Wednesday, May 6, 2015

19 மிச்சமிருக்கிறது வழக்கு…


கொந்தளிப்பின் விளிம்பில் நின்றவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள் பல ஊடத்தினரும் காங்கிரஸ்காரர்களும். மக்கள் கொதித்துப் போய் இருப்பதாகவும், எனவேதான் தாங்கள் மக்கள் மன்றத்தின்முன் இதுபற்றி விவாதிக்க விரும்புவதாகவும் உரக்கப் பேசுகிறார்கள். யாரையும் பேச விடாமல் பேசுகிறார்கள். அப்படியே யாருக்கேனும் பேசுவதற்கு சற்று வாய்ப்புக் கிடைத்து பேசினாலும் உடனே பெருங்குரலெடுத்து, தலைவர் ராஜீவைக் கொன்ற கொலையாளிகளை விட்டு விடச் சொல்கிறீர்களே இது நியாயமா என்று கேட்கிறார்கள். இனி உங்களிடம் பேச என்ன இருக்கிறது? இது நியாயமா என்பதை நாங்கள் மக்கள் மன்றத்திடம் கேட்கிறோம் என்கிறார்கள்.

அவர்கள் அவசரமாகவோ ஆதாயத்திற்காகவோ யாரிடம் நியாயம் கேட்பதாக சொல்கிறார்களோ அந்த மக்கள் மன்றத்தின் ஒரு பிரதிநிதியாகத்தான் இதை எழுதுகிறேன். அந்த மக்கள் மன்றத்தின் ஒரு துளி என்பதைத்தான் நமக்கான பலமாக உணர்கிறோம்.

நாடும் மக்களும் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்று தொடர்ந்து அவர்களால் கூறப்படும் ஒரு விஷயத்தை தமிழ் மண்னின் குறுக்கும் நெடுக்குமாய் பயணித்துப் பார்த்தவர்கள் என்ற வகையில் இந்தக் கூற்றில் குட்டி எறும்பொன்று உருட்டிப் போகும் அதனிரையின் ஆயிரத்தில் ஒரு பகுதிக்கேனும் உண்மை இல்லை என்பதை எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட விரும்புகிறேன்.

நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்ல என்பதையும், அவர்களது பெரும்பான்மையான நிலை பாடுகளில் செயல்பாடுகளில் உடன்பாடில்லை என்பதைவிட எதிர்நிலையிலேயே நிற்பவன் என்பதையும் பதிவின் இந்த நிலையிலேயே சொல்லிவிடுகிறேன்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்படுவதனால் நாடோ மக்களோ கொந்தளித்துவிடவில்லை. மாறாக இந்த மூவரின் விடுதலை மக்களை மகிழ்வுறவே செய்திருக்கிறது. அதே நேரம் தங்களது மகத்தான தலைவனைக் கொன்றவர்களை விடுதலை செய்துவிட வேண்டும் என்கிற நிலையில் இவர்களது விடுதலையை மக்கள் பார்க்கவில்லை.. மாறாக, தங்களது அன்பிற்குரிய தலைவனின் கொலையில் இந்த மூவருக்கும் சம்பந்தமில்லையோ என்கிற அய்யமும், தேவை இல்லாமல் சில அப்பாவிகளைத் தண்டித்திருக்கிறோமோ என்கிற அய்யமும் அவர்களை இந்த விடுதலையை ஒரு நிம்மதி பெருமூச்சோடு பார்க்க வைத்திருக்கிறது

உண்மையான குற்றவாளிகளையும் அல்லது அந்தக் குற்றத்தோடு தொடர்புடையவர்களையும் படு சுதந்திரமாக உலாவ விட்டிருக்கிறோமோ என்கிற அய்யம் கலந்த ஒரு குற்ற உணர்வோடும், அதில் சிலர் நியாயவான்களைப் போல் ஊடக விவாதங்களில் பங்கேற்கிறார்களோ என்கிற அச்சமுமே அவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களின் இரண்டு விருப்பங்களையும் இரண்டு பேருக்கான நன்றியயும் சொல்லிவிட வேண்டும்.

இந்த மூவரையும் தூக்குக் கயிறிலிருந்து காப்பாற்றிய உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியையும், அவர்களை சிறையிலிருந்து விடுவிப்பதாய் அறிவித்த மாண்பமை தமிழக முதல்வரையும் அவர்கள் மனதார நன்றி சொல்லி வாழ்த்துகிறார்கள்.

