Wednesday, May 6, 2015

எதிர் கொள்வோம்

நாளை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வர இருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு முறை தேர்வு முடிவு வரும் பொழுதும், ஐய்யோ இது எத்தனைக் குழந்தைகளை காவு வாங்கப் போகிறதோ என்ற பயம் அடி வயிற்றைப் பிசைந்து போடும். அதுவும் இருபத்தி ஒன்பது வயது பெண்ணிற்கும்,இருபத்தி இரண்டு வயது பையனுக்கும் பதினைந்து வயது பெண் குழந்தைக்கும் அப்பனாக உள்ள இன்றைய தினத்தில் இந்த வலி மிக அதிகமாக உள்ளது.
நாளைய முடிவு எந்த ஒரு குழந்தையையும் காவு வாங்கிவிடக் கூடாது.
வாழ்க்கை பரந்து விரிந்து கிடக்கிறது குழந்தைகளே. நம்பிக்கையோடு இருங்கள். மே மாதம் என்ற பேருந்தில் உங்களில் சிலருக்கு இடம் கிடைக்காது போகலாம். விடுங்கள் ஒரு நாற்பது அல்லது நாற்பத்தைந்து மீட்டர் தூரத்தில் ஜூன் என்ற ஒரு பேருந்து வருகிறது. அருமையான ஜன்னலோர இருக்கையே கிடைக்கும்.
தைரியமாக இருங்கள்.
உங்களது தோல்வி எங்கள் கண்களில் தூசி விழுவது போலத்தான். கொஞ்சம் உறுத்தவும் கொஞ்சம் வலிக்கவும் செய்யும்தான். இமைகளை விரித்து ஊதினால் தூசி பறப்பதுபோல ஜூனில் நீங்கள் சாதிக்கும் போது எங்கள் வலி காணாமல் போய்விடும். தவறான முடிவெடுத்து எங்களை குருடர்களாக்கி விடாதீர்கள்.
70 மதிப்பெண்கள் எடுக்காவிட்டால் தோல்வி என்று எவனோ ஒரு கிறுக்கன் அரை போதையில் உளறி வைத்திருக்கிறான். அதுவே சடங்காகிப் போனது.
சக தந்தைமார்களே, ஒருக்கால் கலங்கி வரும் சூழல் குழந்தைகளுக்கு ஏற்படின் கைகளை பேரதிகமாய் விரித்து அள்ளி அணைத்துக் கொள்ளுங்கள். உச்சி முகர்ந்து முத்தமிடுங்கள். அடுத்த தேர்வில் தேறி விடலாம் என்று ஆற்றுப் படுத்துங்கள்.
ஏழுமுறை தோற்றுப் போனவன் நான். நல்லா இல்லையா என்று பொய்யாயேனும் கேளுங்கள். என் பிள்ளையையைப் பற்றி திருத்தியவருக்கென்ன தெரியும் என்று சாடுங்கள். அவன் சிரிக்கும் வரை வருடுங்கள். ஒருவாரமேனும் உங்கள் வேலைகளைத் தள்ளிப் போட்டுவிட்டு குழந்தையோடே இருங்கள்.
*************
ஆசிரியத் தோழர்களே,
ஒருக்கால் நம் தாளில் விழுக்காடு குறைந்து போனால் துவண்டு போய் விடாதீர்கள்.
”கஷ்டப் பட்டு நடத்துறோம். பிள்ளைகள் பெயிலானால் நாமென்ன செய்ய முடியும். இந்த அதிகாரிகளிடம் போய் கையக் கட்டி நிற்பதைவிட நாண்டுக்கலாம் போல் இருக்கு” என்று சொன்ன ஏராளம் நண்பர்கள் இருக்கிறார்கள்.
அதிகாரிகளின் கொடூரங்களுக்கு பயந்து சமீப காலமாக அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து வரும் சூழலில் அந்தச் சுழலில் சிக்கிக் கொள்ளவேண்டாம்.
கடுமையாக உழைப்போம்.
அதே நேரம் விழுக்காட்டை காரணித்து பழி வாங்கல் தொடங்கும் எனில் அதை தைரியமாய் எதிர் கொள்வோம்.

3 comments:

  1. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் தேவையான பதிவு. உரிய நேரத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  2. அது என்னவோ அன்றிலிருந்து இன்று வரை பள்ளி இறுதித் தேர்வு என்பது ஒரு பெரிய யுத்தகளம் போன்றே இருந்து வருகிறது.

    உங்கள் எண்ணப்படி நல்லதே நடக்க வேண்டும். ” ஒரு வாரமேனும் உங்கள் வேலைகளைத் தள்ளிப் போட்டுவிட்டு குழந்தையோடே இருங்கள்.” என்ற உங்கள் யோசனையை வரவேற்கிறேன். பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் மன தைரியத்தை தரும் பதிவு.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...