Sunday, December 9, 2018

காமிக்ஸ் எழுதுவோம்

சமீப காலமாக, நாம் வெகு காலமாக கரடியாய் கத்திக் கொண்டிருக்கும் இரண்டு கருத்துக்களை தம்பி Karu Palaniappanதான் பேசுகிற கூட்டமெங்கும் பேசி வருகிறார். நான் கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சமோ கொஞ்சமாய் இருக்கிற வாசக கூட்டமும் பையப்பைய கேட்கிற கூட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது என்றும் ஆகவே எழுதுவதைவிடவும் உரையாற்றக் கிளம்ப வேண்டும் என்றும் முன்பு கத்திக் கொண்டிருப்பேன். இப்போதெல்லாம் ’தம்பி பழநியப்பன் இப்படி கூறுகிறார்’ என்று சரியாக நான்கு வார்த்தைகளை சேர்த்து கூறுகிறேன். உண்மையிலுமே நாமாக சொல்வதை விடவும் ஒரு பிரபலத்தை மேற்காட்டினால் போய் சேரத்தான் செய்கிறது. இதை அவரிடமே ஒருமுறை சொன்னேன்.
அவரோடு ஒவ்வொருமுறை அலைபேசும்போதும் அவசியம் YOUTUBE ஐ பயன்படுத்துங்கள் என்பார். அந்தத் தொழில்நுட்பம் பிடிபவில்லை. யாரேனும் தோழர்கள் உதவினால் செய்யலாம் என்றிருக்கிறேன். ஆனால் அவரது வேண்டுகோளை ஏற்று ஏறத்தாழ சென்ற மாதம் நான்கைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கேட்கிற யாருக்கும் மறுக்காமல் தேதி கொடுத்தேன். அந்த வகையில் ஏழு கூட்டங்களுக்கு தேதி கொடுத்திருந்தேன்.
முதல் கூட்டத்திற்கு ‘டெங்கு’ போல இருந்ததால் போக முடியவில்லை. இரண்டாவது கூட்டத்திற்கு போய் வந்தேன். அடுத்த ஐந்து கூட்டங்களையும் “கஜா” காலி செய்தார்.
இந்த மாதம்கூட கேட்கிறவர்களுக்கெல்லாம் மறுக்காமல் தந்து கொண்டுதான் இருக்கிறேன்.
அது ஒரு புறம்.
சமீபத்தில் பழநியப்பனும் தோழர் சுப.வீ அவர்களும் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தின் காணொலியைக் கேட்டேன். போகிற போக்கைப் பார்த்தால் பையைப் பைய நானும்கூட காணொலி வாசகனாகவே மாறிப்போவேன் போல.
அதில் பேசும்போது பழநியப்பன் எழுத்தாளர்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்தார். இருக்கிற கொஞ்ச நஞ்சம் வாசகனும் தனக்கு வாசிப்பதற்கு நேரம் இல்லை என்று கருதுகிறான். வாசிப்பதற்கு அவன் ஒதுக்கும் கொஞ்ச நேரத்தில் மிகவும் அழுத்தமான ஆழமான எழுத்தை அவனுக்கு கொடுத்தால் அயர்ந்து விடுகிறான். இதனால் வாசிப்பதையே நிறுத்திவிடும் நிலைமைக்கு அவன் தள்ளப்படுகிறான்.
எனவே ஆழமான விஷயங்களை போகிற போக்கில் வாசித்துவிட்டுப் போகிறமாதிரி எளிய நடையில் தர வேண்டும் என்றார். தன்னைக் கேட்டால் எழுத்தாளர்கள் இனி ”காமிக்ஸ்” வழியாக தம் எழுத்துக்களைக் கொடுப்பதே சரி என்றார்.
நாம் காமிக்ஸ் எழுத்தாளார்களாக மாறுகிறோமோ இல்லையோ பழநியப்பன் காமிக்ஸ் பேச்சாளாராகவே மாறி வருகிறார். அயர்வே இல்லாமல் எவ்வளவுநேரம் வேண்டுமென்றாலும் அவரைக் கேட்க முடிகிறது.
