Tuesday, March 21, 2017

65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2017

தோழர் முத்தையாவோடான உரையாடல்களில் ஏராளம் கிடைக்கும். அதுவும் ரேஷன் குறித்த செய்திகளை அவர் அக்கறையோடு பகிரும்போது வியப்பின் உச்சிக்கே நான் போவது வழக்கம். ரேஷன்கடை ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பில் இருந்தவர் என்பதால் அந்த ஊழியர்களின் சிரமங்களையும் நன்கு அறிந்து வைத்திருப்பவர். அவரிடம் குவிந்து கிடக்கும் இத்தகைய தகவல்களை எப்படி இந்த சமூகத்திற்கு கடத்துவது என்பது குறித்து அவ்வப்போது யோசிப்பது உண்டு.

அவர் தேர்ந்த பேச்சாளரும் அல்ல. எப்போதும் எழுதுபவரும் அல்ல. பிறகெப்படி அவரது கருத்துக்களை கொண்டுபோய் சேர்ப்பது? இரண்டு வாய்ப்புகள் இருப்பதாக படுகிறது. இயல்பாக அவரோடு உரையாடும்போது கிடைப்பவற்றை எழுதித் தொகுப்பது ஒன்று. அவரோடான நீண்ட நேர்காணல்கள். ஆனாலும் நிறைவேறாமல் போகும் என் எத்தனையோ ஆசைகளுள் இதுவும் ஒன்று.

நேற்று எது எதை சுற்றியோ நகர்ந்துகொண்டிருந்த அவரோடான உரையாடல் இறுதியாக ரேஷன் அரிசியில் வந்து நின்றது.

குடும்ப அட்டைக்கு மாதம் இருபதுகிலோ இலவச அரிசி என்பது ஏன் நபர் ஒன்றுக்கு ஐந்துகிலோ என்றானது? இந்த அரிசி எங்கிருந்து என்ன விலைக்கு வாங்கப்படுகிறது? இந்த அரிசி இன்னும் எவ்வளவு காலத்திற்கு கிடைக்கும்? போன்ற விவரங்களை ஒரு எட்டாம் வகுப்பு மாணவனுக்கும் புரிகிறமாதிரி இருந்தது அவரது விவரனை.

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் இலவச அரிசியை தமிழ்நாடு அரசு எங்கிருந்து என்ன விலைக்கு கொள்முதல் செய்கிறது என்பது நிறையபேருக்கு தெரியாது. விவசாயிகளிடமிருந்து மாநில அரசு நேரடியாக கொள்முதல் செய்வதாகவே பெரும்பான்மையோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  மைய அரசின் தொகுப்பிலிருந்து என்றெல்லாம் சுற்றி வளைக்காமல் புரிகிறமாதிரி எளிமையாக சொல்லிவிடுவதெனில் இந்த அரிசியை மாநில அரசு மத்திய அரசிடம் இருந்து விலைக்கு வாங்கி வருகிறது.

ஒரு கிலோ அரிசி எட்டு ரூபாய் இருபத்தியோரு பைசா என்ற அளவில் வாங்கி வருகிறது. எட்டு ரூபாய் இருபத்தியோரு பைசா என்பதில் போக்குவரத்து கட்டணம், ஏதுக் கூலி இறக்குக் கூலி, ஊதியம், கட்டட வாடகை, மின்சாரக் கட்டணம் எல்லாம் சேராது. இதை எல்லாம் சேர்த்தால் ஒரு கிலோ அரிசி விலை ஒன்பது ரூபாயிலிருந்து பத்து ரூபாய் நோக்கி நகரக்கூடும். ஆக, ஒரு கிலோ அரிசியை சற்றேறக்குறைய  பத்து ரூபாய்க்கு கொள்முதல் செய்துதான் நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ வீதம் அரசு இலவசமாக வழங்கி வருகிறது.

