Showing posts with label இதே நாளில். Show all posts
Showing posts with label இதே நாளில். Show all posts

Thursday, September 27, 2018

பூனை ஸ்கெச் சாப்டாதுதானே?”

நிவேதி வந்திருக்கிறாள். காலையில் தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு முத்தம் கொடுத்து எழுப்பி விழித்ததும் குட்மார்னிங் என்று மழலையில் சொன்னாளென்ற வகையில் இந்த நாள் ஆசீர்வாதத்தோடு தொடங்கியிருக்கிறது.
எழுந்ததும் மாமா, கிளம்புங்க அக்காவ பள்ளிக்கூடத்துல உட்டுட்டு (அப்போது கீர்த்தி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்) Ball லும் மெழுகு ஸ்கெச்சும் வாங்கிட்டு வரலாம்.
Ball சரி, மெழுகு ஸ்கெச் எதுக்குப்பா?
“ம், பூனை வரையப் போறேன்”
“அய்யய்யோ, மெழுகுன்னா பூனை சாப்பிடுமே”
“எப்புடி?”
”பூனைக்கு வாய் வரையறப்ப லபக்குன்னு புடிங்குக்கும்”
“பரவல்லா, பூனைக்கு பக்கத்துல மொதல்ல சாசர்ல பால் வரஞ்சுக்குறேன். வரஞ்சதும் பூன பால் குடிக்கப் போயிடும். நீங்க ஸ்கெட்ச் வாங்கித் தாங்க”
வாங்கி வரும்போது கேட்டாள்,
“மாமா, பொய்தானே சொன்னீங்க, பூனை ஸ்கெச் சாப்டாதுதானே?”

Thursday, August 20, 2015

யுவா இந்தியா


(20.08.2015 அன்று எழுதியது)

அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடி மற்றும் கிராமப்புறப் பெண்கள் அணி ஒன்று ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கால்பந்துப்போட்டியில் வெண்கலம் வென்ற செய்தி பல ஊடகங்களின் கவனத்தைப்பெற்றது. என்றாலும், கிரிக்கெட் மோகம் மட்டுமே அதிகமாக இருக்கிற நம்நாட்டில் இவர்கள் மீது கவனம் கிடைப்பதெல்லாம் சாத்தியமில்லை.
ஸ்பெயின் நாட்டில், விக்டோரியா கேஸ்டீஜ் நகரில், கேஸ்டீஜ் கோப்பைக்கான கால்பந்துப்போட்டி நடைபெற்றது. பதினான்கு வயதினருக்கு உட்பட்டவர்களுக்கான இந்தப்போட்டியில், யுவா இந்தியா என்னும் அமைப்பைச் சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றனர். ஒன்பது அணிகளுக்கு எதிராக விளையாடி, மூன்றாம் இடம் பெற்று, சர்வதேசப்போட்டியில் வெண்கலம் வென்று திரும்பிய இந்தப் பெண்களைப்பற்றியும், யுவா இந்தியா பற்றியும் கொஞ்சம் அலசுவது சுவையாக இருக்கும்.
பிரான்ஸ் கேஸ்ட்லர் 30 வயது இளைஞர். அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர். அரசியல் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டமும், ஹார்வேர்டு சட்டக் கல்லூரியில் சமரசம் மற்றும் பேச்சுவார்த்தையில் சான்றிதழும் பெற்றவர். ஜுடோ, ஐஸ் ஹாக்கி, ஸ்கையிங் ஆகியவற்றில் பயிற்றி பெற்றவர். இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பில் ஆலோசகராகப் பணியாற்றியவர்.
2008 மே மாதத்தில், தன் நண்பரின் அழைப்பின்பேரில், ஹுதுப் என்னும் கிராமத்துக்கு வருகிறார். அங்குள்ள பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கிறார். அப்போதுதான் அவருக்கு சில உண்மைகள் தெரிய வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் பெண் கல்வியில் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிப்பை பாதியில் நிறுத்தும் பெண்களின் எண்ணிக்கை 67 சதவிகிதம். எனவே, பெண்கள் கல்வியைத் தொடர வேண்டுமானால், அவர்கள் தம்மை வெளிப்படுத்தக்கூடிய ஒரு அமைப்பு தேவை என்று கருதுகிறார். அதே சமயத்தில், தம் குழந்தைகளுக்கு வீடுதேடி வந்து கற்றுத்தருமாறு பெற்றோர் வேண்டுகின்றனர். ஒவ்வொருவர் வீட்டுக்கும் செல்வது சாத்தியமில்லை என்பதால், அனைவரும் வரக்கூடிய வகையில் ஒரு மையம் துவங்குகிறார். அதுதான் பிற்பாடு யுவா இந்தியா என உருப்பெறுகிறது. கடந்த ஐந்த ஆண்டுகளாக ஜார்க்கண்டில் கிராமத்தில் வசித்து தொண்டாற்றி வருகிறார் இவர்.
அமெரிக்காவில் உள்ள தன் நண்பர்கள் துணையுடனும், பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடனும் நிதி திரட்டி, ஜார்க்கண்ட் பழங்குடி பெண்களுக்கு கால்பந்து பயிற்சியளிக்க கிராமங்களிலேயே வசிக்கத்துவங்கினார். ஏற்கெனவே இந்திய கால்பந்து அணியில் பழங்குடியினர் நிறையவே இருப்பது நேயர்களுக்கும் தெரிந்திருக்கும்.
வெளிப்புற மக்களோடு பழகத் தயங்கும் பழங்குடியினரைக் கொண்டு கால்பந்து அணி உருவாக்குவது எளிதல்ல. முதலில் சுமன் என்ற பெண் அவரிடம் கால்பந்து பயிற்சி அளிக்குமாறு கேட்டிருக்கிறாள். ஓர் அணிக்குத் தேவையான அளவுக்கு பெண்களையும் சேர்த்துக்கொண்டு வந்தால் பயிற்சியளிக்கிறேன் என்றார் பிரான்ஸ். இப்படி பல அணிகள் பல கிராமங்களில் உருவாயின. ஒரு பெண் நான்கு மாதங்கள் வரை தவறாமல் பயிற்சியில் பங்கேற்றால், காலுக்கு ஷூவும் சாக்சும் கிடைக்கும். அதுவும், ஷூவுக்கான விலையில் மூன்றில் ஒரு பங்கு அந்தப் பெண்தான் தர வேண்டும் என்பது நிபந்தனை. அப்போதுதான் பொறுப்பும் ஆர்வமும் வரும் என்பதே இதன் காரணம். ஓராண்டுக்குள் யுவா அமைப்பின் 13 பெண்கள் பயிற்சி பெற்று, தேசியத் தரவரிசையில் 20ஆம் இடத்திலிருந்து 4ஆம் இடத்திற்கு முன்னேறினர். இங்கு பயிற்சி பெற்ற பெண்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்பந்துப் பயிற்சியாளர்களாக உருவாகிறார்கள்.
5 முதல் 17 வரையான பெண்கள்தான் இதற்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏன் பெண்கள்தான் தேர்வுசெய்யப்பட வேண்டும் என்றால், பழங்குடி இனத்தவர்களில் 43 சதவிகிதப் பெண்கள் 18 வயதுக்குள் திருமணம் செய்து குழந்தைகளுக்குத் தாயாகி விடுகிறார்கள். படித்த ஒரு பெண், தன் வருமானத்தில் 90 சதவிகிதத்தை குடும்பத்துக்காகச் செலவு செய்வாள், ஆணோ 35 சதவிகிதம்தான் குடும்பத்துக்குத் தருவான். பெண்கள் கல்வி கற்பதால் ஊட்டச்சத்துக்குறைவு விகிதம் 43 சதவிகிதம் குறைகிறதாம். இப்படி இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.
ஏன் வேறு விளையாட்டுகளை விட்டுவிட்டு கால்பந்தைத் தேர்வு செய்ய வேண்டும்? கால்பந்து என்பது குழுவிளையாட்டு. இதில் பங்கேற்பவர்களுக்கு ஆரோக்கியம், கல்வி, அர்ப்பணிப்பு, ஒற்றுமையுணர்வு ஆகியவை பற்றிய புரிதல் கிடைக்கிறது. மைதானத்தையும் அவர்களே தேர்வு செய்கிறார்கள். ஆக, இந்த அணிகளின் வெற்றியும் தோல்வியும் அவர்களுக்கே உரியது.
இவ்வாறு உருவான யுவா அணிதான் ஸ்பெயினுக்குச் சென்றது. அவர்களின் பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அரசு எந்த உதவியும் செய்யவில்லை. பாஸ்போர்ட் வாங்க வேண்டுமானால் பிறப்புச் சான்றிதழ் தேவை. பழங்குடியினக் குழந்தைகள் எல்லாமே வீட்டில் பிரசவித்தவர்கள். எனவே சான்றிதழ் இல்லை. கிராமப் பஞ்சாயத்து ஊழியரிடம் கேட்டபோது, அவர்களை அடித்தும், அலுவலகத்தைக் கூட்டிப் பெருக்கச் செய்தும் அவமானப்படுத்தியிருக்கிறார். தினேஷ் சாஹு என்ற அந்த அலுவலர், சான்றிதழ் வழங்க லஞ்சமும் கேட்டிருக்கிறார். ஸ்பெயினுக்கு அழைத்துப்போய் உங்களை விற்றுவிடுவார் என்றும் மிரட்டியிருக்கிறார். காவல்துறை அதிகாரி ஒருவரின் துணையால் ஒருவழியாக சான்றிதழ்களைப் பெற்றார்கள்.
ராஞ்சியிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தம் கிராமத்துக்கு வெளியே இதுவரை சென்று விளையாடாத இந்தப் பெண்கள்தான் ஸ்பெயினுக்குச் சென்றார்கள், கேஸ்டீஜ் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கேற்றார்கள், வெண்கலம் வென்றார்கள். வந்தார்கள். இவர்களுடைய கதை இப்போதுதான் உலகுக்குத் தெரிய வந்திருக்கிறது.
யுவாவில் பயிற்சிபெறுகிற எந்தப் பெண்ணும் 18 வயதுக்கு முன்னால் திருமணம் செய்யவில்லை. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து கூட்டமைப்புக் கோப்பை போட்டியில் இந்திய அணி வென்றதில், யுவாவைச் சேர்ந்த புஷ்பா முக்கியக் காரணமாக இருந்தார். நீதா குமாரியும், மனிஷா திர்க்கியும் இலங்கையில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றனர்.
இந்திய கால்பந்துக் கூட்டமைப்புத் தலைவர் பிரபுல்ல படேல், இவர்கள் பற்றி தனக்கு எதுவுமே தெரியாதபோது நான் என்ன செய்ய முடியும் என்கிறார். கோப்பைக்கான கால்பந்துப்போட்டி என்பது இந்திய கால்பந்துக் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற போட்டி அல்ல என்று கைகழுவுகிறது கூட்டமைப்பு. யுவாவுக்கு இப்போது விளையாட்டுக்கு மைதானம் கிடைப்பதும்கூட சிரமமாக இருக்கிறது. விளையாட்டு அமைச்சகச் செயலரிடம் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கிறதாம். இதுவரை மைய அரசும் சரி, மாநில அரசும் சரி, எந்த உதவியும் செய்யவில்லை. இப்படிப்பட்ட எத்தனையோ திறமைகள் எத்தனையோ கிராமங்களில் ஒளிந்து கிடக்கின்றன.
ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் ஏராளமான பதக்கங்களை அள்ளிச் செல்லும் சீனத்தில், விளையாட்டுத் திறமை உள்ளவர்களை ஆரம்பப்பள்ளி நிலையிலேயே கண்டறிகிறார்கள். கிராமம், நகரம் என்ற எந்த வேறுபாடுமின்றி, இந்தத் திறமை கண்டறியும் நடவடிக்கையை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இதுபோல இந்தியாவும் முனைப்பாக திறமைகளைக் கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரை நூறு கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியா, மாஸ்கோவில் நடைபெற்ற உலகத் தடகளப்போட்டிகளில் ஒரு பதக்கம்கூட வெல்லாதது குறித்து கவலைப்பட்டுப் பயனில்லை.
மேலும் தகவலுக்கு - http://yuwa-india.org/ வலைதளத்தைப் பார்க்கவும்.

Wednesday, August 19, 2015

பெரியார் தாசன்






எனக்கும் அவருக்கும் பெரிய அறிமுகம் எல்லாம் இல்லை.
ஒரே ஒரு கூட்டத்தில் அவரோடு பேசுகிற அரிய வாய்ப்பு.
இனிய நந்தவனம் சந்திர சேகர் ஏற்பாடு செய்திருந்த கூட்டம். திருச்சி கலையரங்கத்தில். நானும் பேராசிரியர்.பெரியார் தாசனும் பேச வேண்டும்.
45 நிமிடம் பேசியிருக்கிறேன். பிறகு அவர் பேசினார். கேட்கவா வேண்டும்.
முடிந்து வெளியே வந்துகொண்டிருந்த போது,
“ தோழர்”
குரல் கேட்டு திரும்பினேன்.
என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். கை கொடுத்தார்.
“ பட்டைய கிழப்புற பேச்சு. புதுசா இருக்கு. ஏன் வெளியே எல்லாம் வரது இல்லையா. தொடர்பு கொள்ளுங்கள். பெரியாரையும் மார்க்ஸையும் சரியா கலக்குறீங்க.அவசியம் தொடர்பு கொள்ளுங்கள்”
மீண்டும் ஒரு முறை கை குலுக்கி விட்டு காரேறுகிறார். இது நடந்து ஐந்தாறு ஆண்டுகள் கடந்திருக்கும்.
தொடர்பு கொள்ளவில்லை.
இனி தொடர்பு கொண்டாலும் எடுத்துப் பேச அவரில்லை.
ஒரு பேச்சைக் கேட்டதற்கே என்னை அங்கீகரித்துப் பேசினீர்கள்.
எவ்வளவு கேட்டிருப்பேன். எவ்வளவு எடுத்திருப்பேன்.
உங்கள் பேச்சுக்களில் பெரும்பாலும் என்னிடம் ஆவணங்களாய்.
நன்றிசொல்லி அனுப்பி வைக்கிறோம். போய் வாருங்கள்.
(இதே நாள் 2013 இல் எழுதியது)

Tuesday, May 19, 2015

இதே நாளில்

ஒரு மே 19 அன்றுதான் இந்தக் கவிதையை எழுதியுள்ளேன்
**************************************************************    

அழைத்துச் செல்வார் தங்களை 
அடர்ந்த 
தண்ணீரண்டைக் கென்று 
நம்பி 
விசுவசித்து 
மந்தைகள் காத்திருக்க
சில்லறைத் துழாவுகிறார் கர்த்தர்
தண்ணீர் பாக்கெட்டிற்கு

Sunday, May 17, 2015

அய்யம்

நான் தொல்காப்பியம் எல்லாம் படித்தவன் இல்லை. ஆனால் கீழே உள்ளது தொல்காப்பியத்திலிருந்து என்று அறிகிறேன்.
“ ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே
தா என் கிளவி ஒப்போன் கூற்றே
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே”
எனில்,
இழிந்தவன் தன்னைவிட உயர்ந்தவனிடம் ஒரு பொருளை வேண்டிக் கேட்பதற்கு ”ஈ” என்ற சொல்லையும், தனக்கு சம நிலையில் இருப்பவனிடம் கேட்கும்போது “ தா” என்று கேட்க வேண்டும் என்றும், உயர்ந்தவன் தன்னைவிட தாழ்ந்தவனிடம் கேட்குமொபோது “ கொடு” என்று கேட்க வேண்டும் என்றும் ஆகிறது.
எனில்,
இழிந்தவன், ஒப்போன், உயர்ந்தவன் என்பது சாதியப் படிநிலைகளைக் குறிப்பதாகத்தான் எனக்குப் படுகிறது.
எனில்,
சாதிக்கொரு வார்த்தையை தொல்காப்பியம் பரிந்துரைப்பதாகவே படுகிறது.
அது அப்படித்தான் எனில் சொல்கிறோம்,
“ குற்றம் குற்றமே”
அல்லது இதற்கு வேறு ஏதும் பொருளிருப்பின் சொல்லுங்கள் சரியாயிருப்பின் ஏற்கிறோம்.

Friday, May 15, 2015

தோழர் இன்குலாப்

15.05.2012 பதிவு
**********************

வேறு வேறு இயங்கு தளங்கள்

பல சமயங்களில் கடுமையான முரண்பாடுகளோடு கூடிய, இன்னும் சொல்லப் போனால் முற்றாய் எதிர் நிலை செயல் திட்டங்கள்

இன்னும் கொஞ்சம் கூடுதலாக நுணுகினால் பரஸ்பரம் ஒருவரை எதிர்த்து மற்றவர் செயல்பட வேண்டிய சூழல்

ஆனாலும்

எந்த கட்டத்திலும்

நமக்கு நேர் எதிராக கருத்துக் களத்தில் அவர் இயங்கிய வேளையிலும்

அவரை “ மக்கள் கவிஞர்” என்று கொண்டாடவே செய்திருக்கிறோம்

கருத்துக் களத்தில் அவரது பாதிப்போடும், அவரது கருத்தாளுமையை, அர்ப்பணிப்பை, தியாகத்தை மதித்துக் கொண்டாடியதோடு மட்டுமில்லாமல் அதற்காக பெருமையேப் பட்டிருக்கிறோம்

இது எப்படி சாத்தியம்

வெகு காலமாக புரியாத புதிராகவே இருந்த இந்தக் கேள்விக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் நாங்கள் “காக்கைச் சிறகினிலே” சார்பாக எடுத்த விழாவில் விடை கிடைத்தது

அதில் பேசும் போது நமது மக்கள் கவிஞர் இன்குலாப் சொன்னார்

“இப்பொழுது ஈழத் தமிழர்களுக்காக எழுதும் நான்,

ஒரு வேளை அங்கே தமிழர்கள் பெரும்பான்மையாகவும், சிங்களவர்கள் சிறுபான்மையினராகவும் இருந்து பெரும்பான்மைத் தமிழர்கள் சிறுபான்மை சிங்கள இனத்தை அழிக்க முயன்றிருப்பின் என் பேனா சத்தியமாக சிங்களவர்களுக்காகவே இயங்கியிருக்கும்”

அது...அது...

அதுதான் எங்கள் மக்கள் கவிஞர் இன்குலாப்

Thursday, May 14, 2015

14.05.2013

கீர்த்தனா ஏதோ ஒரு தொடர் பார்த்துக் கொண்டிருந்தாள். விசாரித்தபோது " மறுமணம் " என்று சொன்னாள்.
நானும் அவளருகே அமர்ந்தேன்.
ஒரு யுவதியின் கையை இளைஞன் ஒருவன் பிடித்துக் கொண்டிருந்தான்.
அவள் " கையை விடுங்கள், கையை விடுங்கள் " என்று கத்திக் கொண்டிருந்தாள்.
அவன் அப்படியே பேதலித்துப் போனவனாய் நின்று கொண்டிருந்தான். கையை விடவும் தோன்றாதவனாய் பட்டது.
" இங்க பாருங்களேன் ,ஏங்கையைப் பிடித்துக் கொண்டு விட மாட்டேங்கறார் " என்று அந்தப்
பெண் கத்தவே கூட்டம் கூடிவிடுகிறது.
ஆளாளுக்கு அந்த இளைஞனை வறுத்து எடுக்கிறார்கள். போலீஸைக் கூப்பிடப் போவதாக ஒருவர் மிரட்டுகிறார். சிலர் தாக்க நெருங்குகிறார்கள்.
" அவங்க என்னோட மனைவிங்க " என்று அவன் சொன்னதும் எல்லோரும் ஒரு கணம் உறைந்து போகிறார்கள்.
" ஏம்ப்பா வொய்ப்னாலும் அவ கையப் பிடிக்காதன்னா பிடிக்கக் கூடாதுதானேப்பா. ஏன் அதை யாரும் உணரவேயில்ல"
கீர்த்தனா சரியாக வளர்ந்து வருவதாகவே படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்

சமயபுரம் SRV மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் நண்பர் துளசி ” காக்கைச் சிறகினிலே “ இந்த மாத இதழில் நான் எழுதியிருந்த ‘ என் கல்வி என் உரிமை’ கட்டுரையை வாசித்துவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
அடிப்படையில் இந்தக் கட்டுரையோடு பல இடங்களில் முரண்படுவதாகவும் அது குறித்து என்னோடு விவாதிக்க தயாராக இருப்பதாகவும் சொல்லியிருந்தார். இரண்டு விஷயங்கள் என்னை மகிழ்ச்சிப் படுத்தின,
1 ) அவரது அன்பான, மிக நேர்மையான , நாகரீகமான, எல்லாவற்றிற்கும் மேலாக கல்வி குறித்த அக்கறையோடு கூடிய அவரது எதிர்விணை.
2 ) கட்டுரை சேர்ந்திருக்கிறது.
கசியும் மகிழ்வோடு அழைத்தேன். எடுக்கவில்லை.
பத்து நிமிடத்தில் அவரே தொடர்பில் வந்தார். முக்கியமான பணியில் இருந்ததால் அழைப்பை ஏற்க இயலாது இருந்தமைக்காக வருந்தினார். அவருக்கு இருக்கும் பணிச்சுமை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவரது அந்தப் பண்பு என்னுள் இருக்கும் அவரது பிம்பத்தை இன்னும் கொஞ்சம் அழகுபடுத்தியது.
ஒரு மரியாதைக் குரிய பிம்பம் அவரைப் பற்றி என்னுள் இருப்பதற்கு பெருங்காரணம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்றினை தலைமைப் பொறுப்பேற்று அவர் வழி நடத்திக் கொண்டிருந்தாலும் மருத்துவமும் கல்வியும் பொதுப் பட வேண்டும் என்பதில் அவருக்குள்ள அக்கறைதான். அதற்கான அவரது பங்களிப்பும் நான் அறிந்ததே.
வெறிகொண்டு வாசிப்பவர். நல்ல எழுத்தை வாசிக்க நேர்ந்தால் அந்த எழுத்தாளனை தேடிப் பிடிப்பவர்.
நோயில் சிரமப் பட்ட நான் தொழும் ஒரு மரியாதைக்குரிய மூத்த எழுத்தாளரை வருடக் கணக்கில் வைத்து வாஞ்சையோடு அவர் பராமரித்ததை நான் அறிவேன்.
நல்ல வேலை, நல்ல ஊதியம், சொகுசான வாழ்க்கைக்கு மட்டுமே மாணவர்களை பெரும்பகுதி தயார் செய்யும் தனியார் கல்வி நிறுவனங்கள் மத்தியில் தனது மாணவர்களுக்கு சமூகம் குறித்த அக்கறை வேண்டும் என்பதில் முனைப்போடு செயல்படுபவர். நல்ல சமூக அக்கறையுள்ள சிந்தனையாளர்களையும், களப் பணியாளர்களையும் கொண்டு தனது மாணவர்களுக்கு முகாம்களை ஏற்பாடு செய்பவர்.
இடது சாரி எழுத்தாளர்களைத் தொடர்ந்து தமது பள்ளிக்கு அழைப்பவர்.
பேசியதில் அவர் சொன்னது இதுதான்,
இதுமாதிரி விமர்சனங்களோ, போராட்டங்களோ இந்தக் கட்டமைப்பை உடைக்காது. பொதுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்துவது மட்டுமே இதனைத் தகர்க்கும் என்கிறார்.
நியாயம்தான் . ஆனால் இதனூடேதான் அதை செய்ய முடியும். ஆகவே பொதுப்பள்ளிக் கட்டமைப்பை பலப் படுத்துவதன் ஒரு பகுதியாகவே இதை நான் இதை கொள்கிறேன் துளசி.
இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும் தனியார் பள்ளிகள் பற்றிய எனது குற்றச்சாட்டுகள் இவரது பள்ளியில் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் குறைவு என்பது மட்டுமல்ல சமூக மனிதனாக மாற்றுகிற பணியையும் அது செய்யவே செய்கிறது.
ஆனால் அதற்கு முழுக் காரணம் துளசி என்கிற சமூக அக்கறை கொண்ட மனிதன்தான். இவரில்லாத அந்தப் பள்ளி இவற்றை உதறிக் கொண்டு பயணப் படவே செய்யும்.
அவர் சொன்ன இன்னொரு விஷயம் “ தெய்வங்களுக்கு சொல்லிக் கொடுத்தவன்” என்ற எனது கட்டுரையை ஆசிரியர் கூட்டத்தில் வைத்து விவாதித்தார்களாம்.
மிக்க நன்றி துளசி.
உங்களது ஆக்கப் பூர்வமான விவாதத்தை கை ஏந்தி யாசிக்கிறேன் தோழர். விவாதத்தில் பங்கெடுக்க காத்திருக்கிறேன்.
தமிழகத்தின் குறிப்பிடத் தக்க ஒரு தனியார் பள்ளி முதல்வரை கல்வி குறித்த விவாதத்திற்கு இந்த முகம் தெரியாத எளியவனின் கட்டுரை அழைத்து வந்திருக்கிறது என்கிற வகையில் மகிழ்கிறேன்.