தங்களது தங்கத் தலைவனைக் கொன்றவர்களை ஒரு வெளிப்படையான விரைவான மறுவிசாரனையின் மூலம் கணாடறிந்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றே மக்கள் மன்றம் விரும்புகிறது.
குற்றவாளிகளை நெறிப்படுத்துவதாகத்தான் தண்டனை இருக்க வேண்டுமேயன்றி மரணதண்டனை என்பது மற்றுமொரு கொலை என்பதால் மரண தண்டனையை முற்றாய் ஒழிக்க வேண்டும் என்பதிலும் தமிழ்த் திரள் உறுதியாயிருக்கிறது.

உண்மையான குற்றவாளிகளை தப்ப வைத்துவிட வேண்டும் என்பதில் இந்த வழக்கினை நடத்தியவர்கள் குறியாக இருந்து எப்படியோ இந்த வழக்கினை முடித்து யாரையோ தண்டிப்பதன் மூலம் கோப்பினை மூடிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்களோ என்ற அய்யம் தமிழ் மக்களுக்கு இருக்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும்.
பொதுவாகவே எந்த ஒரு வழக்கின் விசாரனையிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளவே யாரும் விரும்புவார்கள். 2G அலைக்கற்றை வழக்காயினும், சொத்துக் குவிப்பு வழக்காயினும் வேறு எந்த ஊழல் வழக்காயினும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அதிலிருந்து விலக்கு பெறுவதற்காகப் போராடிப் பார்ப்பதையும் முடியாத பட்சத்தில் நெஞ்சு வலியை கொள்முதல் செய்துகொண்டு மருத்துவ மனைகளில் போய் படுத்துக் கொள்வதையும்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தனக்கு இந்த வழக்கிற்கு தேவையான மிக முக்கியமான சில விஷயங்கள் தெரியும் என்றும் ஆகவே தன்னை வெளிப்படையாகவும் நியாயமாகவும் விசாரிக்க வேண்டும் என்றும் ஏறத்தாழ இந்த வழக்கு தொடங்கிய நாளில் இருந்தே திருச்சி வேலுசாமி சொல்லி வருகிறார். இதே கோரிக்கையை ஊர் ஊராகப் போய் அவர் கத்திச் சொல்லிப் பார்க்கிறார். என்னை முற்றாய் விசாரியுங்கள் என்று சொல்பவரைப் பார்த்து ஏன் நழுவுகிறார்கள் என்ற அய்யம் தமிழ் மக்களிடம் இருக்கிறது.

இந்தத் தீர்ப்பும் மாண்பமை முதல்வரின் அறிக்கையும் கிடைத்தவுடன் இப்படித்தான் முகநூலில் எழுதினேன்,
    
 மூவரின் விடுதலைக்காக மக்கள் தளத்தில்நீதி மன்றங்களில்சமூக             ஊடகங்களில்சட்ட மன்றத்தில்பாராளு மன்றத்தில் உழைத்த அனைவரையும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.
எனக்கு இதில் சுத்தமாய் உடன்பாடு இல்லைஇன்னும் சொல்லப்போனால் இதை வன்மையாக கண்டிக்கிறேன்ஆனாலும் இதற்காக உயிரை மாய்த்துக் கொண்ட மகள் செங்கொடி உள்ளிட்ட அனைவரையும் நினைத்துக் கொள்கிறேன்.

ஆனால் இந்த நியாயமான போராட்டங்களை மதித்து இந்த அரசு எதுவும் செய்ய வில்லை என்பதையும் கருத்துக்களையோபோராட்டத்தின் நியாயத்தையோ உணர்கிறவர்கள் என்றால் கூடங்குளம் போராட்டத்தின் நியாயம் உணரப் பட்டிருக்கும்எவ்வளவு அழுத்தமானநியாயமானசெறிவான போராட்டம். 150 ஆண்டுகளில் இப்படி ஒரு நியாயமான செறிவான , வன்முறை துளியுமற்ற போராட்டத்தை பூமி பார்த்ததில்லை.
ஒரு நியாயமான மனிதனிடத்தில் இந்த வழக்கு போனதால் கிடைத்தது என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

