Saturday, July 16, 2016

அழகான குழந்தையின் எச்சிலொழுகும் சிரிப்பைப்போல…

பெரும்பாலும் குழந்தைகளைப் பற்றிய  படைப்புகள்தான் குழந்தை இலக்கியம் என்பதாக நமக்கு தரப்படுகின்றன. குழந்தைகளின் வாசிப்பிற்கென்று மிக அரிதாகவே எப்போதாவது படைப்புகள் வருகின்றன.
அப்படி வருகின்ற படைப்புகளும் தேவையான அளவு கொண்டாடப் படுகின்றனவா என்று கேட்டால் அதுவும் இல்லை.

அப்படி ஒரு அபூர்வமான குழந்தை இலக்கியம் ஒன்று என் கைகளுக்கு வந்து சேர்ந்தது. “நறுமுகை” வெளியீடான “இங்கா” என்ற செந்தில்பாலாவின் சிறார் பாடல்களைக் கொண்ட மிக மிக அழகான சிறு நூல் ஒன்று வந்தது.

மிக மிக அழகான என்கிற வார்த்தைகளை நான் மிகவும் கவனத்தோடே பிரயோகிக்கிறேன். அவ்வளவு அழகான நூல் அது. அழகான குழந்தையின் எச்சிலொழுகும் சிரிப்பைப்போல வசீகரமாக இருக்கிறது அந்த நூல்.

முப்பத்தியிரண்டு பக்கங்களைக் கொண்ட அந்த குறுநூலை மதியத்திலிருந்து இரண்டுமுறை வாசித்து விட்டேன். அட்டையில் ‘சிறார் பாடல்கள்’ என்று இருக்கிறதே நெசத்துக்குமே அப்படித்தான் இருக்குமா என்ற அய்யத்தோடே வாசிக்கத் தொடங்கினேன். ஐந்தாம் பக்கம் தொடங்கி முப்பத்தி ஒன்றாம் பக்கம் வரைக்குமான இருபத்தியேழு பக்கங்களும் ஒரு வார்த்தை சேதாரமின்றி குழந்தைகளுக்கானவை. வாசிக்க வாசிக்க நம்மை அறியாமலே நமக்குள் ஒரு துள்ளல் பிறக்கிறது.

“என் குழந்தை அழுவதும்
சிரிப்பதும் தவிர்த்து
எதையோ கேட்க முற்பட்டு
பேச எத்தனிக்கையில்
உச்சரித்த முதல் அசை
ங், ங்க, ங்கா, இங்கா
என்பதுதான்.
எல்லாக் குழந்தைகளும்
அப்படித்தான் என்பது
அம்மாக்களின் கூற்று”

என்று சுறுக்கமாக இங்கா வை அறிமுகம் செய்வதோடு நேரடியாக பாடல்களைப் பந்தி வைக்கிறார்.
“Rain rain go away” என்று மழையை விரட்டும் ஆங்கில நர்சரிப் பள்ளிகளில் யாரேனும் இவரது

“வாவா மழையே
 வரட்டுமா வெளியே
 நீயும் நானும் தனியே
 ஆடலாமா இனியே”

எனும் பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பாடமாக வைத்தால் நல்லது. அரை நூற்றாண்டு காலமாக குழந்தைகளைக் கொண்டு மழையை சபித்து விரட்டியிருக்கிறோம். இந்தப் பாடலை குழந்தைகள் ஆடிக்கொண்டே பாடினால் அந்த அழகைக் காண மழை வானத்தைப் பொத்துக் கொண்டு பூமிக்கு வரும்.

’கொல்லையில் கும்பலாக கூடுது
நம்ம தொல்லையில்லாமல் பாடுது’

என்று ஒரு பாடல் முடிகிறது. குருவிகளைக் குறித்தான பாடல் அது. குறுவிகளை தொந்தரவு செய்யாமல் தூரத்திருந்து ரசிக்க வேண்டும் என்ற அறத்தை கொண்டாட்டமும் துள்ளலுமாய் அவர்களே அவர்களுக்கு சொல்லிக் கொள்கிற மாதிரியான முறை புதிது. ’அறஞ்செய விரும்பு’ என்பதையே சகல விதமான வன்முறைகளோடும் அடீத்துச் சொல்லித் தருகிற நமக்கு இது நிச்சயமாய் புதிதுதான்.

அக்கா வீட்டுப்பாடம் எழுதி படிக்க வேண்டுமென்பதற்காக வராத தூக்கத்தை வம்படியாக அணாஇத்துக் கொள்ளுமாறு தம்பிகளை வற்புறுத்தும் வலிதரும் பாடலும் உண்டு. அந்தப் பாடல் இப்படி முடியும்

“சரியா எழுதலைனா
திட்டுவாங்க
எழுதிகினே போகலைனா
கொட்டுவாங்க”

”படி படினு சொல்ல
பள்ளிக்கூடம் இல்ல

பகல் முழுக்க நாங்க
பெருமூச்சு வாங்க

பசங்க கூட ஆட்டம்
அப்பா வந்தா ஓட்டம்”

என்பதாக இன்னொரு பாடல். பெற்றோரும் ஆசிரியர்களும் கல்விக் கனவான்களும் அக்கறையோடு கவனம் குவிக்க வேண்டிய இடம் இது.

இப்படிப்பட்ட குழந்தைப் பாடல்களை இவர் இன்னும் நிறைய எழுத வேண்டும். இன்னும் நிறைய பேரும் எழுத வேண்டும். இத்தகைய நூல்களை குழந்தைகளிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

போட்ட பத்து மாதங்களுக்குள் இரண்டாம் பதிப்பை இந்த நூல் கண்டிருக்கிறது என்பது இனிப்பான சேதி.

”இங்கா”
செந்தில்பாலா
நறுமுகை பதிப்பகம்
29/35 தேசூர்பாட்டை
செஞ்சி 604202
9486150013

இருபது ரூபாய்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...