அடுத்த
நாள் கூட்டத்திற்காக
தயாரித்துக் கொண்டிருக்கிறேன். குணங்குடி மஸ்தான் அவர்களைப் பற்றியும் கொஞ்சம் பேசினால் நன்றாக
இருக்கும் என்று படுகிறது.
மஸ்தானைப் பிடிப்பதற்காக வலையை வீசுகிறேன். அகப்படுகிறார்.
வாசிக்க ஆரம்பிக்கிறேன். வாசிக்க வாசிக்க ஆச்சரியத்தால் விரிகிறேன், விரிகிறேன்,
விரிந்து கொண்டே இருக்கிறேன்.
ஆண்டாளும், பட்டினத்தாரும்,
சித்தரும் சேர்ந்த கலவையாக இருக்கிறார்.
காதலை, காமத்தை
அறவே துறந்து கடவுளை அடைய வழிகாட்டும் பட்டினத்தாரும், காதலையும்
காமத்தையும் ஊடகமாக்கி அதன்வழி இறைவனை சேரும் வழி சொல்லும் ஆண்டாளும் ஒருங்கே ஒரு
மனிதனுள் நுழைந்தால் அவரை குணங்குடி மஸ்தான் சாகிப் என்று சொல்லிவிடலாம் போல.
தாயைத்
தவிர ஏனைய பெண்களை நிராகரிக்கும் பாங்கும், எல்லா பெண்களையுமே தாயாகப் பார்ப்பதுவும்
குணங்குடியாரின் அடையாளமாக இருக்கிறது. எழுதுகிறார்,
“தையலவர்களின் கொங்கையை
நான்
பாராத
குருடாவது எக்காலம
மையலெனு
மாலை
மார்பு
நிறையப் பூண்ட
தையலர்கள்
எல்லாமென்
தாயாவது
எக்காலம்”
“ வானிடை வாலுமவ் வானவர்க்கு
மறையவர்
வேள்வியில் வகுத்த அவி
கானிடை
திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும்
மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை
யாழிசங் குத்தமர்க்கு
உன்னித்
தெழுந்தவென் தடமுலைகள்
மானிடர்க்கென்று
பேச்சுப்படில்
வாழ்கிலேன்
கண்டாய் மன்மதனே”
என்று காதலின்பார்பட்ட காமத்தின் ஊடே பக்தியில் திளைக்கும் ஆண்டாளாகவும்
இவரைப் பார்க்க முடிகிறது. ஆண்டாளுக்கேனும் அவர் பெண் அவள் காதலிக்கும்
இறைவன் ஆண். ஆனால் குணங்குடியார் அவரது உருவ நம்பிக்கையற்ற மார்க்கத்தின்
இறைவனை பெண்ணாகப் பார்க்கிறார். ஆணாதிக்கம் கொஞ்சம் அதிகமாய்
உணரப்படு ஒரு சமூகத்தில் அந்தச் சமூகத்தின் இறவை பெண்ணாகப் பார்ப்பதும் அந்தப் பெண்ணை
மனோன்மணி என்று விளிப்பதும் “ உனக்கொரு மணவாளன் கிடைத்து விட்டாலும்
என்னை கள்ள மணவாளனாகவேனும் ஏற்றுக் கொள்” என்பது மாதிரியும் எழுதுவதற்கு
எவ்வளவு பக்குவமும் பெருந்தன்மையும், தைரியமும் வேண்டும்.
இஸ்லாமியக் கவிஞர் ஒருவர் அல்லாவை பெண்ணாக பாவித்து கவிதை எழுதியிருப்பது
தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் இருப்பதற்கான வாய்ப்புகளேயில்லை.
இது தமிழ் வாசகனுக்கு சரியானபடி போய் சேரவில்லை என்பதுதான் சோகத்தினும்
சோகம்.
“தாவாரம் இல்லை
தங்க ஒரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி” என்கிற மாதிரியோ
அல்லது “ நட்ட கல்லும் பேசுமோ” என்கிற அளவிற்கோ
இல்லை எனினும் இந்த வகையான சித்தர்களை நெருங்கி வருகிறார் குணங்குடியார்.
சொல்லொன்றும்
செயலொன்றுமாய் வாழும் மனிதன் எவனாயினும் அவன் குருவேயாயினும் துவைத்து எடுக்கிறார்
மனிதர். எழுதுகிறார் பாருங்கள்,
“மோட்சம் பெறாமல் போனாலும் போகட்டும்
முடி தரித்து
முடிய வாழ்ந்து
முடிந்து போனாலும் போகட்டும்
முடி தரித்து
முடிய வாழ்ந்து
முடிந்து போனாலும் போகட்டும்
குடிக்கக்
கஞ்சியின்றி
குண்டிக்குத் துணியின்றி
குருடனாய் போனாலும் போகட்டும்
குண்டிக்குத் துணியின்றி
குருடனாய் போனாலும் போகட்டும்
என்னை
அடித்தாலும்
எலும்புகளை ஒடித்தாலும்
அவர்களுக்கு அஞ்ச மாட்டேன்
எலும்புகளை ஒடித்தாலும்
அவர்களுக்கு அஞ்ச மாட்டேன்
அந்தக்
கெடுதல் செய்பவர்கள்
என் கடை மயிர்தான்”
கெடுதல் செய்பவர்கள்
என் கடை மயிர்தான்”
அப்ப்ப்பா விடக் கூடாது அவரை
****************************************************************************************************************************
தொடங்கிய இதழில் இருந்து சரியாகக் கணக்குப் பார்த்தால் இதுவரை
இந்த இதழையும் சேர்த்து நாற்பத்தி நான்கு இதழ்கள். ஆமாம்
தோழர்களே உங்கள் கைகளில் இருப்பது நாற்பத்தி நான்காவது இதழ். நாங்கள்
சைதாப்பேட்டையில் ஒரு பத்துக்கு பத்து அறையில் கூடி இதழை ஆரம்பிப்பது என்று முடிவெடுத்தபோது
தொடர்ந்து கொண்டுவர வேண்டும் என்றுதான் முடிவெடுத்தோம். ஆனாலும்
அதை நாங்கள் பிரகடனப் படுத்திய போது ஒரு இலக்கிய இதழை தொடர்ந்து கொண்டு வருவது என்பது
சாத்தியமே இல்லை என்று நிறைய பேர் யோசித்தார்கள். ஏன்,
சிலர் அதை எங்களிடம் சொல்லவும் செய்தார்கள். அவ்வளவு
ஏன், உண்மையை சொன்னால் நாற்பத்தியெட்டு இதழ்களையும் தாண்டி எந்தவிதமான
தொய்வுமின்றி இப்படி நகரும் என்பதை நாங்களேகூட நினைத்துப் பார்க்கவில்லைதான்.
இவர்களால் ஏலாது இனி. எப்படி நடத்துகிறார்கள்
பார்க்கலாம்? என்றுகூட சிலர் இடையிலே யோசித்தார்கள். பூனை கண்களை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டுவிடாது என்பதை காக்கையின் பாய்ச்சல்
நிரூபித்திருக்கிறது.
நான் போகிற திக்கெல்லாம் காக்கையே எனக்கு அடையாளமாக இருக்கிறது.
காக்கையின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த என்றும் காக்கையின் இணை ஆசிரியர்
என்றும், சிலர் ஆர்வக் கோளாறில் காக்கையின் ஆசிரியர் என்றும்கூட
அழைப்பிதழ்களில், சுவரொட்டிகளில் ப்லக்ஸ்களில் போடுகிறார்கள்.
என் அமைப்பு சார்ந்த கூட்டங்களில்கூட அமைப்பில் நான் வகிக்கும் பொறுப்பைவிடவும்
காக்கையே எனது அடையாளமாகப் பேசப் படுகிறது. நான் தாய்த் தமிழ்ப்
பள்ளியில் பேசிவிட்டு வருகிறேன். அவர்கள் அதுபற்றி முகநூலிலே
எழுதுகிறார்கள். அதற்கு பின்னூட்டமாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்
கழகத்தின் முன்னாள் மாநிலப் பொதுச் செயளாளரும், அகில இந்திய ஆசிரியர்
கூட்டமைப்பின் முன்னாள் அகில இந்திய பொறுப்பாளர்களில் ஒருவருமான தோழர் நடராசன் அவர்கள்
காக்கைச் சிறகினிலே எட்வின் தானே, அவரது பேச்சை பதிவு செய்திருக்கிறீர்களா
என்று கேட்கிறார். அவருக்கு என்னை நன்கு தெரியும். பல இயக்கங்களில் அவரது வழிகாட்டுதலை செயல் படுத்திய அவரது தோழமை அமைப்பின்
மாவட்டப் பொறுப்பாளர் என்பது நன்கு தெரியும் அவருக்கு. என்றாலும்
எட்வின் என்றதும் காக்கைதான் முன்வந்து நிற்கிறது. இதே நிலைதான்
தோழர்கள் முத்தையாவிற்கும் சந்திரசேகருக்கும்.