Wednesday, May 13, 2015

13.05.2014

இன்று சமயபுரம் SRV மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் திரு துளசி அவர்களை நண்பர் கனகராஜோடு சென்று சந்தித்தேன்.
பேசிக்கொண்டிருந்தபோது எனது “ இவனுக்கு அப்போது மனு என்று பேர் “ என்ற நூலில் வரும் சம்பவத்தை ஸ்கிட்டாக மாற்றி 10 நிமிடம் நிகழ்த்தியிருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் என்பதைச் சொன்னார்.
தயாரித்த ஆசிரியையிடம் எப்படி இதை தேர்வு செய்தீர்கள், எட்வின் யார் என்பதோ தனது நண்பர் என்பதோ தெரியுமா என்று கேட்டிருக்கிறார். தெரியாது என்று சொன்னவர் பள்ளி நூலகத்தில் படித்ததிலிருந்து அதே நினைவில் இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். அநேகமாக மகள், அல்லது மகன் வயதுதான் இருக்கிறது அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு. அந்த மகளை வாழ்த்தி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
எத்தனையோ அமைப்புகளுக்கு எத்தனையோ நூல்களைப் பற்றி பேசப் போனாலும் ஒரு அமைப்பேனும் விவாதிக்க எடுத்துக் கொள்கிறமாதிரி ஒரு நூலையும் இன்னும் எழுத வில்லையே என்று என்னையே நான் நொந்து கொள்வது உண்டு.
ஆனாலும் தொடர்ந்து இயங்க இதுமாதிரி நிகழ்வுகளே நம்மை உந்தித் தள்ளுகின்றன.
நன்றி மகளே. நன்றி துளசி.

Tuesday, May 12, 2015

11.05.2014

தாராபுரம் தாண்டி திருப்பூர் நோக்கிய பயணத்தில்
ஏதோ ஒரு பொட்டல் காட்டில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு என்னைப் பார்த்து தலையை ஆட்டியது.
ஏதோ சொல்வது போல் தோன்றியது.
ஒருக்கால் அது சொல்லியிருக்கக் கூடும்,
" பார்த்து கைய பத்திரமா உள்ள வச்சிட்டுப் போப்பா"

Monday, May 11, 2015

எங்க அப்பாயி போதும்

( 11.05.2014 பதிவு)

ஒருமுறை அம்மா (விக்டோரியாவின் அம்மா) வந்திருந்தபோது கடிந்து சொல்லிவிட்டுப் போனதால் அப்பாவிடம் கேட்டு மிகுந்த சிரமத்திற்கிடையே அந்தப் படத்தைப் பெற்ற விக்டோரியா அதை பெரிதாக்கி மாட்டி மாலை போட்டுவிடவே அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கிஷோர் அது யாரெனக் கேட்டான்.

உங்க அப்பாயிடா என்று விக்டோரியா சொல்லவே மிரண்டுபோனான். எங்க அப்பாயிதான் ஊருல இருக்கே அப்புறமென்ன புதுசா இன்னொரு அப்பாயி என்றான்.

இல்லடா இதுதான் அப்பாவப் பெத்த பெரிய அப்பாயி. உங்க அப்பாயி சின்ன அப்பாயி.

அதெல்லாம் வேணாம் போட்டோவ எடு, எனக்கு எங்க அப்பாயி போதும் என்று பிடிவாதமாய் முரண்டு பிடித்தான். ஒரு வழியாய் இன்னும் ஏதோ ஒரு காரணத்தால் படம் கழட்டப் பட்டது. பயங்கர திருப்தி கிஷோருக்கு.

என் அம்மாவை நானே பார்த்ததில்லை. வளர்த்தெதெல்லாம் இந்த அம்மாதான். கொடுமை என்னவெனில் நான் அம்மாவை அம்மா என்று அழைப்பதே இல்லை. அக்கா என்றுதான் அழைப்பேன். எனது பெரிய தங்கையும் அப்படியே. என் தம்பியும் அப்படியே அழைத்தான்.

ஊருக்கே அம்மாவாய் இருந்தும் சொந்தப் பிள்ளைகள் அம்மா என்று அழைக்கவில்லை. நல்ல வேளையாக கடைசித் தங்கை அம்மா என்று அழைத்தாள்.

சின்னம்மா, மாற்றாந்தாய் என்றெல்லாம் கட்டமைக்கப்படும் பிம்பங்களைப் படிக்கவும் பார்க்கவும் நேர்கிறபோது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

கிஷோர் ஒரு நாள் விடுப்பு கிடைத்தாலும் அப்பாயியைப் பார்க்கத்தான் போகிறான். பள்ளிக்கு விடுமுறை விட்டால் கீர்த்தி அப்பாயிகிட்டப் போகனும் என்று அடம் பிடிக்கிறாள்.

படிப்பு முடிந்ததும் ஒரு இரண்டு மூன்று ஆண்டுகள் மாமாவோடு ஷார்ஜா போய் கொஞ்சம் சம்பாரித்துவிட்டு வாடா என்று ஒருமுறை கிஷோரிடம் சொன்னபோது சொன்னான்,

“ உன்னையும் சித்தப்பாவையும் நம்பி அப்பாயிய விட்டுட்டு  போக முடியாது. அப்பாயி கூப்டுச்சுன்னா அல்லது அதுக்கு முடியாம போனா சீக்கிரமா வரமாதிரி பக்கமாதான் இருப்பேன்”

எத்தனையோ பேர் அதையும் என்னையும் கிண்டி விட்டு பார்த்திருக்கிறார்கள் நாங்கள் இருவருமே அசையவில்லை. பெரியவன ஒரு வார்த்தை கேட்கனும் என்பதே அதனுடைய முடிவாகும்.

அக்காட்ட கேட்கனும் என்பதே எனதாகும்.

45 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த என் அம்மாவின் கல்லறைக்கு நான் கல்லறைத் திருநாள் உள்ளிட்டு எதற்கும் போனதில்லை.

அம்மாதான் வீட்ல இருக்கே.

..

