Tuesday, March 21, 2017

ஒருபோதும் அனுமதியோம் நீதியரசர்களே

”வேதனையான மௌனம் வெகுகாலம் நீடித்ததால் கவலை தரக்கூடிய தகவல்களை மேடையேற்ற வேண்டியுள்ளது” என்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் சொத்து குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளனர். உண்மை நிரூபனமானபின்பும் மிக நீண்ட காலம் அதை வெளிப்படுத்த முடியாமல் நீதிமன்றத்தையே சிலரால் மௌனிக்கச் செய்ய முடிகிறது என்பதைத்தானே நீதியரசர்கள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்தவராய் ஆகிய இருவரின் வேதனை கலந்த இந்த வார்த்தைகள் நிரூபிக்கின்றன.

அவ்வளவு கால தாமதமா? நீதியரசர்களே இப்படி வேதனை கொள்ளுமளவிற்கு தங்களுக்கு சாதகமாக நீதிமன்றத்தை தங்களது செல்வாக்கால் மௌனப்படுத்த முடியுமா? முடியும், முடிந்திருக்கிறது என்பதைத்தான் செல்வி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சொல்கிறது.

ஆமாம், கீர்த்தனா பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தொடரப்பட்ட வழக்கு இது. அவளுக்கு பதினேழு வயது பூர்த்தியாகப் போகும் சூழலில் தீர்ப்பு வந்திருக்கிறது. இதற்கிடைப்பட்ட காலத்தில் இப்போது அந்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் தமிழகத்தின் முதல்வராக பத்து ஆண்டுகளுக்கும் மேல் இருந்திருக்கிறார். முதல்வராக இருந்து கொண்டே இந்த வழக்கை  சந்தித்திருக்கிறார். கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி அவரது பதவியை அந்த வழக்கை இழுத்தடிப்பதற்காகவும் செயலிழக்கச் செய்வதற்காகவும் பயன்படுத்தியிருக்கிறார். இடையில் அதில் அவருக்கு கொஞ்சம் வெற்றியும் கிடைத்திருக்கிறது.

அவர் குற்றவாளி என்றும் அதற்காக அவருக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அவர் இறந்து இரண்டு மாதங்களும் ஒன்பது நாட்களும் ஆகியிருந்தது.

எப்படிச் சுரண்டினார்கள், எவ்வளவு சுரண்டினார்கள், அதற்கு எவ்வளவு தண்டனை, அது அதிகமா அல்லது போதாதா என்பதை எல்லாம் நிறைய பேசிவிட்டார்கள். பேசுவதற்கு நிறையபேர் இருக்கிறார்கள்.

தண்டனையை அறிவித்தது சட்டநெறிமுறைகளின்படி. அதில் நாம் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் உணார்ச்சி வசப்படாத நிலையில் இறுக்கமாகவே தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகள் வழக்கத்திற்கு மாறாக வேதனையோடு கொட்டியுள்ள சில விஷயங்கள் மிக முக்கியமானவை.

எத்தனை வழக்குகளைப் பார்த்திருப்பார்கள். எத்தனை தீர்ப்புகளை வழங்கியிருப்பார்கள்.

”அச்சமே இல்லாமல் இவர்கள் பணம் சம்பாதித்து இருக்கிறார்கள். தவறான வழியில் சொத்து சம்பாரிக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல் இவர்கள் சம்பாரித்து குவித்திருக்கிறார்கள். இவர்கள் தந்திரங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது” என்றெல்லாம் நீதிபதிகள் கூறியிருப்பது ஏதோ ஒரு பெரு முதலாளியைப் பார்த்து என்றால்கூட அதில் ஒரு நியாயம் இருக்கும்.  அது தவறு என்றாலும் ஒரு முதலாளி எத்தகைய தகிடுதத்தம் செய்தேனும் சொத்து குவிக்க வேண்டும் என்று நினைப்பதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

ஆனால் அவர்கள் வேதனையோடு குறிப்பிட்டிருப்பது மக்களின் பேராதரவோடு ஆட்சிக்கு வந்த ஒரு மாநிலத்து முதல்வரைப் பார்த்து. மக்களிடத்தில் அவருக்கிருந்த அன்பும் செல்வாக்கும் அத்தனை அலாதியானது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உண்ணாமல் உறங்காமல் அவருக்காக கதறி அழுது கடவுளிடம் இறைஞ்சியபடி இருந்தவர்கள் அவர்கள்.

