Monday, December 10, 2018

மாற்றி அமைக்கப்படவேண்டிய இட ஒதுக்கீடு விகிதாச்சாரம்

இன்றைய செய்தித்தாள்களில் கிடைக்கும் மூன்று செய்திகள் மிகவும் முக்கியமானவையாகப் படுகிறது.
1) ராஜஸ்தான் மாநிலத்தில் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த வாக்குப்பெட்டி
2) சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படும் அறைக்குள் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ ஊழியர்கள்
3) இடஒதுக்கீட்டின் விகிதாச்சாரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தோழர்
K பாலகிருஷ்ணனது நியாயமான கோரிக்கை
கடந்த ஏழாம் தேதியன்று தெலுங்கானா, ராஜஸ்தான், சதீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வரும் கோடையில் நடைபெற உள்ள பராளுமன்றத் தேர்தல் முடிவினை எதிரொலிக்கும் என்று கருதுவதால் மொத்த தேசமும் ஆர்வத்தோடு அதற்காக காத்திருக்கிறது. இது கொஞ்சம் மிகையாகத் தோன்றினாலும் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் இந்த முடிவுகளை அறிய ஆவலாக உள்ளன. இந்த முடிவுகளை ஒட்டியே அவை பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கான உத்திகளைக் கையெடுக்கும்.
பொதுவாக தேர்தல் என்பது வாக்காளர்களுக்கும் வேட்பாளார்களுக்கும் இடையிலானதொரு செயல்பாடு. என்னைத் தேர்ந்தெடுத்தால் இதை இதை செய்வேன் என்று வாக்காளர்களிடம் வேட்பாளார்கள் வாக்குறுதி தருவதும் அதற்கேற்ப தமக்கு தேவையான அல்லது தமக்கு நம்பிக்கையான வேட்பாளரை வாக்காளர் தெரிவு செய்வது என்பதும் தேர்தலில் செயல்பாடாக இருக்க வேண்டும்.
கட்சிகள் எங்களைத் தேர்ந்தெடுத்தால் இதை இதை செய்வோம் என்று வாக்குறுதிகளைத் தருவதும் வாக்காளர்கள் தாம் நம்பும் கட்சியைத் தேர்ந்தெடுப்பதும் இந்தச் செயல்பாட்டின் மேம்பட்ட வடிவமாகும்.
சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். வீடு வந்து வாக்கு கேட்டவருக்கு வீடு தேடி வந்தார் என்பதற்காகவே வாக்களிப்பவர்கள் உண்டு. முதலில் வந்த வேட்பாளருக்கு முதலில் வந்ததற்காகவே வாக்களிப்பவர்கள் உண்டு. தன் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்தார் என்பதற்காக அவருக்கு வாக்களித்தவர்கள் உண்டு.
போயும் போயும் அந்த ஆளுக்கு ஏன் ஓட்டுப் போட்ட என்றால் ”கைய காலப் புடிச்சு கெஞ்சினான் என்ன செய்ய சொல்ற” என்று கூறிபவர்களும் உண்டு.
பிரபலங்களின் தலையீடும் கவர்ச்சியும்கூட தேர்தலில் இடையீடு செய்தன.
இந்த செயல்பாட்டை ஜாதி இடையீடு செய்தது, மதம் இடையீடு செய்தது. இப்போது இவற்றோடு சேர்த்து பணமும் சரக்கும் இடையீடு செய்கின்றன.
கட்சி விசுவாசம் கணிசமான வாக்கு வங்கிகளை கட்சிகளுக்கு உருவாக்கின. அந்த வங்கிகளைக் கூட மேற்சொன்ன காரணிகள் உடைக்கவே செய்கின்றன.
இவை அனைத்தும் அத்தனை கட்சிகளுக்கும் பொதுவானவைதான். மேற்சொன்ன அனைத்து காரணிகளையும் அனைத்து காரணிகளையும் அனைத்துக் கட்சிகளும் கை எடுத்து மற்ற கட்சிகளுக்கு சேதாரத்தை தருவதற்கு முயற்சி செய்கின்றன.
