Saturday, May 2, 2015

21 வட்டிக்கு எதற்கு மீட்டர்


இடம்விட்ட மீனைப் போலும்
எரிதணல் மெழுகுபோலும்
படமெடுத் தாடுகின்ற
பாம்பின் வாய்த்தேரை போலும்
தடங்கொண்ட ராமபாணம்
செருக்களத்துற்றபோது
கடன்பட்டார் நெஞ்சம்போல
கலங்கினான் இலங்கை வேந்தன்

என்கிறார் அருணாசலக் கவிராயர்.

ராமர் விட்ட அம்பு குறிபிசகாமல் ராவணனை அடைகிறது. சாக வீழ்கிறான் ராவணன். மரணத்திற்கும் அவனுக்கும் நிமிடங்களே மிச்சமிருந்த தருணத்தின் அவனது வலியை, ரணத்தை கவலையை குறித்து சொல்லும்போது கவிராயர் இப்படிக் கூறுகிறார்.

நீர் விட்டகன்ற மீனைப் போலவும், தணலில் விழுந்த மெழுகு போலவும் பாம்பின் வாயில் சிக்கிக் கொண்ட தேரையைப் போலவும் என்று சொன்னாலே போதும் அனைத்தையும் இழந்த நிலையிலான அவனது மனநிலையப் புரிந்து கொள்ள. இதையெல்லாம் விட வலிமிகுந்த கவலையோடு இருந்தான் என்பதைச் சொல்வதற்காகத்தான்கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்என்று சொல்கிறார்.

ஆக, வேறு எதைவிடவும் பெருங்கொடூரமான கலக்கம் என்பது சாகும் தருவாயில் ஒருவனுக்கு தன் கடன் குறித்த நினைவு கொண்டுவரும் கலக்கம்தான் என்று உணர முடிகிறது. எனவேதான் ராவணன் தனது மரண நொடிகளில் அனுபவித்த வேதனையின் அழுத்தத்தை சொல்ல வரும்போது கடன்பட்ட ஒருவன் படும் வேதனையை ஒத்திருந்தது அவனுடைய வேதனை என்று கூறுகிறார்.

சாக்ரடீஸ் தனது மரணத் தருவாயில் தான் தனது பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து கடனாகப் பெற்றிருந்த ஒரு கோழியைப் பற்றிய கவலையோடு இருந்ததாகவும், அருகிருந்த தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் பக்கத்து வீட்டில் தன் சார்பில் ஒரு கோழியைக் கொடுத்துவிடுமாறு கேட்டுக் கொண்டதாகவும் எங்கோ படித்திருக்கிறேன்.

கடன் என்பது ஒரு மனிதனை உயிரோடும் இருக்க விடாது, சாகவும் விடாது. மொத்தத்தில் ஒரு மனிதனை உயிரோடே உயிரற்றவனாய் முடக்கிப் போடும்.

சென்ற ஆண்டின் இறுதியில் கடன் ஒரு வல்லரசையே சில வாரம் முடக்கிப் போட்டது. அமெரிக்காவின் கஜானா அந்தக் காலகட்டத்தில்.சுத்தமாய் காலியானது. அந்தக் காலக் கட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக் கூட காசில்லாத ஒரு பரிதாப நிலையினை அது அடைந்திருந்தது. இது ஒன்றும் அமெரிக்காவிற்கு புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் இது போன்றுதான் நிகழும் ஆனால் உடனே கடன் வாங்கி பிரச்சினையை சரி செய்து கொள்ளும். சென்ற ஆண்டு அப்படி கடன் வாங்குவதற்கு ஒபாமாவிற்கு சில நிபந்தனைகளைப் போட்டது. அவர் முறுக்க, எதிர்க் கட்சிகள் இன்னுமாய் முறுக்க தேவையில்லாத துறைகளை இழுத்து மூடுவது என்ற முடிவினை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை ஒபாமாவிற்கு. பிறகு ஒரு கட்டத்தில் அரசு எந்திரம் இந்த வகையில் முடங்குவது என்பது தங்களுக்கும் பாதகமான சூழலையே கொண்டுவந்து சேர்க்கும் என்பதை அமெரிக்காவின் எதிர்கட்சி உணரத் தலைபட்டது.

