Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Sunday, June 8, 2025

அதற்குமேல் அவளாலும் ஓடிவிடமுடியாது

 ஒரு விவாதம்

ஒரு கட்டத்தில் அதற்குமேல் விவாதிக்க இயலாது என்று உணர்கிறார்
மிகவும் பிரியத்திற்குரிய அணுக்கத் தோழர் அவர்
"I quit" என்று சொல்லிவிட்டு விட்டுவிட்டு வந்த புத்தகங்களை அடுக்கும் வேலைக்குத் திரும்பிவிட்டார்
சிலர் i quit என்பதற்கு பதில் ஓடுகிறமாதிரி ஸ்மைலியைப் போட்டிருப்பார்கள்
🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
அவர் ஆங்கிலம் படித்தவர்
"Ode on grecian urn" குறித்து என்னோடு பலமுறை பேசி இருப்பவர்
கீட்ஸ் ஒரு மிக மிகப் பழமையான கிரேக்க ஜாடியைப் பார்க்கிறான்
அந்த ஜாடிக்கு பலநூறு வயது
அதில் ஒரு இளைஞன் ஒரு யுவதிக்கு முத்தமிட முயற்சிப்பான்
அவள் ஓடிக்கொண்டிருப்பாள்
கீட்ஸ் அந்த இளைஞனிடம் சொல்வான்
Bold Lover, never, never canst thou kiss,
Though winning near the goal yet, do not grieve;
She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!
கொஞ்சம் நாசுக்காகப் பெயர்த்தால்
இளைஞனே அவளைத் தொடுகிற தூரத்தில் இருந்தாலும் அவளை முத்தமிட ஒருபோதும் உன்னால் ஆகாது
ஆனாலும் தளர்ந்துவிடாதே
அதற்குமேல் அவளாலும் ஓடிவிடமுடியாது
ஒரு அரசியல் உரையாடல்கூட இப்படி இலக்கியத்தை நோக்கி நகர்த்தும்
பேசுபவர்களுக்கு இலக்கியம் வருமென்றால்

Saturday, June 7, 2025

எதற்கு எது எச?

  "எங்கே

ஒளிந்துகொண்டால்
எனை நீ
கண்டுபிடிப்பாய்....?"

என்பது இளமதியின் கவிதை

"பாகிஸ்தானிடம் முன்னமே சொல்லிவிட்டுதான் தாக்கினோம்"

என்பது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கூற்று

எதற்கு எது எச?

Wednesday, May 14, 2025

ஒரு பிக்னிக்தான் சிலப்பதிகாரத்தின் தோற்றுவாய்

 புதிய ஆசிரியனும் காக்கையும் வந்ததாப்பா?

நான் ஊர்ல இல்ல எட்வின்.
எங்க?
கண்ணகி கோட்டம்
”மண்மகள் அறிந்திராத வண்ணச் சீறடிகளை
மதுரை வரை நடந்த சீரடிகளை
என் அன்பனை இழந்தேன் என்று கதறியழுதவளை
கேட்டதாகக் கூறுப்பா
மணிமேகலையை கண்ணகி மகளென்று மாதவி கூறியதை
கண்ணகி காதில் சொல்லி வாப்பா,
அள்ளிவந்த கண்ணகியில் ஒரு துண்டை அனுப்பு”
என்று சொல்கிறேன்
துண்டென்ன முழுசையும் அனுப்புகிறேன் என்ற பதில் வர சாய்கிறேன்
இப்படியான ஒரு பிக்னிக்தான் சிலப்பதிகாரத்தின் தோற்றுவாய்
இளங்கோ, வேண்மாள், சீத்தனார்
அமைச்சர்கள் புடைசூழ மலையழகை தரிசிக்க பிக்னிக் போகிறான் செங்குட்டுவன்
அங்கு அவனைக் காண வந்த மக்கள்
ஒற்றை முலையோடு நின்ற ஒரு பெண்ணை வானத்தில் இருந்து விமானத்தில் வந்தவர்கள் அதனுள் இருந்த அவளது கணவனைக் காட்டி அழைத்துப் போனார்கள் என்று சொல்கிறார்கள்
அதைக் கேட்டதும்
சாத்தனார் அது கண்ணகி என்றும்,
கண்ணகி காதையை சுருக்கமாக சொல்கிறார்
இதைக் கேட்டதும் இளங்கோ அதை ஒரு காவியமாக எழுத இருப்பதாக சொல்கிறார்
சாத்தானார் மகிழ்கிறார்
இப்படியாக,
அந்த மலைப் பயணம்தான் சிலம்பை கொடுத்திருக்கிறது
இந்த நினைவோடு சாய்ந்து கிடந்தவன்
நாட்டார் இலக்கியத்தில் ஒற்றை மொலைப் பெண்கள் குறித்து இருப்பதுகுறித்து படித்ததெல்லாம் நினைவிற்குள் வந்துபோயின
“ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி” என்பதும் நினைவிற்கு வந்தது
முகநூலைத் திறந்தால்
”அன்னாந்து அம்மா என்றேன்
ஒரு முலை உதிர்த்தாள்.
ஒவ்வொரு பசியின் கைகளிலும் ஒவ்வொரு முலைகள்.
பனங்காடே
முலையூட்ட நெடுநெடுவென வளர்ந்த தாயே
உமக்கு சலிப்பே வராதா...
கைவிடேன்
உன் மார்பை விட கனமானது உந்தன் அன்பு
சுமக்க முடியவில்லை.”
என்று Poondi Jeyaraj எழுதுகிறான்
ஆசிர்வாதம்