மூத்த எழுத்தாளர்கள் காக்கையை அங்கீகரிக்கிறார்கள்,
இளையவர்கள் மரியாதையோடு பார்க்கிறார்கள். காக்கையில்
தங்களது ஒரு படைப்பு வருவதைக் கூட பெருமையாகப் பார்க்கிறார்கள். நடந்து முடிந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில மாநாட்டில்
நடந்த பிரதிநிதிகளின் விவாதத்தில் சில தோழர்கள் தங்களது மாவட்டத்து படைப்பாளிகளின்
படைப்புகள் காக்கையில் வந்திருக்கும் செய்தியை மிகவும் பெருமையோடு பதிவு செய்திருக்கிறார்கள்
என்பதைக் கேள்விப் படும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
தோழர் ஞாநி அவர்கள் போகிற திக்கெல்லாம் காக்கைகுறித்து பேசுகிறார்.
ஒரு முறை அவர் விஜய் தொலைக் காட்சியின் விருதுக்கு காக்கையை முன்மொழிகிறார்.
கரிசல் காட்டு எழுத்தாளர் ராஜ நாராயணன் அவர்கள் தனது 90 ஆவது பிறந்த நாளின் பொழுது அந்த ஆண்டின் சிறந்த சிறு இலக்கியப் பத்திரிக்கைக்கான
விருதினை “ தீரா நதி” மற்றும் “
காக்கைச் சிறகினிலே” இதழ்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்.
புலம் பெயர்ந்து வாழும் தோழர்கள் காக்கையை தங்களுக்கான சிறகாக,
ஆயுதமாக, கேடையமாகப் பார்க்கிறார்கள்.
தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் காக்கைக்கு தொடர் தர
சித்தமாயிருக்கிறார்கள். உடல்நிலை ஒத்துழைக்க மறுத்தபோதும்கூட ஞாநியும்,
தோழர் இன்குலாப் அவர்களும் காக்கைக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.
காக்கை நன்கு போய் சேர்ந்திருக்கிறது.
காக்கை மதிக்கப் படுகிறது. காக்கையை யாராலும் தவிர்க்க
முடியாது என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இவை எல்லாமும் இருக்கிறதுதான்.
இதற்கு எங்களது உழைப்பு மட்டுமல்ல வாசகர்களின் பங்கும் நிறைய இருக்கிறது.
காக்கையின் வெற்ரியில் என் பங்கு இல்லை என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.
என் உழைப்பும் இருக்கவே இருக்கிறது. ஆனால் தோழர்கள்
சந்திரசேகர் முத்தையா மற்றும் தோழர் ஏகன் அவர்களின் பங்கும் உழைப்பும் மிக அதிகம்.
அதிலும் தோழர் முத்தையாவின் உழைப்பும் இழப்பும் பேரதிகம்.
ஏன் எட்வின் இவ்வளவு நீட்டி இழுக்கிறாய்?
காரணம் இருக்கிறது. இதே வீச்சில்
இதழ் தொடர்ந்து வரவேண்டும் என்றே நாங்களும் உங்களைப் போலவே ஆசைப் படுகிறோம்.
அதற்கு புதிது புதிதாய் படைப்பாளிகள் தேவை. அது
கடந்து நிதி தேவை.
1)
வாய்ப்புள்ள தோழர்கள் விளம்பரங்கள் வாங்கித்
தாருங்கள்.
2)
தங்களது ஊர்களில் காக்கையை விற்பனை செய்வதற்கு
அருள் கூர்ந்து முயற்சி செய்யுங்கள்
3)
சந்தா அனுப்புங்கள்.
சந்தா முடிந்தவர்கள் அருள்கூர்ந்து புதுப்பியுங்கள்
4)
வாய்ப்புள்ள இடங்களில் வாசகர் வட்ட்த்தை
கூட்ட இயலுமா பாருங்கள்
5)
நண்பர்களின் பிறந்தநாள் மற்றும் திருமணங்களின்
போது அவர்கள் பெயரில் சந்தா செலுத்தி அவர்களை நமது வாசகர்களாக்குங்கள்
6)
சந்தா சேகரிப்பை இயக்கமாக
நடத்த முடியுமா பாருங்கள்.
வருகிறோம்.
இதழ் தொய்வின்றி தொடர்வதில்
உங்களது கரங்களும் இணையட்டும்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்