மக்கள் இருவர்மீதும் சமாளவு கோவத்தில் இருப்பதை இருவருமே உணர ஆரம்பித்தார்கள். ஏதோ ஒரு வகையில் தங்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். அமெரிக்கா கடன் வாங்கியது. உலகப் பொருளாதாரம் தேக்க நிலையிலிருந்து ஒரு வழியாக மீண்டது.

ஆக கடன் என்பது தேசங்களையும் ஆட்டிவைக்கிற ஒரு ஆகப் பெரிய சக்தி. இயங்கப் பணமற்று அல்லது தொழில் நடத்தப் பணமற்று முடங்கிக் கிடக்கிற தனி மனிதனை கடன் எப்படி தொழில் நடத்த உதவுகிறதோ அதேமாதிரி இயங்கப் பணமற்று முடங்கிக் கிடக்கிற நாடுகளையும் கடன்தான் மீட்டெடுத்து இயங்க வைக்கிறது.

நமது கேள்வியெல்லாம் அமெரிக்காவிற்கு கடன் கொடுக்குக்கும் போது கையிலெடுக்கும் அதே அளவுகோலைத்தான் மற்ற நாடுகளுக்கு கடன் கொடுக்கும்போதும் உலகவங்கி கையெடுக்கிறதா?

கொஞ்சமும் யோசிக்காமல் சொல்லலாம் இல்லையென்று. இன்னும் சொல்லப் போனால் அமெரிக்கா திணிக்கும் நிர்ப்பந்தங்களை ஏற்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே மற்ற நாடுகளுக்கு கடனை வழங்க முன்வருகிறது உலக வங்கி.

இதே மாதிரிதான் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் வங்கிகள் இயங்குகின்றன. விலக்குகள் உள்ளனவா என்று தெரியவில்லை. இருக்கலாம், இருந்தாலும் விலக்குகள் உலக இயல்பை தீர்மானிக்கப் போவதில்லை.

டாட்டாவிற்கு ஒரு அளவுகோலும் உழைப்பவனுக்கு ஒரு அளவுகோலும் என்பதுதான் பெரும்பான்மை இந்திய வங்கிளின் வாடிக்கையாக உள்ளது.

பொதுவாக ஒரு லட்சம் ரூபாய்க்கான சொத்தினை பிணையமாக பதிவு செய்து கொடுத்தால் அப்படிக் கொடுப்பவருக்கு 75000 ரூபாய் வரை கடன் கொடுக்கலாம் என்பதுதான் வங்கிகள் பின்பற்ற வேண்டிய ஒரு பொது விதி.

ஒரு சாதாரணக் குடிமகன் ஒரு லட்சம் ரூபாய்க்கான சொத்திற்கான ஆவணங்களோடு வங்கியை அணுகினால் போதுமான அளவு இழுத்தடித்தபின் எப்படி திருப்பி செலுத்த இயலும் என்பதற்கான என்ற விவரங்களோடு வரச் சொல்லுவார்கள். கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அதிகாரி, வட்டாட்சியர் என்று அலையோ அலை என்று அலைந்து கடன் வாங்கி அழுது கேட்ட ஆவணங்களோடு போனால் இன்னொன்று கேட்பார்கள். இப்படியே அவர்கள் திருப்திபடும் வரைக்கும் இழுத்தடித்தபின் போகட்டும் என்று 50000 ரூபாயை அனுமதிப்பார்கள்.

இதுவே டாடா கேட்பதாக இருக்கிறார் என்று தெரிந்தாலே போதும். அவர் வங்கிக்கு வரத் தேவை இல்லை. வங்கியே அவரது இருப்பிடத்திற்கு போகும். அவரது வீடு தேடியே அதிகாரிகள் வருவார்கள். அணைத்தும் சரிகட்டப் படும். இரண்டு லட்சம் ரூபாய் பொருமானமுள்ள சொத்துப் பிணையின் பேரில் பத்து லட்சம் ரூபாய் வழங்குமளவிற்கு வங்கியின் பெருந்தன்மை நீளும்.

