"நடத்துனரிடம்
மீதிச்சில்லரை
எதிர்பார்த்தே
ரசிக்க முடியாமல்
போய் விடுகின்றன
பெரும்பாலான
பேருந்துப் பயணங்கள்"
என்கிறார் ராஜிவ் காந்தி. அநேகமாக அனைவரும் அனுபவித்தேயிருக்க வேண்டிய அவஸ்தைதான் இது. தரை வழி போக்குவரத்தை தவிர்ப்பவர்கள் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும். இருக்கிற ஒரே ஒரு நூறு ரூபாய் தாளினை கொடுத்து விட்டு உட்கார்ந்தால் பூம் தொலைக் காட்சியில் ஓடும், நரசிம்ம ராவையே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிக்கு கூட நரசிம்மராவைவிட இறுக்கமாய் உட்கார்ந்திருப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். மறக்காமல் மீதிச் சில்லறையை வாங்க வேண்டுமே எச்சரிக்கை உணர்வே சகல ரசனையையும் கொன்றுபோடும். கையில் இருந்த ஒரே நூறு ரூபாய் தாளினை நடத்துனரிடம் கொடுத்து விட்டு சில்லறை வாங்க மறந்து போய் வீட்டிற்கு நடந்து போன அனுபவம் எனக்குமுண்டு.
இது மாதிரியான தொடர் அனுபவங்கள் நடத்துனர்கள் அனைவருமே சில்லறையை ஆட்டை போடும் கொள்ளை காரர்கள் என்பதான ஒரு பொதுப் பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளன. எனக்குத் தெரிந்த வரை ஏழு ரூபாய் டிக்கெட்டிற்கு ஏழு ரூபாயை கொடுத்தால் வாங்க மறுக்கும் நடத்துனர் யாரும் இருப்பதாகப் படவில்லை. எத்தனை முறை இழந்தாலும் சரியான சில்லறையோடு பேருந்து ஏறவேண்டும் என்ற பொது அக்கறை மட்டும் பெரும்பாலும் யாருக்கும் வருவதில்லை.
ஆனால் எத்துனை இடையூறுகள் ஏற்படினும் அத்தனையையும் தாண்டி பேருந்துப் பயணங்களில் ரசிக்கவும் கற்றுக் கொள்ளவும் முடிகிறது என்னால். எனக்கென்னவோ அள்ள அள்ளக் குறையாத அட்ச்சயப் பாத்திரங்களாவே பேருந்துகள் அமைகின்றன. ஒவ்வொரு முறையும் எனக்கு கற்றுக் கொடுப்பதும் என்னையறியாமலே எனக்குள் ஒளிந்து கிடக்கும் "நான்" என்ற அழுக்கை தங்கள் ஒழுகும் சழுவாயால் துடைத்தென்னை தூய்மை படுத்துவதும் குழந்தைகள்தான்.
ஒரு முறை நான் கூட எழுதினேன்
"உனக்கு ஒன்னுந் தெரியாதுப்பா"
குழந்தையின் மழழையில் கசியும்
ஞானம்'"
என்று. அனேகமாக எனது எல்லாப் பயணங்களிலும் குழந்தைகள் இந்தக் கவிதையை நிசப்படுத்தியே வருகிறார்கள். நமக்கு ஒன்றும் தெரியாது என்பதையோ அல்லது குறைந்த பட்சம் அவர்கள் அளவுக்கு தெரியாதென்பதையோ ஒவ்வொரு முறையும் நிரூபித்தே வருகிறார்கள்.
அதிலிரண்டை பந்தி வைத்துவிடவேண்டுமென்று படுகிறது.
...
அன்று அதி காலை எழுந்ததிலிருந்தே ஒன்று மாற்றி ஒன்றாக தவறுகளாகவே செய்து கொண்டிருந்தேன். எல்லாம் அவசரம் தந்த பதற்றத்தால் வந்தது. தாள் திருத்தும் மையத்தில் அன்று வாயில் கூட்டம். சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜயகுமார் நேற்றே வந்துவிட்டார். திருச்சிக்குப் போக ஒன்றரை மணி நேரமாவது ஆகும். விடுதி அறையிலிருந்து விஜியை அழைத்துக் கொண்டு போக வேண்டும். ஏழரை மணிக்குள் முகாம் வாசலில் இருந்தால்தான் தாள் திருத்த வரும் ஆசிரியர்களை கூட்டத்திற்கு தடுத்து நிறுத்த முடியும்.
பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த பேருந்தை நிருத்தி ஏறினேன். இடமிருக்கா இல்லையா என்றெல்லாம் பார்த்து ஏறுவத்ற்கு அவகாசமில்லை. நல்ல வேளை கடைசி இருக்கையில் ஒரு இடம் இருந்தது. அப்பாடா என்றிருந்தது. அமர்ந்ததும் செல் எடுத்து மணியைப் பார்த்தேன். சரியாக ஐந்து. வழியில் ஏதும் பிரச்சினை இல்லாத பட்சத்தில் சரியான நேரத்தில் சேர்ந்து விடலாம்.
பேருந்து புற வழிச்சாலையில் திரும்பிய அந்தப் புள்ளியில்தான் அந்த அம்மாவின் பேச்சு என் கவனத்தை இழுத்தது. எனக்கு முன்னிருக்கைக்கும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். அப்பழுக்கில்லாத கிராமத்து பெண்மணி. அவரோடு சுமார் நாற்பது மதிக்கத் தக்க அளவில் ஒரு ஆண். " இல்லடா தம்பி", "இதக்கேளுடா" என்று அடிக்கடி அந்த அம்மா சொன்னதிலிருந்து ஒன்று அவர் அவரது தம்பியாக இருக்க வேண்டும் அல்லது தம்பி போன்ற உறவுடையவராக இருக்க வேண்டும்.
அந்த அம்மாவின் குரலால் நிரம்பிக் கசிந்தது பேருந்து. எரிச்சலை தரக்கூடிய குரல். அவரது மகன் மற்றும் மருமகளைப் பற்றியே அவரது பேச்சு சுற்றியது. "ம்" " ம்ம்" , " சொல்லுக்கா" , "ச்ச்" என்பதைத் தாண்டி அந்த மனிதன் ஏதும் பேசவே இல்லை.
ஓட்டுநரே இரண்டு முறை திரும்பி பார்த்து விட்டு திரும்பி தலையிலடித்துக் கொண்டார். ஒவ்வொரு முறை அவரைக் கடக்கும் போதும் அந்த அம்மாவை ஒரு மாதிரி எரிச்சல் கசிய பார்த்துப் போனார் நடத்துனர்.
பாடாலூரைக் கடந்து சென்று கொண்டிருந்தது பேருந்து. புலம்பல் நிற்கிற பாடாய் தெரியவில்லை. பேருந்து புறப்பட்டு ஏறத்தாழ முப்பது நிமிடம் கடந்திருக்கும்.
திடீரென அழுவார். பிறகு அவரே சமாதானமாகி முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டு விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கி விடுவார்.
"அவ நல்லா இருப்பாளா? அவள விடு. ஒரு ஈ எறும்பு கடிக்க விட்டுருப்பேனா, இன்னிக்கில்ல அவன் இவ்ளோ பெரிய ஆம்புள. புள்ள வளரதுக்குள்ள ஒவ்வொரு ஆத்தாவும் ரெண்டு லாரி பீயாவது அள்ளிப் போடனும்ப்பா. அவ என்ன சொன்னாலும் தலய தலய ஆட்டுறானே. வெளங்குவானாடா இவன். " அவர் குரல் தந்த எரிச்சலைத் தவிர எதையும் உள் வாங்க முடியவில்லை.
"பெரம்பலூர்ல ஆரம்பிச்சது. எப்ப முடியுமோ" அடங்க மறுத்து என்னிடமிருந்து சன்னமான குரலில் எனது எரிச்சல் வெளியேறியது.
" அடப் போங்க சார், நான் விருதாச்சலத்துல ஏறினேன். அதுக்கு முன்னாலேயே அந்த அம்மா ஏறியிருக்கனும். இந்த இம்சய மூனு மணி நேரமா தாங்க முடியல சார்."
