Wednesday, January 2, 2019

நாங்கள் ஒன்றிணைவதில் உங்களுக்கும் ....

திருச்சி உழவர்சந்தை மைதானம் சமீபத்தில் சந்தித்த மாநாடுகளில் மூன்று மிக முக்கியமானவை.

மூன்று வண்ணங்களின் மாநாடுகளென அவற்றைக் கொள்ளலாம்.

ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு சித்தாந்தத்தின் குறியீடு.

உண்மையை சொல்வதெனில் இரண்டு மாநாடுகள்தான் மனிதர்கள் கலந்துகொண்ட மாநாடுகள். மற்றொன்று ஆயிரக்கணக்கான நாற்காலிகளும் ஒரு பத்துப் பதினைந்து மனிதர்களும் கலந்துகொண்ட மாநாடு.

முதலில் நடந்தது செம்படை மாநாடு

அதற்கடுத்தது காவி மாநாடு

இறுதியாய் நடந்தது கருஞ்சட்டை மாநாடு

இதற்கு ஊடாக சென்னையை பல மணிநேரம் ஸ்தம்பிக்கவைத்த ஒரு நீலசட்டை பேரணி

சென்னையில் நடந்த நீலசட்டை பேரணியை கண்கூடாகப் பார்த்த சமூக ஆர்வலர் என்று தன்னைத் தானே அர்த்தம் புரியாமல் பிரகடனப்படுத்திக் கொள்ளும் கஸ்தூரி அவர்கள் தனது பயணத்தை சில மணிநேரம் அந்தப் பேரணி முடக்கிப் போட்டதால் கொதித்துப்போய் கொந்தளித்திருந்தார்.

இப்போது மரியாதைக்குரிய தமிழிசையின் முறை. சிவப்பு, நீலம், கருப்பு என்பதெல்லாம் தங்களை ஒருபோதும் தொந்தரவு செய்யமுடியாத வண்ணங்கள் என்று கூறியவர் அத்தோடு நிறுத்தி இருக்கலாம். அப்படி நிறுத்தி இருந்தால் அவர் எப்படி அவராக இருக்க முடியும்?

சிவப்பு என்பது இடதுசாரிகளின் நிறமல்லவாம். அது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் நிறமாம். கருப்பும் நீலமும் அய்யப்பனின் வண்ணமாம்.சகோதரி தமிழிசை அவர்களே,

மேல்மருவத்தூர் எவ்வளவு காலம் தாயே? திரு பங்காரு அடிகளார் ஆசிரியப் பணியில் இருந்து எப்போது தன்னை விடுவித்துக் கொண்டார்? 1989-90 வாக்கில் அவர் தான் ஆசிரியராய்ப் பணியாற்றிய காலத்தில் தமக்கு வரவேண்டிய நிலுவை பணப்பலனைக் கோரி விண்ணப்பித்தார் என்று நினைக்கிறேன். அதைக்கூட பிறகு பார்க்கலாம். எப்போது இருந்து அந்தக் கோவிலுக்கு செஞ்சட்டை பக்தர்கள் வரத் தொடங்கினார்கள் என்பதையும் எல்லாம் பிறகு பார்க்கலாம்.

சிவப்பு ஆதிபராசக்தியின் நிறம் என்கிறீர்கள். ஆமாம் என்றே கொள்வோம். இது தெரிந்த உங்களுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் கருவறை வரைக்கும் தங்களது மாதவிடாய் காலத்திலும் பெண்கள் நுழையலாம், வழிபாடு நடத்தலாம் என்ற உண்மை தெரியாமலிருக்கும் என்று நான் நம்பவில்லை. ஒருக்கால், உங்களுக்கு அந்த உண்மை தெரியாது என்றால் அதுகுறித்து விசாரித்துவிட்டு வந்து பேசுவதென்றாலும் அதுவரைக்கும் காத்திருக்கிறேன்.

இது ஆன்மீக பூமி என்கிறீர்கள், சரி அப்படியேகூட இருக்கட்டும். சிவப்பு என்பது கம்யூனிஸ்டுகளின் நிறமல்ல அது எங்கள் ஆதிபராசக்தியின் நிறம் என்கிறீர்கள், சரி, அதுவும் அப்படியே இருக்கட்டும்.

இது ஆன்மீக பூமி எனில், குறைந்தபட்சம் சிவப்பு, நீலம், கருப்பு சட்டைக்காரர்களைத் தவிர மற்ற அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்பதுதானே எதார்த்தமாக இருக்க வேண்டும்.

பிறகு ஏன் தாயே சபரிமலைக்கு பெண்கள் வருதற்கு இத்தனை கோவப்படுகிறீர்கள்?

கருப்பு சிவப்பு நீலம் ஆகியவை வேறு வேறு வண்ணங்களாக இருக்கலாம். எங்களுக்குள் சின்னச் சின்னதாய், விடுங்கள், கொஞ்சம் பெரிதாகக்கூட பிரச்சினைகள் இருக்கலாம். அதன்பொருட்டு எங்களுக்குள் பலநேரம் சண்டைகூட உண்டுதான். அதை எல்லாம் மறுக்கவில்லை.

ஆனால் ஒடுக்கப்பட்ட உழைக்கிற மக்களின் உரிமைக்கான போராளிகளின் வண்ணங்கள் அவை. நீங்கள் சொன்னதுபோல் வெறும் சட்டைகளின் நிறங்கள் அல்ல.

ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை என்பது எங்களது பொதுத்திட்டம்.

ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் பிரச்சினைகுறித்த புரிதலில், அவற்றிற்கான காரணங்களைக் கண்டடைவதில், அவற்றிற்கெதிரான போராட்ட செயல்திட்டத்தில், நடைமுறைகளில் எங்களுக்குள் பிரச்சினைகள் இருக்கலாம்.

இருக்கலாம் என்ன இருக்கிறதுதான்.


உட்கார்ந்துபேசி ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தோடு எங்களால் எப்போது வேண்டுமானாலும் களத்திற்கு தயாராகிவிட முடியும்.

சிவப்பு தனியாக, நீலம் தனியாக, கருப்பு தனியாக என்று நாங்கள் தனித்தனியாக களமேறும்போதே இவ்வளவு பதட்டப்படுகிறீர்களே தமிழிசை, ஒன்றாய் சேர்ந்து களத்திற்கு வந்தோம் எனில்….

வண்ணத்தில் சட்டை அணிவதற்கும் ஏற்றுக்கொண்ட வண்ணமாகவே, அதன் சித்தாந்தத்தோடு கரைவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது சகோதரி.

நாங்கள் இரண்டாவது ரகம்

உண்மையை சொன்னால் நீங்களே காவி அல்ல . காவி உங்களை ஒருபோதும் முழுமையாய் ஏற்காது சகோதரி.

நீங்கள் எங்கள் சகோதரி என்றும் உங்களுக்காகவும்தான் போராடுகிறோம் என்றும் உங்களுக்கு நன்கு புரியும் என்பதை தெரிந்தேதான் உங்களிடம் அந்த உண்மையை திரும்பத் திரும்ப  சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

என்ன செய்வது,

தூங்குகிற மாதிரி நடிப்பவர்களையும் பேட்டி குடுப்பவர்களையும் ஒன்றும் செய்ய முடியாது.

உங்கள் பொறுப்பு பறிக்கப்படும் நாளில் தெரியும் எல்லாக் காவியும் காவி அல்ல மேல்தட்டுக் காவியே காவி என்ற உண்மை.

நாங்கள் ஒன்றிணைவதில் உங்களுக்கும் பங்கு உண்டு தமிழிசை.

அந்த வகையில் உங்களுக்கு எங்களின் நன்றி        

#சாமங்கவிந்து ஒரு மணி இருபத்திஒன்பது நிமிடம்
01.01.2019

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...