Sunday, May 10, 2015

இந்தக் கவிதைக்கு வயது ஒன்று

போகிற பாதையோரம்
தட்டுப் பட்டது
கூராயிருந்ததால்
பிரச்சினையெழவில்லை
அதை
சாமி என்றேற்பதில்
நீண்ட தேடலில்
சாமி ஏதுமற்ற குளக்கரை மரமொன்று கிடைக்க
பிரச்சினையில்லை
கழுவி நடுவதிலும்
”யார் வேணாலும் ஒன்னு மண்ணாப் பொழங்க
சாராயக் கடையா?
சாமி இடம்
சுத்த பத்தம் வேணும்”
“சுத்தி வளைக்காத
நாங்க கும்பிடக்கூடாது
அதானே?”
அவனுக்கு ரெண்டு இவனுக்கு ரெண்டென
அணிபிரிய
எவனோ ஒருவன்
எட்டி உதைத்ததில்
சாமியாகவேண்டியதை கல்லாக்கிப்
போயிருந்தது
சாதி

Saturday, May 9, 2015

09.05.2014

(சென்ற ஆண்டு இதே நாளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு. 2011 ஆம் ஆண்டும் மே 9 அன்றுதான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு. அன்றைய எனது பதிவை சுட்டிவிகடன் தனது பக்கத்தில் வெளியிட்டிருந்தது)

ஊடகம் எவ்வளவு அழுத்தமானது என்பதை மீண்டும் எனக்கின்று உணர்த்தியிருக்கிறான் தம்பி Vishnupuram Saravanan.
சென்ற ஆண்டு இதே போன்று +2 தேர்வு முடிவுகள் வந்த அன்று ஒரு பதிவைப் போட்டிருந்தேன். அநேகமாக 50 பகிர்வுகள் 150 லைக்குகள் கிடைத்திருக்கும்.
இன்று அதே பதிவை தம்பி சரவணன் “ சுட்டி விகடன் “ பக்கத்தில் மீள் பதிவாக வைத்திருந்தார்.
1080 பகிர்வுகள் 1181 லைக்குகள் வந்திருக்கின்றன.
ஊடகம் வலியது.
நன்றி சரவணன் .

Friday, May 8, 2015

சாமிக்கு கண்ணவிஞ்சு போச்சே

( இது நடந்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது. இதிலிருந்து அப்பாவைக் காப்பாற்றிய எங்களால் சாதாரண சளியில் இருந்து அவரைக் காப்பாற்ற இயலாமல் போனது. ஆனாலும் மருத்துவர் ராமகிருஷ்ணன் ஈஷ்வர் அவர்களை நன்றியோடே நினைத்துக் கொள்கிறோம்)
**************************************************************************************************************** 
என்றைக்கும் இல்லாமல் என் தம்பியின் அழைப்பு என்னை எழுப்பியது இன்று. இந்த நேரத்தில் எப்போதும் அழைப்பவனில்லை.
ஏதோ நடந்திருக்கிறது.
“சொல்லுடா”
“ நீ எங்கண்ண இருக்க இப்ப?”
”வீட்லதான். என்னன்னு சொல்லு”
“ ஒன்னும் இல்ல, அப்பாவுக்கு வலது கை திடீர்னு வரல.பேச்சும் இல்ல”
எப்போதும் தைரியமாய் இருப்பவனது குரல் முதன் முறையாக உடைந்து உதறுவதை உணர முடிந்தது. எதையும் மீறி கண்கள் உடைந்தது.
“ சரி, பால்ராஜ் கார எடுத்துக்கிட்டு திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி போ. நானும் அண்ணியும் வந்து விடுகிறோம்.
“சரி”
“மாமாவுக்கு என்ன”
சொன்னேன். விக்டோரியாவின் தேம்பலை நிறுத்த படாத பாடு பட வேண்டி இருந்தது.
ஒரு வழியாய் திண்டுக்கல் போனோம்.
அப்பாவின் மூளையில் ஒரு கட்டி தெரிவதாகவும் , உடனடியாக அறுவை செய்ய வேண்டுமென்றும் சொன்னவர். அதற்கான வசதி திண்டுக்கல்லில் இல்லை என்றும், உடனடியாக திருச்சிக்கு கொண்டு போக வேண்டுமென்றும் சொன்னார்.
அடுத்த இரண்டரை மணி நேரத்தில் திருச்சி மாருதி மருத்துவ மனையில் இருந்தோம்.
கொஞ்சமும் பயமுறுத்தாமல் அதே நேரம் ஆபத்தான கட்டத்தில் இருப்பதையும் சொன்ன நரம்பியல் நிபுணர் மருத்துவர் ராமக்கிருஷ்ணன் ஈஷ்வர் அவர்கள் ஒரு அறுவை செய்தால் குணப்படுத்தி விடலாம் என்றும் நம்பிக்கை தந்தார்.
“ எப்பங்க சார் செய்யனும்?”
“இப்ப, இப்பவே செய்யனும். நாளை என்றாலும் சந்தேகம்தான்”
”சரிங்க சார். செய்திடுங்க”
தம்பி கையைப் பிடித்தான்.
“ என்னடா?”
காதோடு சொன்னான், “ இவ்வளவு பணத்துக்கு எங்க போறது. யோசிச்சியா?”
“ விடு, பார்த்துக்கலாம்”
கையில் இருந்ததும், புரட்டியதுமாக முன்பணம் மற்றும் இன்றைக்கு வாங்க வேண்டிய மருந்துகளுக்குப் போதுமானதாயிருந்தது.
விஜயலட்சுமி என்ற தாயையும் அப்பாவையும் அறுவை அரங்கிற்கு கொண்டு சென்றனர். விஜயலட்சுமியின் மகள் “ மகமாயி எங்க அம்மாவ கொடுத்துடு, மகமாயி எங்க அம்மாவக் கொடுத்துடு...” என்றே தொடர்ந்து அழுது கொண்டிருந்தார்.
மூன்று மணி நேரம் ஓடிற்று.
மருத்துவர் வெளியே வந்தார். ” விஜயலட்சுமி அம்மா அட்டெண்டெண்ட்ஸ் வாங்க”
போனார்கள்.
கட்டி ஏற்கனவே உடைந்து ரத்தத்தில் கலந்து உள்ளதால் அறுவை செய்தாலும் பிழைக்க இயலாது என்றும், அறுவை நடக்கும் போதே எதுவும் நடக்கலாம் என்பதால் அறுவை செய்ய வில்லை என்றும் , வீட்டிற்கு அழைத்து போகுமாறும் சொன்னார்.
அந்த அம்மா முன்னிலும் சத்தமாய் அழுதார்கள்.
எங்களை அழைத்தார்,
பயந்த படியே போனோம்.
“ அருமையா அறுவை முடிஞ்சிடுச்சு சார். பயப்படாதீங்க. ரெண்டு மூனு நாளில் அப்பா பேசுவார் பழையபடி”
“ரொம்ப நன்றிங்க சார்”
வெளியே வந்து அம்மாவிடம் விஷயத்தை சொன்னோம்.
கொஞ்ச நேரத்தில் அம்மா தேம்ப ஆரம்பித்து விட்டது.
“ ஒன்னும் பயப்படாதீங்க அத்த. மாமாவுக்கு நூறு வயசு”
தேம்பல் நிற்கவில்லை.
ஒருக்கால் பணத்துக்கு என்ன பண்ணப் போறோம்னு அழுகுதா. எப்படி டிஸ்சார்ஜ் செய்யப் போகிறோம்னு பயம் வந்துவிட்டதா.
கேட்டே விட்டேன்.
“ அதுல எந்த பயமும் இல்லடா. 10 வட்டிக்காவது வாங்கி வந்து அப்பாவக் கூட்டிட்டு வந்துடுவன்னு தெரியும். “
“அப்புறம் என்ன?”
“ அந்தப் பொண்ணு எப்படி அழுதுச்சு. இந்தப் பாழாப் போன சாமிக்கு கண்ணு அவிஞ்சு போச்சே”