கொள்ளிடம் செக்போஸ்ட் கடக்கும் போதே அந்த அம்மா எழுந்தார். உடன் வந்த மனிதரும் எழுந்தார். திருவாணைக் கோவிலில் இறங்குவார்கள் என்பது புரிந்தது. அவர்கள் இறங்கப் போகிறார்கள்என்பதே எல்லோருக்கும் பெரிய நிம்மதியை தந்தது.
நின்றதும் இறங்குவதற்கு வசதியாக பைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு இருக்கைக்கு வெளியே வந்து கொண்டிருந்தார்.
"பாட்டி"
எனக்கு முன்னிருக்கையில் பெரும்பகுதி நேரம் நின்று கொண்டே வந்த மூன்று வயதுக் குழந்தை கத்தினாள்.
"ஏஞ்சாமி, என்னடா தங்கம்?"
குழந்தையின் கன்னத்தை வருடியவாரே அந்த அம்மா கேட்டார்.
" நீ பயப்படாம போ பாட்டி. குச்சி எடுத்து வந்து உனக்கு சோறு போடாத அத்தையையும் மாமாவையும் வெளு வெளுன்னு வெளுக்கிறேன்."
"நீ இருக்கப்ப எனக்கென்ன சாமி கவல." குழந்தையை தூக்கி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு கண்களை துடைத்துக் கொண்டே போனார்.
" யாரு பெத்த புள்ளயோ, ஒனக்குப் புரியுது என் வேதன. நீ நல்லா இருக்கனும் மவராசி"
அவர் பாட்டுக்கு அவர் இறங்கிப் போய்விட்டார். குழந்தையோ எதுவுமே நடக்காதது மாதிரி ஜன்னலில் வேடிக்கை பார்த்து விளையாட ஆரம்பித்து விட்டாள்.
எனக்கோ வாயில் கூட்டம் உட்பட அணைத்தும் மறந்து போய் ஒரே ஒரு கேள்வி மட்டும் சுழன்று சுழன்று உறுத்திக் கொண்டே இருந்தது. அநேகமாக பேருந்தில் இருந்த அனைவருக்கும் ஏன் உங்களையும் கூட இது நெருடவே செய்யும்.
அந்த சின்னக் குழந்தைக்கு புரிந்த அந்த அம்மாவின் வேதனையும் வலியும் நமக்கு ஏன் புரியாமல் போனது.
......
பாண்டியில் ஒரு வேலை. பேருந்தில் அதிக கூட்டமில்லை. வசதியான இருக்கை கிடைத்தது. ஜன்னலோர இருக்கை. எனக்கு அடுத்து முப்பத்தி ஐந்து மதிப்பில் ஒருவர். அடுத்து அவர் மனைவி. அவர்களது மூன்று வயது மதிக்கத் தக்க மகள்.
எதையும் ரசித்தாள். பேசிக் கொண்டே வந்தாள். நிறைய கேட்கவும் செய்தாள்.
அவளது பெற்றோர்கள் இவளை சட்டை செய்ததாகவே தெரியவில்லை.
அவர்கள் எதிர் வீட்டு ஷர்மி பற்றி , அவளது அண்ணி பற்றி , பைனான்சில் இருக்கும் நகையை திருப்பி வங்கியில் வைத்து வட்டியை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றி , இப்படியாக எது எது பற்றியோ இடைவெளி இன்றி பேசிக்கொண்டேதான் வந்தார்கள்.
"ஐ! அம்மா அங்க பாரேன் ரெண்டு கொரங்கு" என்ற அவளது கொண்டாட்டத்தை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் பேசிக் கொண்டே வந்தார்கள்.
அவளும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.
இப்போது அவள் எனக்கும் அவளது அப்பாவிற்கும் இடையில் வந்து நின்றாள். "ஏய் மாமாவ தொந்தரவு பன்னாத" ஏதோ சடங்குக்காய் சொல்லி விட்டு மீண்டும் அவர்களது பேச்சிலே கறைந்து போனார்கள்.
