Thursday, June 27, 2019

65/66 காக்கைச் சிறகினிலே நவம்பர் 2018


பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு திரு வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு பலஆயிரம்கோடி ரூபாய் செலவில் சிலை வைக்கிறது. அதைக் கடுமையாக எதிர்கொள்ளும் காங்கிரஸ் கட்சி “RSS அமைப்பைத் தடை செய்த முன்னாள் உள்துறை அமைச்சர் திரு வல்லபாய் பட்டேல்” என்ற  குறிப்போடு அவரது சிலையை நிறுவ முடியுமா? என்று நக்கலாக கேட்டிருக்கிறது.

கேள்வி நக்கலாக இருந்தாலும் செய்தி உண்மைதான்.

1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம்நாள் கோட்சே காந்தியாரை கொலை செய்கிறார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடந்த இரண்டு விஷயங்களை நாம் தொகுத்துப் பார்ப்பது அவசியம்.

1)   காந்தியாரை ஒரு RSS அமைப்பைச் சார்ந்த ஒருவர் கொலை செய்தார் என்பதற்காக அந்த அமைப்பைத் தடை செய்வதால் ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை என்பதால் அந்த அமைப்பைத் தடை செய்வது தேவையற்றது என்று அறிக்கை விடுகிறார் தந்தை பெரியார்.
2)   காந்தி கோட்சேயினால் கொலை செய்யப்பட்டதன் காரணமாக தனக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக வேறு  வழியே இல்லாமல் RSS அமைப்பைத் தடை செய்கிறார் அன்றைய உள்துறை அமைச்சர் திரு வல்லபாய் பட்டேல்

கோட்சே சுன்னத் செய்துகொண்டிருந்தார். இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அந்த இரண்டு அடையாளங்களின் உதவியால் காந்தியாரைக் கொன்றது ஒரு இஸ்லாமியர் என்று நிறுவ அவரது அமைப்போ அல்லது கோட்சே தன்னளவிலோ முடிவெடுத்திருந்தனர் என்று உணர முடிகிறது. காந்தியை ஒரு இஸ்லாமியர் கொலை செய்தார் என்று நிறுவுவதன் மூலம் இஸ்லாமியர்களின்மீது வெறுப்பையும் பகையையும் ஏற்படுத்தி அவர்களை இந்தியாவைவிட்டு அப்புறப்படுத்திவிட வேண்டும் என்பது அவர்களது நோக்கம். இந்த திட்டத்தில் அவர்கள் தோற்றுப்போய் அவர்கள் அம்பலப்பட்டு நின்றார்கள். 

காந்தியாரை ஒரு மராத்தியப் பார்ப்பனர் சுட்டுக் கொன்றார் என்ற செய்தி காட்டுத் தீயென பரவுகிறது. நாடே கொந்தளித்து நிற்கிறது. மக்கள் சுட்டுக்கொன்ற கோட்சேமீதுள்ள கோவத்தை பார்ப்பனர்கள்மீது திருப்புகிறார்கள்.

நாடு முழுவதிலும் பார்ப்பனர்கள் தாக்கப்படுகிறார்கள். அக்ரஹாரங்கள் தரைமட்டமாக்கப்படுகின்றன. மஹாராஸ்ட்ரா மாநிலத்தின் அன்றைய உள்துறை அமைச்சர் கிளர்ச்சியைக் கடுப்படுத்த இயலவில்லை என்று சொல்லும் அளவிற்கு பார்ப்பனர்கள்மீதான கோவம் மக்களிடம் இருந்திருக்கிறது.

பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதவருக்குமான இடையேயன போரட்டமே அரசியலின் மையமாக இருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் பார்ப்பனர்கள் எவரும் தாக்கப்படவில்லை. அக்ரஹாரங்கள் எதுவும் தமிழ்நாட்டில் சேதப்படவில்லை. எழுந்த கொந்தளிப்பு சுளுவில் கட்டுக்குள் வருகிறது.   

காரணம் தந்தைப் பெரியார்.

காந்தியார் கொல்லப்ப ட்ட  அடுத்தநாள் வானொலியில் கீழ்வருமாறு உரையாற்றினார் தந்தை பெரியார்.

