09.05.2015 அன்று ஆலங்குடியில் பத்திரிக்கை சுதந்திர தின விழா. ஒன்பது மணிக்கெல்லாம் கூட்டத்தை முடித்துவிட வேண்டும். விரைவாக வரவும் என்று சொல்லியிருந்தார்கள்.
நான், தோழர் ரமா ராமநாதன் மற்றும் கிருத்திகா ஆகியோர் கூட்டம் நடக்குமிடம் சேர ஏழரை மணி ஆகிவிட்டது. ஆறு மணிக்கே கூட்டம் என்று போட்டிருந்தும் ஏழரை மணிக்கு வந்ததற்காக கொஞ்சம் வருத்தப் பட்டார்கள் நண்பர்கள். ஒரு வழியாய் சமாதானம் செய்தோம்.
என்ன ஆச்சரியம் எனில் மிகச் சரியாக ஒன்பது மணி ஐந்து நிமிடத்திற்குத்தான் என்னிடம் ஒலி வாங்கியைத் தந்தார்கள்.
என்னைப் பேச அழைத்த தோழர் ”:வெகு தாமதமாக வந்தாலும் தோழர் நல்ல தகவல்களைத் தருவார்” என்பதாக அழைத்தார்.”நண்பர்களே” என்று தொடங்கினேன் “ஒரு நிமிஷம் சார்” என்றவாறு ஆலங்குடி வட்டாட்சியர் பத்திரிக்கையாளர்களை கௌரவப் படுத்தினார். இப்படியாக ஒரு வழியாக நான் மீண்டும் “நண்பர்களே” சொல்லும் போது மணி ஒன்பது பதினொன்று.
எல்லோரும் அயர்ந்திருப்பதைப் பார்த்த நான் ஒரு ஐந்து அல்லதுபத்து நிமிடங்களில் எனது பேச்சை சுறுக்கிக் கொள்கிறேன் என்று சொன்னேன்.
இரண்டு மூன்று தோழர்கள் எழுந்து நின்று, “சார். நீங்க நிறைய பேசுங்க. உங்க பேச்சக் கேட்கத்தான் காத்திருக்கிறோம்” என்றார்கள். ஆலங்குடியின் மூத்த பத்திரிக்கையாளர் திரு. கருப்பையா அவர்கள் என்னிடம் ஓட்டமும் நடையுமாக வந்தார். “ எவ்வளவு நேரம் பேச முடியுமோ அவ்வளவு நேரம் பேசுங்கள். ஒருத்தர் எழுந்திரிக்க மாட்டோம்” என்றார்.
இத்தனையாண்டு மேடை அனுபவத்தில் எனக்கிது புதிது. பேசுகிற மனநிலையிலேயே இல்லாதவனாகத்தான் அதுவரை இருந்தேன்.
ஆலங்குடி வட்டாட்சியர் கோட்சேவைப் பற்றி கொஞ்சம் பேசியிருந்தார். கோட்சே எனும் பத்திரிக்கை ஆசிரியனைப் பற்றி, அக்ராணி பற்றியும், இந்து ராஷ்ட்ரா பற்றியும் தொடங்கி பேசிக் கொண்டே இருக்கிறேன்.
பத்து மணி வாக்கில் நண்பர்கள் என்னை நெருங்கினார்கள். முடிக்கச் சொல்கிறார்கள் போல என்று நினைத்தேன். முடித்து விடாதீர்கள் என்றார்கள். ஒரு வழியாக பத்து பதினைந்திற்கு முடித்தேன்.
தொடங்கிய போது இருந்த அனைவரும் முடித்த போதும் இருந்தார்கள்
கீழே இறங்கியதும் சூழ்ந்து கொண்டார்கள். பேசுகிறார்கள், பேசுகிறார்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்னோடு. இதுவும் புதிது.
எங்களோடு சாப்பிட்டுவிட்டு ஒரு மணி வாக்கில் எங்களை தனது ஜீப்பில் இறக்கி விட்டுதான் போகிறார் ஆலங்குடி வட்டாட்சியர்.
பேசுவதற்கான இனிய களம் ஆலங்குடி.
வீடு சென்ற பாதையும் அருமை
ReplyDeleteவழி நெடுக ஆவுடையார் கோவில் சிற்பங்களைப் பற்றிய அவரது உரையாடலும்கூட
Delete