கேட்டுவிட்டார்களே என்பதற்காக வழங்கப்படும் புத்தக அணிந்துரைகள் மிக அதிகம். ஏதாவது அணிந்துரை என்ற பெயரில் போட்டாக வேண்டுமே என்பதற்காக பெறப்படும் அணிந்துரைகளும் இல்லாமல் இல்லை. அணிந்துரை இல்லாமல் நேரடியாக வாசகனை அணுகும் புத்தகங்களும் இருக்கவே செய்கின்றன. புத்தகங்களை முழுமை அடையச் செய்யும் அணிந்துரைகள் நிறைய இருக்கின்றன. புத்தகக்களின் முக்கியமானதொரு உறுப்பாகவே அவை மாறிவிடும்.
அப்படியான மூன்று அணிந்துரைகளை அவ்வப்போது நான் அசைபோடுவது உண்டு.
• தோழர் சுபவீரபாண்டியன் அவர்கள் எழுதிய “பகத்சிங்கும் இந்திய தேசிய காங்கிரசும்” என்ற நூலுக்கான தோழர் இளவேனில் அவர்கள் எழுதிய முன்னுரை. ( நூலின் தலைப்பு இந்திய தேசிய அரசியலும் என்று இருப்பதற்கான வாய்ப்பும் உண்டு. இதுவரை ஏழுமுறை அந்த நூலை வாங்கியிருப்பேன். களவு போய்விடுகிறது.)
• “அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற எனது நூலுக்கு தோழன் கோ.வி. லெனின் எழுதிய முன்னுரை. லெனினுடைய அந்த முன்னுரையை எடுத்துவிட்டால் அந்த நூல் ஊனப் படும் என்பதே எனது அபிப்பிராயம்.
• தோழர் இரா.சுப்பிரமணி அவர்கள் எழுதிய “இந்தியாவில் நெருக்கடி நிலை” என்ற நூலுக்கு தோழர் S.V.ராஜ்துரை அவர்கள் எழுதிய முன்னுரை.
தோழர் இளவேனில் அவர்களின் “கவிதா”வை எவ்வளவு மதிக்கிறேனோ அதில் கொஞ்சமும் குறையாமல் தோழர் சுப வீரபாண்டியன் அவர்களது நூலுக்கான அவரது முன்னுரையையும் மதிக்கிறேன். அந்த நூலைப் படித்துவிட்டு அழுததாக இளவேனில் அதில் சொல்வார். அந்த முன்னுரையே என்னை அழ வைத்திருக்கிறது.
எந்து நூலுக்கானதோழன் கோ.வி.லெனினது அணிந்துரையைப் பற்றி சொல்லவேண்டுமெனில் அந்த நூலின் ஆகச் சிறந்த பக்கங்கள் அவரது அணிந்துரைப் பக்கங்கள்தான்.
தோழர் இரா.சுப்பிரமணி அவர்களின் “இந்தியாவில் நெருக்கடிநிலை” நூலுக்கான தோழர் எஸ்.வி.ஆர் அவர்களின் அணிந்துரையைப் பற்றி சொல்லி மாளாது. பிரிட்டிஷ் இந்தியாவின் அடக்குமுறைச் சட்டங்களை, அதன் விளைவுகளை, அதற்கான அன்றைய காங்கிரசின் எதிர் வினையை, அதன் போராட்டங்களை, சுதந்திரத்திற்குப் பிறகு அதே காங்கிரஸ் தான் எதிர்த்துப் போராடிய அதே சட்டங்களை கையெடுத்து அதை முன்னைவிடவும் அதிகமாய் கூர் படுத்தியது போன்றவற்றை மிக அழகாக நமக்கு எளிதில் புரிகிற மாதிரி பாடம் நடத்துகிறது.
நேரு அவர்களின் உண்மையான முகத்தை, ராஜாஜியின் கோரப் பகுதியை, இந்தியாவிற்கென்று சட்டங்கள் ஏற்பட்ட பின்பு ஏன் பழைய பிரிஷ் இந்தியாவின் கொடூரச் சட்டங்களைத் தொடர வேண்டும் என்று சட்ட சபையில் பேசிய தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் அதற்கு அடுத்த ஆறே மாதங்களில் இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடிய தமிழர்கள் மீது பிரிவு 120எ, மற்றும் பிரிவு 120பி ஆகியவற்றைப் பிரயோகித்து அவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று ஏசி அசிங்கமாக அம்பலப் பட்டு நின்றது என்று பலவற்றை பேசுகிறது.
