சமயபுரம் SRV மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் நண்பர் துளசி ” காக்கைச் சிறகினிலே “ இந்த மாத இதழில் நான் எழுதியிருந்த ‘ என் கல்வி என் உரிமை’ கட்டுரையை வாசித்துவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
அடிப்படையில் இந்தக் கட்டுரையோடு பல இடங்களில் முரண்படுவதாகவும் அது குறித்து என்னோடு விவாதிக்க தயாராக இருப்பதாகவும் சொல்லியிருந்தார். இரண்டு விஷயங்கள் என்னை மகிழ்ச்சிப் படுத்தின,
1 ) அவரது அன்பான, மிக நேர்மையான , நாகரீகமான, எல்லாவற்றிற்கும் மேலாக கல்வி குறித்த அக்கறையோடு கூடிய அவரது எதிர்விணை.
2 ) கட்டுரை சேர்ந்திருக்கிறது.
கசியும் மகிழ்வோடு அழைத்தேன். எடுக்கவில்லை.
பத்து நிமிடத்தில் அவரே தொடர்பில் வந்தார். முக்கியமான பணியில் இருந்ததால் அழைப்பை ஏற்க இயலாது இருந்தமைக்காக வருந்தினார். அவருக்கு இருக்கும் பணிச்சுமை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவரது அந்தப் பண்பு என்னுள் இருக்கும் அவரது பிம்பத்தை இன்னும் கொஞ்சம் அழகுபடுத்தியது.
ஒரு மரியாதைக் குரிய பிம்பம் அவரைப் பற்றி என்னுள் இருப்பதற்கு பெருங்காரணம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்றினை தலைமைப் பொறுப்பேற்று அவர் வழி நடத்திக் கொண்டிருந்தாலும் மருத்துவமும் கல்வியும் பொதுப் பட வேண்டும் என்பதில் அவருக்குள்ள அக்கறைதான். அதற்கான அவரது பங்களிப்பும் நான் அறிந்ததே.
வெறிகொண்டு வாசிப்பவர். நல்ல எழுத்தை வாசிக்க நேர்ந்தால் அந்த எழுத்தாளனை தேடிப் பிடிப்பவர்.
நோயில் சிரமப் பட்ட நான் தொழும் ஒரு மரியாதைக்குரிய மூத்த எழுத்தாளரை வருடக் கணக்கில் வைத்து வாஞ்சையோடு அவர் பராமரித்ததை நான் அறிவேன்.
நல்ல வேலை, நல்ல ஊதியம், சொகுசான வாழ்க்கைக்கு மட்டுமே மாணவர்களை பெரும்பகுதி தயார் செய்யும் தனியார் கல்வி நிறுவனங்கள் மத்தியில் தனது மாணவர்களுக்கு சமூகம் குறித்த அக்கறை வேண்டும் என்பதில் முனைப்போடு செயல்படுபவர். நல்ல சமூக அக்கறையுள்ள சிந்தனையாளர்களையும், களப் பணியாளர்களையும் கொண்டு தனது மாணவர்களுக்கு முகாம்களை ஏற்பாடு செய்பவர்.
இடது சாரி எழுத்தாளர்களைத் தொடர்ந்து தமது பள்ளிக்கு அழைப்பவர்.
பேசியதில் அவர் சொன்னது இதுதான்,
இதுமாதிரி விமர்சனங்களோ, போராட்டங்களோ இந்தக் கட்டமைப்பை உடைக்காது. பொதுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்துவது மட்டுமே இதனைத் தகர்க்கும் என்கிறார்.
நியாயம்தான் . ஆனால் இதனூடேதான் அதை செய்ய முடியும். ஆகவே பொதுப்பள்ளிக் கட்டமைப்பை பலப் படுத்துவதன் ஒரு பகுதியாகவே இதை நான் இதை கொள்கிறேன் துளசி.
இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும் தனியார் பள்ளிகள் பற்றிய எனது குற்றச்சாட்டுகள் இவரது பள்ளியில் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் குறைவு என்பது மட்டுமல்ல சமூக மனிதனாக மாற்றுகிற பணியையும் அது செய்யவே செய்கிறது.
ஆனால் அதற்கு முழுக் காரணம் துளசி என்கிற சமூக அக்கறை கொண்ட மனிதன்தான். இவரில்லாத அந்தப் பள்ளி இவற்றை உதறிக் கொண்டு பயணப் படவே செய்யும்.
அவர் சொன்ன இன்னொரு விஷயம் “ தெய்வங்களுக்கு சொல்லிக் கொடுத்தவன்” என்ற எனது கட்டுரையை ஆசிரியர் கூட்டத்தில் வைத்து விவாதித்தார்களாம்.
மிக்க நன்றி துளசி.
உங்களது ஆக்கப் பூர்வமான விவாதத்தை கை ஏந்தி யாசிக்கிறேன் தோழர். விவாதத்தில் பங்கெடுக்க காத்திருக்கிறேன்.
தமிழகத்தின் குறிப்பிடத் தக்க ஒரு தனியார் பள்ளி முதல்வரை கல்வி குறித்த விவாதத்திற்கு இந்த முகம் தெரியாத எளியவனின் கட்டுரை அழைத்து வந்திருக்கிறது என்கிற வகையில் மகிழ்கிறேன்.
நல்லதொரு மனிதரைப் பற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteமிக நல்ல மனிதர் அய்யா
Deleteமுதல்வர் + நண்பர் துளசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Delete