அதே நேரத்தில் இந்த மனிதனிடத்தில் இந்த வழக்கு போகும் நேரம் வரைக்கும் இத்தனைக் காலம் தூக்கிலிருந்து அவர்களைக் காப்பாற்றியது இத்தகைய போராட்டங்கள்தான் என்பதையும் நினைத்துக் கொள்கிறேன்.”
இந்த நிமிடம் வரை அவர்களைத் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றியது இத்தகையப் போராட்டங்கள்தான். அதிலுங்குறிப்பாக சுதாங்கன், திருச்சி வேலுசாமி, வை கோ ஆகியோரின் பங்களிப்பை நான் இந்தப் புள்ளியில் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

எதோ இப்போதுதான் கருணை மனு நிராகரிக்கப்பட்டதாய் பெரும்பான்மையோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்கிறது திருச்சி வேலுசாமி அவர்களின் நூலான “ராஜீவ் படுகொலை… தூக்குக் கயிற்றில் நிஜம்”. கே ஆர் நாராயணன் அவர்கள் இந்த மூவரது கருணை மனுவையும் நிராகரித்து அவர்களது தூக்கிற்கான தேதியும் அறிவிக்கப் பட்டுவிட்டது ஒருமுறை. தூக்கிலிடுவதற்கான ஆள்கூட தேர்வு செய்யப்பட்டு விட்டார். மருத்துவர் இந்த மூவரையும் சோதித்துப் பார்த்து விட்டார்.

எல்லாம் முடிந்துவிட்டது. அடுத்தநாள் விடியல் அவர்களது சாவுச் செய்தியோடு வரப்போகிறது என்றுதான் பெரும்பான்மையோர் நினைத்திருந்தோம். ஆனால் எந்தக் காரணமும் குறிப்பிடப் படாமல் அந்தத் தூக்கு நிறுத்தி வைக்கப் பட்டது. இதற்கான காரணத்தையும் அந்த நூல் விரிவாக சொல்கிறது.

அடுத்தநாள் தூக்கு என்கிற நிலையில் அது குறித்த ஒரு விவாதத்தை விஜய் தொலைக் காட்சி ஏற்பாடு செய்கிறது. காங்கிரஸ் சார்பில் கௌரிசங்கர், ம.தி.மு.க சார்பில்வைகோ, இந்திய மார்க்சிஸ்ட் பொது உடமைக் கட்சி சார்பில் டி கே ரெங்கராஜன், மற்றும் வேலுசாமி ஆகியோர் அழைக்கப் பட்டிருக்கிறார்கள். என்ன காரணத்தினாலோ தோழர் டி கே ரெங்கராஜன் அவர்களாலும் வை கோ அவர்களாலும் வர இயலாமல் போகிறது. சுதாங்கந்தான் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசினால் நியமிக்கப் பட்ட ஜெயின் கமிஷன் நூற்றுக் கணக்கான நபர்களிடம் விசாரனையை நத்தியதன் அடிப்படையில் ஒரு அறிக்கையை அரசுக்கு அளித்தது. விசாரிக்கப் பட்டவர்களில் திருச்சி வேலுசாமியும் ஒருவர்.
ராஜீவ் கொலையில் உண்மைக் குற்றவாளிகளை இதுவரை கண்டு பிடிக்கப் படவில்லை என்றும் இன்னும் விசாரிக்கப் பட வேண்டியவர்கள் இருக்கிறார்கள் என்றும் சொன்னதோடு விசாரிக்கப் பட வேண்டியவர்களின் பட்டியல் ஒன்றையும் கமிஷன் வழங்கியது. அதன் அடிப்படியில் பன்முனைநோக்கு புலனாய்வு விசாரனைக் குழுவை அரசு நியமித்திருக்கிறது என்பதையும் வேலுசாமி சொல்கிறார். அந்த விசாரனை நடக்கும் வேளையில் அதில் சாட்சி சொல்வதற்கு முருகனோ, சாந்தனோ, பேரறிவாளனோ தேவை[ப் பட்டால் அப்போது யாரால் அவர்களை உயிரோடு தர முடியும் என்பதாக வேலுசாமி அந்த விவாதத்தில் நொந்து போனவராய் சொல்லியிருக்கிரார்.

வேலுசாமியின் இந்த பதிவால் அடுத்த கேள்வியைக் கேட்க இயலாத அளவிற்கு சுதாங்கன் ஸ்தம்பித்துப் போயிருக்கிறார். விவாதம் பாதியிலேயே முடிந்திருக்கிறது.