”சமத்துவம் என்னும் பிரச்சினையை அருவமான முறையில் அல்லது பெயரளவுக்கு முன்வைப்பது முதலாளிய ஜனநாயகத்தின் இயல்பு. பொதுவான தனிமனிதச் சமத்துவம் என்னும் வேடத்தின்கீழ் முதலாளிய ஜனநாயகம், சொத்து உடமையாளர்களுக்கும், பாட்டாளிகளுக்கும், சுரண்டுபவனுக்கும், சுரண்டப் படுபவனுக்கும் உள்ள பெயரளவு அல்லது சட்டரீதியான சமத்துவத்தைப் பிரகடனப் படுத்துகிறது. இவ்வாறு அது ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை அப்பட்டமாக ஏமாற்றுகிறது”
என்கிற தோழர் லெனின் அவர்களது முதலாளித்து ஜனநாயகம் குறித்த கருத்தினை அவர் பொறுத்தமான இடத்தில் அவர் மேற்கோள் காட்டியது இந்திய நாடாளுமன்ற ஜனநாயத்தோடு நெருக்கமாகப் பொருந்திப் போவதை உணர முடிகிறது.
உலகின் ஆகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதிலோ ஜனநாயகத்தின் கனிகளை அது எந்தக் குடிமகனுக்கும் முற்றாக அது நிராகரிப்பதில்லை என்பதிலோ நமக்கு முற்றாக முரண்பாடுகள் இல்லை.
இந்த அளவுக்கேனும் பேச முடியுதுன்னா அது ஜனநாயகத்தோட பலன்தான் என்றும் பலர் சொல்லும்படியான சூழல் பல நேரங்களில் வாய்க்கிறதென்பதும் உண்மைதான்.
”பெரிய மந்திரியாயிட்டாப்ல என்ன கொம்பா மொளச்சிருக்கு. எப்பேர்பட்ட கொம்பனாயிருந்தாலும் அவனுக்கும் ஒரு ஓட்டுதான், இந்த ஒட்டுக் குடிசையில் இருந்தாலும் எனக்கும் ஒரு ஓட்டுதான் என்று கிராமத்தில் இருக்கும் எழுதப் படிக்கத் தெரியாத பாமர மனிதன்கூட சொல்வதை பலநேரம் கேட்டிருக்கிறோம்.
“எவனாயிருந்தா என்ன எலக்ஷன் வந்தா ஓட்டுக்கேட்க என் வீட்டு வாசப்படிய மிதிச்சுதானே ஆகனும்” என்கிற மாதிரி ஏசாத வாக்காளனே இல்லை எனலாம்.
ஒரு பக்கம் மேலோட்டமாகப் பார்த்தால் இது எவ்வளவு சரி என்பது மாதிரித் தோன்றும். ஆமாம், அவனுக்கும் ஒரு வாக்கு எனக்கும் ஒரு வாக்கு என்பதாகத் தோன்றும். அவனுக்கும் ஒரு டிக்கட் எனக்கும் ஒரு டிக்கட்தான் என்பதில் ஆகா இருவரும் சமம்தானே என்றுகூட நினைக்கத் தோன்றும்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் வாக்குச் சமநிலை என்பது வாழ்க்கைச் சமநிலை ஆகாது என்பது புரியும்.
அவனுக்கான வாக்கு நமது வாக்கோடு சமப் படுகிறது. அவனது உறைவிடம் நமது உறைவிடத்தோடு பொருந்திப் போகிறதா? என்று பார்த்தால் அவனது செல்ல நாய்க்கான உறைவிட வசதிக்கே நாமின்னும் ஏழேழு ஜென்மம் எடுக்க வேண்டும் என்ற எதார்த்தம் பிடி படும்.
அவனது குழந்தைகளுக்கான கல்வியும் நமது குழந்தைகளுக்கான கல்வியும், அவனுக்கான மருத்துவமும் நமக்கான மருத்துவமும், அவனுக்கான போக்குவரத்தும் நமக்கான போக்குவரத்தும் சமமாகாத போது வாக்குச் சமநிலை என்பது நமது வாக்கினை விலைக்கு வாங்கக்கூடிய வல்லமையை அவனுக்குத் தரவே செய்யும்.
சமமான வாழ்க்கையோடு கூடிய வாக்குச் சமநிலையே வாக்குகளை விலைபொருளாவதிலிருந்து தடுக்கும்.
ஆக, வாக்குகளின் மூலம் நல்ல மக்கள் அரசு வரவேண்டும் என்பதற்கான நிபந்தனையே சமமான வாழ்க்கைதான்.
நமக்கு நல்ல மக்கள் அரசு வேண்டும்.
அதற்கு மக்களின் வாழ்க்கை சமப்பட வேண்டும்.
அதற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும்.
இளைய திரள் அதற்கெங்களை வழிநடத்தும்.
மும்பைக் கவிஞர் புதியமாதவியின் “ஏ ராம்!” கவிதைத் தொகுதிக்கு நான் தந்திருந்த அணிந்துரையுடன், கவிஞர் இளம்பிறையின் தொகுப்புக்கு இன்குலாப் தந்திருந்த அணிந்துரையை ஒப்பிட்டு, தோழர் பழமலை அவர்கள் கணையாழியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள் 2006இல். நினைவில்லையா எட்வின்?
ReplyDeleteஅய்யய்யோ தெரியாம போச்சே. தெரிந்திருப்பின் வாசித்துவிட்டு அதையும் சேர்த்திருக்கலாம் அண்ணா.
Delete