Saturday, January 19, 2013

அப்படித்தானோ?

இன்று வழக்கம் போல சமயபுரம் தோல் ப்ளாசாவில் இறங்கி பள்ளிக்கு நடந்து கொண்டிருக்கிறேன்.

ஒரு பத்து அல்லது இருபது தப்படிதான் போயிருப்பேன். மின்னலென ஒரு பெண் மொபெடில் என்னை முந்திச் சென்று மறித்து நின்றாள்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் பன்னிரண்டாம் வகுப்பு படித்தக் குழந்தை.

“ஏய் வாய், எப்படி இருக்க?”

“ நல்லா இருக்கேன் சார். ஆமா ஏன் சார் இப்படி எளச்சுப் போனீங்க”

“வயசாகுதுல்லடா. 50 ஆச்சு. இனி அப்படித்தான்”

“ லூசா சார் நீங்க. ”

(மிரண்டுடாதீங்க. கீர்த்தி மட்டுமல்ல, இவள் மட்டுமல்ல,இப்போது என்னிடம் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளும் இப்படித்தான் பேசுவார்கள்)

“ நானாடி லூசு?”

 “பின்ன. அப்பாவுக்கு 55 ஆகுது. எனக்கென்ன வயசா ஆச்சுன்னு டை அடிச்சு எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கார் தெரியுமா?”

” போதுண்டி கிழவி”

“சரி, சரி, வண்டியில ஏறுங்க கொண்டு போய் விடுறேன்”

“பக்கம்தானே போயிடறேண்டா. சிரமம் வேண்டாம்”

 சிரமம் எல்லாம் இல்ல. போற வழிதான் .”

“வேணாண்டா...”

“ தள்ளியெல்லாம் விட்டுட மாட்டேன். பயப்படாம ஏறுங்க.”

மறுத்தேன்.

“ இப்ப எங்க அண்ணன் வந்திருந்தான்னா அவனோட போயிருப்பீங்கள்ள?”

“இல்லடா”

“ஒரு பொம்பளப் புள்ள வண்டி பின்னாடி உட்கார்ந்து வரதான்னு ஈகோ உங்களுக்கு”

”அதில்லடா”

”அதுதான்”

இதற்குமேல் பேசினால், ஒன்று அடித்து விடுவாள் அல்லது அழுது விடுவாள். பேசாமல் ஏறி அமர்ந்தேன்.

“சொன்னாள்,

“அது ! ”
12 comments:

 1. "வேணாண்டா ! நா போயிக்கிறேன் ! கொஞ்ச தூரம்தானே ! " என்பது வரை யதார்த்தம் ! அதன் பிறகு நீங்கள் தந்தையாக மாறுகிறீர்கள்! மொபட்டில் இருவர் ... வேண்டாமே ! என்று கூட ! அது ஆண்ணாதிக்கம் அல்ல பெண்ணே!உன்மீது உன் எதிர்காலத்தின்மீது உள்ள அக்கரை! என்பதாகக் கூட சொல்லலாம் ! இல்லையா எட்வின் அவர்களே! உங்கள் வயது ,தொழில்கொடுக்கும் கம்ம்பீரம் சார்ந்த பார்வை என்றும் கொள்ள அந்த குழ்ந்தைக்கு சொல்லிக் கொடுக்கலாம் தானே!---காஸ்யபன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர்

   Delete
 2. கெள்ரவக் குறைச்சல் என்பதைவிடவும்,, ஒருவித கூச்சம் என எடுத்துக்கொள்ளலாம் இப்போதும் நான் பஸ்ஸிலோ வேறு பொது இடங்களிலோ ஆண்கள் அருகில் இடமிருந்து உட்கார்ந்தால் கொஞ்சம் நெளிந்து கொள்ளும் இல்லாவிடில் டக் என எழுந்துகொள்ளும் நிறைய ஆண்களைப் பார்க்கிறேன்நம் சமுதாயத்தால் கற்றுக்கொடுக்கப்பட்ட பாடம் அது,, நமக்குள் உறைந்துள்ளது!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி உமா

   Delete

 3. முதலில் ஏன் மறுத்தீர்கள் என்று பிறகாவது உண்மையாகச் சிந்தித்தீர்களா.?

  ReplyDelete
  Replies
  1. அது இல்லை தோழர்,

   சட்டையைக் கோர்த்துப் பிடித்து ” பெண் என்பதால் மகளே ஓட்டினாலும் பின் அமர்ந்து வருவது கேவலம் என்று நினைத்துதானே மறுக்கிறாய்?” என்று சாலையில் நிற்க வைத்துக் கேட்கும் அவளது ஆவேசத்தை, ஆளுமையை சொல்லவே இந்தப் பதிவு.

   Delete
 4. உங்கள் மாணவி உங்களிடம் அப்படி கேட்டிருக்க கூடாது

  ReplyDelete
  Replies
  1. இல்லை சசி,
   அப்படிக் கேட்டதால்தான் அவள் என் குழந்தையே

   Delete
 5. சில சமயங்களில், மாணவர்கள் ஆசானாகி விடுகிறார்கள்...

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் அல்ல இள்ங்கோ, எப்போதுமே

   Delete
 6. உண்மைதான் எட்வின்... மாணவர்கள்தான் கற்றுத் தருகிறார்கள்
  இதை மறக்காத ஆசிரியர்களை மாணவர்களும் மறப்பதில்லை.. இந்தப் பாசம் இன்றும் மாணவர்கள் சிலரிடமும், மாணவிகள் பலரிடமும் இருப்பது ஏன்? நானும் இதுபோல நெகிழ்ந்த தருணங்கள் உண்டு... நன்றி தோழா.

  ReplyDelete
  Replies
  1. உங்களது வருகை மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது . மிக்க நன்றிங்க அண்ணா

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels