Monday, May 18, 2015

கதையாய் புவியியல்


( கேத்ரின் எழுதிய புவியியலை புரிந்து கொள்வோம்நூலை முன்வைத்து)

இந்த அறிவியல், கணக்கு, ரெண்டையும் ஒரு அஞ்சு வருஷத்துக்கு பள்ளிகள்ள இருந்து அப்புறப் படுத்திட்டு மொழிகளையும் வரலாறு பூகோளத்தையும் மட்டும் சொல்லித் தந்தா இந்த சமூகம் உருப்படும்என்று ஒருமுறை பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது. அறிவியலையும் கணக்கையும் நிராகரித்தால் பிள்ளைகள் மக்குகளாய் போகாதா என்று யோசித்தேன். ஆனால் அவரோடானான தொடர் உரையாடல் எனது எண்ணத்தை சுத்தமாய் கழுவி துடைத்துப் போட்டது. அறிவியல் மற்றும் கணக்கு மீது அல்ல நமது கோவம். இன்றைக்கு இருக்கும் கணிதம் மற்றும் அறிவியல் மீதான அழுத்தமும் கவனமும் மொழியையும், இந்த மண்ணையும், இந்த மண் சார்ந்த தொன்மையையும் மற்றும் மண் அறிவியலையும் புறக்கணிப்பதாக உள்ளது. இந்த அளவிலான அறிவியலும் கணிதமும்கூட கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளோடு இல்லை என்பதும் மனப்பாடத்திற்கான விஷயங்களாகவே அவை மாறிப் போயிருப்பதும் மிகவும் கவலைக்குரிய விஷயங்கள். மொழியை சரியாக கற்றுக் கொள்ளாத குழந்தை தனது கலாச்சாரத்தை தொன்மையை அறியாதவனாவான். வரலாறு அறியாமல் வளரும்போது தனது மண் மீதான பிடிப்பை இழந்தவனாகவே வளருவான்.

இவைவரைக்கும் அவரது கருத்துக்களோடு ஒத்துப்போக முடிந்த என்னால் புவியியல்தான் அனைத்துவகையான அறிவியலுக்குமான அடிப்படை அறிவியல்என்று சொன்னபோது ஏதோ காது கொடுத்து கேட்கிறோம் என்பதற்காக என்னவெல்லாம் சொல்கிறார்கள் பாரேன் என்றுதான் நினைக்கத் தோன்றியது. ஆனால் தோழர் கேத்ரின் எழுதிய புவியியலை புரிந்து கொள்வோம்என்ற நூலை வாசித்தபோதுதான் அந்த அதிகாரியின் கூற்றிலிருந்த உண்மை பிடிபட்டது.

அறிவியலும் புவியியலும் குழந்தைகளுக்கு பிடிக்காமல் போவதற்கான ஆக முக்கியமான காரணம் அவற்றின் மொழிநடைதான். அறிவியல் அறிவியலாளர்களின் பங்களிப்பு. ஆனால் அவற்றை குழந்தைகளுக்கு தரும்போது அறிவியலாளர் தனது கருத்துக்களை கதை சொல்லிகளிடம் சொல்லி அவர்கள் கிரகித்துக் கொண்டபின் அந்தக் கதை சொல்லிகளின் மொழியில் தர வேண்டும் என்று நினைப்பவன். அறிவியல் பாடப் புத்தகங்களின் மொழி இன்னமும் நெகிழ வேண்டும் என்று நினைப்பவன் நான்.
புவியியலை புரிந்து கொள்வோம்என்ற இந்த நூலின் பெரு வெற்றியே அதன் நெகிழ்வான மொழிதான். இந்தப் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் ஒரு படைப்பாளியின் மொழியைப் பார்க்க முடியவில்லை. முழுக்க முழுக்க மக்களின் மொழியாகவும் குழந்தைகளோடான ஒரு தாயின் மொழியாகவுமே இந்தப் புத்தகத்தின் மொழி இருக்கிறது.

இந்த நூலில் எட்டு கட்டுரைகள் இருப்பதாகவும் கொள்ளலாம் அல்லது அவற்றை எட்டு இயல்கள் என்றும் கொள்ளலாம். அவை பெருமாபாலும் உரையாடல் வடிவிலோ அல்லது கேள்வி பதில் நடையிலோ இருப்பது ஈர்ப்பதாகவும் புரிந்துகொள்வதற்கு எளிதாகவும் இருக்கிறது.
மழை எப்படி வருகிறது என்பதை இந்த நூல் அங்கன் வாடி குழந்தைக்கும் எழுபது வயது மனிதனுக்கும் புரிகிற மாதிரி சொல்கிறது. அதே போல்தான் இடி விழுவதில்லை மின்னல்தான் விழுகிறது என்கிற உண்மையையை புரிகிறமாதிரி சொல்லித் தருகிறது. மின்னலில் இருந்து மின்சாரம் எடுப்பது எப்படி சாத்தியம் என்று எல்லா வயதினருக்கும் புரிகிறமாதிரி ஒருவிதமான ஈர்ப்போடு சொல்லித் தருகிறது.

பூகம்பம் சுனாமி என்பதெல்லாம் கடவுள்களின் கோவத்தால் நிழ்வன என்பதுபோன்ற பொய்களை புரட்டுகளை நார் நாராய் கிழித்து ஒரு பந்துபோல் கசக்கி தூர எறிகிறது.

இந்தியத் தட்டு என்பது எது?, பர்மியத் தட்டு என்பது எது? அவை ஏன் மோதிக் கொள்கின்றன? அவ்வாறான மோதல்களை ஏன் தடுக்க முடியாது போன்ற விவரங்களை சுவைபட எழுதுகிறார் கேத்ரின்.

பூமித் துண்டு சூரியனிலிருந்து தெறித்து விழுந்த போது அதிலிருந்த ஆக்சிஜனும் வெளியில் இருந்த ஹைட்ரஜனும் கலந்து நீராகி மழையாக வருடக் கணக்கில் பெய்ததன் விளைவாகவே பூமியின் மேற்பரப்பு குளிர்ந்தது என்கிற உண்மையை இந்த நூல் சொல்கிறது.

நேரம் நாட்டுக்கு நாடு ஏன் வேறுபடுகிறது? அவை எப்படி தீர்மானிக்கப் படுகின்றன? என்பதுபோன்ற விவரங்களும் இருக்கின்றன.
புவியீர்ப்பு விசை பூமியின் இயக்கங்கள் போன்றவை குறித்த அறிவியல்தான் இயற்பியல் என்றும், பாறைகளில் உள்ள கனிமங்களின் வேதியியல் பண்புகளைப் பற்றிய இயல்தான் வேதியியல் என்றும் பூமியில் வாழக்கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கிகளைப் பற்றிய இயல்தான் உயிரியல் என்றும் இவர் சொல்லும்போதுதான் அந்த அதிகாரி புவியியல்தான் அனைத்துவகையான அறிவியலுக்கும் மூலம் என்ற கூற்றின் உண்மை பிடிபட்டது.

ஒரு எழுத்தாளராகவோ, புவியியல் நிபுணராகவோ தன்னை பாவித்துக் கொள்ளாமல் முதல் தலைமுறைக் குழந்தைகள் படிக்கும் ஒரு எளிய அரசு பள்ளியின் ஆசிரியையாகவே இந்த நூலை அவர் எழுதியிருப்பதால்தான் இந்த நூல் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

குறுகிய காலத்தில் மூன்றாம் பதிப்பினை பெற்றிருக்கிறது என்பது நல்ல நூல் என்பதோடு போயும் சேர்ந்திருக்கிறது என்கிற உண்மையை சொல்கிறது.
குழந்தைகளுக்கான நூல் என்று பின்னட்டையில் போட்டிருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கும் நமக்குமான புவியியல் உண்மைகளை நம் தோள்மீது கைபோட்டபடி உரையாடும் நூல்.

இந்தப் பொண்ணுக்கிட்ட புவியியல் படிக்காமல் போனோமே என்கிற ஆதங்கம்தான் நமக்கு.

புவியியலைப் புரிந்து கொள்வோம்
ஆசிரியர்: கேத்ரின்
பாரதி புத்தகாலயம்
30
ரூபாய்


7 comments:

  1. நல்லதொரு நூல் அறிமுகம்! வாசிக்கத் தூண்டுகிறது! நன்றி!

    ReplyDelete
  2. நல்ல நூல் பகிர்வுக்கு நன்றி. தாங்கள் கூறியது போல குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே இந்நூல் பயன்படும் என்பது தங்களது விமர்சனத்திலிருந்து தெரிகிறது.

    ReplyDelete
  3. தோழர் புத்தகம் எங்கே கிடைக்கும்..

    ReplyDelete
    Replies
    1. பாரதி புத்தகாலயம் தோழர்

      Delete
  4. அருமையான நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...