Sunday, May 15, 2011

தந்தையா?,கணவரா?




"கனிமொழி ஒரு பெண் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் அவர் மேல் பரிவு கொண்டு அவரை சிறைக்கு அனுப்பாமல் பிணை வழங்க வேண்டும் " என்பது மாதிரியான ஒரு வாதத்தை இந்தியாவின் ஆகப் பிரபலமான வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. ராம்ஜெத்மலானி அவர்கள் பாட்டியாலா சிறப்பு நீதி மன்றத்தில் வாதாடிய போதுதான் இவ்வளவு வலுவானதா இந்த வழக்கு என்ற ஆச்சரியம் பிறந்தது. வழக்கமாக இது மாதிரியான சிறிய அளவிலான நீதி மன்றங்களில் அவர் வாதாடுவதில்லை. எடுத்த எடுப்பிலேயே "பரிவு" வேண்டி இறங்கி விண்ணப்பித்த அனுபவம் இதற்கு முன்னால் அவருக்கு உண்டா? என்பது தெரியவில்லை. ஆனால் அப்படி இருக்க வாய்ப்பில்லை.


தான் நேரில் வந்து வழக்காடுவதற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத இடமாக அவர் கருதக் கூடிய இடத்திற்கு அவரை அழைத்து வந்து வாதாட வைத்த சக்தி எது? ஆயிரம் விமர்சனங்கள் அவர்மீது இருந்தாலும் அவரது கம்பீரமான ஆளுமையில் நமக்கு கொஞ்சமும் சந்தேகம் கிடையாது. அப்பேற்பட்ட கம்பீரம் இறங்கி வந்து "பரிவை" பணிந்து இறைஞ்ச வேண்டியத் தேவை என்ன? 

இரண்டுக்கும் காரணம் கருணாநிதி எனும் தந்தைதான். வர மறுத்து, வேண்டுமானால் தனது உதவி வழக்கறிஞர்களில் ஒருவரை அனுப்புவதாகவும் சொன்ன ஜெத்மாலினியிடம் கருணாநிதி அவர்களே நேரடியாகத் தொலைபேசி, வரச் சொல்லி மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதாகவும், அன்றைய தினம் வேறு ஒரு முக்கியமான வழக்கு சம்பந்தமாக வெளியூரில் இருந்த அவர் பாட்டியாலா வருவதற்கு அவர் கேட்டபடி ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து தரப் பட்டதாகவும் செய்திகள் சொல்கின்றன. அவர் நீதிமன்றத்தில் பரிவுக்காக இறைஞ்சியதற்கு “ என்ன செய்தேனும் , என்ன விலை கொடுத்தேனும்,  தம் மகளைக் காப்பாற்ற வேண்டும் “ என்ற தந்தை கருணாநிதியின் உருக்கமும் கண்ணீரும் காரணமாக இருந்திருக்கக் கூடும்.      

” குற்றம் நடக்கவில்லை என்றோ, இந்த வழக்கில் சேர்த்துப் பேசப்படுபவர்கள் எல்லாம் இந்தக் குற்றத்தில் பங்கில்லாதவர்கள் என்றோ நான் வாதிட வரவில்லை” என்று ஜெத்மலானி நீதிமன்றத்தில் எடுத்துச் சொன்னபோதே இந்த வழக்கு எவ்வளவு வலிமையானது என்பதோடு ஜெத்மலானி அல்ல அவரைப் போல ஆயிரம் மடங்கு வல்லமை வாய்ந்தவர்களாலும் யாரையும் காப்பாற்ற முடியாது என்பதும் தெளிவானது. இவ்வளவும் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கே தெளிவாய்ப் புரியும் போது கருணாநிதிக்குப் புரியாதா?.  நிச்சயமாய் புரியும்தான். தெரிந்தும் ஏன் இவ்வளவு செலவு செய்கிறார்.