செல்வி ஜெயலைதா மீது இந்த மக்கள் வைத்திருக்கும் அன்பை வார்த்தைகளுக்குள் கொண்டு வருவது என்பது மிகவும் சிரமமானது. அந்த அப்பாவி எளிய மக்களுக்காக ஜெயலலிதா ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதே இல்லை. அப்படி இருக்க அந்த அம்மையார்மீது என்ன காரணத்திற்காக இத்தனை வெறி கொண்ட அன்பை வைத்திருக்கிறார்கள் என்று நான் அடிக்கடி வியந்து போவதுண்டு.

அவர் சிறைபட்டபோது அமைச்சர்களும் நிர்வாகிகளும் மண்சோறு சாப்பிட்டதும் கண்ணீரைத் துடைத்ததும் சந்தேகத்திற்கே இடமில்லாமல் போலியானவை. ஆனால் அவர் சிறைபட்டபோதும் மருத்துவ மனையில்

சேர்க்கப்பட்ட பொழுதும் இந்த எளிய மக்கள் சிந்திய கண்ணீரும் அவர்களது வேண்டுதல்களும் உண்மையானவை. அவர் மரணத்தின்போது வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு தரையில் விழுந்து அழுதார்களே அது எவ்வளவு உன்னதமானது.

தங்களுக்காக ஒன்றுமே செய்யாதவர்மீது மக்கள் ஏன் இவ்வளவு அன்பு பாராட்ட வேண்டும் என்று மக்கள்மீது எனக்கிருக்கும் கோவத்தைவிட தங்களுக்கான எல்லாமும் ஜெயலலிதாதான் என்று நம்பி விசுவசித்து வாக்குகளைப் போட்டு ஆட்சியில் அமர்த்திய இந்த அப்பாவி எளிய மக்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தனக்கும் தனது தோழியின் குடும்பத்திற்காகவும் கொஞ்சமும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் சொத்து குவித்திருக்கும் ஜெயலலிதாவின்மீதான வெறுப்பு அதிகமாகிறது.   

”இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும்”
என்று தீர்ப்பின் ஓரிடத்தில் நீதியரசர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த இடம்தான் என்னை நிலைகுலையச் செய்கிறது. ஒரு நகருக்குள் யாரோ ஒரு தலைவர் வருவதாக இருந்தால் அந்த ஊரில் உள்ள சிலரை கைது செய்வார்கள். ஏதேனும் பெரிய திருவிழா அல்லது தேசிய தினங்களின் போதும் சிலரை கைது செய்து அடைப்பார்கள். அந்தக் குறிப்பிட்ட நிகழ்வு முடிந்ததும் அவர்களை வெளியே விட்டுவிடுவார்கள். இந்தக் கைது நடவடிக்கைக்கு ’முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்று பெயர்.

யாரிவர்கள்? எதற்காக இவர்களைக் கைது செய்கிறார்கள்? அதற்கு ஏன் முன்னேச்சரிக்கை நடவடிக்கை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?

இவர்கள் சமூக விரோத நடவடிக்கையில் ஏதோ ஒரு காலத்தில் ஈடுபட்டவர்கள். அவர்கள் தங்களது சமூக விரோத செயல்களில் இருந்து வெகுவாக வெளியேறி சமூகவெளியில் கறைந்திருக்கவும் கூடும். ஆனாலும் இவர்களது கடந்த கால செயல்பாடுகளின் பொருட்டு தலைவர்கள் வரும் பொழுது அல்லது விழாக்களின் பொழுது இவர்கள் வெளியே இருந்தால் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடும் என்ற அச்சப்படுகிறார்கள். அப்படி ஏதும் விபரீதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகாக அந்த நிகழ்வு முடியும்வரை அவர்களை சிறையில் அடைக்கிறார்கள். இது அசம்பாவாவிதங்களில் இருந்து சமூகத்தைக் காப்பதற்கான முன்னெச்சரிக்கை

நடவடிக்கை ஆகும். இந்த நடவடிக்கை என்பது பெரும்பாலும் எதிர்க்கட்சியினரைக் கைது செய்வது என்பது தற்காலத்தைய நடைமுறையாகிப் போனது என்பது வேறு.

