Sunday, July 10, 2016

பெயர் என்னவோ அழைப்பதற்குத்தான்

அந்த ஆசிரியர் பயிற்சிப்பள்ளியின் ஆண்டுவிழாவிற்கு முதல்வர் உம்மன்சாண்டியை அழைத்திருக்கிறார்கள். அவரும் இசைவளித்துவிட்டார். அந்தப் பயிற்சிப் பள்ளிக்கென ஒரு துவக்கப் பள்ளியும் இருக்கிறது. உம்மன் சாண்டி அவர்களை வரவேற்பதற்காக ஆசிரியப் பயிற்சிப் பள்ளி மாணவர்களோடு துவக்கப் பள்ளிக் குழந்தைகளும் வரிசையில் நிற்கிறார்கள். காக்கவே வைக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்கு மிகச்சரியாக முதல்வர் வருகிறார். குழந்தைகளின் வரவேற்பை மகிழ்ச்சியோடும் புன்னகையோடும் ஏற்றவாறே அவர் மேடையை நோக்கி நடக்கிறார். கிட்டத்தட்ட மேடையை நெருங்கிய நேரத்தில் அவருக்கு பின்னால் இருந்துஉம்மன்சாண்டிஎன்று யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது. நிச்சயமாய் அது ஒரு மழலைக்குரல். நின்று திரும்பிப் பார்க்கிறார். பள்ளியின் முதல்வருக்கும் ஆசிரியர்களுக்கும் பதட்டம் அப்பிக் கொள்கிறது.

ஒரு இரண்டாம் வகுப்பு பெண்குழந்தை கையைத் தூக்கியவாறே, “நான்தான் கூப்பிட்டேன். இங்க கொஞ்சம் வாங்களேன்என்று கூறுகிறாள். மொத்த விழாத் திடலும் அப்படியே உறைந்து போகிறது. எல்லோர் முகத்திலும் பயம் அப்பிக் கொள்கிறது. ’இப்படி செய்து விட்டாளே பாவி. எப்படித் திட்டுவாரோ? நிகழ்ச்சியை ரத்து செய்து விடுவாரோஎன்ற கலக்கம் எல்லோருக்கும் வந்திருக்கக் கூடும்.

எதைப் பற்றியும் கவலைப்படாதவளாக அந்தக் குழந்தைகொஞ்சம் இங்க வாங்களேன். உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்என்கிறாள்.

இதோ வரேன்என்றவாறே அவளை நோக்கி நடக்கிறார்.

ஒரு மாநிலத்தின் முதல்வர் தன்னைப் பெயர்சொல்லி அழைக்கும் குழந்தையை நோக்கி போகிறார். இதே தமிழ்நாடாக இருந்திருந்தால்…? விளைவுகளை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

என்னடா?” என்று அவள் உசரத்திற்கு குனிய முடியாத்தால் கொஞ்சம் ஒரு மாதிரியாக உட்கார்ந்தவாறு கேட்கிறார்.

தன்னுடைய வகுப்புத் தோழன் ஒருவனின் பெயரைச் சொல்லி அவனது பெற்றோர் இருவரும் உடல்நலமற்று இருப்பதாகவும். மருந்து வாங்கவே சிரமப்படுவதாகவும் கூறுகிறாள். காதுகொடுத்து கேட்ட முதல்வரிடம் அவனுக்கு சாப்பாடே பலநேரம் இல்லை என்றும் எனவே முதல்வர் அந்தக் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்றும் கூறுகிறாள். ‘சரி பார்க்கலாம்என்று சொல்லிவிட்டு அவளைக் கொஞ்சியவாறே மீண்டும் மேடைக்கு நகர்கிறார்.

மேடைக்குப் போனதும் பள்ளி முதல்வரை அழைத்து அந்தக் குழந்தை சொன்ன விவரங்கள் உண்மையா என்று உடனே சரிபார்க்க சொல்கிறார். அலைந்து பறந்து விசாரிக்கிறார்கள். அவை முழுக்க உண்மை என்று தெரியவருகிறது. அந்த இடத்திலேயே ஒரு பெரிய தொகையை (இரண்டு லட்சமா அல்லது மூன்று லட்சமா என்று சரியாகத் தெரியவில்லை) அந்தக் குடும்பத்திற்கு வழங்குவதற்கு உத்தரவிடுகிறார்.