இங்குதான் தனது குடும்பத்திற்காக யாரையும் பலிக் கடா ஆக்கக் கொஞ்சமும் தயங்காத, தன் மீது உயிரையே வைத்திருக்கக் கூடிய தொண்டனைப் பலிகொடுத்தேனும் தன் குடும்பத்தைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு கொடூரமான குடும்பத்தலைவரான கருணாநிதி வெளிப் படுகிறார். அவர் இவ்வளவு தூரம் துடியாய்த் துடிப்பது, ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கவில்லை என்று நிறுவ அல்ல. அது இயலாது என்பதும் அவருக்குத் தெரியும். இந்த ஊழலில் கூட்டுச் சதியாளராக குற்றம் சுமத்தப் பட்டுள்ள தனது மகள் கனிமொழியை, யாரைக் காவு கொடுத்தேனும் அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து பத்திரமாக வீட்டிற்கு கூட்டி வந்துவிடவேண்டும் என்பதுதான்.  அதன் விளைவுதான் “ இந்தக் குற்றத்திற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் ஆ.ராசாதான் “ என்று ராம் ஜெத்மலானி நீதிமன்றத்தில் சொல்கிறார்.

முதல்வரின் மகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி சார்பாக வாதாடுகிற ஒரு வழக்கறிஞர் என்றால் தி.மு.க சார்பில் வாதாடுகிற வழக்கறிஞர் என்றுதானே பொருள். தனிப்பாட்ட கனிமொழியைக் காப்பாற்ற அவரது வீட்டில், அவரது அம்மாக்கள், அப்பா, அண்ணன்கள் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கூடி நாம் இவ்வளவு தூரம் பேச வேண்டிய அவசியமில்லை. ராசாவைக் காப்பற்ற இவ்வளவு வேகமாகக் கூட்டப் படாத கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டப் படுகிறது. கனிமொழியைக் காப்பாற்றுவது கட்சியைக் காப்பாற்றுவது என்கிற மாதிரி முடிவெடுக்கப் படுகிறது. அமைச்சர்களும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லிக்குப் பறக்கிறார்கள். ராசாத்தி அம்மாளும் அமைச்சர் பூங்கோதையுடன் பறக்கிறார். முதல்வரும் இந்த விசாரனையைப் பார்ப்பதற்காக டில்லி போக ஆசைப் பட்டிருக்கிறார். அவருக்கும் விமான பயணச்சீட்டு போடப் பட்டிருந்தது என்றால் ராம் ஜெத்மலானி இந்த வழக்கின் தி.மு.க வழக்கறிஞர் என்பதுதான் பொருள். இவர் இந்த ஊழலுக்கு ராசாதான் முழுப் பொறுப்பெற்க வேண்டும் என்று சொல்கிறார் என்றால், ” ராசாதான் ஊழலுக்கு முழுப் பொறுப்பு” என்று தி.மு.க வழக்கறிஞர் சொல்வதாகத்தான் கொள்ள முடியும்.இன்னும் கொஞ்சம் பாமரத்தனமாகக் கொள்வதெனில் “இந்தக் குற்றத்திற்கு முழுப் பொறுப்பும் ராசாதான்” என்ற ஜெத்மலானியின் குரல் தி.மு.க வின் குரல்தான்.

இல்லை என்று கருணாநிதியோ மற்ற யாருமோ சொல்ல வந்தால் நமது கேள்வி ஏன் அதை வெளிப்படையாக யாரும் மறுக்கவில்லை என்பதுதான். ராசா குற்றவாளி என்று எல்லோரும் சொன்னபோது ,”ராசா தலித்துகளின் தகத்தாய சூரியன்” என்றும் அவர் ஒரு தலித் என்பதால்தான் எல்லோரும் அவர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார்கள் என்றும் சொன்ன கருணாநிதி ஜெத்மலானி சொன்னபோது மறுக்கவே இல்லையே, ஏன்?. அவரை விடவும் ஒருபடி மேலே சென்று கொதித்துக் குரல் கொடுத்த வீரமணி இந்த நொடி வரை ஜெத்மலானிக்கு கண்டனம் தெரிவிக்கவில்லையே, ஏன்?

