும்
ReplyDeleteநம்மைப் பார்த்து
அழுகிறது குடை’ என்கிறான்.
நல்ல படைப்புகளை இவரிடம் எதிர்பார்க்கலாம்!!
நன்றி ஐயா... அவசியம் வாங்கிப் படிக்கிறேன்... :-)
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deletemikavum nutpamaana kavithaip paarvaiyaik kondulla vaikaraiyai naanum vaazhthukiren neenkal kurippitta kavithaikale niraivaaka ullana noolai vaasikkum aavalum koota ....
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteநல்ல பதிவுகளை பாராட்டியே ஆகவேண்டும். அதிலும் எங்க ஊர்க்காரர்! விட்டுவிடுவோமா!! விரைவில் நூலை வாங்கி அதில் அவர் கோர்த்து வைத்திருக்கும் சொற்றொடரான முத்துக்களை ரசித்துவிட்டு அப்புறம் அவரிடம் உரையாடுகிறேன். தங்களின் ஊக்கத்திற்கு நன்றி. அப்படியே என்னையும் ஊக்கப்படுத்தவும்....
ReplyDeleteமிக்க நன்றி பிரேமா. செய்துட்டாப் போச்சு
Deleteஆஹா, கவிதையை தேர்ந்தெடுத்து என்மன்டில் விதைத்த விதம்
ReplyDeleteநீரின்றி முளைக்காது வீரிய விதையாயினும் என விளங்கி விட்டது.
குருவின்றி அமையாது அறிவும் தகமையும். வைகறை ஒரு விடியலாய்.
"நிலாவை உடைத்த கல்"லை பல இதயங்களைத் தொடச்செய்த அய்யாவுக்கும், இச்சிறுவனைத் தட்டிக் கொடுத்துவரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
Delete