பெரும்பான்மை குடும்பங்களுக்கு இந்த அரிசிதான் வாழ்வாதாரமே. நூறுநாள் வேலை இப்போது நூற்றி ஐம்பது நாட்களுக்கு விரிவு படுத்தப்படும் என்று தற்போது அறிவிப்பு வந்தாலும் நடைமுறையில் எழுபது நாட்கள்தான் வேலை கிடைக்கும். நூற்றி ஐம்பது நாட்கள் என்ற அறிவிப்பிற்குப் பிறகு இன்னும் ஒரு பத்து இருபது நாட்கள் வேலை கூட கிடைக்கலாம். அப்படி கிடைக்கும் வேலைக்கும் ஒழுங்காக நிர்ணயிக்கப் பட்ட கூலி கிடைக்காது என்ற நிலையில் இந்த அரிசிதான் பல குடும்பங்களுக்கு கஞ்சி வார்த்து வந்தது.

தற்போது இந்த அரிசியின் விலையை இருபத்தியோரு ரூபாய்க்கு உயர்த்தியிருப்பதாக கூறிய முத்தையா எனில், ஒருகிலோ அரிசியின் அடக்கவிலை இருபத்தி மூன்று ரூபாயாக மாறும் என்றும் அப்படி மாறும் பட்சத்தில் இந்த திட்டத்தை மாநில அரசு முற்ராக கைவிடவேண்டி வரும் என்றும் கூறினார்.

இந்தத் திட்டம் கைவிடப்பட்டால் எத்தனைக் குடும்பங்கள் பிச்சை எடுக்கிற நிலைக்கு தள்ளப்படும் என்பதை நினைத்துப் பார்த்தால் பதட்டமாக இருக்கிறது.

**********************************************************************************************  

வாடிவாசலுக்குப் பிறகு நெடுவாசல் இப்போது போராட்டக் களமாக மாறியிருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என்று இணைந்து கரம் கோர்த்து வித விதமான போராட்ட வடிவங்களை கையெடுத்து களமேறத் துவங்கியிருக்கிறார்கள்.

என்ன ஆயிற்று புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையோர கிராமமான நெடுவாசலுக்கு?

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்கிற இயற்கை எரிவாயுவை எடுப்பதற்கான அனுமதியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது மத்திய அரசு. இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்தப் பொழுதிலிருந்தே அந்தப் பகுதி மக்கள் அதற்கெதிராக களமாடத் துவங்கி விட்டார்கள். அந்த நிறுவனத்தினர் ஊறுக்குள் அவர்களை நுழைய முயன்றபோது ஊர்ப்பொதுமக்கள் ஒன்று திரண்டு அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.  

இப்போது மாணவர்களும் மண்ணின்மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும் அந்த கிராமத்து பொதுமக்களோடு இணைந்து போராட்டத்தை கை எடுத்திருக்கிறார்கள்.

ஹைட்ரோகார்பன் என்றால் என்ன? நான்கு அலகு ஹைட்ரஜனும் ஒரு அலகு கார்பனும் இணைந்தால் அது ஹைட்ரோ கார்பன். நான்கு அலகு ஹைட்ரஜனும் ஒரு அலகு கார்பனும் இணைந்தால் அதனை மீத்தேன் என்றும் சொல்லலாம். ஆக, ஹைட்ரோ கார்பனும் மீத்தேனும் வேறு வேறு அல்ல.

எனில், ஹைட்ரோ கார்பன் என்பது மீத்தேனே ஆகும். எனில், தஞ்சையில் விரட்டி அடிக்கப்பட்ட மீத்தேன் எரிவாயு திட்டத்தைத்தான் ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டம் என்று பெயர் மாற்றி நெடுவாசலுக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள்.

இதில் விசேஷம் என்ன வென்றால் இதே திட்டத்திற்காக அனுமதி வழங்கப் பட்ட இடங்களுள் ஒன்று புதுச்சேரி மாநிலத்தில் இருக்கிறது. மிக மிக ஆபத்தான கூடங்குளம் திட்டத்திற்கு வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவாய் பேசி நமது எதிர்ப்புக்கு ஆளான திரு நாராயணசாமி அவர்கள் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். மண்ணின் வளத்தை சீரழித்து கால்நடைகளையும் விவசாயத்தையும் சீரழிக்கும் இந்தத் திட்டத்தை தமது மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என்று அவர் கூறுகிறார்.