காரணத்தைத் தேடி காத தூரம் போக வேண்டியதில்லை.அது நம் காலடியிலேயே கிடக்கிறது. ராசா, விட்டால் உண்மையை சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில்தான் ராசாவுக்காக பேசினார்களேயொழிய வேறில்லை. இன்று தன் மகளை நோக்கி குற்றச்சாட்டு நீள்கையில் ராசாவைக் காவு கொடுத்து தன் மகளைக் காப்பாற்றத் தயாராகி விட்டார் கருணாநிதி. வேறு மொழியில் சொல்வதெனில் “அப்பாவி தலித் ராசா தி.மு.க வால், குறிப்பாக அதன் தலைவர் கருணாநிதியால் பலிகடா ஆக்கப் பட்டுவிட்டார்”. 

இப்படிச் சொல்வதால் ராசா ஏதோ குற்றமற்றவர் என்று சொல்வதாகவோ, அல்லது அவர் தண்டிக்கப் படக் கூடாது என்றோ நாம் சொல்லவில்லை. குற்றவாளிகள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும், அவர்கள் சூறையாடிய மக்கள் பணத்தை மீட்க வேண்டும். நமது ஆதங்கமெல்லாம் ராசா என்பவர் வெறும் கருவி மட்டுமே. இந்தக் கருவியைப் பயன்படுத்திய கரங்களும் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும் என்பதுதான். 

ராசா என்பவர் தி.மு.க.வில் சாதாரண நபரல்ல. அதன் ஆளுமைமிக்க கொள்கை பரப்புச் செயலாளர்.மத்திய அமைச்சர். அவரைக் காப்பாற்ற இப்படி ஒரு வேகத்தைக் காட்டாத கட்சியும் தலைமையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்காக கிடந்து அலைகிறது என்றால் அவர் தலைவரின் மகள் என்பதைத் தவிர வேறு என்ன?

 நீரா ராடியாவும் கனிமொழியும் பேசிக்கொண்ட தொலைப்பேசி உரையாடல்களை அவரோ கருணாநிதியோ இன்றுவரை மறுக்கவில்லை. எனில் நீரா ராடியா மூலம் ராசாவுக்கு கனிமொழி தொலை தொடர்புத் துறையை வாங்கித் தரத் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமென்ன? இதில் டாடா போன்ற தொழில் அதிபர்கள் அக்கறை காட்ட வேண்டியதின் அவசியம்தான் என்ன?

எவ்வளவு சப்பைக் கட்டு கட்டினாலும் உண்மை இதுதான். தனக்கு சாதகமான அமைச்சரை டாடா கனிமொழி மூலமாக உருவாக்குகிறார். ஒரு பெரிய ஊழல் உருவெடுக்கிறது. ராசாவை பயன்படுத்தி சிலர் சுருட்டுகிறார்கள் அவர்கள் யார் யார் என்பது வெளிச்சத்துக்கு வரவேண்டும். அவர்கள் ஈவு இரக்கமற்ற முறையில் தண்டிக்கப் படவேண்டும்.

இத்தோடு விடவில்லை ஜெத்மலானி.  “ கலைஞர் தொலைக் காட்சியில் வெறும் இருபது சதவிகிதப் பங்குகளை மட்டுமே வைத்திருக்கக் கூடிய அப்பாவி கனிமொழி . அவருக்கு தொலைக் காட்சி நிர்வாகத்தில் எதுவும் தெரியாது. அனைத்துக்கும் பொறுப்பு சரத்குமார் ரெட்டிதான்” என்றும் சொல்லியிருக்கிறார்.  இது ஏதோ விளையாட்டு விஷயமில்லை.

. ”புதிய தமிழகம்” பத்திரிக்கை சொல்கிறது கலைஞர் தொலைக் காட்சியின் ஆண்டு வரவு 63,12,45,076 ரூபாய், ஆண்டு செலவு 61,47,55,422ரூபாய்.ஆக தொலைக் காட்சியின் ஆண்டு வருமானம் 63.12 கோடி, செலவு 61.47 கோடி. நிகர லாபம் வரி செலுத்துவதற்கு முன் 1.64 கோடி, வரி செலுத்திய பின் 1.36 கோடி. இது அவருக்கு நன்றாகத் தெரியும். வருடத்திற்கு 1.36 கோடி ரூபாய் வருமானம் பெறும் ஒரு நிறுவனத்திற்கு 214 கோடி ரூபாய் ஒருவன் கடனாகக் கொடுத்தான் என்பதையோ,1.36 கோடி மட்டுமே வருவாய் ஈட்டக் கூடிய ஒரு நிறுவனம் தடாலடியாக ஏறத்தாழ 30 கோடி ரூபாய் வட்டியுடன் சேர்த்து திருப்பியது என்பதையோ எந்த நீதி மன்றமும் ஏற்காது என்பது ஜெத்மலானிக்குத் தெரியும். அதனால்தான் அவர் கலைஞர் தொலைக் காட்சியின் அனைத்துக்கும் ரெட்டிதான் பொறுப்பென்கிறார்.