Sunday, April 29, 2012

பெயரில் இருக்கிறது

" பலரும் சொல்கிறார்கள்
பெயரில் என்ன இருக்கிறது?

சேரி
பறையன்
தேவடியாள்
பீ, மூத்திரம், கொசு
பன்னி
கழுதை, கருவாடு
பூணூல்
அப்பம், வடை, தயிர் சாதம்

ஆங்கிலம்
சமஸ்கிருதம்
மனு
அமெரிக்கா
சங்கர மடம்
கொழும்பு

வள்ளலார்
பெரியார்
அம்பேத்கர்
மார்க்ஸ்

பெயருக்குப் பின்னால்
எல்லாமும் இருக்கிறது “

என்ற இரா. காமராசு அவர்களின் கவிதையை ஒரு முறை கவிதா சரணில் வாசித்த போது என்னமோ செய்தது. ஆனாலும் என்னமோ தெரியவில்லை அந்த கவிதை பச்சென்று மனதிற்குள் வந்து பசை போட்டு அமர்ந்து கொண்டது.

“ பலரும் சொல்கிறார்கள்

பெயரில் என்ன இருக்கிறது?”

எனக்கும் அப்படித்தான். பெயரில் என்ன இருக்கிறது என்றுதான் நினைத்தேன். பெயர் ஒரு அடையாளம். அவ்வளவுதான். அதைத் தாண்டி அதில் என்ன இருக்கிறது என்றுதான் யோசிக்கத் தோன்றியது.

பெயருக்குள் ஜாதியும், ஜாதி அரசியலும், ஆணவமும் அடக்குமுறையும் அடிமைத்தனமும் இருக்கிறது என்பதெல்லாம் தெரிந்திருந்தும் பெயர் குறித்து பெரிதாய் நான் எப்போதும் அலட்டிக் கொண்டதில்லை.

இப்போது முக நூலில் கொஞ்சம் பரிச்சயம். சென்ற டிசம்பர் 25 அன்று முகநூலைத் திறந்தவன் அப்படியே உறைந்து போனேன். ஏறத்தாழ ஐம்பது கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் எனக்கு குவிந்திருந்தன. இவை பெரும் பாலும் தனி மடலிலேயே வந்திருந்தன.

எப்படி இது?

முக நூலில் என்னை பற்றிய சுய குறிப்பில் நான் ஒரு நாத்திகன் என்றும், இடது சாரி என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்.

டிசம்பர் 25 எனில் நம்மைப் பொருத்தவரை வெண்மணி நினைவு நாள்தானே. நமக்கெப்படி இவ்வளவு கிருஸ்மஸ் வாழ்த்துக்கள்?

இது கொஞ்சம் மனதைப் பிசைந்தாலும் அப்படியே விட்டு விட்டேன். பொங்கல் வந்தது. அன்று முகநூலில் தனி மடலில் எனக்கு எந்த பொங்கல் வாழ்த்தும் வரவில்லை.

கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் எனக்கு வந்து குவிந்ததற்கும் பொங்கலுக்கு வாழ்த்துக்களே வராமல் போனதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா?

யோசித்த போது ஒன்று பளிச்செனத் தட்டியது. நாத்திகன் என்றும் இடதுசாரி என்றும் நான் எழுதியிருந்த போதும் கிருஸ்மஸ் அன்று அவர்கள் வாழ்த்து அனுப்பியதற்கும் பொங்கள் அன்று அவர்கள் அவர்கள் எனக்கு வாழ்த்து அனுப்பாமல் போனதற்கும் இது ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும்.

முகநூல் நண்பர்கள் என்னை ஒரு கிருஸ்தவனாகப் பார்த்திருக்கிறார்கள். அதனால்தான் கிருஸ்மஸ் அன்று வாழ்த்து அனுப்பிய அவர்கள் பொங்களுக்கு அனுப்ப தவறியிருக்கிறார்கள்.

என்னை முன் பின் அறிந்திராத அவர்கள் என்னை கிருஸ்தவனாகப் பார்க்கக் காரணம் எது?

என் பெயர் என்னை ஒரு கிருஸ்தவனாக அவர்களுக்கு அடையாளப் படுத்தியிருக்கிறது.

ஆக பெயரில் ஏராளம் இருக்கிறது என்பது புரிந்தது. பலரது பெயர்கள் ஏராளமான பிரச்சினைகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ள்ன.பெயர் ஒன்றும் நாம் நினைத்தது போல அப்படி லேசான ஒன்று அல்ல.

அப்படி அதிகமான விவாதங்களை கொண்டுவந்து சேர்த்த பெயர்களில் பாரதி தாசன் பெயரும் ஒன்று. அதில் அவரே பங்கெடுத்து பதிலளித்த சம்பவங்களும் உண்டு.

பார்ப்பன எதிர்ப்பு, அடங்க மறுத்துத் திமிறும் தன்மானம், கலப்படமில்லாத மொழி ஆகிய மூன்று விஷயங்களில் புரட்சிக் கவிஞர் கொஞ்சமும் சமரசம் செய்துகொள்வதில்லை என்பதில் கொஞ்சம் முரட்டுத் தனமாகவே தீவிரம் காட்டினார் என்று கொள்ளலாம்.

பார்ப்பன எதிர்ப்பில் புரட்சிக் கவிஞர் எவ்வளவு தீவிரமாக இருந்தார் என்பதை யாரும் சொல்லி யாரும் தெரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. எதிலுமே உச்சம் தாண்டியே பழக்கப் பட்ட பாரதிதாசன் பார்ப்பன எதிர்ப்பு நிலையிலும் உச்சம் தாண்டியே நின்றார். “ பாம்பையும் பார்ப்பனையும் சேர்த்துப் பார்த்தால் பார்ப்பானை அடித்து விட்டு பாம்பை அடி” என்பதில் அவர் எப்போதும் சமரசமற்று இருந்தார். இதை அவர்தான் சொன்னார் என்று சொல்பவர்களும் உண்டு.

பார்ப்பன எதிர்ப்பு என்றால் அப்படியொரு பார்ப்பன எதிர்ப்பு.

ஒருமுறை, சரியாகச் சொவதெனில் கலைஞரது அறுபதாவது பிறந்த நாள் சமயத்தில் அவரைப் பற்றி வைரமுத்து இப்படிச் சொன்னதாக ஞாபகம்.

“சொல்
காலைச் சொறியவேனும்
குழந்தைக்கு முத்தம் கொடுக்கவேனும்
நீ
தலை குனிந்ததுண்டா?” என்று.

அது கலைஞருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பாரதி தாசனுக்கு மிகச் சரியாகப் பொருந்தும்.யாருக்காகாவும் எதற்காகவும் யாரிடமும் வளையவோ வணங்கவோ பழக்கப்படாத வணங்காமுடி அவர்.

