Sunday, December 2, 2018

65/66, காக்கைச் சிறகினிலே அக்டோபர் 2018

நேரடியாய் எதிர்ப்பது, மிரட்டுவது, கழுத்தறுப்பது என்பது ஒன்று. அணைப்பதுபோல் போல் நடித்துக் கொண்டே கழுத்தை அறுப்பது என்பது மற்றொன்று. பெறும்பாலும் ஆதிக்க நச்சு சக்திகள் இவற்றில் ஏதோ ஒரு வகையைச் சார்ந்திருப்பார்கள். RSS அமைப்பின் தலைவர்கள் இந்த இரண்டிலுமே தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இடம் இல்லை. அவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடட்டும். இல்லை எனில் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று நேரடியாக மிரட்டக்கூடிய RSS தலைவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
இவர்கள் சொல்வதை செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களை தாக்குகிறார்கள், நடு வீதியில் கேமராக்களை இயக்கிக்கொண்டே இஸ்லாமிய பெண்களை வன்புணர்வு செய்கிறார்கள், மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி இஸ்லாமிய சிறுவர்களை இளைஞர்களை, பெரியவர்களை பொதுமக்கள் முன்னிலையில் கொலை செய்கிறார்கள். எரிக்கிறார்கள்.
எட்டு வயதுக் குழந்தையை எட்டுபேர் சேர்ந்து எட்டு நாட்கள் ஒரு கோவில் வளாகத்தில் வைத்து வன்புணர்ந்து கொன்று போடுவார்கள். அந்தப் பாதகத்தை செய்தவர்கள் தேசபக்தர்கள் என்றும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் பேரணி நடத்துவார்கள்.
அதைவிடக் கொடுமை “குழந்தையை வன்புணராமல் கிழவியையா வன்புணர முடியும் ?” என்று மந்திரிமார்களே கேட்பார்கள். கிழவியையும் இவர்களது அமைப்பினர் விட்டு வைக்க மாட்டார்கள்.
எழுவது குழந்தைகளை தம் சொந்தக் காசை செலவழித்து காப்பாற்றி மருத்துவரை உச்சி முகர்ந்து பாராட்டி விருதுகளை வழங்கி சிறப்பு செய்வதற்கு பதிலாக அவர் இஸ்லாமியர் என்பதற்காக அவரை சிறியிலடைத்து கொடுமைப் படுத்துவார்கள்.
இந்தக் கொடுமையாளர்கள் நேரடியாகக் களமிறங்கி ஏதோ ஒரு வகையில் தாக்குதலை நடத்தி இந்த பூமி உங்களுக்கானது அல்ல. ஒன்று மதம் மாறுங்கள் அல்லது பாகிஸ்தானுக்கு போய்விடுங்கள் என்று அச்சுறுத்துவார்கள்.
இதைக்கூட புரிந்து அதற்கேற்ப எதிர்வினையாற்ற இயலும்.
இது இப்படி என்றால் அமித்ஷாவோ ,”சுதந்திரத்திற்கு அடுத்த காலகட்டத்தில் இந்தியாவில் நடந்த மிகப் பெரிய போராட்டம் அயோத்திப் போராட்டம்தான்” என்கிறார்.
வாத்த்திற்கு அயோத்திப் பிரச்சினை முக்கியமானது என்றேகூட கொள்வோம். ஒரு இடம் எந்தக் கடவுளுக்கு சொந்தமானது என்ற வழக்கினை அந்தந்த தெவங்களை நம்புகிற மனிதர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கொள்வோம். எந்த தெய்வத்தின் இடம் அது என்பதை மனித நீதிபதிகள் விசாரிக்கிறார்கள். வழக்கு இன்னும் முற்றாய் முடிந்துவிடவில்லை.
முடியாத வழ்க்கினை ஒட்டி நிகழ்ந்துவரும் போராட்டத்தைத்தான் சுதந்திரப் போராட்ட அளவிற்கு கொண்டு போகிறார் அமித்ஷா.