இதில் பாஜக வாக்காளார்களோடு மட்டும் தன் செயல்பாட்டை முடித்துக்கொள்ள மறுக்கிறது. தேர்தல் கமிஷன், வாக்குபெட்டி ஆகியவற்றிடம்கூட அது வாக்கு கேட்கிறது. ஆச்சரியம் என்னவெனில் அதற்கு பலனும் கிடைக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னாலும் இன்னும் வெளிப்படையாக சொல்வதெனில் முற்றுமாக நிராகரிக்கப்பட்டபிறகும்கூட அது ஆட்சி அமைக்க முயல்வதும் அதில் அது வெற்றி பெறுவதும் வாடிக்கையாகவே இருக்கிறது.
இந்தமுறை தோற்றுவிட்டாய். தளர்ந்துவிடாமல் முயற்சி செய். அடுத்தமுறை வெற்றியடையலாம் என்போம். பாஜகவோ இந்த முறை தோற்று இந்தமுறையே ஆட்சி அமைக்கும்.
இந்த வெளிச்சத்தில்தான் முதல் இரண்டு செயல்களுக்கும் பாஜகவிற்கும் தொடர்பிருக்க வாய்ப்பிருப்பதை நம்மால் மறுக்க முடியவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தில் “கிசாஞ்ச்” தொகுதிக்கு உட்பட்ட “சகாபாத்” என்ற இடத்தில் சாலயில் வாக்குப்பெட்டி கிடந்த செய்தியை இன்றைய தீக்கதிர் சொல்கிறது. அநேகமாக அந்த இடம் வாக்குச்சாவடிக்கும் வாக்கு எண்ணும் இடத்திற்கும் இடையேயான பகுதியாக இருக்க வேண்டும்.
வாக்குச் சாவடியிலும் வாக்கு எண்ணும் இடத்திலும் பணியாற்றிய அனுபவத்தில் இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதியாகக் கூறமுடியும். அவ்வளவு பாதுகாப்பானது வாக்குச் சாவடிக்கும் வாக்கு எண்ணும் இடத்திற்குமான வாக்குப் பெட்டிகளின் பயணம்.
சதீஸ்கர் மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியில் வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்பட்டு வரும் இடத்திற்குள் அத்தனைப் பாதுகாப்பையும் மீறி இரண்டு ரிலையன்ஸ் ஜியோ ஊழியர்கள் மடிக்கணினியோடு நுழைந்திருக்கிறார்கள் என்கிறது இன்றைய விடுதலை. சாத்தியமே இல்லாத இது எப்படி சாத்தியமானது?.
அம்பானிக்கும் மோடி அவர்களுக்கும் இடையேயான உறவின் வெளிச்சத்தில் இதைப் பார்த்தால் பிண்ணனி விரிகிறது. வாக்குப் பெட்டிகளை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்ற நடந்த முயற்சியா இது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் வாக்குச் சாவடிகளை, வாக்குச் சாவடிகளுக்கும் வாக்கு எண்ணுமிடத்திற்கும் இடையேயான பாதைகளையும், பெட்டிகள் பாதுகாக்கும் இடத்தையும் சட்ட விதிகளுக்கு உட்பட்ட வகையில் கண்காணிக்க வேண்டும்.
மக்கள்தொகையில் 18 விழுக்காடு தலித்களும் ஒரு விழுக்காடு பழங்குடியினரும் இருந்தனர். அப்போது 18+1 என்கிற அளவில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு இருந்தது. இப்போது தலித்கள் 19 சதவிகிதமும் பழங்குடியினர் ஒரு சதவிகிதமும் என்று இருப்பதால் இட ஒதுக்கீட்டை 19+1 என்று மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் K பாலகிருஷ்ணன் அவர்கள் கோரியுள்ளார்.
இதை மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையாகவே கொள்ள வேண்டும். சமூக அக்கறையுள்ள இயக்கங்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதும் ஒன்றிணைந்து இயக்கங்களைக் கட்டுவதும் அவசியம்.
#சாமங்கவிந்து 30 நிமிடங்கள்
09.12.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...