Saturday, June 18, 2016

65/66 காக்கைச் சிறகினிலே, மே 2016


”தோழர், வைகறை செத்துட்டான்னு சொல்றாங்க. முப்பத்தஞ்சுகூட தேறாதே. பாவிப்பயலுக்கு என்ன அவசரமோ? செத்த என்னன்னு பாருங்களேன்” என்று வர்தினி பர்வதா அழுதுகொண்டே கூறியது உண்மை என்று உறுதியானபோது அப்படியே உடைந்து போனேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை வழக்கம் போலவே சர்க்கரை அளவு ஐநூறை நெருங்கிய பொழுது மருத்துவர் உள்நோயாளியாக என்னை மாறி ஒரு வாரத்திற்கேனும் இன்சுலின் எடுத்துக் கொண்டு அவரது கட்டுப்பாட்டில் என்னை இருக்குமாறு கூறியபொழுது இரண்டையும் மறுத்து, வீட்டிலேயே தங்கி மற்றபடி அவர் சொல்லுகிற மாதிரியெல்லாம் நல்ல பிள்ளையாக நடந்துகொள்வதாக உறுதியளித்துவிட்டு சாப்பிடுவது, நேரா நேரத்திற்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, மற்ற நேரங்களில் உறங்கி ஓய்வெடுப்பது என்பதாக இருந்தேன். படிப்பதில்லை என்று அவருக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை மட்டும் என்னால் காப்பாற்ற முடியவில்லை. ஓய்வில் இருக்கிறேன் என்றும் மிகவும் போரடிக்குது என்றும் சொல்லி புலம்பவே தோழர் மோகனா பாரதி புத்தக நிலையத்தில் சொல்லி ஏறத்தாழ 50 புத்தகங்களை அனுப்பியிருந்தார். 

அன்று மதியம் ஒன்று மேல்வீட்டு அம்மா கொரியரில் வந்திருந்த ஐந்தாறு நூல்களை என்னருகே வைத்துவிட்டு போனார்.  அவற்றில் ஒன்று “நிலாவை உடைத்த கல்”. புத்தகத்தைப் பிரித்து வாசிக்க ஆரம்பிக்கிறேன்.

“என் கவிதைகள் உங்களுக்கு
அதிகபட்சமாய் உங்களுக்கு கொடுக்கலாம்
ஒரு புன்னகையை
அல்லது
ஒரு துளி கண்ணீரை”

என்ற வரிகளைப் பார்த்ததும் அப்படியே பிரமித்துப் போனேன். ஆமாம் இதைத் தவிர ஒரு நல்ல கவிதை வேறெதைத் தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.

நகர நகர பொக்கிஷங்களாய் கவிதைகள்.

“கூழாங்கற்களில்
காய்ந்து கிடக்கிறது
கோடைநதி” என்ற வரிகள் மிக மிக  அபூர்வமாக கிடைக்கும் வரிகள்.

“புன்செய் வயல்கள் மட்டுமல்ல
ஆறுகளும்தான்”

என்ற இடத்தில் அப்படியே ஆடிப் போனேன் ஆடி. மானாவாரி நதிகள்தானே இன்றைய பெரும்பான்மை நதிகள்.

“குளத்தில்
என்றோ எறிந்த கற்களை
மீட்டுத் தந்தது கோடை”

“சிதறிய பொருட்களில்
பரவிக் கிடக்கிறது
இறந்த எலியின் போராட்டம்”

இந்த இரண்டுக் கவிதைகளும் தமிழ்ச் சூழலில் முற்றும் புதிதான நுட்பங்களாகப் பட்டது. என்னால் அதற்குமேல் முடியவில்லை. அவனது எண் இருக்கிறதா என்று பார்க்கிறேன். இருக்கிறது. “உனது கவிதைகளால் எனது இன்றை ஆசீர்வதித்தாய். கண்டிப்பாக உனது கவிதைகள் என்னுள் ஏதோ செய்திருக்க வேண்டும். ஒன்று எனது சர்க்கரை குறைந்திருக்க வேண்டும். அல்லது எகிறி இருக்க வேண்டும். அவசரப்பட்டு என்னோடு பேச முயற்சிக்காதே மகனே. உன் கவிதை குறித்து எழுதி போஸ்ட் செய்துவிட்டு வருகிறேன்” என்று நீண்ட குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு அவனது கவிதைகள் குறித்த எனது அபிப்பிராயத்தை பதிந்துவிட்டு அவனை அழைத்து ஒன்றரை மணிநேரம் பேசினேன்.

நெகிழ்ந்து போனான். அவ்வப்போது பேசுவான். ஒருநாள் அழைத்து அவனது இரண்டாவது கவிதைநூல் குறித்து பொள்ளாச்சி வந்து பேச வேண்டும் என்றான். நண்பர்கள் சேர்ந்து ஆறு நூல்களை வெளியிட்டனர். நிறையபேர் பேசுவதாகத் தெரிந்தது. அந்தநேரமும் படுத்துக் கிடந்த நேரம்தான். “நிறையபேர் இருக்கிறார்களே, முடியாத என்னை ஏன் சிரமப் படுத்துகிறாய்?” என்றேன். “நிரையபேர் வரலாம், எனக்கு நீங்கள் மட்டும்தான். ஒன்றும் ஆகாது” என்றான். போய் பேசினேன். யாழியும் இவனும் என்னிடம் வந்து இதுமாதிரி தட்டிக் கொடுக்க ஆட்கள் இருந்தால் எவ்வளவோ எழுதுவோம் என்றார்கள்.

சென்ற டிசம்பர் மாதம் காரைக்குடி போதியில் உரையாற்றிவிட்டு வெளியே வந்தால் அங்கே நிற்கிறான். ஏதேனும் வேலையாக வந்தானா என்று கேட்டபொழுது எனது உரையை கேட்பதற்காக மட்டுமே வந்ததாகக் கூறினான். உரையைக் கேட்பதற்கெல்லாம் இப்படி அலையக்கூடாது என்று கூறியபோது ‘ஒருபோதும் நீங்கள் ஏமாற்றுவதேயில்லை” என்றான்.

மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அக்கறையோடு நான் உடம்பைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறினான்.

இன்று அவன் இல்லை. அவனது மரணம் குறித்த உரையாடலில் ;வைகறை தோழர் எட்வின்மீது அப்படியொரு அன்பை வைத்திருந்தான்” என்று தோழன் சுரேஷ் மான்யா தன்னிடம் கூறியதாக தோழர் ரமா ராமநாதன் கூறினார்.

“வைகறை உங்கள்மீது வைத்திருந்த அன்பிற்கு அளவேயில்லை” என்று தோழர் தேவதா சொல்கிறார்.

தஞ்சையில் அவனது நூல் அறிமுகம் இருப்பதைக் குறித்து அவன் பேசியதுதான் அவனோடான இறுதி உரையாடல். உளைச்சலோடு இருந்தான் என்று தோழர் தேவதா சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. அவனது கவிதைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது போனதாக அந்தப் பிள்ளைக்கு வருத்தம் இருந்தது. பரிசுகளுக்கும் விருதுகளுக்கும் சிபாரிசு செய்பவர்கள் தனது நூலை பொருட்டாகவே மதிக்காமல் போகிற இடமெல்லாம் உன் கவிதைகள் குறித்து பேசுகிறேன். அவ்வளவு மோசமான உடல்நிலையில் இருந்தபோதும் படித்தவுடன் நீண்டு எழுதுகிறேன். என் பாராட்டை விடவும் விருது பெரிதா என்று அவனை அடக்கினேன்.

உண்மையிலுமே அவனது கவிதைகள் கொண்டாடப் படுகின்றன. ஜோலார்பேட்டைக்கு கூட்டம் நிமித்தம் போயிருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்ட நண்பர்களோடான சந்திப்பில் வைகறையைப் பற்றிதான் நிறைய பேசியிருக்கிறேன் என்பதை பிள்ளை நா.கோகிலன் நேற்று பதிவு செய்திருந்தான். மட்டுமல்ல அங்கிருந்த பெரும்பான்மையோருக்கு அவனது கவிதைகள் பரிச்சயம்.

இரண்டு ஆலோசனைகள் சொன்னேன்

1)   விருதுகளைப் பெரிதாக எடுக்காதே.
2)   போட்டிகளுக்கு கவிதைகளை அனுப்பாதே

 சரி என்றான்.20 நாட்களுக்குள் போய் சேர்ந்து விட்டான்.