அவர் ஏதோ போகிற போக்கில் இதை சொல்லவில்லை. இதற்குப் பின்னால் ஒரு தேர்ந்த திட்டமிடல் இருக்கிறது. ஒரு வழிபாட்டு இடத்தின் உரிமைக்காக இந்தியாவின் இரு பிரிவினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மையை அந்த இடத்திற்காக இந்தியர்கள் இஸ்லாமியர்களோடு போராடிக்கொண்டிருப்பதாக நிறுவ முயல்கிறார். இது ஆபத்தானது.
வழக்கமாக இவர்கள் யாவரையும்விட அதிகமாகப் பேசும் மோகன்பகவத் இஸ்லாமியர்கள் இல்லாமல் இந்துநாடு இல்லை என்று கூறியுள்ளார்.
இதை மேலோட்டமாகப் பார்த்தால் ஆஹா இஸ்லாமியர்கள் மீது எவ்வளவு அன்பு பாருங்களேன் என்று நினைக்கத் தோன்றும். இது இந்து நாடாம், ஆனால் இஸ்லாமியர்களும் இங்கு இருப்பதற்கு உரிமை உண்டாம்.
எவ்வளவு மோசமான கருத்து திரிபு இது.
இதுதான் சிரித்து அணைத்தபடி கழுத்தில் கத்தியை இறக்குவது.
ஏனிப்படி விதவிதமாக அணுகுகிறார்கள். ஆறு மாதங்களில் தேர்தல் வருகிறதே அதற்காகத்தான்.
இன்னும் அன்பாய் மூர்க்கமாய் எப்படி வேண்டுமானாலும் வருவார்கள், எதை வேண்டுமானாலும் பேசுவார்கள், எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
*************************************************
அவ்வபோது மல்லையா பேசப்படுகிறவராகவே இருக்கிறார்.
மாண்பமை அருண்ஜேட்லி அவர்களைச் சந்தித்துவிட்டுதான் தான் இந்தியாவைவிட்டு வெளியேறியதாக மல்லையா கூறியிருக்கிறார். இதை சன்னமான குரலில் மறுக்க முயற்சித்த ஜெட்லி உள்ளிட்ட தலைவர்கள் அது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள்.
தம்மை மல்லையா சந்தித்தது உண்மைதான் என்பதை வேறு வழியின்றி ஜேட்லி ஒத்துக்கொள்ள வேண்டிய சூழல் வந்தது. சந்திப்பை ஒத்துக் கொண்ட அவர் அந்த சந்திப்பு வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே நடந்ததாகவும் அந்தச் சந்திப்பில் வங்கி அதிகாரிகளை சந்தித்து முறையாக செட்டில் செய்ய சொன்னதாக அருண்ஜேட்லி கூறியதாகவும் தகவல்கள் வெளியாயின.
ஏறத்தாழ 9000 கோடி கடனை அடைக்க முடியாத ஒருவர் வெளிநாட்டில் செட்டிலாகக் கிளம்பும் முன் நிதி அமைச்சரை சந்திக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இந்த சந்திப்பு நிகழ்ந்தபோது மல்லையாவின் மீது கடுமையான செக்அவுட் நோட்டீஸ் இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் நாட்டைவிட்டு ஓடிப்போகும் முன் அமைச்சரை சந்திக்கிறார். வங்கி விவரங்களை முடித்துவிட்டு செல்லுமாறு தான் அறிவுரை மட்டுமே கூறினேன் என்று ஒரு அமைச்சர் கூறுவது எப்படி சரியாகும்?
அதுவும் இந்த சந்திப்பிற்குப் பிறகு மல்லையா மீதான செக்கவுட் நோட்டீஸ் தளர்த்தப் பட்டிருக்கிறது. அவ்வாறு தளர்த்தப் பட்டதால்தான் மல்லையாவால் தப்ப முடிந்திருக்கிறது என்று வருகிற தகவல்கள் அசாதாரணமானவை.