உதவித் தொகையை வழங்கியதுகூட எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அது அவர் இருக்கும் நிலைக்கு மிக மிக எளிதானது. ஒரு இரண்டாம் வகுப்பு படிக்கும் சின்னக் குழந்தையின் அழைகுரலுக்கு மரியாதையளித்து தேடிப்போய் அவளோடு உரையாடியதுதான் எனக்கு மிகப் பெரிய விஷயமாகப் பட்டது. ஒருக்கால் தமிழ்நாட்டுக்காரன் என்பதால் நமக்கு இவ்வளவு பெரிய விஷயமாக இது தெரிவதற்கும் வாய்ப்புண்டு.

ஒரு ஏழு வயது சிறுமி தனது மாநில முதல்வரை பெயர் சொல்லி அழைக்கிறாள். அவரும் திரும்பிப் பார்க்கிறார். தன்னிடம் வருமாறு அழைக்கிறாள். போகிறார். ஒரு குழந்தையின் கோரிக்கையை காது கொடுத்து கேட்கிறார். நானும் இதை மகிழ்ந்து கொண்டாடிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் தம்பி ஸ்டாலின் தி அவர்களின் முகநூல் பதிவொன்றினைப் படிக்க நேர்ந்தது.

“கேரள் முதல்வர் உம்மன்சாண்டி அவர்களை ஒரு பள்ளிக்குழந்தை பெயர் சொல்லி அழைத்ததையும், அவர் அழைத்த அந்தக் குழந்தையிடம் சென்று விசாரித்ததையும் பெருமைபட பேசிக் கொண்டாடுகிறார்கள். இணையதளங்களில் ஏராளமான பதிவுகள் இதுகுறித்து எழுதப்படுகின்றன. இன்னமும் எங்கள் கிராமங்களில் அறுபது வயது மதிக்கத்தக்கப் பெரியவரை ஐந்து வயது சிறுவன் ‘ஏய் கோவாலு, எங்க அய்யா உன்ன கூட்டிட்டு வரச் சொன்னாரு, வெரசா வா” என்று அழைப்பது வாடிக்கையாக இருக்கும்போது உம்மன்சாண்டியை ஒருகுழந்தை உம்மன்சாண்டி என்று அழைத்ததில் ஏதும் பெரிதாகத் தெரியவில்லை” என்பதுமாதிரி அந்தப் பதிவு போகும். அவர் சொன்னத்தை வார்த்தைப் பிசகாமல் எழுதியிருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் விஷயம் இதுதான்.

முதல்வரை அந்தக் குழந்தை பெயர் சொல்லி அழைத்ததும், வயது முதிர்ந்த தலித் பெரியவர்  ஒருவரை ஒரு ஆதிக்கசாதியை சேர்ந்த சிறுவன் ‘ஏய், கோவாலு’ என்று அழைப்பதும் ஒன்றுதானா? இரண்டையும் ஒன்றாகத்தான் கருத வேண்டுமா? இரண்டையும் ஒன்றாக கருத முடியுமா?

கொஞ்சமும் தீவிரமாய் யோசிக்க செலவில்லாமலேயே பளிச்செனத் தெரியும் இரண்டும் ஒன்றில்லை என்பது. இரண்டையும் ஒருபோதும் ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி இரண்டையும் ஒன்றாக ஒரே தட்டில் வைத்துப் பார்க்குமாறு எங்கேனும் பாடம் நடத்தப் படுமானால் அது அயோக்கியத்தனமானது.

உம்மன்சாண்டியை அந்தக் குழந்தை பெயர்சொல்லி அழைத்தது குழந்தைத்தனத்தின் உச்சம். அதை இயல்பாக எடுத்துக் கொண்டதன்மூலம் உம்மன்சாண்டியின் ஆளுமையின் விழுமியம் பெருமளவில் கூடிப்போனது. இன்னும் சொல்லப்போனால் அது ரசிக்கிற மாதிரியான ஒரு மழலையின் சாரல்.