ஆக அவர்கள் தெளிவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஊழலுக்கு ராசாவையும், தொலைக் காட்சிப் பிரச்சினைக்கு சரத்குமார் ரெட்டியையும் பலிகொடுப்பதென்று. 

ஆக, முதலில் ராசாவின் மீது எதிர் கட்சியினரும் பத்திரிக்கைகளும் குற்றம் சாட்டினார்கள். கருணாநிதிக்கு யாரைச் சார்ந்து நிற்பது என்பதில் பிரச்சினையே இருக்க வில்லை. ராசாவா அவர்மீது குற்றம் சாட்டுபவர்களா என வந்தபோது தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் சம்பாதித்துத் தந்த ராசாவைக் காப்பாற்ற முயற்சி செய்தார்.

பிறகு ராசாவா? மகள் கனிமொழியா என்று வந்தபோதும் அவருக்கு பிரச்சினை எழவில்லை. ராசாவைக் காவு கொடுத்து கனிமொழி பக்கம் நிற்கிறார்.

ஆனால் இன்னொரு நெருக்கடி அவருக்கு வரப் போகிறது.  மனைவி தயாளுவா? மகள் கனிமொழியா ? யாரைப் பழிகொடுத்து யாரைக் காப்பாற்றுவது என்ற நெருக்கடி வரும் போது அவர் யார் பக்கம் நிற்கப் போகிறார்? அது இரண்டு குடும்பங்களின் பிரச்சினையாகவும் உருவெடுக்கும். ஆனால் உறுதியாய் நம்பலாம், அப்போதும் யார் அவருக்கு அதிகம் தேவையோ அவரை சார்ந்து நிற்பார்.

நமக்கு சந்தேகம் ஒன்று இருக்கிறது. மகள் கனிமொழிமேல் வழக்கு பாய்ந்ததும் இவ்வளவு பதற்றத்தோடு அவரைக் காப்பாற்றுவதற்காக ராசாவை பலி கொடுக்கத் தயாராகிவிட்டீர்கள். கேட்டால் சொல்வீர்கள் ராசாவா? கனிமொழியா என்றால் கனி மொழிதானே. ஒரு தந்தை அதைத் தானே செய்ய முடியும் என்று அவர் சொல்லக் கூடும். அது சரி, தனது தொண்டனா?, மகளா என்று வந்தபோது அவர் சராசரித் தந்தையானது சரிதான் என்று ஒரு வாதத்திற்கு வைப்போம். அடுத்து வருகிற மூன்றாவது குற்றப் பத்திரிக்கையில் அவரது மனைவி தயாளு அவர்களது பெயர் வரக்கூடும் என்றே தகவல்கள் சொல்கின்றன. அப்படி நடந்து, தயாளுவா? கனிமொழியா? , யாரைப் பழி கொடுத்து யாரைக் காப்பது என்று ஒரு நிலை வந்தால் யார் ஜெயிப்பார், கணவர் கருணாநிதியா? தந்தை கருணாநிதியா?  

நமது ஆசையும் கோரிக்கையும் இரண்டு. 

ஒன்று, இவர்களின் உண்மையான கோர முகத்தை இப்போதாவது ராசாவும் ரெட்டியும் புரிந்துகொள்ள வேண்டும். 

இரண்டு, இவர்கள் இருவரும் இனியும் இவர்களை நம்பாமல் உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும்.
     