மொழி விஷயத்தில் சொல்லவேத் தேவை இல்லை. தாயைவிடவும் தாய் மண்ணை விடவும் மொழியை நேசித்தவர் . உண்மையை சொல்லப் போனால் தன் மொழியைப் பற்றி இவரளவிற்கு எழுதியவர்கள் யாரேனும் இருப்பார்களா? என்பது தெரியவில்லை.

பாரதி தாசன் கவிதைகளில் சில இடங்களில் வடமொழிச் சொற்கள் இருப்பதாகவே படுகிறது. ஆனால் அதை வைத்துக் கொண்டு அவரது எதிர்ப்பாளர்களாலேயே அவரது மொழித் தூய்மையை அசைத்துவிட முடியாது.

ஆனால் அப்படிப்பட்ட புரட்சிக் கவிஞர் தனது பெயரிலேயே தாசன் என்ற வடமொழிச் சொல்லை ஏன் அனுமதித்தார்?

காலைச் சொறிவதற்கும் தலையைக் குனியாத வணங்கா முடியான அவர் ஏன் அடிமை எனப் பொருள் தரும் தாசன் என்ற சொல்லை தனது பெயராக்கினார்?

பார்ப்பன எதிர்ப்பில் மிகத் தீவரமாக இருந்த கனக சுப்புரத்தினம் பாரதி என்ற பார்ப்பனருக்கு தாசனாக மாறியது ஏன்? அது சரிதானா? அவர் காலத்தில் அது பற்றிய விவாதம் நடந்ததா?

பொதுவாகவே பாரதியை பாரதியாகவும் பாரதி தாசனை பாரதி தாசனாகவும் பார்க்கிற போக்கு மொழித் தளத்தில் குறைந்து கிடக்கிறது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமல்ல. யாரையும் அவராகப் பார்க்காமல் சார்ந்து பார்த்து மிகைப் படக் கொண்டாடுவதோ அல்லது நியாயமே இல்லாத அளவிற்கு நார் நாராய்க் கிழிப்பதோதான் இன்றைய மரபாக இருக்கிறது.

பாரதியை எற்றுக் கொண்டாடும் பலர் இன்னமும் பாரதி தாசனைத் தீண்டவேத் தயங்குகிறார்கள் என்பதில் ஏகத்திற்கும் உண்மை இருக்கவே செய்கிறது.

பாரதி தாசனை ஏற்றுக் கொண்டாடும் பலர் பாரதியை நிராகரிக்கிறப் போக்கும் இருக்கவே இருக்கிறது.

இது ஏதோ இலக்கியத்தில் மட்டுமல்ல சமூகத் தளத்திலும் பெரியார் தனது தலைவராக ஏற்றுக் கொண்ட அம்பேத்கரை ஏற்காத வறட்டுத்தனமான பெரியாரிஸ்டுகளும்,அம்பேத்கர் தனது தலைவராக ஏற்றுக் கொண்ட பெரியாரை ஏற்காது கிழிக்கும் வறட்டுத் தனமான அம்பேத்காரிஸ்டுகளும் இருக்கவே செய்கிறார்கள்.

பாரதியை ஒரு சந்தன மரம் போன்றவர் என்று சொல்லுவார் பாரதிதாசன்.

பொதுவாகவே சந்தன மரத்திற்கென்று ஒரு குணம் உண்டு. என்னதான் இழைக்க இழைக்க மணத்தைத் தந்தாலும் சந்தன மரத்திடட் கொள்வதற்கு கொஞ்சமும் பொருட்டற்ற குணம் ஒன்று உண்டு. அது தன் நிழலில் எந்த ஒரு தாவரமும் வளர்வதற்கு அனுமதிக்காது. ஆனால் பாரதி என்ற சந்தன மரம் பாரதிதாசன் என்ற சந்தன மரத்தை தன் நிழைலேயே வாஞ்சையோடு வளர அனுமதித்து இருக்கிறது.

இந்தச் சூழலில் கனக சுப்புரத்தினம் தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டதற்கு பாரதிதாசன் காலத்தில் அல்ல பாரதிதாசனிடத்திலேயே இது குறித்த விமர்சனம் சென்றிருக்கிறது என்பது ச.சு .இளங்கோவனது “ பாரதி தாசன் பார்வையில் பாரதி” என்கிற நூலில் காணக் கிடக்கிறது.

பட்டுக்கோட்டை அழகிரி அவர்களுக்கு இது நெருடலாகப் படவே அவர் பாரதி தாசனை சந்தித்த ஒரு பொழுதில்

“ பாரதி ஒரு பார்ப்பனர் ஆயிற்றே, போகவும் தாசன் என்றால் அடிமை என்று பொருள் வருமே. பாரதிதாசன் என்றால் பாரதிக்கு அடிமை என்றாகிவிடாதா?”

அவர் முடிக்கும் முன்னரே இடை வெடித்தார் பாரதி தாசன்

“ ஆமாண்டா, நான் பாரதிக்கு அடிமைதாண்டா”

ஏறத்தாழ இதே மாதிரி ஒருக் கேள்வியைக் கேட்ட மதுரை சீனிவாசன் அவர்களிடம்,

“இதன் உள் நோக்கம் புரிகிறது. குறும்புத் தனமானது. அய்யருக்கு அடிமையா என்பது போலத்தான் இதுவும். நான் என்றென்றும் உளமாரப் போற்றி வழி படுகிற தெய்வம் இந்த அய்யர். அன்பும் தமிழுணர்வும் ஒருங்கு சேர்ந்த பொன்னுருவம் அவர்.பாரதியாருக்கு நான் தாசனாக இருப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை?

இந்த வினாவினை யார் விடுத்தாலும் எனக்கு கோவம் வரும். ஏனெனில் கழகத்தவர்களோ முன்னேற்றம் காணத் துடித்தவர்களோயாராக இருந்தாலும் சரி, சீர்திருத்தம் எனும் சொல்லை எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்றுக் கொள்வதற்கு பல நாட்களுக்கு முன்னரேதமது வாழ்க்கையில் சீர்திருத்த செயலகள் பலவற்றை செய்து காட்டியவர் பாரதியார்”

எள்ளும் கொள்ளுமாய் வெடித்த கவிஞரின் முகத்தைப் பார்த்த சீனிவாசனும் அவரது நண்பர்களும் எதுவும் பேசாமல் போய்விட்டார்களாம்.

“பாரதியின் மீது உங்களுக்கு பற்று இருக்கலாம். அதில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால் ‘பாரதி தாசன்’ என்று நீங்கள் பெயர் வைத்திருப்பது எங்களுக்கு சரியாகப் படவில்லையே. கொஞ்சம் பரிசீலிக்கலாமே? “ என்று பேராசிரியர். க. அன்பழகன் அவர்கள் ஒருமுறை கேட்டிருக்கிறார்.

”பாரதியைப் பற்றி மற்றவர்கள் தவறாகக் கருதுவது போலவே நீயும் கருதுகிறாயே!அவரோடு நான் பன்னிரெண்டு ஆண்டுகள் பழகியிருக்கிறேன். அவருடைய உள்ளத்தில் சாதி வேறுபாடு அறவே இல்லை.பிராமணர்களை அவர் துளிக் கூட மதிப்பது இல்லை. அது போக என்னுடைய கவிதைகளில் கிடைக்க்ற முற்போக்கு கருத்துக் க்மளுக்கும் அவரே காரணம்.

எல்லோரிடமும் சினந்து வெடித்த பாரதிதாசன் மிகுந்த கனிவான குரலில் அவருக்கு பதில் சொல்லியிருக்கிறார். ஆக பெயர் குறித்த விவாதம் பாரதிக்கும் பாரதி தாசனுக்கும் இடையில் இருந்த உறவினயும் உபரியாகத் தருகிறது.

அடிமைத் தனத்தை வேரோடு சாய்க்க போராடும் நீங்கள், யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்று கருதும் நீங்கள் எப்படி இப்படி? என்பது மாதிரி கேட்ட தோழர் தா. பாண்டியன் அவர்களுக்கு

“அடிமைப்புத்தியை விரும்பாத நானே ஒருவருக்கு தாசன் என்று சொல்லிக் கொள்வேன் என்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பார் என்று யோசிக்க மாட்டாயா பாண்டியா”

ஆக,

பெயரில் இருக்கிறது.

நன்றி : காக்கைச் சிறகினிலே

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...