ஆனால் அந்தக் கிராமத்து பெரியவரை, ‘ஏய், கோவாலு’ என்று அழைப்பது வலி மிகுந்தது. அதற்குள் புதைந்திருக்கும் சாதிய படிநிலை கோரமும் அசிங்கமுமானது. அந்தப் பதிவில் ஸ்டாலின் இதை சொன்னாரா இல்லையா என்று சரியாய் நினைவில்லை. ‘ஏய், கோவாலு’ என்று அழைத்த அந்த சிறுவனிடம் அந்தப் பெரியவர் , ‘சரிங்க அய்யா. நீங்க போங்க, உங்க பொறவாடியே வாரேன்’  என்றுதான் சொல்லியிருப்பார். சொல்லியிருப்பார் என்ன, அப்படித்தான் சொல்ல முடியும். அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று சாதி நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.

தனது ஒரே அழைத்தலின் மூலம் ஏகப் பிரசித்திப் பெற்றுவிட்ட அந்தக் குழந்தையின் செயலை எல்லோரும் ஏகத்திற்கும் கொண்டாடி இருந்தாலும் அதில் பெரும்பான்மையோர் ’பெரியவங்கள அப்படியெல்லாம் பெயர் சொல்லிக் அழைக்கக் கூடாது’ என்று அந்தக் குழந்தைக்கு புத்திமதி சொல்லியிருப்பார்கள். குறைந்த பட்சம் அந்தக் குழந்தையின் ஆசிரியர்களாவது அந்தக் குழந்தையிடம் ‘வயதில் பெரியவர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். இப்படி பெயர் சொல்லி அவர்களை அழைப்பது மரியாதை அல்ல’ என்று நிச்சயமாக வகுப்பெடுத்திருப்பார்கள். ஆயிரம்தான் அந்த நிகழ்வு பெரு மகிழ்ச்சியோடு கொண்டாடப் பட்டிருந்தாலும் அந்தக் குழந்தையின் அம்மாவிற்கு உள்ளூர உதறல் இருந்திருக்கவே செய்யும். “இன்னொருதரம் இப்படி செஞ்ச கரண்டிய காயவச்சு வாய் வாயா போட்டுடுவேன்” என்றுகூட பயமுறுத்தி வைத்திருக்கக் கூடும்.

இரண்டு விஷயங்களை நாம் கொஞ்சம் இங்கு அலசுவதற்கு தேவை இருக்கிறது.

1)   முதலாவதாக, உம்மன்சாண்டி அவர்களை பெயர் சில்லி அழைத்ததற்காக அந்தக் குழந்தையை ‘அப்படியெல்லாம் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது. பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும்’ என்று ஆசிரியர்களும் அந்தக் குழந்தையின் பெற்றோரும் புத்திமதி கூறியதுபோல் ‘ஏய், கோவாலு’ என்று அழைத்த சிறுவனிடம் அவனது ஆசிரியர்களும் பெற்றோரும் பெரியவர்களை அப்படியெல்லாம் மரியாதை குறைவாக பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்று ஏன் புத்திமதி கூறுவது இல்லை.
2)   அழைத்த குழந்தையிடம் நடந்துபோய் என்னவென்று கேட்ட முதல்வரை ஆகா ஓஹோவென்று புகழ்ந்து, ‘இதுவல்லவோ பெருந்தன்மையின் உச்சம்’ என்று கொண்டாடிய, கொண்டாடிக் கொண்டிருக்கிற யாரும், எந்த ஊடகமும் ஒரு சிறு பையன், ‘ஏய், கோவாலு’ என்றதும் என்னங்க சாமி என்று கேட்கும் அந்தப் பெரியவரின் செயலை பெருந்தன்மை என்று ஒருபோதும் கொண்டாடுவதில்லையே. அது ஏன்?
3)   தன்னை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்று அந்தக் குழந்தையிடம் சொல்வதற்கான அதிகாரம் உம்மன்சாண்டிக்கு இருக்கிறது. ஆனால் அத்தகையதொரு அதிகாரம் கோவலு அவர்களுக்கு இல்லாமல் செய்த சக்தி எது?

காரணம் ரொம்ப சுளுவானது. அந்தப் பெரியவர் மாநிலத்தின் முதல்வர். இந்தப் பெரியவர் பிறப்பால் ஒரு தாழ்த்தப் பட்டவர். முதல்வர் என்பதுகூட எல்லா இடங்களிலும்செல்லாது என்றே படுகிறது. எல்லா சாதி முதல்வர்களுக்கும் இது வாய்க்காது என்றே வரலாறு நமக்கு சொல்கிறது.