12 comments:

  1. ஊழல் நடந்தது என்பது உண்மை என்றாலும் , எதோ கருணாநிதியும் ராசாவும் மட்டும் செய்ததாக மட்டும் சொல்லிவிட முடியாது . நீரா ராடிய tape ஒரு திட்டமிட்ட சதி . கனிமொழி மற்றும் ராசாத்தியை மட்டும் மாட்டிவிட அவர்கள் சம்பந்த பட்ட tape மட்டும் வெளியிட பட்டு இருக்கிறது . நீரா ராடிய பல இடங்களில் ( அவர் ராசாவுடன் பேசும் போதும் , கனிமொழியிடும் பேசும்போதும் ) அவர் மாறனிடம் பேசியதாக குறிபிட்டுள்ளார் . ஆனால் அது சம்பந்தமான எந்த உரையாடலும் வெளி வர வில்லை.

    தங்களுக்கு கிடைக்காத தொலை தொடர்பு துறை ராசாவுக்கு கிடைத்தால் மாறன் சகோதரர்கள் டாடா உடன் ( டாடாவும் அவர்களின் விரோதி என்பதை டாடாவே ஒப்புக்கொண்டு உள்ளார் ) இணைத்து ராசாவை கனியையும் மாட்டி விட்டுள்ளனர் என்பது என் கருத்து .

    கனிமொழி மீது CBI தாக்கல் செய்த குற்ற பத்திரிகையில் , கனிமொழி ராசாவிற்கு தொலை தொடர்பு துறை கிடைக்க சில முயற்சி செய்தது ஒரு அவருக்கு இந்த குற்ற்ததில் உள்ள தொடர்பை காட்டுவதாக கூறிவுள்ளனர் , அது உண்மை என்றால் அந்த முயற்சியில் அவருடன் இருந்த நீரா ராடிய , டாடா , அஹேமது படேல் , சோனியா காந்தி ஆகியோரும் குற்றத்தில் சம்பந்த படுத்தி இருக்க வேண்டும். அது ஏன் நடக்க வில்லை ?

    ReplyDelete
  2. அதைத்தான் உண்மை தெரிந்த ராசா உறக்க சொல்ல வேண்டும் என்று சொல்கிறேன்.

    ReplyDelete
  3. நீரா ராடியா முழுமை இல்லை எனில் முழுமையும் வர வேண்டும். நீரா ராடியா ஒலி நாடா வந்த அளவு உண்மையா? இல்லையா? இல்லை எனில் ஏன் மறுக்க வில்லை. கனிமொழி மற்றும் ராசாத்தியைக்குறி வைத்து என்பது உண்மௌயே ஆயினும் அவர்கள் வெளிப் படுத்த வேண்டும்.

    ReplyDelete
  4. ராசா தான் 3G வருவதாலேயே 2G குறைந்த விலைக்கு விற்றதாகவும் , அடுத்த மாதம் 3G வந்தால் 2G வாங்க யாரும் விரும்ப மாட்டார்கள் , அதனால்தான் கிடைத்த விலைக்கு விற்றதாக ராசா சொன்னதை யாரும் ஏன் வெளிபடுத்த வில்லை.
    2G விற்ற அடுத்த மாதமே வர வேண்டிய 3G ஒரு அமைச்சரவை குழு போட்டு 6 மாதம் தடுத்த காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை சந்தேகத்துக்கு உரியது அல்லவா ?
    3G விற்று 60 ஆயிரம் கோடி லாபம் வந்த போது நிதி அமைச்சர் இது எதிர் பார்த்ததைவிட மிகவும் அதிகம் என்று குறிபிட்டுள்ளார் . latest டெக்னாலஜி விற்றபோதே வராத 1.75 லட்சம் கோடி ஒரு தலைமுறை முந்தைய 2G விற்றால் வரும் என மத்திய கணக்காளர் எப்படி கணித்தார் ? தன்னுடைய கணிப்பை உறுதிபடுத்த என்ன ஆதாரத்தை அவர் இணைத்துள்ளார் ?

    ஒரு வேளை ஊழல் நடந்து இருந்தாலும் அந்த ஊழலுடன் தொடர்புடைய அனைத்து contract/license ரத்து செய்ய வேண்டுமா என்று நிதிபதிகள் கேட்ட போது இல்லை இல்லை அப்டியே இருக்கட்டும் என மத்திய அரசு தரப்பு வழக்குரைநர் கூறியது ஏன் ?