அந்த சம்பவம் நடக்கும்போது இவர்கள் வெளியே இருந்தால் இந்த சமூகத்திற்கு ஆபத்து நேரிடும் அப்படி நேரிட்டுவிடக் கூடாது என்பதற்காக சமூக விரோதிகள் என்று தங்களது பட்டியலில் இருப்பவர்களை கைது செய்து சமூகத்தைக் காப்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இங்கோ ‘இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும்’ என்று உரத்த குரலில் வேதனைப் படுகிறார்கள் நீதியரசர்கள்.

நான் திரும்பத் திரும்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையில்கூட ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர்கள் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இருந்தால்தான் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்ற கருத்து இருக்கிறது. அதாவது அந்தக் குறிபிட்ட காலத்தில் அந்தக் குறிப்பிட்ட நபர் அந்தக் குறிபீட்ட பகுதியில் இல்லை என்றால் அவரைத் தேடிப்போயெல்லாம் சிறைக்கு கொண்டு வரமாட்டார்கள்.

அந்தக் குறிப்பிட்ட தேதியில் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அவர் இருந்தால் அந்தப் பகுதியின் அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்று நினைக்கிறார்கள்.

இங்கோ, இவர்கள் வெளியே இருந்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும் என்று நீதியரசர்கள் பயப்படுகிறார்கள். இந்த இடத்தில், இந்த நேரத்தில் இவர்களை அனுமதித்தால் அந்த இடத்தின் அமைதி குலையும் என்பது இந்தத் தீர்ப்பைப் பார்க்கும்போது ஒன்றும் இல்லாததாகிப் போகிறது.

சமூக விரோதிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்தக் குறிப்பிட்ட இடத்தின் அமைதியை குலைத்துப் போடுவார்கள். இவர்களோ வெளியே இருக்கும் காலம் எல்லாம் நாடு முழுமையிலும் அமைதியைக் குலைத்துப் போடுவார்கள் என்று நீதியரசர்கள் அச்சப்படுகிறார்கள். எனில், சமூக விரோதிகளைவிடவும் இந்த மேன்மக்களால் இந்த மண்ணிற்கு பங்கம் விளையும் என்று இவர்கள் கருதுகிறார்கள். எனில், அவர்களைவிடவும்


இவர்கள் ஆபத்தானவர்கள், மோசமானவர்கள் என்று இந்த நீதியரசர்கள் கருதுகிறார்கள். எனில், நான்காண்டுகள் என்பதுகூட இவ்வளவுதான் தர இயலும் என்ற சட்டநுணுக்கத்தின் பொருட்டுதான் என்று கொள்ள முடியும்.

இவை இப்படி இருக்கும்போது முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் மரியாதைக்குரிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அம்மாவின் ஆசியோடும் சின்னம்மாவின் வழிகாட்டுதலோடும் தமது அரசு செயல்படும் என்று கூறியிருப்பது மிகுந்த அச்சத்தைத் தருகிறது.

அவரால் அம்மா என்று அழைக்கப்படுகிற ஜெயலலிதா அவர்களையும் சின்னம்மா என்று அவர் அழைக்கிற சசிகலா அவர்களையும் கண்டுதான் நீதியரசர்கள் ‘இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும்’ என்று கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தால் சுட்டப்பட்டுள்ள ஒருவரது ஆசியோடும் இன்னொருவரது வழிகாட்டுதலோடும்தான் தமது ஆட்சி நடக்கும் என்று மாண்பமை முதல்வர் சொல்வது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமானப் படுத்துவது ஆகாதா?

இன்னமும் ஜெயலலிதா அவர்களின் பெயரால் நலத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதும் குடிநீர் பாட்டில்களில் அவரது படத்தை வைத்திருப்பதும் அம்மா உணவகங்கள் அதே பெயரோடு தொடர்வதும் எப்படி நியாயமாகும்?