கொலை வழக்கு இன்னும் நடக்கிறது என்றால் இன்னும் கொலையாளிகளைக் கண்டடைய வில்லை என்றுதானே பொருள். எனில் இவர்கள் எப்படி குற்றவாளிகளாவார்கள். படபிடிப்புத் தளத்திலிருந்த அனைவரும் வேலுசாமியைக் கட்டியணைத்தார்களாம். உடனே இதை விளக்கியும் அடுத்த நாள் தூக்கு நியாயமற்றது என்பதாகவும் ஒரு மனு அவசர அவசரமாகத் தயாரிக்கப் பட்டு தொலை நகல் வழியாக அன்றைய குடியரசுத் தலைவர் கே ஆர் நாராயணன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

காரணம் சொல்லப் படாமல் அடுத்தநாள் நடக்கவிருந்த தூக்கு ரத்து செய்யப் படுகிறது. இந்த மனுதான் தூக்கு ரத்தானதற்கு காரணம் என்று சொல்லப் படவில்லை. என்றாலும் இதுவாகத்தானிருக்க வேண்டும். இல்லை என்றால் இதைப் போலவே வேறு யாரிடம் இருந்தேனும் இது மாதிரியானதொரு அய்யம் குடியரசுத் தலைவரிம் கொண்டுபோகப் பட்டிருக்க வேண்டும். அப்படி வேறு யாரோ கொண்டு போயிருந்தால் கொலையாளிகள் இவர்களாயிருக்க வாய்ப்பில்லை என்கிற அய்யத்திற்கு இன்னும் வலு சேரவே செய்யும்.

ஒருக்கால் அன்றே மூவரும் தூக்கிலேற்றப் பட்டிருந்தால் அவர்களை விடுதலை செய்வதற்கு மாண்பமை முதல்வருக்கு இன்று வாய்ப்பே இருந்திருக்காது. அதனால்தான் இதுவரை அவர்கள் உயிரோடு இருப்பதற்கு போராட்டங்களும் இவர்களைப் போன்ற தனி ஆளுமைகளும் காரணம் என்று சொன்னேன். காரணமானவர்களின் முழுமையான பட்டியல் இதுவென்று ஒருபோதும் சொல்லமாட்டேன்.
1991 மே 21 ஆம் நாளன்று இரவு10.25 வாக்கில் தனக்கு சுப்ரமணிய சாமிக்குமிடையில் நடந்ததாக ஒரு உரையாடலை வேலுசாமி அந்த நூலில் தருகிறார்.

மே 22 அன்று மதுரையில் வேலுசாமியும் சுப்ரமணிய சாமியும் கலந்துகொள்ளவேண்டிய தேர்தல் பிரச்சாரக் கூட்டம். 22 அதிகாலை தில்லியிருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் சுப்ரமணியசாமி அவர்கள் அங்கிருந்து மதுரை விமானத்தில் வருவதாகவும், விமானம் திருச்சியில் நிற்கும் வேளையில் அவரோடு வேலுசாமி சேர்ந்து கொள்வதாகவும் ஏற்பாடு. அதுகுறித்து பேசுவதற்காகத்தான் 21 ஆம் தேதி இரவு 10.25 வாக்கில் சுப்ரமணிய சாமியை அழைக்கிறார். இவரது குரலைக் கேட்டதும், “ என்ன ராஜீவ் காந்தி செத்துட்டார். அதானே சொல்ல வரேள்” என்று சுப்ரமணிய சாமி கேட்டதாக வேலுசாமி எழுதுகிறார்.