என் விரல்களை பிடித்துக் கொண்டாள். நான் ஒரு புன்னகையோடு அவளைப் பார்த்தேன். எனது புன்னகை அவளை உற்சாகப் படுத்தியிருக்க வேண்டும்.
" மாமா ஏன் உங்க கைல மோதிரமே இல்ல. எங்க அப்பா ரெண்டு மோதிரம் , ப்ரேஸ்லெட் எல்லாம் போட்டிருக்கங்களே"
"ஏய் எரும, மாமாவ தொந்தரவு பன்னாதன்னு சொன்னேனா" என்று சத்தம் போட்டவாறே அவளைத் தன் பக்கமாக இழுத்தார் அவளது அம்மா.
"விடுங்கம்மா. சின்னக் குழந்ததானே" என்று அவர்களை சமாதானப் படுத்தி அவளை மீட்டேன். அத்தோடு அவளை விட்டு விட்டு அவர்கள் மீண்டும் பேசத் தொடங்கி விட்டார்கள்.
அவர்களது எரிச்சல் பற்றியோ , கோபம் பற்றியோ இவளும் கவலைப் படவில்லை.
"மாமா கேட்டேன்ல , சொல்லுங்க ஏன் நீங்க மோதிரம் போடல"
"மாமாட்ட இல்லடா. நீ வேனா வாங்கித் தரயா?"
"ம்..சரி , நான் பெரியவளானதும் அப்பாவாட்டம் வேலைக்க்கு போய் உங்களுக்கு மோதிரம் வாங்கித் தாரேன். சரியா?"
அவ்வளவுதான் அடுத்த விஷயத்திற்கு தாவி விட்டாள். ஏதோ பத்து வருடங்களாய் பழகுபவள் போல ஒட்டிக் கொண்டாள் அந்த மூன்று வயது பிள்ளை .
நானும் அவளும் நல்ல நண்பர்களாக மாறியிருந்தோம். பேருந்து சுல்த்தான் பாளையத்தில் நின்றது. சாலை ஒரத்தில் இருந்த கோழிக் கறிக் கடையின் பெயர்ப் பலகையை காட்டினாள். "மாமா அந்தக் கோழி ரொம்ப அழகா இருக்குள்ள"
"ஆமாண்டா"
"ஒங்களுக்கு மந்திரம் தெரியுமா?"
"தெரியுமே.." நானும் அவளுக்கு ஏற்ற விளையாட்டுக் கூட்டாளியாக மாறத் தொடங்கியிருந்தேன்.
" அப்ப ச்சூ காளி மந்திரம் சொல்லி என்ன அந்தக் கோழிப் படமா மாத்துங்க ப்ளீஸ்"
"எதுக்குடா கோழிப் படமா மாத்திட்டு . அழகான கோழியாவே மாத்திடவா?"
" வேனாம். லூசு மாதிரி பேசாம என்ன கோழி படமா மாத்துங்க"
"ஏண்டா . கோழியாவே மாத்திடறேனே."
" மக்கு , மக்கு கோழியா மாறினா அறுத்துறுவாங்கல்ல.."
ஒருமுறை எழுதினேன்
"தோளில் தூங்கும்
குழந்தையின் சழுவாயில் கசியும்
ஞானம்" என்று. அடடா நாம் கூட சரியாய்த்தான் எழுதுகிறோம் போல.
அவள் பத்து கிலோ இருப்பாள் அநேகமாக. எனில் பத்து கிலோ ஞானம் அவள்.
அது சரி இவளது ஞானத்தை ரசிக்காமல் வேறு என்னத்தை பேசிக் கிழித்து விடப் போகிறார்கள் . சுத்த ரசனை கெட்டதுகள்.
........
"பின்னிருக்கையில் ஒரு போதி மரம்" என்று தனது சிறு கதை நூலுக்கு பெயர் வைத்தான் தம்பி ஆங்கரை பைரவி.