“இப்படிப்பட்ட பரிதாபகரமான முடிவானது நமக்கு ஒரு படிப்பினையாகி, இப்படிப்பினை மூலமாவாவது இந்த நாட்டில் அரசியல் பேராலும் இன இயலின் பேராலும் கருத்து வேற்றுமைக்காக கலவரங்களும், கேடுகளும், நாசங்களும், மூடநம்பிக்கைப் பிடிவாதங்களும் ஏற்படுவதற்கு சிறிதும் வாய்ப்பு இல்லாமல் அறிவுடமையோடு வாழ்பவர்களாக மக்கள் நடந்து கொள்வார்களேயானால் அது பரிதாபகரமானதும் வெறுக்கத்தக்கதுமான முடிவை எய்திய அந்தப் பெரியாருக்கு நாம் காட்டும் மரியாதையும் நன்றியறிதலும் ஆகும். திராவிட மக்கள் இதையறிந்து எப்படிப்பட்ட நிலையிலும் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்பது எனது விண்ணப்பம்” (தோழர் கி.வீரமணி அவர்கள் பதிப்பித்துள்ள “காந்தியார் கொலை அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நூலின் 5வது பக்கம்)

காந்தியைக் கொன்றது ஒரு துப்பாக்கி என்பதற்காக அதை முறித்துப் போடுவதால் ஒரு பயனும் இல்லை. காரணம் அந்தத் துப்பாக்கியை முறித்துப் போட்டாலும் கோட்சே இருப்பார். அவர் கையில் வெறொரு துப்பாக்கி வதுவிடும்.

சரி, கோட்சேயைக் கொன்றுவிடுவதாகக் கொள்வோம், அதனாலும் பலன் இல்லை. காரணம் இன்னொரு கோட்சேயை அந்த அமைப்பு உருவாக்கிவிடும். சரி, அந்த அமைப்பையே தடைசெய்வதாகக் கொள்வோம். அதனாலும் ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை. காரணம், அந்தக் கோட்பாடு வேறுஒரு அமைப்பை உருவாக்கும்.
ஆகவே RSS அமைப்பைத் தடை செய்வதால் ஒரு பலனும் இல்லை. மாறாக அந்தக் கோட்பாடுகளுக்கு எதிரரான ஒரு கருத்துப் போராட்டமே அவசியம் என்று பெரியார் கூறினார்.

ஆனால், தன்னைத் தற்காத்துக்கொள்வதன் பொருட்டு திரு படேல் RSS அமைப்பைத் தடை செய்தார்.

RSS அமைப்பைத் தடை செய்த திரு படேல் அவர்களுக்கு சிலை எடுக்கும் RSS இன் பிள்ளைகள் RSS அமைப்பைத் தடை செய்வதால் ஒரு பலனும் இல்லை என்பதால் அதைத் தடைசெய்யத் தேவையில்லை என்று கூறிய தந்தை பெரியாரின் சிலகளை சேதப்படுத்த்கிறார்கள்.

இது பார்ப்பவர்களுக்கு விநோதமாகத் தோன்றும். ஆனால் உண்மை வேறு மாதிரியானது.

அமைப்பு உடைந்தால் மறுகட்டமைப்பு செய்துவிட முடியும். ஆனால் கோட்பாட்டை இழந்துவிட்டல் சூனியமாகிப்போவோம் என்கிற உண்மையை அவர்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

அதனால்தான் அமைப்பைத் தடைசெய்யத் தேவையில்லை என்று சொன்ன பெரியாரின் சிலையை உடைக்கிறார்கள். அமைப்பைத் தடைசெய்து கோட்பாட்டை சேதப்படாமல் பார்த்துக்கொண்ட பட்டேல் அவர்களுக்கு சிலைவைத்து கௌரவப் படுத்துகிறார்கள்.

கோட்பாட்டு ரீதியாக நம்மை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. இது அவர்களுக்கு நன்கு தெரியும். எனவேதான் ஒரு பதட்டத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அதன் மூலம் நம்மையும் பதட்டமடைய வைத்துவிட முடியுமா என்று துடியாய் துடிக்கிறார்கள். அதற்காக எதை செய்தவது நம்மை கோவப்படுத்தி நம்மை கோட்பாட்டுத் தளத்திலிருந்து தெருவிற்கு இழுத்துவர முயற்சி செய்கிறார்கள்.

திரு H.ராஜா ஒன்றும் நிதானமிழப்பவரோ, பதட்டத்தில் உளறுபவரோ அல்ல. அவர் பதட்டப்படுகிற மாதிரியும் உளறுகிற மாதிரியும் நடிக்கிறார். அவர்கள் இப்படி  எதையாவது உளறிக் கொண்டிருப்பதுகூட இதற்காகத்தான்.

அவர்கள் நமது அடையாளங்களை சிதைப்பது கோட்பாட்டுத் தளத்திலிருந்து நம்மை நகர்த்துவதற்காகவே. நாம்கூட அந்த வலையில் அவ்வப்போது விழுந்து விடுகிறோம் என்பதுதான் சோகத்தினும் சோகம்.

நம் தோழர்களிடம் நமக்கு ஒரு கோரிக்கை உண்டு

நாம் கோட்பாடுகளோடு மட்டுமே சமர் செய்வோம்.
*******************************************************    

எந்த மதத்தோடும் நமக்கு சம்மதம் இல்லை. ஆனால் கடவுள் என்று ஒருவன் இருப்பானேயானால் அவன் தனது குழந்தையாகிய பெண் தன்னை தரிசிக்க வருவதை வரவேற்கவே செய்வான்.

நாளையே கிறிஸ்தவ ஆலயத்திற்குள்ளோ மசூதிக்குள்ளோ பெண்கள் நுழைவதற்கு தடை ஏற்பட்டு அதற்கு எதிராக போராட்டம் வெடிக்குமானால் நிச்சயமாக நாம் அவர்களோடு இணைந்து சமர் செய்வோம்.

”சபரிமலை பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை இயற்கயாகவே ஏற்றுக்கொள்ள முடியாது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வை நீதிமன்றம் தனது தீர்ப்பில் கவனத்தில் கொள்ளவில்லை. பாரம்பரியத்தைக் கடைபிடிக்கும் ஏராளமான பெண்களின் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் அமைதியின்மையை எற்படுத்தி உள்ளது” என்று RSS அமைப்பின் தலைவர் திரு மோகன் பகவத் கூறியிருக்கிறார்.
ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சபரிமலைக்கு எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுத்த ஐந்து பெண் வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவில் முக்கியமானவர் திருமதி பிரேரணகுமாரி. இவரது கணவர் திரு சிதார்த் சம்பு பரிவார் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகிப்பவராக இருக்கிறார். இந்த உண்மையை இவர் மறுக்கவும் முயற்சி செய்தார். எனினும் தீர்ப்பு வந்தபோது நீதிபதி திருமதி இந்திரா மல்கோத்ராவின் தீர்ப்போடு தாம் உடன்பட்டாலும் அரசியல் ஆசன அமர்வின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெரும்பான்மைத் தீர்ப்பை தாம் மதிப்பதாகவும் அவர் “பார் அண்டு பெஞ்ச்” இதழில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

வழக்கை இவர் தொடுத்தாரா இல்லையா என்பது வேறு விஷயம். அதைத் தனியாகப் பேசலாம். ஆனால் இந்தத் தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று சங்பரிவார் அமைப்போடு நெருங்கிய தொடர்பு கொண்ட இவர் கூறுகிறார்.   

“பாரம்பரியம்மிக்க பெண்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை” என்கிறார் திரு மோகன் பகவத். பரிவார் பாரம்பரியம்மிக்க திருமதி பிரேரணகுமாரி இதை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்கிறர்”

சில வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்திலிருந்து இந்துவாக மாறிவிட்ட ரெஹானாவை வைத்து அரசியல் செய்ய முயற்சித்து அம்பலப்பட்டு நிற்கிறார்கள். ரெஹான VHP அமைப்பின் துணைப்பிரிவான “சூர்ய காயத்திரியின்” உறுப்பினர் என்ற உண்மையை மறைத்து சதிராடிப் பார்க்கிறார்கள்.

திரு மோகன்பகவத் தலைவராக இருக்கக்கூடிய RSS அமைப்பின் பொதுச்செயலாளரான  திரு பையாஜி ஜோஷி,

“கோவில்களில் பெண்களைத் தடை செய்ததுபோன்ற அநீதியான மரபுகள் மாற்றப்பட வேண்டும். இதுமாதிரி முக்கியமான விஷயங்களை அரசியலாக்கப்படக் கூடாது. பெண்கள்  மற்றும் ஆண்கள் பாகுபாடின்றி கோவில்களில் நுழைய RSS அனுமதிக்கிறது.”

பெண்கள் கோவில்களில் நுழைய RSS அனுமதிக்கிறது என்ற RSS  அமைப்பின் பொதுச்செயலாளரது கருத்தை பரிசீலிக்க வேண்டுமாய் என் அன்பிற்குரிய பக்தர்களைக் கேட்டுக் கொள்கிறேன். 
************************************************ 

திரு H.ராஜா அவர்கள் தான் பதட்டத்தில் நீதிமன்றத்தை திட்டிவிட்டதாகவும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருவதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

எனில், தான் அப்படிப் பேசவே இல்லை என்று கூறியது பொய் என்றாகிறது.

விடுங்கள் அவர் என்றைக்கு உண்மையைப் பேசியிருக்கிறார். 
*********************************** 

Friday, April 12, 2019

இதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி

“ரபேல் கொள்முதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று ஆவணாங்களின் அடிப்படையில் ஆய்வுசெய்து தீர்ப்பளிக்க வேண்டியதும் இதுகுறித்து அரசாங்கத்தின் தரப்பில் எழுப்பப்படும் ஆட்சேபனைகளை தள்ளுபடி செய்யவேண்டியதும் முறையென்று கருதுகிறோம்”
இப்படி சொல்லி இருப்பது எதிர்கட்சிகளை சேர்ந்த யாரோ ஒரு தலைவரல்ல,
ஏதோ ஒரு எதிர்க்கட்சியின் தலைவர் இப்படிக் கூரியிருந்தாலும் அதுகுறித்து கவனம் குவிக்க வேண்டும்தான். ஆனாலும் தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம் என்று நகர்ந்து விடலாம்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு ரஞ்சன் கோகாய் அவர்கள் இப்படி கூறியிருக்கிறார் என்ற செய்தியை 11.04.2019 நாளிட்ட தீக்கதிர் கூறுகிறது
இதே உச்ச நீதிமன்றம் இதே வழக்கில் ரபேல் ஊழல் வழக்கில் “ரபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று 14.12.2018 அன்று தீர்ப்பளித்திருந்தது.
அந்த வழக்கின்போது ரபேல் கொள்முதல் குறித்த அனைத்து விவர அறிக்கையை மத்திய தணிக்கை குழுவிடமும், பொதுக்கணக்குக் குழுவிடமும் பகிர்ந்து விவாதித்திருப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் கூறியது. இதை நம்பி ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் 14 ஆம்தேதி ரபேல் கொள்முதலில் முறைகேடு நடக்கவில்லை என்று தீர்ப்பளித்தது.
பாஜக வானத்திற்கும் பூமிக்குமாக குதித்தது. ராகுல் பொய் சொல்லிவிட்டார். எனவே அவர் பதவி விலகவேண்டும் என்றெல்லாம் சொன்னது. லோ சுகர் இருப்பவரும் ஒரே நாளில் சர்க்கரை நோய்க்கு இரையாகும் அளவு இனிப்புகளை உண்டார்கள்
அடுத்தநாளே பொதுக்கணக்குக் குழுவின் தலைவரான திரு மல்லிகார்ஜுனே பொதுக்கணக்குக் குழுவிற்கு அப்படி எந்த ஒரு அறிக்கையையும் மத்திய அரசு கொடுக்கவில்லை என்ற உண்மையை போட்டு உடைத்தார்.
சிக்கலில் சிக்கிக்கொண்ட மத்திய அரசு, ”மத்தியத்தணிக்கை குழுவிற்கும், பொதுக்கணக்குக் குழுவிற்கும் ரபேல் கொள்முதல் குறித்த விவர அறிக்கையைத் தர இருக்கிறோம் என்றுதான் சொன்னோம். தந்துவிட்டோம் என்று நாங்கள் சொன்னதாக உச்சநீதிமன்றம் தவறாகப் புரிந்து கொண்டது” என்று சொன்னது.
இந்த சூழலில் இந்து பத்திரிக்கை ரபேல் விவகாரத்தில் அரசு ரிலையன்சுக்கு ஆதாரவாக எடுத்துள்ள முறைகேடான செயல்பாடுகள் குறித்த அரசு ஆவணாங்களை வெளியிட்டது.
ஆவணங்களைத் திருடிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டியது அரசு.
இதைக்கூட பாதுகாக்க முடியவில்லையா? என்று கேட்டது உச்சநீதிமன்றம்.
நகலெடுத்திருக்கிறார்கள் அவ்வளவுதான் என்று ஜகா வாங்கியது அரசு.
இதுகுறித்து திரு பிரஷாந்த்பூஷன், யஷ்வந்த் ஷின்ஹா, M.L.ஷர்மா ஆகியோர் சீராய்வு மனு கொடுத்திருக்கிறார்கள்.
நீதியரசர்கள் திரு ரஞ்சன் கோகாய், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் அந்த வழக்கு வருகிறது. அதனை விசாரனைக்கு ஏற்கக்கூடாது என்று மத்திய அரசு வாதாடி இருக்கிறது. அதை நிராகரித்துதான் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்கள் நீதியரசர்கள்
வழக்கறிஞர் அருண்ஷோரி அவர்கள் ரபேல் முறைகேடுகள்ளை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என்கிறார்
நீங்கள் விசாரிக்கவே கூடாது என்கிறீர்கள்.
ஒரு மிகப்பெரிய முறைகேடு குறித்த விசாரனையை எதிர்கொள்ள பயந்து விசாரிக்கவே கூடாது என்ற உங்களது பதட்டம் கலந்த கோரிக்கையே உங்கள்மீதான சந்தேகத்தை வலுவாக்குகிறது.
இதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி
பின்குறிப்பு: திரு மோடி அவர்களுக்கு எதிரான வாக்கை என்ன செய்வாய் என்று கேட்டால் இடதுசாரிகள் இணைந்திருக்கும் திமுக கூட்டணிக்களிப்பேன் என்பேன்
#சாமங்கவிந்து ஒருமணி ஏழு நிமிடம்
11.04.2019
#2019தேர்தல்

Wednesday, March 6, 2019

“சோர்வது குற்றம்”

என்ன அங்கீகாரம் இருக்கு நமக்கு?
எதற்கிந்த வேலைகளை விடாமல் செய்ய வேண்டும்?
என்று அவ்வப்போது சோர்வது வாடிக்கைதான். என்றாலும் ஒருபோதும் இந்த நேரத்தை பணம் பார்க்க செலவிட்டிருக்கலாமே என்று நினைத்ததே இல்லை.
சோர்வது குற்றம் என்பதையும் தகுதிக்கு மீறியே நாம் அங்கீகரிக்கப்படுகிறோம் என்பதையும் கடந்த இரண்டுமாத நிகழ்வுகள் உணர்த்தின.
கருஞ்சட்டைப் பேரணிக்காக திருச்சி வந்திருந்த தம்பி கரு.பழனியப்பன் (Karu Palaniappan) என்னை சந்திக்க விரும்பினார் என்பதையும் என்னுடைய “சாமங்கவிய” மற்றும் “சாமங்கவிந்து” ஆகியவைகுறித்து சன்னமாய் சிலாகித்தார் என்ற தகவலையும் இன்னொரு தம்பி Suresh Kathan கூறியபோது எனது ஆதங்கத்தின்மீது சம்மட்டி ஒன்று செல்லமாகத் தட்டுவதை என்னால் உணர முடிந்தது.
சுரேஷோடு உரையாடியபோது,
ஒருமுறை இடப்பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியைவிட்டு வெளியேறி ஆறு இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியபோதும் தாம் போட்டியிடாத 34 தொகுதிகளில் (புதுச்சேரி உள்ளிட்டு) திமுகவையும் அதன் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரிப்பதாக முடிவு செய்ததையும் சொன்னபோது சன்னமாய் வியந்தான்.
அந்த ஆறு தொகுதிகளுக்குள் சிலவற்றில் (எத்தனை என்று சரியாகத் தெரியவில்லை) பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தியபோது அந்தத் தொகுதிகளில் இருந்து தனது வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கட்சி விலக்கிக் கொண்டதையும், அப்படி விலகிய வேட்பாளர்களில் ஒருவர்தான் சுரேஷ் காத்தான் உள்ளிட்ட தோழர்கள் வம்படியாகவும் மூர்க்கமாகவும் விமர்சித்த டி.கே.ரெங்கராஜன் என்பதை சொன்ன்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக வியந்தான்.
ஜெயலலிதா அம்மையார் ஒன்னேமுக்கால் லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தபோது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து நியாயம் காத்தவர் ரெங்கராஜன் என்று சொன்னபோது,
“இவை எல்லாம் உன்ன மாதிரி ஆளுங்க ஏன் எங்களுக்கு சொல்லல. சொல்லாதது உங்க குற்றமல்லவா?”
என்றபோது சம்மட்டி ஒரு சின்னத் துளி பிசிறை என் ஆதங்கத்தில் இருந்து தகர்த்தது.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் எல்லாக் கிளைகளிலும் AIIEA ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக ஒருநாள் வ்வாயிற்கூட்ட ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் ஆனால் LIC யை தனியாருக்கு தாரை வார்க்க அரசுகள் முயன்றபோதெல்லாம் போராடிய AIIEA உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக நாம் போராடாமல் இருந்தது குற்றமல்லவா? என்று நான் கேட்டதை சுரேஷ் தனது பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததை தோழர் Marx Pandian கூறியபோது நியாயத்தை, உண்மையை சொன்னால் இளைஞர்கள் பற்றிக்கொள்ளவே செய்கிறார்கள் என்பது புரிந்தது.
இரண்டாவதாக ஒரு பெருந்துகள் ஒன்றினை என் ஆதங்கத்தில் இருந்து தெறிக்க வைத்திருந்தது சம்மட்டி.
புதுகை புத்தகத் திருவிழாவில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க உரைகளுள் எனது உரையும் ஒன்று என்று பெருந்தன்மையோடு கூறியிருந்தார் தோழர் Kasthuri Rengan
எனது ஆதங்கத்தில் ஒரு பெரும் பிளவை ஏற்ப்படுத்தியிருந்தது சம்மட்டி
சென்றமாதம் 65/66 பக்கங்களை காக்கைக்குத் தர முடியவில்லை. அப்படியொரு கைவலி. ஒரு கையை மேலே தூக்குவதற்கு இன்னொரு கையின் உதவி தேவைப்பட்டது.
அப்போது தோழர் ஆ.சிவசுப்பிரமணியம் அவர்கள் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை தோழர் முத்தையா எனக்கு அனுப்பி இருந்தார். அதில்,
“ எட்வினது பக்கங்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”
என்றிருந்தது.
எனது ஆதங்கம் சுக்கு நூறாய் உடைந்திருந்தது.
சோர்ந்தது குற்றம்.
மன்னித்துவிடுங்கள் தோழர்களே.
என்னைப்போலவே ஆதங்கத்தில் உழலும் தோழர்களே உங்கள் ஆதங்கத்தில் நியாயம் இருக்கவே செய்யும். ஆனாலும் சொல்கிறேன்,
“சோர்வது குற்றம்”
#சாமங்கவிய சரியாக இரண்டுமணி நேரம்
24.02.2019

அய்யா பயந்துட்டார் தெரியுமா?”

மேல்நிலை முதலாமாண்டு குழந்தைகளுக்கு இறுதித் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. நான்கு அறைகள்.
ஒருபக்கம் மேல்நிலைப் பொதுத் தேர்விற்கான பறக்கும் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்று நண்பர்கள் அதற்கான வழிகாட்டுதல் கூட்டத்திற்காக சென்றுவிட்டனர்.
தமது தந்தை இறந்துவிட்டதால் ஒரு நண்பர் விடுப்பில் இருக்கிறார்.
இந்தநிலையில் இன்னும் ஆறு ஆசிரியர்களை தேர்வறைக் கண்காணிப்பிற்கான வழிகாட்டுதல் கூட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு வந்துவிட்டது.
எப்படி பள்ளியை, திருப்புதல் தேர்வை, நடத்துவதென்று புரியவில்லை.
இதுமாதிரி சூழ்நிலையில் திரு நரசிம்மராவ் அவர்களேகூட வெடித்துவிடக்கூடும்.
இறுகிய முகத்தோடு ஏற்பாடுகளை செய்வதற்காக அறையைவிட்டு வெளியே வருகிறேன். ஒரு அறையை செல்வம் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவனிடம் செய்தியை சொல்லலாம் என்று அறக்குப் போகிறேன். உள்ளே நுழைகிறபோது சிரித்துக் கொண்டே, “இது என்ன எழுதி இருக்குன்னு பாருங்க சார்”.
அவள்தான் வகுப்பில் முதல் குழந்தை.
“என்ன அபி எழுதி இருக்க?”
பேப்பரைப் பிரித்துக் காட்டுகிறாள்.
“என் சாவுக்கு எங்க அய்யாதான் காரணம்” என்று கொட்டை எழுத்தில் எழுதி இருக்கிறாள். அதிர்ந்துபோய் நிற்கிறேன். அவளோ கெக்கபிக்க என்று சிரிக்கிறாள்.
ஒன்றும் இல்லை,
“தண்ணீர் தொட்டி சென்று நீர் அருந்திவர அனுமதி கேட்டிருக்கிறாள். “பேசாம எழுது பாப்பா” என்று மறுத்திருக்கிறான். அவனது செல்லம் அவள். சிரித்துக் கொண்டே ”உடலைனா தாகத்திலேயே செத்துவிடுவேன்” என்று மிரட்டி இருக்கிறாள். “செய்” என்று சிரித்துக் கொண்டே சொல்லி இருக்கிறான்.
இப்படி எழுதிவிட்டு,
“நான் எழுதி வச்சுட்டேன். தாகத்துல செத்துட்டேன்னா HM சார் உங்களப் புடிச்சு போலீஸ்ல கொடுத்துடுவார்”
அந்த நேரம் பார்த்து குறுக்க போயிருக்கேன்.
“அய்யாவ புடிச்சு போலீஸ்ல கொடுப்பீங்கதானே?”
”நீயாச்சு உங்க அய்யாவாச்சு. ஆள விடுங்க புள்ளைங்களா” என்றாவாறு போன வேலையை மறந்தவானாக திரும்பிவிட்டேன்.
மதியம் ரவுண்ட்ஸ் போகும்போது அவளைப் பார்க்கிறேன்.
“என்னமோ சவடால் எல்லாம் விட்ட. கொஞ்சம்கூட வெக்கம் மானமே இல்லாம உக்காந்துருக்க”
“நீங்கதானே அன்னிக்கு ப்ரேயர்ல ‘மானம் கருதக் கெடும்’னு சொன்னீங்க. போக அய்யா பயந்துட்டார் தெரியுமா?”
”எனக்கா?”
“உங்களுக்கு வர்ஷினியே பயப்பட மாட்டா. எங்க அய்யா பயப்படுவாராக்கும். அவர் போலீசுக்கு பயந்துட்டு என்ன தண்ணி குடிக்க அனுப்பிட்டாரு தெரியுமா?”
சிரித்தபடியே நகர்கிறேன்.
இடைவேளையில் அறைக்கு வந்த செல்வத்திடம் “பயந்துட்டியாம்ல, சொன்னா”
“நானா?, ரவி தண்ணி கேட்டான். அனுப்பிட்டேன். பாவமா பார்த்தா. தொலையறானு அனுப்பிட்டேன். பயந்துட்டேன்னு சொன்னாளா? நாளைக்கு வச்சுக்கிறேன்”
சிரித்தேன்.
எங்க பள்ளி இப்படித்தான்.
ஊருல எங்க….?
#சாமங்கவிய 18 நிமிடங்கள்
28.02.2019

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...