குண்டு வெடித்தது 10.10 அல்லது 10.15 மணி வாக்கில் நடந்ததாகவும் பெரிய புகை மூட்டம் ஏற்பட்டதாகவும் புகை அடங்கிய பிறகே தானும் திரு மூப்பனார் அவர்களும் சென்று முகம் சிதறிக் கிடந்த தங்களது தலைவரைக் கண்டுபிடித்ததாகவும் திருமதி ஜெயந்தி நடராஜன் அடுத்தநாள் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியை மேற்கோள் காட்டுகிறார் வேலுசாமி. எப்படியும் புகை அடங்க அரை மணி நேரமாவது ஆகியிருக்கும். எனில் மூப்பனார் அவர்களும் திருமதி ஜெயந்தி அவர்களும் தங்களது தலைவரது உடலை அடையாளம் காண்பதற்கும் அதை ஊர்ஜிதம் செய்வதற்கும் அதன் பிறகு அதை மேலித்திற்கு சொல்வதற்குமான நேரங்களைக் கணக்கிட்டால் எவ்வளவு விரைவாக என்று கொண்டாலும் தில்லிக்கு செய்தி சேர்ந்திருக்க 10.45 ஆவது ஆகியிருக்கும். அப்படி இருக்க தன்னிடம் 10.25 கு பேசிய சுப்ரமணிய சாமி ராஜீவ் செத்துவிட்டார்தானே என்று எப்படி சொல்லியிருக்க முடியும். வேலுசாமி இன்னொரு விஷயத்தையும் இந்த நூலில் சொல்கிறார்.
அதே நூலின் 78 ஆம் பக்கத்தில் தேர்தல் செலவிற்காக பணம் கேட்டவர்களிடம் தேர்தல் நடந்தா பார்த்துக்கலாம் என்று சுப்ரமணியசாமி அவர்கள் சொன்னதாகவும் வேலுசாமி சொல்கிறார். ராஜீவ் இறப்பதற்கு முதல்நாள் இதை சுப்ரமணியசாமி சொன்னதாக அவர் சொல்கிறார்.
வேலுசாமி சொல்வதெல்லாம் உண்மை என்று வாதாட நாம் தயாராய் இல்லை. ஆனால் அவை உண்மையா இல்லையா என்பதை ஏன் ஒழுங்காய் விசாரிக்கவில்லை என்பதுதான் நமது கேள்வி. விசாரிக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசை.

மகத்தான ஆளுமையாக விளங்கிய , அந்த நேரத்தின் உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக விளங்கிய ராஜீவின் கொலையாளிகள் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும். ஆனால் அவர்களுக்கும் மரண தண்டனை கூடாது என்பதே நமது நிலை.

ஆயுள் தண்டனை என்றால் சாகும்வரைதானே என்றுகூட மெத்தப் படித்த அறிவாளிகள் கேட்கிறார்கள். அப்படி எனில் பிரேமானந்தாவிற்கு இரட்டை ஆயுள் விதிக்கப் பட்டதே. ஒரு ஆயுள்தானே அவருக்கு முடிந்திருக்கிறது. இன்னொரு ஆயுள் தண்டனைக்காக மீண்டும் உயிர்ப்பித்து அவரை உள்ளே போடுவீர்களா?

வேலுசாமிகூட எந்த இடத்திலும் தான் சொல்வதை ஏற்கக் கோரவில்லை. மாறாக தன்னையும் உட்படுத்தி விசாரனையை முடுக்கிவிட வேண்டும் என்றே கூறுகிறார். அது நியாயமாகவே படுகிறது.

எனது முகநூல் நிலைத்தகவலை கீழ்வருமாறுதான் முடித்திருந்தேன். அப்படியே இங்கும் முடிக்கிறேன்,



”1 இனி யாரையும் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள அனுமதிப்பதில்லைஅதற்கான தயாரிப்பை  நாம் கொண்டு சென்றாக வேண்டும்தன்னை 
மாய்த்துக் கொள்ளுதல் என்பது இனி போராட்ட வடிவமாக இருத்தல் கூடாது.இளைய உயிர்களின் முக்கியத்துவத்தை நாமும் உணர வேண்டும்,
பிள்ளைகளுக்கும் உணர்த்த வேண்டும்.

மரண தண்டனைக்கு எதிராக என்னென்ன வடிவங்களில் என்னென்ன 
செய்ய முடியுமோ அதை அது நடக்கும் வரைக்கும் தொய்வின்றி கொண்டு 
செல்ல வேண்டும்.

ராஜீவ் கொலை வழக்கினை மீண்டும் நியாயமான முறையில் 
வெளிப்படையாக நடத்த வற்புறுத்தி தொடர்ந்து இயங்க வேண்டும்அதை 
அமெரிக்க நாராயணன் பாஷையில் சொல்வதெனில் மக்கள் மன்றத்தில் 
நடத்தக் கேட்டு தொடர் இயக்கத்தை நடத்த வேண்டும்”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...