ஆட்டோ ஓட்டுனரான ராஜா, துப்புரவு தொழிலாளியான அவரது மனைவி உஷா அவர்களது மகன் சூர்யா ஆகிய மூவரும் செங்கம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏதோ பிரச்சினை வந்திருக்கிறது. ராஜா உஷாவை அடித்திருக்கிறார்.
அப்போது அந்தப் பக்கம் வந்த மூன்று காவலர்கள் ராஜாவையும் சூர்யாவையும் சகட்டு மேனிக்கு தாக்கியிருக்கின்றனர். பொது மக்கள் முன்னிலையில் இது நடந்திருக்கிறது.
குடும்பமே மருத்துவ மனைக்கு போயிருக்கிறது. அவர்களை வலுக்கட்டாயமாக இடைமறித்த காவலர்கள் அவர்களைபேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே இந்தக் காட்சியின் க்ளிப்பிங் தொலைக் காட்சிகளில் வந்திருக்கிறது. சமூக வலைதளங்களிலும் இது பெரிதாக அலசப் பட்டிருக்கிறது. ராஜாவின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை இட்டிருக்கிறார்கள்.
இதன் விளைவாக அந்தக் காவலர்கள் மூவரும் ஆயுதப்படைக்கு மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவர்களை பணிநீக்கம் செய்யக் கோறி சாலை மறியல் நடக்கிறது.
இது நமக்கு கிடைத்திருக்கும் தகவல்.
பொது இடத்தில் அத்தனை மக்களுக்கு முன்னால் மனைவியை கணவன் அடிப்பது என்பது ஆணாதிக்கத்தின் உச்சம். வன்மையாக கண்டிக்கப் படவும் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப் படவும் வேண்டும்.
அந்த வழியே வந்த காவலர்கள் சமாதானப் படுத்தி ராஜாவை கடுமையாகக் கண்டித்து அனுப்பியிருக்க வேண்டும். அல்லது அவரை கைது செய்து வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.
மாறாக இவ்வளவு வன்மமாகவும் மோசமாகவும் நடந்துள்ளது கண்டிக்கத் தக்கது.
இத்தோடு நிறுத்திக் கொள்வோமா?
அல்லது முகநூல் என்பது சமூக வலைதளத்தின் ஒரு கூறு. ஆகவே இது மாதிரி இனியேனும் நடக்காதிருக்க ஏதேனும் நம்மால் செய்ய இயலுமா என்று பரிசீலிக்கலாமா?
கூடி முடிவெடுப்போமா?
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்