    ReplyDelete
  5. 2 லட்சம் கோடி ISRO ஊழல் என்ன ஆனது ? ஒரு வழக்கு கூட பதிவு செய்ய படவில்லை ஏன் ? அந்த குற்றச்சாட்டில் வெறும் contract / license ரத்து செய்து விட்டு வழக்கே பதிவு செய்யவில்லை . 2G வழக்கில் contract / license ரத்து செய்ய படவில்லை ஆனால் வழக்கு பதிவு செய்து ராசா கைது செய்ய பட்டுள்ளார் . ஏன் இந்த பாரபட்சம் ?

    ஊழல் நடை பெற்றதா என்பதிலும் அது பாரபட்சமின்றி விசாரிக்க படுகிறதா என்பதிலும் திரைமறைவில் இந்த ஊழலுக்கு தொடர்புடைய டாடா , மாறன் , சோனியா , அஹேமது படேல் , ஒன்றுக்கும் உதவாத மன்மோகன் , நீரா ராடிய போன்றவர்களையெல்லாம் விட்டு விட்டு ஏன் கருணாநிதியை பற்றி ஒரு கட்டுரை ? :-)

    என் மனதில் தோன்றியதை எழுதி உள்ளேன் , கோர்வையாக இல்லாமல் சரியாக சொல்லவில்லை என்றாலும் மன்னிக்கவும் .

    ReplyDelete
  6. நான் எழுதுவது பொய் எனில் விமர்சியுங்கள்.சரி எனில் ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்வேன். ராசா எனது நண்பரும் கூட. செத்துப் போன சாதிக்கும் தெரிந்த பையனே.

    நீங்கள் நினைக்கிறபடி நீங்கள் எழுதுங்கள் அதை ஏன் எழுதவில்லை இதை ஏன் எழுதவில்லை என்பதெல்லாம் வேண்டாம் தோழர். அதே மாறனோடும் மன்மோகனோடும் கருணாநிதி இன்றும் உறவோடுதான் உள்ளார். சோனியாவை நான் தாயே என்று ஒரு போதும் சொல்லவில்லை கருணாநிதி அப்படித்தானே இன்று வரை உருகி அழைக்கிறார். இது சம்பத்தப் பட்ட அனைவரும் தண்டிக்கப் படவேண்டும். சொத்துக்கள் கைப்பற்றப் படவேண்டும். மற்றபடி நீங்கள் நினைப்பதை எல்லாம் எழுத நீங்களல்ல நான்.

    ReplyDelete
  7. Yes you are right .. I should write what I wanted to tell to the world .

    ReplyDelete
  8. yes comrade. but that does not mean that you should not criticize. you should not expect me to write what you want to tell the world.

    ReplyDelete
  9. நல்ல பதிவு.
    இங்கு மின்வெட்டும் கணினி பாதிப்பும் பதிவு படிப்பதை தாமதப்படுத்துகிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  11. கலைஞர் கருணாநிதி யாரையும் காப்பாற்ற வேண்டாம்.
    கட்சியியை காப்பாற்றினால் போதும்.
    கட்சியை காட்டிகொடுக்க மாட்டார் என்று இன்றும் நம்புகின்றோம்.

    கனிமொழி திமுகவிற்கு தேவையா ?
    யார் அழைத்தது அவரை !

    யார் மனதிலும் யாரையும் திணிக்க முடியாது !

    கனியை தலை முழுவினால் போதும்.
    திமுகவிற்கு இனி நல்ல காலம் .

    தேர்தல் முடிவு நல்ல பாடம் !?

    ஊழலுக்கு துணை நின்ற ராசாவுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் !
    உண்மை சொல்ல வக்கீல் வேண்டாம் !
    குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்யாதீர் !

    ReplyDelete
  12. hi Read ur article interesting have an opinion while making an argument in court stating "fmr.hon.minster of telecom" Rasa is sole accused there is hidden truth falling out. sack of avoid mr Rasa may have to spell our Dayanithi maran too be accused then CBI need to take him to Dihar jail as u aware Maran & brothers are key motivators of behind Kalaignar network's Birth it was reason fmr cm's daughter has to go to prison.. So Revenage is taking place how ever its good to DMK's first line leadership about perish from TN political arena over "Family feud" Wish u Good luck Tamil Naadu....

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...