முறையான ஆலோசனைக்குப் பிறகே செக்கவுட் நோட்டீஸ் தளர்த்தப்பட்டதாக வரும் செய்தியும் சாதாரணமானதும் அல்ல.
நமது கோரிக்கை என்னவெனில் இது விஷயத்தில் மாண்பமை ஜேட்லி அவர்களை விசாரிக்க வேண்டும் என்பதே.
*******************************************************************
மிகுந்த ஆர்ப்பாட்டத்தோடு கருத்துக்களைத் திரிப்பதில் இவர்கள் வல்லவர்கள் என்பதை நாம் ஒத்துக்கொள்ளவே செய்கிறோம்.
ஆனால் ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாகவும் இவர்கள் தங்களது அசிங்கமான திரிப்புகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பது பனாரஸ் பல்கலைக் கழகத்தில் நடந்த முதுகலை பொலிடிகல் சயின்ஸ் பிரிவிற்கான இரண்டு வினாக்களே சான்று.
1) கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் GST யின் கூறுகள் – விளக்கு
2) உலகமயமாக்கல் குறித்து முதலில் சிந்தித்தவர் மனு – விவரி
கல்வி குறித்த விவாத்ததை பொதுத் திரளுக்கு புரிகிற மொழியில் பரவலாக்க் கொண்டு போகாவிட்டால் பாடப் புத்தகங்களைக்கூட கருப்பு மைக்குப் பதிலாக காவி மையிலேயே அச்சடிப்பார்கள்.
புரிந்து கொள்வோம்.
***********************************************************************
ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை சேர்த்துவிட்டது மோடி அரசுதான் என்று பிராஸ் நாட்டின் அதிபர் கூறியிருக்கிறார்.
மற்றவர்கள் கூறும்போது வன்மமாக மறுத்தவர்கள் இப்போது ஒப்பந்ததாரரே கூறும்போது அதற்கு முறையான பதிலை வெளியிட கடமைப் பட்டவர்கள் ஆவார்கள்.
இல்லாது போனால் இவர்கள் எதை எல்லாம் ரகசியம் என்று சொல்கிறார்களோ அவை ப்ரான்ஸ் மூலமாகவே வெளிவரும்.
***************************************
JNU மாணவர்ப் பேரவைத் தேர்தல் உலகமே எதிர்பார்க்கக்கூடிய ஒன்று. மிச்சமே இல்லாமல் அனைத்துப் பொறுப்புகளுக்கும் இடதுசாரி மாணவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
எல்லாவகையான இடதுசாரிப் பிள்ளைகளும் ஒன்றாய் கைகோர்த்ததனால்தான் இந்த வெற்றி சாத்தியமாயிற்று.
இதில் நமக்கான பாடம் இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை தேர்தல் ஜனநாயகமே சாத்தியம் என்பதை அவர்களும், அவர்கள் ஒன்றும் RSS காரர்கள் அல்ல என்பதை நாமும் உணரவேண்டும் என்பதே சின்னப் பிள்ளைகள் நமக்கு நடத்தி இருக்கும் பால பாடம்.
கற்போம்.
**************************************************
ஏறத்தாழ இதே நேரத்தில் தில்லி பல்கலைக் கழகத்தில் நடந்த தேர்தலில் பாஜக மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
அங்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்களின் மூலமாக மோசடி நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. எந்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் வாங்கித்தான் தேர்தலை நடத்தியதாக நிர்வாகம் கூறியது. அதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
பிறகு தனியாரிடம் வாடகைக்கு வாங்கித்தான் தேர்தலை நடத்தியதாக சொல்லப்பட்டது. அதற்கும் தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தனியாரிடம் வாக்கு எந்திரங்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவான விதி இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
போக தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மாணவர் போலியான பட்டச் சான்றிதழின் பேரிலேயே தில்லிப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பிரிவில் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
எதற்கானத் தேர்தலாக இருந்தாலும் பாஜகவின் தேர்தல் அணுகுமுறை ஒன்றுதான் போலும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...