என்ன செய்வது இதனால் பாதிக்கப் படப்போவது அவர் மக்களாயிற்றே. என்றாலும் அவரை பாராட்டவே செய்வோம்.

பிஜேபி யைத் தவிர ஏறத்தாழ எல்லாக் கட்சிகளும் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம். அவர்கள் எதிர்ப்பைக் களத்தில் காட்ட வேண்டும்.

பொது நலனுக்காக ஒரு கிராமம் தியாகம் செய்யத்தான் வேண்டும் என்பதாக ஒரு பிஜேபி தலைவர் அறிக்கை விட்டிருக்கிறார்.

அதாவது இந்தியா நல்லா இருக்கனும்னா தமிழ்நாடு செய்தாக வேண்டும், அப்படித்தானே?

***************************************************************************  

“நான் கணக்குல பாஸாயிட்டா இவனுக்கு மொட்டை போடுகிறேன்” என்று பள்ளிக் குழந்தைகள் விளையாட்டாக வேண்டிக் கொள்வதுண்டு. ஆனால் ஒருபோதும் அது சாத்தியப் படாது.

பெத்தப் புள்ளைங்க ரெண்டு பேருக்கு மொட்டை அடித்தபிறகு ஒத்தைப்படைக்கு இன்னும் ஒருஆள் தேவை என்றால் பெத்தவள் கணக்கிற்காக பூமுடி எடுத்து கணக்கை சரி செய்கிற காலம் இது.

ஆனால் தன் வேண்டுதல் நிறைவேறியதற்காக அரசு கஜானாவிலிருந்து ஐந்து கோடியை செலவு செய்து தங்க ஆபரணங்களை ஏழுமலையானுக்கு வழ்ங்கி மகிழ்ந்திருக்கிறார்.

இதில் கடவுள், மதம், பக்தி என்கிற எதற்குள்ளும் நாம் போகவில்லை. இவை எல்லாவற்றையும் மறுப்பதற்கான உரிமை நமக்கு உண்டு. அதேபோல இவற்றை ஏற்கிற யாருடைய உரிமையிலும் தலையிடுகிற உரிமை யாருக்கும் இல்லை.

ஒரு அரசு ஆலயத்திற்கு செலவு செய்வதில்கூட நமக்கு பிரச்சினை இல்லை. இங்கு எழுகிற பிரச்சினையே வேறு.

தனித் தெலுங்கானா மாநிலம் அமையுமானால் ஏழுமலையானுக்கு தங்க நகைகளை காணிக்கையாக செலுத்துவதாக திருசந்திரசேகர் வேண்டிக் கொண்டிருக்கிறார். தனது வேண்டுதல் பலித்த நிலையில் ஏழுமலையானுக்கு காணிக்கையை செலுத்தியிருக்கிறார். இதில் தலையிடுகிற உரிமை யாருக்கும்போலவே எனக்கும் இல்லை. ஆனால் இவரது சொந்த வேண்டுதலுக்காக தன் சொந்தக் காசை செலவு செய்திருந்தாலோ அல்லது குறைந்த பட்சம் கட்சியின் கணக்கிலிருந்து காசெடுத்து செலவு செய்திருந்தாலோ இதில் எந்தப் பிரச்சினையும் எழுவதற்கு வாய்ப்பில்லை.

தனது சொந்த வேண்டுதல் நிறைவேறியமைக்காக அரசு கஜானாவிலிருந்து ஐந்து கோடியை செலவு செய்திருப்பது குற்றம்தான்.

இப்பவும் சொல்கிறேன் நேர்த்திக் கடனை செலுத்தியது சரியா தவறா என்பதல்ல இங்கு பிரச்சினை. யார் காசில் என்பதே.

********************************************************     

  

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...