கூட்டத்தில் இருந்த நிறையபேர் சிரித்தார்கள். அனால் அது கொள்வதற்கு உரிய கருத்து. வாசகன் ஆழத்திற்கு எதிரியாக இல்லை. நல்லதை கொள்வதற்கு அவன் ஒருபோதும் தயங்குதே இல்லை. அனால் அதற்காக அவன் சிரமப்படத் தயாரில்லை.
வாசிப்பதில் மட்டும் அல்ல, பயணிப்பதில், உறங்குவதில், உண்பதில், குளிப்பதில், என்று எதிலும் அவன் சிரமப்படத் தயாராயில்லை. உண்மையை சொன்னால் கொஞ்சம் சொகுசுப் பேர்வளியாய் ஆகிப்போனான். அவனை சிரமப் படுத்தாமல் அவனுக்கு நல்லதைத் தர முடியுமா என்பதை பரிசீலிக்கவும் தட்டுப்பட்டால் அதை நடைமுறைப் படுத்த முயற்சிக்கவும் வேண்டும்.
வேண்டுமானால் இதை இப்படி சொல்லலாம், “அவன் சிரமப்படாமல் சொகுசாய் வாசிப்பதற்காக நாம் கொஞ்சம் சிரமப்பட்டு எழுதுவதற்கு பயிற்சிபெற வேண்டும்.
நாமும் காமிக்சை பரிட்சித்துப் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடுத்ததாய் தோழர் சுபவீ பேச வந்தார்.
பெரியார் குறித்த சில நூல்களை தாம் காமிக்சாக எழுதிக் கொண்டிருப்பதாகவும், அவற்றில் சில அச்சுக்கே போயிருப்பதாகவும் கூறினார். ஆங்கிலத்தில் இப்படி சொல்வார்கள்,
“GREAT PEOPLE THINK ALIKE”
அருணாச்சலம்கூட ஆண்டவன் சொல்லியபிறகுதான் செய்வாராம். ஆனால் பழநியப்பன் நினைத்த மாத்திரத்திலேயே அதை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறார் அவரது தந்தை வயதொத்த தோழர் சுப.வீரபாண்டியன்.
காமிக்ஸ் வாசிப்பது சுலபம். அதை எழுதுவது அவ்வளவு கஷ்டம். காரண காமிக்ஸ் குழந்தைகளுக்கானது. குழந்தைகளுக்கானதை தயாரிப்பது எப்போதுமே கஷ்டம்.
குழந்தைகளுக்கான காமிக்சைத் தயாரிப்பதே சிரமம். நாம் எழுதப்போவதோ குழந்தைகளாய் மாறிப்போன மூத்த வாசகனுக்கு. அவனுக்கு எழுதுவது மிக மிக சிரமம். ஆனால் அதை செய்ய வேண்டும். செய்தே ஆக வேண்டும்.
மக்களின் எதிரிகள் அவனை ஏமாற்றுவதற்காக எந்த சிரமத்தையும் தாங்கிக்கொள்ள தயாராகி விட்டான். விதவிதமான வலைகளை வைத்திருக்கிறான். மக்களைக் காப்பாற்ற வேண்டும் எனில் மக்கள் ஊழியர்கள் இன்னும் பேரதிகமாய் துயரங்களைத் தாங்க வேண்டும். அவன் விரும்புகிற சூடில், அவன் குடிக்கிற சூடில் தரவேண்டும்.
இந்த நேரத்தில் ராணி காமிக்சின் ஐநூறு புத்தகங்களில் நூறு PDF வடிவில் வந்திருப்பதாக எங்கோ படித்தேன். அறிந்தவர்கள் இணைப்பைத் தந்தால் மகிழ்ந்து நன்றி சொல்வேன்.
ஆக,
YOUTUBE ஐப் பயன்படுத்த முயற்சிப்பது, மக்களுக்கான மேடைகளில் உடல்சிரமத்தைத் தாண்டியும் பங்கேற்பது, காமிக்சைக்கூட முயற்சிப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
நீங்கள்?
#சாமங்கவிந்து பதினோறு நிமிடங்கள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...