இந்தியாவின் ராணுவ அமைச்சராக இருந்த மாண்பமை பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் ஒருமுறை ஒரு ஆலயத்திற்குள் நுழைகிறார். இந்தத் தேசத்தின் ராணுவ அமைச்சரை உள்ளே நுழையவிடாமல் அவர்களால் தடுக்க இயலாமல் போனது. ஆனால் வழிபாட்டினை முடித்துக் கொண்டு அமைச்சர் வெளியேறியதும். ஆலயத்தை தண்ணீர் விட்டுக் கழுவினார்கள். ஏனென்று கேட்டதற்கு ’ஆயிரம்தான் அமைச்சராக இருந்தாலும் அவர் ஒரு தாழ்த்தப் பட்டவர். அவர் உள்ளே வந்ததால் ஆலயம் தீட்டுப் பட்டுவிட்டது. ஆகவே தீட்டைக் கழுவினோம்’ என்று கூறினார்கள்.

ஒரு தலித் அமைச்சர் வந்து போனதற்காக ஒரு பள்ளி தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி அதை கழுவியிருந்தார்கள் என்றால் அன்றைய பிரதமர் அந்தப் பள்ளி நிர்வாகிகளை விட்டு வைத்திருப்பார்களா? பள்ளி என்றால் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆலயம் என்பதனால் எதையும் செய்ய இயலவில்லை என்றால் ஆலய நிர்வாகிகள் பிரதமர் கைகளையே கட்டிப்போடும் அளவிற்கு சக்தி மிக்கவர்களா? என்று கேட்டால் ஆமாம், அவர்களது சாதிய சக்திக்கு முன்னால் பிரதமரின் வல்லான்மையும் கொஞ்சம் சுறுங்கித்தான் போகும்.

அதனால்தான் மாண்பமை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை தரையில் அமர்த்தி பேசி, ஆசீர்வதித்து அனுப்பும் இடங்கள் சுப்ரமணிய சாமி போன்றவர்களை நாற்காலி போட்டு அமரவைத்து ஆசீர்வதித்து அனுப்புகின்றன.

சரி, கொஞ்சம் இப்படி பார்ப்போம். அந்தக் குழந்தை தன்னைப் பெயர் சொல்லி அழைத்தபோது ‘அப்படியெல்லாம் அழைக்கக் கூடாது’ என்று முதல்வரால் சொல்லியிருக்க முடியும். அப்படி அவர் சொல்லியிருந்தால் நிச்சயமாக அந்தக் குழந்தையின் உதடுகளை பழுக்கக் காய்ச்சப்பட்ட கரண்டிக் காம்புகள் பதம் பார்த்திருக்கும். குழந்தையைத் தண்டித்த அவளது பெற்றோர்கள் ஊடகத்தால் பெரியவர்களை பெயர்சொல்லி அழைத்தமைக்காக குழந்தையை தண்டித்ததற்காகக் கொண்டாடப் பட்டிருப்பார்கள்.

கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். ‘ஏய், கோவாலு’ என்று அழைத்த பையனிடம் கோவாலு அவர்கள் ’பெரியவர்களை அப்படியெல்லாம் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது’ என்று சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும். ஆலமரத்தடியில் பஞ்சாயத்துக் கூடியிருக்கும். அந்தப் பையனிடம் மரியாதைக் குறைவாக கோவாலு நடந்து கொண்டார் என்று புகார் வாசிக்கப் பட்டிருக்கும். அந்தக் குற்றத்திற்காக கோவாலு அவர்களின் குடும்பமே அந்தப் பையனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கும்.

பெயர் என்னவோ அழைப்பதற்குத்தான் என்பதில் நமக்கு எந்தவிதமான கருத்து முரண்பாடும் கிடையாது. ஆனால் எல்லோரையும் எல்லோராலும் பெயர் சொல்லி அழைக்க முடியாது. அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதற்கு சாதி ஒரு காரணமாக இருப்பதை இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம்? 

நன்றி: காக்கை ஏப்ரல் 2016   
  


      

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...