ஆக பணம் உள்ளவனுக்கே கடனைத் தருகிறார்கள் வங்கிக்காரர்கள். கேட்டால், பணம் உள்ளவரிடம் கடன் கொடுத்தால் கடன் ஒழுங்காகத் திரும்பிவிடும். வேலைக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். அப்படித்தான் வாங்கிய நடுத்தர மற்ரும் பெருமுதலாளிகள் வாங்கிய கடனை ஒழுங்காக் கட்டுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
வராக்கடன் பட்டியலில் உள்ளோரின் பெயர்ப் பட்டியலைநீங்கள் வெளியிடுகிறீர்களா அல்லது நாங்கள் வெளிடட்டுமா? என்று பொதுத் துறை வங்கி ஊழியர்களின் சங்கங்கள் எத்தனையோ முறை கேட்டும் போராடியும் எந்தப் பலனும் இதுவரை ஏற்பட்டிருப்பதாத் தெரியவில்லை. இதில் விநோதம் என்னவென்றால் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் படிப்பை முடித்த அடுத்த மாதமே வட்டியைக் கட்டவில்லை என்பதற்காக வங்கியை ஏமாற்றியவர்கள் போல தட்டிகளை வைத்ததுண்டு. ஆனால் பல கோடிகளை திருப்பாமல் இருக்கும் பெரு முதலாளிகளை இவர்கள் கண்டு கொள்வதேயில்லை.

இவை எல்லாம்கூட பரவாயில்லை. பிணையாகக் கொடுப்பதற்கு ஏதுமற்ற தள்ளுவண்டி வியாபாரிகளும், தட்டுக்கூடை பழ வியாபாரிகளும், நடைபாதை வியாபாரிகளும், சமயபுரம் போன்ற கோவில்கள் உள்ள ஊர்களில் ஒரு சின்னத் கூடைத்தட்டை கழுத்தில் மாட்டிக் கொண்டு உப்பு மற்றும் கண்ணடக்கம் போன்றவற்றை விற்கும் பெரும்பாலும் அன்றாடங்காய்ச்சிகளான வியாபாரிகளின் நிலையை என்னவென்று சொல்வது?

அவர்களை வங்கிகள் மனிதர்களாகவே மதிப்பது இல்லை. எனவே அவர்கள் வட்டிக்கு விடும் தனியார்களை அணுக வேண்டியவர்களாக உள்ளனர். ஒரு கால கட்டம் வரைக்கும் இரண்டு வட்டி மூன்று வட்டிக்கு தந்து கொண்டிருந்தார்கள். அதில் வட்டி மட்டுமே பெரும்பாலும் திரும்புவதற்கான சாத்தியங்களே தென்பட்டன.

எனவே வட்டிக்கு விடுபவர்கள் கொடுக்கல் வாங்களுக்கான நடைமுறையை மாற்றினர். தின வசூலுக்கு மாறினர். அதாவது 8750 ரூபாயைத் தருவார்கள். தினமும் 100 ரூபாய் வீதம் நூறு நாட்களில் பத்தாயிரம் ரூபாயைத் திரும்பக் கட்ட வேண்டும். ஒன்றிரண்டு நாட்கள் தவறுகிற பட்சத்தில் அபராதம் தீட்டியவர்கள் ஏராளம். இது நல்ல வருவாயைத் தரவே இன்னும் ஆசைப்படத் தொடங்கினார்கள். வடிவத்தை மாற்றினார்கள். கந்து வட்டி பிறப்பெடுத்தது. பைனான்ஸ்காரர்கள் கந்துக்காரர்கள் ஆனார்கள்.

இப்போது காலையில் 900 ரூபாய் தருவார்கள். தட்டுக்கூடை வியாபாரி அதை எடுத்துக் கொண்டு போய் மார்க்கட்டில் பழங்களோ வேறு எதுவோ வாங்கி வந்து நாள் பூராவும் வெய்யிலென்றும் பாராமல் மழை என்றும் பாராமல் விற்று மாலையில் 1000 ரூபாயாகத் தர வேண்டும். ஒருக்கட்டம் வரைக்கும்தான் இதில் இவர்கள் திருப்திப் பட்டார்கள். பிறகு அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தார்கள். காலையில் 750 ரூபாய் தருவார்கள். மாலையில் 1000 ரூபாயாகத் தரவேண்டும். இது மீட்டர் வட்டி என்றழைக்கப் பட்டது. பிறகு இது கிலோமீட்டர் வட்டி என்று நகர்ந்தது. இப்போது காலையில் 500 ரூபாய் தருவார்கள். மாலையில் 1000 ரூபாய் தர வேண்டும்.

இருபது ஆண்டுகள் வரை வட்டி வேண்டாம், அதன் பிறகு நூறு ரூபாய்க்கு இருபது பைசா வட்டி என்கிற அளவில் வங்கிக் கடன் கிடைக்கிற இதே தேசத்தில்தான் ஒரு தட்டுக்கூடை வியாபாரி காலையில் 1000 ரூபாய் வாங்கி பொருளாக்கி விற்று மாலைக்குள் மீட்டர் கந்துக்காரருக்கு 2000 ரூபாயை அழுது மிச்சத்தில்குடும்பத்தின் வயிறுகளைக் கழுவ வேண்டும்.

இவற்றை சாத்தியப் படுத்த வேண்டுமெனில் இவர் தனது வாடிக்கையாளர்களிடம் வழிப் பறிக் கொள்ளைக்காரனைப்போல நடந்து கொள்ள வேண்டும். 10 ரூபாய் பொருமானமுள்ள பொருளை 30 ரூபாய்க்கு விற்றால்தான் இது ஓரளவிற்கு சாத்தியம். சொந்தப் பணத்தில் இவர் செய்யும் வியாபாரத்தை செய்கிற ஒருவர் 12 ரூபாய்க்கு அதை விற்க முடியும். எனில், இவரது வியாபாரம் படுத்துவிடும்தானே. அப்படிப் படுத்துவிடுகிற பட்சத்தில் இவரால் வாங்கிய கடனை அடைக்க முடியாது.

இனிதான் அவருக்கு கந்து வட்டியின் கொடுமை புரிய வரும். உச்சமாக குடும்பத்தோடு தற்கொலைகள் என்பதுவரை அது இன்றளவும் நீண்டு கொண்டுதானிருக்கிறது. நான்கு வயிறுகளை கழுவுவதற்கு திருடாமல் பிச்சை எடுக்காமல் சம்பாரிக்க நினைக்கும் ஒருவர் கந்து வட்டியில் விழும்போது அதன் விலை நான்கு உயிர்கள் என்றாகிறது.

இதே மீட்டர் வட்டி திரப்படத்துறையிலும் மூக்கை நீட்டியது. ஒரு மிகப் பெரிய நடிகரின் அண்ணன் மாப்பிள்ளையும், மிகப் பிரபலமான நடிகையின் கணவரும் மிக மிக பிரபலமான இயக்குனருமான ஒருவரின் அண்ணனான மிகப் பெரியத் தயாரிப்பாளர் தற்கொலை செய்துகொண்டதுகூட இந்தக் கந்துவட்டிக் கொடுமையினால்தான் என்ற ஒரு கருத்தும் பரவலாக உண்டு.

இறுதியாய் நாம் இரண்டு விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

1 கந்துவட்டித் தடுப்புச் சட்டம்
************************************************
தமிழக அரசு 2003 ஆம் ஆண்டு கந்துவட்டித் தடுப்புச் சட்டம் என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தை ஒழுங்காக நடைமுறைப் படுத்தினாலே போதும். கந்து வட்டி அட்டூழியங்கள் முற்றிலுமாக மறைந்து போகும். ஆனால் நடைமுறையில் அது கனவாகவே உள்ளது.