இதைக் கேட்டால் ஒரு அமைச்சருக்கு கோவம் சுள்ளென்று தெறிக்கிறது. ’காந்திகூடத்தான் சிறைக்குப் போனார். அவரது படத்தை அரசு பயன்படுத்துவதில்லையா, அதுபோல்தான் நாங்கள் அம்மாவின் படத்தை பயன்படுத்துவதும்’ என்று கூறுகிறார்.ச் எப்படி இதை எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.

மகாத்மா சிறைக்கு போனதற்கான காரணமும் ஆட்டோ சங்கர் சிறைக்கு போனதற்கான காரணமும் ஒன்றல்ல என்கிற எளிய உணமைகூட இவருக்குத் தெரியாதா?

1)   இந்த எளிய உண்மைகூடத் தெரியாத ஒருவர் அமைச்சர் என்பது ஜீரணிக்க இயலாதது
2)   அல்லது அவருக்குத் தெரியும். தெரிந்தேதான் இப்படி பேசுகிறார் என்றால் மக்களை அவர் மக்குகள் என்று கருதுகிறார் என்றுதானே பொருள்.

இதை எல்லாம்விட அந்தத் தீர்ப்பு வெளியான பொழுதில் அதே அம்மாவின் படத்தை சட்டைப் பாக்கெட்டுகளில் வைத்துக் கொண்டே பெரும்பாண்மை அதிமுகவினர் போவோர் வருவோருக்கெல்லாம் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். அந்தத் தீர்ப்பு அவர்கள் இதய தெய்வத்தையும் சேர்த்துதான் குற்றவ்வாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது என்ற உண்மை தெரியாதவர்களா அவர்கள்.

”’இவர்கள் ஒரே வீட்டில் கூடி இருந்ததேகூ வாழ்வததற்காக அல்ல. சதி செய்வதற்காகத்தான்” என்று நீதியரசர்கள் கூறும் இடத்தைதான் நான் தீர்ப்பின் முக்கிய இடமாகக் கருதுகிறேன்.

வாழ்வதற்காக சதி செய்வதைக்கூட ஒரு வாதத்திற்காக ஒரு குறிப்பிட்ட அளவு ஏற்கலாம்.

இவர்கள் சதி செய்வதற்காகவே வாழ்பவர்கள் என்றுதான் நீதியரசர்களின் தீர்ப்பு சொல்கிறது.

இவர்கள் குற்றவாளிகள் என்பதை அம்பலப்படுத்துவது மிக முக்கியம். அந்தக் காரியத்தை நாம் சரியாக செய்யாது போனால் அவர்கள் விட்ட இடத்திலிருந்து அவர்களது பிரதிநிதிகள் தொடருவார்கள்.

”இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் நாட்டில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்” என்ற நீதியரசர்களின் கருத்து கவனமாகக் கொள்ளத் தக்கது. இறந்துவிட்டார் என்பதற்காக ஒருவரைப் புனிதராக்குவதோ சிறைக்கு போனதால் ஒருவரை மன்னிப்பதோகூட அவர்களை அனுமதிப்பச்தே ஆகும்.

இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் சிறுபான்மை ஆகிவிடுவார்கள் என்பதன் பொருள் இவர்களை அனுமதித்தால் நல்லவர்கள் குறைந்து போவார்கள் என்பதே.

நல்லவர்கள் குறைந்தால் கெட்டவர்கள் பெருகுவார்கள். நல்லது குறைந்து அல்லது பெருகும்.

ஒருபோதும் அனுமதியோம் நீதியரசர்களே.   

2 comments:

  1. கிரிமினல் என்று தெரிந்த பிறகும் அரசியல் தங்களின் பிழைப்புக்காக இப்படி நாடகம் போடுகிறார்கள் என்றால் சிந்திக்க மறுக்கும் மக்களை என்னவென்று சொல்வது ?ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை குறைகிறது :)

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் மக்கள் ஜனநாயகம்தான் நமக்கு இந்த அளவிற்கேனும் நம்பிக்கையைத் தருகிறது

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...