Thursday, May 7, 2015

07.05.2015

மாணவர்களின் பயிற்று மொழியை பெற்றோர்தான் தீர்மானிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளதாக இன்றைய (07.05.2014) தீக்கதிரில் பார்த்தேன்.
மிகவும் சரி. எனது குழந்தைகளும் மாணவர்கள்தான். அவர்களது உயர்கல்வி வரைக்கும் தாய் மொழியே பயிற்று மொழியாக வேண்டும் என்று இந்தப் பெற்றோன் ஆசைப் படுகிறேன்.

Wednesday, May 6, 2015

ஹலோ எஃப் எம் 06.05.2015

மருத்துவமனையிலிருந்து வீடு வந்து படுக்க நான்கு மணிக்கும் மேலாயிற்று. நல்ல அசதி.

அலைபேசி சிணுங்களில்தான் எழுந்தேன். "ஹலோ எப் எம்" மிலிருந்துதான் அழைப்பு.

" கூடங்குளம் தீர்ப்பு எப்படி வருமென்று எதிர்பார்க்கிறீர்கள்? "

எப்படி வருமென்று தெரியும்தான். ஆனாலும் எப்படி வர வேண்டும் என்ற என் ஆசையை இப்படிக் கொட்டி வைத்தேன்.

" 14000 கோடி செலவு செய்தாகி விட்டது என்பதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நீதிமன்றம் இந்த இரண்டையும் கணக்கிலெடுத்து தீர்ப்பளிக்கும் என்றேன்.

1 ) 14000 கோடி செலவில் செய்யப் பட்டது என்பதற்காக எம் மக்களை அந்த சவப்பெட்டியில் படுக்கச் சொல்ல முடியாது.

2 ) ஆறரை ரிக்டர் அளவு வரையிலான நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் உலை கட்டமைக்கப் பட்டுள்ளது என்பதையும் ஒருக்கால் ஏழு ரிக்டர் அளவில் வந்தால்? என்ற அய்யம் தள்ளுபடி செய்யச் சொல்கிறது.

இப்படியே ஒரு தீர்ப்பு வந்துவிட்டால ..?

நீதி இன்னும் சாகாமல் இருக்கிறது என்று கொண்டாடலாம்.

நிலைத் தகவல் 06.05.2015

ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு திருப்பி வழங்கினால் அன்றி இந்த ஆண்டு அந்தக் கோட்டாவில் மாணவர்களைச் சேர்க்க மாட்டோம் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி,மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்த குமார் கூறியுள்ளார்.

அது குறித்தெல்லாம் நாம் பேசப் போவதில்லை. நாம் பேச சில இருக்கின்றன

1 இவரது கூற்று உண்மை எனில் அரசாங்கம் அந்த மாணவர்களுக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அரசு சொல்லியிருக்க வேண்டும்.

அது உண்மையெனில் ஏன் அரசு இதற்கு ஒத்துக் கொண்டது? 25% எனில் தனியார் சுயநிதிப் பள்ளிகள் கொள்ளையடிக்கும்  பெருந்தொகையில் 25% பணத்தை அரசே அல்லவா தர வேண்டியுள்ளது.

இந்தப் பெருந்தொகையை அரசு பள்ளிகளின் கட்டுமானத்தை உயர்த்துதல், கழிவறை நிர்வாகத்தை மேம்படுத்துதல், ஆய்வறைகளை மேம்படுத்துதல், இன்னும் கூடுதலாக ஆசிரியர்களை நியமித்தல் போன்ற காரியங்களுக்கு செலவழிக்கலாமே ?

2 சொல்லியபடி அரசு பணம் தரவில்லை ஆகவே ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவு மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்கிறார்கள்.  எனவே கொடுப்பதாய் அறிவித்து கொடுக்காமல் விடுகிறோம். நீங்கள் அதையே சாக்காக வைத்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்ற வகையிலான ரகசிய உடன்பாடு ஏதேனும் இருக்குமோ என்ற அச்சம் வருகிறது.

3 தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கு சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமை இருக்கும்போது ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், மாணவர்களுக்குமான அந்த உரிமையை ஏன் நிர்வாகங்கள் மறுக்க வேண்டும்

பி.கு
........

ஒருக்கால் ஒத்துக் கொண்ட தொகையை அரசாங்கம் பள்ளிக்களுக்கு ஒதுக்குமானால் அதனால் பயன் பெற்ற மாணவர்களின் பட்டியலை வெளிப்படையாகப் பெற்று அரசு வெளியிட வேண்டும்.

Tuesday, May 5, 2015

05.05.2012

எப்படி சொல்வதென்று தெரியவில்லை.

வம்புக்கு இழுத்து விளையாடும் போதெல்லாம் கீர்த்தி சொல்வாள்,

 “ஏம்மா இந்த லூசு அப்பாவ டைவர்ஸ் பண்ணி வீட்ட விட்டு விறட்டேன்மா. ஒரே இம்சையா இருக்கு”

கிஷோர் அந்த நேரங்களில் இருந்தால் இடைமறித்து சொல்வான்,

“வீட்ட விட்டுகூட விறட்ட வேணாம். நாம வேணாலும் வாடக வீட்டுக்கு போய்க்கலாம். வக்கீலுக்கு காசு வேணும்னா முத்தண்ணன்கிட்ட வாங்கிகலாம்”

இப்படி சொல்லும் பிள்ளைகள்  நேரா நேரத்துக்கு தவறாமல் கேட்பார்கள்,

“அப்பா, சாப்ட்டியாப்பா?, மாத்திரைய ஒழுங்கா போட்டியாப்பா?,”

குடும்பத்தில் இருக்கிறது தோழர்.

இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் எதையும் சாதிக்க வில்லை.

எங்கள் குடும்பத்து மதச் சாயல்  இல்லாத பெயர்களாக குழந்தைகளுக்கு வைத்திருக்கிறேன்.

தமிழ்ப் பெயராக இல்லை என்பதில் வருத்தமே. ஆனாலும் பகத்தோடு சிறை பட்ட அவனது தோழனான கிஷோரிலால் என்பவனின் நினைவாக பையனுக்கு கிஷோர் என்றும், இசை , புகழ் என்று பொருள்படும் கீர்த்தி என மகளுக்கும் பெயர் வைத்தேன்.

ஊர் ஊருக்கு போய் தமிழ் வழிக் கல்வி குறித்து பேசுவது போலவே பிள்ளைகள் இருவரையும் தமிழ் வழியில் படிக்க வைக்கிறேன்.

பிள்ளைகளிடம் தோழனாகவே பழகுகிறேன்.

என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை தோழர்களே சொல்லிக் கொள்வதற்கு.

எனக்கும் சந்தேகமே, இவ்வளவு காலம் என்னை விவாகரத்து செய்யாமல் எப்படி விட்டுவால் என்னோடு குடும்பம் நடத்த முடிகிறது என்று.

19 ஆண்டுகள் முடிந்து இருபதாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்தப் பொழுதில் சன்னமாக வழியும் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்தபடி விக்டோரியாவை கை குவித்து வணங்கிக் கொள்கிறேன்.

பின் குறிப்பு
************
இன்று 23 ஆண்டிஇற்குள் நுழைகிறோம்

Monday, May 4, 2015

04.05.2015

முகநூலில் பதியப்பட்ட தங்கம் குறித்த பதிவுகளில் என் பார்வைக்கு பட்டவற்றுள் இந்த இரண்டையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
1 எங்கள் இளைஞர்கள்தான் அதிகம் தங்கம் வெல்கிறார்கள் திருமண நேரங்களில் என்பது மாதிரி Ram Duraiஎழுதியிருந்தார். வெல்கிறார்களா பிச்சை எடுக்கிறார்களா என்ற கேள்வி இருந்தாலும் வெகுவாக ரசிக்க முடிந்தது.
2 தங்கத்தை உரசிப் பார்க்கிற மாதிரி யாரும் தகரத்தை உரசிப் பார்ப்பதில்லை என்பது மாதிரி அதிஷா அதிஷாஎழுதியிருந்தார். வெகுவாக ரசித்தேன்.
ஒருக்கால் தகரமளவிற்கு தங்கமும் தங்கம் அளவிற்கு தகரமும் பூமிக்கு கீழே கிடைக்குமானால் தங்கத்தை அல்ல தகரத்தைதான் உரசிப் பார்ப்போம்.
நினைத்துப் பாருங்களேன் அப்போது தங்கத்தோடு எதையாவது சேர்த்து இறுக வைத்து வாளி குவளைகளும் தகரத்தில் மோதிரமும் செய்திருப்போம். அடகு கடைகளிலும் வங்கிகளிலும் தகர நகைகளுக்கு கடன் கொடுத்திருப்பார்கள்.

Sunday, May 3, 2015

03.05.2014

எது கவிதை?
யாருக்குத் தெரியும்
என்பான் சுகதேவ். ஆமாம், எது கவிதை என்று எவராலும் அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆளாளுக்கு ஒரு அபிப்பிராயம். நாம் சிலாகித்து எழுதிய கவிதை கண்டு கொள்ளாமல் போவதும் கசக்கி எறிந்துவிடலாமா என்று நாம் வெகுவாய் யோசித்த கவிதை கொண்டாடப் படுவதும் இயல்புதான்.
எப்படி கவிதை எழுதுவது என்று வகுப்பெடுப்பவர்களைப் பார்த்தால் பிறகு எப்போதாவது நேரம் கிடைக்கிறபோது அவர்களுக்காக சிரித்துக் கொள்வேன்.
ஆனால் கவிதை தோன்றியவுடன் எழுதிவிட வேண்டும் என்று தம்பி கடங்கநேரி யான் சொல்கிறான்.
“தோன்றிய உடனே
கவிதையைக்
கொட்டித் தீர்த்துவிட வேண்டும்
அல்லது
அதிகபட்ச வார்த்தை
அலங்காரம் சேர்ப்பதில்
தொலைந்து விடுகிறதுகவிதை”

(நிராகரிப்பின் நிழலில், 17 ஆம் பக்கம், தகிதா பதிப்பகம்)
அவசரப்படாமல் கொஞ்சம் பழுக்கப் போடுங்களேன் என்பார் ரகுமான். சரியோ என்றுகூடத் தோன்றியது. இந்தப் பையனின் கவிதையைப் படித்தவுடன் கொஞ்சம் குழம்பினாலும் இவன் சொல்வதுதான் சரி என்று படுகிறது.
கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டால் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான கவிதை கூட நீர்த்துப் போகும் அபாயம் இருக்கவே இருக்கிறது. ஒரு உதாரணத்தோடு இதை அணுகினால் விளங்கும் என்று படுகிறது.
ஒடுக்கப் பட்ட மக்களுக்கான எங்களின் தேசிய கீதம் தோழர் இன்குலாப் எழுதிய ”மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா”
கோவம் கொப்பளிக்க கொப்பளிக்க கொட்டியிருப்பார். அதில் ஒரு வரி வரும்,
“ நாங்க எரியும் போது எவன் மசிர புடுங்கப் போனீங்க”
இதையே செய் நேர்த்தி வார்த்தை ஜாலம் எல்லாம் போடுபவன் கையில் கிடைத்து செப்பனிடுகிறேன் என்று கால அவகாசம் எடுத்துக் கொண்டான் எனில் அவன்,
“நாங்க எரியும் போது எவன் முதுக சொரியப் போனீங்க” என்று கூட எழுதியிருப்பான்.
இன்குலாப் மக்கள் கவி. அதனால்தான் எந்த வித பௌடரும் பூசாமல் நெருப்பாய்க் கொட்டினார்.
வடிவம் முக்கியமல்ல நெருப்புக்கு. எந்த வடிவமேயாயினும் நெருப்பு அழகாய்த்தானிருக்கும். வடிவமல்ல சூடுதான் நெருப்பின் குணம்.
அகம் எழுதும் எங்களுக்கு என்று யாரேனும் கேட்டால் அகமும் நெருப்புதான், அன்பும் நெருப்புதான்.
அதனால்தான் அம்ரிதா “ குருதியின் வெப்பத்திலிருந்து பிறப்பது கவிதை” என்றார்.
கையேந்தித்தான் கேட்கிறோம் , “ சுடச் சுடக் கொடுங்கள்”
உனது ஏழு வரி சின்னக் கவிதை எங்கெல்லாமோ என்னை இழுத்துப் போகிறது.
சபாஷ்டா தம்பி

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...