23.09.2013 அன்றைய தி இந்து நாளிதழில்கந்து வட்டி கும்பல் பிடியில் திணறும் திருப்பூர்என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. சிறு வியாபாரிகளும் உழைக்கும் மக்களும் கந்துவட்டிக் கும்பலிடம் சிக்கிக் கொண்டு படும் பாட்டினை அது வெளியிட்டிருந்தது. அதைப் படித்த உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை கிருபாகரன் அவர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு ஒரு விண்ணப்ப மனுவினைத் தருகிறார். அதில், அந்த செய்தியையே பொதுநல வழக்காகக் கருதி நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்காக ஏற்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதனை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் ஏற்றுக் கொண்டார். உயர்நீதிமன்ற உதவிப் பதிவாளர் ரிட் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மாண்பமை கவுல் மற்றும் மாண்பமை சத்திய நாராயணா அவர்கள் முன்னிலையில் வருகிறது. இறுதியாக கீழ்க் கண்டவாறு தீர்ப்பு வருகிறது.

கந்து வட்டி தடுப்புச் சட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊடகங்கள் மூலம் விரிவான பிரச்சாரம் செய்யும்படி அரசுக்கு உத்தர விட்டனர். “கந்து வட்டி கொடுமை பற்றி தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்யவும், இந்த விவகாரத்தில் கந்து வட்டி வசூலிப்போர் போலீஸ் கூட்டை தடுக்கவும் மாவட்ட, வட்டார அளவில் கமிட்டிகளை ஏற்படுத்துவது பற்றி அரசு ஆராய வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு தொண்டு நிறுவனங்களின் உதவிகளைப் பெறலாம்.
மேலும், கந்து வட்டி வசூலிப்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான சாத்தியம் பற்றியும் அரசு பரிசீலிக்க வேண்டும். கந்து வட்டி புகார்கள் தொடர்பான புலன் விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும். கந்து வட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்றோர் பற்றிய விவரங்களைக் கொண்ட அறிக்கையை அவ்வப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும், “இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர் பான அறிக்கையை நீதிமன்றத் தில் தாக்கல் செய்ய வேண்டும்
இதை ஒழுங்காக செய்தாலே போதும்,. கந்து வட்டிக் கொடுமைகள் ஓரளவிற்கு முற்றாய் நீங்கும். ஆனால் இது போதுமா? கந்து வட்டிக் கொடுமை ஒழிந்தால் போதுமா? இதுவும் இல்லாமல் எப்படி இத்தகைய விளிம்பு நிலை மக்கள் பிழைப்பார்கள். இப்போது நாம் இதற்கான மாற்று ஏற்பாடுகளைத் திட்டமிட வேண்டும்.
2 வங்கித் தினக்கடன்
*********************************
இப்படி ஏதுமற்ற தெரு வியாபாரிகள் ஊருக்கு நூறு பேர்தான் இருப்பார்கள். இவர்களது மொத்தத் தேவை நூறு கோடிகூட கிடையாது. ஆளுக்கு பத்தாயிரம் கிடைத்தால் போதும். ஆக மொத்தம் ஒரு ஊருக்கு பத்து லட்சம். எந்த நிபந்தனையும் இன்றி இவர்களுக்கு அது தங்கள் கடமை என்று உணராவிட்டாலும் கருணையோடேனும் செய்தால் போதும். இந்தக் கடனை தினசரியும் வசூலித்துக் கொள்ளலாம். அதற்கொரு ஆளைப் போட்டுக்கொள்வதென்பது வங்கி நடைமுறையில் சாத்தியமே.
ஆட்டோவிற்கு மீட்டர் அவசியம். வட்டிக்கு எதற்கு மீட்டர்?


2 comments:

  1. ஆழ்ந்த கருத்துக்கள் .....இதை போன்ற முறைகளை ஒழிக்க ...நம்மால் முடிந்த அளவுக்கு சிறு வியாபாரிகளுக்கு உதவி செய்யலாம் ...ஆனால் அதற்க்கு ஒரு நல்ல அமைப்பு அல்லது பொது தொண்டு நிறுவனம் (ஆசை இல்லாத) தேவை என்று நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...