எழுதப்பட்டவற்றிலிருந்து நல்லதை நம்மால் தேர்வு செய்ய முடியாது. ஆனால் நாம் அறிந்தவற்றுள் நல்லதை தேர்வு செய்வதில் நாம் கவனத்தோடு இருக்க வேண்டும் என்ற பாடத்தை எடுத்.துக் கொண்டேன்

அவனது மூன்றாவது தொகுதிக்கான தட்டச்சுப் பிரதியை உப்பு பார்க்கச் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறான். நீதிமணிக்கும் அனுப்பியிருப்பான் போல. நூலாக்கிவிட வேண்டும்.

”பட்டமரம்
ஒற்றைக் குயில்
கிளையெல்லாம் இசை”

என்று எழுதினான்.

வைகறை என்ற குயில் இல்லைதான். ஆனாலும் இந்த வனமெங்கும் நிரம்பிக் கசிகிறது அந்தக் குயிலின் இசை.

*********************************************************************************   
காங்கிரஸ் ஆண்டுகொண்டிருந்த உத்திரகண்ட் மாநிலத்தில் காங்கிரசிலிருந்து சில சட்டமன்ற உறுப்பினர்களை பிஜேபி விலைக்கோ வேறு எதற்கோ வாங்கி விட்டது. அல்லது பிஜேபி கொள்கையில் அவர்கள் மயங்கி சாய்ந்துவிட்டார்கள்.

மத்திய அரசு குடியரசு தலைவர் ஆட்சியை அமல் செய்துவிட்டது. தமக்கு பெரும்பாண்மை இருப்பதாகவும், அதை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று முதல்வர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். உயர்நீதி மன்றம் ஒரு தேதியை குறிப்பிட்டு அந்தத் தேதியில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடுகிறது.

மத்திய அரசு அதே உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து அந்த உத்தரவிற்கு தடை உத்தரவு வாங்குகிறது. மீண்டும் அதே உயர்நீதி மன்றம் பெருபான்மையை நிரூபிக்க அனுமதி தருகிறது. அதற்கு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறது.

ஆக பெரும்பான்மையை நிரூபிக்கவே வாய்ப்புத் தரக்கூடாது என்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. வன்மமாக கண்டிக்கின்றோம்.

காங்கிரஸ் இதுபோன்று செய்ததில்லை என்றெல்லாம் சொல்வதற்கில்லை. இதைவிடவும் மோசமாகவே பல சமயங்களில் காய் நகர்த்தியிருக்கிறது. பிறகு ஏன் இதைப்பற்றி பேச வேண்டும்? காங்கிரஸ் இதை செய்தபோதும் எதிர்த்தோம். இத்தகைய செயலொன்றின் மூலம் காங்கிரஸே பாதிக்கப் பட்டாலும் எதிர்ப்போம்.

********************************************************************************  

இந்தத் தேர்தலின்மூலம் தோழர் திருமாவளவன் ஒரு பக்குவமும் முதிர்ச்சியும் மிக்க தலைவராக அடையாளப் படுகிறார். தர்மபுரி வன்முறையின்போதும் அதன்பிறகான ஜாதியத் தாக்குதல்களின்போதும் அவர் கம்பிமேல் நடந்தார். அவர் ஏதேனும் ஒரு புள்ளியில் அவர் உணர்ச்சி வசப் பட்டிருந்தாலும் நிலைமை வேறுமாதிரி ஆகியிருக்கும். என்னைவிட வயதில் குறைந்தவரான அவரிடம் தென்பட்ட இந்த முதிர்ச்சி அளப்பரியது.

மக்கள்நலக் கூட்டமைப்பின் கட்டமைத்தலில் அவரது ஈடுபாடும் செயல்பாடும் மெச்சத் தக்கது.

ஆர்கே நகரில் தோழர் வசந்தி தேவியை அவர் களமிறக்கி இருப்பது நுட்பமானது. அரசியலை நேர்த்தியாக செய்கிறார்.

பாரதியின் நண்பர் சர்க்கரை செட்டியாரின் பேத்தி என்ற அடையாளமெல்லாம் அவருக்கு தேவையே இல்லை. கடைக்கோடி மனிதனுக்கும் உயர் கல்வி சாத்தியப் பட வேண்டும். மனித நேயத்தை அடிநாதமாகக் கொண்ட கல்வித்திட்டம் கட்டமைக்கப் படவேண்டும் என்பதற்காக பல பத்து ஆண்டுகளாக போராடி வருபவர்.

அவரை நிறுத்தி இருப்பதன் மூலம் தான் ஒரு வெகுஜனத் தலைவன் என்பதையும் கல்விகுறித்த தனது ஆழமான அக்கறையையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

வாழ்க தோழர்.
*********************************************************************         



No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...