ஆக ஆங்கரைபைரவிக்கு பின்னிருக்கயில் ஒரு போதி மரம்
வைரமுத்துவிற்கு வானம் போதி மரம்
எனக்கு மொத்த பேருந்துகளும் வரம் தரும் போதி மரங்கள்தான்.
(சாளரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ”பத்து கிலோ ஞானம்” என்ற எனது நூலில் இருந்து எடுக்கப் பட்ட கட்டுரை)
மிக நல்ல பதிவு தோழர். குழந்தை மனதின் கவித்துவமும், வாழ்க்கைப் பற்றிய பார்வையும் நம்மை இலகுவாக்கி, சீர்படுத்தி வேறு தளங்களுக்கு இட்டுச் செல்பவை. இது போன்றதொரு பதிவை eighty two twenty two குருவிகள் என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். உங்கள் பதிவு சில நல்ல நினைவுகளை எழுப்பி விட்டது. நன்றி.
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteமுதிர்சி கொண்டவர்களை
நாம் தான் இடத்தோடு
பொருத்திப் பார்த்து
பெருமை கொள்கிறோம்
மற்றபடி
போதிமரமாயினும்
பேருந்து ஆயினும் ஒன்றுதான்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
\\ மிருணா said...
ReplyDeleteமிக நல்ல பதிவு தோழர். குழந்தை மனதின் கவித்துவமும், வாழ்க்கைப் பற்றிய பார்வையும் நம்மை இலகுவாக்கி, சீர்படுத்தி வேறு தளங்களுக்கு இட்டுச் செல்பவை. இது போன்றதொரு பதிவை eighty two twenty two குருவிகள் என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். உங்கள் பதிவு சில நல்ல நினைவுகளை எழுப்பி விட்டது. நன்றி.
May 4, 2011 9:29 PM//
மிக்க நன்றி மிருணா. ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ”யுக மாயினி” இதழில் வெளி வந்தக் கட்டுரை. உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
\\Ramani said...
ReplyDeleteஅருமை அருமை
முதிர்சி கொண்டவர்களை
நாம் தான் இடத்தோடு
பொருத்திப் பார்த்து
பெருமை கொள்கிறோம்
மற்றபடி
போதிமரமாயினும்
பேருந்து ஆயினும் ஒன்றுதான்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி தோழர்.எந்தத் தளத்ஹிலும் எடுத்துக் கொள்ள ஏராளம் இருக்கிறது என்பதில் உங்களோடு ஒத்தக் கருத்துள்ளவன்தான் நான்.தொடர்ந்து சந்திப்போம்.
பத்துகிலோ ஞானமாய் காலமெல்லாம் பயணிக்க ஆசை. {உம்மோடு}
ReplyDeleteகுழந்தைகள் வெறும் காலிப்பானைகள் அதை நிரப்பவேண்டியது பெரியவர்களாகிய நம் கடமை என நினைக்கும் ஒவ்வொரு வளர்ந்தவருக்கும்......... குழந்தைகள் கற்றுக்கொடுகிறார்கள்.......நீங்களே இன்னும் நிரப்பப்பட வேண்டியர்கள் தான் என்று....................நம்க்கு போதிமரங்களும்,ஞான்மும் அருகாமையில் தான் உள்ளன........நாம் தொலைவில் இருக்கிறோம்.........அருமையான பகிர்வு,இயல்பான நடை,அந்நியமற்ற மனிதர்களும் உறவுகளும்.......தொடருங்கள் தோழரே.......
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஅழகான கட்டுரை.அந்த சிறுமிகள் இருவரும் இப்போது என் மனதில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.வாழ்த்துகள் தோழர்..
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஅழகான கட்டுரை. அந்த சிறுமிகள் இருவரும் இப்போது என் மனதினில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்த்துகள் தோழர்.
ReplyDeleteஅழகான கட்டுரை.
ReplyDelete5 நிமிஷம் என்னை பேருந்துக்குள் இழுத்துக்கொண்டு போய்விட்டீகள் ஐயா
ReplyDeleteமிக்க நன்றி பாலாஜி
Delete'உங்களின் எழுத்து' எனக்கு ஒரு போதிமரத்துதிர்ந்த இலையாய் என் மனதில்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete